டிசம்பர் 08, 2011

பண்டிகை, விழாக்கால வெள்ளை யானைகள்!!


எழுதியெழுதி எண்ணமும் எழுத்தும் தீர்ந்து போகுமோ என்றுொரு தீராக் கேள்வி அடிமனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எழுத்தின் நெம்புகோலில் இந்த உலகையே புரட்டிப் போட்ட மாதிரி ஒரு நினைப்பு! நானெல்லாம் எழுதாமல் விட்டால் தமிழ் கூறும் நல்லுலகத்தின் காலக்கடிகாரம் அப்பிடியே ஸ்தம்பித்து நின்றுவிடும் என்கிற அளவுக்கு ஒரே எழுத்தும், கிறுக்குமாய் ஆகிப்போச்சு :) அரசியலை மேய்ந்து, ஆங்காங்கே மல்லுக்கட்டி யாராவது வந்து நாட்டாமை செய்து அதே ஆடுகளம். சில நேரங்களில் சுவாரஸ்யமாய், ஆரோக்கியமாய் நகரும். சில பொழுதுகளில் போலி அறிஞர்குழாமினாலும் திசை திருப்பப்படும். அது அவரவர் புரிதல், கொள்கைசார் விருப்பு, வெறுப்புக்கு ஏற்றாற்போல் மாறுபடும், வேறுபடும்.

இதில் குரங்கு அப்பம் பிரித்துக்கொடுத்த கதையாகவும், கதியாகவும் ஆகிப்போகும் விவாத விலக்குகள், வில்லங்கங்கள். இதிலெல்லாமிருந்து கொஞ்சம் விலகி யதார்த்த வாழ்க்கை பற்றிய காட்சிகளின் தரிசனம் பண்டிகை காலம் தொடங்குவதால் கண்ணில் ஏராளம் தென்படுகிறது நான் வாழும் நாட்டில். ஆம், இது வருட இறுதி நத்தார் பண்டிகை தெருமுனையில் இருப்பது போல் அண்மித்து கொண்டே இருக்கிறது.

கனடா வந்த புதிதில் வாழும் நிலை குறித்த தேடலும், தெளிதலும் கலாச்சார, பண்பாட்டு அதிர்ச்சியில் அமுங்கிப்போனது. இந்த கலாச்சார, பண்பாட்டு அதிர்ச்சி என்றால் அது உணவு, உடை, வாழ்க்கைமுறை, மொழி முதல் எல்லாம் அடக்கம்.  ஈழத்திலிருந்து ஏழு கடல், ஏழு மலை தாண்டி வந்து, இங்கே மனித வாழ்வு ஒளியின் வேகத்தில் நகர்வது போலவும் நான் மட்டும் நத்தையாய் ஊர்வதாயும் ஆரம்பகாலங்களில் ஓர் மனப்பிரம்மை.

அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாய் மீண்டு, மேலெழுந்து புலத்து வாழ்க்கை புரிபடத் தொடங்க ஆரம்பித்தது ஓட்டம். Road Runner போல வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடி ஒரு திடீர் தடை ஏற்படுத்தி அப்பப்போ கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பியும் பார்க்க கற்றுக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் வலிகள், சோதனை, சாதனை, எனக்கேயுரிய சந்தோசங்கள், கோமாளித்தனங்கள் அனைத்திலிருந்தும் பாடம் கற்று, ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும், மீண்டும் என் உயிர்ப்புக்கு உயிர் கொடுக்கிறேன். வெற்றியும் தோல்வியும் இயற்கையாய் அவை தம் இயல்புகளோடு இருக்க நான் மட்டும் அதற்கு சிரிப்பு, சந்தோசம், அழுகை, கோபம், குழப்பம், தெளிவு என்று வடிவங்கள் கொடுக்கிறேன். அத்தனையும் புறவாழ்வின் மீது எனக்கிருக்கும் மோகத்தின் வெளிப்பாடு.

