செப்டம்பர் 07, 2011

நினைவுகள் இறவாமை வேண்டும்!!!எனக்கும் அவ்வப்போது வானம் பார்க்கும் பழக்கமுண்டு, சின்ன வயசிலிருந்தே! நீலவானத்தில் திட்டுத்திட்டாய் இருக்கும் மேகக்கூட்டத்தில் எனக்கு பிடித்ததை எல்லாம் உருவகப்படுத்தி காட்சிப்பிழைகள் சமைத்திருக்கிறேன், என் மனதுக்குள். சின்னவயசில் நான் உருவாக்கிய காட்சிப்பிழை முயல்குட்டி முதல் இந்த நிமிடம் வரை வெளியே விரிந்திருக்கும் தெளிவான வானம் போல் நிறையவே நினைவுகள், ஞாபகங்கள், அனுபவங்கள்.

அத்தனையும் காட்சிகளாய், கனவுகளாய் மனிதமனங்களில் பதிந்துபோகும் நிகழ்வுகள், சம்பவங்கள், உரையாடல்கள், பரிசுகள், ஸ்பரிசங்கள் இப்படி இன்னும் என்னென்ன விதங்களிலோ! போர்பூமியில் புழுதி கிளப்புவது போல் கலவர நினைவுகள், கடற்கரையில் அலைகளாய் கால்கள் வழி இதயம் நனைக்கும் ஈரமான நினைவுகள், பூவிதழின் மேல் ஒற்றைப் பனித்துளியாய் ஏகாந்த நினைவுகள், என் இருப்பை எனக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்தும் பசி, அயர்ச்சி, தூக்கம் என்கிற என் உடலின் தேவைகள் குறித்த ஞாபகங்கள், இப்படி பல.

தேவைகள் குறித்த தீர்மானமும் ஆசைகள் குறித்த நிதானமும் வாழ்க்கையின் படிநிலை வளர்ச்சியையொற்றி அறிவின் முதிர்ச்சியை பெற்றுக்கொடுத்தது எனக்கு. நினைவுகளின் சுவடுகள்  வழி பின்னோக்கிப் போனால் சிறுபிராயம் முதற்கொண்டு தற்காலம் வரை எத்தனையோ ஞாபகங்கள் நிரம்பி வழிகிறது. எதுவுமே அபத்தமாய் தோன்றவில்லை எனக்கு. இருந்தாலும், என் அனுபவமுதிர்ச்சி கொடுத்த இனிய நினைவுகள் என் எரிசிதை வரை என்னை தொடரவேண்டும். என் இனிய நினைவுகளுக்கு என் நாளில் இறவாமை வேண்டும்.

சிறுபிராய அம்புலிமாமா ஆசை முதல் ஓடிவிளையாடிய நினைவுகள், பள்ளிக்கூட நாட்கள், பழகிப் பிரிந்த நட்பு, பகை, துரோகம், மறக்கவே முடியாத முதல் காதல், அது தவிர மனிதர்களும்  உறவுகளும் நிறைந்த வீடு என்கிற ஞாபகங்கள், கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற திருமண பந்தம் அது குறித்த நினைவுகள் இப்படிப்பல. மொத்தத்தில் சந்தோசங்கள், சஞ்சலங்கள், நம்பிக்கை, ஏமாற்றம் இவற்றுக்கிடையே அல்லாடும் சராசரி மனமே எனக்கும்.

வயது குறித்த படிநிலை வளர்ச்சியும் அனுபவமும் பழைய ஞாபகங்கள், நினைவுகளை பட்டை தீட்டவும் செய்கின்றன. முன்னொரு பொழுதில் புரியாமலோ அல்லது பிழையாகவோ தெரிந்த அனுபவம் பிறிதொரு நாளில் இது ஏன் இப்படி இருந்திருக்க கூடாது என்றும் தோன்றுவதுண்டு. வாழ்க்கை அனுபவங்கள் குறித்த இந்த ஏன் என்கிற கேள்வி தான் தனிமனித சிந்தனை வளர்ச்சிக்கும், முடிவெடுக்கும் திறன் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் முதற்படி ஆகிறது போலும்.

என் நினைவுகள் வழி எனது இருப்பு, நிகழ்காலம், கடந்தகாலம், அதிலிருந்து எப்படி என் எதிர்காலத்தை பட்டை தீட்டுவது என்று எதையோ ஒன்றை சதா சர்வகாலமும் மனம் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த நினைவுகள் எனக்குள் இறந்து போனால் நான் என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுவேன், சொல்லத்தெரியவில்லை. நினைவுகளும் ஞாபகங்களும் எம் மனங்களில் இருந்து நீங்கிவிட்டால் வாழவேண்டிய காரணங்களும், வாழ்க்கையின் அர்த்தமும் கூட மாறிப்போகலாம்.

