அக்டோபர் 23, 2011

ஈழத்துப்பெண்ணின் ஒற்றைசொல்லும் ஓரு கவிதையும்!!!!துன்பத்தில் துவளும் வேளையில் இடம், பொருள், ஏவல் பார்த்து உதவி கேடபதில்லை உள்ளமும் உதடுகளும். அப்படி ஒரு நிலைதான் ஈழத்தமிழர்களுக்கு 2009 ஆம் ஆண்டு  உருவாக்காப்பட்டது. சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி, வீதி வீதியாய் வீழ்ந்துகிடந்து ஈழத்தமிழனுக்காய் உயிர்ப்பிச்சை கேட்கவேண்டிய காலக்கட்டாயம்.

முள்ளிவாய்க்கால் முடிவின் வழி ஈழத்தின் தலைவிதியும், ஈழத்தமிழனின் அரசியல் அபிலாஷைகளும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடுமென்ற  எத்தனையோபேரின் அற்ப ஆசைகளுக்கு அப்பப்போ யாராவது எட்டப்பன்கள் தீனி போடுகிறார்கள். இருந்தும், பெரும்பான்மை தமிழர்களின் மனங்களில் ஈழம் என்கிற நெருப்பு இன்னும் கனன்றுகொண்டே தான் இருக்கிறது. ஈழம் அழிக்கப்பட்டு, ஈழத்தமிழனினம் இனப்படுகொலை செய்யப்பட்ட போது ஈழத்தமிழர்கள் இந்தியர்களிடம் காலில் விழுந்து செத்துகொண்டிருந்த உறவுகளுக்காய ஊயிர்ப்பிச்சை கேட்டிருக்க வேண்டுமா என்று இந்த காணொளியை காணும் ஒவ்வொரு தடவையும் யோசிப்பதும் உண்டு.

அந்தக் கேள்விக்கு என் தன்மானம் இல்லை என்றே எப்போதும் இறுமாப்பாய் பதில் சொல்லியதுண்டு. இருந்தும் அது அந்த நேரத்தில் சரியா, தவறா என்கிற அறிவுக்கு அப்பாற்பட்ட கேள்விகளுக்கு புறம்பாய்  இருந்தது நாங்கள் வைத்த மனிதாபிமான கோரிக்கைகள்.  இன்று தெக்கிகாட்டான் பகிர்ந்துகொண்ட இக்கவிதை என் கேள்விக்கு பதில் சொன்னது போல் தோன்றியது. பதிவர் தெக்கிகாட்டான் வார்த்தைகள்.....

”இந்த காணொளி பார்த்த பாதிப்பில் ஏதோ சொல்ல வேண்டுமென தோன்றியதை இங்கு இறக்கினேன். அந்த பெண்ணின் ஒற்றைச் சொல், ”உங்கள் கால்களை பிடித்து கெஞ்சிக் கேக்கிறேன்” - தேவையற்ற ஒரு கெஞ்சலாக பட்டது. ஏன் தேவையற்றது? இந்த கவிதை அதற்கான காரணத்தை ஓரளவிற்குச் சொல்லும் .”

தெக்கிகாட்டான் கவிதை....!!!அது அப்பொழுதே
விசில் எழுப்பத் தொடங்கியிருந்தது
இருந்த பருக்கைகளை
வழித்து ஊட்டத் தொடங்கியிருந்தேன்
கேட்ட நொடி கை உதறி
அள்ளி அணைத்து
ஏற்கெனவே வெட்டிவைத்த
மரணக் குழியில் புதையுண்டோம்...

கரையின் இந்தப் புறமாக
தெரு ஓரம் ஓடிய நாயின்
கோர முகம் தகிக்காமல்
வீறிட்டாள் எனது மகள்
தூர விரட்டி
வாஞ்சையுடன் உணவூட்டி
அழகூட்டி பேருந்தில் ஏற்றிவிட்டு
சீரியலுக்கென குமிழ் திருப்பி அமர்ந்தேன்...

புதையுண்ட குழிக்கருகாமையில்
அது வந்து இறங்கியது
காது பிளந்து உலகமிருட்டி
பிசுபிசுக்கும் குருதி வழித்து
மீண்டும்
கண் திறக்கையில்
அருமை மகனின்
உருவம் சிதைந்திருப்பு
மூர்ச்சையாக்கியது...

அவள் எவனோடு தொடர்பு
என்றபடி மீண்டும்
செல்லரித்த ஒரு நாள் பொழுதை
மூக்கை சிந்தியபடி மெத்தென்று
சமைந்திருந்த அடுத்த நொடியில்
ஏதேச்சையாக
சானல் அழுந்தி மாற
அங்கே அன்னியக் கரைக்கார
சகோதரி ஒருத்தி
எங்களுக்காக கண்ணீர் வடியுங்கள்
குடிக்க தண்ணீர் இல்லை
என் இரண்டு வயது மகனின்
கால் இருந்த இடத்தில்
கை கிடக்கிறது...

அரற்றிய அவள் ஓலம்
சலித்துக் கொண்டே
ஐஸ் க்ரீம் எடுக்க
முனகிக் கொண்டிருக்கிறேன்.

இக்கவிதை குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் என்னை கொஞ்சம் ஆச்சரியப்படவும், அட எங்கள் சகோதரி ஒருத்தி ஏன் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டும் என்கிற அக்கறையும் அங்கே தெரிந்ததா!!! இல்லை நான் அப்படி கற்பனை செய்துகொண்டேனா! பதில் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால், புரிந்தால் நீங்களும் உணருவீர்கள்.

கவிதை குறித்த கருத்துகளும், ஆதங்கமும் இங்கே

மிகுதி உங்கள் முடிவுக்கு.... !!!!

