அக்டோபர் 01, 2011

வர்ணமும் ஜாதியும் தாராண்மை ஜனநாயகமும்!!!


வலியவன் சட்டமியற்றி ஆண்டுகொண்டிருக்க, தக்கன அனைத்தும் பிழைத்துக்கொள்ள மற்றவன் எல்லாம் புலம்பியோ அல்லது அமைதிகாத்தோ நகர்கிறது அனைவரின் பொருளியல் வாழ்வும். அமேரிக்கா நியுயோர்க்கில் கீழே 'Wall Street' இல் குழுமியிருந்து பொருளாதார சுனாமியால் பாதிக்கப்பட்டு வாழ வழி தெரியாதவன் எதிர்ப்பை காட்டும் போது கைகளில் Champagne கிண்ணத்துடன் அவர்களுக்கே உரிய மிடுக்கான ஆடை மற்றும் தோரணையுடன், முகத்தில் மாறாத புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

மீண்டும் பொருளாதார வீழ்ச்சி, நிச்சயமில்லா வாழ்வாதாரம் என்று எதிர்காலம் மற்றும் வாழ்க்கை குறித்த பயங்கள் அமெரிக்காவிலிருந்து உலகின் அத்தனை பாகங்கங்களுக்கும் தொற்றாக பரவிக்கிடக்கிறது.

மனிதவாழ்வை அதன் தரத்தை தக்கவைத்துக்கொள்ள எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியின் விளைவாய் துன்பமும், கஷ்டமும்  எல்லோருக்கும் பொதுவானது என்றால் பொறுத்துக் கொண்டு போகலாம் என்று தேற்றிக்கொள்ளலாம். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் என்பது வர்க்க வேறுபாடுகள் தவிர்ந்த வேறு வடிவங்களில் இல்லையா என்று நினைத்தால் உரிமை மறுப்பு என்பது என்னென்ன வடிவங்களில் 'Free Market World' இல் நடந்துகொண்டிருக்கிறது என யோசிக்க வைக்கிறது. இந்த எல்லைகளற்ற சுதந்திர வர்த்தகம் எங்கிருந்து எப்படி தோற்றுவாய் கொண்டது, கொஞ்சம் பின்னோக்கி தேடிப்பார்க்கிறேன்.

உலகப்போர்கள், பனிப்போர் என்றார்கள். அங்கே பெரும்பாலும் ராணுவம் மோதிக்கொண்டது. முதலாம் உலகப்போரின் பின்பு கம்யுனிசம், பாசிசம் மற்றும் நூற்றாண்டு கடந்து ஜனநாயகத்தின் மீள்பிறப்பு உருவானது என்றார்கள். ஒருவழியாய் அங்கிருந்து முன்னேறி ரஷ்யாவும், சீனாவும் இன்னும் சில நாடுகளும் கம்யுனிஷம், சோஷலிஷம் என்றார்கள். காலப் போக்கில் அதுவும் சொத்துரிமை, நாட்டின் மொத்த உற்பத்தி, மனித உரிமைகள் என்று வேண்டியதும், வேண்டாததுமான கணக்கு வழக்குகள் தொடர அதுவும் வழக்கொழிக்கப்பட்டது.

சித்தாங்கள் தோற்றுப்போனதா அல்லது அதன் வழிவகைகள் தோற்றுப்போனதா என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன், என் அறிவுக்கு எட்டியவரை. தாராள தனியார் சொத்துடமை சட்டம் தான் பொருளாதார வளர்ச்சிக்கு தேவை என்று அதுவும் தாரளாமாய் அனுமதிக்கப்பட்டது. முடிவு பொருளாதார சுனாமியாய் உலகில் உழைத்துப் பிழைப்போரில் வயிற்றில் அடிக்கிறது. எப்படியோ, உலகப்போரின் முடிவில் பனிப்போர் ஆரம்பமாகியது. பனிப்போர் முடிவின் போது புதிதாய் ஓர் இலக்கில் காலடி வைத்துக்கொண்டிருந்தது உலகம். இப்போது தாராள ஜனநாயகம் தான் உலக மயமாக்கலுக்கும் பொருந்துமாம்!!

