டிசம்பர் 19, 2011

மன்மதன் அம்பும் அறிவு மயக்கமும்!!

மன்மதன் அம்பு திரைப்படம் நேற்றுத்தான் பார்த்தேன் முதல் தடவையாக!

வழக்கமாகவே  தற்காலத்தில் பாலாவின் படம் என்றால் ஆண் அதிக வன்முறை காட்டுவான்; கமல், மணிரத்னம் படம் என்றாலே சர்ச்சை தான் என்பது தமிழ்த்திரைப்படத்துறை மற்றும் ரசிகர்களின் கலாச்சாரம். அது போன்ற படங்களின் கருவையும், காட்சிகளையும் அதன் அரசியல் தாண்டி யோசிக்கும் சமயோசிதம் எனக்கும் இருக்கா என்று அப்பப்போ இப்படி ஏதாவது படம் பார்க்கும் போது தான் புலப்படும்.

சமகால அரசியல், வாழ்வியல் பிரச்சனைகள் குறித்த கலைகளின் வெளிப்பாட்டில் தெளிவுகள் புலப்படுத்தப்படுவதில்லை என்று சொல்வார்கள். அது காண்பவரின் புரிதலுக்கும், முடிவுக்கும் விடப்படும் விசயம். அதே சமயம் திரைப்படத்தில் கருவாக அல்லது கிளைக்கதையாய் சொல்லப்படும் பிரச்சனை குறித்த ஒரு புரிதலையும், தெளிதலையும் பார்வையாளனிடம் அல்லது ரசிகசிகாமணியிடம் உருவாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கமும் அந்த படைப்பாளியிடம் இருக்கா என்று மன்மதன் அம்பு போன்ற திரைப்படங்களை உருவாக்குபவர்கள் என் போன்றவர்களை யோசிக்க வைக்கிறார்கள்.

காணும் காட்சிகள் இயல்பாய் இன்றி செயற்கையாய் கட்டமைக்கபப்பட்டு கருத்துகள் திணிக்கப்படும் போது கொஞ்சம் விழிப்போடில்லாதிருந்தால் அந்த கருத்துக்களின் வழி நானும் வனையப்படுவேனோ என்கிற பயமும் தொற்றிக்கொள்கிறது. கருத்துகளின் கட்டமைப்புகளில் என் சிந்தனைகள் சிக்க வைக்கப்படும்போது என் சுயம் தொலைந்து போக நேரலாம்.

மன்மதன் அம்பு என்கிற ஒரு பொழுது போக்கு அம்சத்திற்கு இவ்வளவு வியாக்கியானம் தேவையா என்றும் தோன்றலாம். எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் தோன்றியது. ஒரு திரைப்படத்தின் கருவோ, கதையோ வெறுமனே பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே என்றால் அது குறித்து எனக்கு சிந்திக்கவோ, விமர்சிக்கவோ வேண்டிய தேவை இருந்திருக்காது.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமகாலத்தில் நான் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அல்லது என்னைப்பாதிக்கிற பிரச்சனையின் பிம்பம் ஒன்று உருவகிக்கப்படும்போது, அது குறித்து என் பிரதிபலிப்புகளை எழுதாமல் இருக்கமுடியவில்லை. பானைச்சோறு, பதம் என்கிற பழமொழி போன்ற ஒரு தனிப்பட்ட படைப்பாளியின் Stereo Type சிந்தனைகள் வழி எம்மைப்பற்றிய கற்பிதங்களை பொதுக்கருத்தாய் முன்வைக்கப்படுகிறதா என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

