ஜனவரி 31, 2012

சினிமா அபத்தங்களும், அபத்த சினிமாக்களும்!


பணம், பெயர், புகழ் இவற்றுக்கெல்லாம் அவரவர் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றாற்போன்ற அங்கீகாரமும் தேவையான இடத்தில் அதற்குரிய சன்மானமும் கிடைக்கவேண்டும் என்பது பொதுவாக எல்லோரதும் விருப்பம். மனித இயல்பானது, அவரவர் தனித்திறமை, விருப்பம் சார்ந்து வாழ்நாள் இலட்சியங்களை துரத்தித் திரிவதாகத்தான் இயல்பிலேயே நம் வாழ்நாட்களை கடத்திச் சேர்ப்பதாய் பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. அனைவருக்குமே ஓர் உயரிய நெருப்புச் சுவாலையுடந்தான் பயணம் எந்தத் துறையிலும் தொடங்குகிறது. ஆனால், நாட்பட, நாட்பட அடைந்த உயரங்களை தக்க வைத்துக் கொள்ள பெரும்பான்மையான சாதாரண மனிதர்களைப் போலவே பல கட்டங்களில் படிப்படியாக தனது சுயத்தை இழந்து, தொடக்கப்புள்ளிக்கும் நின்று கொண்டிருக்கும் வட்டத்திற்கும் சற்றும் தொடர்பற்றவர்களாக பொலிவிழந்து காட்சியளிப்பது நடைமுறையில் நாம் எங்கெங்கினும் காணும் காட்சி.

இந்த பொலிவிழப்பு பல உள் அரசியல், பொருளாதார தேவைகள், அதற்கான போட்டிகள் என்ற வாக்கில் தலைதூக்கும். அதை எல்லாம் சமாளிக்க பணத்துக்கும், புகழுக்குமாய் விட்டுக்கொடுப்புகள் உள்ளே நுழைய ஆரம்பிக்கும். அந்த விட்டுக்கொடுப்புகளில் திசைமாறும் இலட்சியங்கள். ஒரு சாதாரண மனிதன் வரிந்து கொண்ட கொள்கைகளில், இலட்சியங்களில் இருந்து வழுவும் போது சமூக மட்டத்தில் எந்த தாக்கமும் அதிகம் நேர்ந்துவிடுவதில்லை. அது ஒரு கூட்டுப்பழக்கமாய் இருந்தாலன்றி! இருந்தும் கலை, இலக்கிய துறைகளில் படைப்பாளிகள் தடம்மாறும் போது அது சமூக மட்டத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கவும் செய்கிறது.

சமகாலத்தில் இலக்கியவாதிகள் என்று தம்மை பறைசாற்றுபவர்கள் மட்டுமன்றி சகலரும் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் தங்கள் விருப்பு, வெறுப்புகளை, மாற்றுக்கருத்துக்களை அதன் பிரதிபலிப்புகளை கடத்தவும், உள்வாங்கவும் உதவுகிறது. ஏதோவொரு விதத்தில் எல்லோருமே எமது தனித்தன்மைகளை வெளிப்படுத்தவும் அதன் இயல்புகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவோ அல்லது சகமனிதர்கள் விருப்பு, வெறுப்பு குறித்த சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவோ வாழ்க்கையை ஒட்டி நம்மை வளர்த்தெடுக்கிறோம். அது நம்மையும் வளர்த்து நம்மை சுற்றியிருப்பவர்களை அல்லது யாரை நோக்கி எம் கருத்துகளை வைக்கிறோமோ அவர்களையும் வளர்த்தெடுப்பதாய் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படாதா!

சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகள் குறித்து பேச முற்பட்டு, எங்கேயோ விலகி சுய முன் நிறுத்தல்கள் கலை, இலக்கிய எல்லைகளை தாண்டி துருத்தி நிற்கிறது. பிரபலமாக வேண்டும் என்கிற உந்துதலில் புகழுக்கு அடிமையாகி சுயம் தொலைக்கவும் நேரிடுகிறது. இவர்களிலும் சிலர் எப்போதும் இரட்டை நிலை கொண்டவர்களே ஆனாலும் தங்கள் தனித்திறமையால் நேர், எதிர்மறை விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் செய்கிறார்கள். இந்தக் குறைபாட்டினால் ரசிகனதும் வாசகனதும் ரசனை மட்டுமன்றி உண்மையும் யதார்த்தமும் கூட குற்றுயிராய் ஆகிப்போகிறது.

எம்மைப்போன்ற சாதாரணர்களுக்கு பெரும்பாலும் எம் உழைப்புக்கு தகுந்த ஊதியம் அல்லது கூலி கிடைப்பதால் அதன் அளவிற்கேற்றாற்போல் ஆசைகள், கனவுகளையும் உள்வாங்கிக்கொள்வோம். படி நிலைவளர்ச்சியில் மனிதவாழ்விற்கே உரிய அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் உணவு, நீர், இருப்பிடம், கல்வி, சுயமுக தரிசனமாய் காயம்படாத தன்மானம், உடற்பசி தீர்க்கும் காதல் வழி களிப்புற்றுக் கழியும் காமம் வரை திருப்தியாய் தீர்க்கப்பட தன்னிறைவு என்பது மனதின் உள்ளொளியை  இயல்பாய் காட்டி நிற்கும். அங்கே தான் மனம் தன் வாழ்க்கை, இலட்சியம் குறித்த எல்லைகளை வகுத்தும் கொள்ளும். வாழ்வாதாரமான உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் அதன் வழி  நியாயமாய் கிடைக்க வேண்டிய அடிப்படைத்தேவைகள் நிறைவாய் கிடைக்கவில்லையென்றால் மனம் சம நிலை இழக்கும், மனச்சோர்வு உண்டாகும். அதுவுமில்லையா, போராட்டக்குணம் தலை தூக்கும்.

அதே அடிப்படையில் உடல், உள உழைப்பிற்கும் அதற்குரிய ஊதியத்துக்கும்  எந்த அடிப்படையிலும் சம்பந்தமே இல்லாமல் லட்சங்களில், கோடிகளில் பணம் சம்பாதித்தால் வாழ்க்கையும் திசைமாறிப் பயணிக்கும். கனவுகள் அதீதமாய் போதையேற்றும். விளைவு கனவுகளிலும் கனவு போன்றே நிஜவாழ்விலும் பணம், புகழ், அங்கீகாரத்துக்காய் மனம் முரண்டுபிடித்து அலையும். இப்படி வாழ்பவர்கள் பெரும்பாலும் வியாபார, கலைத்துறை குறிப்பாக சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் தாம். சராசரி அளவில் தன்னிறைவாய் வாழும் மனிதனுக்கும் அளவுக்கதிகமான செளகர்யங்களை அனுபவிக்கும் மாக்களுக்கும் பணம், பெயர், புகழ் குறித்த அதீத ஆசைகளும், மனித உள்முக வளர்ச்சியின் இயல்பாக்கம் என்பதும் இயல்பில் ஒன்றாய் இருந்தாலும் அது தாண்டிவரும் களங்களும் அனுபவங்களும் வெவ்வேறாய் இருக்கிறது. அதன் தாக்கங்கள் அவர்கள் சொந்தவாழ்க்கயையும் தாண்டி படைப்புகளிலும் புகுத்தப்பட்டு திரிந்து போகிறது.