நினைவுகள் என்பது எப்போதுமே தனியே அசைப்போடப்படுமா. அல்லது, ஓர் ஏகாந்தப் பொழுதில் மெளனமாய் மார்பணையும் இணையோடு, துணையோடு கதைபேசுமா. அது அவரவர் அனுபம் சார்ந்தது. ஆனால், இரண்டுமே அதனதன் மொழியில் சுகமானது. என் காட்சிப்பிழைகள்முதல் தெளிந்தவானம் போன்ற துல்லிய சிந்தனை வரை எல்லாமே எனக்கு மட்டுமே உரிய நிகழ்வுகள் தான். இருந்தும் அதையெல்லாம் பகிரும் பொழுதில் அது குறித்த பிரதிபலிப்புகளும் கூடவே நிகழ்வது போல் உணர்வேன். அதை ஓர் ஆசானாய், நண்பனாய், தாயாய், இருந்து என்னை "உம்" கொட்டி ஒருவர் அக்கறையோடு உள்வாங்கும் பொழுதில் மனம் இன்னும் அமைதியாகிறது.

பகிர முடியாத, பகிர விரும்பாத இறந்தகால நினைவுகள் ஓர் தனிமனிதனுக்குள் நெருப்பாய் தகிப்பதும் உண்டு. அதுவே பகிரப்படும் போது அதிகாலைப் பனி போல் சுகமாய் குளிரவும் செய்யும். அந்தப் பகிர்தலில் கூட நினைவுகள் சுகமாய், மீண்டும் மனதில் மலர்கிறது.

நினைவுகளை, ஞாபகங்களை பகிர்ந்து கொள்ள நினைத்து நபிக்கையான உறவோ நட்போ கிடைக்காவிட்டால் மனக் குழிக்குள்ளேய புதைக்கப்படுகிறது அல்லது அங்கேயே பாழடைந்து போகவும் செய்கிறது. அனுபவங்களை, ஞாபகங்களை  மனக்குழிக்குள் புதைத்துவிட்டு புதுமனிதராய் ஒன்று எங்களை ஏமாற்றுவோம் அல்லது சுற்றியிருப்பவர்கள் எங்களிடம் ஏமாந்து போகச்செய்வோம். அதுவே வாழ்க்கையின் நியதி என்றும் சில, பல தருணங்களில் ஆகிப்போகிறது.

மனித மனங்களின் புரிதல் என்பதும், புரிந்துகொள்ளப்படுவதும் ஒரே நேர்கோட்டில் நிகழ வேண்டும். பரஸ்பரம் நிர்ப்பந்தங்கள் அற்ற பகிர்தலே நிகழ வேண்டும், காதலோடு நிகழும் கலவி போல். பிரிக்கமுடியாததாய்.

என்னை நிர்ப்பந்தங்கள் இன்றி புரிந்துகொள் என்று மற்றவர்களிடம் எனக்கு கேட்கத்தெரியும். அதுவே மற்றவர்களை புரிந்துகொள்ளும் போது மட்டும் அனுபவமும் அனுமானங்களும், வறட்டு பிடிவாதங்களும்  குறுக்கே வந்து விழுந்து என்னை குறைபாடுடைய மனம் கொள்ளச் செய்யும். அதையெல்லாம் கடந்து மனித மனங்களை, எண்ணங்களை படிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்.

எப்படி நான் நினைப்பவைகளை மற்றவர்களுக்கு சிதைவுகள் இன்றி சொல்வதென்று ஒரு பிரக்ஞையோடும் பேசப் பழகுகிறேன். என் அனுபவங்கள் வழி நான் சொல்ல நினைப்பதற்கும், நான் சொல்லும் சொற்களுக்கும் இடையே ஒவ்வாப் பொருளாய் என் சுயம் செயலிழந்து போக கூடாது. எனக்குரிய போலியான அங்கீகாரங்கள் தேவையற்றது என்பதால் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் இடையேயான போராட்டத்தில் என் தனித்தன்மைகளை இழந்தும் விடுவதில்லை. அது தெளிவான முடிவில், தீர்க்கமான வார்த்தைகளின் வடிவில் எனக்குள்ளே புலப்பட வேண்டும்.

முடிவாக என் கசப்பான வாழ்பனுபவங்களுக்கு உயிர் கொடுத்து என் புலனுணர்வுக்கு, அறிவாற்றலுக்கு புதிதாய் வடிவம் கொடுப்பதில்லை நான். அது தேவையற்ற மன உளைச்சலையே கொடுக்கும் என்பதையும் நானறிவேன். அப்பப்போ வானம் பார்த்து மேகக்கூட்டத்தில் எனக்குரிய காட்சிப்பிழைகளையும், தெளிந்த வானத்தில் என் மனப் பிரதிபலிப்பான நிஷ்களங்கம் என்கிற நிலையையும் கண்டுகொள்கிறேன். மனித மனங்களை படிக்கத் தெரிந்தவர்களிடம் என் சந்தோஷ நினைவுகளையும் பகிர்ந்துகொள்கிறேன். அங்கே என்னை நான் அடையாளம் காண்கிறேன்.

