ஜனவரி 13, 2012

தனிமனித சரித்திரம்!
அவர் ஒரு சரித்திரம். சரித்திரம் சாவதில்லை என்றெல்லாம் சொல்வார்கள். சாதனையாளர்கள், சரித்திரம் படைத்தவர்கள் எல்லாருமே வரலாற்றில் பக்கங்களில் வாழ்வதுமில்லை. காலங்காலமாக வரலாற்றிலும் எத்தனையோ பேர் அதற்குரிய இடம் அளிக்கப்படாமலேயே அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டே மறைக்கப்படுகிறார்கள். சரித்திரமும், சரித்திர நாயகர்களும் கூட அவ்வப்போது அரசியல் குறித்தே வரலாற்றில் விதந்தோதப்படுகிறார்கள். குறிப்பாக மக்கள் நாயகர்கள் (Folk Hero) ஆக வாழ்ந்து மனித முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள், விடுதலைக்காய் போராடியவர்கள் என்று வரலாற்றின் பக்கங்களுக்கு வராமலே போய்விடுவார்கள்.

இதன் மூலம் நான் சொல்ல வருவது ஒரு வளர்ந்து வரும் இளம் சமுதாயம் யாரை சரித்திர நாயகராய் கொள்ள வேண்டுமென்று ஒரு அரசியல் ஆட்சி தீர்மானிக்கிறதோ அவர்களே பாடப்புத்தகங்களில் இடம்பிடிக்க வைக்கப்படுகிறார்கள். சில பேர்களின் பெயர் கூட வரலாற்றில் மறைக்கப்படுகிறது. மாறாக, ராஜபக்‌ஷேக்களும் கூட வரலாற்றில் வாழத்தானே செய்கிறார்கள்.

வரலாறு காலம் கடந்தே சிலரை அடையாளம் காட்டுகிறது. எதற்காக அறியப்படுகிறார்கள் என்பது கூட சில சமயங்களில் ஆச்சரியத்தையும் கூட்டுகிறது. நவீன தொழில் நுட்ப தகவற்தொடர்பு சகாப்தத்தில் சரித்திரம் படைத்த இவ்வாறான எத்தனையோ பேரைப் பற்றி அறியவும் முடிகிறது.

தனிமனிதராய், தன்னியல்பாய் அமரிக்க வரலாற்றில் ஒரு மாற்றம் உருவாக காரணமாய் இருந்தவர் மறைந்தது பற்றி அண்மையில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. அமெரிக்காவில் வசித்த ஜப்பானிய தம்பதியினருக்கு பிறந்த கோர்டன் ஹிராபயாசி (Gordon Hirabayashi) என்பவரின் திடசங்கற்பம் எப்படி அமெரிக்க வரலாற்றின் ஓர் அங்கத்தை மாற்றியமைத்திருக்கிறது என்று.

ஜப்பான் அமெரிக்காவின் Pearl Harbor துறைமுகத்தை Dec. 7, 1941 தாக்கிய பின் அமெரிக்காவில் வாழ்ந்த ஜப்பானிய வம்சாவழியினரால் அமெரிக்க பசுபிக் கரையோரத்தின் வழி ஆபத்து வரலாம் என்றும்; அவர்கள் ஜப்பானுக்கு உளவு சொல்லக்கூடும் என்றும் அமெரிக்காவில் இடைத்தங்கல் முகாம்களில் ஏறக்குறைய 110, 000 பேர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அது ராணுவ அத்தியாவசியம் என்றும் சொல்லப்பட்டது. இடைத்தங்கல் முகாம் என்றால் தற்காலத்தில் வன்னியில் இறுதிப்போரின் பின் இலங்கை அரசு அமைத்த முகாம்கள் போன்றது. ஆனால், ராஜபக்‌ஷேக்கள் அளவுக்கு அங்கே கொடுமைகள் நிகழ்ந்ததாய் வரலாறு இல்லை.