உலக சினிமா முதல் தமிழ் சினிமா வரை கலை வழி மானுட வாழ்வின் உன்னதங்களை, யதார்த்தங்களை, போராட்டங்களை, சமூக அரசியல் சீரழிவுகளில் சிக்கி சின்னாபின்னமாகிய விளிம்பு நிலை மனிதர்களின் நிலைகளை விளக்குவதோ மிக குறைவாகவே உள்ளது. மாறாய், நாயக, நாயகிகளின் சுயபிரஸ்தாபங்களும், யதார்த்தம் மீறி நாயகர்களின் self-esteem வில்லன்களால் காயப்படுத்தப்பட்டதும் (Yeah, this villain hurts my self-esteem) பொங்கி எழுந்து பஞ்ச் டயலாக் பேசுவதும், கிராஃபிக்ஸில் சமூக நீதி கேட்டு கதா நாயகர்களால் அழிக்கப்படும் வில்லன்களும், ஒரு கதைக்காய் இவர்கள் அதிகம் செய்யும் தியாகம் உடல் எடையை குறைத்தோ அல்லது கூட்டியோ தங்களை மெருகுபடுத்துவதுமே வெளிச்சம் போட்டு விற்கப்படுகிறது. இதில் தரமான எம் யதார்த்த வாழ்வோடு ஒன்றிப்போக வைக்கும், மண்வாசனையோடு கூடிய படைப்புகள் ஆங்காங்கே அடிபட்டும் போகிறது. இது போன்ற காரணங்களுக்காகவே சினிமாவை அதன் கர்த்தாக்களை விமர்சிக்கவும் தோன்றுகிறது. இருந்தும் அண்மையில் பார்த்து திருப்திப்பட்ட திரைப்படங்கள் கோரிப்பாளையம் மற்றும் எங்கேயும் எப்போதும். கோரிப்பாளையம் தமிழ் சினிமாவில் ஓர் துணிச்சலான முயற்சி. சமூக விழுமியங்கள் மீறப்படும்போது அல்லது தேவையற்றவை உடைக்கப்படும் போது அது எவ்வாறு சமூகப்பிறழ்தல்களாய் உருவாகவும், உருவாக்காவும் படுகிறது என்பதை சொல்வதாய் தோன்றியது.

கலைத்துறையில் எத்தனையோ பேர் கலை, இலக்கிய, தொழில் நுட்ப பிரிவுகளில் பணியாற்றினாலும், ஒப்பனைக்குப் பின்னே வயதையும், யதார்த்தத்தையும் ஒளித்தோ அல்லது தொலைத்தோ ஏதோவொரு புள்ளியில் வாழ்க்கையை கோட்டை விடும் நடிக, நடிகையரே அதிகம் நினைவில் வருகிறார்கள். அவர்களது வாழ்க்கை குறித்த சுவாரஸ்யங்களே அதிகம் பத்திரிகை துறையால் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. சரி, நடிகர்களா, நடிகைகளா அதிகம் இது போன்ற பாரிய தொழிற்துறையில் எல்லா வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் சினிமா துறையில் பெண்களே பலியாடுகளாயும் ஆகிப்போகிறார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

ஆண், பெண் என்கிற வித்தியாசம் இல்லாமல் தான் பெரும்பாலும் உடலழகும், நடிப்பும் (!!??) காட்சிப்படுத்தப்படுகிறது, கதைக்கு சம்பந்தம் இருந்தாலும், இல்லையென்றாலும். ஒரு பெண் நடிகையின் வயிற்றுப்பாகம் எவ்வளவு தட்டையாய் உள்ளதோ அல்லது மார்புகள் வாளிப்பாய் உள்ளதோ அது பல கோணங்களில் காட்சிப்படுத்தப்படும். ஒரு கதா நாயகனின் 50 வயது கடந்த தொந்தி என்றால் அது layers ஆக உடைகள் போட்டு மறைக்கப்படும். வயதான நாயகனின் மார்பிலும் இயற்கை Estrogen வழி தன் சேட்டையை காட்டியிருக்கும். ஆனாலும், அது மறைக்கப்படும். அதுக்காக நன்றி சொல்லத்தான் வேண்டும். இல்லையென்றால் அதுவும் காட்சிப்படுத்தப்பட்டு அதை பார்க்கும் கொடுமையான அவஸ்தைக்கும் நாம் ஆளாக வேண்டியிருக்கும். இது தான் தமிழ் சினிமா விதி! 50 வயது நாயகன் கல்லூரி மாணவராய் வந்தாலும் ரசிகன் ரசிப்பான். அதுவே, அண்ணளவாய் 25 வயது கடந்தால் நாயகி 50 வயது நாயகனுக்கு அம்மாவாய் மாறி மடியில் போட்டு சோறூட்ட வேண்டும்.