என் இனிய நினைவுகள் இறவாமை வேண்டும்!!!Image Courtesy: Google

28 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

மொத்த கட்டுரையுமே கவிதையாக ஓடுகிறது. வார்த்தைகளின் தேர்வு அதன் கோர்ப்பு இயல்பாக அமைந்து பட்டிருக்கிறது.

தலைப்பே கவிதையாக இருப்பினும், நினைவுகள் இறவாமை வேண்டுமென்பதில், எது போன்ற நினைவுகள் இறவாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுப் பெறுவதில் கவனமாக இருக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்கள் மனத்தினுள் நிறைய உலாவும் பொழுதும் எப்பொழுது வாழ்வு துடிப்பாக செல்லுவதாகவும்; மாறாக எதிர்மறையான எண்ணங்கள் மனச் சோர்வினையூட்டி இளமையில் முதுமையும், அயர்ச்சியும் உண்டு பண்ணுகிறது.

நம்மில் நிறைய பேர் வாழ்வின் இனிப்பான நினைவுகளை ஞாபமூட்டிக்கொள்வதனைக் காட்டிலும், கசப்பான நினைவுகளையே முன் நிறுத்தி கொள்வோம். அது மனத்திற்கே உள்ள இயல்பான நகர்வு.

எனவே என்ன மாதிரி இறவாமை வேண்டுமென்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அடுத்த பின்னூட்டத்தில் சந்திக்கிறேன் :)

Thekkikattan|தெகா சொன்னது…

//அனுபவங்களை, ஞாபகங்களை மனக்குழிக்குள் புதைத்துவிட்டு புதுமனிதராய் ஒன்று எங்களை ஏமாற்றுவோம் அல்லது சுற்றியிருப்பவர்கள் எங்களிடம் ஏமாந்து போகச்செய்வோம்.//

நமக்கு கிட்டிய அனுபவங்கள் சோதனையாக கடக்க நேர்ந்தவைகள், அதிலும் குறிப்பாக மனதினுள் குற்றவுணர்வினை ஏற்படுத்த வல்லமை உடைய அனுபவங்களை மிகக் கவனமாக படித்து நமக்கு சாதகமாக திருப்பி நம்மின் ஒரு பகுதியாக, வளர்ச்சிக்கு உதவிய விடயமாக எடுத்துக் கொள்வது மிக்க நலம் பயக்கலாம் in the long run.

அப்படியாக ஆக்கிக் கொள்ளும் பட்சத்தில் அந்த புரிதலே நமக்கு எரிசக்தி... நம்மைச் சுற்றி ஏனைய அனைத்து விசயங்களும் நொருங்கி விழும் பொழுது நம்மை மீளெடுத்து வழி நடத்தும்.

பதிவு ரொம்ப பிடித்திருக்கிறது, ரதி. தொடர்ந்து எழுதுங்க இது மாதிரியும் :) .

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

இனிய நினைவுகள் என்றென்றைக்குமாய் உங்களுடன் இணைந்தே இருக்கட்டும்..

siva சொன்னது…

me the 4thu...

siva சொன்னது…

புதிய வார்த்தைகள் கற்றுக்கொண்டேன் டீச்சர் அக்கா.:)
சிதைவுகள்

siva சொன்னது…

உங்கள் எண்ணங்கள் எல்லாம்
சிரத்தையாய்
புதிய வார்த்தைகளை கொண்டு
பதிவை
புதிதாய்
கொண்டு வந்து உள்ளது

Rathi சொன்னது…

தெகா, நீங்க என்னைவிட அதிகம் வானம் பார்க்கிறீர்கள் என்பது மீண்டும் ஒருமுறை தெரிகிறது. Positive ஆக யோசிக்க சந்தோஷ நினைவுகளை தக்கவைத்துகொள்வோம் என்று சொல்கிறீர்கள். நன்றி.

சிவா, கவனிக்கிறீங்களா என் ஆசான்களில் தெக்கியும் ஒருவர் :)

Rathi சொன்னது…

முத்துலெட்சுமி, நன்றி.

Rathi சொன்னது…

சிவா...... நான் ரீச்சரா! சரிதான் :) என்னைய குண்டக்க மண்டக்கவா ஏதாவது சொல்லலேன்னா சிவாவுக்கு மழை பெய்யாது போல :)

நன்றி சிவா.

