டிசம்பர் 29, 2011

தமிழன் என்ற ”தேசிய” இனமும் சுய நிர்ணயமும்.


தமிழன் யார் அல்லது யாரெல்லாம் தமிழர்கள் என்று அப்பப்போ கருத்துக்களங்களில், விவாதப்பொதுவெளிகளில் கேள்விகளும் கிண்டல்களும் வெளிப்படுகின்றன இப்போதெல்லாம். தமிழன் யாரென்ற கேள்விக்கு விஞ்ஞான, சமூக அரசியல் அடிப்படையில் பதில் சொல்ல வேண்டிய காலமும் கடந்து பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாயிற்று.

மனித உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் எல்லா மக்களையும் போல் மனிதகுரங்கிலிருந்து வந்தவன் தான் தமிழனும். சமூக அரசியல் களங்களில் தமிழன் குறித்த கேள்விகளுக்கும், கிண்டல்களுக்கும் பதில், தமிழர் என்பது ஒரு தேசிய இனம். ஒரு தேசம். இதை ஏற்பதும் மறுப்பதும் உலகமயமாக்கலில் அவரவர் அரசியல் சார்பு நிலை ஏற்பாடுகளைப் பொறுத்தது. ஆனால், தமிழன் ஓர் தேசிய இனம். இது தான் சத்தியமான, நிச்சயமான உண்மை.

அப்படியே இதிலிருந்து அடுத்த கேள்வி வரும் சிலருக்கு. அப்படியென்றால், தேசிய இனம் என்றால் என்ன என்று! தேசிய இனம் என்பது ஒரு இனக்குழு மூலத்திலிருந்து தேசியம் என்பதன் மூலக்கூறுகளான ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி, பொதுமொழி,  பொதுப்பண்பாடு இவற்றின் அடிப்படையில் நிலையாய் வாழும் ஒர் சமூகம். தமிழ் நாட்டின் தமிழ் தேசக் குடியரசு விவாதத்தில் பெ.மணியரசன் இனம் என்பது மரபு இனம் (Race), தேசிய இனம் (Nationality) என்று விளக்குகிறார்.

மரபு இனம் என்பது பல்வேறு தேசிய இனங்களில் கலக்கும் வாய்ப்பும் உண்டு. அதற்கு உதாரணம், ஆரியர் என்கிற மரபினம் ஐரோப்பிய, இந்திய தேசிய இனங்களில் கலத்துள்ளமை என்கிறார். அதே போல் இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்துள்ளது. (தமிழ்த்தேச குடியரசு-ஒரு விவாதம், பெ. மணியரசன்).

பெ. மணியரசன் ஆரியர்கள் பற்றி கருத்து சொன்னார் என்றால் அது தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளாதோரால் மறுத்துரைக்கப்படலாம். இதையே தமிழ் தேசியத்துக்கும் பெ. மணியரசனுக்கும் எந்த சம்பந்தமுமில்லாத பிரான்ஸ்சிஸ் புக்குயாமா தன் The Origins of Political Order என்கிற புத்தகத்தில் இந்தோ-ஆரியர் வருகையோடு இந்திய அரசியல் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார். 

அதில் அவர் குறிப்பி்டுவது இந்தோ-ஆரியர்கள் ரஷ்யாவின் தெற்குப்பகுதியிலுள்ள கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கு (Black and Caspian Seas) இடைப்பட்ட ஒரு பகுதியிலிருந்து இந்தியா வந்தவர்கள் என்பது தான். அந்தப்பிரதேசத்திலிருந்து புறப்பட்டவர்கள் மற்றும் சிலர் தான் ரோமானியர்கள், ஜேர்மனியர்கள், மற்றும் ஐரோப்பாவிலுள்ள சிலரது முன்னோடிகள் ஆக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். அவ்வாறு புறப்பட்டவர்கள் ஒரு பகுதியினர் தான் இந்தியாவுக்குள்ளும் வந்தார்கள் என்கிறார்.

தமிழர் என்பது ஒர் மரபினம். அது தமிழ்த் தேசிய இனமும் ஆகும். அது ஈழத்தமிழர்கள் என்றாலும், தமிழக தமிழர்கள் என்றாலும் பொருந்தும்.

“..தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள்...” (2002 கார்த்திகை 27, மாவீரர் நாள் உரை-தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன்).

தேசம், தேசியம் என்கிற வரையறைகள் ரஷயப்புரட்சிக்கு தலமை தாங்கிய ஜே.வி. ஸ்டாலினின் கூற்றுக்கு இணங்கவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட அவரது தேசம், தேசியம் குறித்த வரையறைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

The most accurate definition of a "nation", comes from Joseph Stalin. In his Marxism and the National Question, New York, 1942. He said:

"A nation is a historically evolved, stable community of language, territory, economic life, and psychological make-up manifested in a community of a culture....."

-Diaspora referenda on Tamil Eelam in Sri Lanka - Brian Seniwiratne-

இது லெனினின் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த விளக்கங்கள்.

இது இப்படி இருக்க தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்பது ஈழப்போராட்டம் நடத்தியவர்கள் கற்றுக்கொடுத்தது என்கிற அபத்தத்தையும் சிலர் சளைக்காமல் சொல்லித்திரிவது அதன் உச்சம். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் கண்டுபிடித்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி தான் தமிழ் நாட்டிலும் தமிழ் தேசியம் பேசுகிறார்கள் என்பது அறியாமை என்றே சொல்லத்தோன்றுகிறது.

தமிழீழ தமிழ் தேசியம் வேறு. தமிழ் நாட்டு தமிழ் தேசியம் வேறு. இரண்டும் ஒன்றல்ல. அது ஒன்றாகவும் முடியாது.

திராவிட கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசப்பட்ட காலங்களின் பின்னர் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியம் குறித்து பேசத்துவங்கினார்கள். அதற்கு வடிவமும் கொடுத்தார்கள். ஈழத்தின் தமிழ் தேசியமும் கூட தந்தை செல்வா காலத்தில் மக்கள் ஆணையாய் வழங்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் தானம்  தான் அதன் அடிப்படை என்பதும் வரலாறு.