Image: Google

அக்டோபர் 19, 2011

ஈழத்தமிழர்களை மரணயாத்திரை போகச்செய்தவர்கள்!!


எப்போதும் போல் ஈழம் குறித்து செய்திகள் படித்தால், நம்பிக்கையும், அவ நம்பிக்கையும் ஒருசேர ஆட்கொள்ளும். ஆனா, இப்போதெல்லாம் சர்வதேசம் சொல்லிவைத்தாற் போல் போர்க்குற்றம், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் என்று பொளந்து கட்டுகிறார்கள். உண்மையில் ஈழம் குறித்த தெளிவான நிலை தெரிந்தும், எங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்து அறிந்தும் சுற்றி வளைத்து அது குறித்துப் பேசாமல் மற்றதெல்லாம் பேசுகிறார்கள் இன்னும் பேசுவார்கள்.

வாழவழிதெரியாதவன் வழி கேட்டால் சுடுகாட்டுக்கு வழி காட்டுவாங்களாம். அது போல் தான் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக எங்களுக்கு சுய நிர்ணய உரிமை கொடு என்று கேட்டால் இந்தியாவும் அமெரிக்காவும்  ஈழத்தமிழனுக்கு வழி காட்டினார்கள், மரணயாத்திரை போ என்று. ஒன்றா, இரண்டா... ஒரு ஊர் மிச்சமில்லை, சுடுகாடு மிச்சமில்லை. கடைசியில் காடுவரை கூட ஓட, ஓட  தலைக்குமேல் குண்டு போட்டே விரட்டினார்கள் மரணத்தின் வாசல்வரை. சிங்களராணுவத்தின் கைகளில் சரணடையுங்கள் உங்களுக்கு சொர்க்கம் என்றார்கள். ஆனால், கிடைத்ததென்னவோ மரணமோட்சம். தமிழர்கள் மனிதர்களாய் கூட மதிக்கப்படாத கேவலமும், சித்திரவதையும்.

ஈழப்பிரச்சனையின் ஆணிவேர் மொழி, கல்வி, பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டு, தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தமிழர்களின் மண்ணில் மக்கட்தொகை கட்டமைப்பு மாற்றப்பட்டு எங்கள் அரசியல் பிரதி நிதித்துவம் பறிக்கப்படுவது. ஆக அடிப்படையில் பிரச்சனை வேறாய் இருக்க இந்தியா, அமெரிக்கா, சீனா அரசியல் ஆதிக்கப் போட்டியில் இடையே நசுங்கிச் செத்தது ஈழத்தமிழன் தான். அமெரிக்காவின் பயங்கரவாததிற்கு எதிரான சித்தாந்தத்தில் நேரடியாக இஸ்லாம் நாடுகள் பாதிக்கப்பட்டால் மறைமுகமாக கொன்றொழிக்கப்பட்டவர்கள் ஈழத்தமிழர்கள். எத்தனையோ விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சமூக ஊடகங்கள் முதல் விக்கிலீக்ஸ் வரை அமெரிக்காவின் முகமூடி கிழிக்கப்பட்டாலும் இன்னும் அசராமல் பேசுவார் அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலர் ரோபர்ட் ஓ பிளேக், ஈழவிடயத்தில். இவர் இலங்கைக்கு விடும் எச்சரிக்கைகளுக்கு ஒரு அளவே இல்லை!! ஆனா, அதெல்லாம் சும்மா பிளேக் தமாஷ் காட்டுகிறார் என்று வேடிக்கை பார்க்கும் எங்களுக்கும் தெரியும்.

ஈழத்தமிழர்களும் ஐ, நா. வின் மனித உரிமைகள் சபைமுதற்கொண்டு தனி நபர்களாய் இலங்கையின் போர்க்குற்றவாளிகள் என்று கருத்தப்படுபவர்கள் மீது வழக்கு தொடுத்தும், தொடுக்கவும் தம்மாலான முயற்சியை செய்துகொண்டெ இருக்கிறார்கள். இந்த முயற்சியால் குறைந்தபட்சம் இலங்கையின் முகமூடியை கிழிக்கலாம். இவர்களின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பிரித்தானியா, அமெரிக்கா என்று தொடங்கி இப்போ அவுஸ்திரேலியா வரை தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களுக்கும், தூதுவர்களுக்கும் எதிராக வழக்கு தொடர கொஞ்சூண்டு தர்மசங்கடம் இலங்கைக்கு. எப்படியும் அடித்துப் புரண்டு இந்தியா காப்பாற்றும் என்கிற நம்பிக்காயாய் கூட இருக்கலாம், வழக்கம்போல்.

இலங்கை ஜனாதிபதி பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள அவுஸ்திரேலியா செல்லப்போவதாக இருக்கிறார். போர்க்குற்றவாளிக்கு பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு ராஜபக்‌ஷேவுக்கு சிவப்பு கம்பளம் கொடுத்து இந்தியா போல் அவுஸ்திரேலியாவும் வரவேற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எற்கனவே பிரித்தானியா சென்று பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருந்தவர் ஈழத்தமிழர்களின் முயற்சியால் திருப்பி விரட்டியடிக்கப்பட்டவர். இரட்டை குரியுரிமையில் அவுஸ்திரேலிய குரியுரிமை பெற்றிருக்கும் முன்னாள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பாலித கோகனவுக்கும், மற்றும் முன்னாள் கடற்படைத்தளபதியும் இன்னாள் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவருமான திசர சமரசிங்கே மீதும் இப்போ வழக்கு போடவும் முயற்சிகள் ஈழத்தமிழர்களால் செய்யப்படுகிறது.