ரெவெரி சொன்னது…

இனிய நினைவுகள்...நல்லாயிருந்தது...

துஷ்யந்தன் சொன்னது…

அக்கா அழகான கட்டுரை...... தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு அழகாக கோர்த்து உள்ளீர்கள்.. விகடன் கட்டுரை படிப்பதை போன்ற ஒரு உணர்வு.....உங்கள் அழகு கொட்டும் எழுத்து நடைக்கு நான் ரசிகன் அக்கா ஒருவகையில் பொறாமையாக கூட இருக்கு.....

துஷ்யந்தன் சொன்னது…

//மனித மனங்களின் புரிதல் என்பதும், புரிந்துகொள்ளப்படுவதும் ஒரே நேர்கோட்டில் நிகழ வேண்டும். பரஸ்பரம் நிர்ப்பந்தங்கள் அற்ற பகிர்தலே நிகழ வேண்டும், காதலோடு நிகழும் கலவி போல்//


அசத்தல் ரகம்...

Rathi சொன்னது…

நன்றி ரெவரி!

Rathi சொன்னது…

துஷ்யந்தன், வாங்கோ. ம்ம்ம்ம்... நன்றி.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

நீங்க தான் எழுதியதான்னு எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதென்ன வேற படமே கிடைக்கலையா?

Nesan சொன்னது…

அழகான எழுத்து நடையில் இனிமையான நினைவுகளை அசைபோடவிட்டீர்கள்!

Rathi சொன்னது…

ஜோதிஜி, வித்தியாசமோ, வெவகாரமோ எதையும் தெளிவா சொல்லணும். நாம சொல்றது தெளிவில்லன்னு வைச்சுக்கோங்க அது புறக்கணிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.

சரிதானே நான் சொல்றது :))

Rathi சொன்னது…

நேசன், வாங்கோ.... நன்றி. ஊர்ப்புதினம் சொல்லுவியள் எண்டு நினைச்சன் :)

தவறு சொன்னது…

ரதி...ம்ம்ம்...தனிமை..தனிமை...அதிகம் படித்து அதிகம் உள்வாங்கி எங்களுக்கோர் தரமானபதிவு.

போயி வானம் பாருங்க ரதி..:))

நிரூபன் சொன்னது…

வணக்கம் ரதி,
வித்தியாசமானதோர் உரை நடைப் பகிர்வு,

நீல வானத்தினூடே நினைவுகளைப் பறக்க விட்டு,
மனதின் ஞாபக அலைகளை ஒவ்வோர் பிராயத்தினூடாகவும் மீட்டுப் பகிர்ந்திருக்கிறீங்க.

ரசித்தேன்.

Rathi சொன்னது…

தவறு, ம்ம்ம்ம்.... நன்றி

Rathi சொன்னது…

நிரூபன், வருகைக்கு நன்றி. ரசிச்சிருக்கிறீங்க...ம்ம்ம்ம்... :)

siva சொன்னது…

சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதையும் சாதிக்கவில்லை.??

why சாதிக்கவில்லை?

Rathi சொன்னது…

கைப்புள்ள (சிவா)..... ஏம்பா இப்புடி.... நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டீங்களோ...... :)


காரணம் சொல்லனும்ன்னு தாம்பா தோன்றது... ஆனா தெரியலியே...

siva சொன்னது…

25vadai enakuthan..

நிஷ்களங்கமற்ற? அப்படி என்றால் என்ன டீச்சர்?

♔ம.தி.சுதா♔ சொன்னது…

////சிறுபிராய அம்புலிமாமா ஆசை முதல் ஓடிவிளையாடிய நினைவுகள், பள்ளிக்கூட நாட்கள், பழகிப் பிரிந்த நட்பு, பகை, துரோகம், மறக்கவே முடியாத முதல் காதல், ////

நினைவுகள் மீளும் போது எப்போதும் தனி சுகம் ஆனால் அந்த நினைவுக்குரிய மனிதர்கள் இல்லையெனும் போது தான் மனதில் கனதி சகோதரி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

Rathi சொன்னது…

மதி சுதா, ம்ம்ம்ம்..... உங்கள் மனதின் கனம் ஒரே வரியில்..

Avargal Unmaigal சொன்னது…

உங்கள் பதிவை முழுவதும் படித்து பார்த்தேன்...மிக மிக அருமை. ஒவ்வொரு வரிகளும் மிக கருத்தாழமிக்கவை எந்த வரியை எடுத்து சொல்லி பாராட்டுவது என்பதில் குழம்பித்தான் போனேன். உங்கள் எழுத்தை நேசிக்க அல்ல இந்த பதிவின் மூலம் சுவாசிக்க தொடங்கியுள்ளேன். சுவாசம் மிக இனிமையாக இருக்கிறது......