செப்டம்பர் 21, 2011

ஏன் இப்படியென்று கேட்கமாட்டேன்!!!

அந்த படத்தில் நான் காண்பது ஒரு இந்திய அமைதிப்படை ராணுவச் சிப்பாய் சீருடை இன்றி இருப்பதாய் நினைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரம் பார்த்து, அந்த காட்சி சொல்லும் உண்மைகள் அத்தனையையும் மெளனமாய் மனதுக்குள்ளே படித்துவிட்டு விலகிவிட்டேன். இரண்டு நாட்களுக்கப் பிறகு அது மனதில் காட்சியாய் நிழலாட அது குறித்து எதையாவது கிறுக்கி வைக்க தோன்றுகிறது. பொறுக்கவில்லை மனம் :(

ஆளவந்தான் படத்தில கமல் ஒரு பாட்டுப் பாடுவார். மிருகம் கொன்று, மிருகம் கொன்று  கடவுள் வளர்க்கப் பார்க்கிறேன். கடவுள் கொன்று, கடவுள் கொன்று மிருகம் மட்டும் வளர்கிறதே என்று. அந்த கதாபாத்திரத்துக்கு Schizophrenia என்கிற ஓர் நிலை அவரை எதையும் காட்சிப்பிழையாய் பார்ப்பதாய் தோன்றியது. ஆனால், கொஞ்சம் ஆழமாய் கவனித்தால் அது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் மனிதன், மனிதம் பற்றிய ஆழ்மனக் குழப்பம் என்பது புரிகிறது.

"It is proved again and again that, what B. R. Ambedkar said about Indians are true: “Indians today are governed by two different ideologies. Their political ideal set in the preamble of the Constitution affirms a life of liberty, equality and fraternity. Their social ideal embodied in their religion denies them.”

கேரளாவைச் சேர்ந்த ஓர் பெண் விரிவுரையாளரின் தளத்தில் இந்தப் படம் கிடைத்தது. தளத்தில் அம்பேத்காரின் இந்த வார்த்தைகளும் சிக்கியது. அதை கொஞ்சம் எனக்கு தெரிந்த தமிழில், என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

இன்றைய இந்தியர்கள் இரண்டு விதமான கருத்தியல்/சித்தாந்தங்களால் ஆளப்படுகிறார்கள். இந்திய அரசியல் யாப்பின் முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. மதத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் அவர்களது சமூக குறிக்கோள் அரசியல் யாப்பில் சொல்லப்பட்டவைகளை மறுக்கிறது. இது தான் அம்பேத்கார் சொன்னதின் உள்ளடக்கம்.

இது அவரது காலத்தில் சொல்லப்பட்டது என்றாலும், இன்று காலம் கடந்து இதப் படித்த போதும் நிறையவே யோசிக்க வைக்கிறது.


செப்டம்பர் 18, 2011

நானும், Outsourcing இந்தியர்களும் ஆதிவாசிகளும்!!


வயது வருடங்களாய் முன்னே போக மனித வாழ்வின் சுவாரஸ்யமான இளமைக்காலமும், வேகமும் நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்சென்று எங்கோ மிதக்க வைக்குது. காலக்கடிகாரம் எந்த இடத்தில் நின்று போனால் பிடிக்குமோ, அந்த இடத்தில் நின்று கொண்டே நகர மறுக்கிறது. இருந்தாலும் வாழ்க்கையின் அழுத்தங்களும், யதார்த்தங்களும் மறுபடியும் உந்தித் தள்ளினால் மிலினியத்தில் வேகத்தடையின்றி ஓடிக்கொண்டே இருக்கவேண்டியும் இருக்கிறது. வாழ்க்கையின் சூட்சுமங்கள் புரியுமுன்பே காலக்கடிகாரம் தன் ஓட்டத்தை நிறுத்தியும் விடுகிறது.

