ஜனவரி 22, 2012

“கைப்புள்ள” ஈழத்தமிழனும் மற்றும் பலரும்!


ஒவ்வொரு செயலுக்கும் வினையாற்றி, அதற்கு எதிர்வினயாற்றி இப்படித்தான் தொடர்கிறது பல அரசியல் களங்களின் காய் நகர்த்தல்கள். அதன் எச்சமாய் மிஞ்சுவது எதிரியின் சாணக்கியமா அல்லது பல்லிளிப்பது உலகமகா அயோக்கியத்தனமா என்பது பாதிக்கப்பட்டவன், பார்வையாளின் புரிதல் பொறுத்தது. தமிழீழம் குறித்த சில இலங்கை-இந்திய அரசியல் நகர்வுகள் குறித்த என் புரிதலை இங்கே மீண்டும் ஒரு முறை பகிர்ந்துகொள்கிறேன்.

கடந்த ஓரிரு வாரங்களாய் இலங்கை அரசியலில் சில காய் நகர்த்தல்கள் செய்திகளில் காணக்கிடைத்தது. வன்னி, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னான இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு, அதற்கு தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதிலறிக்கை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவின் உத்தியோக பூர்வ கொழும்பு வருகை, காலியில் நடைபெறும் சர்வதேச எழுத்தாளர்களின் இலக்கிய ஒன்றுகூடல் விழா என்று எல்லாமே இலங்கை அரசியலில் ஒரு மையப்புள்ளியை நோக்கி நகர்கிறது.

அந்த மையப்புள்ளி வேறொன்றுமில்லை. அது எதிர்வரும் மார்ச் மாதம்  தொடங்கி நடைபெற இருக்கும் ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் தான். 1948 ஆம் ஆண்டின் ஐ. நா. வின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைப்பிரகடனம் கூட இன்னும் அரசியல் கடந்து எந்த ஒரு மானிடனின் உரிமையையும் உருப்படியாய் நிலை நாட்டவில்லை என்பது தான் வரலாறு. மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகள் சபை இரண்டும் பொய்த்துப்போகும் வரலாற்று நிகழ்வுகள் இன்னும் தொடர்கின்றன.

உலகின் ஜன நாயக குடியரசுகளாய் தங்களை வரையறுத்துக் கொண்ட நாடுகளின் அரசியல் யாப்பிலக்கணத்தின் ஆதாரம் மனித உரிமைப்பிரகடனத்தின் அடிப்படை கூறுகள் தான் என்றாலும், அதன் செயன்முறை வடிவம் மூன்றாம் உலகில் மேற்குலகால் இன்னும் தங்கள் அரசியல் காய் நகர்த்தல்களுக்கே கருவியாய் பயன்படுத்தப்படுகிறது. அதையெல்லாம் ஆரம்பத்திலிருந்து (1970, 1980 களிலிருந்து) புரிந்து கொண்ட ஆசிய மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களும் அவர்கள் வழி வந்த குடிகளும் இன்றுவரை மேற்குலகம் போதிக்கும் (போலி) ஜன நாயக உரிமைகள் குறித்த வார்த்தைகளில் நம்பிக்கையற்றவர்களாகவே மாறிவிட்டார்கள். இன்னொரு காரணம், அமெரிக்காவின் அரசியல், பொருளாதார படையெடுப்பால் இஸ்லாமிய நாடுகளில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள்.

ஜன நாயகம் இல்லையேல் உலகமயமாக்கம் இல்லை. இதையெல்லாம் ஓரளவிற்கேனும் போலியில்லாமல் இருக்கிறது என்று அவ்வப்போது நிரூபிக்க இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமைகள் அமைப்பு ஏதாவது செய்கிறது என்று காட்ட வேண்டியும் இருக்கிறது என்பதும் யதார்த்தம்.

