ஜனவரி 31, 2012

சினிமா அபத்தங்களும், அபத்த சினிமாக்களும்!


பணம், பெயர், புகழ் இவற்றுக்கெல்லாம் அவரவர் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றாற்போன்ற அங்கீகாரமும் தேவையான இடத்தில் அதற்குரிய சன்மானமும் கிடைக்கவேண்டும் என்பது பொதுவாக எல்லோரதும் விருப்பம். மனித இயல்பானது, அவரவர் தனித்திறமை, விருப்பம் சார்ந்து வாழ்நாள் இலட்சியங்களை துரத்தித் திரிவதாகத்தான் இயல்பிலேயே நம் வாழ்நாட்களை கடத்திச் சேர்ப்பதாய் பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. அனைவருக்குமே ஓர் உயரிய நெருப்புச் சுவாலையுடந்தான் பயணம் எந்தத் துறையிலும் தொடங்குகிறது. ஆனால், நாட்பட, நாட்பட அடைந்த உயரங்களை தக்க வைத்துக் கொள்ள பெரும்பான்மையான சாதாரண மனிதர்களைப் போலவே பல கட்டங்களில் படிப்படியாக தனது சுயத்தை இழந்து, தொடக்கப்புள்ளிக்கும் நின்று கொண்டிருக்கும் வட்டத்திற்கும் சற்றும் தொடர்பற்றவர்களாக பொலிவிழந்து காட்சியளிப்பது நடைமுறையில் நாம் எங்கெங்கினும் காணும் காட்சி.

இந்த பொலிவிழப்பு பல உள் அரசியல், பொருளாதார தேவைகள், அதற்கான போட்டிகள் என்ற வாக்கில் தலைதூக்கும். அதை எல்லாம் சமாளிக்க பணத்துக்கும், புகழுக்குமாய் விட்டுக்கொடுப்புகள் உள்ளே நுழைய ஆரம்பிக்கும். அந்த விட்டுக்கொடுப்புகளில் திசைமாறும் இலட்சியங்கள். ஒரு சாதாரண மனிதன் வரிந்து கொண்ட கொள்கைகளில், இலட்சியங்களில் இருந்து வழுவும் போது சமூக மட்டத்தில் எந்த தாக்கமும் அதிகம் நேர்ந்துவிடுவதில்லை. அது ஒரு கூட்டுப்பழக்கமாய் இருந்தாலன்றி! இருந்தும் கலை, இலக்கிய துறைகளில் படைப்பாளிகள் தடம்மாறும் போது அது சமூக மட்டத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கவும் செய்கிறது.

சமகாலத்தில் இலக்கியவாதிகள் என்று தம்மை பறைசாற்றுபவர்கள் மட்டுமன்றி சகலரும் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் தங்கள் விருப்பு, வெறுப்புகளை, மாற்றுக்கருத்துக்களை அதன் பிரதிபலிப்புகளை கடத்தவும், உள்வாங்கவும் உதவுகிறது. ஏதோவொரு விதத்தில் எல்லோருமே எமது தனித்தன்மைகளை வெளிப்படுத்தவும் அதன் இயல்புகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவோ அல்லது சகமனிதர்கள் விருப்பு, வெறுப்பு குறித்த சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவோ வாழ்க்கையை ஒட்டி நம்மை வளர்த்தெடுக்கிறோம். அது நம்மையும் வளர்த்து நம்மை சுற்றியிருப்பவர்களை அல்லது யாரை நோக்கி எம் கருத்துகளை வைக்கிறோமோ அவர்களையும் வளர்த்தெடுப்பதாய் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படாதா!

சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகள் குறித்து பேச முற்பட்டு, எங்கேயோ விலகி சுய முன் நிறுத்தல்கள் கலை, இலக்கிய எல்லைகளை தாண்டி துருத்தி நிற்கிறது. பிரபலமாக வேண்டும் என்கிற உந்துதலில் புகழுக்கு அடிமையாகி சுயம் தொலைக்கவும் நேரிடுகிறது. இவர்களிலும் சிலர் எப்போதும் இரட்டை நிலை கொண்டவர்களே ஆனாலும் தங்கள் தனித்திறமையால் நேர், எதிர்மறை விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் செய்கிறார்கள். இந்தக் குறைபாட்டினால் ரசிகனதும் வாசகனதும் ரசனை மட்டுமன்றி உண்மையும் யதார்த்தமும் கூட குற்றுயிராய் ஆகிப்போகிறது.

எம்மைப்போன்ற சாதாரணர்களுக்கு பெரும்பாலும் எம் உழைப்புக்கு தகுந்த ஊதியம் அல்லது கூலி கிடைப்பதால் அதன் அளவிற்கேற்றாற்போல் ஆசைகள், கனவுகளையும் உள்வாங்கிக்கொள்வோம். படி நிலைவளர்ச்சியில் மனிதவாழ்விற்கே உரிய அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் உணவு, நீர், இருப்பிடம், கல்வி, சுயமுக தரிசனமாய் காயம்படாத தன்மானம், உடற்பசி தீர்க்கும் காதல் வழி களிப்புற்றுக் கழியும் காமம் வரை திருப்தியாய் தீர்க்கப்பட தன்னிறைவு என்பது மனதின் உள்ளொளியை  இயல்பாய் காட்டி நிற்கும். அங்கே தான் மனம் தன் வாழ்க்கை, இலட்சியம் குறித்த எல்லைகளை வகுத்தும் கொள்ளும். வாழ்வாதாரமான உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் அதன் வழி  நியாயமாய் கிடைக்க வேண்டிய அடிப்படைத்தேவைகள் நிறைவாய் கிடைக்கவில்லையென்றால் மனம் சம நிலை இழக்கும், மனச்சோர்வு உண்டாகும். அதுவுமில்லையா, போராட்டக்குணம் தலை தூக்கும்.

அதே அடிப்படையில் உடல், உள உழைப்பிற்கும் அதற்குரிய ஊதியத்துக்கும்  எந்த அடிப்படையிலும் சம்பந்தமே இல்லாமல் லட்சங்களில், கோடிகளில் பணம் சம்பாதித்தால் வாழ்க்கையும் திசைமாறிப் பயணிக்கும். கனவுகள் அதீதமாய் போதையேற்றும். விளைவு கனவுகளிலும் கனவு போன்றே நிஜவாழ்விலும் பணம், புகழ், அங்கீகாரத்துக்காய் மனம் முரண்டுபிடித்து அலையும். இப்படி வாழ்பவர்கள் பெரும்பாலும் வியாபார, கலைத்துறை குறிப்பாக சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் தாம். சராசரி அளவில் தன்னிறைவாய் வாழும் மனிதனுக்கும் அளவுக்கதிகமான செளகர்யங்களை அனுபவிக்கும் மாக்களுக்கும் பணம், பெயர், புகழ் குறித்த அதீத ஆசைகளும், மனித உள்முக வளர்ச்சியின் இயல்பாக்கம் என்பதும் இயல்பில் ஒன்றாய் இருந்தாலும் அது தாண்டிவரும் களங்களும் அனுபவங்களும் வெவ்வேறாய் இருக்கிறது. அதன் தாக்கங்கள் அவர்கள் சொந்தவாழ்க்கயையும் தாண்டி படைப்புகளிலும் புகுத்தப்பட்டு திரிந்து போகிறது.