M.I.A. என்கிற ஈழத்துப்பெண்ணான மாயா அருட்பிரகாசம் மூன்றாம் உலக ஜன நாயகம் பற்றியோ, அமெரிக்கா அரசியல் கொள்கைகள் பற்றியோ கருத்துகளை இசை என்கிற ஊடகத்தின் வழி சொல்லும் போது மறுக்க முடிவதில்லை. காரணம், அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதன் பாதிப்புகளை எல்லோரும் ஏதோவொரு வகையில் உணர்ந்திருக்கிறோம். மன்மதன் அம்பு திரைப்படத்தில் கமல் என்கிற ஒரு படைப்பாளி ஈழத்தமிழனை, அவருக்கு தெரிந்த உலகவரலாற்றின் அடிப்படையில், அவரது பாசையில் தீவிரவாதம் பற்றி பாடம் எடுப்பதை கொஞ்சம் தெளிவாய் சொன்னால் தான் என்ன என்று யோசித்தேன். எதையுமே பூடகமாய் சொல்லி, பொழுது போக்குபவர்கள் பொழுதை போக்குங்கள், மற்றவர்கள் பதிவெழுதி அடித்துக்கொள்ளுங்கள் என்று திரைக்கதை, வசனம் எழுதிய கமல் ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்னவோ.

சரி, மன்மதன் அம்பு திரைப்படத்தில் ஈழத்தமிழன் குறித்த இரண்டு காட்சிகளை பற்றி நான் பார்த்ததை சொல்கிறேன். ஒரு காட்சியில் ஈழத்தமிழர்களின் பிம்பமாய் உருவகிக்கப்பட்டவர் தமிழ்த்திரை நடிகையை பார்த்து சொல்லுவார், நான் உங்கள் கால் செருப்பாயும் நடிக்க தயார் என்று. உடனே நடிகையின் தோழி கேப்பாராம் எது வலது கால் செருப்பா அல்லது இடது கால் செருப்பா என்று. திரைப்படத்தின் உச்சக்காட்சியில் அதே நடிகை ஈழத்தமிழனை தன் கால் செருப்பை கழற்றி காட்டி அதாலேயே அடிப்பேன் என்று சொல்லுகிறார்.

ஈழத்தமிழன் சிங்கள ராணுவத்திடம், பேரினவாதிகளிடம் அவன் சொந்த மண்ணிலேயே படாத இன்னலை, அவமானத்தினை விட இது பெரிசா தெரியவில்லை. சிங்கள ராணுவத்தையும் ஒரு தமிழ் சினிமா நடிகையை அல்லது திரைப்படத்துறையை அதற்கு ஒப்பிடவும் நான் முனையவில்லை. என்னை யோசிக்க வைத்தது இது தான். கமல் என்கிற அந்த படைப்பாளி ஈழத்தமிழர்களின், குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள், சினிமா மோகம் பற்றி கிண்டலடிக்கிறாரா அல்லது தமிழ் சினிமா உலகம் உங்களை இவ்வளவு தான் மதித்து வைத்திருக்கிறது என்று சொல்கிறாரா!!!

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர் பெரியதோர் பலம் என்று வழமையான பல்லவியை நான் பாடப்போவதில்லை. புலம்பெயர் தமிழன் தமிழ் சினிமாவை உலகம் முழுக்க பரப்பியவன் என்கிற உண்மை மறுக்க முடியாதது. அந்த யானைப்பலம் ஈழத்தமிழனே புரிந்தும், புரியாதது போல இருக்கிறான்.

தமிழ் தெரு பொறுக்குகிறது என்று மன்மதன் அம்பு படைப்பாளி கமல் ஒரு வசனம் சொல்லுவார் அந்த படத்தில். தமிழ் தெருப்பொறுக்குதோ இல்லையோ, இந்த தமிழ் சினிமாக்காரர்கள் வெளி நாடுகளில் வீதிகளில் நாயகனும் நாயகியும் குரூப் டான்ஸ் ஆட இந்த நாட்டு மக்கள் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்ப்பதும் என் போன்றவர்களுக்கும் தர்ம சங்கடமாய்த்தான் இருக்கு. இதையெல்லாம் நாங்க என்ன புலம்பிக்கொண்டா இருக்கிறோம்.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு என் நண்பரிடம் பேசும் போது அவர் சொன்னார். கமல் என்கிற படைப்பாளி ஈழத்தமிழர்கள் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை ஏன் தமிழ் சினிமாக்காரர்களிடம் கொட்டுகிறீர்கள் என்று மறைமுகமாக சொல்கிறாராம். சரி, அந்த படைப்பாளியின் உயரிய நோக்கம் ஈழத்தமிழன் குறித்த அக்கறை என்றால் அதை நேரடியாகவே சொல்லலாமே. ஏன் தலையை சுத்தி மூக்கை தொடவேண்டும்.