நான் அதிகம் மனிதர்களை தேடுவதில்லை. தேடினாலும் அபூர்வமாய் தான் கிடைக்கிறது போலியில்லா முகமும், புன்னகையும். அந்த அபூர்வம் அதுவாய் இயல்பாய் அமையட்டும் என்று விட்டு விடுவேன். அதே போல் கடவுளையும் தேடுவதில்லை. இருப்பதை தேடலாம். இல்லாததை எங்கு போய் தேட! தொல் உயிர் எச்சங்களில் மனிதனின் மூலம் மில்லியன்கள் வருட முன்னோடிகளாய் இருப்பது Ape!! மனித குரங்கிற்கும் தற்கால மனிதனுக்குமிடையே கடவுள் எப்போது கடைவிரித்தார் என்கிற விசாரணையின் தேடல்களும் இல்லை என்னிடம். அதுக்கு என் நேரப்பற்றாக்குறையும் காரணம். தேடி விடைகாண நான் விஞ்ஞானியும் அல்ல. ஒரு வேளை மரணம் என்னை ஆட்கொள்ளும் போது, அடுத்த வாழ்வில் எனக்கு என்ன நடக்கும் என்று இல்லாத கடவுளிடம் கேட்க வேண்டுமோ :)

இந்த கேள்விகள் குறித்த தொடரில் ஒன்று மட்டும் எஞ்சியிருப்பது புரிகிறது. கடவுளை கண்டுபிடித்தவர்களும், கார்பரேட் நிறுவனப்படிமங்களில் வியாபாரம் பெருக்குபவர்களும் கடவுளுக்கும், மனிதனுக்குமிடையே ஓர் தொடர்பை பண்டிகை, விழாக்கால கோலங்களில் உருவாக்க முனைந்து இருக்கிறார்கள். அதில் பெருமளவு வெற்றியும் கண்டுவிட்டார்கள். அதை எங்களிடம் அதிகம் கடத்தி வந்து கொடுத்தது சினிமா, தொலைக்காட்சி என்கிற ஊடகங்கள். இவை இல்லை என்றால் உலகளாவிய ரீதியில் இந்துக்கள் எப்படி தீபாவளியும், இஸ்லாமியர்கள் ரமழானும், வட அமெரிக்காவில் எப்படி நத்தார் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது என்பது எனக்கு புரியாமலே போயிருக்கலாம். என் தகவல் அறியும் உரிமை இதுக்குள்ளேயே முடக்கப்படும்.

பண்டிகைகளும், விழாக்களும் கடவுளோடு தொடர்புபட்டதால், அது குறித்த கொண்டாட்டங்களும் ஊடகங்கள் வழி வியாபார நிறுவனங்கள் அமைத்துகொடுத்த நியமங்களுக்கு ஏற்ப கொண்டாடப்படுகிறது. என் வாழ்வியல் முறை, பண்பாட்டு விழுமியங்கள் என் பரம்பரையில் கடத்தப்பட்டு வந்த முறைக்கும், இன்று அது வியாபார நிறுவனங்களால் வேறு நியமங்கள் கற்பிக்கப்பட்டதும் காலத்தின் வழுவோ!

பண்டிகை, விழாக்காலம் என்றால் நான் எதை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் எல்லாமே தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நான் சமூகத்தை எதிர்த்து செயற்படுவதாய் தோன்றும். வேலத்தளத்தில் ஒவ்வொரு வருடமும் கேட்பார்கள் பண்டிகை கால பரிசுப்பொருள் கொள்வனவு செய்தாகிவிட்டதா என்று. நானும் சிரித்துக்கொண்டே கேட்பேன், அதை செய்தே ஆக வேண்டுமா என்று. பொருளுலகில் பரிசுப்பொருட்களில் தான் அன்பும், பாசமும், காதலும் பரிமாறப்பட்டு, வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவையா, கட்டாயமா என்பது சில நேரங்களில் புரியாமலே போகிறது.

பண்டிகை, விழாக்கால கொள்வனவில் வாங்கி குவிக்கப்படும் வெள்ளையானைகள் குறித்து ஏனோ யோசிக்க தோன்றுகிறது. அது குறித்து ஒரு விளக்கம் உண்டு. வெள்ளையானை விலையை விட அதை பராமரிக்கும் செலவினம் தான் அதிகம் என்பது ஐதீகம். வெள்ளையானை இருக்கா என்கிற அறிவு பூர்வமான கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை :) ஆனால், வெள்ளையானை என்பது குறித்து நிற்பது அநாவசிய செலவினம் என்பதே ஆகும்.

