பிப்ரவரி 19, 2012

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் - அணு ஆயுதம்!

அமெரிக்கா கண்டுபிடித்த பயங்கரவாதம் இப்போ கொஞ்சம் காலாவதியாகிவிட்டது. இனி எதை தூசி தட்டி மிச்சமிருக்கிற தங்களுடைய பொருளாதார கொள்கைக்களுக்கு தடையாக இருப்பவர்கள் மீது பாயலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்ததில் மாட்டியது ஈரானின் அணு ஆயுதம். எங்கள் சொந்த மண்ணை, எங்கள் மூதாதையரும் நாங்களும் ஆண்ட மண்ணை திருப்பி கேட்டால் மறுக்கப்படும் எந்தவொரு காரணகாரியங்களும் சுட்டிக்காட்டப்படாமலே. காரணம் சொல்லவேண்டிய தேவையுமில்லை யாருக்கும், ஈழத்தமிழர்கள் எப்போதும் இழி நிலையில் இருந்தால். சொந்தமாய் நிலமில்லாதவர்களுக்கு யாரிடமிருந்தாவது மண்ணை பிடுங்கி நாடமைத்துக் கொடுத்தால், அவர்கள் அடிக்கும் கொட்டம் உலகம் கண்டும் காணாது. இஸ்ரேலைத்தான் சொல்கிறேன். எப்போதும் செல்லப்பிள்ளையாய் பெரியண்ணனால் வளர்க்கப்பட்ட நாடு.

இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்பது பரகசியம். இஸ்ரேலுக்கு ஏன் அணு ஆயுதம் என்றால் சுற்றியுள்ள அரபு நாடுகளால் இஸ்ரேலுக்கும் இஸ்ரேலின் மக்களுக்கும் ஆபத்து என்று காரணம் சொல்வார்கள். அப்போ, இஸ்ரேலின் அணு ஆயுதம் சுற்றியுள்ள அரபு நாட்டிலுள்ள மக்களின் உயிருக்கு ஆபத்து இல்லையா என்றும் தோன்றலாம். இஸ்ரேலின் அணு ஆயுத பலத்துக்கு சமமான அதே பலத்தை ஈரான் உருவாக்கினால் அது குற்றம் என்பது மேற்குலகின் கூழ்முட்டை விவாதம். இஸ்ரேலில் உள்ளூரிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கே இஸ்ரேலிடமிருந்து பாதுகாப்பற்று போகும் போது, சுற்றியுள்ள அரபு நாடுகளில் உள்ளவர்களுக்கு இஸ்ரேலின் அணு ஆயுதத்திடமிருந்து பாதுகாப்பு எப்படி கிடைக்கும் என்று என் பொதுப்புத்திக்கு கேள்வி வரும். ஆனால், பதில் சொல்ல தெரியாது. அமெரிக்கா, இஸ்ரேல் என்கிற இரண்டு அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளின் படைகள் ஈரானை சுற்றி இருக்க, ஈரானை அணு ஆயுதம் செய்யாதே என்று சொன்னவுடன் ஈரான் ஆமாம் சாமி போடுமா!

இஸ்ரேலிய ராணுவ வரலாற்று ஆசிரியரான Martin Van Creveld, International Herald Tribune இல் எப்போதோ எழுதிய கட்டுரை ஒன்றில் ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதை தாங்கள் விரும்பவில்லை எனவும்; ஆனால், அவ்வாறு அவர்கள் உருவாக்காமல் இருந்தால் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்றும் நோம் சாம்ஸ்கி தன் எழுத்தில் குறிப்பிடுகிறார். அவர் அவ்வாறு கூறக்காரணம் மேலே சொன்ன காரணமே தான். நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்களுக்கு சாதகமாக எதையாவது ஒன்றை உருவாக்கி (ஜனநாயக கொள்கைகள், பயங்கரவாதம், அணு ஆயுத பூதம்), அதன் வழி தங்கள் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றுவது அமெரிக்காவின் வழக்கம்.