மனித உடலுக்குள் உயிர்க்கடிகாரம் அல்லது உள்ளமை கடிகாரம் ஒன்று எங்கள் உணர்வுகளுக்குப் புலப்படாமலே இயற்கை அதை இயக்கிக்கொண்டிருக்கிறது. உயிர், மெய்யின் அசைவும் இசைவும்; வாழ்க்கையுடனான இணக்கப்பாடும் உடம்புக்குள் ஓர் உயிர்க்கடிகையின் ஓட்டத்தில் பிரமிக்க வைக்கிறது. காலக்கடிகை மனதுக்கும், உயிர்க்கடிகை உடலுக்கும் நிகழ்ச்சி நிரல் போடுகிறது. அதன் வழி இயல்பாய் அறிந்தோ, அறியாமலோ எல்லாமே நடந்தேறுகிறது. இந்த பிரமிப்பின் எல்லைக்குள் மனிதனும் மற்றும் உயிரினங்களும் மட்டும் தான் அடங்குமா என்கிற கேள்வி மனதில் மனதில் தொக்கி நிற்கிறது.

கணணி என்கிற இயந்திரத்துக்குள்ளும் Internal Clock என்பது இயற்கையாய் இன்றி, செயற்கையாய் மனிதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கணணி குறித்த "Internal Clock and Y2K" என்று 1999 இன் முடிவில் பூலோகத்தின் ஆளுமைத் தன்மையை தன் இரட்டை சுழியங்களில் (00) பயம் காட்டிய வரலாற்று ஞாபகம் வருகிறது. கணணியிடம் இரட்டை இலக்கங்களில் திகதி, மாதம், வருடம் என்று மனிதன் சொல்லிக்கொடுத்தான். 1999 இன் முடிவில் 99 என்பது 1900 என்று கணணி தவறாய் நினைத்துக்கொண்டது. அது வருடம் 2000 என்று இருந்திருக்க வேண்டுமென்று மனிதகுலம் வழக்கம் போல் ஒரு தொழில்நுட்ப வராற்றுப்பிழையில் இருந்து பாடம் கற்றுக்கொண்டது. அதன் ஆபத்து தடுக்கப்பட்டாலும், அதுகுறித்த அதிர்வலைகள் இன்றும், என்றும் வரலாறு தான்.

இப்படித்தான் காலக்கடிகை, Y2K என்றால்  இந்தியர்களின் ஞாபகமும் இயல்பாகவே ஒட்டிக்கொண்டு கூட வருகிறது. இந்தியாவின், இந்தியர்களின் அபரிமிதமான தொழில்நுட்ப அறிவு உலகிற்கு அமெரிக்காவால் மிகப்பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டும், அடையாளப்படுத்தவும் பட்டது. இந்தியா எப்படி தொழில் நுட்ப அறிவில் இப்படி முன்னேறியது என்று கொஞ்சம் பின்னோக்கிப்போனால், 1951 இல் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு உருவாக்கிய IIT என்றழைக்கப்படும் Indian Institution of Technology தான் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டது என்று தெரிகிறது. பிறகு காலப்போக்கில் அது பரிமாண வளர்ச்சியடைந்து இன்று உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இப்படி Y2K என்கிற கணணி வரலாற்றோடு தீவிரமானது "Outsorucing" என்கிற இந்தியர்களின் கடல் கடந்த கணணி தொழிநுட்பப் பயணம். இது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் நண்பர் Thomas L.Friedman இந்திய தொழில்நுட்ப அறிவு சார் துறை பற்றி எழுதியதன் சுருக்கம்.

வெளிநாடுகளில் இருக்கும் பாரிய நிறுவனங்களின் பணிகள் சிலவற்றை பகுதியாக இந்திய கணணி அறிவாற்றலுள்ளவர்களிடம் வியாபாரப் பேரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு Outsorucing நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடம் நான் வாழும் நாட்டிலிருந்து கட்டணச் சேவைகளை பெறுவதன் விளைவாக உரையாடியிருக்கிறேன். இவர்களின் தொழில் சார் அனுபவம், பேச்சு என்பன என்னிடத்தில் ஏதோவொரு பிரதிபலிப்பை விட்டுச்சென்றதுண்டு.  

தங்கள் சூழலுக்கும், வாழ்வுக்கும் பெரும்பாலும் ஒவ்வாத தூரத்தில் இருக்கும் மனிதர்களிடம் இயந்திரத்தனமான உரையாடல். யாரிடம் பேசினாலும் ஒரு கூட்டு மனோ நிலை, கூட்டு நடத்தை என்கிற மனப்பதிவை உருவாக்குவார்கள். அதாவது ஒருவரின் சொற்பிரயோகம், பேச்சின் தொனி எல்லோருக்கும் ஒரேமாதிரி ஒத்துப்போவதாய் இருக்கும். அது அவர்கள் தவறல்ல. அப்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள், என் போன்ற வெளிநாட்டு வாழ் வாடிக்கையாளர்களை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள் குறித்து திருப்திப்படுத்துவதே நோக்கமாய்.