புதியதோர் உலகம் செய்வோம் என்று பாரதிதாசன் பாடியதை யாரோ அமெரிக்க ஜனாதிபதி மற்றும் முதலாளிகள் ரூம் போட்டு நிறையவே யோசித்து ரசித்திருப்பார்கள் போல. சர்வதேச சமூகம் என்று தனக்குத்தானே பெயர்சூட்டி "புதிய உலக ஒழுங்கு" என்று புதிதாய் ஓர் கோட்பாட்டை உருவாக்கினார்கள். அமேரிக்கா தன் அரசியல் பொருளாதார சுயதேவைப் பூர்த்திக்கு உள்நாட்டு குழப்பங்களையும், அதனை அடக்கியொடுக்க சர்வாதிகாரிகளையும் உருவாக்கினார்கள். முன் எப்போதையும் விட "இனப்படுகொலை" என்பது உலகில் அதிகமாய் நடைபெற்றது, அது அதிகம் பேசப்பட்டது என்று குறிப்பிடுகிறார் சாமுவேல் ஹண்டிங்டன். இவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, விட்டுவிடுங்கள்.

எங்கேயோ சுற்றி எப்படி யோசித்தாலும் ஒரு புள்ளியில் மறுபடியும் புத்தி சிக்கிக்கொண்டது. புதிய உலக ஒழுங்கில் எல்லாமே ஒழுங்காய் இருக்கவேண்டும் என்கிற நியதி ஏனோ தலைகீழாய் மாறிப்போனது. அல்லது தலைகீழ் விதியே பொது விதியானது. உலகமயமாக்கலில் ஒருசாரார் திளைத்தாலும் அதன் பெயரால் உரிமைகளும், சொந்த மண்ணும் பறிக்கப்பட்டவர்கள் மதம், இனம், மொழி, பண்பாடு என்கிற கூறுகள் அல்லது அம்சங்களின் அடிப்படையில் போராடவும் செய்கிறார்கள்.

என்னதான் அமெரிக்கர்கள் போல ஆங்கிலம் பேசினாலும், Corn Flakes, McDonalds சாப்பிட்டாலும் அது செரித்து முடித்தபோது என் சுயம் என்னை கேள்வி கேட்டது. என் வேர்கள் எங்கே? என் அடையாளங்கள் என்ன? நான் அமெரிக்கர்கள் போல சிரித்தாலும், அழுதாலும், பேசினாலும், நடந்தாலும் நான் அமெரிக்கன் கிடையாது. என் வேர்கள், பண்பாடு, மக்கள், எனக்கு என் மண்ணில் மறுக்கப்பட்ட உரிமைகள் என்று என் தனித்தன்மைகள் குறித்த ஆயிரம் கேள்விகள் எனக்குள்.

கேள்விகள் பிறக்கும் போதெல்லாம் அது குறித்த தேடல்களும் இயல்பாகவே உருவாகிவிடும் எனக்குள். என் உரிமைகள் குறித்த அறிவுத்தேடலில் சிக்கியது தான் ஜாதி, வர்ண சமூக அமைப்பும் அதன் தாக்கங்களும். என் மண்ணில் எனது உரிமைகள் பறிக்கப்படுவதற்கு உலக அரசியலும் காரணம், யாரும் மறுக்கமுடியாது. அது இன்று உலகால் ஓரளவிற்கு அறியவும் செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவில் எப்படி வர்ணமும் ஜாதியும் ஆட்சிபீடத்தில் கோலோச்சுகிறது, எப்படி பெரும்பானமையினரின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என்று கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. வல்லவன் வகுத்த சட்டங்களும், தக்கன பிழைப்பதும் இங்கேயும் கொஞ்சம் மனக்கசப்போடு!!

முதலில் வர்ணம், ஜாதி என்பதன் அடிப்படை தத்துவமே சுத்த அபத்தம் என்று சொன்னால் அது மிகையே இல்லை. இதன் நதிமூலம், ரிஷிமூலம் பார்த்து இனி ஆகப்போவது ஒன்றுமில்லை. அந்தளவுக்கு ஜாதி குறித்த அறிவீனங்கள் விஷவாயுவாக பரவிக்கிடக்கிறது எம்மிடையே. வர்ணம் என்றால் அது பிராமணர்கள்-குரு/தீட்சிதர், சத்திரியர்கள்-போர்மறவர், வைஷ்ணவர்கள்-வியாபாரிகள், சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிறது. ஜாதியின் கணக்குவழக்கு எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், ஜாதி என்பது தொழில் அடிப்படையில் பகுக்கப்பட்டு மனிதர்கள் பாகுபடுத்தப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதுவரை தெளிவு.