உலக சினிமா முதல் தமிழ் சினிமா வரை கலை வழி மானுட வாழ்வின் உன்னதங்களை, யதார்த்தங்களை, போராட்டங்களை, சமூக அரசியல் சீரழிவுகளில் சிக்கி சின்னாபின்னமாகிய விளிம்பு நிலை மனிதர்களின் நிலைகளை விளக்குவதோ மிக குறைவாகவே உள்ளது. மாறாய், நாயக, நாயகிகளின் சுயபிரஸ்தாபங்களும், யதார்த்தம் மீறி நாயகர்களின் self-esteem வில்லன்களால் காயப்படுத்தப்பட்டதும் (Yeah, this villain hurts my self-esteem) பொங்கி எழுந்து பஞ்ச் டயலாக் பேசுவதும், கிராஃபிக்ஸில் சமூக நீதி கேட்டு கதா நாயகர்களால் அழிக்கப்படும் வில்லன்களும், ஒரு கதைக்காய் இவர்கள் அதிகம் செய்யும் தியாகம் உடல் எடையை குறைத்தோ அல்லது கூட்டியோ தங்களை மெருகுபடுத்துவதுமே வெளிச்சம் போட்டு விற்கப்படுகிறது. இதில் தரமான எம் யதார்த்த வாழ்வோடு ஒன்றிப்போக வைக்கும், மண்வாசனையோடு கூடிய படைப்புகள் ஆங்காங்கே அடிபட்டும் போகிறது. இது போன்ற காரணங்களுக்காகவே சினிமாவை அதன் கர்த்தாக்களை விமர்சிக்கவும் தோன்றுகிறது. இருந்தும் அண்மையில் பார்த்து திருப்திப்பட்ட திரைப்படங்கள் கோரிப்பாளையம் மற்றும் எங்கேயும் எப்போதும். கோரிப்பாளையம் தமிழ் சினிமாவில் ஓர் துணிச்சலான முயற்சி. சமூக விழுமியங்கள் மீறப்படும்போது அல்லது தேவையற்றவை உடைக்கப்படும் போது அது எவ்வாறு சமூகப்பிறழ்தல்களாய் உருவாகவும், உருவாக்காவும் படுகிறது என்பதை சொல்வதாய் தோன்றியது.

கலைத்துறையில் எத்தனையோ பேர் கலை, இலக்கிய, தொழில் நுட்ப பிரிவுகளில் பணியாற்றினாலும், ஒப்பனைக்குப் பின்னே வயதையும், யதார்த்தத்தையும் ஒளித்தோ அல்லது தொலைத்தோ ஏதோவொரு புள்ளியில் வாழ்க்கையை கோட்டை விடும் நடிக, நடிகையரே அதிகம் நினைவில் வருகிறார்கள். அவர்களது வாழ்க்கை குறித்த சுவாரஸ்யங்களே அதிகம் பத்திரிகை துறையால் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. சரி, நடிகர்களா, நடிகைகளா அதிகம் இது போன்ற பாரிய தொழிற்துறையில் எல்லா வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் சினிமா துறையில் பெண்களே பலியாடுகளாயும் ஆகிப்போகிறார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

ஆண், பெண் என்கிற வித்தியாசம் இல்லாமல் தான் பெரும்பாலும் உடலழகும், நடிப்பும் (!!??) காட்சிப்படுத்தப்படுகிறது, கதைக்கு சம்பந்தம் இருந்தாலும், இல்லையென்றாலும். ஒரு பெண் நடிகையின் வயிற்றுப்பாகம் எவ்வளவு தட்டையாய் உள்ளதோ அல்லது மார்புகள் வாளிப்பாய் உள்ளதோ அது பல கோணங்களில் காட்சிப்படுத்தப்படும். ஒரு கதா நாயகனின் 50 வயது கடந்த தொந்தி என்றால் அது layers ஆக உடைகள் போட்டு மறைக்கப்படும். வயதான நாயகனின் மார்பிலும் இயற்கை Estrogen வழி தன் சேட்டையை காட்டியிருக்கும். ஆனாலும், அது மறைக்கப்படும். அதுக்காக நன்றி சொல்லத்தான் வேண்டும். இல்லையென்றால் அதுவும் காட்சிப்படுத்தப்பட்டு அதை பார்க்கும் கொடுமையான அவஸ்தைக்கும் நாம் ஆளாக வேண்டியிருக்கும். இது தான் தமிழ் சினிமா விதி! 50 வயது நாயகன் கல்லூரி மாணவராய் வந்தாலும் ரசிகன் ரசிப்பான். அதுவே, அண்ணளவாய் 25 வயது கடந்தால் நாயகி 50 வயது நாயகனுக்கு அம்மாவாய் மாறி மடியில் போட்டு சோறூட்ட வேண்டும்.

சரி, இதை கடந்து கொஞ்சம் கலைத்துறையின் திரக்குப்பினால், இயக்குனர் கட், க்ட் சொன்ன பிறகு இந்த நட்சத்திரங்கள் எப்படி இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறதா என்று பார்த்தால் அங்கே வெளிப்பட்டு நிற்கிறது நடிகைகளின் சீரழிந்த, சீரழிக்கப்பட்ட வாழ்க்கை கோலங்கள். வாழ்க்கை சீரழிந்த பின் தங்களை மீட்டெடுக்க அந்த துறையை விட்டே விலகி வாழும் பெண்கள் ஓரளவிற்கு தப்பிக்கொள்கிறார்கள். திரையில் தோன்றுவது போலவே நிஜவாழ்வும் இருக்கும் என்று யதார்த்தம் புரியாத, பொய்யான, போலியான உத்தரவாதங்களில் ஏமாந்தவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் சிலர் தான் மனதை நெருடச்செய்வார்கள். அவர்களில் சிலர் ‘ஊர்வசி’ சோபா, ’கவர்ச்சி தேவதை’ சில்க் ஸ்மிதா, விஜி, படாபட் ஜெயலட்சுமி, மோனல் அப்புறம் பிரதீஷா!

எல்லோருடைய அகால மரணத்திலும் ஊர்ஜிதப்படுத்தப்படாத உண்மைகளும், சந்தேகங்களும் தான் கேள்விகளாய் புத்தியை நெருடும். அது சினிமா நடிகைகள் மற்றும் பிரபலங்கள் என்றால் இன்னும் அதிகமாய் விறுவிறுப்பாய் வியாபாரமும் ஆகும். இது தற்கொலையா, இல்லையென்றால் அந்த மரணத்துக்குப் பின்னணி ஏதாவது உண்டா! பின்னணி என்றால் அது என்ன அல்லது யார் என்று விடை தெரியா கேள்விகள்.  இதை சொல்லும் போது பத்திரிகையாளர் அனிதா பிரதாப் காலஞ்சென்ற சினிமா நடிகை சில்க் ஸ்மிதா பற்றி தன் Island of Blood புத்தகத்தில் In the veils of Sorrow கட்டுரையில் குறிப்பிட்டதை பகிரத்தோன்றுகிறது.

”Silk Smitha, the voluptuous vamp of south Indian films cast a spell, especially on men, with her sultry, bedroom eyes; her inviting, luscious lips; pointed, thrusting breasts;..... Sexually frustrated men ventilated through salacious catcalls, sighs, yells and even urgent masturbation...."

"...She told me her story, and it was a sad one, of financial, physical and sexual exploitation. Everyone in the film industry, every man she met, from producer to light boy, constantly harassed her with innuendos and propositions...".