அவர்களுக்கு அது வாழ்வாதாரம். இருந்தாலும், ஒவ்வாத விதமாய் எத்தனை பேர் அதிருப்தியோடு பணி செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் பேச்சிலிருந்து புரிந்துகொண்டிருக்கிறேன். ஒருமுறை இவ்வாறான ஓர் அழைப்பின் பொது ஒருவர் தான் தமிழ்நாட்டில் ஓர் call centre இல் இருந்து பேசுவதாக நான் கேட்டதால் சொன்னார். அவர் சொன்ன இன்னோர் விடயம், இந்தியா தவிர வேறெந்த நாட்டிலாவது போய் வாழவிரும்புவதாக! எனக்கு ஓரளவு இந்திய அரசியல், பொருளியல் வாழ்வு பற்றி தெரிந்திருந்ததால் அவர் கூற்றுக்கு அதிகம் ஆச்சர்யப்படவில்லை நான்.

ஒரு கூடு அல்லது குறுவறை (Cubicle) ஒன்றில் ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் உட்காருவார்களோ தெரியாது. நான் யோசிப்பதுண்டு இவர்கள் இப்படி இயந்திரத்தனமாய் பேசிப் பேசி ஓர் "உணர்வற்ற நிலைக்குள்" (Cubicle Coma) செல்வதில்லையா என்று. அதன் அர்த்தம் அந்த சின்னஞ் சிறிய கூட்டுக்குள் புகுந்து கொண்டவுடன் அயர்ச்சியும், சலிப்பும், இயந்திரத்தனமும் ஒருவரிடம் ஒட்டிக்கொள்வது என்பது தான்.

இந்திய Outsorucing பற்றிய என் நண்பருடன் பேசியதில் அவர் சொன்னது இது. மீதியை உங்கள் சிந்தனைக்கும் விமர்சனத்துக்கும் விட்டுவிடுகிறேன்.

"இருக்கும் மக்கள் தொகையைக் கொண்டு சிறந்த அறிவார்ந்த மூளைகளை நம்மிடையே உருவாக்கிக் கொள்ள முடியுமெனினும் பிழைப்புவாத சிந்தனை ரீதியிலேயே முன்பு இஞ்சினியர்கள், மருத்துவர்கள் என்பது சற்றே மருவி... இப்பொழுதுசாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் என்றே பெருமள்வில் ரப்பர் ஸ்டாம்ப் பண்ணப்படுகிறது. ஏனைய துறைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு.

ஏரோநாடிகள் இஞ்சினியர் படித்த ஓர் இளைஞன் உடனடி பணம் மென்பொருள் எழுதுவதில் கிடைக்கிறது என்பதற்காக தன்னுடைய சிறப்பு பாடத்தினையே மென்பொருள் எழுதும் துறைக்காக மாற்றி அந்த படிப்பை விட்டே விலகிக் கொள்கிறான். இந்தியா அது போன்ற மாணவர்களை தங்களது சொந்த கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாமே!

எல்லா விதத்திலும் சைனாவுடன் போட்டி போடுகிறார்கள் என்றால், சைனாவைப் போல போர் விமானங்களையும் தாங்களே கட்டிக் கொள்ளும் டெக்னாலஜியில் R & Dல் (Research and Development) நிதியை அதிகப்படுத்தி இதிலுமல்லவா போட்டி போட்டு சரிசமாக வளர வேண்டும். தவிர்த்து f2௦, f24 ரக விமானங்களை அமெரிக்காவிடம் வாங்குவதில் என்ன பெரிய பெருமை இருந்து விடப் போகிறது."

