செப்டம்பர் 16, 2011

உயிர்ப்பும் விகற்பமில்லா வாழ்வும்!!!


மனக்குகையின் இருட்டுக்குள் நினைவுகளின் வெளிச்சத்தில் எத்தனை நேரம் என்னை தேடிக்கொண்டிருந்தேனோ தெரியவில்லை!! பழகிக்கழித்த மனிதர்கள், படித்ததும் படிக்காததுமாய் தூக்கிப்போட்ட புத்தகங்கள் என்று கண்களில் பட்ட அத்தனையும் மனித மன இருப்பின் கடந்த, நிகழ், மற்றும் எதிர்காலத்தை அசைபோட வைக்கிறது. எல்லாமே அனுபவப்பாடங்கள். அனைத்தும் எதையோ உணர்த்துகிறது. அது வாழ்க்கையா, அல்லது வாழும் விதமா சொல்லத்தெரியவில்லை. வாழ்க்கை என்றால் என்னவென்று புரிதுகொண்டால் தானே வாழும் விதம் அறிந்துகொள்ள!!! 

வாழ்க்கை என்றால், உயிரோடு இருந்து இயங்கும் நிலை என்பதைத்தவிர அன்றாடப் பிரச்சனைகள், அற்பப்பிரச்சனைகள், உறவுச்சிக்கல்கள் மற்றும் அது குறித்த உணர்வுக் குழப்பங்கள் இவற்றுக்கு முகம் கொடுப்பதா. வாழும் விதம் என்றால் இப்படி ஒன்றோடொன்று தொடர்புபட்டும், தொடர்புபடாமலும் இருக்கும் வாழ்க்கை குறித்த முரண்பாடுகளுக்கும், மனப்போராட்டத்திற்கும் தீர்வு காணும் முறைகளா!! இவை தவிர எப்போதுமே தீராத வயிற்றுப்பசி மற்றும் உடற்பசி, கேளிக்கைகள் குறித்த அற்ப ஆசைகள், இவை குறித்த மயக்கமும் மருட்சியும் எனஆட்கொள்ளப்படுவது, இவைதானா!

ஆக, உயிர், மெய், உணர்வு மூன்றும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் நிலை தான் வாழ்க்கை போலும்.

மனிதனுக்கும் வாழ்க்கைக்கும் ஆயிரம் தான் காரண காரியத்தொடர்புகளை கண்டுபிடித்தாலும் மனம் என்பது தான் இறுதியில் எண்ணங்கள், நினைவுகளின் இருப்பிடயமாய் ஆகிப்போகிறது. மனம் தான் உயிர், மெய், உணர்வு என்கிற மூன்றையும் ஒரே புள்ளியியில் இணைக்கிறது. அதுவே கடைசியில் எல்லாமுமாய் மனித வாழ்வை ஆட்கொள்கிறது. இருந்தும், உணர்வுகளாலும் எண்ணங்களாலும் மட்டுமே என்னை இட்டு நிரப்பிக் கொள்ளாமல் கொஞ்சம் பகுத்தறிவும் மனித வாழக்கைக்கு நிறையவே சுவாரசியமும் சேர்க்கிறது.

"கா​ட்சிகளும் அனுபவங்களும் வெறும் நினைவுகளாகிப் பின் அவற்றின் கூட்டு எண்ணப்பதிவுகளின் தொகுப்பே மனமென்னும் சூக்குமப்பொருளாக 'நானை'க் கட்டமைக்கின்றது என்கின்றார் அறிவியலாளர்." இப்படி விந்தைமனிதன் என் முந்தைய பதிவில் சொன்னது இங்கே சாலப் பொருந்துகிறது. இந்த நான் என்பது என் வாழ்வியல் கோலங்களோடு இயைவாக எப்படி கட்டியமைக்கப்படவேண்டும் கொஞ்சம் யோசிக்கிறேன்!

நான் வாழ்க்கையை, வாழும் விதத்தை புரிந்துகொள்ள, கற்றுத் தெளிய தேர்ந்தெடுத்த முறைகளை எனக்குள் முடிந்தவரை உருவகப்படுத்தப் பார்க்கிறேன். எப்படிப் பார்த்தாலும் வாழ்க்கையின் சாரம், அதன் உள்ளியல்பு புரியும் வேளையில் இங்கேயுள்ள அற்பங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் எனக்குள்ளே அறுந்து போகவும் செய்கிறது. எனக்கு மனப்பிறழ்வும் இல்லை. நெறிமுறை தவறும் எண்ணங்களோ அல்லது அவற்றுக்கெல்லாம் சப்பைக்கட்டு கட்டும் காரணங்கள் கண்டுபிடிக்கும் தேவையோ கிடையாது.

