ஜனவரி 07, 2012

Davos முதல் தமிழ்மண கலாச்சாரம் வரை!நாட்களை, வாரங்களை, மாதங்களை விழுங்கி வருடமாய் வந்து கடந்து போகும் காலம். தனிமனித, அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை, எதிர்பார்ப்புகளை, நம்பிக்கைகளை மனித மனங்களில் விதைத்துச் செல்லும். இப்படி காலம் அதன் போக்கில் மனிதவரலாற்றை எழுதிக்கொண்டிருக்க, மனிதன் அதன் அசைவியக்கத்தை, ஆடுகளத்தை அதன் இயல்புகளோடு ஒன்றியும், ஒன்றாமலும்  கடந்து வந்து விடுகிறான். பின்னாளில் அது பூமராங் போல திருப்பித்தாக்கும் சந்தர்ப்பங்களில் அதன் காரண காரிய தொடர்புகளை தேட வேண்டியுள்ளது.

தேடுவதும் தெளிவதும் தானே மனித வாழ்வு. தேடல் தீர்ந்து போன பின் என்ன மிஞ்சியிருக்கும் மனித வாழ்வில். கடந்து போன எதை திரும்பிப் பார்ப்பது என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது மனதில். கடந்த வருடத்தை கொஞ்சம் மீட்டிப்பார்த்தால், அதிகம் காதில் விழுந்த வார்த்தைகள் இனப்படுகொலை, போலி ஜனநாயகம், மக்கள் எழுச்சி, உலகப்பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் மாசடைதல் இவைதான். முன்பெல்லாம் இதே பிரச்சனைகள் இருந்தாலும் இன்று அதன் வீச்சமும், தாக்கமும், அது குறித்த புரிதலும் அதிகம் என்றே சொல்லத்தோன்றுகிறது.

சுத்தி சுத்தி யோசிச்சா இந்த பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் ஒரு பொதுவான அடிப்படை அரசியல் ஒரே மையப் புள்ளியில் சந்திக்கும். அது உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் இவைகளின் மறைமுக தலையீட்டில் நடைபெறும் அரசியல் சூதாட்டங்கள் என்பதும்; இனப்படுகொலை, முற்றுப்பெறாத மக்கள் எழுச்சி என்று தங்கள் நலம் மட்டுமே பேணும் வளர்ந்த நாடுகளின் பன்முகமும் வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் இவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சில சர்வாதிகார ஆட்சியாளர்களால் வெளிப்பட்டதும் கண்கூடு. இதெல்லாம், நிறையவே பார்க்கவும், கேட்கவும், படிக்கவும் நேர்ந்தது கடந்த வருடம்.

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டவர்கள் உலக நாடுகளின் முக்கிய பொருளாதார மைய நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களென கருதப்பட்ட வீதிகளின் ஆக்கிரமிப்பும் ஒரு முக்கிய நிகழ்வாய்ப் போனது. உலகின் சனத்தொகையில் ஒரு சத விகிதத்தினர் மிச்சம் 99% மக்களை ஆட்டிப்படைப்பதும் வித்தியாசமாக, ஆனால், சிறப்பாய் சொல்லப்பட்டது.

Davos Culture என்று சொல்லப்படும் ஒரு கலாச்சாரம் உலகின் வியாபாரம், வங்கிகள், அரச அலுவலர்கள், அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் என்கிற துறை சார்ந்த ஏறக்குறைய ஆயிரம் பேர் வருடாவருடம் சுவிற்சலாந்தின் Davos  நகரில் உலக பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொள்வார்களாம். உயிரியல் விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், வியாபாரம், சட்டம் என்று இதையெல்லாம் கரைத்து குடித்த ஆங்கிலம் பேசும் இவர்கள் சொற்களிலும், வார்த்தைகளிலும் வித்தை காட்டுபவர்கள். இவர்கள் அரசுகள், கார்பரேட் நிறுவனங்கள், கல்வி சார் நிறுவனங்களால் வேலைக்கமர்த்தப்பட்டவர்கள் என்கிறார் சாமுவல் ஹன்ரிங்ரன் தன் The Clash of Civilization and the Remaking of World Order புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இந்த Davos Culture என்பதை கடைப்பிடிக்கும் இவர்கள் உலகளாவிய ரீதியில் தனியுரிமை கோட்பாடு குறித்த நம்பிக்கை, சந்தைப்பொருளாதாரம், அரசியல் ஜனநாயகம் என்கிற மேற்கத்திய நாடுகளில் பொதுவாக பேசப்படும் அம்சங்கள் குறித்து பகிர்ந்து கொள்வார்களாம். என் அறிவுக்கு இது ஏதோ பரப்புரை என்பதாய் தொனி வருகிறது. இவர்கள் உருவாக்கிய Davos கலாச்சாரம் மேற்குலகம் என்பதை தாண்டி உலகளாவிய ரீதியில் 50 மில்லியனுக்கும் குறைவான மக்களால் பகிரப்படுகிறதாம்.