சரி, வர்ணத்தை யார் கண்டுபிடித்தார்கள்? பதில் ஆரியர்கள்! ஆரியர்களின் வர்ணம் குறித்த குறிப்புகள் மற்றும் பிரிவுகள், பாகுபாடுகள்  தமிழர்களிடையே இருந்ததில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதை பெரும்புலவர் வெள்ளைவாரணனார் தொல்காப்பிய ஆய்வுரைப்பகுதியில் "...... பழந்தமிழகத்தில் மக்களை நிலவகையாற்பகுத்தல் அல்லது குலவகையாற் பகுத்துரைக்கும் வழக்கம் என்றுமே நிலவியதில்லை" எனக் குறிப்பிடப்படுகிறது (தொல்காப்பியப் பூங்கா, கலைஞர் மு.கருணாநிதி ப. 244).

ஜாதி என்பதும் அவரவர் செய்த கர்ம வினைகளின் விளைவாம்!!! அது "கர்மா" என்றும் அழைக்கப்படுகிறது. அது என்ன கருமமோ எனக்கு புரியவில்லை. இருந்தாலும் இரத்தம், மரணம், அழுக்கு சம்பந்தமான எந்தவொரு வேலை அல்லது தொழிலையும் பிராமணர்கள் செய்வதில்லை. அவ்வாறான வேலைகளை செய்ய "சூத்திரர்" எனப்படுவோர் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று படித்த போது (Francis Fukuyama- The Origins of Political Order pg. 166) மனதில் இயல்பாய் இன்னோர் கேள்வி எழுந்தது. பிராமணர்களும் சூத்திரர் போல் மனிதப்பிறவிகள் தானே? பிறகென்ன?

அவ்வாறான குருதி, மரணம், அழுக்கு சம்பந்தப்பட்ட வேலைகள் தூய்மையற்ற தொழில்களாம்!! ம்ம்ம்ம்....இருக்கட்டும், இருக்கட்டும்.... அப்படிஎன்றால் இன்னோர் கேள்வி மனித உடலும், இரத்தமும் எல்லா மனிதர்களுக்கும் இயற்கை கொடுத்தது. அது பிராமணர்களுக்கும், சூத்திரர்களுக்கும் வேறு, வேறு நிறமோ குணமோ காட்டுவதில்லை. உயர் ஜாதி அல்லது வர்ணத்தின் அடிப்படையில் படைக்கப்படவர்களின் உடம்பில் இறுதி சந்தனமும், ஜவ்வாதுமா வெளியேறுது. எல்லா மனித உடலிலும் இருந்தும் ஒரே மாதிரியான கழிவு, மலம், சலம் தானே ஒழுகிவழியுது. பிறகு இதிலென்ன பாகுபாடு!!!

ஏன் வர்ணமும் ஜாதியும் எப்போதும் மதத்தோடு தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகிறது. கடவுளின் தலையிலிருந்து பாதம் வரை உள்ள ஒவ்வொரு பகுதியும் மனிதப் பிறப்பின் வர்ணத்துடனும்; ஜாதி என்பது கர்மா அல்லது பாவம் என்று கொண்டாலும்; அது கூட எப்படி பிராமணிய மதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. ஆக, வர்ணமும் ஜாதியும் காரணங்களாய் காட்டப்பட்டு மனிதர்கள், மனிதர்கள் தவிர்ந்த வேறு பிறவிகளாய் பார்க்கப்படுகிறார்கள். அது ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் தொடர்வது தான் விந்தை! இதையே
இப்படியும் கூறுகிறார்கள்.... "பார்பனியத்திற்கென்று ஒரு மெய்யியல் இருக்கிறது, (கர்ம, தர்ம, தண்டக்கோட்பாடு. இதுவே வர்ணாச்சிரம தர்மம்) சாதிக்கென்று தனியே ஒரு மெய்யியல் இல்லை. (தமிழ்த்தேசியம்-சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை)

"If one wanted an example of a religion that, a la Marx, justified the domninance of a single, small elite over the rest of society, one would choose not Christianity or Islam, with their underlying message or universal equality, but rather the Brahmanic religion that appeared in India in the two millennia B.C. according to the Rg Veda" (Francis Fukuyama, The Oringins of Politcal Order, pg, 163).

கிறஸ்துவம் அல்லது முஸ்லிம் மதத்தில் சொல்லப்படும் செய்தி போல் எல்லோருக்கும் "பொதுமை" என்கிற சமத்துவம் பிராமணிய மதத்தில் ஏன் இல்லை என்று புக்குயாமாவின் மேற்சொன்ன கூற்றும் யோசிக்க வைக்கிறது. கடவுளின் முன் எல்லோரும் சமம் என்றால் எப்படி வர்ணம், ஜாதி என்று அர்த்தமற்ற விடயங்களால் பாகுபாடு காட்டப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்.

