அக்டோபர் 19, 2011

ஈழத்தமிழர்களை மரணயாத்திரை போகச்செய்தவர்கள்!!


எப்போதும் போல் ஈழம் குறித்து செய்திகள் படித்தால், நம்பிக்கையும், அவ நம்பிக்கையும் ஒருசேர ஆட்கொள்ளும். ஆனா, இப்போதெல்லாம் சர்வதேசம் சொல்லிவைத்தாற் போல் போர்க்குற்றம், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் என்று பொளந்து கட்டுகிறார்கள். உண்மையில் ஈழம் குறித்த தெளிவான நிலை தெரிந்தும், எங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்து அறிந்தும் சுற்றி வளைத்து அது குறித்துப் பேசாமல் மற்றதெல்லாம் பேசுகிறார்கள் இன்னும் பேசுவார்கள்.

வாழவழிதெரியாதவன் வழி கேட்டால் சுடுகாட்டுக்கு வழி காட்டுவாங்களாம். அது போல் தான் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக எங்களுக்கு சுய நிர்ணய உரிமை கொடு என்று கேட்டால் இந்தியாவும் அமெரிக்காவும்  ஈழத்தமிழனுக்கு வழி காட்டினார்கள், மரணயாத்திரை போ என்று. ஒன்றா, இரண்டா... ஒரு ஊர் மிச்சமில்லை, சுடுகாடு மிச்சமில்லை. கடைசியில் காடுவரை கூட ஓட, ஓட  தலைக்குமேல் குண்டு போட்டே விரட்டினார்கள் மரணத்தின் வாசல்வரை. சிங்களராணுவத்தின் கைகளில் சரணடையுங்கள் உங்களுக்கு சொர்க்கம் என்றார்கள். ஆனால், கிடைத்ததென்னவோ மரணமோட்சம். தமிழர்கள் மனிதர்களாய் கூட மதிக்கப்படாத கேவலமும், சித்திரவதையும்.

ஈழப்பிரச்சனையின் ஆணிவேர் மொழி, கல்வி, பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டு, தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தமிழர்களின் மண்ணில் மக்கட்தொகை கட்டமைப்பு மாற்றப்பட்டு எங்கள் அரசியல் பிரதி நிதித்துவம் பறிக்கப்படுவது. ஆக அடிப்படையில் பிரச்சனை வேறாய் இருக்க இந்தியா, அமெரிக்கா, சீனா அரசியல் ஆதிக்கப் போட்டியில் இடையே நசுங்கிச் செத்தது ஈழத்தமிழன் தான். அமெரிக்காவின் பயங்கரவாததிற்கு எதிரான சித்தாந்தத்தில் நேரடியாக இஸ்லாம் நாடுகள் பாதிக்கப்பட்டால் மறைமுகமாக கொன்றொழிக்கப்பட்டவர்கள் ஈழத்தமிழர்கள். எத்தனையோ விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சமூக ஊடகங்கள் முதல் விக்கிலீக்ஸ் வரை அமெரிக்காவின் முகமூடி கிழிக்கப்பட்டாலும் இன்னும் அசராமல் பேசுவார் அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலர் ரோபர்ட் ஓ பிளேக், ஈழவிடயத்தில். இவர் இலங்கைக்கு விடும் எச்சரிக்கைகளுக்கு ஒரு அளவே இல்லை!! ஆனா, அதெல்லாம் சும்மா பிளேக் தமாஷ் காட்டுகிறார் என்று வேடிக்கை பார்க்கும் எங்களுக்கும் தெரியும்.

ஈழத்தமிழர்களும் ஐ, நா. வின் மனித உரிமைகள் சபைமுதற்கொண்டு தனி நபர்களாய் இலங்கையின் போர்க்குற்றவாளிகள் என்று கருத்தப்படுபவர்கள் மீது வழக்கு தொடுத்தும், தொடுக்கவும் தம்மாலான முயற்சியை செய்துகொண்டெ இருக்கிறார்கள். இந்த முயற்சியால் குறைந்தபட்சம் இலங்கையின் முகமூடியை கிழிக்கலாம். இவர்களின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பிரித்தானியா, அமெரிக்கா என்று தொடங்கி இப்போ அவுஸ்திரேலியா வரை தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களுக்கும், தூதுவர்களுக்கும் எதிராக வழக்கு தொடர கொஞ்சூண்டு தர்மசங்கடம் இலங்கைக்கு. எப்படியும் அடித்துப் புரண்டு இந்தியா காப்பாற்றும் என்கிற நம்பிக்காயாய் கூட இருக்கலாம், வழக்கம்போல்.

இலங்கை ஜனாதிபதி பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள அவுஸ்திரேலியா செல்லப்போவதாக இருக்கிறார். போர்க்குற்றவாளிக்கு பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு ராஜபக்‌ஷேவுக்கு சிவப்பு கம்பளம் கொடுத்து இந்தியா போல் அவுஸ்திரேலியாவும் வரவேற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எற்கனவே பிரித்தானியா சென்று பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருந்தவர் ஈழத்தமிழர்களின் முயற்சியால் திருப்பி விரட்டியடிக்கப்பட்டவர். இரட்டை குரியுரிமையில் அவுஸ்திரேலிய குரியுரிமை பெற்றிருக்கும் முன்னாள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பாலித கோகனவுக்கும், மற்றும் முன்னாள் கடற்படைத்தளபதியும் இன்னாள் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவருமான திசர சமரசிங்கே மீதும் இப்போ வழக்கு போடவும் முயற்சிகள் ஈழத்தமிழர்களால் செய்யப்படுகிறது.

