பிப்ரவரி 27, 2012

மறந்து போகுமோ சுயநிர்ணய உரிமை!


நெருக்கடிக்குள்ளான உலகப்பொருளாதாரம், அரசியல் களநிலைமைகள் மனிதன் இன்னும் எங்கே போய் வாழ்வது, எப்படி வாழ்வது என்பது குறித்து எந்த வழிகாட்டலும் சொல்லவேண்டிய கடப்பாடு இல்லாமலே நகர்ந்து கொண்டிருகின்றன. ஏதோ அவரவர் இயல்புக்கும், கல்வித்தகுதிக்கும் ஏற்றாற்போல் வேலை கிடைக்கிறதோ இல்லையோ, காலத்தை கடத்திக்கொண்டு நகர்கிறது வாழ்வு. ஆண்டான் - அடிமை வாழ்வு, புரட்சி, இயந்திரமயமாக்கல், அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சி என்று தொடங்கி இன்று பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கி மூச்சடைத்து நிற்கிறது மனிதவாழ்வு. இது ஒருபுறமென்றால் மனித உரிமை மீறல்கள், எதேச்சாதிகார ஆட்சி, அரசியல் ஊழல் என்று மனிதகுலம் எப்போதும் ஏதோவொரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுவது இன்னும் உச்சவேகத்தில் இயக்கப்படுகிறது ஏகாதிபத்தியக்கொள்கைகளால்.

செய்திகளை பார்க்க கேட்க நேர்ந்தால் உலகமெல்லாம் எங்கே எத்தனை அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், எங்கே உலகத்தலைவர்கள் கூடிப்பேசி கூட்டுச் செயற்பாட்டுக்கேற்ற திட்டங்கள் எதையும் முன்வைக்காமல் கூடிப்பேசுவதையே ஒரு தொழிலாய் கொண்டு பேசினார்கள் என்பதும் செய்திகள் ஆகின்றன. அப்படித்தான் ஒரு மனப்பதிவை உருவாக்குகிறது ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையின் 19 வது கூட்டத்தொடரும். மனித உரிமைகள் சபை கூட்டத்தொடர் என்றாலே இப்போதெல்லாம் ஈழத்தமிழர்களுக்கும் ஒரு தவிர்க்கமுடியாத எதிர்பார்ப்பும் வந்து மனதோடு ஒட்டிக்கொள்கிறது. ஏதாவது ஒரு நன்மை நிகழாதா எமக்கும் என்று மனம் அங்கலாய்க்கும்.

ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைதான் செய்யப்பட்டார்கள் என்று எங்களுக்குரிய நியாயமான தீர்ப்பு சர்வதேச சட்டங்கள், அரசியல் தத்துவங்களின் அடிப்படையில் வழங்கப்படாதா என்கிற ஒரு நப்பாசையாய் வளராமலும் இல்லை. அதிலும் எத்தனை ஈழத்தமிழர்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்டார்கள் என்கிற எண்ணிக்கையே மாற்றி, மாற்றி குழப்பப்படுகிறது. இறுதிப்போர் தொடங்கிய நாள் முதல் மன்னாரின் பேராயர் இலங்கை அரசின் அவ்வப்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சொல்லிவந்த கணக்கின் படி வடக்கில் இறுதிப்போர் உச்சமடைந்த காலகட்டதில் 1,46,679 தமிழர்கள் கணக்கில் வரவில்லை என்பதனை படிப்பினைகள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவின் விசாரணையின் போது எழுத்தில் கொடுத்தார். பின்னர், டருஸ்மன், ஐ. நா. வின் மூவர் குழு அறிக்கையின் படி 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இப்போது, இலங்கை அரசின் ஒரு புள்ளிவிவரப்படி அது 9,000 பேர், அதுவும் மற்றவர்கள் என்கிற பட்டியலில் இறந்தவர்களாய் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் என்பதன் வரைவிலக்கணம் இலங்கை அரசுக்கே வெளிச்சம்.


படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டுமல்ல இங்கே கணக்கில் கொள்ளப்படவேண்டியது. அதன் நோக்கமும் தான். இலங்கை அரசின் நோக்கமே ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்பது யாருக்கும் எந்த சர்வதேச அரசியல் சாணக்கியர்களுக்கும் புரியாமல் இல்லை. ஆனால், அது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றாற்போல் திரிக்கப்பட்டு திசைதிருப்பப்படுகிறது. இதற்கெல்லாம் கதை, வசனம் எழுதி இயக்குபவர்கள் இலங்கை-இந்திய அரசுகள் என்றால் அதற்கு நோகாமல், கண்டும் காணாமல் தலையசைப்பது அமெரிக்கா. சமயசார்பற்றதாய் இருந்த தேசியங்களை, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், அடிப்படைவாத தேசியமாய் மாற்றிக் கட்டமைத்த சித்துவேலையை தான் அமெரிக்கா இப்போது இலங்கையிலும் செய்துகொண்டிருக்கிறது. இலங்கையை ஒரு பெளத்தமத அடிப்படைவாத கட்டமைப்போடு தக்கவைக்க முயற்சி செய்கிறது தன் நிகழ்ச்சி நிரல் கருதி.

இலங்கையின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்று மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிப்போம் என்று அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய பிரதி ராஜாங்க செயலர் ரோபர்ட் ஒ பிளேக் இலங்கைக்கே சென்று சொன்னார். குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவிக்கும் கலை அமெரிக்கரான இவருக்கு சிறப்பாய் வரும். இவரது கூற்றில் இலங்கைக்கு சொல்லப்பட்ட பாடம், நிறையவே குறைபாடுகளுடன் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையாவது நிறைவேற்றித் தொலையுங்கள் என்பது தான். இல்லையென்றால் அமெரிக்க குடியுரிமை கொண்ட இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷேவை தமிழர்கள் அமெரிக்க சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டுமென்று சொல்லிவிடுவார்களோ என்கிற கவலை அவர்களுக்கு.

ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையின் தற்போதைய கூட்டத்தொடரில் இலங்கை குறித்த தீர்மானம் அமெரிக்காவுக்கும், அமெரிக்க ஏகாதிபத்திய காழ்ப்புணர்வை மனதில் கொண்டு பழி தீர்க்க காத்திருக்கும் இஸ்லாமிய, லத்தீன் அமெரிக்க நாடுகள், மற்றும் சீனா, ரஷ்யா, கியூபா நாடுகளுக்கும் இடையே உள்ள இழுபறியை மீறி கொண்டுவரப்பட்டாலும், உருப்படியாய் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதே யதார்த்த உண்மை. மனித உரிமைகள் சபையில் அவ்வாறானதொரு தீர்மானத்தை உருவாக்கி இலங்கையில் சட்ட ஒழுங்கு, அரச நிர்வாகம், அரசின் பொறுப்பாட்சி என்கிற கேலிக்கூத்து வடிவங்களின் வழி நல்லிணக்க மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவின் இத்துப்போன பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்கிற தீர்மானத்தை தவிர வேறேதும் உருப்படியாய் செய்ய முடியுமா இவர்களால்!

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனித உரிமைகள் காப்பகம், தமிழ் தேசியத்தை மறவுங்கள் என்று தமிழனுக்கு பாடம் எடுக்கும் சர்வதேச நெருக்கடிகள் குழு (International Crisis Group), மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை என்பனவும் ஏகாதிபத்திய சர்வதேச அரசியல் கொள்கைவகுப்பாளர்களை மீறி எதையும் சாதிக்கப்போவதுமில்லை. மீண்டும் மீண்டும் போர்க்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் என்கிற அதே உடைந்த ரெக்கோர்ட் பல்லவி தான் இவர்களும் பாடுவார்கள். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு தன்னிச்சையான சர்வதேச விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். யாருமே இலங்கையின் இனவிரோத, இனவழிப்பு அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பேசப்போவதில்லை.

என்ன இருந்தாலும் இன்னும் நம்பிக்கை இழக்காமல் ஐ. நா. சபை முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்ட ஒன்று கூடல் நடத்தினால், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் ஆர்பாட்ட ஒன்றுகூடல் நடைபெறுகிறது. அதேபோலவே, இலங்கையிலும் மேற்குலங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. இதன் உச்சக்கட்ட எரிச்சல் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பிரதிநிதிகளின் தலைவர் மஹிந்த சமரசிங்க இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் தீர்மானமே தேவையில்லையாம் என்று பேச்சு.