பொருளாதார வீழ்ச்சியும், பணவீக்கமும் பொருளாதார அடிமைகள், நுகர்வோர், அல்லது பொதுமக்கள் கொள்வனவில் எவ்வளவு பணம் செலவு செய்கிறார்களோ அதன் வழி மீள கட்டியெழுப்பப்படுமாம் செய்திகளில் சொல்கிறார்கள். பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் இன்று விடுமுறைக்கால கொள்வனவிற்காய் மக்கள் கூட்டம் அலைமோதியது என்று ஊடகங்கள் கல்லா கட்டுகிறது யாருக்காக என்று புரியாமலும் இல்லை. அரசியல், பொருளாதார அடிமையான எனது கூட்டு சிந்தனை, கூட்டு மனட்சாட்சி, கூட்டு பழக்கம் இவற்றை ஊக்குவிக்க ஊடகங்கள் கதை, வசனம் எழுதி வாசித்தால் அதற்குப் பெயர் செய்தி! அதை கேட்டால், பார்த்தால் பல சமயங்களில் சலிப்பே மிஞ்சுகிறது.

செய்தியிலிருந்து விடுதலையா என்றால், மறுபடியும் விளம்பரம். இவர்கள் தான் செய்திக்கு அனுசரணை என்று ஒரு பாரிய வியாபார நிறுவன விளம்பரம். இவர்களது விடுமுறை, விழாக்கால, பண்டிகைக்கால வியாபாரம் பெருக்கும் உத்திகள் விளம்பரங்கள் வழி பார்ப்பவர் மனங்களை கொள்ளையடிக்கும். போய் இதை வாங்கிக்கொள், இதை உனதாக்கிக்கொள் என்று மறைமுகமாய் தூண்டுவார்கள். ஒர் சிறப்பு விற்பனை நாளில் அது தள்ளுபடியில் விற்கப்படுகிறது, சேமித்துக்கொள் என்று உபகாரம் போல் காட்சிப்படுத்தப்படும். அந்த தள்ளுபடி விற்பனை ஒரேயொரு நாள் மட்டுமே என்கிற முத்தாய்ப்பு வேறு.

எனக்கு இவர்கள் விளம்பரப்படுத்தும் பொருள் தேவையா இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. அந்த வெள்ளையானையை நான் எனதாக்கிக் கொள்ள வேண்டும். பணம் இல்லையா! இருக்கவே இருக்கிறது கடன் அட்டை. வாழ்வது ஒரு முறை. அதை கடன் அட்டை வழியேனும் சுகித்து, உன்னதமாய் வாழ்ந்துவிட வேண்டும். அதை சில திருவாளர் நுகர்வோர்களே ஒத்துக்கொள்வார்கள் பகிரங்கமாக தொலைக்காட்சியில்.

வருடத்தில் ஒரேயொருமுறை வரும் கொண்டாட்டங்களை வேறு எப்படித்தான் கொண்டாடுவது என்று எனக்கு சொல்ல தெரியாது. அது என் நோக்கமும் அல்ல. இவை பொருளாதார, அரசியல் சதுரங்கத்தில் கடை நிலையில் இருக்கும் என்போன்றோரது தேவைகளும், சிந்தனைகளும் புதிதாய் எப்படி அர்த்தப்படுகிறது என்கிற எனது பிரதிபலிப்பே ஆகும். பண்டிகை, விழாக்கள், சம்பிரதாயங்கள், விழுமியங்களுக்கு பொருளுலகில் கொடுக்கப்படும் அல்லது கற்பிக்கப்படும்  புதிய அர்த்தங்களே அதிகம் அது குறித்து யோசிக்க வைக்கிறது.

காதலர் தினத்தில் பூவும், பண்டிகை காலத்தில் பரிசும் கொடுப்பது உறவுகளின், நட்பின் அளவை, எல்லையை நிர்ணயிக்கும், அதிகரிக்கும் என்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நேர்கோட்டில் நிகழ்வதும் இல்லை. பரிசுப்பொருட்கள் கொடுத்தும், வாங்கியும் யாரையும் கடனாளியாக்கவும், நான் கடனாளி ஆகவும் எனக்கு உடன்பாடு இல்லை, அவ்வளவே!