விடுதலைக்குரிய முயற்சி என்பது மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டே இருக்கும் ஒரு சுழற்சி முறைப் போராட்டம், விடுதலை கிடைக்கும் வரை! அறவழிப்போராட்டம், ஆயுதப்போராட்டம், சமாதானம் பேச்சுவார்த்தை என்று பல கால படி நிலை வளர்ச்சிக்குப் பிறகு இன்று அது ஈழத்தில் மறுபடியும் மக்கள் போராட்ட வடிவமாய் மக்களிடமே விடப்பட்டிருக்கிறது. ஐ. நா. வின் சாசனங்கள், பிரகடனங்களுக்கு அமைவாகவே தமிழர்கள் என்கிற தேசிய இனத்தின் விடுதலைக்கான சுய நிர்ணய உரிமைப்போராட்டமும் ஈழத்தில் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய அரசியல் சூழலில் அமெரிக்க-இந்திய கூட்டு சதியால் சுய நிர்ணய உரிமைக்கான ஈழப்போராட்டம் பயங்கரவாதம் என்று நாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது. ஐ. நா. விதிகளின் படி ஒரு தேசிய இனம் தன் சுய நிர்ணய உரிமை கோருவது தவறில்லை் என்னும் போது, ஏகாதிபத்தியங்களும், அதற்கு அடிவருடுபவர்களும் இயங்கும் கிளப் (Club) என்று ஐ. நா. மாறிப்போன அவமானம் அதுக்கே கிடையாது. இதில் ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை குறித்து சரியாய் நடக்க ஏது அதுக்கு சுதந்திரம்.

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஒன்றுமில்லாதாக்கும் ஒர் முயற்சியை இந்தியா மிக லாவகமாக 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு செய்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் “சிறுபான்மையினர்” என்கிற ஒரு குயுக்தியான கருத்துப்பரம்பல் செய்யப்படுகிறது இந்திய மேலாதிக்க அரசியல்வாதிகளால். அதற்கு அண்மையில் ஈழத்தில் சில கல்விமான்கள் மற்றும் குடிமக்கள் சார்ந்த(சிவில்) சிலரால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஈழத்தமிழர்களை ‘சிறுபான்மையினர்’ என்று சொல்வோருக்கும் ஒரு நல்லதோர் பதில் வழங்கவும் பட்டிருக்கிறது.

முதலில், ஈழத்தமிழர்கள் சிறுபான்மையினர் அல்ல. ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம். சிறுபான்மையினர் என்னும் போது பெரும்பான்மை சமூகத்துக்கு இணையான மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த சலுகைகள் தான் தமிழர்கள் கேட்கிறார்கள் என்று ஆகிப்போகும். இதன் வழி சுய நிர்ணய உரிமை/சுயாட்சி தந்திரமாக மறுக்கப்படும்.

ஈழத்தமிழர்கள் சலுகைகள் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது தங்களைத்தாங்களே ஆளும் சுய நிர்ணய ஆட்சி. சட்டத்தின் ஆட்சியும் (Rule of Law)  நல்லாட்சியும் (Good Governance) மதிக்கப்படும் ஆட்சியிலேயே அதெல்லாம் சாத்தியம். இலங்கையில் அது சாத்தியமில்லை என்று புரிய வைத்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களின் உரிமைப்பிரச்சனைகள் வெறுமனே சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதனூடாக தீர்க்க முடியாதவை என்று வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள் ( தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம், 13 டிசம்பர், 2011). ஆனாலும், வழக்கம் போல ஈழத்தமிழர் சிறுபான்மையினர் என்று இந்தியா தன் உழுத்துப்போன பல்லவியையே பாடும்.

வரலாற்று ரீதியாகவும் இன்று இலங்கை என்று அழைக்கப்படும் நாடு மூன்று ராச்சியங்களை கொண்டிருந்தது. பிரித்தானிய காலனியாதிக்க காலத்தில் தங்கள் நிர்வாக செளகர்யங்களுக்காக அது குறித்து ஆராய ஒரு ரோயல் கமிஷனை  (Colebrooke-Camerom Commision) 1829 ம் ஆண்டு அனுப்பியது. அந்த கமிஷன் (Colebrooke-Camerom Commision) அறிவுரையின் படி 1833 ம் ஆண்டு அந்த தமிழ், கண்டி, மற்றும் கோட்டை ராச்சியங்கள் ஒன்றாய் இணைக்கப்பட்டது. மூன்று ராச்சியங்களும் கலைக்கப்பட்டு அதன் ஆட்சி அதிகாரமும் கொழும்பில் குவிக்கப்பட வேண்டும் என்பதை நிறைவேற்றினார்கள். அதை கலைத்துப்போடுங்கள். எங்கள் ஆட்சியை திருப்பி தாருங்கள். எங்கள் உரிமைகளை ஊர்ஜிதம் செய்யும் சுய நிர்ணய உரிமையை மறுக்காதீர்கள் என்றால் நாங்கள் சிறுபான்மையினர் என்று இந்தியாவும் சேர்ந்து பித்தலாட்டம் செய்கிறது.

இப்படியாக எங்கள்  நிலம், மொழி, பண்பாட்டு பொருளாதார வரலாறும் அதன்வழி நாங்கள் கேட்கும் தமிழ் தேசியம், சுய நிர்ணயம் என்பன அதற்குரிய அங்கீகாரம் தான் மிச்சம் என்கிற ஒரு நிலையில் இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டு தமிழ் தேசியம் குறித்து பேசும் போது தான் புரிகிறது அது இன்னும் பல குழப்ப நிலைகளை கொண்டதாகவே இருக்கிறது என்பது.

முதலில் தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தில் தமிழர்கள் என்றால் யாரென்பது பெரும் குழப்பமாய் தெரிகிறது. தமிழகத்தில் தமிழ் மொழியை பேசும் வேற்று மாநிலத்தோரும் வாழ்கிறார்கள். இவர்கள் மொழிவாரி சிறுபான்மையினர் (கன்னடர்கள், மலையாளிகள்) என்று தமிழ் தேசியம் பேசும் மார்கிசியர் தியாகு குறிப்பிடுகிறார். இது ஒன்றும் புதிய உலக வழக்கு இல்லை என்பதையும் தெளிவாக்குகிறார்.

அதைப்போலவே பிராமணியத்தை கடைப்பிடிப்பவர்களும் தமிழர் பண்பாட்டில் தமிழர் என்று கொள்ளப்படுவார்களா என்றால், அதற்குரிய தியாகுவின் பதில், தமிழ் பண்பாட்டில் பார்ப்பனியத்திற்கும் இடமில்ல; மானுட சமத்துவத்தை மறுக்கும் கடவுள் கொள்கைகளுக்கும் இடமில்லை என்பது தான்.  நன்றாக கவனியுங்கள் அவர் தமிழ் பண்பாடு குறித்து தான் பேசுகிறார். (தமிழ் தேசியம் குறித்து மார்க்சீயர் தியாகுவுடன் யமுனா ராஜேந்திரன் மற்றும் விசுவநாதன் உரையாடல் மே 2003).