அனிதா பிரதாப் சில்க் ஸ்மிதா பற்றிக்குறிப்பிடும் ஐம்புல கவர்ச்சி அம்சங்கள் அத்தனையும்  இப்போதெல்லாம் தாரளமாய் இயக்குனர்களால் ரசிகர்களுக்கு படைக்கப்படுகிறது. இதுக்கு சிறந்த உதாரணம் அண்மையில் நான் பார்த்த இயக்குனர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம். ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ சர்க்கரை என்பார்கள். அது தான் இந்த இயக்குனரின் மலிந்த உபாயம் போலும் கவர்ச்சிக்கு. வட அமெரிக்காவில் வாழும் எனக்கு ஓரளவுக்கு இங்கே தொலைக்காட்சிகளில் நான் கண்ட Fear Factor, Survivor etc. போன்ற ரசிகனை ஏமாளியாக்கி பொருளீட்டும் நோக்கம் கொண்ட Reality TV Shows என்பவற்றின் தமிழ் வடிவம் தான் ஆயிரத்தில் ஒருவன் என்கிற பிரம்மையைத் தவிர்க்க முடியவில்லை. இந்த திரைப்படத்தில் இவர் ஈழத்தமிழனின் இன்னல்களை சொல்ல முட்பட்டார் என்கிற அபத்தத்தையும் தாண்டி வந்திருக்கிறேன்.

குட்டைப்பாவாடைக்கு, காற்சட்டைக்கு வெளியே  நாயகியின் பிட்டம் எட்டிப்பார்க்கிறதா என்கிற ரசிகர்களின் கவலைக்கு மருந்தளிப்பதையும் இயக்குனர் செய்யத்தவறவில்லை ஒரு வரலாறும் புனைவும் கலந்த கலைப்படைப்பில் !?. தமிழ் மன்னர்கள் போர்தொடுத்து, ஒழிந்த நேரத்தில், leisure activities களில், தம் சந்தோசத்திற்காய் பெண்களை தம் இச்சைகளை தீர்க்க எப்படி தயார்ப்படுத்தினார்கள்,   பயன்படுத்தினார்கள் என்பதை காட்ட எடுத்துக்கொண்ட அதீத அக்கறையை கதைக்களத்திலும் காட்சிகளின் வலுவான அமைப்புகளிலும் கொஞ்சமாவது காட்டியிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

அது தான் வழக்கமான அபத்தக்களஞ்சியம் என்றால், இன்னொரு நாட்டுக்குள் (வியட்னாம்) சென்று அங்கே வாழும் ஒரு பழங்குடி இனத்தில் உள்ளவர்களை கேள்வி முறையின்றி டிஷ்யும், டுமீல், டமீல் என்று இந்திய துப்பாக்கிகள் சுடுமாம். நல்லவேளை, அந்த இடத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் ஏதோ ஒப்புக்கு சப்பாணியாய் வசனம் பேசி ஒப்பேத்துகிறது கதையில் வரும் மிகப்பெரிய ஓட்டையை. இந்திய அரசு ஈழத்தமிழர்களை அமைதிப்படை என்கிற பெயரில் வந்து சுட்டுத்தள்ளிய அதே தியரி இங்கேயும் பொருந்துமோ! அட, பார்க்கிற ரசிகனை என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

விஞ்ஞானிகள்  நிறமூர்த்தங்களின் (நிறமூர்த்தம்-Chromosome) எண்ணிக்கையிலும் அதன் கட்டமைப்பிலும் உருவாகும் குழறுபடிகளால் எப்படி குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்கிறார்களாம். தமிழ் சினிமாவில் இவர்கள் செய்வது பரம்பரை மரபணுக்கூறுகளில் (DNA) பரம்பரை பண்புகள் மட்டுமன்றி தனித்தன்மைகள்/தனித்திறமைகள் கூட கடத்தப்படும் என்று  நிகழ்வதற்கு அரிதான நிகழ்வுகளை பொதுமைப்படுத்தி  அரைகுறை அறிவியல் கலந்து இனப்பெருமை பேசுவது (ஏழாம் அறிவு); பயங்கரவாதத்திற்கும் உரிமைப்போராட்டத்திற்கும் எள்ளளவும் வித்தியாசம் தெரியாமல் சுயபிரஸ்தாபம் செய்ய குயுக்தியாய் அது குறித்து சினிமா எடுத்து வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டுவது (குருதிப்புனல், உன்னைப்போல் ஒருவன்); இதிகாச, இலக்கிய கதாபாத்திரங்கள் குறித்த மாறுபட்ட பார்வை என்று பிரபலங்களை வைத்து வித்தை காட்டுவது (ராவணா) இவை தவிர்த்து எப்போது எங்களுக்கு தரமான கலை, இலக்கிய, அறிவியல் சம்பந்தமான தரமான  படைப்புகள் கிடைக்கும்! தனிமனிதராய் உங்கள் தனித்திறமையை உங்கள் படைப்புகளில் எடுத்தியம்பும் போது பார்க்கும் ரசிகனையும் அடிமுட்டாளாக்கும் அபத்தத்தையும் தவிர்க்கலாமே.

இந்திய சினிமா பற்றி ஒரு ஆங்கில கட்டுரை. இங்கே தேர்ந்தெடுத்து தொடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்து நீங்கள் நொந்து போனால் நான் பொறுப்பாளி கிடையாது.

இது சமகால-தொன்ம வரலாறு, புனைவு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத படைப்புகள் குறித்த விமர்சனம்.

Image Courtesy: Google

ஜனவரி 22, 2012

“கைப்புள்ள” ஈழத்தமிழனும் மற்றும் பலரும்!


ஒவ்வொரு செயலுக்கும் வினையாற்றி, அதற்கு எதிர்வினயாற்றி இப்படித்தான் தொடர்கிறது பல அரசியல் களங்களின் காய் நகர்த்தல்கள். அதன் எச்சமாய் மிஞ்சுவது எதிரியின் சாணக்கியமா அல்லது பல்லிளிப்பது உலகமகா அயோக்கியத்தனமா என்பது பாதிக்கப்பட்டவன், பார்வையாளின் புரிதல் பொறுத்தது. தமிழீழம் குறித்த சில இலங்கை-இந்திய அரசியல் நகர்வுகள் குறித்த என் புரிதலை இங்கே மீண்டும் ஒரு முறை பகிர்ந்துகொள்கிறேன்.

கடந்த ஓரிரு வாரங்களாய் இலங்கை அரசியலில் சில காய் நகர்த்தல்கள் செய்திகளில் காணக்கிடைத்தது. வன்னி, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னான இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு, அதற்கு தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதிலறிக்கை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவின் உத்தியோக பூர்வ கொழும்பு வருகை, காலியில் நடைபெறும் சர்வதேச எழுத்தாளர்களின் இலக்கிய ஒன்றுகூடல் விழா என்று எல்லாமே இலங்கை அரசியலில் ஒரு மையப்புள்ளியை நோக்கி நகர்கிறது.

அந்த மையப்புள்ளி வேறொன்றுமில்லை. அது எதிர்வரும் மார்ச் மாதம்  தொடங்கி நடைபெற இருக்கும் ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் தான். 1948 ஆம் ஆண்டின் ஐ. நா. வின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைப்பிரகடனம் கூட இன்னும் அரசியல் கடந்து எந்த ஒரு மானிடனின் உரிமையையும் உருப்படியாய் நிலை நாட்டவில்லை என்பது தான் வரலாறு. மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகள் சபை இரண்டும் பொய்த்துப்போகும் வரலாற்று நிகழ்வுகள் இன்னும் தொடர்கின்றன.