சரி, இதெல்லாம் உலகமயமாக்கலின் விளைவுகள் என்று யோசிக்கும் பொழுதில் மனதில் இன்னோர் விடயம் தட்டுப்படுகிறது. நாம் எல்லோரும் மில்லினியத்தில் உலகமயமாக்கலுக்கு ஒரே விதமாய் தான் பிரதிபலிப்பை காட்டுகிறோமா என்று. இயந்திரமயமாகிப் போன நகர வாழ்விற்கும், இயற்கையோடு ஒன்றிப்போய் வாழ நினைக்கும் ஒவ்வொரு நாட்டின் பழங்குடியினருக்கும் இடையே எத்தனை, எத்தனை போராட்டங்கள். அவை எல்லாம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப் படாமலேயே இருளுக்குள் கிடக்கின்றன. எனது அறிவுக்கு எட்டியவரையில் வடஅமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கிறேன் பேர்வழியாய் கொன்று குவிக்கப்பட்டார்கள் செவ்விந்தியர்கள் என்னும் பழங்குடியினர் அல்லது மண்ணின் மைந்தர்கள். அன்று முதல் இன்றுவரை உலகமயமாக்கலின் பிதாமகர்களோடு அவர்களும் எதுவோ ஒன்றுக்காய் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

எந்தவொரு நாட்டின் பழங்குடியினர் என்று பார்த்தாலும் அவர்களது வாழ்வியல் பெரும்பாலும் இயற்கையோடு ஒன்றியதாகவே அமைந்துபோகிறது. இயற்கை என்றால் சினிமா தனங்களோடு காட்டுக்குள் சுற்றிச்சுற்றி பாட்டுப்பாடுவது அல்ல. நிலம், நீர், காற்று, மலை என்று அந்த இயற்கையின் போக்கிற்கு ஏற்றாற்போல் தங்கள் வாழ்வியலை கட்டமைத்துக்கொண்டவர்கள். இயற்கையின் சமநிலையை தங்கள் வாழ்வாதாரத்திற்காய் கூட கலைக்கவோ அல்லது குலைக்கவோ விரும்பாதவர்கள். இயற்கையை மட்டுமே படித்து அதன்வழி வாழ்பவர்கள். அவர்களின் உயிர்ப்புக்கும், உய்வுக்குமான வாழ்வியல் முறை முதல் மரபுவழி சட்டங்கள் வரை தங்களுக்கென்று தனி இயல்புகளோடு, விதிகளோடு வாழும் முறையை கட்டமைத்துக் கொண்டவர்கள்.

இயற்கைக்கும், இயல்பு நிலைக்கும் குந்தகம் விளைவிப்பதே பெரும்பாலும் உலகமயமாக்கலின் விளைவாய் போய்விட்ட சூழல் இன்று. பல்தேசிய நிறுவனங்களின் வியாபார நோக்கத்தில் பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம் எப்படி நசுக்கப்படுகிறது என்று யோசித்த போது தான் இந்தியஆதிவாசிகளின்  போராட்டம் இயல்பாய் ஞாபகத்தில் வருகிறது. Outsourcing என்று இந்தியர்களின் தொழில் நுட்ப அறிவும் உழைப்பும் குறைந்த விலைக்கு அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு விற்கப்படுகிறது. இன்னோர் துருவத்தில் இந்தியாவின் ஆதிவாசிகளின், அவர்கள் நேசிக்கும் இயற்கை முதல் அது அள்ளிக்கொடுத்த வளங்கள் வரை பல்தேசிய நிறுவனங்களால் பறிக்கவும் படுகிறது.

ஈழம், இந்திய பூர்வகுடிகள் (ஆதிவாசிகள்) என்று நினைக்குந்தோறும் என் புத்தியில் இடறும் ஓர் வார்த்தை "Lebensraum". அதன் பொருள் அகராதியின் விளக்கப்படி, தன் இயல்பான வளர்ச்சிக்கு தேவைப்படுகிறதென ஒரு நாடு கருதும் (இன்னொரு நாட்டின் அல்லது மக்களின்) நிலப்பரப்பு அல்லது நாட்டின் வாழ்நிலத்தேவை என்பதாகும். ஒரு சினிமா நடிகையின் அல்லது நடிகரின் பெயரளவிற்கு இந்த வார்த்தை ஒன்றும் போலி வாழ்க்கை வாழும் எங்களுக்கு தேவையில்லை தான். நடிகை அனுஷ்கா தனது பெயரை "Lebensraum" என்று மாற்றிக்கொண்டால் அந்த வார்த்தையின் தார்ப்பரியம் இளைய தலைமுறைக்குப் புரிந்தாலும் புரியும். எப்படி இருந்தாலும் இருந்தாலும் அந்த ஒற்றைவார்த்தையில் ஒளிந்திருக்கிறது உலகமயமாக்கலின் ஒட்டுமொத்த சூத்திரம்.