பெ. மணியரசனும் (த. தே.பொ. க) பார்ப்பனர்கள் தமிழ் மொழியை பேசினாலும் அவர்கள் சம்ஸ்கிருத மொழி உயர்ந்தது என்றும், ஆரியத்தின் பெருமையில் மார் தட்டுபவர்கள் என்பதாயும் குறிப்பிடுகிறார்.

என்னுடைய புரிதல் என்னவென்றால் இங்கே கடவுளின் பெயரால் வர்ணாச்சிரமம், ஜாதி என்று உலகின் வேறெந்த மதத்திலும் இல்லாத ஏற்றத்தாழ்வுகளை பிராமணியம் கடைப்பிடிப்பவர்கள் பேசிக்கொண்டிருந்தால் தமிழ் தேசியத்தில் அது போன்ற மனப்போக்குடையவர்கள் உள்வாங்கப்படுவார்களா என்பதே!

ஆனாலும், தமிழ் நாட்டு தமிழ் தேசியம் பேசுபவர்கள் யாரையும் விலக்கி வைத்தோ அல்லது உள்வாங்க மறுத்தோ தமிழ் தேசியத்தை பேசவோ, கட்டியமைக்கவோ இல்லை என்பதும் தெளிவாய் தெரிகிறது. தம்மை தமிழராய், தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காய் குரல் கொடுப்பவர்களை விலக்கி வைத்தால் அது சரியான தேசியத்திற்கான பாதையாயும் இருக்காது. எந்த மொழி பேசுவாராகிலும், பார்ப்பனிய வர்ணாச்சிரம பேதங்களை புறக்கணித்து தமிழ் உணர்வோடு செயற்படுபவர்கள் அனைவரும் தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தில் உள்வாங்கப்படுவார்கள் என்பதும் புரிகிறது.

தமிழர்கள் யாரென்று அல்லது தமிழ் தேசியம் என்பதற்குள் உள்வாங்கப்படுவர்கள் குறித்து முடிவுக்கு வந்தாலும், பிறகு தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஒரு சிலர் குழப்பமாகவே இருக்கிறார்கள். உருவான தமிழ் தேசியமும் உருவாகாத இந்திய தேசியமும் என்று பேசிக்கொண்டே இந்திய இறையாண்மை குறித்து அக்கறைப்படுபவர்களும் உண்டு. இந்திய தேசியம், தமிழ் தேசியம் இரண்டும் குறித்து எப்படி ஒரே நேரத்தில் அக்கறைப்பட முடியும் என்று என் பொதுப்புத்திக்கு ஓர் கேள்வி தோன்றுகிறது. தமிழ் தேசியம் குறித்து எத்தனை பேர் பேசினாலும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையோடு செயற்படவில்லை என்பதும் தெரிகிறது.

இது எல்லாத்தையும் விட தமிழர்கள் தேசிய இனமாய் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டவர்களா! இந்திய மைய அரசியலில் தமிழ் தேசிய மொழி இல்லை. தமிழருக்குரிய அங்கீகாரமும் இல்லை. அவர்கள் தம் மொழிக்கும் அங்கீகாரம் இல்லை. இப்படி இருந்தாலும் தமிழ் தேசியம் தன்னால் வலுப்பெறுமோ!

தமிழ் தேசியம் பேசினாலோ அல்லது அதுக்காய் போராடினால் ஈழம் போல் அழிவை சந்திக்க வேண்டும் என்கிற கருத்தையும் படித்திருக்கிறேன். அது ஈழப்போராட்டம் போல் தான் இருக்க வேண்டுமா! ஏன் கனடா போன்ற நாட்டில்  நடந்தது போல் ஒரு வாக்கெடுப்பு (Referendum) இந்தியா என்கிற ஜன நாயக தேசத்தில் சாத்தியம் வராதா! ஈழப்பிரச்சனையின் அடிப்படையும், அதன் போராட்ட களங்களும் வேறு. தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தின் களங்கள் வேறு. அதற்கு ஏற்றாற்போல் வழிமுறைகள் சாத்தியமில்லையா! இதுவரை எந்தவொரு தமிழ் நாட்டு தமிழ் தேசியம் பேசுபவர்களும் அதை அடையும் வழியாய் ஆயுதப்போராட்டத்தையோ அல்லது நாடாளுமன்ற அரசியல் வழிமுறையையோ பேசி நான் படித்ததில்லை.

தமிழ் தேசிய புரட்சி மக்கள் எழுச்சியாகவே நடக்கும் என்று தான் படித்திருக்கிறேன். ஒரு முல்லை-பெரியாறு போதும் தமிழ் தேசியம் பிறக்குமா, பிறக்காதா என்பதை நாடிபிடித்துப்பார்க்க!

ஈழத்தின் தமிழ் தேசியத்திற்கு முரணான கொள்கைகளுடன் இஸ்லாம் என்கிற அடையாளத்துடன் இலங்கை முஸ்லிம்களும்; தமிழ் நாட்டில் பிராமணியம் கடைப்பிடிக்கும் பிராமணர்களும்/பார்பனியர்கள் தமிழ் தேசியத்துடன் முரண்படுகிறார்கள். இது குறித்து விரிவாய் இன்னோர் கட்டுரையே எழுதலாம். இலங்கை முஸ்லிம்கள் பற்றிய என் பதிவு இது.

ஒரு தேசிய இனத்தின் உரிமைகளும், அரசியல் அபிலாஷைகளும் காலவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு சிறுபான்மையாய் எம்மத்தியில் வாழ்பவர்கள் வழி நீர்த்துப்போகவேண்டுமா! எம் நிலம், மொழி, பண்பாடு, பொருளியல் வாழ்வு என்று அத்தனையும் பறிகொடுத்து இனவழிப்புக்கு ஆளான ஒரு இனம் பிரிந்து போய் தனியே சுயாட்சி மூலம் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்துவது உலகவிதிகளின் படியே தவறே இல்லை என்னும் போது, அது குறித்து பேசவே நாம் ஏன் தயங்க வேண்டும். எந்தவொரு மக்கள் சமூகத்தின் உரிமைகளை மறுப்பதோ, அல்லது பாசிசமோ அல்ல தமிழ் தேசியம் என்பது. தமிழ் தேசியத்தின் வழி நாம் கேட்பதும், உறுதிபடுத்துவதும் எம் சுய நிர்ணய உரிமையே என்பது என் தெளிவான புரிதல்.