ஒரு நல்ல படைப்பாளியாய், வசனகர்த்தாவாய் மாதவன், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிளிர்பவர், ஈழத்தமிழன் குறித்த காட்சிகளின் அமைப்புகளில், வசனங்களில் தடம் புரள்வது ஏனோ!!! மன்மதன் அம்பில் ஈழத்தமிழன் வரும் காட்சியில் ஒரு தடவைக்கு மேல் அவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் காலணியோடு கற்பிதங்கள் கொடுக்கப்படுவதை ஓர் ஈழத்தமிழன் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்!!! சரி, நேரடியாய் சொல்லப்படாத அந்த அர்த்தபுஷ்டியான காட்சிகளுக்கு என் நண்பருக்கும், படைப்பாளி கமலுக்கும் மட்டுமே பதில் தெரியும். நான் சாதாரண பெண். எனக்கு இந்த பூடகமாக சொல்லப்படும் கலை நுணுக்க கருத்து திரிபு நயங்களும் திணிப்புகளும் புரியவில்லை என்றே நினைத்துக்கொள்கிறேன்.

காலத்தின் தேய்வு நிலை கோட்பாட்டின் படி, உண்மை எப்பொழுதும் உறங்கியே போய் விடுவதில்லை. அப்படியாக, அதி அரசியல் உள் நோக்கங்களை கொண்ட பிரச்சார விநியோகிப்புகளும் அந்த நேரத்தில் பரபரப்பாக விற்கப்பட்டு கொள்முதல் பண்ணப்பட்டிருந்தாலும், காலம் இறுதியில் உண்மையை விளக்கி அந்த மனிதர்களின் உண்மையான முகத்தை வெளிப்படையாய் காண்பித்துவிடுகிறது. அதேபோலவே, கமல் இரட்டை நாக்கு கொண்டவராக உள் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார் என்றால் அவரின் முகமூடியும் உதிரும் காலம் வரலாம். ரசிகசிகாமணிகள் உண்மையறியலாம்.

எப்படியோ, மொத்தப் படமும் முடியும் போது மனதில் நிறைந்திருப்பவர்கள் அவமானத்தை தாங்கமாட்டான் என்று சொல்லும் ஈழத்தமிழனும், மூன்றாம் உலகநாடுகளின் பொய்த்துப்போன எல்லோருக்கும் பொதுவான Universal Healthcare அல்லது தனியார் மருத்துவ மனைகளில் கணவனின் உயிரைக்காக்க கண்ணீர் மட்டுமே விடத்தெரிந்த, முடிந்த ஊர்வசியின் கதாபாத்திரங்களும் மட்டுமே. தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழன் தன் பலம் குறித்து புரிந்து கொள்ளும்வரை, தமிழ் சினிமா விம்பங்களை பூஜிக்கும் மனோபாவம் மாறும்வரை இப்படித்தான் இரண்டுங்கெட்டானாய் விமர்சிக்கப்படுவான்.

Image Courtesy: Google

17 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

நல்லவேளை நான் கமலின் ரசிகன் இல்லப்பா... குத்தோ குத்து கும்மாங்குத்து. நேரடியா பேசினா இந்த வம்பெல்லாம் வருமா, சொன்னாக் கேட்டாத்தானே :))

ஹேமா சொன்னது…

ரதி...நிறையப் பேர் திட்டி முடிச்சிட்(டோம்)டினம்.நீங்க சரியான லேட்.கமல் நல்ல ஒரு நடிகன் மட்டுமே.இது முதல் தரமில்லையே ஈழத்தமிழர்களை அவர் கேவலப்படுத்துறது.
நளதமயந்தி,தெனாலி....இன்னும்!