போர்க்குற்றங்களை புரிந்துவிட்டு தூதுவர் விலக்களிப்பு சிறப்பு அதிகாரங்கள் (அது வேறொன்றுமில்லை Diplomatic Immunity ) மூலம் தப்பித்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் நரித்தனம். அப்படி தப்பித்தும், விடாமல் வழக்கு போட்டு ஜேர்மனியில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி இலங்கை சென்றவர் முன்னாள் ராணுவ அதிகாரியும் பின்னாளில் ஜேர்மனி, சுவிற்சலாந்து மற்றும் வாத்திகானுக்கான இலங்கைக்கான உதவி தூதுவருமான ஜகத் டயஸ். இன்னும் ஐ. நா. வுக்கான உதவி நிரந்தரப் பிரதிநிதியாய வலம் வருபவர் முன்னாள் ராணுவ கட்டளைத்தளபதியான ஷவேந்திரா சில்வா என்பவர். இவர் New York Post - Sunday Edition ஒன்றில் மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புக்கு மாறாக போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டியவர் ஐ. நா. வின் உதவி பிரதி நிதியாய நியமிக்கப்பட்டவர் என்று குறிப்பிடுகிறது.


அமெரிக்காவும், இந்தியாவும் மட்டுமல்ல இந்த ராணுவ அதிகாரிகளும் தான் ஈழத்தமிழர்களை மரணயாத்திரை போகவைத்தவர்கள். இப்போ இவர்களை சட்டப்படி போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டுமென்பது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பு.

அக்டோபர் 10, 2011

எதுவரை ஈழத்தமிழர்கள் காத்திருக்க வேண்டும்!!


ஈழம்...! பேசினாலும் முடியாத கதையாய், அழுதாலும் தீராத வலியாய் ஈழத்தமிழர்களுக்கு இருக்க, சர்வதேசத்தில் எல்லோருடைய நிகழ்ச்சி நிரலிலும் அவர்களின் தேவைக்கேற்றாற்போல் இடம்பிடித்திருக்கிறது. பல நேரங்களில் புரிந்தும், சில நேரங்களில் புரியாமலும் இருக்கிறது ஈழத்தமிழர்களுக்கான சர்வதேசத்தின் முதலைக்கண்ணீர். தமிழர்களும் இதிலெல்லாம் ஒருநாள் மாற்றம் வரும், அந்த மாற்றத்தின் மாற்றம் நாங்கள் அசைக்கும் ஒவ்வொரு துரும்பிலும் இருக்கிறது என்று இடைவிடாத முயற்சிகள் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். வாய் கசந்ததோ, இனிப்பு கசந்ததோ என்கிற நிலையாய் இவர்கள் குறித்தும் சில குழப்பங்கள். நாங்கள் தான் தமிழர்கள் ஆயிற்றே!!! இதைவிளக்க பழமொழி தேவையில்லை. தமிழர்கள் என்கிற அடைமொழியே போதும . .

தனி ஈழம் என்கிற கருத்துருவம் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு சிங்கள அடக்குமுறைக்கும், வன்முறைக்கும் பலியாக்கொண்டிருந்த, இன்னமும் பலியாகும் தமிழர்களின் அறிவுக்கும், பார்வைக்கும் வைக்கப்பட்ட நாள் முதல் அது விமர்சனப் பொருளாகவே பரிமளிக்கிறது. கூடவே பரிமாண வளர்ச்சியும் கண்டிருக்கிறது, மறுப்பதற்கில்லை. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பது கம்யுனிஸ்ட் கட்சியாலும் (1944), இலங்கை தமிழரசு கட்சி (1951- Federal Party), வட்டுக்கோட்டை தீர்மானம் (1976), திம்பு பேச்சுவார்த்தை (1985), பிறகு 2002 இல் மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. யார், யாரோ போராடினார்கள் எங்கள் பறிக்கப்பட்ட மண்ணுக்கும், உரிமைகளுக்குமாய். சிலபேருக்கு அது பிழைப்புவாதம். இறுதிவரை போராடியவர்கள் நாங்கள் கடைசிவரை கொண்ட கொள்கையில் இருந்து விலகாதவர்கள் என்கிற அழியாப்புகழுடன் இறுமாப்புடன் வரலாற்றில் வாழ்கிறார்கள், என்றென்றும் வாழ்வார்கள்!

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டினானாம். புலிகளின் கொள்கைகளை விமர்சிக்க திராணியற்றவர்கள் அவர்களையே விமர்சித்து தங்கள் கையாலாகத்தனத்தை இன்றுவரை  வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  புலிகளை விமர்சிப்பதை தவிர ஈழத்தமிழர்களுக்காய் ஏதாவது செய்திருப்பார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். அது போலத்தான் விமர்சிக்கப்பட்டது தமிழீழ விடுதலிப்புலிகள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு கொடுக்க நினைத்த வடிவமும். ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணயம், தனியாட்சி என்பதெல்லாம் புலிகள் காட்சிக்குள் வருமுன்பே உருவான கருத்துருவங்கள். புலிகள் அதை நியமாக்கப் போராடினார்கள். எப்போதுமே தங்கள் கொள்கையிலும், அடைய நினைத்த அரசியல் இலக்கிலும் இருந்து விலாகமல் பல தடைகளை, அவதூறுகளை கடந்து வந்தவர்கள் புலிகள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் முட்டை போட்டார்கள். அந்த முட்டையில் முடி இருக்கிறதா, இல்லையா என்பது சிலரது வாதம். சிலருக்கு அதில் முடி இருக்கிறது. அது போர்க்குற்றம் என்கிற முடி என்பது பெரும் களிப்பு. என்னமோ உலகத்தில எல்லாரும் யோக்கியர்கள். புலிகள் இவர்களுக்கெல்லாம் கீழானவர்கள் என்கிற சிந்தனையை தமிழர்களிடமே வளர்த்தெடுக்க நினைக்கிறார்கள் போலும். இன்னமும் அது குறித்து குவியவில்லை வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள். அது குறித்த தேடலின் முடிவில் ஒருவேளை திரும்பிப் பார்த்தால் ஈழத்தமிழினம் முற்றாய் துடைத்தழிக்கப்பட்டிருக்கலாம். அது பற்றி நாங்கள் பிறகு யோசிப்போம். இப்போதைக்கு புலிகளின் மேல் எல்லாப் பழியையும் சுமத்தி விட்டு நடையை கட்டுவோம். அல்லது, புலிகளை விமர்சித்தே பிழைப்பை நடத்துவோம் என்பது அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் உறுதுணையாய் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் கொள்கைப்பிடிப்பாய் இருக்கலாம்.