இலங்கை சிங்கள பெளத்த ஆட்சியாளர்களையும், ஏகாதிபத்திய கொள்கை வகுப்பாளர்களையும் அதற்கு துணை போகிறவர்களையும் தாண்டி, இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நியாயமாய் கிடைக்கவேண்டிய நியாயத்துக்கும, சுயநிர்ணய உரிமைக்குமாய் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ஆனாலும், இதையும் ஓர் படிக்கல்லாக மாற்ற முடிந்தால் அதுவும் வலுதான். எவ்வளவையோ பொறுத்தாயிற்று இந்த ஐ. நா. மனித உரிமைகள் 19 வது கூட்டத்தொடரையும் பொறுத்திருந்து பார்த்து முன்னேறும் ஈழத்தமிழ் சமூகம், சுயநிர்ணய உரிமை நோக்கி!

Image Courtesy: Google

6 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

// எவ்வளவையோ பொறுத்தாயிற்று இந்த ஐ. நா. மனித உரிமைகள் 19 வது கூட்டத்தொடரையும் பொறுத்திருந்து பார்த்து முன்னேறும் ஈழத்தமிழ் சமூகம், சுயநிர்ணய உரிமை நோக்கி!//

இந்த நம்பிக்கை மிகவும் தேவையான ஒன்று,
புலிகளின் தலைவர் சொன்னதுபோல் நாங்கள் போராடுவது எங்களுக்காக அல்ல எங்கள் சந்ததிக்காக மேலும்
கொடுத்த விலைகள் தேவையை மிக அழுத்தமாக சொல்லி செல்கிறது...
கள நிலைமைகள் மாறும் இந்தியாவை காங்கிரசே தொடர்ந்து ஆளும் என்பது இல்லை அதுபோல் உலக நிலைமையும் மாறும்.

கருணாகார்த்திகேயன் சொன்னது…

மாற்றம் ஒன்று மட்டும் தான் மாறாதது .. எதிர்பார்த்து நிற்பதை தவிர

கார்த்திகேயன்

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!தமிழர்களுக்கான சுய நிர்ணயக் குரல் நம்மிடமிருந்தே ஓங்கி எழாத போது இரண்டு பட்ட உலக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பது தவறு.தற்போதைய விளைவுகள் எதுவாக இருந்தாலும் வியன்னாவுக்குள் நுழையும் தகுதி கூட இல்லாமல் தமிழ் தேசியக் கூட்டணி பின் வாங்கியது வருத்தம் தருகிறது.

நீண்ட கால நோக்கில் நமக்கான லாபிகள் வளர்ப்பதன் மூலமே தீர்வுகளுக்கான வழிகளை அடைய முடியும்.நன்றி.

Rathi சொன்னது…

வேர்கள், ம்ம்...நம்பிக்கை தான் இப்போதைக்கு மிச்சம். இந்தியா, காங்கிரஸ் பற்றி இப்போ என்ன சொவதேன்று தெரியவில்லை. காலம் மாறும்போது பார்ப்போம்.

Rathi சொன்னது…

கருணாகார்த்திகேயன், நீண்ட நாட்களுக்கு பிறகு! நலமா!

மாற்றத்திற்காக காத்திருப்போம், முயற்சிகளை செய்துவிட்டு.

Rathi சொன்னது…

ராஜ நட, ம்ம்ம்.... உங்கள் ஆதங்கமும், கோபமும் புரியுது. தமிழ் தேசிய கூட்டமைப்பை இங்கே நான் குறிப்பிட எண்ணி தவிர்க்க காரணம் அவர்கள் நிலைப்பாடு என்ன என்பது அவர்களுக்கே தெளிவில்லாமல் இருப்பது தான்.

முயற்சிகள் செய்யாமலில்லை. விளம்பரம் தேடாமல் ஈழத்திற்காய் உழைப்பவர்கள் இன்னும் அந்த மண்ணுக்கும், மக்களுக்குமாய் தங்களால் ஆனதை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். காலம் கனியும்.