Rathi சொன்னது…

தெக்கி, அது Freedom of Expression :)))

Stereo Type சிந்தனைக்கு ஏதோ என்னால முடிஞ்ச பதில்.

சினிமா என்கிற பாரிய ஊடகத்தில் ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட கருத்தானது எம் உரிமைப்போராட்டம் மற்றும் எம்மைப்பற்றிய பொதுக்கருத்தாய் நயமாய் திரிக்கப்பட்டு உலகவெளியில் உலவும் அபாயம் உண்டு. அதன் பாதிப்பு படைப்பாளிக்கு அல்ல. இனப்பாகுபாட்டு கொள்கைகளால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் எமக்குத்தான். அதை யாராக இருந்தாலும் தெரிந்தே செய்தால் பதிலுரைக்க வேண்டியுள்ளது.

Rathi சொன்னது…

ஹேமா, தமிழ் சினிமாவில் கமல் போன்ற படைப்பாளிகள் ஈழத்தமிழனை இழிவாய் காட்டும் செயலுக்கு எம்மவர்கள் சிலரும் பொறுப்பாளிகள் தானே.

வசூலுக்கு பெயர் போன நாயகர்களின் படம் என்றால் அதையெல்லாம் இங்குள்ள பாரிய திரையரங்குகளில் ஓட்டியே நிறைய காசு பார்ப்பார்கள்.

இங்கே பெரிய திரையரங்குகளில் அதை காட்சிப்படுத்த அதற்கு நிறைய கட்டணம். தவிர, அதை தமிழ் நாட்டிலிருந்து வாங்க விநியோகஸ்தர்களுக்கு இவர்கள் பாரிய விலை கொடுக்கிறார்கள். நிச்சயம் அது கொஞ்ச விலை அல்ல. அதை மறுபடியும் ரசிகனிடம் வசூல் செய்துவிடுவார்கள். அதிகம் தேவையில்லை. ஈழம் பற்றி கேனத்தனமா ஒரேயொரு வசனம் போட்டாலே படம் பிச்சுக்கொண்டு வசூல் கொடுக்கும் என்கிற மலின உபாயம் அறிந்தும் வைத்திருக்கிறார்கள்.

மொத்ததில் ஈழத்தில் ராஜபக்‌ஷேக்கள் சதி மூலம் செய்வதை இங்கே புலத்தில் எங்களுக்கு நாங்களே கெடுதலாய் செய்து கொள்ளுகிறோம்.

இது காலம் கடந்த பதிவு தான். என்ன செய்ய இப்பத்தானே படம் பார்த்தேன் :))

நளதமயந்தி, தென்னாலியில் ஈழத்தமிழர்களின் உண்மை நிலை சொல்லப்பட்டதை விட, இழிவு படுத்தப்பட்டது தான் அதிகம். என்ன... அது மதன் அம்புவில் செருப்பு வரை சென்றிருக்கிறது.

ஈழத்தின் உண்மை நிலை சொல்லும் படங்களே புலத்தில் அதிகம் பார்க்கப்படும் என்கிற நிலை ஏன் உருவாகவில்லை. மிக துணிச்சலாக ஈழம் பற்றி, அரசியல் பற்றி ஒன்றிரண்டு இயக்குனர்கள், நடிகர்கள் படங்கள் புலத்தில் ஏன் திரையிடப்படக்கூடாது என்றும் யோசிக்கிறேன்.

அதை விடுத்து, வசூலளவில் பெயர் போன நாயகர்களின் வேற்றுமொழி தளுவலுடன் கூடிய படங்களை எம்மவர்கள் வாழவைக்கும் வரை இதுவும் தொடரத்தான் போகிறது.

வேர்கள் சொன்னது…

ரதி ..