எனக்கு பிடித்தது, பண்டிகை, விழா என்றால் விடுமுறை. அது குடும்பங்கள், நட்பு இப்படி சந்தோசமாய் ஒன்று கூடி பேசி சிரித்தாலே மனசு சுகமாய் நிறைந்து போகும்!! கூடவே, சாப்பாடு! அதை மறக்க கூடாது, மறக்கவும் முடியாது :)

Image Courtesy: Google

22 கருத்துகள்:

Ramani சொன்னது…

பதிவின் கருவைப் போலவே
பேக் செய்ய்ப்பட்ட வெள்ளை யானையில் துவங்கி
உணவில் முடித்திருப்பது அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Rathi சொன்னது…

ரமணி, உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!

ஹேமா சொன்னது…

ரதி...நான் சிலநேரங்களில் நீங்களாயிருக்கிறிங்கள்.கன சந்தர்ப்பங்களில கண்டிருக்கிறன்.
ஆனா என்ன உங்களைப்போல அழகாச் சொல்ல வாறதில்ல !

அட...உண்மையாதானப்பா.அறிஞர் குழாம்,அப்பம்குரங்கு,புரிதல்,விருப்பு வெறுப்பு....பிறகு கடவுள்,மனுஷன்,
மலிவுகடை,கொண்டாட்டம்,அதுக்கு ஒரு போலிச்சிரிப்போடு பரிசு எல்லாமே நான் சொல்றதுதான்.
அதுக்கு எனக்குக் கிடைச்ச பட்டம் நான் சமூகத்தோட ஒட்டாத ஒரு விலங்காம் !

சாப்பாடும் ஒரு திணித்தல்போல.
இதுதான் எனக்கெண்டா நிறையப் பிடிக்கும் என்று எதுவுமேயில்லை.
ஆனால் எல்லாமே சுவைதான் அதனதன் குணத்திற்கேத்தமாதிரி !

Thekkikattan|தெகா சொன்னது…

//வெற்றியும் தோல்வியும் இயற்கையாய் அவை தம் இயல்புகளோடு இருக்க நான் மட்டும் அதற்கு சிரிப்பு, சந்தோசம், அழுகை, கோபம், குழப்பம், தெளிவு என்று வடிவங்கள் கொடுக்கிறேன்.//

எப்படியெல்லாம் பிரிச்சு பீராய்ஞ்சி வைச்சிருக்கீங்க... அதுக்கான காரணமா நீங்களே ...அத்தனையும் புறவாழ்வின் மீது எனக்கிருக்கும் மோகத்தின் வெளிப்பாடு... சொன்னது ரொம்ப எதர்த்தமான உண்மை. ஆனா, அப்படி புரிஞ்சு உள்வாங்கிக்கிறது ரொம்பக் கடினம்.

அந்த தெளிவு இல்லாததுனாலேதான் புதிது புதிதாய் ‘சிறப்பு நாட்கள்’ கார்ப்பரேட் ஆட்களால் ஊக்குவிக்கப்பட்டு இறுதியில் சாதாரணின் தலையில் பெரும் சுமையாய் வைத்து அழுத்தப்படுகிறது.

சுகமானதாய் இருக்க வேண்டிய விழாக்கள் இன்று பார்த்து மிரளும் வாக்கில் அமைத்துக் கொண்டாகி விட்டது. அப்படித்தானே?? :-)

Thekkikattan|தெகா சொன்னது…

கட்டுரை ரொம்ப நேர்த்தியா பல முடிச்சுகளை அவிழ்த்து காட்டியபடியே ஓடுகிறது.

வாசிக்கும் ஒரு சிலரேனும் சிந்தித்து இந்த காட்டாற்று விளம்பர வெள்ளத்திலிருந்து கரையொதிங்கி வேடிக்கை பார்க்க கற்றுக் கொண்டாலே இந்த கட்டுரைக்கு கிடைத்த வெற்றியாகும்.

keep it rocking!

siva சொன்னது…

அதே போல் கடவுளையும் தேடுவதில்லை. இருப்பதை தேடலாம். இல்லாததை எங்கு போய் தேட!/

அது தாங்க கடவுள் அன்பே கடவுள் ....அன்பு கண்ணுக்கு தெரிவது இல்லை
உணர்வதுதான் ...தேட வேண்டாம் நீங்கதான் கடவுள்
நீங்கள் அனபனவர்..:)

siva சொன்னது…

வழி நெடுக
தேடலும் பதிலும்
நிதானமாய்
உள்வாங்கி
வெளிப்படுத்திய
விடம் அருமை
வாழ்க வளமுடன்