உலகின் ஜன நாயக குடியரசுகளாய் தங்களை வரையறுத்துக் கொண்ட நாடுகளின் அரசியல் யாப்பிலக்கணத்தின் ஆதாரம் மனித உரிமைப்பிரகடனத்தின் அடிப்படை கூறுகள் தான் என்றாலும், அதன் செயன்முறை வடிவம் மூன்றாம் உலகில் மேற்குலகால் இன்னும் தங்கள் அரசியல் காய் நகர்த்தல்களுக்கே கருவியாய் பயன்படுத்தப்படுகிறது. அதையெல்லாம் ஆரம்பத்திலிருந்து (1970, 1980 களிலிருந்து) புரிந்து கொண்ட ஆசிய மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களும் அவர்கள் வழி வந்த குடிகளும் இன்றுவரை மேற்குலகம் போதிக்கும் (போலி) ஜன நாயக உரிமைகள் குறித்த வார்த்தைகளில் நம்பிக்கையற்றவர்களாகவே மாறிவிட்டார்கள். இன்னொரு காரணம், அமெரிக்காவின் அரசியல், பொருளாதார படையெடுப்பால் இஸ்லாமிய நாடுகளில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள்.

ஜன நாயகம் இல்லையேல் உலகமயமாக்கம் இல்லை. இதையெல்லாம் ஓரளவிற்கேனும் போலியில்லாமல் இருக்கிறது என்று அவ்வப்போது நிரூபிக்க இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமைகள் அமைப்பு ஏதாவது செய்கிறது என்று காட்ட வேண்டியும் இருக்கிறது என்பதும் யதார்த்தம்.

ஐ. நா. வின் மனித உரிமை அமைப்பு  நீதியினின்றும் வழுவாத மனு நீதிச்சோழன் என்றே கொண்டாலும், அவனையும் அவன் தேரையும் குடைசாய்ப்பதையே குலத்தொழிலாய் கொண்டவர்கள் ராஜபக்‌ஷேக்கள், இந்தியாவிலுள்ள காஸ்மீர் மற்றும் ஆதிவாசிகளின் போராட்டத்தை  நசுக்குபவர்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேண நினைப்பவர்கள். இன, மத, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களுக்கேற்பவே மனித உரிமைகளும் வரையறுக்கப்பட வேண்டும் என்பதும் கூட இவர்களின் வாதம். மேற்குலகிற்கும் ஆசிய (சீனா உட்பட), இஸ்லாமிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குமிடையே இருக்கும் மனித உரிமைகள் குறித்த இழுபறி நிலைக்கு 1993 ஆம் ஆண்டு வியன்னாவில் நடந்த ஐ. நா. வின் உலக மனித உரிமைகள் மாநாடு ஒரு உதாரணம்.  எங்கு மனித உரிமைகள் மாநாடு நடைபெற்றாலும் அதில் சீனாவிற்கு மனித உரிமைகள் பற்றி போதிக்கும் மேற்குலகத்துக்கு எதிரானதே சீனாவின் நிலைப்பாடு. மனித உரிமைகள் விடயத்தில் சீனாவின் வழி தனி வழி. அதை இப்போதைக்கு விட்டுவிடுவோம். வியன்னா மாநாட்டிலும் மேற்குலகத்தவர்கள் தலாய் லாமாவை கொண்டு வந்து சீனாவில் மீறப்படும் மனித உரிமைகள் பற்றி பேசுவது பற்றியெல்லாம் யோசித்தார்களாம்!

தலாய் லாமா இந்தியாவில் புலம்பெயர் அரசு (Exile Govt.) அமைத்து திபெத்தியர்களுக்கு விடுதலை கேட்டால் அது நியாயம், இந்திய, அமெரிக்க அரசியல் சாணக்கியத்தில். அதுவே, ஈழத்தமிழன் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின் நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Govt.) அமைத்தால் இந்தியா ஒத்துக்கொள்ளாது. ஒருவழியாய், பெரியண்ணன் அமெரிக்காவே மனமிரங்கி ஈழத்தமிழர்கள் உரிமை பற்றி அல்லது பொதுவாக மனித உரிமைகள் பற்றி பேசமுற்பட்டால் அது தங்கள் இறையாண்மைக்கு பங்கம் என்று கூக்குரல் போடுவார்கள் ஆசியாவில் இன, மத, கலாச்சார, பண்பாட்டு அடிப்படையில் ஜனநாயகம் பேணுபவர்கள். தலாய் லாமா இந்தியாவில் புலம்பெயர் அரசு அமைத்தால் சீனாவின் இறையாண்மைக்கு பங்கம் இல்லை. அதுவே, ஈழத்தமிழர்கள் நாடு கடந்த அரசு அமைத்தால் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படுமாம்! தமிழக மீனவர்கள் சிஙகள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டால் இந்திய இறையாண்மைக்கு பங்கம் இல்லையா என்று நான் கேட்கப்போவதில்லை.

இதை மனதிற் கொண்டே கடந்து ஈழத்துக்கு வருவோம். தமிழன் அழிக்கப்பட்ட போதெல்லாம் கருவியாய் செயற்பட்ட இந்தியா என்கிற நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தமிழர் திரு நாள் தைப்புத்தாண்டில் இலங்கை விஜயம் செய்திருந்தார். இவர் இலங்கைக்கு வருவது ஒன்றும் பெரிய அரசியல் நகர்வு இல்லை. இருந்தாலும் கவனிக்கப்படவேண்டியது. காரணம், இந்தியாவின் குடுமி ராஜபக்‌ஷேக்களின் கைகளில் எசகுபிசகாய் சிக்கிய போதெல்லாம் தன்னுடைய அமைச்சுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும் மூத்த, பழுத்த பிரணாப், சிவ் சங்கர் மேனன் போன்றார் தான் வழக்கமாய் ஆஜர் ஆவார்கள்,  ராஜபக்‌ஷேக்களை சந்தித்து அரசியல் சாணக்கியம் பேச, ஈழத்தமிழனை கவிழ்க்க.

இம்முறை தாரா, தாரா எஸ்.எம். கிருஷ்ணா வந்தாரா!! வந்து யாழ்ப்பாணம் சென்று பொங்கல் பொங்கினாரா! அப்படியே, தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கையின் பாராளமன்ற  தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டும் என்று கறாரான ஒரு கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை விடுத்தார். 2007 ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் குழு (All Party Representative Committee (APRC)) ஒன்றை அரசியல் யாப்பு குறித்து பரிந்துரை வழங்க உருவாக்கிய ராஜபக்‌ஷே அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைக்கவோ அல்லது சேர்த்துக்கொள்ளவோ  இல்லை. அப்போது எங்கே போனது இந்தியா! இந்த குழு மூன்று வருடங்களில் 126 கூட்டத்தில் கூடி உருப்படியாய் எந்த அரசியல் உரிமையையும் சிங்களர் அல்லாதவர்களுக்கு வாங்கி கொடுக்கவில்லை. சிறுபான்மையினருக்கு (தமிழர்களுக்கு) சுயாதிகாரம் கொடுக்கப்பட வேண்டுமென்று அரைகுறையாய் அறிக்கை சமர்ப்பித்ததோடு முடித்துக்கொண்டார்கள். அது வழக்கம் போல் கிடப்பில் போடப்பட்டது. இப்போது, இலங்கை அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பேச்சுவார்த்தை கூட இழுபறியில் இருக்கிறது. இந்தலட்சணத்தில் அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று இ. வெ. வி. அ. எஸ். எம். கிருஷ்ணா அழுத்தம் கொடுக்கிறாராம்.