Image Courtesy: Google

டிசம்பர் 19, 2011

மன்மதன் அம்பும் அறிவு மயக்கமும்!!

மன்மதன் அம்பு திரைப்படம் நேற்றுத்தான் பார்த்தேன் முதல் தடவையாக!

வழக்கமாகவே  தற்காலத்தில் பாலாவின் படம் என்றால் ஆண் அதிக வன்முறை காட்டுவான்; கமல், மணிரத்னம் படம் என்றாலே சர்ச்சை தான் என்பது தமிழ்த்திரைப்படத்துறை மற்றும் ரசிகர்களின் கலாச்சாரம். அது போன்ற படங்களின் கருவையும், காட்சிகளையும் அதன் அரசியல் தாண்டி யோசிக்கும் சமயோசிதம் எனக்கும் இருக்கா என்று அப்பப்போ இப்படி ஏதாவது படம் பார்க்கும் போது தான் புலப்படும்.

சமகால அரசியல், வாழ்வியல் பிரச்சனைகள் குறித்த கலைகளின் வெளிப்பாட்டில் தெளிவுகள் புலப்படுத்தப்படுவதில்லை என்று சொல்வார்கள். அது காண்பவரின் புரிதலுக்கும், முடிவுக்கும் விடப்படும் விசயம். அதே சமயம் திரைப்படத்தில் கருவாக அல்லது கிளைக்கதையாய் சொல்லப்படும் பிரச்சனை குறித்த ஒரு புரிதலையும், தெளிதலையும் பார்வையாளனிடம் அல்லது ரசிகசிகாமணியிடம் உருவாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கமும் அந்த படைப்பாளியிடம் இருக்கா என்று மன்மதன் அம்பு போன்ற திரைப்படங்களை உருவாக்குபவர்கள் என் போன்றவர்களை யோசிக்க வைக்கிறார்கள்.

காணும் காட்சிகள் இயல்பாய் இன்றி செயற்கையாய் கட்டமைக்கபப்பட்டு கருத்துகள் திணிக்கப்படும் போது கொஞ்சம் விழிப்போடில்லாதிருந்தால் அந்த கருத்துக்களின் வழி நானும் வனையப்படுவேனோ என்கிற பயமும் தொற்றிக்கொள்கிறது. கருத்துகளின் கட்டமைப்புகளில் என் சிந்தனைகள் சிக்க வைக்கப்படும்போது என் சுயம் தொலைந்து போக நேரலாம்.

மன்மதன் அம்பு என்கிற ஒரு பொழுது போக்கு அம்சத்திற்கு இவ்வளவு வியாக்கியானம் தேவையா என்றும் தோன்றலாம். எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் தோன்றியது. ஒரு திரைப்படத்தின் கருவோ, கதையோ வெறுமனே பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே என்றால் அது குறித்து எனக்கு சிந்திக்கவோ, விமர்சிக்கவோ வேண்டிய தேவை இருந்திருக்காது.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமகாலத்தில் நான் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அல்லது என்னைப்பாதிக்கிற பிரச்சனையின் பிம்பம் ஒன்று உருவகிக்கப்படும்போது, அது குறித்து என் பிரதிபலிப்புகளை எழுதாமல் இருக்கமுடியவில்லை. பானைச்சோறு, பதம் என்கிற பழமொழி போன்ற ஒரு தனிப்பட்ட படைப்பாளியின் Stereo Type சிந்தனைகள் வழி எம்மைப்பற்றிய கற்பிதங்களை பொதுக்கருத்தாய் முன்வைக்கப்படுகிறதா என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

M.I.A. என்கிற ஈழத்துப்பெண்ணான மாயா அருட்பிரகாசம் மூன்றாம் உலக ஜன நாயகம் பற்றியோ, அமெரிக்கா அரசியல் கொள்கைகள் பற்றியோ கருத்துகளை இசை என்கிற ஊடகத்தின் வழி சொல்லும் போது மறுக்க முடிவதில்லை. காரணம், அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதன் பாதிப்புகளை எல்லோரும் ஏதோவொரு வகையில் உணர்ந்திருக்கிறோம். மன்மதன் அம்பு திரைப்படத்தில் கமல் என்கிற ஒரு படைப்பாளி ஈழத்தமிழனை, அவருக்கு தெரிந்த உலகவரலாற்றின் அடிப்படையில், அவரது பாசையில் தீவிரவாதம் பற்றி பாடம் எடுப்பதை கொஞ்சம் தெளிவாய் சொன்னால் தான் என்ன என்று யோசித்தேன். எதையுமே பூடகமாய் சொல்லி, பொழுது போக்குபவர்கள் பொழுதை போக்குங்கள், மற்றவர்கள் பதிவெழுதி அடித்துக்கொள்ளுங்கள் என்று திரைக்கதை, வசனம் எழுதிய கமல் ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்னவோ.

சரி, மன்மதன் அம்பு திரைப்படத்தில் ஈழத்தமிழன் குறித்த இரண்டு காட்சிகளை பற்றி நான் பார்த்ததை சொல்கிறேன். ஒரு காட்சியில் ஈழத்தமிழர்களின் பிம்பமாய் உருவகிக்கப்பட்டவர் தமிழ்த்திரை நடிகையை பார்த்து சொல்லுவார், நான் உங்கள் கால் செருப்பாயும் நடிக்க தயார் என்று. உடனே நடிகையின் தோழி கேப்பாராம் எது வலது கால் செருப்பா அல்லது இடது கால் செருப்பா என்று. திரைப்படத்தின் உச்சக்காட்சியில் அதே நடிகை ஈழத்தமிழனை தன் கால் செருப்பை கழற்றி காட்டி அதாலேயே அடிப்பேன் என்று சொல்லுகிறார்.

ஈழத்தமிழன் சிங்கள ராணுவத்திடம், பேரினவாதிகளிடம் அவன் சொந்த மண்ணிலேயே படாத இன்னலை, அவமானத்தினை விட இது பெரிசா தெரியவில்லை. சிங்கள ராணுவத்தையும் ஒரு தமிழ் சினிமா நடிகையை அல்லது திரைப்படத்துறையை அதற்கு ஒப்பிடவும் நான் முனையவில்லை. என்னை யோசிக்க வைத்தது இது தான். கமல் என்கிற அந்த படைப்பாளி ஈழத்தமிழர்களின், குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள், சினிமா மோகம் பற்றி கிண்டலடிக்கிறாரா அல்லது தமிழ் சினிமா உலகம் உங்களை இவ்வளவு தான் மதித்து வைத்திருக்கிறது என்று சொல்கிறாரா!!!