ஐ. நா. வின் மனித உரிமை அமைப்பு  நீதியினின்றும் வழுவாத மனு நீதிச்சோழன் என்றே கொண்டாலும், அவனையும் அவன் தேரையும் குடைசாய்ப்பதையே குலத்தொழிலாய் கொண்டவர்கள் ராஜபக்‌ஷேக்கள், இந்தியாவிலுள்ள காஸ்மீர் மற்றும் ஆதிவாசிகளின் போராட்டத்தை  நசுக்குபவர்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேண நினைப்பவர்கள். இன, மத, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களுக்கேற்பவே மனித உரிமைகளும் வரையறுக்கப்பட வேண்டும் என்பதும் கூட இவர்களின் வாதம். மேற்குலகிற்கும் ஆசிய (சீனா உட்பட), இஸ்லாமிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குமிடையே இருக்கும் மனித உரிமைகள் குறித்த இழுபறி நிலைக்கு 1993 ஆம் ஆண்டு வியன்னாவில் நடந்த ஐ. நா. வின் உலக மனித உரிமைகள் மாநாடு ஒரு உதாரணம்.  எங்கு மனித உரிமைகள் மாநாடு நடைபெற்றாலும் அதில் சீனாவிற்கு மனித உரிமைகள் பற்றி போதிக்கும் மேற்குலகத்துக்கு எதிரானதே சீனாவின் நிலைப்பாடு. மனித உரிமைகள் விடயத்தில் சீனாவின் வழி தனி வழி. அதை இப்போதைக்கு விட்டுவிடுவோம். வியன்னா மாநாட்டிலும் மேற்குலகத்தவர்கள் தலாய் லாமாவை கொண்டு வந்து சீனாவில் மீறப்படும் மனித உரிமைகள் பற்றி பேசுவது பற்றியெல்லாம் யோசித்தார்களாம்!

தலாய் லாமா இந்தியாவில் புலம்பெயர் அரசு (Exile Govt.) அமைத்து திபெத்தியர்களுக்கு விடுதலை கேட்டால் அது நியாயம், இந்திய, அமெரிக்க அரசியல் சாணக்கியத்தில். அதுவே, ஈழத்தமிழன் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின் நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Govt.) அமைத்தால் இந்தியா ஒத்துக்கொள்ளாது. ஒருவழியாய், பெரியண்ணன் அமெரிக்காவே மனமிரங்கி ஈழத்தமிழர்கள் உரிமை பற்றி அல்லது பொதுவாக மனித உரிமைகள் பற்றி பேசமுற்பட்டால் அது தங்கள் இறையாண்மைக்கு பங்கம் என்று கூக்குரல் போடுவார்கள் ஆசியாவில் இன, மத, கலாச்சார, பண்பாட்டு அடிப்படையில் ஜனநாயகம் பேணுபவர்கள். தலாய் லாமா இந்தியாவில் புலம்பெயர் அரசு அமைத்தால் சீனாவின் இறையாண்மைக்கு பங்கம் இல்லை. அதுவே, ஈழத்தமிழர்கள் நாடு கடந்த அரசு அமைத்தால் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படுமாம்! தமிழக மீனவர்கள் சிஙகள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டால் இந்திய இறையாண்மைக்கு பங்கம் இல்லையா என்று நான் கேட்கப்போவதில்லை.

இதை மனதிற் கொண்டே கடந்து ஈழத்துக்கு வருவோம். தமிழன் அழிக்கப்பட்ட போதெல்லாம் கருவியாய் செயற்பட்ட இந்தியா என்கிற நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தமிழர் திரு நாள் தைப்புத்தாண்டில் இலங்கை விஜயம் செய்திருந்தார். இவர் இலங்கைக்கு வருவது ஒன்றும் பெரிய அரசியல் நகர்வு இல்லை. இருந்தாலும் கவனிக்கப்படவேண்டியது. காரணம், இந்தியாவின் குடுமி ராஜபக்‌ஷேக்களின் கைகளில் எசகுபிசகாய் சிக்கிய போதெல்லாம் தன்னுடைய அமைச்சுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும் மூத்த, பழுத்த பிரணாப், சிவ் சங்கர் மேனன் போன்றார் தான் வழக்கமாய் ஆஜர் ஆவார்கள்,  ராஜபக்‌ஷேக்களை சந்தித்து அரசியல் சாணக்கியம் பேச, ஈழத்தமிழனை கவிழ்க்க.

இம்முறை தாரா, தாரா எஸ்.எம். கிருஷ்ணா வந்தாரா!! வந்து யாழ்ப்பாணம் சென்று பொங்கல் பொங்கினாரா! அப்படியே, தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கையின் பாராளமன்ற  தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டும் என்று கறாரான ஒரு கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை விடுத்தார். 2007 ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் குழு (All Party Representative Committee (APRC)) ஒன்றை அரசியல் யாப்பு குறித்து பரிந்துரை வழங்க உருவாக்கிய ராஜபக்‌ஷே அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைக்கவோ அல்லது சேர்த்துக்கொள்ளவோ  இல்லை. அப்போது எங்கே போனது இந்தியா! இந்த குழு மூன்று வருடங்களில் 126 கூட்டத்தில் கூடி உருப்படியாய் எந்த அரசியல் உரிமையையும் சிங்களர் அல்லாதவர்களுக்கு வாங்கி கொடுக்கவில்லை. சிறுபான்மையினருக்கு (தமிழர்களுக்கு) சுயாதிகாரம் கொடுக்கப்பட வேண்டுமென்று அரைகுறையாய் அறிக்கை சமர்ப்பித்ததோடு முடித்துக்கொண்டார்கள். அது வழக்கம் போல் கிடப்பில் போடப்பட்டது. இப்போது, இலங்கை அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பேச்சுவார்த்தை கூட இழுபறியில் இருக்கிறது. இந்தலட்சணத்தில் அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று இ. வெ. வி. அ. எஸ். எம். கிருஷ்ணா அழுத்தம் கொடுக்கிறாராம்.