சரி, இதை கடந்து கொஞ்சம் கலைத்துறையின் திரக்குப்பினால், இயக்குனர் கட், க்ட் சொன்ன பிறகு இந்த நட்சத்திரங்கள் எப்படி இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறதா என்று பார்த்தால் அங்கே வெளிப்பட்டு நிற்கிறது நடிகைகளின் சீரழிந்த, சீரழிக்கப்பட்ட வாழ்க்கை கோலங்கள். வாழ்க்கை சீரழிந்த பின் தங்களை மீட்டெடுக்க அந்த துறையை விட்டே விலகி வாழும் பெண்கள் ஓரளவிற்கு தப்பிக்கொள்கிறார்கள். திரையில் தோன்றுவது போலவே நிஜவாழ்வும் இருக்கும் என்று யதார்த்தம் புரியாத, பொய்யான, போலியான உத்தரவாதங்களில் ஏமாந்தவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் சிலர் தான் மனதை நெருடச்செய்வார்கள். அவர்களில் சிலர் ‘ஊர்வசி’ சோபா, ’கவர்ச்சி தேவதை’ சில்க் ஸ்மிதா, விஜி, படாபட் ஜெயலட்சுமி, மோனல் அப்புறம் பிரதீஷா!

எல்லோருடைய அகால மரணத்திலும் ஊர்ஜிதப்படுத்தப்படாத உண்மைகளும், சந்தேகங்களும் தான் கேள்விகளாய் புத்தியை நெருடும். அது சினிமா நடிகைகள் மற்றும் பிரபலங்கள் என்றால் இன்னும் அதிகமாய் விறுவிறுப்பாய் வியாபாரமும் ஆகும். இது தற்கொலையா, இல்லையென்றால் அந்த மரணத்துக்குப் பின்னணி ஏதாவது உண்டா! பின்னணி என்றால் அது என்ன அல்லது யார் என்று விடை தெரியா கேள்விகள்.  இதை சொல்லும் போது பத்திரிகையாளர் அனிதா பிரதாப் காலஞ்சென்ற சினிமா நடிகை சில்க் ஸ்மிதா பற்றி தன் Island of Blood புத்தகத்தில் In the veils of Sorrow கட்டுரையில் குறிப்பிட்டதை பகிரத்தோன்றுகிறது.

”Silk Smitha, the voluptuous vamp of south Indian films cast a spell, especially on men, with her sultry, bedroom eyes; her inviting, luscious lips; pointed, thrusting breasts;..... Sexually frustrated men ventilated through salacious catcalls, sighs, yells and even urgent masturbation...."

"...She told me her story, and it was a sad one, of financial, physical and sexual exploitation. Everyone in the film industry, every man she met, from producer to light boy, constantly harassed her with innuendos and propositions...".

அனிதா பிரதாப் சில்க் ஸ்மிதா பற்றிக்குறிப்பிடும் ஐம்புல கவர்ச்சி அம்சங்கள் அத்தனையும்  இப்போதெல்லாம் தாரளமாய் இயக்குனர்களால் ரசிகர்களுக்கு படைக்கப்படுகிறது. இதுக்கு சிறந்த உதாரணம் அண்மையில் நான் பார்த்த இயக்குனர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம். ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ சர்க்கரை என்பார்கள். அது தான் இந்த இயக்குனரின் மலிந்த உபாயம் போலும் கவர்ச்சிக்கு. வட அமெரிக்காவில் வாழும் எனக்கு ஓரளவுக்கு இங்கே தொலைக்காட்சிகளில் நான் கண்ட Fear Factor, Survivor etc. போன்ற ரசிகனை ஏமாளியாக்கி பொருளீட்டும் நோக்கம் கொண்ட Reality TV Shows என்பவற்றின் தமிழ் வடிவம் தான் ஆயிரத்தில் ஒருவன் என்கிற பிரம்மையைத் தவிர்க்க முடியவில்லை. இந்த திரைப்படத்தில் இவர் ஈழத்தமிழனின் இன்னல்களை சொல்ல முட்பட்டார் என்கிற அபத்தத்தையும் தாண்டி வந்திருக்கிறேன்.