ஹேமா சொன்னது போல் கமல் ஒரு நல்ல நடிகர்தான் (take it in both way)

//காலத்தின் தேய்வு நிலை கோட்பாட்டின் படி, உண்மை எப்பொழுதும் உறங்கியே போய் விடுவதில்லை. அப்படியாக, அதி அரசியல் உள் நோக்கங்களை கொண்ட பிரச்சார விநியோகிப்புகளும் அந்த நேரத்தில் பரபரப்பாக விற்கப்பட்டு கொள்முதல் பண்ணப்பட்டிருந்தாலும், காலம் இறுதியில் உண்மையை விளக்கி அந்த மனிதர்களின் உண்மையான முகத்தை வெளிப்படையாய் காண்பித்துவிடுகிறது. அதேபோலவே, கமல் இரட்டை நாக்கு கொண்டவராக உள் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார் என்றால் அவரின் முகமூடியும் உதிரும் காலம் வரலாம். ரசிகசிகாமணிகள் உண்மையறியலாம். //

கமலைப்பற்றி நீங்கள் உள்வாங்கி இருப்பது 100 சதவிகிதம் சரி

துஷ்யந்தன் சொன்னது…

வணக்கம் ரதி அக்கா எப்படி இருக்கீங்க??

கொஞ்சம் லேட்தான் ஆனாலும் நியாயமான ஆதங்கத்துடன் வந்து இருக்கீங்க :(
அந்த படம் எங்கள் வீடிலேயே வைத்து பார்க்கும் போது நீங்கள் குறிபிட்ட கட்டங்ககுள் வரும் போது ரெம்ப அவமானமா இருந்திச்சு பார்க்க.
ஹேமா அக்காச்சி சொன்னது போல் கமலுக்கு எங்களை அசிங்கபடுத்துவது இது ஒன்றும் புதுசு இல்லையே...
வாத்தியார் வீட்டு பிள்ளை மட்டும் அல்ல வாத்தியாரும் சில நேரங்களில் முட்டாலாத்தான் இருப்பாங்க
கமல் அந்த ரகம்

Rathi சொன்னது…

வேர்கள்,

//ஹேமா சொன்னது போல் கமல் ஒரு நல்ல நடிகர்தான் (take it in both way)//

Yeap, got it :)

நீங்க இன்னும் பதிவெழுத ஆரம்பிக்கவில்லை போல :)

Rathi சொன்னது…

துஷ்யந்தன், நான் நல்லா இருக்கன், நன்றி.

யாரையும் முட்டாள் என்று சொல்லும் தேவை எமக்கு இல்லை, துஷி.

குறைந்தபட்சம் நாங்கள் மற்றவர்கள் எங்களை முட்டாள்கள் என்று முத்திரை குத்தாமல் பார்த்துக்கொள்வோம்.

வேர்கள் சொன்னது…

ரதி

தாங்கள் என்னை பதிவு எழுத அழைத்தமைக்கு மகிழ்ச்சி
ஆனால் நான் ஒரு வாசகன் மட்டுமே
தங்களை போன்ற மற்றும் தெக்கி,சவுக்கு,ஈரோடு கதிர்,ஜோதிஜி ,வானம்பாடிகள் ,கலகலாப்ரியா,அதுசரி, நயனம்,தமிழ்நதி(தற்போது எழுதுவது இல்லை )
தற்போது Powder Star - Dr. ஐடியாமணி,சுவடுகள் மற்றும் பலரின் அனுபவங்களையும் ,பார்வைகளையும், விமர்சனங்களையும் தொடர்ச்சியாக படிப்பவன் மட்டுமே
எனக்கு ஈழ தமிழ் உறவுகளை பிடிக்கும்
இங்கு எல்லாம் பழம்பெருமைகளாக இருக்க
தமிழ் இனத்தின் தற்போதைய பெருமை நீங்கள் தான் என்று நம்புபவன்
இங்கு சொந்த நாட்டிலே அடையாளம் இழக்க
நீங்கள் தமிழர்களை உலகுக்கு உயர்த்தியவர்கள் (அதற்காக மிக மிக அதிக விலை கொடுக்கபட்டிருக்கிறது )