இலங்கையின் உச்சநீதிமன்றம், அரசியல் யாப்பு முதல் உள்ளூராட்சியின் துணைவிதிகள் வரை தமிழர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்று சர்வதேச நெருக்கடிகளை தீர்க்கும் அறிஞர் குழாம் பக்கம், பக்கமாய் அறிக்கை எழுதுவார்களாம். அட கருமாந்திரமே!!! அதுக்குத்தானே, அவற்றிலெல்லாம் மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளுக்காகத்தானே புலிகள் போராடினார்கள் என்றால்; இல்லையாம், அவர்கள் பயங்கரவாதிகளாம். அமேரிக்கா பொய்யை உண்மை மாதிரி சொன்னா அதை இவர்கள் (சர்வதேச நெருக்கடிகள் குழு) மட்டும் என்ன மறுக்கவா போகிறார்கள். இவர்களின் தர்ம நியாயப்படி ஐ. நாவின் மேற்பார்வையில் சுயநிர்ணயம் வேணுமா வேண்டாமா என்று தமிழர்களிடத்தில் ஒரு பொதுவாக்கெடுப்பு செய்ய பரிந்துரைத்தால் இவர்கள் செய்யும் உலகமகா சேவைகளின் சிறப்பை மெச்சலாம். ஆனால், இவர்களோ ஈழவிடயத்தில் புலம்பெயர் தமிழர்களை குத்திக்காட்டுவதையே இலங்கை அரசுக்கு ஆதரவு தருவது போல் செய்பவர்கள். 

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பது புலிகளின் சித்த்தாந்தம். அது புலத்தில் புலி ஆதரவாளர்களால் (அவர்களின் பதம் Pro-LTTE Ideology) மட்டுமே பேசப்படுகிறது என்பது மாதிரியான ஒரு தோற்றப்பாட்டை இவர்கள் உருவாக்குகிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. அது இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க ஒரு தடையாய் இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் புலிகளின் தன்னாட்சி, தேசம், தேசியம் என்கிற கோட்பாடுகளை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சிக்கட்டுரை எழுதுகிறது சர்வதேச நெருக்கடிகள் குழு (International Crisis Group)

புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னும் இன்னும் கூட புலத்தில் வாழும் தமிழர்கள் எமக்குரிய சுயநிர்ணய உரிமை கேட்கிறார்கள். அதுக்கு பதில் சொல்ல யாருமில்லை. இலங்கையின் அரசியல் யாப்பு, நீதித்துறை, சட்ட ஒழுங்கை மட்டும் அறிவுஜீவிகளும் கொள்கைவகுப்பாளர்களும் விமர்சித்து எழுதிவிட்டு அங்கெல்லாம் மறுக்கப்படும் உரிமைகளுக்கு என்ன தீர்வு என்று கேட்டால் இவர்களுக்கு கசக்கிறது. பயங்கரவாத ஒழிப்பில் போர்க்குற்றம் நிகழ்ந்து, மனிதத்திற்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டது என்றும் ஏதேதோ சொல்லி பிரச்சனையின் மூலம் பற்றியோ அல்லது தமிழர்களின் அரசியல் அபிலாசை பற்றியோ பேச மறுப்பதோடு, புலம் பெயர் தமிழர்களை குற்றங்குறை கூறுவதையும் முழுநேரமாய் செய்வார்கள் போல.

இப்போ இது குறித்து நான் இங்கே முக்குவதற்கு காரணம், இப்போ மறுபடியும் இலங்கையில் கொஞ்சம், கொஞ்சமாக ஈழத்தமிழர்களின் "சுய நிர்ணய உரிமை" குறித்து அறிவுஜீவிகள் பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்பது தான். இலங்கையின் பத்திரிகை சுதந்திரம், தனிமனித உயிர் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ராணுவ அடக்குமுறை மூலம் பறிக்கப் பட்டாலும், அது குறித்து இப்போது இவர்கள் பேசுவது நல்லதோர் அறிகுறியாய் தோன்றுகிறது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை/தனியாட்சி குறித்த பேச்சுகள் எப்போதோ தோற்றம் பெற்றாலும், அது அப்பப்போ இலங்கை அரசால் தட்டிக்கழிக்கப்பட்டே வந்தது. இப்போ ராஜபக்கேஷேக்களின் ஆட்சியில் அட்டூழியம் தலைவிரித்தாட, நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்க சிங்கள அறிவு சீவிகளும் கொஞ்சம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இலங்கையின் அரசியல் திருத்தச்சட்டங்கள் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பதிமூன்றாவது திருத்தச்சட்டம் காத்திரமான முறையில் செயற்படுத்தப்பட வேண்டுமாம்!! இது இந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கான அதிவிஷேட கண்டுபிடிப்பு என்பது உபரித்தகவல். பதினேழாவது திருத்தச்சட்டம் என்பது பதினெட்டாவது திருத்த சட்டத்திற்கு வழியமைக்கும் என்றெல்லாம் எழுதுகிறார்கள். நல்ல விடயம்.  அட, நீங்க குழம்பாதீங்க இந்த திருத்த சட்ட மூலங்களின் வழி அவர்கள் அறிவுறுத்துவது இலங்கையின் ராணுவ ஆக்கிரமிப்பை ஒழித்து, ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தான் அப்படியென்று இலங்கை விடயத்தில் கொஞ்சம் யதார்த்தம் மீறி யோசிக்கிறார்கள் போல. குறிப்பாக இலங்கையின் உச்ச நீதிமன்றம் வரை தனது அதிகாரத்தை செலுத்தும் சகல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை குறித்த மாற்றம் பற்றி குமுறுகிறார்கள் அவ்வளவே.

பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் என்றவுடன் தான்  இன்னோர் விடயமும் ஞாபகம் வருகிறது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த சட்ட மூலம் வடக்கு-கிழக்கு இணைப்பு, அதிகாரப் பரவலாக்கல் என்று இருந்தது.  அங்கேயும் பிற்காலத்தில் உச்சநீதிமன்றம் வடக்கு-கிழக்கை பிரித்தது வேறு விடயம். 2002 ம ஆண்டு பேச்சுவார்த்தைகளின்  போது சமஷ்டி ஆட்சிமுறையில் அதிகாரப்பரவலாக்கம் என்கிற பதத்தை பாவிப்பது தவறு என்று தான் சுட்டிக்காடியத்தை கனேடிய நிபுணர்கள் ஏற்றுக்கொண்டதாக போரும் சமாதானமும் நூலில் எழுதியிருக்கிறார் அன்ரன் பாலசிங்கம். காரணம் சிங்கள அரசியல்வாதிகள் அதுகுறித்து குளறுபடியான கருத்துக்களை கொண்டிருப்பது தான் என்கிறார். அது எவ்வளவு தூரம் குளறுபடியானது என்பதற்கு முன்னாள் முதலமைச்சர் என அழைக்கப்பட்ட  வரதராஜப் பெருமாள் தனது பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று துறந்துவிட்டு இந்தியாவிடம் மறுபடியும் தஞ்சமடைந்ததில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

புலிகள் சமஷ்டி ஆட்சிமுறையில் தீர்வு தேடினார்கள் என்கிற விமர்சனப் பார்வைக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார். இங்கே இந்தக்கூற்றின் மூலம் அவர் சொல்ல விளைந்தது தமிழர்களின் சுய நிர்ணய உரிமை பற்றியே. அது உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமை (Internal, External Self-Determination) குறித்த சர்வதேச, ஐ. நாவின் (அரசுகள் மத்தியில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் நிலைநாட்டுவது பற்றிய சர்வதேச விதிகள்) சட்ட திட்டங்களுக்கு அமைவாக பேச்சுவார்த்தைகளின் மூலம் ஆராயப்பட்டது.

எது எப்படியோ ஆரம்பத்திலிருந்தே, அதாவது புலிகளின் காலத்துக்கு முன்பிருந்தே ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பது முன்வைக்கப்பட்டே வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில் அது மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அது புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தபின் ஏனோ நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. இப்போது ஈழத்திலிருந்து அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படும் ஓர் குற்றச்சாட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்து காத்திரமாக தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்பது தான். அதுக்குப் பின்புலத்தில் இந்தியா செயற்படுகிறது என்பது பட்டவர்த்தனமான உண்மை.

தவிர, முக்கியமாய் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் என்றே ஈழப்பிரச்சனையின் முனைப்பும் மழுங்கடிக்கப்படுகிறது. சர்வதேச சட்டங்கள், நியாயம், தர்மம் என்று எல்லாமே ஈழத்தமிழர்களின் விடயத்தில் சரியாய் அமைந்திருந்தும் போர்க்குற்றங்கள் குறித்த நியாயமான விசாரணையே இழுபறியாய் இருக்கிறது. போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டியது தான். ஆனால், அதை மட்டுமே நம்பியிருந்து எங்கள் சுயநிர்ணய உரிமை குறித்த குரலை வெறுமனே அது புலம்பெயர் தமிழர்களின் கோட்பாடு, கொள்கை என்கிற சர்வதேச சூழ்ச்சிக்கு பலியிடுவது நியாயமில்லை. அதை இப்போது ஈழத்தில் இருக்கும் அறிவுஜீவிகள் பேசத் தலைப்பட்டிருப்பது ஆரோக்கியமான ஓர் நகர்வாய் தோன்றுகிறது. தமிழர்களின் பூர்வீக வடக்கு, கிழக்கில் ராணுவ ஆக்கிரமிப்பை, ராணுவ முகாம்களை முற்றாக அகற்றிவிட்டு அங்குள்ள தமிழர்களிடம் எங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டுமா என்று கேட்கவேண்டியது தானே.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பது புலிகளின் கண்டுபிடிப்போ அல்லது பொழுதுபோகாத புலம்பெயர் தமிழர்களின் கற்பனையோ அல்ல. அது தான் ஈழவிடுதலை!!! தமிழர்கள் என்கிற ஒரு தனியினம் தனது அடிப்படை உரிமைகள், பொருளாதார, அரசியல், பண்பாட்டு உரிமைகளை பாதுக்காக தனியே பிரிந்து செல்வதென்பது  எந்தவொரு சந்தேச சட்டத்திலும் பிழை என்று சொல்லப்படவில்லை. ஈழத்தில் வாழும் தமிழர்கள் அவர்களுக்குரிய சுயநிர்ணய உரிமை  குறித்து பேசும் சுதந்திரம் இலங்கை அரசால் அனுமதிக்கப்படும்வரை காத்திருக்க சொல்கிறார்களா இந்த அறிவுஜீவிகள்?