நிலத்தையும், வளங்களையும் சூறையாட ஒரு மக்கள் கூட்டத்தை என்னென்ன வழிகளிலெல்லாம் கொன்றொழிக்கவும், கொடுமைப்படுத்தவும், துரத்தியடிக்கவும், அவர்களை மனித சிதைவுக்கு உள்ளாக்க முடியுமோ அத்தனையும் இந்த வார்த்தைக்குள் அடங்கும். ஹிட்லரும், ஹிட்லரின் நாஜிப்படைகளும் தான் "Lebensraum" என்கிற இனவழிப்பின் மாதிரிக்கு, ஒரு நாட்டின் வாழ்நிலத்தேவை என்கிற கோட்பாட்டை கண்டுபிடித்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்து செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டதும், அமேரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளத்திற்காய் ஹிட்லர் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் (வியட்னாம் கணக்கில் கொள்ளப்படவில்லை) ஜனநாயகம் வளர்ப்பதும், ஹிட்லரால் இனவழிப்பு செய்யப்பட்டவர்கள் என்று ஏகபோக உரிமைகளை அனுபவித்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பவர்கள் எல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது!!

இந்திய ஆதிவாசிகளின் விடயத்திலும் இது தான் நடைபெறுகிறது போலும் என்று செய்திகளை, கட்டுரைகளை படித்தபோது தெரிந்துகொண்டேன். வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்துக்கு தத்தளிக்கவைக்கப் படுகிறார்கள் இந்திய பழங்குடியினர் அல்லது ஆதிவாசிகள். அடக்கப்படுபவன் எத்தனை நாட்களுக்குத் தான் பொட்டுப் பூச்சியாய் அடங்கிப்போவான். மாவோயிஸ்டுகள் உருவானார்கள், ஆதிவாசிகளின் உரிமைக்காய் போராட. மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் என்று அவர்களை ஒடுக்க அரசபடைகளை விடவும், கூலிப்படைகள் வேறு உருவாக்கப்பட்டு ஆதிவாசிகள் அழித்தொழிக்கப் படுகிறார்கள். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் தத்துவம் போலும். என் மூளையில் உறைக்கும் ஒரே கேள்வி, அரசியல் யாப்பு, பொதுச்சட்டம், பாதுகாப்பு, பொருளாதார கொள்கைகள் இதெல்லாம் மக்களுக்காய், மக்களை காப்பாற்ற என்றால் பிறகேன் மக்கள் இது குறித்து எப்போதும் போராடவும், போராடுபவர்களுக்கு ஆதரவும் கொடுக்கிறார்கள்!!! அரசை தானே ஆதரிக்க வேண்டும்?

எப்பிடி சுத்தியடிச்சு யோசிச்சாலும் ஒரு விடயம் தெளிவாய் தெரிகிறது. இங்கே அரசுகளும், அரசியல் சட்டங்களும், பொருளாதார கொள்கைகளும் வலியோரைக் காக்கவே உருவாக்கப்படுகிறது. எளியோரை எப்போதும் இவர்களுக்கு சேவகம் செய்யென்று என்று மறைமுகமாய் பணிக்கிறது. சரி, ஆதிவாசிகள் விடயத்திற்கு வருவோம்.

இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் ஆதிவாசிகள் பரந்து வாழ்கிறார்கள். இருந்தாலும் இந்திய அரசால் சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட்  மாநிலங்களிலுள்ள ஆதிவாசிகளின் வாழ்நிலைகள், வாழ்க்கைசூழல் என்பன சீரழிக்கப்படுகிறன. சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் இரும்புத்தாது கனிம வளத்திர்காய் அங்கிருந்து பழங்குடியினர்/ஆதிவாசிகள் ஆயிரக்கணக்கில் விரட்டியடிக்கப்படுவதும் கொடுமைப்படுத்தவதும் நிகழ்ந்தேறுகிறது. இதற்கு இந்திய அரசு தரப்பில் சொல்லப்படும் விளக்கங்கள் என்பது பறிக்கப்படும் ஆதிவாசிகளின் உரிமைகள் மற்றும் அரசபயங்கரவாதம் குறித்த மறுப்புக்கு ஒப்புக்கு சப்பாணியாய் தோன்றுகிறது.