போர்க்குற்றங்களை புரிந்துவிட்டு தூதுவர் விலக்களிப்பு சிறப்பு அதிகாரங்கள் (அது வேறொன்றுமில்லை Diplomatic Immunity ) மூலம் தப்பித்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் நரித்தனம். அப்படி தப்பித்தும், விடாமல் வழக்கு போட்டு ஜேர்மனியில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி இலங்கை சென்றவர் முன்னாள் ராணுவ அதிகாரியும் பின்னாளில் ஜேர்மனி, சுவிற்சலாந்து மற்றும் வாத்திகானுக்கான இலங்கைக்கான உதவி தூதுவருமான ஜகத் டயஸ். இன்னும் ஐ. நா. வுக்கான உதவி நிரந்தரப் பிரதிநிதியாய வலம் வருபவர் முன்னாள் ராணுவ கட்டளைத்தளபதியான ஷவேந்திரா சில்வா என்பவர். இவர் New York Post - Sunday Edition ஒன்றில் மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புக்கு மாறாக போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டியவர் ஐ. நா. வின் உதவி பிரதி நிதியாய நியமிக்கப்பட்டவர் என்று குறிப்பிடுகிறது.


அமெரிக்காவும், இந்தியாவும் மட்டுமல்ல இந்த ராணுவ அதிகாரிகளும் தான் ஈழத்தமிழர்களை மரணயாத்திரை போகவைத்தவர்கள். இப்போ இவர்களை சட்டப்படி போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டுமென்பது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பு.

7 கருத்துகள்:

Yoga.S.FR சொன்னது…

வணக்கம்!முதற்கண் நன்றி,இந்தப் பதிவை எழுதி விழிப்பை ஏற்படுத்தியமைக்கு!இயலுமான வரை அழுத்தங்களைக் கொடுத்து,இந்த இனவாத அரசின் முகமூடியைக் கிழித்தால் தான்,உண்மையான ஈழத் தமிழர் பிரச்சனை உலகறியும்!மேலை நாடுகளின் கபட நாடகங்களும் அரங்குக்கு வரும்.உலக மக்களின் ஆதரவே இப்போதைய தேவை.அந்த முயற்சிகளே இப்போது மேற் கொள்ளப்படுகின்றன! நன்றி.

ஹேமா சொன்னது…

ரதி சுகமா.நாதியற்று முழி பிதுங்கி நிற்கிறோம்.ரதி எங்களுக்குள்ளேயே குள்ளநரிக்கூட்டம் குதிச்சுக் கும்மாளம் போட்டுக் காட்டிக்கொடுத்துக்கொண்டு இருக்கம்வரை எனக்கு எதிலயும் யாரிலயும் நம்பிக்கையில்லை !

Rathi சொன்னது…

Yoga.S.FR., வாங்க எப்பிடி இருக்கிறீங்க!

அட இதுக்கெல்லாம் நன்றியா! இலங்கை ஜனாதிபதியையும், தூதுவர்களையும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு உள்ளாக்குவதென்பது ஈழவிடயத்தில் இதெல்லாம் ஒரு சிறுமுயற்சி. இதெல்லாம் ஒன்றாய் சேர்ந்து மொத்தமாய் திரண்டால் நிச்சயம் ஒரு பலன் கிடைக்கலாம்.

Rathi சொன்னது…

ஹேமா, வந்த்திட்டீங்களோ :) வாங்கோ. எப்பிடி போச்சுது உங்க விடுமுறை நாட்கள்.

எங்களுக்குள்ள குள்ள நரிக்கூட்டம் இருக்கிறது ஒன்றும் புதுசு இல்லையே ஹேமா. ஆனாலும், இவ்வளவு தூரம் வந்திருக்கிறம் தானே. அதையும் நினைப்பம் ஹேமா.

ராஜ நடராஜன் சொன்னது…

//எப்போதும் போல் ஈழம் குறித்து செய்திகள் படித்தால், நம்பிக்கையும், அவ நம்பிக்கையும் ஒருசேர ஆட்கொள்ளும்.//ரதி!நலமா?நிலம் மாறினாலும் மன உணர்வுகள் மட்டும் ஒரே மாதிரிதான்!ஹேமாவுக்கு சொன்ன இவ்வளவு தூரம் வந்தோம் என்பதே இன்னும் கொஞ்சம் நம்பிக்கையைத் தூண்டு விடும் வார்த்தை.2012 மே இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வழிப்பாதையைத் திறக்கிறதா எனப் பார்க்கலாம்.

Rathi சொன்னது…

ராஜ நட, எப்பிடி இருக்கீங்க நீங்க! நாங்க நலமாவே இருக்கிறம் :)

2012 என்ன கொண்டுவருது தமிழினத்துக்கு என்று பார்ப்போம், பொறுத்திருந்து.

siva சொன்னது…

அதர்மம் வென்றாலும்
இறுதியில்
தர்மமே வெல்லும்
இதுவே உலக நியதி ஆகும்