குட்டைப்பாவாடைக்கு, காற்சட்டைக்கு வெளியே  நாயகியின் பிட்டம் எட்டிப்பார்க்கிறதா என்கிற ரசிகர்களின் கவலைக்கு மருந்தளிப்பதையும் இயக்குனர் செய்யத்தவறவில்லை ஒரு வரலாறும் புனைவும் கலந்த கலைப்படைப்பில் !?. தமிழ் மன்னர்கள் போர்தொடுத்து, ஒழிந்த நேரத்தில், leisure activities களில், தம் சந்தோசத்திற்காய் பெண்களை தம் இச்சைகளை தீர்க்க எப்படி தயார்ப்படுத்தினார்கள்,   பயன்படுத்தினார்கள் என்பதை காட்ட எடுத்துக்கொண்ட அதீத அக்கறையை கதைக்களத்திலும் காட்சிகளின் வலுவான அமைப்புகளிலும் கொஞ்சமாவது காட்டியிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

அது தான் வழக்கமான அபத்தக்களஞ்சியம் என்றால், இன்னொரு நாட்டுக்குள் (வியட்னாம்) சென்று அங்கே வாழும் ஒரு பழங்குடி இனத்தில் உள்ளவர்களை கேள்வி முறையின்றி டிஷ்யும், டுமீல், டமீல் என்று இந்திய துப்பாக்கிகள் சுடுமாம். நல்லவேளை, அந்த இடத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் ஏதோ ஒப்புக்கு சப்பாணியாய் வசனம் பேசி ஒப்பேத்துகிறது கதையில் வரும் மிகப்பெரிய ஓட்டையை. இந்திய அரசு ஈழத்தமிழர்களை அமைதிப்படை என்கிற பெயரில் வந்து சுட்டுத்தள்ளிய அதே தியரி இங்கேயும் பொருந்துமோ! அட, பார்க்கிற ரசிகனை என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

விஞ்ஞானிகள்  நிறமூர்த்தங்களின் (நிறமூர்த்தம்-Chromosome) எண்ணிக்கையிலும் அதன் கட்டமைப்பிலும் உருவாகும் குழறுபடிகளால் எப்படி குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்கிறார்களாம். தமிழ் சினிமாவில் இவர்கள் செய்வது பரம்பரை மரபணுக்கூறுகளில் (DNA) பரம்பரை பண்புகள் மட்டுமன்றி தனித்தன்மைகள்/தனித்திறமைகள் கூட கடத்தப்படும் என்று  நிகழ்வதற்கு அரிதான நிகழ்வுகளை பொதுமைப்படுத்தி  அரைகுறை அறிவியல் கலந்து இனப்பெருமை பேசுவது (ஏழாம் அறிவு); பயங்கரவாதத்திற்கும் உரிமைப்போராட்டத்திற்கும் எள்ளளவும் வித்தியாசம் தெரியாமல் சுயபிரஸ்தாபம் செய்ய குயுக்தியாய் அது குறித்து சினிமா எடுத்து வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டுவது (குருதிப்புனல், உன்னைப்போல் ஒருவன்); இதிகாச, இலக்கிய கதாபாத்திரங்கள் குறித்த மாறுபட்ட பார்வை என்று பிரபலங்களை வைத்து வித்தை காட்டுவது (ராவணா) இவை தவிர்த்து எப்போது எங்களுக்கு தரமான கலை, இலக்கிய, அறிவியல் சம்பந்தமான தரமான  படைப்புகள் கிடைக்கும்! தனிமனிதராய் உங்கள் தனித்திறமையை உங்கள் படைப்புகளில் எடுத்தியம்பும் போது பார்க்கும் ரசிகனையும் அடிமுட்டாளாக்கும் அபத்தத்தையும் தவிர்க்கலாமே.