Avargal Unmaigal சொன்னது…

உங்கள் பதிவின் கருத்தை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன்

.////எனக்கு பிடித்தது, பண்டிகை, விழா என்றால் விடுமுறை. அது குடும்பங்கள், நட்பு இப்படி சந்தோசமாய் ஒன்று கூடி பேசி சிரித்தாலே மனசு சுகமாய் நிறைந்து போகும்!! கூடவே, சாப்பாடு! அதை மறக்க கூடாது, மறக்கவும் முடியாது :)///
என்னைப்போல சிந்திக்கீறிர்கள் ......என்னைப்போல ஒரு பெண்ணும் சிந்திக்கிறாள் எனபதை கண்டு எனக்கு சந்தோஷம்

தவறு சொன்னது…

அட...ரதி...நாங்கௌல்லாம் இத்தகைய அனாவசியங்களிலிருந்து தப்பமுடியவில்லை. அவ்வாறு செய்தால் எச்சில் கையால் காக்கை விரட்டமாட்டான் என்ற கௌரவபட்டம்...ம்ம்ம்...விழாக்களும் பண்டிகைகளும் வாழ்வில் இரண்டற கலந்த ஒன்று.

அதனால் சுமையோ...சுமை ரதி.

வேர்கள் சொன்னது…

Iyoooo....
i want to say something but do not know to write in tamil here please help me

Rathi சொன்னது…

ஹேமா, :) உங்களைப்போல எனக்கும் கவிதையில் சொல்ல வர்றதில்ல. நான் நீட்டி, முழக்கி எழுதிறதை நீங்க கவிதைக்குள் கொண்டு வரும் திறமையே தனிதான்.

சமூகத்தோடு ஒட்டாத விலங்கு என்று மற்றவர்கள் சொல்வதால் நாங்கள் என்ன குறையவோ போறம் ஹேமா. நான் நல்லா சொல்லுங்கோ எண்டிட்டு போவன். நான் ஒட்டிறதாலயோ அல்லது வெட்டிக்கொண்டு போறதாலயோ யாராச்சும் நஷ்டப்பட்டா தான் யோசிக்க வேணும்.

சாப்பாடும் அப்படித்தான். அந்த நேர வசதிக்கு ஏற்றாற் போல. பிறகு நேரம் இருக்கும் போது எங்கட சாப்பாடு உறைப்பா... :))

Rathi சொன்னது…

தெக்கி, வாழ்க்கையை புரிந்து உள்வாங்கி இலகுவாய் ஆக்கவே இயன்றவரை முயல்கிறேன் :)

ம்ம்ம்... பண்டிகை, விழா என்றால் சந்தோசத்தை விட அதுக்குண்டான அக்கப்போர் தான் ஏதோ இயல்பில்லாததாய் தோன்றும்.

காட்டாற்று விளம்பர வெள்ளத்திலிருந்து கரையொதுங்கி வேடிக்கை பார்க்க கற்றுக் கொண்டாலே.... வேடிக்கை பார்க்க கற்றுக்கொண்டால் அதிலுள்ள ஏமாற்றுத்தனமும்,போலித்தன்மையும்புரிய ஆரம்பிக்கும். நான் வேடிக்கை பார்த்து தான் இப்படி எழுதற அளவுக்கு வந்து நிக்குது :)

நன்றி தெக்கி :)

Rathi சொன்னது…

சிவா, என் பதிவு உங்களை ஒரு சிறந்த கவிஞர் ஆக்கியது சந்தோசம் :)

Rathi சொன்னது…

அவர்கள் உண்மைகள், காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்போதும் திசை மாறாமல் இருந்து காரண காரிய தொடர்போடு சிந்தனையை தக்கவைத்துக்கொள்ள முயல்வோம்.