இந்த 50 மில்லியனுக்கும் குறைவான மக்கள் யார் என்றால் Davos கலாச்சாரத்தை பின்பற்றும் அவர்கள் தான் உலக மக்கள் தொகையில் 1% ஆனவர்கள்!!! Davos கலாச்சார மக்கள் தான் உலகின் சர்வதேச நிறுவனங்கள், பல உலக அரசுகள், பெருந்திரளான பொருளாதார, ராணுவ செயல் திறனாற்றலை கட்டுப்படுத்துபவர்கள். இதையெல்லாம் புட்டு, புட்டு எழுதும் Samuel P. Huntington கண்டிப்பாய் வாசிக்கப்பட வேண்டியவர்.

வாசிப்பு என்றவுடன் எனக்கு பதிவுலகமும் ஞாபகம் வருகிறது. தமிழ் மணத்தில் 2011 ம் ஆண்டின் அதிகம் வாசிக்கப்பட்ட முதல் நூறு தளங்களின் பட்டியல் பார்க்க நேரிட்டது. தமிழ் மணம் என்கிற திரட்டியை முதல் நூறு இடத்தை பிடித்த தளங்கள் அதிகம் வாழவைக்கிறது என்பதையும் மறுக்க முடியவில்லை. தமிழ் மணம் நூறு தாண்டியும் தளங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தால் நான் வாசிக்கும் தளங்களின் பெயரும் கண்ணில் பட்டிருக்குமோ!!

உலகில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இது போன்ற சமூக ஊடக தளங்களில், களங்களில் தமிழையும் உலக மொழிகளுக்கு இணையாக தட்டச்ச வைத்தவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள். தமிழ் வளர்ச்சிக்கு தமிழ்மணத்தின் சேவையும் அளப்பரியதே.  தமிழ் மணம் எல்லா தளங்களையும் திரட்டுகிறது. ஆனால், தமிழன் என்கிற வாசகன் கனியிருக்க காய் கவர்ந்து தரமற்ற படைப்புகளையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறான் என்பதும் யதார்த்தமான மறுக்கமுடியாத உண்மை. பதிவுலகமும் தனக்கென்றோர் புதிதாய் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தரமான படைப்புகளால் வாழவைக்கப்படுவது தொன்மையான கலாச்சாரமும், மொழியும் கூடவே. தமிழ்மணமும் அதற்குரிய ஒர் களமே.

பதிவுலகில் எத்தனையோ விதமான அறிவு சார் துறையிலிருந்து, பண்பாட்டறிவு, அனுபவங்களோடு தான் எழுத வருகிறார்கள். பகிர்ந்து கொள்ளப்படும் எண்ணமும், சிந்தனைகளும், எழுத்தும் வாசகனின் அறிவை குறுகச்செய்யாமல் பார்த்துக்கொள்வது தான் ஆரோக்கியமான எழுத்தாய் அமையும். எதை எழுதுவதென்றாலும் அதை முடிந்தவரையில் தரமாக எழுதி ஓர் அறிவுடமை சமுதாயத்தை ஏன் கட்டியமைக்க முடியாது!

மாறிவரும் உலக ஒழுங்கில் ஒவ்வொரு மக்கள் சமூகமும் தங்கள் தனித்தன்மைகளை பேணி தங்கள் அடையாளங்களை நிலை நிறுத்தவே விரும்புகிறார்கள். ஒவ்வொரு மக்கள் குழாமும் பேணவிரும்பும் தனித்தன்மைகளில் ஒன்று மொழி. மொழி என்றால் உலகில் மற்ற மொழி பேசுபவர்கள் போலவே தமிழின் சிறப்பை உலகிற்கு இசை மூலமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். இடையே கொலைவெறி பாடலும் உடைந்த ஆங்கிலத்தில் ஜப்பான் பிரதமரையும் கவர்கிறது. இது தமிழின் சாதனையா அல்லது தமிழன் சாதனையா! அதுவும் இல்லையென்றால் இசையின் சாதனையா என்கிற விடை தெரியாத கேள்வியும் இல்லாமல் இல்லை.