நான் ஓர் ஈழத்தமிழ் என்கிற அனுபவ அடிப்படையில் யோசித்துப்பார்க்கும்
போது புரிகிறது இந்திய ராணுவப்படைகளின் கொடூரமுகமும் அட்டூழியங்களும். எங்களுக்கே உரிய வாழ்நிலங்கள் பறிக்கப்பட்டு, வாழ்நிலைகள் கசப்பானதாக ஆக்கப்படும் கொடுமைகள் அனுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.


இது குறித்த தேடலில் ஆதிவாசிகள் மீது இழைக்கப்படும் வன்முறைகள் மற்றும் அநீதிகளின் சாட்சியமான ஓர் கட்டுரை இது.

"...உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே. .....சிந்திக்க முடியாத அட்டூழியங்கள் எல்லாம் அரங்கேறின. ஒரே கிராமம் 20 முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. வேட்டை முடிந்தது என்று கருதி காடுகளில் பதுங்கிய மக்கள் கிராமம் திரும்புவர், வீடுகளை சீர்செய்து நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்யத் தொடங்குவர். மீண்டும் பாதுகாப்புப் படை வரும், பயிர்நிலங்களை எரிக்கும். இப்படி இது ஒரு முடிவிலா சுழற்சியாகிவிட்டது. தொடரும் இந்த கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளால் வெருப்புற்ற ஆதிவாசிகள் தங்கள் பிள்ளைகளைக் காவலிருக்கப் பணித்தனர். அப்பிள்ளைகளும் தங்கள் தடிக்கம்பு, வில், அம்புகளுடன் கிராமத்தைக் காவல் காத்தனர்......"

மாவோயிஸ்ட்கள் எதற்காக போராடுகிறார்கள் என்பதன் காரண, காரிய தொடர்பை ஆராய்வதை தவிர்த்து அவர்கள் ஆட்கடத்தல், கொலை செய்கிறார்கள் என்கிற குயுக்தியான விமர்சனம் வைக்கப்படுகிறது. இதுக்கு ஒத்து ஊதுவதற்கு சில அறிவுசீவிகள் வேறு! அருந்ததி ராய் போன்றோர் மாவோயிஸ்ட்களின் போராட்ட நியாங்களை ஆதரித்தால், நீ மாவோயிஸ்ட்களை ஆதரிக்கிறே என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இந்திய ஜனநாயக சட்டத்தின் பிரகாரம் மாவோயிஸ்ட்கள் செய்வது தவறென்றால், இந்திய அரச படைகள் இழைக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவையெல்லாம் கூட குற்றங்கள் தானே! அது இந்தியப்படை, அமெரிக்கப்படை, ஐ.நாவின் அமைதிப்படை என்றதும் அறிவுசீவிகள் ஏன் நெற்றிக்கண்ணை திறக்க மறுக்கிறார்கள்.  

சாராசரி குடிமக்களின் அரசியல், பொருளாதார உரிமைகள் ஏன் எப்போதும் கிடப்பிலேயே போடப்படுகின்றன்றன. நாங்கள் செய்த தவறு தான் என்ன!

உலகமயமாக்கலில் உதிரிகளாய் ஆகிக்கொண்டிருக்கும் oursorucing மனிதர்களுக்கும், இந்திய பழங்குடியினருக்கும்/ஆதிவாசிகளுக்கும் எங்கேயோ ஒரு நூலிழையில் தொடர்பு மறைந்திருக்கிறதோ!! முன்னவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட நினைக்கிறார்கள். பின்னவர்களோ சொந்த நிலத்திலேயே வாழும் வழியும் வகையும் புரியாமல் தங்களுக்குத் தெரிந்தவரை எதிர்க்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அடக்குமுறைகளின் அட்டூழியங்களை சகித்துக்கொண்டு வாழ்பவனின் காலக்கடிகாரமும் ஒரு நாள் அந்த நினைவுகளில் நிறுத்திக் கொள்ளப்படும் பொழுதில் நீதி பெறுமோ இவர் தேசங்களும்!!