அப்படியே கிருஷ்ணா 13+ தீர்வையும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாய் அமுல்படுத்த வேண்டுமென்று ராஜபக்‌ஷேக்களிடம் அன்பாய் சொல்லியிருக்கிறார். 1987 ஆம் ஆண்டுமுதல் இதை சொல்ல இந்தியாவுக்கும், இப்போது கிருஷ்ணாவுக்கும் சலிப்பதில்லை. பொய் பேசுபவர்கள் அதை கணக்கு வைத்திருக்க வேண்டும் என்கிற பொதுவிதியும் இவர்களுக்கு பொருந்துவதும் இல்லை. தேவைப்பட்டால் 13+, மீளிணக்கம், நல்லிணக்கம் என்று எதையாவது புலம்பிவிட்டு போகவேண்டியது தான். தமிழர்களுக்கு தான் இந்த கேலிக்கூத்தை பார்த்தும், கேட்டும் பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலை, பொம்மைகளாய். எதிர்வரும் மார்ச் மாதம் ஐ. நா. வின் மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத்தொடரில் இலங்கை ஆட்சியாளர்களை இனப்படுகொலை விசாரணைகளிலிருந்து காப்பாற்ற இந்தியாவின் கிருஷ்ணா தலையால் முயல்கிறார் என்பது அனைத்து இளிச்சவாய் ஈழத்தமிழனுக்கும் கூட புரியும் அரசியல் அரிச்சுவடி. தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசுடன் பேசுகிறது, பேசிக்கொண்டே இருக்கிறது என்று மனித உரிமைகள் சபை கூட்டம் முடியும் வரை இழுத்தடித்தாலே போதும் போல.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையால் பொங்கிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் சிவாஜிலிங்கம் கூட தன் பங்கிற்கு ஒரு அறிக்கை விட்டார். அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான உள்ளக சுய நிர்ணய உரிமையை வலியுறுத்த வேண்டுமாம். ஏன்! ஈழத்தமிழர்கள் விரும்புவது வெளியக சுய நிர்ணய உரிமை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது சிவாஜிலிங்கமோ வலியுறுத்தினால் அதென்ன கொலைக்குற்றமா? சிவாஜிலிங்கம் ஏன் இப்படி குழப்புகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். என் சிற்றறிவுக்கு எட்டிய வரை ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் புலிகள் மீண்டும், மீண்டும் வலியுறுத்தியது வெளியக சுய நிர்ணைய உரிமையையே! உயிரைக் கொடுத்து ஈழவிடுதலைக்கு போராடியவர்கள் வேண்டியது சுதந்திர தமிழீழம். அரசியல் பேசுபவர்கள் செய்வதோ உள்ளக, வெளியக சுய நிர்ணயம் என்கிற குழப்பவாதம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றைய அரசியல் நகர்வுகளில் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளானாலும், அண்மையில் வெளியான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஒரு பதில் அறிக்கை சமர்ப்பித்தது. மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பாரபட்சமான விடயங்களை மிக திறமையாக சுட்டிக்காட்டியதோடு, அதிலுள்ள குறை, நிறைகளையும் (இதை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் அந்த அறிக்கையில்) அலசி ஆராய்ந்து அறிக்கையாய் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

1.வன்னியில் இறுதிக்காலத்தில் இருந்த அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கை இந்திய அறிவுரையின் பேரில் பொய்க்கணக்கு காட்டி உணவு விநியோகத்தை குறைத்து அவர்களை பட்டினிச்சாவிற்கு தள்ளியது

2. NO Fire Zone என்று அறிவித்து அங்கே அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது

3. தான் பாலியல் வன்முறைக்கு ஆளானதை ஆணைக்குழுவின் விசாரணையில் தெரிவித்தவருக்கு அவருக்குரிய பாதுகாப்பை வழங்காமல், அவரை இலங்கையின் சித்திரவதைக் கூடமான நாலாம் மாடிக்கு குற்றப்புலானாய்வுத் துறைக்கு அனுப்பி அவரின் (சாட்சியின்) அடையாளத்தினை வெளிப்படுத்தியது

4. இறுதிப்போரின் போது மிக குறைவான மருந்துவகைகள், வசதிகள் என்பவற்றை கொண்டு மருத்துவ சேவை செய்து தற்போது இலங்கை அரசின் கெடுபிடிகளுக்குள் சிக்கி முன்னுக்குப் பின் முரணாக சாட்சி சொல்லும் மருத்துவர்களின் சாட்சிகளை இருபது முறை அறிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, அவர்களின் வாக்குமூலத்துக்குரிய எந்தவொரு சான்றாதாரத்தையும் வழங்காதது

5. மீளிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அதன் ஆய்வுமுறை (Methodology), உறுப்பினர்களிடம் காணப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் சட்டம் (International Humanitarian Law) குறித்த அறிவுக்குறைபாட்டையும் சுட்டிக்காட்டி நிற்கிறது.

இப்படி அத்தனைக்கும் ஓர் ஆய்வாக, பதிலாக ஒரு அறிக்கை வெளியிட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராட்டியே ஆகவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த பதில் அறிக்கையும் மனித உரிமைகள் சபையால் கவனத்திற் கொள்ளப்படும். காரணம், அவர்கள் இலங்கை என்கிற நாட்டில் தமிழர்களின் பிரதிநிதிகள். ஐ. நா. வின் மூன்று பேர் கொண்ட குழு அறிக்கை (தருஸ்மன் அறிக்கை), இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிக்கை, கூடவே இங்கிலாந்தின் ஊடகமான சனல் 4 கின் இலங்கையின் கொலைக்களங்கள் என்கிற ஆவணக்காணொளி இதெல்லாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு அறிக்கையோடு ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் இலங்கை அரசின் மீளிணக்க, நல்லிணக்கத்தின் அவலட்சணம். இருந்தாலும் இதையெல்லாம் அடாவடியாய் இந்தியாவின் உதவியோடு செய்வது மனித உரிமை சபையில் இலங்கை தன்னைத்தானே போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே.

இவை தவிர இலங்கை காலியில் தெற்காசியாவிற்கான இலக்கிய விழா தை மாதம் 18-22 ம் திகதி வரை நடைபெற்றதும் இலங்கையின் இனப்படுகொலை குற்றங்களை மறைத்து அதன் பெயரை காப்பாற்றுவதற்கே. கடந்த வருடம் எல்லைகள் கடந்த ஊடகவியலாளர்கள் அமைப்பு, நோம் சாம்ஸ்கி, அருந்ததி ராய் போன்றோரின் முயற்சியில் அது தடுத்து நிறுத்தப்பட்டது. சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் பிரச்சனைகளை எழுத்து மூலம் உலகத்திடம் எடுத்துச் செல்லும் சர்வதேச முன்னணி எழுத்தாளர்களின் ஆதரவும் இலங்கை என்கிற இனப்பாகுபாட்டு கொள்கை கொழுந்துகளுக்கு இருக்கிறது என்பதை காட்டும் முயற்சி இது. பாதிக்கப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன் ஆயிரம், லட்சம் பேர் சொல்வதை விட இது போன்ற இலக்கியவாதிகள் சொன்னால் சுலபமாய் எடுபடும் என்பதும் கொஞ்சம் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

தற்போது இலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்காய் ராஜபக்‌ஷேக்களுக்கு பிரச்சார உதவி செய்பவர் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம். தமிழக கூடன்குளம் அணுமின் நிலைய பிரச்சார வேலைகள் முடிவடைந்து இப்போது இலங்கையில் இனப்பிரச்சனை தீர்வுக்கு உழைக்கிறார் விஞ்ஞானி அப்துல் கலாம். தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் சில சமயங்களில் அவர்கள் சார்ந்த துறைகளோடு தங்கள் சேவைகளை மட்டுப்படுத்தினால் நன்றி சொல்வான் தமிழன்.