இந்திய சினிமா பற்றி ஒரு ஆங்கில கட்டுரை. இங்கே தேர்ந்தெடுத்து தொடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்து நீங்கள் நொந்து போனால் நான் பொறுப்பாளி கிடையாது.

இது சமகால-தொன்ம வரலாறு, புனைவு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத படைப்புகள் குறித்த விமர்சனம்.

Image Courtesy: Google

17 கருத்துகள்:

siva sankar சொன்னது…

உங்கள் கேள்விக்கும்
தேடலுக்கும்
பதில் யாருக்கும்
தெரியுமோ எனக்கு தெரியாது
சினிமா
வியாபாரம்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரையிலும்...

நீங்கள் ஒரு கல்லுரி விரிவுரையாளரை விட தெளிவை உங்கள் பார்வைகளை
தொகுத்து இருக்கீங்க
அப்பஅப்பா எதனை சொல்வது எதனை விடுவது
எனக்கு மயக்கம் வந்துவிட்டது

வாழ்த்த வயதில்லை
வணங்கி மகிழ்கிறேன்
வாழ்க வளமுடன்

Rathi சொன்னது…

சிவா, எப்பிடி இருக்கீங்க :) என்னாச்சு இப்போ ப்ளாக் எழுதுறதில்லையா!

siva sankar சொன்னது…

மிக்க நலம் :)

பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்று இருந்தேன்.
எப்போதாவது கிறுக்குவது உண்டு.
தற்போது ஒன்று எழுதி இருக்கிறேன்.

நன்றி RATHI.

வேர்கள் சொன்னது…

சினிமாவில் எனக்கு தெரிந்த அபத்தங்கள்
1 . வாரிசுகள் தொல்லை (இன்று தமிழ் சினிமாவில் அளவுக்கு மீறி இருக்கிறது )
நாம் சினிமாவில் பலரை ரசித்ததற்கு கரணம் அவர்களின் தனி திறமைக்காக ஆனால் அவர்கள் அதை வைத்துகொண்டு என்னுடைய மகனையும் மக்கள் ரசிப்பார்கள் என்று நினைத்து(Brand name ) களத்தில் இறக்கும்போது அவர்களின் அறியாமையை நினைத்து உள்ளுக்குள் இவர்கள் இவ்வளவுதானா என்ற சலிப்பு ஏற்படுகிறது.
2 பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொ(ல்)ள்வது இவர்களின் நடிப்பு திறமையை நீங்கள் அங்கும் பார்க்கலாம்
3 இவர்களின் போலி சமூக அக்கறையை சினிமாவில் மட்டும்சொல்வது
ஏனென்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஒன்று போலி சமூக அக்கறையை நிஜமான அக்கறை போல் காட்டுவது மற்றொன்று இதை வைத்து காசு பார்ப்பது சினிமாவை தாண்டி பொதுவெளியில் இதைப்பற்றி விரிவாக பேச பயப்படுவது
மேற் கூறியவைகளிலிருந்து விதிவிலக்குகள் சினிமாவில் உண்டு

Rathi சொன்னது…

வேர்கள், I agree :)

தனிமரம் சொன்னது…

சினிமா வியாபாரத்தை நோக்குதே தவிர இயல்பயையோ லாஜிக்கோ தேவையில்லை விசில் அடிக்கும் குஞ்சுகள் இருக்கும் வரை இந்த தாக்கம் மாறாது .தெளிந்த பார்வையில் நீண்ட பதிவு .