தொடர்புடைய பதிவுகள்:
உதவி:Image Courtesy: lulurathi :)

அக்டோபர் 01, 2011

வர்ணமும் ஜாதியும் தாராண்மை ஜனநாயகமும்!!!


வலியவன் சட்டமியற்றி ஆண்டுகொண்டிருக்க, தக்கன அனைத்தும் பிழைத்துக்கொள்ள மற்றவன் எல்லாம் புலம்பியோ அல்லது அமைதிகாத்தோ நகர்கிறது அனைவரின் பொருளியல் வாழ்வும். அமேரிக்கா நியுயோர்க்கில் கீழே 'Wall Street' இல் குழுமியிருந்து பொருளாதார சுனாமியால் பாதிக்கப்பட்டு வாழ வழி தெரியாதவன் எதிர்ப்பை காட்டும் போது கைகளில் Champagne கிண்ணத்துடன் அவர்களுக்கே உரிய மிடுக்கான ஆடை மற்றும் தோரணையுடன், முகத்தில் மாறாத புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

மீண்டும் பொருளாதார வீழ்ச்சி, நிச்சயமில்லா வாழ்வாதாரம் என்று எதிர்காலம் மற்றும் வாழ்க்கை குறித்த பயங்கள் அமெரிக்காவிலிருந்து உலகின் அத்தனை பாகங்கங்களுக்கும் தொற்றாக பரவிக்கிடக்கிறது.

மனிதவாழ்வை அதன் தரத்தை தக்கவைத்துக்கொள்ள எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியின் விளைவாய் துன்பமும், கஷ்டமும்  எல்லோருக்கும் பொதுவானது என்றால் பொறுத்துக் கொண்டு போகலாம் என்று தேற்றிக்கொள்ளலாம். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் என்பது வர்க்க வேறுபாடுகள் தவிர்ந்த வேறு வடிவங்களில் இல்லையா என்று நினைத்தால் உரிமை மறுப்பு என்பது என்னென்ன வடிவங்களில் 'Free Market World' இல் நடந்துகொண்டிருக்கிறது என யோசிக்க வைக்கிறது. இந்த எல்லைகளற்ற சுதந்திர வர்த்தகம் எங்கிருந்து எப்படி தோற்றுவாய் கொண்டது, கொஞ்சம் பின்னோக்கி தேடிப்பார்க்கிறேன்.

உலகப்போர்கள், பனிப்போர் என்றார்கள். அங்கே பெரும்பாலும் ராணுவம் மோதிக்கொண்டது. முதலாம் உலகப்போரின் பின்பு கம்யுனிசம், பாசிசம் மற்றும் நூற்றாண்டு கடந்து ஜனநாயகத்தின் மீள்பிறப்பு உருவானது என்றார்கள். ஒருவழியாய் அங்கிருந்து முன்னேறி ரஷ்யாவும், சீனாவும் இன்னும் சில நாடுகளும் கம்யுனிஷம், சோஷலிஷம் என்றார்கள். காலப் போக்கில் அதுவும் சொத்துரிமை, நாட்டின் மொத்த உற்பத்தி, மனித உரிமைகள் என்று வேண்டியதும், வேண்டாததுமான கணக்கு வழக்குகள் தொடர அதுவும் வழக்கொழிக்கப்பட்டது.

சித்தாங்கள் தோற்றுப்போனதா அல்லது அதன் வழிவகைகள் தோற்றுப்போனதா என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன், என் அறிவுக்கு எட்டியவரை. தாராள தனியார் சொத்துடமை சட்டம் தான் பொருளாதார வளர்ச்சிக்கு தேவை என்று அதுவும் தாரளாமாய் அனுமதிக்கப்பட்டது. முடிவு பொருளாதார சுனாமியாய் உலகில் உழைத்துப் பிழைப்போரில் வயிற்றில் அடிக்கிறது. எப்படியோ, உலகப்போரின் முடிவில் பனிப்போர் ஆரம்பமாகியது. பனிப்போர் முடிவின் போது புதிதாய் ஓர் இலக்கில் காலடி வைத்துக்கொண்டிருந்தது உலகம். இப்போது தாராள ஜனநாயகம் தான் உலக மயமாக்கலுக்கும் பொருந்துமாம்!!

புதியதோர் உலகம் செய்வோம் என்று பாரதிதாசன் பாடியதை யாரோ அமெரிக்க ஜனாதிபதி மற்றும் முதலாளிகள் ரூம் போட்டு நிறையவே யோசித்து ரசித்திருப்பார்கள் போல. சர்வதேச சமூகம் என்று தனக்குத்தானே பெயர்சூட்டி "புதிய உலக ஒழுங்கு" என்று புதிதாய் ஓர் கோட்பாட்டை உருவாக்கினார்கள். அமேரிக்கா தன் அரசியல் பொருளாதார சுயதேவைப் பூர்த்திக்கு உள்நாட்டு குழப்பங்களையும், அதனை அடக்கியொடுக்க சர்வாதிகாரிகளையும் உருவாக்கினார்கள். முன் எப்போதையும் விட "இனப்படுகொலை" என்பது உலகில் அதிகமாய் நடைபெற்றது, அது அதிகம் பேசப்பட்டது என்று குறிப்பிடுகிறார் சாமுவேல் ஹண்டிங்டன். இவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, விட்டுவிடுங்கள்.