இந்த கூற்றின் விவரத்தை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் கூற்றில் நோக்குகிறேன்.

"தமிழ்நாட்டில் எவ்வளவு தான், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை ஏந்திப் பார்ப்பனியத்திற்கு எதிராகப் போராடினாலும் அதனை முற்றிலும் வீழ்த்த முடியவில்லை. அரசுத்துறை, தொழில்துறை, ஊடகத்துறை, கலை இலக்கியத்துறை ஆகியவற்றில் இன்றும் தமிழ்நாட்டில் பார்ப்பனியமே கோலோச்சுகிறது. தமிழ்நாட்டில் செயற்படும் பார்ப்பனியத்திற்கு உயிரும் ஊட்டசத்தும் தில்லித் தலைமை பீடத்திலிருந்து வருகிறது" (தமிழ் தேசியம்-சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை).

ஆக, என்னுடைய புரிதல் அமெரிக்காவில் ஏழை, பணக்காரன் என்கிற வர்க்க வேறுபாடுகள் பொருளாதார சுனாமியில் மனிதர்களின் இன்னோர் பக்கத்தை படம் பிடித்துக்க்காட்டுகிறது. அதே போல் ஓரளவிற்கு நானறிந்த இந்திய-தமிழ்நாட்டு சூழலில் வர்க்க வேறுபாடு என்பது வர்ண-ஜாதி அடிப்படையில் கோலோச்சுகிறது. ஒரு தனிமனிதனை வர்ணம்-ஜாதியின் பெயரால் பாகுபடுத்தி கல்வியும், பொருளாதார மேம்பாடும் மறுக்கப்பட்டால் அவன் எப்போது வாழ்வில் உய்வது. இல்லையே!! இங்கே தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம். அது சட்டமாக்கப்பட்டிருக்கிறது என்றும் வாதாடலாம்.

எனக்கு தமிழ்நாட்டு சூழல் அதிகம் பரிச்சயம் இல்லை என்றாலும், இட ஒதுக்கீடு என்பது கூட மறுபடியும் ஜாதியை அங்கே வலியுறுத்தி நிற்கிறது போல் தெரிகிறது. எந்தவொரு அரச ஆவணங்களிலும் எதற்காக ஒரு தனிமனிதனின் இந்த ஜாதி என்கிற முத்திரை பதிக்கப்படுகிறது . இந்த அபத்தங்களை ஒழிக்கவேண்டுமானால் இதை முதலில் இல்லாதொழிக்க வேண்டுமோ!!

இருந்தும் ஒரு சிறுபான்மையினர் இந்த வர்ண-ஜாதி மெய்யியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்தியா என்கிற ஒரு மிகப்பெரிய ஒரு நாட்டை தனது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்திருப்பது வியக்கவே வைக்கிறது. இவ்வளவிற்கும் இந்தியா ஒரு ஜனநாயக நாடாமே!!!மொத்தத்தில் அமெரிக்காவின், இந்தியாவின் தாராள ஜனநாயகம் ஒரு குறிப்பிட்ட சாராரின் நலன்கள் பேணத்தான் போலும்.

Reference:

1. The Clash of Civilizations and the Remaking of World Order (Paperback Edition 2003) - Samuel P. Huntington

2. The Origins of Political Order  (2011) - Francis Fukuyama

3. தொல்காப்பியப் பூங்கா - (பன்னிரண்டாம் பதிப்பு 2003) கலைஞர் மு. கருணாநிதி.

4. "தமிழ்த் தேசியம்" சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை - 2009
 - தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி

Image Courtesy: Google13 கருத்துகள்:

தவறு சொன்னது…

வணக்கம் ரதி....

அரசு எவ்வழியோ மக்களும் அதன் பின்னாலே...இன்னமும் பள்ளி சான்றிதழ் சரிபார்க்க சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது.

சமத்துவம் பேசுவதெல்லாம் அரசியல்.

இன்னும் தமிழகத்தில் ஜாதிகட்சிகாரர்கள் தோன்றி கொண்டே இருக்கிறார்கள்.

ஜாதியின் வேறுபாடுகளை களைய இன்னும்....

வாழ்த்துகள் ரதி.

Thekkikattan|தெகா சொன்னது…

Back reference எல்லாம் கொடுத்து ஒரு குட்டி ஆராய்ச்சி கட்டுரை அளவிற்கு முன் வைச்சிருக்கீங்க.