1987 லேயே சமைக்கப்பட்டு ஊசிப்போன 13+ தீர்வுப்பொதி, இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் தொடங்கி இன்றுவரை சிங்களப்பேரினவாதிகளிடம் மருந்துக்கும் இல்லாத மீளிக்க, நல்லிணக்க எண்ணமும் அது குறித்த அறிக்கையும்; மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் எடுத்துக்கொள்ளப்படும் என்றால் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழரின் பிரதிநிதிகளாய் கருதும் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள்; இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், விளிம்பு நிலை மனிதர்களின் அவலம் அறியாத சர்வதேச இலக்கியவாதிகள் இவர்களும், இது போன்ற அம்சங்களும் உள்ளவரை ராஜபக்‌ஷேக்களும், இந்தியா, சீனாவும் ஈழத்தமிழர்கள் போன்றோரது அடிப்படை உரிமை பிரச்சனை, அரசியல் அபிலாஷைகள் குறித்த எந்த விடயத்திலும் எந்த விதியையும் மீறலாம்.

சட்டங்களும் விதிகளும் மீறப்படுவதே வழக்காகிப் போனபின் நாங்களும் மனித உரிமைகள் சபையின் கூட்டங்களை கூட வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்! அந்த வேடிக்கை பார்த்தலினூடே என்றோ ஒரு நாள் எமக்குரிய நீதி கிடைத்தே தீரும் என்று எங்கோ ஒரு நம்பிக்கையின் இழையும் இன்னும் அறாமல் ஓடவும் செய்கிறது!

Image Courtesy: Google, TamilNet.

ஜனவரி 13, 2012

தனிமனித சரித்திரம்!
அவர் ஒரு சரித்திரம். சரித்திரம் சாவதில்லை என்றெல்லாம் சொல்வார்கள். சாதனையாளர்கள், சரித்திரம் படைத்தவர்கள் எல்லாருமே வரலாற்றில் பக்கங்களில் வாழ்வதுமில்லை. காலங்காலமாக வரலாற்றிலும் எத்தனையோ பேர் அதற்குரிய இடம் அளிக்கப்படாமலேயே அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டே மறைக்கப்படுகிறார்கள். சரித்திரமும், சரித்திர நாயகர்களும் கூட அவ்வப்போது அரசியல் குறித்தே வரலாற்றில் விதந்தோதப்படுகிறார்கள். குறிப்பாக மக்கள் நாயகர்கள் (Folk Hero) ஆக வாழ்ந்து மனித முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள், விடுதலைக்காய் போராடியவர்கள் என்று வரலாற்றின் பக்கங்களுக்கு வராமலே போய்விடுவார்கள்.

இதன் மூலம் நான் சொல்ல வருவது ஒரு வளர்ந்து வரும் இளம் சமுதாயம் யாரை சரித்திர நாயகராய் கொள்ள வேண்டுமென்று ஒரு அரசியல் ஆட்சி தீர்மானிக்கிறதோ அவர்களே பாடப்புத்தகங்களில் இடம்பிடிக்க வைக்கப்படுகிறார்கள். சில பேர்களின் பெயர் கூட வரலாற்றில் மறைக்கப்படுகிறது. மாறாக, ராஜபக்‌ஷேக்களும் கூட வரலாற்றில் வாழத்தானே செய்கிறார்கள்.

வரலாறு காலம் கடந்தே சிலரை அடையாளம் காட்டுகிறது. எதற்காக அறியப்படுகிறார்கள் என்பது கூட சில சமயங்களில் ஆச்சரியத்தையும் கூட்டுகிறது. நவீன தொழில் நுட்ப தகவற்தொடர்பு சகாப்தத்தில் சரித்திரம் படைத்த இவ்வாறான எத்தனையோ பேரைப் பற்றி அறியவும் முடிகிறது.

தனிமனிதராய், தன்னியல்பாய் அமரிக்க வரலாற்றில் ஒரு மாற்றம் உருவாக காரணமாய் இருந்தவர் மறைந்தது பற்றி அண்மையில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. அமெரிக்காவில் வசித்த ஜப்பானிய தம்பதியினருக்கு பிறந்த கோர்டன் ஹிராபயாசி (Gordon Hirabayashi) என்பவரின் திடசங்கற்பம் எப்படி அமெரிக்க வரலாற்றின் ஓர் அங்கத்தை மாற்றியமைத்திருக்கிறது என்று.

ஜப்பான் அமெரிக்காவின் Pearl Harbor துறைமுகத்தை Dec. 7, 1941 தாக்கிய பின் அமெரிக்காவில் வாழ்ந்த ஜப்பானிய வம்சாவழியினரால் அமெரிக்க பசுபிக் கரையோரத்தின் வழி ஆபத்து வரலாம் என்றும்; அவர்கள் ஜப்பானுக்கு உளவு சொல்லக்கூடும் என்றும் அமெரிக்காவில் இடைத்தங்கல் முகாம்களில் ஏறக்குறைய 110, 000 பேர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அது ராணுவ அத்தியாவசியம் என்றும் சொல்லப்பட்டது. இடைத்தங்கல் முகாம் என்றால் தற்காலத்தில் வன்னியில் இறுதிப்போரின் பின் இலங்கை அரசு அமைத்த முகாம்கள் போன்றது. ஆனால், ராஜபக்‌ஷேக்கள் அளவுக்கு அங்கே கொடுமைகள் நிகழ்ந்ததாய் வரலாறு இல்லை.

அவ்வாறு ஜப்பானியர்கள் அவர்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்படும் போது அப்படி வெளியேற மறுத்தவர் தான் கோர்டன் ஹிராபயாசி. இடைத்தங்கல் முகாமில் ராணுவத்திடம் தன்னை ஒப்படைக்க மறுத்து அமெரிக்க உளவுத்துறையிடம் தன்னை ஒப்படைத்திருக்கிறார். கனடாவுக்கோ அல்லது அமெரிக்காவிற்குள்ளோ வேறெங்காவது ஓடி மறையாமல் அவரது வெளியேறும்படியான உத்தரவை துணிச்சலோடு நேரடியாகவே எதிர்த்திருக்கிறார்.

அவர் ராணுவனம் விதித்த வெளியேற்ற உத்தரவை மீறியது குற்றம் என்று  உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு, Arizona Work Shop இற்கு அனுப்ப  நிதிப்பற்றாக்குறை என்று அரசு சொல்ல தானாகவே அங்கு சென்றாராம். தன் சொந்த முயற்சியில் அங்கு செல்ல, அவர் சம்பந்தப்பட்ட ஆவண காகிதங்களை காணக்கிடைக்காததால் அவரை சுதந்திரமாய் போக அனுமதிதிருக்கிறார்கள். அப்போதும் மறுத்தவர்  நீதிமன்றம் வழங்கிய தனக்குரிய  தண்டனையை அனுபவித்து முடித்திருக்கிறார். Gordon Hirabayashi அண்மையில் காலமடைந்துவிட்டார்.