அவ்வாறு ஜப்பானியர்கள் அவர்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்படும் போது அப்படி வெளியேற மறுத்தவர் தான் கோர்டன் ஹிராபயாசி. இடைத்தங்கல் முகாமில் ராணுவத்திடம் தன்னை ஒப்படைக்க மறுத்து அமெரிக்க உளவுத்துறையிடம் தன்னை ஒப்படைத்திருக்கிறார். கனடாவுக்கோ அல்லது அமெரிக்காவிற்குள்ளோ வேறெங்காவது ஓடி மறையாமல் அவரது வெளியேறும்படியான உத்தரவை துணிச்சலோடு நேரடியாகவே எதிர்த்திருக்கிறார்.

அவர் ராணுவனம் விதித்த வெளியேற்ற உத்தரவை மீறியது குற்றம் என்று  உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு, Arizona Work Shop இற்கு அனுப்ப  நிதிப்பற்றாக்குறை என்று அரசு சொல்ல தானாகவே அங்கு சென்றாராம். தன் சொந்த முயற்சியில் அங்கு செல்ல, அவர் சம்பந்தப்பட்ட ஆவண காகிதங்களை காணக்கிடைக்காததால் அவரை சுதந்திரமாய் போக அனுமதிதிருக்கிறார்கள். அப்போதும் மறுத்தவர்  நீதிமன்றம் வழங்கிய தனக்குரிய  தண்டனையை அனுபவித்து முடித்திருக்கிறார். Gordon Hirabayashi அண்மையில் காலமடைந்துவிட்டார்.

1980 களில் இது குறித்து மேல்முறையீடு செய்ததில் அமெரிக்க நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் அந்த ஜப்பானிய-அமெரிக்கரது வழக்கில் ஆதாரங்களை வெளியிடாது மறைத்து வைத்தது தெரியவந்தது. அதனால் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையும் தவறென்பது நிருபணம் ஆகியிருக்கிறதாம். இப்போது அவர் மரணம் அமெரிக்க மனச்சாட்சியை ஏதோ கொஞ்சம் அசைத்தும் பார்க்கிறது போலும். இவரது மரணத்தின் மூலம் மறுபடியும் ஒருமுறை இடைத்தங்கல் முகாம்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது.

மனிதனே வரலாற்று அசைவியக்கத்தின் அச்சாணி. மனித வாழ்வின், மனித சமூகத்தின் இயக்கம், மாற்றம், முன்னேற்றம் என்பதே வரலாறு என்கிறார்கள் அறிஞர்கள். தனிமனிதர்கள் ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து, நீதி பரிபாலன அலகுகள் மீது நம்பிக்கை வைத்து நேர்மையாய் நடந்து கொள்ளும் Gordon Hirabayashi போன்றவர்களைப் பார்த்தபின்னும் அரசு என்கிற அமைப்பு, சட்ட ஒழுங்கு, அரச நிர்வாகம் குறித்த பொறுப்பு என்கிற விடயங்களில் தலைகீழ் விதியாய் எப்படி நடந்து கொள்ள முடிகிறது!

தப்பிக்கொள்ள வழிகள் இருந்தும், திடசங்கற்பமாய் ஒருவர் இப்படியா தண்டனையை அனுபவிப்பார் என்று யோசித்தாலும், எது ஒரு தனிமனிதரை இவ்வளவு தூரம் உறுதியோடு இருக்க வைக்கிறது என்கிற ஆச்சர்யமும் மாறவில்லை. ஒரு தனியனாய் ஒரு வல்லாதிக்கத்தை அதுவும் அன்னிய மண்ணில் எதிர்க்கும் இவர் மீது ஏனோ தனியாய் ஒரு மரியாதை உண்டாகிறது. உலக நாடுகளிலெல்லாம் ஓடியோடி நீதிபரிபாலனம், மனித உரிமைகள் பேணுகிறோம், ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கிற அமெரிக்கா காலம் கடந்து Gordon Hirabayashi விடயத்திலாவது நேர்மையாய் தான் வருந்துகிறதா! அந்த நேர்மையை இந்த ஜப்பானிய வம்சாவழி அமெரிக்கரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளுமா!

http://www.washingtonpost.com/opinions/the-legacy-of-gordon-hirabayashis-fight-against-internment/2012/01/04/gIQASV6cfP_story.html?wprss=rss_opinions

http://tamilnet.com/art.html?catid=79&artid=34774


Image Courtesy: Google

15 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தனித்துவம் என்பது மனோபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம்...