சரி, விஷயம் இதுதான். ஈரான் அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை அதன் அத்தியாவசியத் தேவையான சக்தி உற்பத்திக்கு தேவைப்படுத்துவதை விட  அதிகமாக செறிவு படுத்துகிறது என்பது தான் அதன் மீதான மேற்குலகத்தின் குற்றச்சாட்டு. 2010 ம் ஆண்டு மாசி மாதம் வரை ஈரான் யுரேனியத்தை 5% மட்டுமே செறிவாக்கியது. அதற்குப்பிறகு அது 20% ஆக அதிகரித்தது மேற்குலகுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில்.

யுரேனியம் அகழ்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் அது வாயு வடிவில் மாற்றப்பட்டு செறிவுபடுத்தப்படுகிறது. மேலும் அது சுத்திகரிக்கப்பட்டு குறைந்தளவாக 3.5% செறிவு படுத்தப்பட்டு சக்தி தேவைகளுக்கு பயன்படுத்தலாம் எனவும்; அதிக உட்சபட்ச சுத்திகரிப்பு (90%) போராயுதமாக உருவாகும் அபாயம் உண்டு என்பதும் மேற்குலகின் ஈரான் குறித்த குற்றச்சாட்டு.

ஈரான் மீதான அமெரிக்காவின் காண்டு இன்று நேற்று ஆரம்பமானது அல்ல. 1953-1979 வரை அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சி இஸ்லாமியப்புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டு மதவழி ஆட்சி செய்ய ஏதுவான நாள் முதல் தொடங்கியது. ஈரானில் மனித உரிமை மீறல்கள் உண்டு என்று ஒத்துக்கொள்ளும் எத்தனையோ ஈரானியர்கள், மேற்குலகம் அளவுக்கு அதிகமாக ஈரானை அது குறித்து விமர்சிக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்காவின் ஊடக, பத்திரிகை தர்மம் 1953-1979 ம் ஆண்டுவரை ஈரானில் நடந்த சித்திரவதைகளையோ அல்லது சட்டத்துக்கு புறம்பான கைதுகளையோ வழமை போல் கண்டு கொண்டது கிடையாது. அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சி கவிழ்ந்தவுடன் திடீரென்று ஈரானில் இழைக்கப்படும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி 1979 முதல் எழுத ஆரம்பித்தன.

ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹம்திநிஜாட் அண்மையில் ஈரானின் 33 வது இஸ்லாமிய புரட்சி ஆண்டின் நினைவாக பேசும் போது ஈரான் யுரேனியத்தை செறிவு படுத்துவதை ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை என்று பேசியுள்ளார். அணு ஆயுதம் தயாரிப்போம் என்று அவர் நேரடியாய் ஒரு போதும் பேசவில்லை என்றும் மேற்குல ஊடகங்கள் குறிப்பிட்டன. ஈரானிய ஜனாதிபதி அப்பப்போ முரண் நகையான வாக்குமூலங்களையும் அள்ளிவீசுபவர். யூதர்களின் ஹோலோஹோஸ்ட் பற்றி எசகுபிசகாய் கருத்து சொன்னது முதல் அமெரிக்க ஆளில்லாத Drone (RQ 170 Sentinel) ஒன்றை கடந்த வருடம் ஈரான் கைப்பற்றியதை காட்சிப்படுத்தியது வரை அமெரிக்கா என்ற சிங்கத்தை சீண்டிப்பார்க்கிறார். ஆனால், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஈரானின் மத்தியவங்கியின் பொருளாதார நடவடிக்கைகளை மற்றைய நாடுகளில் முடக்கி விட்டன. இப்போது ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. இது எங்கே போய் முடியும்!

இப்படி எப்போதும் தங்களுக்கு சாதகமான நிகழ்ச்சி நிரல்களுக்கு கொள்கைகளை வகுப்பதை நிறுத்தி, அணு ஆயுதம் தயாரிப்பதை எப்படி தடுக்கலாம் என்று ஆக்கபூர்வமாக சிந்திக்கலாம், செயற்படலாம் என்று மத்தியகிழக்கு தொடர்பான அமெரிக்க கொள்கைகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் நோம் சாம்ஸ்கி சொல்வதை சொல்லலாம். International Atomic Energy Agency - Director Genaral சில வருடங்களுக்கு முன் அணு ஆயுதம் உற்பத்தி அளவுக்கு போகாதவாறு சர்வதேச கட்டுப்பாடுக்ள் தேவை என்று முஹமட் அல்பராடி (எகிப்தியர்-எகிப்திய எழுச்சியின் போது அதிகம் பேசப்பட்டவர்) ஒரு வரைவை கொண்டு வந்த போது அமெரிக்கா அதை கேட்கத் தயாராயில்லை.