வாழ்க்கை, வாழும் விதம் இவை இரண்டையுமே யாரும் கற்றுக்கொடுத்து புரிவதில்லை எனக்கு. என் வழி தனி வழி என்று சொல்லும் இறுமாப்பும் என்னிடம் இல்லை. எனக்கு எது தேவை என்பதை நானே தேடிக்கற்றுக்கொகிறேன் வாழ்க்கையின் நிமித்தம், மற்றும் ஆர்வம் காரணமாக. அது அனுபவ சூத்திரத்தின் வழி கற்றுணர்வது. இயல்பூக்கமும், செயல்திறனும் ஒருங்கமைய, வாழ்க்கையின் அழுத்தங்களும் புறவிசையாய் தாக்கும் போது பட்டறிவு கிடைக்கிறது. அந்த பட்டறிவின் வழி என்னைப் பட்டை தீட்டிக்கொள்கிறேன். 

காட்சிகள், எண்ணங்கள், அனுபவங்கள் தான் நான் என்கிற என்னை பதப்படுத்துகிறது! எந்தக் காட்சியும் கண்முன்னே விரியும் பொழுதில் இறந்துபோன நிகழ்வுகளில் இருந்து புதிய காட்சிக்கு அர்த்தமோ, விளக்கமோ கொடுப்பதில்லை நான்; என் உயிர்ப்புக்கும், உய்வுக்கும் அது தேவைப்பட்டாலே ஒழிய! நான் விரும்பும், வெறுக்கும், ரசிக்கும் அத்தனைக்கும் அது பொருந்தும். அது இயற்கை முதல் இயல்பான மனிதர்கள் வரை.

என்னால் தனது உயிர்ப்புக்குரிய சிறுதுணிக்கை உணவை சுமந்து செல்லும் எறும்பையும் ரசிக்கமுடியும். அதே போல் ஒட்டுத் துணியே இல்லாத நிர்வாணத்தையும் விகற்பம் இல்லாமல் அதன் இயல்பை, இயற்கையை உணரமுடியும். காரணம், நான் காணும் பொருளையும் காட்சிகள் குறித்த என் கடந்த கால கற்பிதங்களையும் ஒன்று சேர்த்து குழப்பிக் கொள்வதில்லை.

நிர்வாணம் என்பது தான் மனித மனத்தின் உச்சபட்ச லெளகீக ஆசை அல்லது பக்குவம் குறித்த பொருளாய் இருக்குமோ எனக் கொண்டாலும்; அது எப்படி இருந்தாலும் அதை மெய்யுலகிலும் சரி, மெய்நிகர் உலகிலும் சரி வக்கிரங்களின் வடிகாலாய் தேடிப்போவதுமில்லை. வக்கிர எண்ணங்கள் என்னிடத்தில் கிடையவும் கிடையாது. நல்ல விடயங்களை தவிர வேறெதையும் அடுத்தவர் மனங்களுக்கு கடத்துவதும் கிடையாது.

அன்றாட வாழ்வில் எனக்குப் பிடித்தமாதிரி யாராவது பேசினால் கூட பேச்சு, ஆள் இரண்டையுமே விகற்பம் இல்லாமல் ரசிக்கத் தெரியும் எனக்கு. அது மனித மனம், வாழ்க்கை குறித்த என் புரிதலின் வெளிப்பாடு. இங்கே கட்டுடைக்கப் படவேண்டியது தவறான புரிதல்களும், அது குறித்த முடிவுகளுமே. மனித மனம் தானே நினைத்தாலன்றி, காலங்காலமாய் கற்பிக்கப்பட்ட அற்ப விதிகளை இங்கே யாரும் எளிதில் உடைக்கவோ மாற்றவோ முடியாது.

காட்சிகள் மறைந்தாலும் அது குறித்த பிரதிபலிப்பு நினைவுகளாய் எங்கோ அடிமனதில் புதைந்துபோகிறது. அது இன்னோர் சந்தர்ப்பத்தில் தேவைப்படும் போது மட்டுமே வெளிக்கொணரும் வித்தை என்பதும் இயல்பாய் கைவரப்பெறுகிறது. காணும் பொருளை அதுவாகவே அதன் இயல்புகளில் புரிந்துகொள்ளும் உணர்திறன் கைவரப்பெற்றால் மேற்சொன்னது ஒன்றும் விண்வெளி விஞ்ஞானமும் இல்லை என்பது புரிகிறது.