வேர்கள் சொன்னது…

ரதி
பகிர்தலுக்கு நன்றி

ராஜ நடராஜன் சொன்னது…

//தப்பிக்கொள்ள வழிகள் இருந்தும், திடசங்கற்பமாய் ஒருவர் இப்படியா தண்டனையை அனுபவிப்பார் என்று யோசித்தாலும், எது ஒரு தனிமனிதரை இவ்வளவு தூரம் உறுதியோடு இருக்க வைக்கிறது என்கிற ஆச்சர்யமும் மாறவில்லை.//

கோத்தபயா,ராஜபக்சே கூட்டாளிகளிடம் கொண்டு சேர்த்தா தெரியும் மன உறுதியின் வலிமை.மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகளை மதிப்பதால் எதிர்ப்புக்குணம் தோன்றுவதில் ஆச்சரியமில்லையென்றே நினைக்கின்றேன்.பொதுப்போராட்டங்களில் போலிசிடமே முரண்டு பிடிப்பவர்களை செய்திக் காணொளிகளில் காண முடிகிறது.ஆசிய நாடுகளில் இயலுமா?போலிஸ்காரன் பூட்ஸ்கால்ல மிதிச்சே பாதி உயிரை எடுத்து விடுவான்.

பெயரில்லா சொன்னது…

இவர் மீது தனி மரியாதை உண்டாகிறது...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

ஹேமா சொன்னது…

நடா சொன்னது சரியாகப் படுது !

Rathi சொன்னது…

செந்தில், சரியே!

Rathi சொன்னது…

வேர்கள், நன்றி உங்களுக்கும்.

Rathi சொன்னது…

ராஜ நட, ஆசிய நாடுகளின் நிலைமையில் இது சாத்தியமில்லைதான். அதுவும் ராஜபக்‌ஷேக்கள் என்றால் பேசவே வேண்டாம். அதையே தான் தமிழ் நெட்டும் குறிப்பிடுகிறது.

ஆனால், அதே போல் புலத்தில் நாம் நினைத்தால் ஈழத்தமிழர்களுக்காய் இன்னும் ஜனநாயகம் ஓரளவிற்கேனும் வெளிப்படையாய் மதிக்கப்படும் நாடுகளில் நல்ல முயற்சிகளை இந்த தேவையான காலக்கட்டத்தில் செய்யலாம். அந்த வகையில் இது போன்ற திடசங்கற்பம் எம்மவர்கள் மத்தியில் அருகிப்போகிறது.

மனித உரிமைகள் என்பது ஐ. நாவின் மனித உரிமைகள் சபையில் கூட எந்தக்காலத்தில் ஏக காலத்தில் ஒரே முயற்சியில் நிறைவேற்றப்பட்டது அல்லது நிறைவேற்றப்படுகிறது.காஸ்மீரில் மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை என்று இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்; ஈரான் உட்பட இஸ்லாமிய நாடுகள், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, அவ்வப்போது வசதிக்கேற்றாற் போல் குடைசாயும் இலத்தீன் அமெரிக்க நாடுகள், எப்போதுமே மனித உரிமைகள் குறித்து பேசினால் அது இறையாண்மைக்கு பங்கம் என்று ஒதுக்கி தள்ளப்படுகிறது இந்த நாடுகளால் இன்றுவரை.


மனித உரிமைகள் கூட தேசிய, பிராந்திய, மதரீதியான, கலாச்சார ரீதியான அடிப்படைகளிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது ஆசிய, இஸ்லாமிய நாடுகளின் பிடிவாதம். அதனால், அடிப்படையே குழப்பம்.

Rathi சொன்னது…

ஹேமா, ம்ம்ம்... :)

Rathi சொன்னது…

ரெவர், நன்றி, உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Rathi சொன்னது…

அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

பகிர்வுக்கு நன்றி ரதி..

Rathi சொன்னது…

உங்களுக்கும் நன்றி கயல் :)

தவறு சொன்னது…

சில நேரங்கள் சில திருப்பங்கள் திடசங்கற்பம்..ரதி.

dhanasekaran .S சொன்னது…

arumaiyaana pathivu vaazthukal.