உங்கள் முந்தய பதிவில் நம்மை சுற்றி நடக்கும் செயல்களின் போலித்தன்மையை சொன்ன உங்கள் எண்ண ஓட்டத்துடன் நான் ஒத்துபோனதால் அதை பகிரவே என்னுடைய வலைப்பதிவு
மற்றபடி
நீங்கள் நதி போன்றவர்கள் உங்களுக்கு மலை,காடு,சமவெளி,கடல் இவைகளில் பயணித்த அனுபவம் உண்டு பகிர
ஆனால் நாங்கள் வெறும் குட்டை போன்றவர்கள் எங்களுக்கு என்று பெரிய அனுபவங்கள் இல்லை
அதனால் நீங்கள் தொடர்ந்து எழதுங்கள் எங்களுக்காக.
நன்றி

Rathi சொன்னது…

வேர்கள், ம்ம்ம்ம்..... நிறையவே சொல்லிவிட்டீர்கள்.

நீங்கள், நான்....நாங்கள் எல்லோரும் தமிழர்கள் தான். சுதந்திர ஈழம் கேட்பதால் ஈழத்தமிழர்களாய் உயிர்களை, அமைதியான வாழ்க்கையை என்று அத்தனையும் இழந்து அனுபவங்களை சேமித்துக்கொண்டோம்.

மற்றப்படி, பெருமையோ, சிறுமையோ எங்கள் எல்லாருக்கும் பொது தான். தொடர்ந்து வாருங்கள், பேசுவோம் :)

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!நலமா?
தற்போது படம் பார்த்து விமர்சனம் செய்வதால் இதுவும் புதுப்பட விமர்சனமே:)

நகைச்சுவைப் படம் என்ற போர்வையில் கமலின் நக்கல் மறைக்கப்பட்டே போனது.

மேலும் சமூக சிந்தனையாளன் என்ற முகமூடி போட்டுக்கொண்டுள்ள கமலுக்கான நேர்,எதிர் அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்பவராகவே கமல் இதுவரை பவனி வருகிறார்.

நிகழ்வை ஆவணமாக்காமல் குலோத்துங்க சோழன் காலத்தில் கல்லை மட்டும் கண்டால் அரிதாரம் பூசுவது எளிதானதுதானே!

Rathi சொன்னது…

ராஜ நட, நான் நல்லா இருக்கேன். நீங்க எப்பிடி இருக்கீங்க!

ம்ம்ம்....... நீங்க சொன்னதுக்கு மேல நான் என்ன சொல்ல. நச்சுன்னு சொல்லியிருக்கீங்க.

♔ம.தி.சுதா♔ சொன்னது…

///கமல் என்கிற அந்த படைப்பாளி ஈழத்தமிழர்களின், குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள், சினிமா மோகம் பற்றி கிண்டலடிக்கிறாரா அல்லது தமிழ் சினிமா உலகம் உங்களை இவ்வளவு தான் மதித்து வைத்திருக்கிறது என்று சொல்கிறாரா!!!////

அக்கா இந்தக் கேள்வி என்னுள்ளும் பல தடவை எழுந்து ஓய்ந்திருக்கிறது...

ஹேமாக்கா சொன்ன கருத்தையே நானும் சொல்கிறேன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

♔ம.தி.சுதா♔ சொன்னது…

நீங்களே லேட் அதில நானும் சேர்ந்திட்டன்..ஹ..ஹ..

Rathi சொன்னது…

ம.தி.சுதா, எப்பிடி இருக்கிறீங்க!

ம்ம்ம்ம்.... லேட்டா எண்டாலும் எங்கட கருத்தை பதியவேணும் எங்களைப்ப பற்றிய விமர்சனங்களுக்கு அதான்.

நான் லேட்டாத்தானே படமும் பாத்தனான் :)))

♔ம.தி.சுதா♔ சொன்னது…

நல்ல சுகம் அக்கா... நீங்கள் நலமா?

கருத்துக்களால் தானே சொல்ல முடியுது..

Rathi சொன்னது…

நான் நல்லா இருக்கேன் சுதா :)