செல்லரித்துப்போன சமூக கட்டுப்பாட்டு விதிகளுக்கு கட்டுப்பட்டு என்னை வாழத் தகுதியுடைய ஆளாய் உருவாக்குவதை தான் எனக்கு விவரம் தெரியாத வயதில் இருந்து கற்றுத்தரப்படுகிறது. தக்கன பிழைக்கும் என்று சொல்லிச் சொல்லியே என் சுயமும் தொலைக்கப்படுகிறது. நான் காணும் காட்சிகள், என் தனிப்பட்ட அனுபவங்கள் என்பன சமூக விழுமியங்கள், கற்பிதங்கள் என்பதன் வழி என்னிடமிருந்து நிபந்தனையான விளைவுகளையே எதிர்பார்க்கிறது. அதுவே வாழும் முறை என்றும் போதிக்கவும் படுகிறது. அதை மீள் பரிசீலனை செய்து நான் என்கிற என்னை பகுத்தறிவின் வழி மீள் கட்டமைப்பு செய்ய நினைக்கிறேன். அதிலிருந்து தேவையற்ற விட்டுக்கொடுப்புகள் இல்லாத, நான் மேலே சொன்ன வாழும் முறையை கற்றுக்கொள்கிறேன். 

என் தனிப்பட்ட அனுபவம், எண்ணம், நினைவுகள் மூலம் என் வாழ்வின் அனுபவசூத்திரம் உருப்பெறுகிறது. என் புலனுணர்வு மற்றும் அறிவுசார் வாழ்க்கை நியதிகளை எனக்குள் நானே மீள்கட்டமைப்பு செய்வதன் விளைவே இதுபோன்ற எழுத்து.

Photo Courtesy: Thekki Photography

7 கருத்துகள்:

siva சொன்னது…

me the firstu...wait let me go read and come..:)

siva சொன்னது…

இந்த வாழ்க்கை ஒன்றுமே இல்லை
எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில்
இருக்குதோ ?

Rathi சொன்னது…

சிவா.... ஒற்றை கேள்வியில் இந்த மொத்த பதிவின்

பொருளை சுருக்கி விட்டீர்கள் :))

siva சொன்னது…

அதன் உள்ளியல்பு புரியும் வேளையில் இங்கேயுள்ள அற்பங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் எனக்குள்ளே அறுந்து போகவும் செய்கிறது. எனக்கு மனப்பிறழ்வும் இல்லை. நெறிமுறை தவறும் எண்ணங்களோ அல்லது அவற்றுக்கெல்லாம் சப்பைக்கட்டு கட்டும் காரணங்கள் கண்டுபிடிக்கும் தேவையோ கிடையாது.//
ஆகையால் நீங்களும் புத்தராக மாறிக்கொண்டு வாறீங்க.

ம் எத்தனை எத்தனை சிந்தனை எவ்ளோ பெரிய தொலைதூர பார்வைகள்
மிக மிக அற்புதம்
ஒரு வாழ்வியல் இலக்கியம் படிப்பது போல இருக்கிறது டீச்சர்.ஆனால் எனக்குத்தான் ஒன்னுமே விளங்க மாட்டுது :(

Rathi சொன்னது…

சிவா............ பதிவைப் படிச்சு எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டு, பிறகென்ன எனக்குத்தான் ஒண்டும் விளங்கமாட்டுது! வயசை குறைக்கிற முயற்சியோ... :)))

Thekkikattan|தெகா சொன்னது…

எண்ணவோட்டம் ஒரு மணிச் சரம் கோர்த்த மாதிரி நகர்ந்து கொண்டே இருக்கிறது. எங்காவது ஓர் இடத்தில் தொய்வு ஏற்பட்டால் கூட அடுத்த மணிக்கு நகர்வது சற்றே கடினம்தான். எனவே ஒரே மூச்சில் கவனச் சிதறல் இல்லாமல் படித்து முடிவது சிறப்பு இந்த கட்டுரையை பொறுத்த மட்டிலும் :)

//காரணம், நான் காணும் பொருளையும் காட்சிகள் குறித்த என் கடந்த கால கற்பிதங்களையும் ஒன்று சேர்த்து குழப்பிக் கொள்வதில்லை.//

இது எந்தளவிற்கு சாத்தியம்? பதிவு ஜே.கே ஸ்டைல் :)

Rathi சொன்னது…

பதிவு ஜே.கே. ஸ்டைல்.... சரிதான் :)

*கவனச்சிதறல் இல்லாமல்*, அது தான் வாழ்க்கைக்கும் தேவை போல.