1980 களில் இது குறித்து மேல்முறையீடு செய்ததில் அமெரிக்க நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் அந்த ஜப்பானிய-அமெரிக்கரது வழக்கில் ஆதாரங்களை வெளியிடாது மறைத்து வைத்தது தெரியவந்தது. அதனால் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையும் தவறென்பது நிருபணம் ஆகியிருக்கிறதாம். இப்போது அவர் மரணம் அமெரிக்க மனச்சாட்சியை ஏதோ கொஞ்சம் அசைத்தும் பார்க்கிறது போலும். இவரது மரணத்தின் மூலம் மறுபடியும் ஒருமுறை இடைத்தங்கல் முகாம்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது.

மனிதனே வரலாற்று அசைவியக்கத்தின் அச்சாணி. மனித வாழ்வின், மனித சமூகத்தின் இயக்கம், மாற்றம், முன்னேற்றம் என்பதே வரலாறு என்கிறார்கள் அறிஞர்கள். தனிமனிதர்கள் ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து, நீதி பரிபாலன அலகுகள் மீது நம்பிக்கை வைத்து நேர்மையாய் நடந்து கொள்ளும் Gordon Hirabayashi போன்றவர்களைப் பார்த்தபின்னும் அரசு என்கிற அமைப்பு, சட்ட ஒழுங்கு, அரச நிர்வாகம் குறித்த பொறுப்பு என்கிற விடயங்களில் தலைகீழ் விதியாய் எப்படி நடந்து கொள்ள முடிகிறது!

தப்பிக்கொள்ள வழிகள் இருந்தும், திடசங்கற்பமாய் ஒருவர் இப்படியா தண்டனையை அனுபவிப்பார் என்று யோசித்தாலும், எது ஒரு தனிமனிதரை இவ்வளவு தூரம் உறுதியோடு இருக்க வைக்கிறது என்கிற ஆச்சர்யமும் மாறவில்லை. ஒரு தனியனாய் ஒரு வல்லாதிக்கத்தை அதுவும் அன்னிய மண்ணில் எதிர்க்கும் இவர் மீது ஏனோ தனியாய் ஒரு மரியாதை உண்டாகிறது. உலக நாடுகளிலெல்லாம் ஓடியோடி நீதிபரிபாலனம், மனித உரிமைகள் பேணுகிறோம், ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கிற அமெரிக்கா காலம் கடந்து Gordon Hirabayashi விடயத்திலாவது நேர்மையாய் தான் வருந்துகிறதா! அந்த நேர்மையை இந்த ஜப்பானிய வம்சாவழி அமெரிக்கரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளுமா!

http://www.washingtonpost.com/opinions/the-legacy-of-gordon-hirabayashis-fight-against-internment/2012/01/04/gIQASV6cfP_story.html?wprss=rss_opinions

http://tamilnet.com/art.html?catid=79&artid=34774


Image Courtesy: Google

ஜனவரி 07, 2012

Davos முதல் தமிழ்மண கலாச்சாரம் வரை!நாட்களை, வாரங்களை, மாதங்களை விழுங்கி வருடமாய் வந்து கடந்து போகும் காலம். தனிமனித, அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை, எதிர்பார்ப்புகளை, நம்பிக்கைகளை மனித மனங்களில் விதைத்துச் செல்லும். இப்படி காலம் அதன் போக்கில் மனிதவரலாற்றை எழுதிக்கொண்டிருக்க, மனிதன் அதன் அசைவியக்கத்தை, ஆடுகளத்தை அதன் இயல்புகளோடு ஒன்றியும், ஒன்றாமலும்  கடந்து வந்து விடுகிறான். பின்னாளில் அது பூமராங் போல திருப்பித்தாக்கும் சந்தர்ப்பங்களில் அதன் காரண காரிய தொடர்புகளை தேட வேண்டியுள்ளது.

தேடுவதும் தெளிவதும் தானே மனித வாழ்வு. தேடல் தீர்ந்து போன பின் என்ன மிஞ்சியிருக்கும் மனித வாழ்வில். கடந்து போன எதை திரும்பிப் பார்ப்பது என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது மனதில். கடந்த வருடத்தை கொஞ்சம் மீட்டிப்பார்த்தால், அதிகம் காதில் விழுந்த வார்த்தைகள் இனப்படுகொலை, போலி ஜனநாயகம், மக்கள் எழுச்சி, உலகப்பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் மாசடைதல் இவைதான். முன்பெல்லாம் இதே பிரச்சனைகள் இருந்தாலும் இன்று அதன் வீச்சமும், தாக்கமும், அது குறித்த புரிதலும் அதிகம் என்றே சொல்லத்தோன்றுகிறது.

சுத்தி சுத்தி யோசிச்சா இந்த பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் ஒரு பொதுவான அடிப்படை அரசியல் ஒரே மையப் புள்ளியில் சந்திக்கும். அது உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் இவைகளின் மறைமுக தலையீட்டில் நடைபெறும் அரசியல் சூதாட்டங்கள் என்பதும்; இனப்படுகொலை, முற்றுப்பெறாத மக்கள் எழுச்சி என்று தங்கள் நலம் மட்டுமே பேணும் வளர்ந்த நாடுகளின் பன்முகமும் வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் இவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சில சர்வாதிகார ஆட்சியாளர்களால் வெளிப்பட்டதும் கண்கூடு. இதெல்லாம், நிறையவே பார்க்கவும், கேட்கவும், படிக்கவும் நேர்ந்தது கடந்த வருடம்.

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டவர்கள் உலக நாடுகளின் முக்கிய பொருளாதார மைய நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களென கருதப்பட்ட வீதிகளின் ஆக்கிரமிப்பும் ஒரு முக்கிய நிகழ்வாய்ப் போனது. உலகின் சனத்தொகையில் ஒரு சத விகிதத்தினர் மிச்சம் 99% மக்களை ஆட்டிப்படைப்பதும் வித்தியாசமாக, ஆனால், சிறப்பாய் சொல்லப்பட்டது.

Davos Culture என்று சொல்லப்படும் ஒரு கலாச்சாரம் உலகின் வியாபாரம், வங்கிகள், அரச அலுவலர்கள், அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் என்கிற துறை சார்ந்த ஏறக்குறைய ஆயிரம் பேர் வருடாவருடம் சுவிற்சலாந்தின் Davos  நகரில் உலக பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொள்வார்களாம். உயிரியல் விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், வியாபாரம், சட்டம் என்று இதையெல்லாம் கரைத்து குடித்த ஆங்கிலம் பேசும் இவர்கள் சொற்களிலும், வார்த்தைகளிலும் வித்தை காட்டுபவர்கள். இவர்கள் அரசுகள், கார்பரேட் நிறுவனங்கள், கல்வி சார் நிறுவனங்களால் வேலைக்கமர்த்தப்பட்டவர்கள் என்கிறார் சாமுவல் ஹன்ரிங்ரன் தன் The Clash of Civilization and the Remaking of World Order புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இந்த Davos Culture என்பதை கடைப்பிடிக்கும் இவர்கள் உலகளாவிய ரீதியில் தனியுரிமை கோட்பாடு குறித்த நம்பிக்கை, சந்தைப்பொருளாதாரம், அரசியல் ஜனநாயகம் என்கிற மேற்கத்திய நாடுகளில் பொதுவாக பேசப்படும் அம்சங்கள் குறித்து பகிர்ந்து கொள்வார்களாம். என் அறிவுக்கு இது ஏதோ பரப்புரை என்பதாய் தொனி வருகிறது. இவர்கள் உருவாக்கிய Davos கலாச்சாரம் மேற்குலகம் என்பதை தாண்டி உலகளாவிய ரீதியில் 50 மில்லியனுக்கும் குறைவான மக்களால் பகிரப்படுகிறதாம்.