அப்படியே கிருஷ்ணா 13+ தீர்வையும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாய் அமுல்படுத்த வேண்டுமென்று ராஜபக்‌ஷேக்களிடம் அன்பாய் சொல்லியிருக்கிறார். 1987 ஆம் ஆண்டுமுதல் இதை சொல்ல இந்தியாவுக்கும், இப்போது கிருஷ்ணாவுக்கும் சலிப்பதில்லை. பொய் பேசுபவர்கள் அதை கணக்கு வைத்திருக்க வேண்டும் என்கிற பொதுவிதியும் இவர்களுக்கு பொருந்துவதும் இல்லை. தேவைப்பட்டால் 13+, மீளிணக்கம், நல்லிணக்கம் என்று எதையாவது புலம்பிவிட்டு போகவேண்டியது தான். தமிழர்களுக்கு தான் இந்த கேலிக்கூத்தை பார்த்தும், கேட்டும் பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலை, பொம்மைகளாய். எதிர்வரும் மார்ச் மாதம் ஐ. நா. வின் மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத்தொடரில் இலங்கை ஆட்சியாளர்களை இனப்படுகொலை விசாரணைகளிலிருந்து காப்பாற்ற இந்தியாவின் கிருஷ்ணா தலையால் முயல்கிறார் என்பது அனைத்து இளிச்சவாய் ஈழத்தமிழனுக்கும் கூட புரியும் அரசியல் அரிச்சுவடி. தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசுடன் பேசுகிறது, பேசிக்கொண்டே இருக்கிறது என்று மனித உரிமைகள் சபை கூட்டம் முடியும் வரை இழுத்தடித்தாலே போதும் போல.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையால் பொங்கிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் சிவாஜிலிங்கம் கூட தன் பங்கிற்கு ஒரு அறிக்கை விட்டார். அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான உள்ளக சுய நிர்ணய உரிமையை வலியுறுத்த வேண்டுமாம். ஏன்! ஈழத்தமிழர்கள் விரும்புவது வெளியக சுய நிர்ணய உரிமை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது சிவாஜிலிங்கமோ வலியுறுத்தினால் அதென்ன கொலைக்குற்றமா? சிவாஜிலிங்கம் ஏன் இப்படி குழப்புகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். என் சிற்றறிவுக்கு எட்டிய வரை ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் புலிகள் மீண்டும், மீண்டும் வலியுறுத்தியது வெளியக சுய நிர்ணைய உரிமையையே! உயிரைக் கொடுத்து ஈழவிடுதலைக்கு போராடியவர்கள் வேண்டியது சுதந்திர தமிழீழம். அரசியல் பேசுபவர்கள் செய்வதோ உள்ளக, வெளியக சுய நிர்ணயம் என்கிற குழப்பவாதம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றைய அரசியல் நகர்வுகளில் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளானாலும், அண்மையில் வெளியான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஒரு பதில் அறிக்கை சமர்ப்பித்தது. மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பாரபட்சமான விடயங்களை மிக திறமையாக சுட்டிக்காட்டியதோடு, அதிலுள்ள குறை, நிறைகளையும் (இதை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் அந்த அறிக்கையில்) அலசி ஆராய்ந்து அறிக்கையாய் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

1.வன்னியில் இறுதிக்காலத்தில் இருந்த அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கை இந்திய அறிவுரையின் பேரில் பொய்க்கணக்கு காட்டி உணவு விநியோகத்தை குறைத்து அவர்களை பட்டினிச்சாவிற்கு தள்ளியது

2. NO Fire Zone என்று அறிவித்து அங்கே அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது

3. தான் பாலியல் வன்முறைக்கு ஆளானதை ஆணைக்குழுவின் விசாரணையில் தெரிவித்தவருக்கு அவருக்குரிய பாதுகாப்பை வழங்காமல், அவரை இலங்கையின் சித்திரவதைக் கூடமான நாலாம் மாடிக்கு குற்றப்புலானாய்வுத் துறைக்கு அனுப்பி அவரின் (சாட்சியின்) அடையாளத்தினை வெளிப்படுத்தியது