மொழியை தொலைத்தவர்கள் தங்கள் அடையாளத்தை தொலைத்தவர்கள் ஆவார்கள். கடந்த சில வருடங்களில் சில குறிப்பிட்ட மொழி பேசுபவர்களில் கடைசி நபரும் இறந்தார் என்று படித்திருக்கிறேன். அந்தமான் தீவில் வசித்து வந்த போ-ஆ (Boa Sr) என்கிற 85 வயது பெண்மணி இறந்ததோடு Bo என்கிற மொழியும் அருகிப்போய்விட்டது. அதே போல், வரலாற்றில் பிரித்தானிய காலனியாதிக்கத்தில் அழிக்கப்பட்ட Tasmania வின் பூர்வீக குடிகளில் கடைசியாய் எஞ்சியிருந்த Truganina என்கிற பெண்மணியும் இறந்ததோடு அந்த இனமே அழிந்துவிட்டது.

இதெல்லாம் துணுக்கு செய்திகளாய் ஆங்காங்கே படித்தது. மனதில் நிலைத்து நின்றுபோய்விட்டது. தமிழீழத்தில் தமிழனும், தமிழும் என்றாவது ஒரு நாள் இந்த நிலைக்கு வரக்கூடுமோ என்றும் அச்சம் எழுகிறது.

உலகில் இனப்படுகொலை என்பது யாரால் வேணுமானாலும் தங்கள் வாழ் நிலைத்தேவை என்று கருதப்படும் அடுத்தவனின் நிலத்துக்காய் திட்டமிடப்பட்ட முறையில் நிகழ்த்தப்படலாம். ஆனால், ஒருவன் தன் மொழியை தானே கொல்வது தான் ஒத்துக்கொள்ள முடியாத விடயம்.

உலகம் பொருளாதார-அறிவு ஜீவிகள் கலாச்சாரத்திலிருந்து மேற்குலக கலாச்சார கோலங்களை அடுத்தவர் மீது திணிக்க முற்பட்டாலும் மக்கள் சமூகம் ஒவ்வொன்றும் தங்கள் தனித்தன்மைகளையும் நியாயமான முறையில் பேணிப்பாதுக்காக்கவே முனைகின்றன. என்ன தான் மக்கள் எழுச்சிகள் கூட திட்டமிடப்பட்டு தூண்டிவிடப்பட்டாலும் பாதிக்கப்படுபவன் நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதும் இல்லை. அரசியல் சட்டமியற்றி, பொருளாதார கொள்கைகள் வகுத்து அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டாலும் மிதிக்கப்படுபவன் என்றாவது நிமிர்ந்தே தான் தீரவேண்டும். வரலாறு எப்போதும் ஒரே திசையில் பயணிப்பதில்லை என்பது அறிவு ஜீவிகள், ஆய்வாளர்கள் சொல்வது. காலம் மாறும்.

தமிழுக்கும், தமிழனுக்கும் அங்கீகாரம் கிடைக்காத இலங்கை என்கிற நாட்டில் இருந்து ஒரு தமிழனின் குரல், தமிழுக்காய்.
“...கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல...”

Image Courtesy: Google.

20 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

ஓர் எழுத்தின் சாரம் என்பது உள்வாங்கப்பட்ட விடயத்தின் ஆழத்தைப் பொறுத்து அமைகிறது என்பதற்கு இது போன்ற கட்டுரைகள் சொல்லி நிற்கிறது.

//வாசகன் கனியிருக்க காய் கவர்ந்து தரமற்ற படைப்புகளையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறான்//

இது யுனிவெர்சலாக நடைபெறும் ஒரு மனித இயல்புதானே (அண்மையில் தனுஷ் பாடல் அதிகப்படியான மக்களின் எண்ணத்தை கவர்ந்தது என்பதற்காக அதனை எந்த படைப்பில் சேர்ப்பது?)! அதனையும் தாண்டி நல்ல எண்ண பதிப்புகள் காலத்தை வென்று நிற்கும். மற்றபடி முதல் நூறு இரண்டாவது நூறில் என்ன இருக்கிறது? :)

// அந்தமான் தீவில் வசித்து வந்த போ-ஆ (Boa Sr) என்கிற 85 வயது பெண்மணி இறந்ததோடு Bo என்கிற மொழியும் அருகிப்போய்விட்டது. //

எந்த ஒரு உயிர் இனத்தின் கடைசி ஜீவன் மரணிக்கும் பொழுது என்ன நடக்கிறதோ, அதே நிலைதான் ஒரு மொழியை உச்சரிக்கும் கடைசி மனிதன் மரணிக்கும் பொழுது அந்த மொழிக்கும் நடந்தேறுகிறது.