எங்கேயோ சுற்றி எப்படி யோசித்தாலும் ஒரு புள்ளியில் மறுபடியும் புத்தி சிக்கிக்கொண்டது. புதிய உலக ஒழுங்கில் எல்லாமே ஒழுங்காய் இருக்கவேண்டும் என்கிற நியதி ஏனோ தலைகீழாய் மாறிப்போனது. அல்லது தலைகீழ் விதியே பொது விதியானது. உலகமயமாக்கலில் ஒருசாரார் திளைத்தாலும் அதன் பெயரால் உரிமைகளும், சொந்த மண்ணும் பறிக்கப்பட்டவர்கள் மதம், இனம், மொழி, பண்பாடு என்கிற கூறுகள் அல்லது அம்சங்களின் அடிப்படையில் போராடவும் செய்கிறார்கள்.

என்னதான் அமெரிக்கர்கள் போல ஆங்கிலம் பேசினாலும், Corn Flakes, McDonalds சாப்பிட்டாலும் அது செரித்து முடித்தபோது என் சுயம் என்னை கேள்வி கேட்டது. என் வேர்கள் எங்கே? என் அடையாளங்கள் என்ன? நான் அமெரிக்கர்கள் போல சிரித்தாலும், அழுதாலும், பேசினாலும், நடந்தாலும் நான் அமெரிக்கன் கிடையாது. என் வேர்கள், பண்பாடு, மக்கள், எனக்கு என் மண்ணில் மறுக்கப்பட்ட உரிமைகள் என்று என் தனித்தன்மைகள் குறித்த ஆயிரம் கேள்விகள் எனக்குள்.

கேள்விகள் பிறக்கும் போதெல்லாம் அது குறித்த தேடல்களும் இயல்பாகவே உருவாகிவிடும் எனக்குள். என் உரிமைகள் குறித்த அறிவுத்தேடலில் சிக்கியது தான் ஜாதி, வர்ண சமூக அமைப்பும் அதன் தாக்கங்களும். என் மண்ணில் எனது உரிமைகள் பறிக்கப்படுவதற்கு உலக அரசியலும் காரணம், யாரும் மறுக்கமுடியாது. அது இன்று உலகால் ஓரளவிற்கு அறியவும் செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவில் எப்படி வர்ணமும் ஜாதியும் ஆட்சிபீடத்தில் கோலோச்சுகிறது, எப்படி பெரும்பானமையினரின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என்று கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. வல்லவன் வகுத்த சட்டங்களும், தக்கன பிழைப்பதும் இங்கேயும் கொஞ்சம் மனக்கசப்போடு!!

முதலில் வர்ணம், ஜாதி என்பதன் அடிப்படை தத்துவமே சுத்த அபத்தம் என்று சொன்னால் அது மிகையே இல்லை. இதன் நதிமூலம், ரிஷிமூலம் பார்த்து இனி ஆகப்போவது ஒன்றுமில்லை. அந்தளவுக்கு ஜாதி குறித்த அறிவீனங்கள் விஷவாயுவாக பரவிக்கிடக்கிறது எம்மிடையே. வர்ணம் என்றால் அது பிராமணர்கள்-குரு/தீட்சிதர், சத்திரியர்கள்-போர்மறவர், வைஷ்ணவர்கள்-வியாபாரிகள், சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிறது. ஜாதியின் கணக்குவழக்கு எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், ஜாதி என்பது தொழில் அடிப்படையில் பகுக்கப்பட்டு மனிதர்கள் பாகுபடுத்தப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதுவரை தெளிவு.

சரி, வர்ணத்தை யார் கண்டுபிடித்தார்கள்? பதில் ஆரியர்கள்! ஆரியர்களின் வர்ணம் குறித்த குறிப்புகள் மற்றும் பிரிவுகள், பாகுபாடுகள்  தமிழர்களிடையே இருந்ததில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதை பெரும்புலவர் வெள்ளைவாரணனார் தொல்காப்பிய ஆய்வுரைப்பகுதியில் "...... பழந்தமிழகத்தில் மக்களை நிலவகையாற்பகுத்தல் அல்லது குலவகையாற் பகுத்துரைக்கும் வழக்கம் என்றுமே நிலவியதில்லை" எனக் குறிப்பிடப்படுகிறது (தொல்காப்பியப் பூங்கா, கலைஞர் மு.கருணாநிதி ப. 244).

ஜாதி என்பதும் அவரவர் செய்த கர்ம வினைகளின் விளைவாம்!!! அது "கர்மா" என்றும் அழைக்கப்படுகிறது. அது என்ன கருமமோ எனக்கு புரியவில்லை. இருந்தாலும் இரத்தம், மரணம், அழுக்கு சம்பந்தமான எந்தவொரு வேலை அல்லது தொழிலையும் பிராமணர்கள் செய்வதில்லை. அவ்வாறான வேலைகளை செய்ய "சூத்திரர்" எனப்படுவோர் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று படித்த போது (Francis Fukuyama- The Origins of Political Order pg. 166) மனதில் இயல்பாய் இன்னோர் கேள்வி எழுந்தது. பிராமணர்களும் சூத்திரர் போல் மனிதப்பிறவிகள் தானே? பிறகென்ன?

அவ்வாறான குருதி, மரணம், அழுக்கு சம்பந்தப்பட்ட வேலைகள் தூய்மையற்ற தொழில்களாம்!! ம்ம்ம்ம்....இருக்கட்டும், இருக்கட்டும்.... அப்படிஎன்றால் இன்னோர் கேள்வி மனித உடலும், இரத்தமும் எல்லா மனிதர்களுக்கும் இயற்கை கொடுத்தது. அது பிராமணர்களுக்கும், சூத்திரர்களுக்கும் வேறு, வேறு நிறமோ குணமோ காட்டுவதில்லை. உயர் ஜாதி அல்லது வர்ணத்தின் அடிப்படையில் படைக்கப்படவர்களின் உடம்பில் இறுதி சந்தனமும், ஜவ்வாதுமா வெளியேறுது. எல்லா மனித உடலிலும் இருந்தும் ஒரே மாதிரியான கழிவு, மலம், சலம் தானே ஒழுகிவழியுது. பிறகு இதிலென்ன பாகுபாடு!!!