இந்த 50 மில்லியனுக்கும் குறைவான மக்கள் யார் என்றால் Davos கலாச்சாரத்தை பின்பற்றும் அவர்கள் தான் உலக மக்கள் தொகையில் 1% ஆனவர்கள்!!! Davos கலாச்சார மக்கள் தான் உலகின் சர்வதேச நிறுவனங்கள், பல உலக அரசுகள், பெருந்திரளான பொருளாதார, ராணுவ செயல் திறனாற்றலை கட்டுப்படுத்துபவர்கள். இதையெல்லாம் புட்டு, புட்டு எழுதும் Samuel P. Huntington கண்டிப்பாய் வாசிக்கப்பட வேண்டியவர்.

வாசிப்பு என்றவுடன் எனக்கு பதிவுலகமும் ஞாபகம் வருகிறது. தமிழ் மணத்தில் 2011 ம் ஆண்டின் அதிகம் வாசிக்கப்பட்ட முதல் நூறு தளங்களின் பட்டியல் பார்க்க நேரிட்டது. தமிழ் மணம் என்கிற திரட்டியை முதல் நூறு இடத்தை பிடித்த தளங்கள் அதிகம் வாழவைக்கிறது என்பதையும் மறுக்க முடியவில்லை. தமிழ் மணம் நூறு தாண்டியும் தளங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தால் நான் வாசிக்கும் தளங்களின் பெயரும் கண்ணில் பட்டிருக்குமோ!!

உலகில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இது போன்ற சமூக ஊடக தளங்களில், களங்களில் தமிழையும் உலக மொழிகளுக்கு இணையாக தட்டச்ச வைத்தவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள். தமிழ் வளர்ச்சிக்கு தமிழ்மணத்தின் சேவையும் அளப்பரியதே.  தமிழ் மணம் எல்லா தளங்களையும் திரட்டுகிறது. ஆனால், தமிழன் என்கிற வாசகன் கனியிருக்க காய் கவர்ந்து தரமற்ற படைப்புகளையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறான் என்பதும் யதார்த்தமான மறுக்கமுடியாத உண்மை. பதிவுலகமும் தனக்கென்றோர் புதிதாய் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தரமான படைப்புகளால் வாழவைக்கப்படுவது தொன்மையான கலாச்சாரமும், மொழியும் கூடவே. தமிழ்மணமும் அதற்குரிய ஒர் களமே.

பதிவுலகில் எத்தனையோ விதமான அறிவு சார் துறையிலிருந்து, பண்பாட்டறிவு, அனுபவங்களோடு தான் எழுத வருகிறார்கள். பகிர்ந்து கொள்ளப்படும் எண்ணமும், சிந்தனைகளும், எழுத்தும் வாசகனின் அறிவை குறுகச்செய்யாமல் பார்த்துக்கொள்வது தான் ஆரோக்கியமான எழுத்தாய் அமையும். எதை எழுதுவதென்றாலும் அதை முடிந்தவரையில் தரமாக எழுதி ஓர் அறிவுடமை சமுதாயத்தை ஏன் கட்டியமைக்க முடியாது!

மாறிவரும் உலக ஒழுங்கில் ஒவ்வொரு மக்கள் சமூகமும் தங்கள் தனித்தன்மைகளை பேணி தங்கள் அடையாளங்களை நிலை நிறுத்தவே விரும்புகிறார்கள். ஒவ்வொரு மக்கள் குழாமும் பேணவிரும்பும் தனித்தன்மைகளில் ஒன்று மொழி. மொழி என்றால் உலகில் மற்ற மொழி பேசுபவர்கள் போலவே தமிழின் சிறப்பை உலகிற்கு இசை மூலமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். இடையே கொலைவெறி பாடலும் உடைந்த ஆங்கிலத்தில் ஜப்பான் பிரதமரையும் கவர்கிறது. இது தமிழின் சாதனையா அல்லது தமிழன் சாதனையா! அதுவும் இல்லையென்றால் இசையின் சாதனையா என்கிற விடை தெரியாத கேள்வியும் இல்லாமல் இல்லை.

மொழியை தொலைத்தவர்கள் தங்கள் அடையாளத்தை தொலைத்தவர்கள் ஆவார்கள். கடந்த சில வருடங்களில் சில குறிப்பிட்ட மொழி பேசுபவர்களில் கடைசி நபரும் இறந்தார் என்று படித்திருக்கிறேன். அந்தமான் தீவில் வசித்து வந்த போ-ஆ (Boa Sr) என்கிற 85 வயது பெண்மணி இறந்ததோடு Bo என்கிற மொழியும் அருகிப்போய்விட்டது. அதே போல், வரலாற்றில் பிரித்தானிய காலனியாதிக்கத்தில் அழிக்கப்பட்ட Tasmania வின் பூர்வீக குடிகளில் கடைசியாய் எஞ்சியிருந்த Truganina என்கிற பெண்மணியும் இறந்ததோடு அந்த இனமே அழிந்துவிட்டது.

இதெல்லாம் துணுக்கு செய்திகளாய் ஆங்காங்கே படித்தது. மனதில் நிலைத்து நின்றுபோய்விட்டது. தமிழீழத்தில் தமிழனும், தமிழும் என்றாவது ஒரு நாள் இந்த நிலைக்கு வரக்கூடுமோ என்றும் அச்சம் எழுகிறது.

உலகில் இனப்படுகொலை என்பது யாரால் வேணுமானாலும் தங்கள் வாழ் நிலைத்தேவை என்று கருதப்படும் அடுத்தவனின் நிலத்துக்காய் திட்டமிடப்பட்ட முறையில் நிகழ்த்தப்படலாம். ஆனால், ஒருவன் தன் மொழியை தானே கொல்வது தான் ஒத்துக்கொள்ள முடியாத விடயம்.

உலகம் பொருளாதார-அறிவு ஜீவிகள் கலாச்சாரத்திலிருந்து மேற்குலக கலாச்சார கோலங்களை அடுத்தவர் மீது திணிக்க முற்பட்டாலும் மக்கள் சமூகம் ஒவ்வொன்றும் தங்கள் தனித்தன்மைகளையும் நியாயமான முறையில் பேணிப்பாதுக்காக்கவே முனைகின்றன. என்ன தான் மக்கள் எழுச்சிகள் கூட திட்டமிடப்பட்டு தூண்டிவிடப்பட்டாலும் பாதிக்கப்படுபவன் நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதும் இல்லை. அரசியல் சட்டமியற்றி, பொருளாதார கொள்கைகள் வகுத்து அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டாலும் மிதிக்கப்படுபவன் என்றாவது நிமிர்ந்தே தான் தீரவேண்டும். வரலாறு எப்போதும் ஒரே திசையில் பயணிப்பதில்லை என்பது அறிவு ஜீவிகள், ஆய்வாளர்கள் சொல்வது. காலம் மாறும்.

தமிழுக்கும், தமிழனுக்கும் அங்கீகாரம் கிடைக்காத இலங்கை என்கிற நாட்டில் இருந்து ஒரு தமிழனின் குரல், தமிழுக்காய்.
“...கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல...”

Image Courtesy: Google.