Rathi சொன்னது…

தவறு,

//எச்சில் கையால் காக்கை விரட்டமாட்டான்...//

கெளரவப்பட்டமா :) அதையும் சில சமயங்களில் சிரிப்போடு ஏற்றுக்கொள்ள நான் பழகியிருக்கிறேன் ;)

Rathi சொன்னது…

வேர்கள், ஏதோ சொல்ல ஆசைப்பட்டா இதை முயற்சி செய்து பாருங்கள். எழுதிவிட்டு copy, paste தான் செய்யவேண்டும். முயன்று பாருங்கள்.

http://google.com/transliterate/indic/tamil

வேர்கள் சொன்னது…

ரதி
உங்களை போன்றுதுதான் எனது மனநிலையும்
இதற்கு காரணம் முள்ளி வாய்க்காலில் நமது இனத்திற்கு(போராட்டத்தின் அத்தனை நியாயங்களும் புரிந்தும் ) ஒட்டு மொத்த உலகசமுகமும் கண்ணை இறுக மூடிக்கொண்டு இழைத்த கொடூரந்தான்
நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன், 2008 மத்தியில் இருந்துதான் வலைதலகங்களை பார்வை இடுகிறேன்
இதற்குமுன் இங்கு நான் ரசித்த பல விடயங்கள் , மனிதர்களை தற்போது பொய்யின் பிம்பங்களாக பார்கிறேன்
உ.ம் வைரமுத்து மற்றும் பலர்
உங்களை நீங்கள் வினவு இல் கட்டுரை எழுதிய நாள் முதலாக வாசித்து வருகிறேன் என்றாலும் இந்த கட்டுரைக்கு பின்னுட்டமிடவேண்டுமென்று வலைத்தளம் ஆரம்பித்தேன்
நன்றி

துஷ்யந்தன் சொன்னது…

ரதி அக்கா.. எப்படி இருக்கீங்கள்??? நலமாக இருகிறீர்களா??...

அக்கா உங்கள் எழுத்துக்கு எப்போதும் நான் அடிமை... ஒவ்வொரு பதிவிலும் உங்கள் மேல் ஒரு மரியாதை ஆச்சரியம் வளர்ந்துகொண்டே போகிறது...
இவ்ளோ நேர்த்தியாக அழகாக எழுத உங்களால் மட்டுமே முடியும்.... வாழ்த்துக்கள் அக்கா.

துஷ்யந்தன் சொன்னது…

<<<பரிசுப்பொருட்கள் கொடுத்தும், வாங்கியும் யாரையும் கடனாளியாக்கவும், நான் கடனாளி ஆகவும் எனக்கு உடன்பாடு இல்லை,<<

சரியாக சொன்னீங்க அக்கா... உங்கள் கருத்தில் நியாயம் இருக்கு.... ஹும்... நீங்க ரெம்ப வித்தியாசமான பெண் அக்கா :)

துஷ்யந்தன் சொன்னது…

<<ஊடகங்கள் கதை, வசனம் எழுதி வாசித்தால் அதற்குப் பெயர் செய்தி! அதை கேட்டால், பார்த்தால் பல சமயங்களில் சலிப்பே மிஞ்சுகிறது.<<<

சன்&ஜெயா வகையறாக்களை சொல்லுறீங்களோ???

Rathi சொன்னது…

வேர்கள், பொய்யின் விம்பங்கள் குறித்த உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால், வைரமுத்துவை விட பெரியவர்கள் எல்லாம் பொய்யின் பிம்பங்களாய் ஆகியாச்சு ஈழவிடயத்தில்.

வலைத்தளம் அமைத்ததற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். நான் படிக்க காத்திருக்கிறேன் உங்க எழுத்தை, எண்ணங்களை, தொடருங்கள்.

நன்றி.

Rathi சொன்னது…

துஷ்யந்தன், நான் நல்லா இருக்கிறன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க!

எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன். அது சில சமயங்களில் வழமையை விட சிறப்பாய் வந்திடும் :) அவ்வளவே.

//சன்&ஜெயா வகையறாக்களை சொல்லுறீங்களோ??? //

அப்பிடியெல்லாம் சுருக்கி யோசிக்கவே கூடாது :) பொதுவா பெரும்பாலான,கார்பரேட் ஊடகங்களும் அப்படித்தான். இவர்களின் நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்குபவர்களின் வியாபாரம் பெருக்கும் யுத்தியை செய்தியாய் சொல்வார்கள்.

ஆனால், சன், ஜெயா போன்றவை என் வரையில் தற்புகழ் பாடுவது முழு நேர தொழில் போல.