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர் பெரியதோர் பலம் என்று வழமையான பல்லவியை நான் பாடப்போவதில்லை. புலம்பெயர் தமிழன் தமிழ் சினிமாவை உலகம் முழுக்க பரப்பியவன் என்கிற உண்மை மறுக்க முடியாதது. அந்த யானைப்பலம் ஈழத்தமிழனே புரிந்தும், புரியாதது போல இருக்கிறான்.

தமிழ் தெரு பொறுக்குகிறது என்று மன்மதன் அம்பு படைப்பாளி கமல் ஒரு வசனம் சொல்லுவார் அந்த படத்தில். தமிழ் தெருப்பொறுக்குதோ இல்லையோ, இந்த தமிழ் சினிமாக்காரர்கள் வெளி நாடுகளில் வீதிகளில் நாயகனும் நாயகியும் குரூப் டான்ஸ் ஆட இந்த நாட்டு மக்கள் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்ப்பதும் என் போன்றவர்களுக்கும் தர்ம சங்கடமாய்த்தான் இருக்கு. இதையெல்லாம் நாங்க என்ன புலம்பிக்கொண்டா இருக்கிறோம்.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு என் நண்பரிடம் பேசும் போது அவர் சொன்னார். கமல் என்கிற படைப்பாளி ஈழத்தமிழர்கள் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை ஏன் தமிழ் சினிமாக்காரர்களிடம் கொட்டுகிறீர்கள் என்று மறைமுகமாக சொல்கிறாராம். சரி, அந்த படைப்பாளியின் உயரிய நோக்கம் ஈழத்தமிழன் குறித்த அக்கறை என்றால் அதை நேரடியாகவே சொல்லலாமே. ஏன் தலையை சுத்தி மூக்கை தொடவேண்டும்.

ஒரு நல்ல படைப்பாளியாய், வசனகர்த்தாவாய் மாதவன், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிளிர்பவர், ஈழத்தமிழன் குறித்த காட்சிகளின் அமைப்புகளில், வசனங்களில் தடம் புரள்வது ஏனோ!!! மன்மதன் அம்பில் ஈழத்தமிழன் வரும் காட்சியில் ஒரு தடவைக்கு மேல் அவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் காலணியோடு கற்பிதங்கள் கொடுக்கப்படுவதை ஓர் ஈழத்தமிழன் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்!!! சரி, நேரடியாய் சொல்லப்படாத அந்த அர்த்தபுஷ்டியான காட்சிகளுக்கு என் நண்பருக்கும், படைப்பாளி கமலுக்கும் மட்டுமே பதில் தெரியும். நான் சாதாரண பெண். எனக்கு இந்த பூடகமாக சொல்லப்படும் கலை நுணுக்க கருத்து திரிபு நயங்களும் திணிப்புகளும் புரியவில்லை என்றே நினைத்துக்கொள்கிறேன்.

காலத்தின் தேய்வு நிலை கோட்பாட்டின் படி, உண்மை எப்பொழுதும் உறங்கியே போய் விடுவதில்லை. அப்படியாக, அதி அரசியல் உள் நோக்கங்களை கொண்ட பிரச்சார விநியோகிப்புகளும் அந்த நேரத்தில் பரபரப்பாக விற்கப்பட்டு கொள்முதல் பண்ணப்பட்டிருந்தாலும், காலம் இறுதியில் உண்மையை விளக்கி அந்த மனிதர்களின் உண்மையான முகத்தை வெளிப்படையாய் காண்பித்துவிடுகிறது. அதேபோலவே, கமல் இரட்டை நாக்கு கொண்டவராக உள் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார் என்றால் அவரின் முகமூடியும் உதிரும் காலம் வரலாம். ரசிகசிகாமணிகள் உண்மையறியலாம்.

எப்படியோ, மொத்தப் படமும் முடியும் போது மனதில் நிறைந்திருப்பவர்கள் அவமானத்தை தாங்கமாட்டான் என்று சொல்லும் ஈழத்தமிழனும், மூன்றாம் உலகநாடுகளின் பொய்த்துப்போன எல்லோருக்கும் பொதுவான Universal Healthcare அல்லது தனியார் மருத்துவ மனைகளில் கணவனின் உயிரைக்காக்க கண்ணீர் மட்டுமே விடத்தெரிந்த, முடிந்த ஊர்வசியின் கதாபாத்திரங்களும் மட்டுமே. தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழன் தன் பலம் குறித்து புரிந்து கொள்ளும்வரை, தமிழ் சினிமா விம்பங்களை பூஜிக்கும் மனோபாவம் மாறும்வரை இப்படித்தான் இரண்டுங்கெட்டானாய் விமர்சிக்கப்படுவான்.

Image Courtesy: Google

டிசம்பர் 08, 2011

பண்டிகை, விழாக்கால வெள்ளை யானைகள்!!


எழுதியெழுதி எண்ணமும் எழுத்தும் தீர்ந்து போகுமோ என்றுொரு தீராக் கேள்வி அடிமனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எழுத்தின் நெம்புகோலில் இந்த உலகையே புரட்டிப் போட்ட மாதிரி ஒரு நினைப்பு! நானெல்லாம் எழுதாமல் விட்டால் தமிழ் கூறும் நல்லுலகத்தின் காலக்கடிகாரம் அப்பிடியே ஸ்தம்பித்து நின்றுவிடும் என்கிற அளவுக்கு ஒரே எழுத்தும், கிறுக்குமாய் ஆகிப்போச்சு :) அரசியலை மேய்ந்து, ஆங்காங்கே மல்லுக்கட்டி யாராவது வந்து நாட்டாமை செய்து அதே ஆடுகளம். சில நேரங்களில் சுவாரஸ்யமாய், ஆரோக்கியமாய் நகரும். சில பொழுதுகளில் போலி அறிஞர்குழாமினாலும் திசை திருப்பப்படும். அது அவரவர் புரிதல், கொள்கைசார் விருப்பு, வெறுப்புக்கு ஏற்றாற்போல் மாறுபடும், வேறுபடும்.