ஏன் வர்ணமும் ஜாதியும் எப்போதும் மதத்தோடு தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகிறது. கடவுளின் தலையிலிருந்து பாதம் வரை உள்ள ஒவ்வொரு பகுதியும் மனிதப் பிறப்பின் வர்ணத்துடனும்; ஜாதி என்பது கர்மா அல்லது பாவம் என்று கொண்டாலும்; அது கூட எப்படி பிராமணிய மதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. ஆக, வர்ணமும் ஜாதியும் காரணங்களாய் காட்டப்பட்டு மனிதர்கள், மனிதர்கள் தவிர்ந்த வேறு பிறவிகளாய் பார்க்கப்படுகிறார்கள். அது ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் தொடர்வது தான் விந்தை! இதையே
இப்படியும் கூறுகிறார்கள்.... "பார்பனியத்திற்கென்று ஒரு மெய்யியல் இருக்கிறது, (கர்ம, தர்ம, தண்டக்கோட்பாடு. இதுவே வர்ணாச்சிரம தர்மம்) சாதிக்கென்று தனியே ஒரு மெய்யியல் இல்லை. (தமிழ்த்தேசியம்-சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை)

"If one wanted an example of a religion that, a la Marx, justified the domninance of a single, small elite over the rest of society, one would choose not Christianity or Islam, with their underlying message or universal equality, but rather the Brahmanic religion that appeared in India in the two millennia B.C. according to the Rg Veda" (Francis Fukuyama, The Oringins of Politcal Order, pg, 163).

கிறஸ்துவம் அல்லது முஸ்லிம் மதத்தில் சொல்லப்படும் செய்தி போல் எல்லோருக்கும் "பொதுமை" என்கிற சமத்துவம் பிராமணிய மதத்தில் ஏன் இல்லை என்று புக்குயாமாவின் மேற்சொன்ன கூற்றும் யோசிக்க வைக்கிறது. கடவுளின் முன் எல்லோரும் சமம் என்றால் எப்படி வர்ணம், ஜாதி என்று அர்த்தமற்ற விடயங்களால் பாகுபாடு காட்டப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்.

இந்த கூற்றின் விவரத்தை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் கூற்றில் நோக்குகிறேன்.

"தமிழ்நாட்டில் எவ்வளவு தான், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை ஏந்திப் பார்ப்பனியத்திற்கு எதிராகப் போராடினாலும் அதனை முற்றிலும் வீழ்த்த முடியவில்லை. அரசுத்துறை, தொழில்துறை, ஊடகத்துறை, கலை இலக்கியத்துறை ஆகியவற்றில் இன்றும் தமிழ்நாட்டில் பார்ப்பனியமே கோலோச்சுகிறது. தமிழ்நாட்டில் செயற்படும் பார்ப்பனியத்திற்கு உயிரும் ஊட்டசத்தும் தில்லித் தலைமை பீடத்திலிருந்து வருகிறது" (தமிழ் தேசியம்-சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை).

ஆக, என்னுடைய புரிதல் அமெரிக்காவில் ஏழை, பணக்காரன் என்கிற வர்க்க வேறுபாடுகள் பொருளாதார சுனாமியில் மனிதர்களின் இன்னோர் பக்கத்தை படம் பிடித்துக்க்காட்டுகிறது. அதே போல் ஓரளவிற்கு நானறிந்த இந்திய-தமிழ்நாட்டு சூழலில் வர்க்க வேறுபாடு என்பது வர்ண-ஜாதி அடிப்படையில் கோலோச்சுகிறது. ஒரு தனிமனிதனை வர்ணம்-ஜாதியின் பெயரால் பாகுபடுத்தி கல்வியும், பொருளாதார மேம்பாடும் மறுக்கப்பட்டால் அவன் எப்போது வாழ்வில் உய்வது. இல்லையே!! இங்கே தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம். அது சட்டமாக்கப்பட்டிருக்கிறது என்றும் வாதாடலாம்.

எனக்கு தமிழ்நாட்டு சூழல் அதிகம் பரிச்சயம் இல்லை என்றாலும், இட ஒதுக்கீடு என்பது கூட மறுபடியும் ஜாதியை அங்கே வலியுறுத்தி நிற்கிறது போல் தெரிகிறது. எந்தவொரு அரச ஆவணங்களிலும் எதற்காக ஒரு தனிமனிதனின் இந்த ஜாதி என்கிற முத்திரை பதிக்கப்படுகிறது . இந்த அபத்தங்களை ஒழிக்கவேண்டுமானால் இதை முதலில் இல்லாதொழிக்க வேண்டுமோ!!

இருந்தும் ஒரு சிறுபான்மையினர் இந்த வர்ண-ஜாதி மெய்யியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்தியா என்கிற ஒரு மிகப்பெரிய ஒரு நாட்டை தனது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்திருப்பது வியக்கவே வைக்கிறது. இவ்வளவிற்கும் இந்தியா ஒரு ஜனநாயக நாடாமே!!!மொத்தத்தில் அமெரிக்காவின், இந்தியாவின் தாராள ஜனநாயகம் ஒரு குறிப்பிட்ட சாராரின் நலன்கள் பேணத்தான் போலும்.

Reference:

1. The Clash of Civilizations and the Remaking of World Order (Paperback Edition 2003) - Samuel P. Huntington

2. The Origins of Political Order  (2011) - Francis Fukuyama

3. தொல்காப்பியப் பூங்கா - (பன்னிரண்டாம் பதிப்பு 2003) கலைஞர் மு. கருணாநிதி.

4. "தமிழ்த் தேசியம்" சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை - 2009
 - தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி

Image Courtesy: Google