அதற்கெனவே மொழியை பேணுவது இன்றியமையாதாகிவிடுகிறதல்லவா? இந்த மின்னணு யுகத்தில் இனிமேல் தமிழ் போன்ற மொழிகளுக்கு அழிவில்லை என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

எப்பொழுதும் போலவே நல்ல ஓட்டமான நடை. :)

வேர்கள் சொன்னது…

ரதி அவர்களுக்கு,
ஒரு தரமான தளத்தின் வாசகன் என்ற எண்ணத்தை மீண்டும் ஏற்படுத்திஇருக்கிறது இந்த கட்டுரை
நன்றி
// எதை எழுதுவதென்றாலும் அதை முடிந்தவரையில் தரமாக எழுதி ஓர் அறிவுடமை சமுதாயத்தை ஏன் கட்டியமைக்க முடியாது//
எனது வேண்டுகோளும் அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் இதுவே

தவறு சொன்னது…

ரதி என்ன இடம் என்பதைவிட தங்களின் எழுத்துகளின் வாசகன் ...

சார்வாகன் சொன்னது…

அருமை

Rathi சொன்னது…

தெக்கிகாட்டான்,

//இந்த மின்னணு யுகத்தில் இனிமேல் தமிழ் போன்ற மொழிகளுக்கு அழிவில்லை என்றே புரிந்து கொள்ள முடிகிறது.//

நல்ல நம்பிக்கை. எங்கள் கவலை இலங்கை என்கிற நாட்டில் தமிழர்கள் என்கிற ஒரு வரலாற்று இனம் தன் சொந்த மண்ணில் பூண்டோடு அழிக்கப்படும் என்பதே.

தமிழன் அழிந்து தமிழ் வாழ்ந்தது என்கிற பெருமை எம்மை சேரட்டும்.

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Rathi சொன்னது…

வேர்கள், நன்றி. உங்கள் வேண்டுகோளை கவனிப்பவர்கள் செவிமடுப்பார்கள் என்றே தோன்றுகிறது.

Rathi சொன்னது…

தவறு, என் எழுத்துக்கு பதிவுலகில் எப்படிப்பட்ட அங்கீகாரம் இருக்கிறது என்பது நல்லாவே தெரியும் எனக்கு.அது குறித்த எந்தவொரு எதிர்பார்ப்பும் எனக்கில்லை இந்த பட்டியல் விடயத்தில்.

ஆனா, டைட்டானிக் கப்பல் மூழ்கும் போது முன்னேற்பாடான எத்தனையோ விடயங்கள் இருந்திருந்தால் உயிரழிவுகளை தடுக்கலாம் என்பார்கள்.

அது பதிவுலக விடயத்திலும் ஞாபகம் வந்தது.

நன்றி தவறு.

Rathi சொன்னது…

சார்வாகன், நன்றி.

ஹேமா சொன்னது…

ரதி...எப்பவும்போல 2011ன் அலசல் அருமை.இந்தக் கொலைவெறிப்பாடலில் யாழ்ப்பாணம்....தமிழ் என்கிற ஒரு வார்த்தைப் பிரயோகத்தைத் தவறு என்றும் ஒரு தளத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.கவனித்தீர்களோ தெரியவில்லை !

Rathi சொன்னது…

ஹேமா, நன்றி. எதை பிழையென்று சொன்னார்கள் பாட்டில். தமிழ் உச்சரிப்பா அல்லது ஏதும் கருத்து, தகவற்பிழையா!

சில இடங்களில் இசை தான் சுதி விலகியது போல் தோன்றியது. மற்றப்படி சிறப்பாக செய்திருக்கிறார்கள். பாடிய ஸ்டாலினும் நன்றாகவே பாடியுள்ளார்.

ஏதாச்சும் ஒன்றை விமர்சிக்காவிட்டால் நாங்க என்ன தமிழர்கள் :)

எனக்கு அந்த முயற்சி தான் பெரிதாய் தெரியுது, ஹேமா.