இதில் குரங்கு அப்பம் பிரித்துக்கொடுத்த கதையாகவும், கதியாகவும் ஆகிப்போகும் விவாத விலக்குகள், வில்லங்கங்கள். இதிலெல்லாமிருந்து கொஞ்சம் விலகி யதார்த்த வாழ்க்கை பற்றிய காட்சிகளின் தரிசனம் பண்டிகை காலம் தொடங்குவதால் கண்ணில் ஏராளம் தென்படுகிறது நான் வாழும் நாட்டில். ஆம், இது வருட இறுதி நத்தார் பண்டிகை தெருமுனையில் இருப்பது போல் அண்மித்து கொண்டே இருக்கிறது.

கனடா வந்த புதிதில் வாழும் நிலை குறித்த தேடலும், தெளிதலும் கலாச்சார, பண்பாட்டு அதிர்ச்சியில் அமுங்கிப்போனது. இந்த கலாச்சார, பண்பாட்டு அதிர்ச்சி என்றால் அது உணவு, உடை, வாழ்க்கைமுறை, மொழி முதல் எல்லாம் அடக்கம்.  ஈழத்திலிருந்து ஏழு கடல், ஏழு மலை தாண்டி வந்து, இங்கே மனித வாழ்வு ஒளியின் வேகத்தில் நகர்வது போலவும் நான் மட்டும் நத்தையாய் ஊர்வதாயும் ஆரம்பகாலங்களில் ஓர் மனப்பிரம்மை.

அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாய் மீண்டு, மேலெழுந்து புலத்து வாழ்க்கை புரிபடத் தொடங்க ஆரம்பித்தது ஓட்டம். Road Runner போல வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடி ஒரு திடீர் தடை ஏற்படுத்தி அப்பப்போ கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பியும் பார்க்க கற்றுக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் வலிகள், சோதனை, சாதனை, எனக்கேயுரிய சந்தோசங்கள், கோமாளித்தனங்கள் அனைத்திலிருந்தும் பாடம் கற்று, ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும், மீண்டும் என் உயிர்ப்புக்கு உயிர் கொடுக்கிறேன். வெற்றியும் தோல்வியும் இயற்கையாய் அவை தம் இயல்புகளோடு இருக்க நான் மட்டும் அதற்கு சிரிப்பு, சந்தோசம், அழுகை, கோபம், குழப்பம், தெளிவு என்று வடிவங்கள் கொடுக்கிறேன். அத்தனையும் புறவாழ்வின் மீது எனக்கிருக்கும் மோகத்தின் வெளிப்பாடு.

நான் அதிகம் மனிதர்களை தேடுவதில்லை. தேடினாலும் அபூர்வமாய் தான் கிடைக்கிறது போலியில்லா முகமும், புன்னகையும். அந்த அபூர்வம் அதுவாய் இயல்பாய் அமையட்டும் என்று விட்டு விடுவேன். அதே போல் கடவுளையும் தேடுவதில்லை. இருப்பதை தேடலாம். இல்லாததை எங்கு போய் தேட! தொல் உயிர் எச்சங்களில் மனிதனின் மூலம் மில்லியன்கள் வருட முன்னோடிகளாய் இருப்பது Ape!! மனித குரங்கிற்கும் தற்கால மனிதனுக்குமிடையே கடவுள் எப்போது கடைவிரித்தார் என்கிற விசாரணையின் தேடல்களும் இல்லை என்னிடம். அதுக்கு என் நேரப்பற்றாக்குறையும் காரணம். தேடி விடைகாண நான் விஞ்ஞானியும் அல்ல. ஒரு வேளை மரணம் என்னை ஆட்கொள்ளும் போது, அடுத்த வாழ்வில் எனக்கு என்ன நடக்கும் என்று இல்லாத கடவுளிடம் கேட்க வேண்டுமோ :)

இந்த கேள்விகள் குறித்த தொடரில் ஒன்று மட்டும் எஞ்சியிருப்பது புரிகிறது. கடவுளை கண்டுபிடித்தவர்களும், கார்பரேட் நிறுவனப்படிமங்களில் வியாபாரம் பெருக்குபவர்களும் கடவுளுக்கும், மனிதனுக்குமிடையே ஓர் தொடர்பை பண்டிகை, விழாக்கால கோலங்களில் உருவாக்க முனைந்து இருக்கிறார்கள். அதில் பெருமளவு வெற்றியும் கண்டுவிட்டார்கள். அதை எங்களிடம் அதிகம் கடத்தி வந்து கொடுத்தது சினிமா, தொலைக்காட்சி என்கிற ஊடகங்கள். இவை இல்லை என்றால் உலகளாவிய ரீதியில் இந்துக்கள் எப்படி தீபாவளியும், இஸ்லாமியர்கள் ரமழானும், வட அமெரிக்காவில் எப்படி நத்தார் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது என்பது எனக்கு புரியாமலே போயிருக்கலாம். என் தகவல் அறியும் உரிமை இதுக்குள்ளேயே முடக்கப்படும்.

பண்டிகைகளும், விழாக்களும் கடவுளோடு தொடர்புபட்டதால், அது குறித்த கொண்டாட்டங்களும் ஊடகங்கள் வழி வியாபார நிறுவனங்கள் அமைத்துகொடுத்த நியமங்களுக்கு ஏற்ப கொண்டாடப்படுகிறது. என் வாழ்வியல் முறை, பண்பாட்டு விழுமியங்கள் என் பரம்பரையில் கடத்தப்பட்டு வந்த முறைக்கும், இன்று அது வியாபார நிறுவனங்களால் வேறு நியமங்கள் கற்பிக்கப்பட்டதும் காலத்தின் வழுவோ!

பண்டிகை, விழாக்காலம் என்றால் நான் எதை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் எல்லாமே தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நான் சமூகத்தை எதிர்த்து செயற்படுவதாய் தோன்றும். வேலத்தளத்தில் ஒவ்வொரு வருடமும் கேட்பார்கள் பண்டிகை கால பரிசுப்பொருள் கொள்வனவு செய்தாகிவிட்டதா என்று. நானும் சிரித்துக்கொண்டே கேட்பேன், அதை செய்தே ஆக வேண்டுமா என்று. பொருளுலகில் பரிசுப்பொருட்களில் தான் அன்பும், பாசமும், காதலும் பரிமாறப்பட்டு, வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவையா, கட்டாயமா என்பது சில நேரங்களில் புரியாமலே போகிறது.