காத்திரமாக சித்திக்கும் எவருக்கும் இதில் உள்ள உண்மை விளங்கும். பலப்பல அரசியல், அடிமை ஊக்குவிப்பு காரணங்களுக்காக நமக்கு நூற்றாண்டுகள் தோரும் இந்த வேறுபாடுகள் ஏதோ ஒரு ரீதியில் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

//இரத்தமும் எல்லா மனிதர்களுக்கும் இயற்கை கொடுத்தது//

இயற்கையிலிருந்து கட்டமைக்கப் பெற்றதே சுவாசிக்கும் ஒவ்வொரு உயிரினமும் - கனிம/கரிம வேதியக் கூறுகளை இந்தக் காற்றிலும், மண்ணிலிருந்தும் பெற்றே எலும்பாகவும், சதையாகவும், ஏனைய நீர் அடிப்படையிலான விசயங்களையும் பெற்று ஜீவித்து வருகிறோம். இருப்பினும், எங்கிருந்து இந்த மூளை மட்டும் இத்தனை வேறு பாடுகளை உருவாக்கி வைத்துக் கொள்கிறது.

நெம்பக் கஷ்டம்... பகிர்விற்கு நன்றி!

துஷ்யந்தன் சொன்னது…

அவசியாமான நேரத்தில் வரும் அசத்தல் கட்டுரை...

அக்கா உங்கள் கட்டுரை மிக தரமானதாக இருக்கு... ரெம்ப அழகாய் மினக்கெட்டு தகவல்களை கொட்டி எழுதுகின்றீர்கள்.
உங்கள் எழுத்தில் உங்கள் உழைப்பு தெரிகின்றது. விகடன் இதழில் கட்டுரை படிப்பது போன்று உள்ளது உங்கள் கட்டுரைகள். வாழ்த்துக்கள் அக்கா.

siva சொன்னது…

:)

என்ன எழுத தெரியவில்லை.
அதனால் இத்துடன் எனது உரையை நன்றியுடன் முடித்துக்கொள்கிறேன்
நல்ல கட்டுரையை படைத்த உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்

siva சொன்னது…

நீங்கள் சொன்ன எல்லா வர்ணமும் சரி ...
மாத்தறது ரொம்ப கஷ்டம்ங்க..இன்னும் நூற் ஆயிரம் கண்டுபிடிப்புகள்
வந்தாலும் இந்த வேறுபாட்டை தமிழ்நாட்டில் இருந்து அகற்றவது
?????..

சார்வாகன் சொன்னது…

நன்றி!

Rathi சொன்னது…

தவறு, வணக்கம், நிறையவே பிஸி போல நீங்க. ம்ம்ம்.... முன்னேற வாழ்த்துக்கள். நன்றி. அதான் சொல்லிட்டீங்களே வேறுபாடுகளை களைய.....ன்னு. இதுக்கு மேல என்ன சொல்ல.

Rathi சொன்னது…

தெகா, reference.....நான் சொல்றத வாங்காவிட்டாலும் இவங்க சொல்லுறத கேட்கக்கூடும் :)

நன்றி தெகா.

Rathi சொன்னது…

துஷ்யந்தன், நன்றி. நீங்க நிறையவே விகடன் படிப்பீங்க போல :)

Rathi சொன்னது…

சிவா, வாங்க, வாங்க.... நன்றி! உங்கள் வாழ்த்துக்கும், எனக்கு நீண்ட ஆயுள் கிடைக்கவேண்டும் என்கிற உங்க பேராசைக்கும் :))

Thanks Siva!

Rathi சொன்னது…

சார்வாகன், :)) Thanks!

♔ம.தி.சுதா♔ சொன்னது…

////ஆரியர்களின் வர்ணம் குறித்த குறிப்புகள் மற்றும் பிரிவுகள், பாகுபாடுகள் தமிழர்களிடையே இருந்ததில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது.////

ஆரியத்தின் தாக்கமே எம்முள் இந்தளவு தாக்கத்தை காணர்ந்துள்ளது என்பது எனது எண்ணமும் ஆகும்..

மிக ஆழமான ஆய்வுகள் அக்கா.. மிக்க நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

Rathi சொன்னது…

வாங்கோ மதிசுதா. நல்லா இருக்கிறீன்க்களோ!

ம்ம்ம்ம்.... எண்ணிக்கையில் சிறுபான்மையாய் இருந்துகொண்டு தங்கள் வாழ்வுக்கும், உயர்வுக்கும் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருப்பவர்களை அடக்கியாள்வது என்பது யோசிக்கவேண்டிய விடயம்.