Image Courtesy: Google

செப்டம்பர் 02, 2011

ஜனநாயகமும் ஊடக சுதந்திரமும்


இருபத்தோராம் நூற்றாண்டில் உரிமைகள், உரிமைகள் என்று நிறையவே கேட்கிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம். இதுக்கு முதல் யாருமே இதுபற்றி பேசியதே இல்லையா என்று என்னை அறியாமலே ஓர் கேள்வி மனதில் ஓடுகிறது. எதுக்காக இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் அது குறித்து இவ்வளவு ஆர்ப்பாட்டம்? மனித நாகரிகம் வளர்ச்சியடைந்த நாள் தொட்டு சித்தாந்தங்கள், கொள்கைகள், ஜனநாயகம் என்பவற்றின் அறிமுகமும் உபயோகமும் தொடங்கிவிட்டன. அன்றுமுதல் மனிதன் பற்றியும் அவனது உரிமைகள் குறித்த சர்ச்சைகளும், கேள்விகளும், போராட்டாங்களும் வாழ்வியல் போராட்டங்களுடன் கூடவே ஒட்டிக்கொண்டு தான் வருகின்றன. அன்றாடப் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கே ஓடாய் தேய்வதில் அடிப்படை உரிமை பிரச்சனைகளை கோட்டை விடுகிறோமா?  அல்லது தகவல் தொழில்நுட்பம் விண்ணைத் தாண்டிய பின்பும் மனித உரிமைகள் மண்ணுக்குள் புதைக்கப்படுவதால் அது குறித்து பேசிக்கொண்டு...பேசிக்கொண்டே,  மட்டும் இருக்கிறோமா!

உரிமைகள்; அடிப்படை மனித உரிமைகள், குடியுரிமைகள், அரசியல் உரிமைகள் என்று எல்லாமே அரசியல் யாப்பில், சர்வதேச உடன்படிக்கைகள், ஒப்பந்தங்களில் வகுக்கப்பட்டவை தான். இதைப் பற்றியெல்லாம் பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம். பிறகு, எல்லாமே கால ஓட்டத்தில் மறந்துபோயிருக்கும். மறந்தாலும் அதுகுறித்து வருந்தாத காரணம் நாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதித்துவ  ஜனநாயகவாதிகள் எங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படவென்றே அரசு, சட்ட ஒழுங்கு, அரச நிர்வாகத்தின் நிர்வாக அலகுகள் என்கிற அம்சங்களை கட்டிக்காப்பார்கள் என்கிற நம்பிக்கை. இருந்தாலும் நாங்கள் தேர்ந்தெடுத்த ஜனநாயகத்தின் பிரதிநிதிகளை கட்டிமேய்க்கவே நான்கு அல்லது ஐந்து வருடங்கள் வீணாகிப் போகிறது. இந்த அக்கப்போரில் அரசு என்கிற அலகின் அத்தனையும் நிலைகுலைந்து போகிறது. இதையெல்லாம் நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாளில் சரி செய்வேன் என்று இன்னோர் தேர்தல் அரசியல் ஆடுகளம் தயாராய்.....! மறுபடியும் அதே சுழற்சி முறை!

ஓர் ஜனநாயக அரசின் மேற்சொன்ன மூன்று அம்சங்களும் ஏதோவொரு இடத்தில் பொய்த்துப் போனால் அல்லது தடுமாறினால் யார் இவர்களை தட்டிக்கேட்பார்கள்? வாக்களித்து ஆட்சியில் வைத்த நாங்கள் தானே! இது கேட்க, படிக்க நல்லாத்தான் இருக்கும். ஆனாலும், சமூகம், அரசியல், பொருளாதாரம், பொழுதுபோக்கு என்று எதுவானாலும் அது உள்ளூர், உலக செய்திகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதல் வானொலி வரை யாரோ சேகரித்துக் கொடுப்பதினால் தானே அது குறித்து நாங்களும் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையை தக்கவைத்துக்கொள்கிறோம். ஆக, ஊடக சுதந்திரமும், ஊடகவியலாளர்களும் பாதுகாக்கப்பட்டாலே மற்றவை எல்லாம் சாத்தியம்.

இந்த விஞ்ஞான தொழில்நுட்ப யுகத்தில் அரசு நிர்வாக செய்திகள், அறிவிப்புகள் அரசின் இணையத்தளத்தில், அரச வர்த்தமானியில் காணக்கிடைக்கிறது. ஆனாலும் இணையத்தள தகவல் உரிமை இன்னும் உலகமயமாகவில்லை என்பதும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியது. கணணி என்றால் என்னவென்றே தெரியாத கோடான கோடிப்பேரை நினைத்துக்கொண்டேன்.