4. இறுதிப்போரின் போது மிக குறைவான மருந்துவகைகள், வசதிகள் என்பவற்றை கொண்டு மருத்துவ சேவை செய்து தற்போது இலங்கை அரசின் கெடுபிடிகளுக்குள் சிக்கி முன்னுக்குப் பின் முரணாக சாட்சி சொல்லும் மருத்துவர்களின் சாட்சிகளை இருபது முறை அறிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, அவர்களின் வாக்குமூலத்துக்குரிய எந்தவொரு சான்றாதாரத்தையும் வழங்காதது

5. மீளிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அதன் ஆய்வுமுறை (Methodology), உறுப்பினர்களிடம் காணப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் சட்டம் (International Humanitarian Law) குறித்த அறிவுக்குறைபாட்டையும் சுட்டிக்காட்டி நிற்கிறது.

இப்படி அத்தனைக்கும் ஓர் ஆய்வாக, பதிலாக ஒரு அறிக்கை வெளியிட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராட்டியே ஆகவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த பதில் அறிக்கையும் மனித உரிமைகள் சபையால் கவனத்திற் கொள்ளப்படும். காரணம், அவர்கள் இலங்கை என்கிற நாட்டில் தமிழர்களின் பிரதிநிதிகள். ஐ. நா. வின் மூன்று பேர் கொண்ட குழு அறிக்கை (தருஸ்மன் அறிக்கை), இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிக்கை, கூடவே இங்கிலாந்தின் ஊடகமான சனல் 4 கின் இலங்கையின் கொலைக்களங்கள் என்கிற ஆவணக்காணொளி இதெல்லாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு அறிக்கையோடு ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் இலங்கை அரசின் மீளிணக்க, நல்லிணக்கத்தின் அவலட்சணம். இருந்தாலும் இதையெல்லாம் அடாவடியாய் இந்தியாவின் உதவியோடு செய்வது மனித உரிமை சபையில் இலங்கை தன்னைத்தானே போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே.

இவை தவிர இலங்கை காலியில் தெற்காசியாவிற்கான இலக்கிய விழா தை மாதம் 18-22 ம் திகதி வரை நடைபெற்றதும் இலங்கையின் இனப்படுகொலை குற்றங்களை மறைத்து அதன் பெயரை காப்பாற்றுவதற்கே. கடந்த வருடம் எல்லைகள் கடந்த ஊடகவியலாளர்கள் அமைப்பு, நோம் சாம்ஸ்கி, அருந்ததி ராய் போன்றோரின் முயற்சியில் அது தடுத்து நிறுத்தப்பட்டது. சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் பிரச்சனைகளை எழுத்து மூலம் உலகத்திடம் எடுத்துச் செல்லும் சர்வதேச முன்னணி எழுத்தாளர்களின் ஆதரவும் இலங்கை என்கிற இனப்பாகுபாட்டு கொள்கை கொழுந்துகளுக்கு இருக்கிறது என்பதை காட்டும் முயற்சி இது. பாதிக்கப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன் ஆயிரம், லட்சம் பேர் சொல்வதை விட இது போன்ற இலக்கியவாதிகள் சொன்னால் சுலபமாய் எடுபடும் என்பதும் கொஞ்சம் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

தற்போது இலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்காய் ராஜபக்‌ஷேக்களுக்கு பிரச்சார உதவி செய்பவர் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம். தமிழக கூடன்குளம் அணுமின் நிலைய பிரச்சார வேலைகள் முடிவடைந்து இப்போது இலங்கையில் இனப்பிரச்சனை தீர்வுக்கு உழைக்கிறார் விஞ்ஞானி அப்துல் கலாம். தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் சில சமயங்களில் அவர்கள் சார்ந்த துறைகளோடு தங்கள் சேவைகளை மட்டுப்படுத்தினால் நன்றி சொல்வான் தமிழன்.