ஹேமா சொன்னது…

**யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா...**இது பிரதேசவாதமாம் !

Rathi சொன்னது…

//இது பிரதேசவாதமாம் !//

அட அந்த தம்பிகள் மூன்று பேரும் யாழ்ப்பாணத்திலிருந்து பாடுகிறார்கள் போல. ஒரு ஆர்வத்தில தங்கட ஊரின் பெயரை சொன்னார்களோ! பாடல் காட்சியில் நல்லூர் என்கிற முகப்பு தான் தெரியுது. அது என்ன (ஊர்)வாதம் எண்டு சொல்லுவினமோ அப்ப :)

அந்த பாட்டை இயற்றிப்பாடிய ஸ்டாலின் கூட இது பிரதேசவாதம் எண்டு நினைச்சிருப்பாரொ தெரியாது.


இவர்கள் வளர்ந்துவருபவர்கள். இவர்களின் தனிப்பட்ட முயற்சிகளில் இது போன்ற சில்லறை விசயங்களை தான் தூக்கிப்பிடிப்பினம் போல.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அழகிய சொல்லாடல்

Rathi சொன்னது…

//அழகிய சொல்லாடல்//

கருத்தாழத்தோடு கூடிய சொல்லாடல் :)

ரெவெரி சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள்...தரமான படைப்பு...தொடர்ந்து கலக்குங்கள்...

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!கொலவெறி வெளியான இரண்டாம் நாள் ஒரு ஆந்திரக்கார பையன் தனது மொபைலில் பாட்டைப் போட்டுக் கேட்கச் சொன்னான்.அவன் எப்பொழுதும் ஏதாவது ஒரு காலர் ட்யூன் எனும் எங்க ஊர் ஏதாவது பாடலை ஒலிக்கவிடும் கொலவெறியில் புறக்கணித்து விட்டதோடு மட்டுமல்லாமல் தமிழ்மணத்தில் வந்த பாடல் சார்ந்த ஒரு பதிவையும் கூட நான் படிக்கவேயில்லை.அதற்கான தண்டனையாக நேற்று நீங்க பின்னூட்டம் போட்ட கொலவெறி அரபிக்குப் பின்புதான் பாடலின் தாக்கம் எனக்குப் புரிந்தது.இப்பொழுது தமிழ்க்குரல் பாடல்.

ராஜ நடராஜன் சொன்னது…

இந்தப் பாடலை இன்னும் வலுவாக கொண்டு செல்லலாம்.ஆனால் இதோ உங்களது போன்ற தரமான பதிவுகள் மூலையில் போய் உட்கார்ந்து கொள்வது போலத்தான் மொழி சார்ந்த உணர்வுகளும்.

கடந்த இரு மாதங்கள் தவிர இணையத்தில் உட்கார்ந்து கொள்ளும் நேரம் அதிகமாக இருந்தும் வாசிப்பு தேடல்கள் மீறியே 2011ல் பதிவுகளை வெளியிட்டுள்ளேன்.100 பேர் பட்டியல் கூட நீங்கள் சொல்லித்தான் தெரியும்.நம்மைப் போன்றவர்களுக்கு எண்ணிக்கை முக்கியமில்லை.வெளிப்பாடுகள் மட்டுமே.நான் கூட சில சமய்ம் கும்மியடித்து விடுவேன்.ஆனால் நீங்கள் கருத்துப்பகிர்வுகளை சரியாக வெளிப்படுத்துகிறீர்கள்.தொடருங்கள்.

கனவு மெய்ப்பட வேண்டும் வாழ்த்துக்களுடன்.

ராஜ நடராஜன் சொன்னது…

//எப்பொழுதும் போலவே நல்ல ஓட்டமான நடை. :)//

ஆமா!பி.டி.உஷா தோத்துடுவாங்க:)

(ரதி!மன்னிக்க.பழக்க தோசம்.நாந்தான் சொன்னேனே கும்மியும் அப்பப்ப வந்துடும்ன்னு(

Rathi சொன்னது…

ரெவரி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், நன்றி.

Rathi சொன்னது…

ராஜ நட, வாங்கோ :) நானும் சில நேரம் அப்படித்தான் பாடல்களை செய்திகளை தவறவிடுவேன். பிறகு ஏதொவொரு விதத்தில திரும்பி வரும்போது தான் தவறவிட்ட தவறை உணர்வதுண்டு.

அப்பப்போ கும்மியும் அடிக்கலாம், தப்பில்லை :)

நன்றி ராஜ நட.