அணு ஆயுத உற்பத்திக்கு பாவிக்கப்படும் 'Fissile Material' மீது சர்வதேச கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு கொண்டுவரப்பட வேண்டுமென்று ஐ. நா. வில் தீர்மானம் கொண்டுவந்த போது அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததாம் 147:1 என்கிற வீதத்தில். இஸ்ரேல் வாக்களிக்காமல் விலகி இருந்தது. இப்படி திருடர்களே திருந்தாமல் எப்படி திருட்டை ஒழிப்பது!

இவையெல்லாம் தவிர அணுக்கரு பரவாமை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty - NNPT) பிரகாரம் ஈரான் எந்த விதிகளையும் மீறியதுக்குண்டான ஆதாரம் இல்லை என்றும் சொல்கிறார்கள். ஈரானிடம் அணு ஆயுதம் உருவாக்கும் முயற்சிகள் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ, ஒரு அணு ஆயுத யுத்தம் இந்த உலகிற்கு தேவையா!

போர் பூமியில் ராணுவச்சமவலு என்பதும் இது போல் மிரட்டும் அணு ஆயுதப்போர் சூழலில் அது குறித்த சமவலுவும் இருந்தாலே போர் நிகழும் சூழல் சமநிலைப்படுத்தப்படும். இந்தியா அணு ஆயுதம் பரிசோதிக்க, பாகிஸ்தானும் அதையே செய்ய அது அந்த பிராந்தியத்தில் அணு ஆயுதம் குறித்த ஒரு சமநிலைக்கு வித்திட்டது.

Image Courtesy: Google

11 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

யதார்த்தத்தை பிரதிபலிக்கும் பதிவு
நன்றி

துஷ்யந்தன் சொன்னது…

ரதி அக்கா எப்படி இருக்கீங்க???:)

துஷ்யந்தன் சொன்னது…

உண்மையை சொல்லி போகும் பதிவு... எப்பவும் உங்கள் பதிவுகள் மிக காத்திரமானவைகள்... இதுவும் அப்படியே....

வேர்கள் சொன்னது…

http://www.youtube.com/watch?v=ZUb-anu-1zY&feature=plcp&context=C3743c1eUDOEgsToPDskKa0cuWQ1lOfcimy1Cr41lc

if time permits kindly see this video

வேர்கள் சொன்னது…

http://www.youtube.com/user/kulukkai

இந்தியாவின் ​போர்க்குற்றம் - தியாகு

Rathi சொன்னது…

நான் நல்லா இருக்கிறன் துஷ்யந்தன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க. கண்டு கன காலம் போல :)

Rathi சொன்னது…

வேர்கள், காணொளிகளுக்கு நன்றி. நிச்சயம் பார்க்கவேண்டும். பார்க்கிறேன்.

தவறு சொன்னது…

அமெரிக்கா எல்லாரையும் சீண்டுனா..அமெரிக்காவுக்கு யாரு ஆப்பு வைக்கிறது ரதி சீனாவா..!!??

Rathi சொன்னது…

தவறு, யாருன்னு தோணல. ஆனா, யாராச்சும் வைச்சாலே தேவைலைன்னு தோணுது. யாரையும் பிழைக்க விடாம ரொம்ப கொடுமையா இருக்கு.

பெயரில்லா சொன்னது…

Ind <> Pak on anything...

அமெரிக்காவின் கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதரவு ஆரோக்கியமானது அல்ல...

Rathi சொன்னது…

ரெவரி, ஈரானை தெரிஞ்சோ,தெரியாமலோ மறைமுகமா தூண்டுறதே அமெரிக்கா தான்.

ரெண்டு பேரில யார் ஈரான் மீது போர் தொடுத்தாலும் விளைவு ஒன்றுதான். முடிவும் தெரிந்தது தான்.