பண்டிகை, விழாக்கால கொள்வனவில் வாங்கி குவிக்கப்படும் வெள்ளையானைகள் குறித்து ஏனோ யோசிக்க தோன்றுகிறது. அது குறித்து ஒரு விளக்கம் உண்டு. வெள்ளையானை விலையை விட அதை பராமரிக்கும் செலவினம் தான் அதிகம் என்பது ஐதீகம். வெள்ளையானை இருக்கா என்கிற அறிவு பூர்வமான கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை :) ஆனால், வெள்ளையானை என்பது குறித்து நிற்பது அநாவசிய செலவினம் என்பதே ஆகும்.

பொருளாதார வீழ்ச்சியும், பணவீக்கமும் பொருளாதார அடிமைகள், நுகர்வோர், அல்லது பொதுமக்கள் கொள்வனவில் எவ்வளவு பணம் செலவு செய்கிறார்களோ அதன் வழி மீள கட்டியெழுப்பப்படுமாம் செய்திகளில் சொல்கிறார்கள். பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் இன்று விடுமுறைக்கால கொள்வனவிற்காய் மக்கள் கூட்டம் அலைமோதியது என்று ஊடகங்கள் கல்லா கட்டுகிறது யாருக்காக என்று புரியாமலும் இல்லை. அரசியல், பொருளாதார அடிமையான எனது கூட்டு சிந்தனை, கூட்டு மனட்சாட்சி, கூட்டு பழக்கம் இவற்றை ஊக்குவிக்க ஊடகங்கள் கதை, வசனம் எழுதி வாசித்தால் அதற்குப் பெயர் செய்தி! அதை கேட்டால், பார்த்தால் பல சமயங்களில் சலிப்பே மிஞ்சுகிறது.

செய்தியிலிருந்து விடுதலையா என்றால், மறுபடியும் விளம்பரம். இவர்கள் தான் செய்திக்கு அனுசரணை என்று ஒரு பாரிய வியாபார நிறுவன விளம்பரம். இவர்களது விடுமுறை, விழாக்கால, பண்டிகைக்கால வியாபாரம் பெருக்கும் உத்திகள் விளம்பரங்கள் வழி பார்ப்பவர் மனங்களை கொள்ளையடிக்கும். போய் இதை வாங்கிக்கொள், இதை உனதாக்கிக்கொள் என்று மறைமுகமாய் தூண்டுவார்கள். ஒர் சிறப்பு விற்பனை நாளில் அது தள்ளுபடியில் விற்கப்படுகிறது, சேமித்துக்கொள் என்று உபகாரம் போல் காட்சிப்படுத்தப்படும். அந்த தள்ளுபடி விற்பனை ஒரேயொரு நாள் மட்டுமே என்கிற முத்தாய்ப்பு வேறு.

எனக்கு இவர்கள் விளம்பரப்படுத்தும் பொருள் தேவையா இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. அந்த வெள்ளையானையை நான் எனதாக்கிக் கொள்ள வேண்டும். பணம் இல்லையா! இருக்கவே இருக்கிறது கடன் அட்டை. வாழ்வது ஒரு முறை. அதை கடன் அட்டை வழியேனும் சுகித்து, உன்னதமாய் வாழ்ந்துவிட வேண்டும். அதை சில திருவாளர் நுகர்வோர்களே ஒத்துக்கொள்வார்கள் பகிரங்கமாக தொலைக்காட்சியில்.

வருடத்தில் ஒரேயொருமுறை வரும் கொண்டாட்டங்களை வேறு எப்படித்தான் கொண்டாடுவது என்று எனக்கு சொல்ல தெரியாது. அது என் நோக்கமும் அல்ல. இவை பொருளாதார, அரசியல் சதுரங்கத்தில் கடை நிலையில் இருக்கும் என்போன்றோரது தேவைகளும், சிந்தனைகளும் புதிதாய் எப்படி அர்த்தப்படுகிறது என்கிற எனது பிரதிபலிப்பே ஆகும். பண்டிகை, விழாக்கள், சம்பிரதாயங்கள், விழுமியங்களுக்கு பொருளுலகில் கொடுக்கப்படும் அல்லது கற்பிக்கப்படும்  புதிய அர்த்தங்களே அதிகம் அது குறித்து யோசிக்க வைக்கிறது.

காதலர் தினத்தில் பூவும், பண்டிகை காலத்தில் பரிசும் கொடுப்பது உறவுகளின், நட்பின் அளவை, எல்லையை நிர்ணயிக்கும், அதிகரிக்கும் என்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நேர்கோட்டில் நிகழ்வதும் இல்லை. பரிசுப்பொருட்கள் கொடுத்தும், வாங்கியும் யாரையும் கடனாளியாக்கவும், நான் கடனாளி ஆகவும் எனக்கு உடன்பாடு இல்லை, அவ்வளவே!

எனக்கு பிடித்தது, பண்டிகை, விழா என்றால் விடுமுறை. அது குடும்பங்கள், நட்பு இப்படி சந்தோசமாய் ஒன்று கூடி பேசி சிரித்தாலே மனசு சுகமாய் நிறைந்து போகும்!! கூடவே, சாப்பாடு! அதை மறக்க கூடாது, மறக்கவும் முடியாது :)

Image Courtesy: Google

டிசம்பர் 02, 2011

நெற்றிக்கண் நடுநிலைவியாதிகள்!!எங்கள் ஈழத்து கவிஞர் ஒருவர் சொன்னது, உண்மைக்கும் பொய்க்கும் இடையே நடு நிலைமை என்பது கிடையாது என்று. சமகாலத்தில் அரசியல், சமூக, பொருளாதார, இன, மத, கலாச்சார முரண்பாடுகள் குறித்த விவாதங்கள், சர்ச்சைகள் என்றவுடன் எப்போதும் அரசுக்கு ஆதரவான, எதிரான, அல்லது நடு நிலைமை பேணுகிறோம் என்கிற ரீதியிலான கருத்துகள் உருவாக்கம் பெறுகின்றன. அல்லது உருவாக்கப்படுகின்றன.  அவ்வாறான கருத்துருவாக்கங்கள் சாதாரணமாக உருவாக்கப்படுவதில்லை. திட்டமிடப்பட்டு குயுக்தியான முறையில் பரவலாக உருவாக்கப்பட்டு பரப்படுகின்றன என்பது ஈழவிடயத்தில் ஏற்கனவே தெளிவாய் தெரிந்து போனது.