1987 லேயே சமைக்கப்பட்டு ஊசிப்போன 13+ தீர்வுப்பொதி, இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் தொடங்கி இன்றுவரை சிங்களப்பேரினவாதிகளிடம் மருந்துக்கும் இல்லாத மீளிக்க, நல்லிணக்க எண்ணமும் அது குறித்த அறிக்கையும்; மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் எடுத்துக்கொள்ளப்படும் என்றால் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழரின் பிரதிநிதிகளாய் கருதும் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள்; இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், விளிம்பு நிலை மனிதர்களின் அவலம் அறியாத சர்வதேச இலக்கியவாதிகள் இவர்களும், இது போன்ற அம்சங்களும் உள்ளவரை ராஜபக்‌ஷேக்களும், இந்தியா, சீனாவும் ஈழத்தமிழர்கள் போன்றோரது அடிப்படை உரிமை பிரச்சனை, அரசியல் அபிலாஷைகள் குறித்த எந்த விடயத்திலும் எந்த விதியையும் மீறலாம்.

சட்டங்களும் விதிகளும் மீறப்படுவதே வழக்காகிப் போனபின் நாங்களும் மனித உரிமைகள் சபையின் கூட்டங்களை கூட வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்! அந்த வேடிக்கை பார்த்தலினூடே என்றோ ஒரு நாள் எமக்குரிய நீதி கிடைத்தே தீரும் என்று எங்கோ ஒரு நம்பிக்கையின் இழையும் இன்னும் அறாமல் ஓடவும் செய்கிறது!

Image Courtesy: Google, TamilNet.

5 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

காங்கிரஸ் அரசின் கேவலமான அரசியலால் இந்தியா பொருளாதார ரீதியில் மிகக்கேவலமான பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த வருடம் கிட்டத்தட்ட 14 நாடுகளில் தேர்தல் நடைபெறும் சூழலில் உலகில் மிகபெரிய பொருளாதார மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது மேலும் 2014 க்கு முன்பாக உலக நாடுகள் ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும், அப்போது ராஜபக்‌ஷே தன் குடும்பத்துடன் வேறு நாட்டிற்கு ஓடி ஒளிவான். காரனம் இப்போது அவனை ஆதரிக்கும் சிங்கள மக்களே அவனுக்கு எதிராக போர் தொடுப்பார்கள்.

அதே காலகட்டத்தில்தான் தனி ஈழமும் மலரும்.

இது நிச்சயம் நடக்கும்..

ரெவெரி சொன்னது…

சோனியாவின் பழிவாங்குதல் அவள் அழிவு வரை தொடரும்...விடிவு காலம் கண்டிப்பாய் வரும் சகோதரி...

வேர்கள் சொன்னது…

ரதி
இங்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள் தமிழ் உணர்வாளர்கள் உடனான விவாதத்தின் பொழுது நடந்தவைகளை மறந்துவிட்டு நீங்களெல்லாம் காங்கிரசுக்கு கை கொடுக்க வேண்டும் என்று அழைக்கிறார்கள் (பம்முகிறார்கள் )நான் நினைத்தேன் சட்டசபை தேர்தலில் வாங்கிய அடியால் வரும் பாராளுமன்ற தேர்தல் வேலையை இப்போதே ஆரம்பித்துவிட்டர்கள் என்று.
நீங்கள் சொன்ன மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் ஒரு காரணமாக இருக்கலாம்

ராஜ நடராஜன் சொன்னது…

எந்த வலியும் காலத்தின் வேகத்தில் குறையும்ங்கிற அடிப்படை உண்மைகள் மட்டுமே உண்மை.முல்லிவாய்க்காலின் கால கட்டத்தோடு கடந்த இரு வருடங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இனப்படுகொலைக்கான குரல் ஈனஸ்வரத்தில் ஒலித்துக்கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.உணர்வுகள் உறங்கி கிடந்தாலும் செயல்பாடுகள் மங்கிக்கொண்டே வருகின்றன என்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள்,வை.கோ,சீமான் போன்றவர்கள் இணையாத தனிக்குரல் என்ற நிலையில் உங்கள் பதிவின் சாரத்தை ஒட்டிய சமீப கால ராஜபக்சே குழு நகர்வுகள் இலங்கைக்கே சாதக நிலையை உருவாக்குகின்றன.

கற்றுக்கொள்ளாத பாடங்களையும் ஏற்றுக்கொள்ளும் சூழலை நோக்கியே ஈழப்பிரச்சினை முன் செல்கிறது.

Until and unless the history do not make a new turn and divertion, present flow will continue and we might sail on the current.

Rathi சொன்னது…

கே.ஆர்.பி. செந்தில், ரெவரி, வேர்கள், ராஜ நடராஜன், மாற்றம் வரும் என்கிற நம்பிக்கையில் தானே எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது.

அந்த மாற்றம் விரைவாய் வரவேணும் என்பது தான் எல்லோருடைய அவாவும்!