ஹேமா சொன்னது…

என்ன ரதி பொங்கலோட இருந்து நிறைய யோசிச்சிருக்கிறீங்கள்போல.
இவ்வளவையும் எழுதிட்டு சின்னப் பிள்ளைமாதிரி....உலகமே இப்ப வியாபாரம்.எங்கும் பணம் பணம்.
வாழ்வு,உறவுகள்,சொந்தம்.அன்பு எல்லாம் எல்லாமே.சினிமா இதில ஒரு தூசு போங்கோ.சும்மா எல்லாத்தையும் யோசிக்காதேங்கோ.பிறகு உங்களுக்குத்தான் வருத்தம் வரும்.அங்கயும் காசு காசு !

Rathi சொன்னது…

தனிமரம்- நேசன், சினிமா வியாபாரம் என்பதில் எனக்கும் ஒன்றும் மாற்றுக்கருத்து கிடையாது.

வரலாற்றையோ, அறிவியலையோ கூட அது புனைவென்றோ அல்லது புனைவு கலந்த நிஜமென்றோ சொல்லாமல் தாங்களும் குழம்பி, ரசிகனையும் குழப்பவேண்டிய தேவை தான் எரிச்சலை உண்டாக்குகிறது. படைப்பாளிகள் தாம் குறித்த சுயமுன்னிறுத்தல்களுக்கு முதல் நிலை கொடுக்கும் போது எல்லாமே தலைகீழ் ஆகிப்போகிறது.

Rathi சொன்னது…

ஹேமா, :) இதெல்லாம் யோசிக்காமலே எழுதினதாக்கும். யோசிச்சிருந்தன்.... அவ்வளவு தான் :))))

ஹேமா சொன்னது…

ரதி....இண்டைக்குத்தானாம் காதலர்தினம்.எல்லாரும் சொல்லுகினம்.அதனால உங்களுக்குக் காதல் வாழ்த்துகள் காதலோடு !

பெயரில்லா சொன்னது…

i like your blogspot

Rathi சொன்னது…

ஹேமா.... உங்கள் காதலோடான வாழ்த்துக்களுக்கு நன்றி :)

Rathi சொன்னது…

சொரூபன், நன்றி. சரி, போஸ்ட்ஸ் எழுதறதில்லையோ நீங்கள் :)

வேர்கள் சொன்னது…

http://www.youtube.com/watch?v=aiGS6Hpcxgc&feature=player_embedded

அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை(சிறுமியிடம் )
இப்படி எத்தனையோ அக்கினி குஞ்சு.......
எவ்வளவோ பொந்து.......

Rathi சொன்னது…

நன்றி வேர்கள்! வேறென்ன சொல்ல.

J.P Josephine Baba சொன்னது…

பயனுள்ள கட்டுரை.

நண்பர்களே,
வணக்கம்
தமிழ் சினிமாவின் இன்றைய நிலை
என்கிற தலைப்பில்
ஒரு விவாதம் நடத்தலாம்
என்று எண்ணிக் கொண்டு இருக்கிறேன்.

என் பேஸ்புக் தளத்தில்
நிறைய திரை ஆர்வலர்களும்
திரை புரவலர்களும்
இயக்குனர்களும்
கதாசிரியர்களும்
உதவி இயக்குனர்களும்
ரசிகர்களும்
விமர்சகர்களும் இருக்கும் காரணத்தினால் உங்களிடமிருந்து
ஆரோக்கியமான
அறிவுசார் கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

நிறைய கட்டுரைகள் வருகை இருப்பின்
சென்னையில்
ஒரு நல்ல நாளில் சந்தித்து உரையாடுவோம்.

மெயிலாக அனுப்பவும்
தங்கலீஷ் தமிழ் வேண்டாம்.
நல்ல தமிழில்
vasantabalan@yahoo.co.in.

அன்புடன்
வசந்தபாலன் ////
ஒரு கட்டுரை அனுப்பலாமே.

Rathi சொன்னது…

J.P.Josephine Baba, நன்றி உங்கள் தகவலுக்கு. முயன்றுபார்க்கிறேன்.