உணர்ச்சி வசப்படாத, நடு நிலையான பகுப்பாய்வு செய்பவர்களுக்கு தான் ஈழம் பற்றி தெளிவாய் எல்லாம் புரியும் என்பது போன்ற அற்ப அபத்தங்களும் இல்லாமலில்லை. பாதிக்கப்பட்டவனுக்கு நடு நிலைமை குறித்தா கவலை கவரும். அதெல்லாம் நெற்றிக்கண்ணை திறக்கும் பார்வையாளர்களின் பகுப்பாய்வுக்கு தான் லாயக்கு. இந்த நடு நிலையாளர்களின் முகமூடியை கிழித்துப்போடும் ஒர் பகுப்பாய்வு தத்துவம் அண்மையில் கண்ணில் பட்டது.

நடு நிலைமை சரியா, தவறா என்பதல்ல என் வாதம். அது எப்படி அரச இயந்திரத்தால், அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களால் (NGOs), சர்வதேச அமைப்புகளால் புதிய தாராள ஜனநாயகம், உலகமயமாக்கல் என்கிற மேற்கத்திய அரசியல், பொருளாதார தேவைகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது என்பதே என் வாதமும், தேடலும்!

அந்த தேடலில் கண்ணில் பட்டது கலாநிதி ராதா டி‘ஸோஸா அவர்களின் Sandwich Theory. இவரது இந்த பகுப்பாய்வு தத்துவமானது இந்திய சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரபல்யம் என்று சொல்லப்படுகிறது. படித்த போது மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஒரு அரசுக்கும், ஏதோவொரு பொதுப்பிரச்சனை, உரிமை பிரச்சனை குறித்து போராடுபவர்களுக்கும் இடையே பொதுசனம் எப்படி நடு நிலையாளர்களாக தந்திரமாக அரசால் வனையப்படுகிறார்கள் என்பதே இவர் கூறுவதிலிருந்து நான் புரிந்து கொண்டது.

பிரச்சனையின் உண்மை நிலைகளிலிருந்து உருவான இடப்பெயர்ச்சி, சுரண்டல், சமூக, பொருளாதார, அரசியல் கையறு நிலையில் இருந்து திசை திருப்பும் வகையில் வன்முறை, வன்முறையற்ற என்கிற மாதிரியான இரண்டாந்தர விடயங்களில் மக்களின் கவனம் அரசுக்கும்/அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்படுபவர்களுக்கும்/போராடுபவர்களுக்குமிடையே சமதூரத்தில் வைத்து பார்க்கும் தன்மை உருவாக்கப்படுகிறது என்கிறார் என்பதே என் புரிதல். அதற்கு எடுத்துக்காட்டாக இந்திய அரசு-மாவோயிஸ்ட்,  இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சனைகளை குறிப்பிடுகிறார்.

அதே போல் அரசிடமிருந்தும், மக்கள் போராட்டங்களிலிருந்தும் தங்களை விலக்கிவைத்திருப்பவர்கள், ஈற்றில் அரசின் மக்கள் மீது தொடுக்கப்படும் போருக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பது போலாகும் என்கிறார்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் குறித்த கேளிவிகளுக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது; நடு நிலை வகிப்பவர்கள் என்கிற பெயரில் சில சர்வதேச அமைப்புகள், எடுத்துக்காட்டாக Observer Research Foundation, தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக ஆக்கினார்கள் என்பது, பாலஸ்தீனம், சூடான் விடயத்தில் கூட பாவிக்கப்பட்டது என்கிறார். மறுபிரதி எடுத்து சொலவது போல் இவர்கள் இதையே தான் பெரும்பாலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நடு நிலை வகிக்கும் அமைப்புகள், Think-tanks/Experts எனப்படுபவர்கள் கருத்துகளே அடக்குமுறை அரசின் சார்பாக முன்வைக்கப்படுகிறது என்பதும்; இவர்கள் அடிப்படையில் ஜனநாயக பண்புகளை கொண்டிராத சர்வதேச அமைப்புகளின் அங்கமென்று சொல்கிறார் என்பது புரிகிறது.

நடு நிலை நியாயம் பேசும் உள்ளூர், சர்வதேச வேடதாரிகளின் (NGOs) வார்த்தை ஜாலங்கள், Good Governance (சிறந்த ஆட்சி முறை) Civil Society (குடியியல் சமூகம்) எல்லாம் உலகவங்கி திட்டங்கள், சர்வதேச அமைப்புகள் போன்ற நாணய நிதியோடு சம்பந்தப்படுத்துவது என்கிறார். புதிய தாராள மயக்கொள்கை, உலகமயமாக்கல் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்டவர்களிடம் அதிகாரத்தை வழங்குதல் என்றும் விளக்குகிறார்.

இவர்களுக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். நோர்வே முதல் International Crisis Group வரை என்னென்னவோ அறிக்கை விட்டும், ஆராய்ச்சி செய்தும் இறுதியில் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் பிடித்ததையே ஈழத்தமிழன் ஏற்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வார்கள். அதாவது ஈழத்தமிழன் சுய நிர்ணய உரிமையை கைவிட வேண்டும் என்று பாடம் எடுப்பார்கள். அதற்கு எங்கள் எட்டப்பன்களே உதவியும் செய்து கொடுப்பார்கள் இவர்களுக்கு என்பது கள யதார்த்தம். ஏதோவொரு விதத்தில் போரும் அமைதியும் மாறி, மாறி வந்தால் தான் அவர்களின் அரசியல், பொருளாதார இலக்குகள் அடையப்படும் என்றும் விளக்குகிறார்.


இவையெல்லாம் என் புரிதல்கள் மட்டுமே. ஆர்வமும், தேவையும் இருப்பவர்கள் இதன் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்.


கீழே இருப்பது இந்தியாவின் ஆதிவாசிகளின் போராட்டத்திற்கு எதிரான க்ரீன் ஹண்ட் - மாவோயிஸ்ட் போராட்டம் பற்றிய கட்டுரை.


சமூக தொடர்பாடல் தளங்களில் சில நடு நிலைவாதிகளின் ஈழம் குறித்த அரைகுறை மேதாவித்தனங்களின் விளைவே இதை எழுத தூண்டியது. ஈழத்தின் களயதார்த்தம் தெரியாமல், அதன் போக்கும் புரியாமல், ஈழத்தமிழனுக்கு இலங்கை சோசலிச குடியரசு யாப்பில் மறுக்கப்படும் உரிமைகள் பற்றியும் தெரியாமல் அபத்தமாய் பேசுவதை என்ன சொல்ல!

Image Courtesy: Google