இப்பிடி நூல்பிடித்து யோசிக்கும் போது தான் ஊடக சுதந்திரம் குறித்து ஓர் ஞானதிருஷ்டி!! ஊடகங்கள் இருபத்தோராம் நூற்றாண்டில் தனியார் உடமை ஆகிவிட்டது. அரச செய்தி ஊடகங்கள் இன்னும் எத்தனை நாடுகளில் உள்ளது என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. அண்மையில் நியுசிலாந்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது 'அரச தொலைக்காட்சி' செய்திகள் என்று மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவந்தபோது என்னிடம் உருவான ஆச்சர்யம் கொஞ்சம் மிச்சமிருந்தது. தனியார் ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நாட்களிலும் அரச செய்தி ஊடகம், அதுவும் வளர்ச்சியடைந்த ஓர் நாட்டில்! அரச ஊடகம் என்றாலும் ஆழும் கட்சிக்கோ, அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்களுக்குகான செய்திகளை மட்டும் கணக்கில் எடுத்தால் அதன் நம்பிக்கைத் தன்மையும் அடிப்பட்டும் போகும்.

ஓர் நாட்டின் அரசை, ஊடகங்கள் விமர்சிப்பது, தவறுகளை சுட்டிக்காட்டுவது; அல்லது இரு சாராருமே பாரபட்சமின்றி நாட்டின், மக்களின் நலன் குறித்து ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக்கொள்வது (utopian dream, haah!); இவை இரண்டும் இல்லையா, ஓர் அரசே ஊடகங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது. இப்படி வகைப்படுத்தலாம். முதல் இரண்டுவகையிலுமே ஜனநாயகம், நீதி என்று எதுவோ மிச்சமிருக்கும். ஆனால், எதேச்சாதிகார அரசின் ஆட்சியில் ஊடக சுதந்திரம் தான் எப்போதும் சர்ச்சைக்கும், பரிதாபத்துக்கும் உரியது. ஊடக சுதந்திரம் பறிபோக மக்கள் வாழ்வும், உரிமைகளும் கூட பரிதாபமாய்! அரசாட்சியின் குழறுபடிகளை இடுத்துரைத்து, மக்களிடம் உண்மையை எடுத்துச் செல்ல ஊடகசுதந்திரம் அவசியம். அதுவும் பறிக்கப்பட்டால் விளைவு அராஜக அரசாட்சி.

எனக்குத் தெரிந்த பத்திரிகை சுதந்திர வரலாற்றில் அமெரிக்க ஊடகங்கள் எப்படி வியட்னாம் போர் தொடங்கி மூன்றாம் உலக நாடுகளின் (உ-ம: குவாட்டமாலா, எல் சல்வடோர், நிகரகுவா) ஜனநாயக தேர்தல்கள் வரை தங்கள் கொள்கைகளுக்கு சாதகமாக ஓர் கருத்துருவாக்கத்தை அமெரிக்கர்களிடமும் உலகத்திடமும் உருவாக்கினார்கள் என்பது ஆச்சர்யப்படவும், அதிர்ச்சியடையவும் வைத்தது. வியட்னாம் கமியுநிசத்திடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்று அவர்களை கொன்றழித்ததையும், லத்தீன் அமெரிக்காவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறோம் என்று தங்கள் கொள்கைகளுக்கு சார்பான எதேச்சாதிகார ஆட்சியாளர்களை ஜனநாயகவாதிகள் என்று முகமூடி போட்டு அமெரிக்க ஊடகங்கள் உலகத்திற்கு காட்டியதையும் நோம் சாம்ஸ்கி அழகாய் படம் பிடித்து காட்டுகிறார்.

இது அமேரிக்கா போன்ற நாடுகளின் அரசியல், பொருளாதார நலன்கள் சார்ந்த கருத்துருவாக்கங்கள். அதுக்கு நடைபெறும் நாட்களில் எகிப்து ஓர் சிறந்த உதாரணம். அமெரிக்காவின் உளவுத்துறைக்கு தோள்கொடுத்து, சித்திரவதை கூடங்களுக்கு தனது மண்ணில் வழியமைத்துக்கொடுத்தவர் இன்று ஜனநாயகவாதி. அதை அமெரிக்க ஊடகங்கள் எகிப்தில் ஜனநாயகம் என்று கதை சொல்லி கருத்துருவாக்கம் செய்து காசும் பார்க்கின்றன.

இப்படி அமேரிக்கா என்கிற நாடும், அதனோடு சேர்ந்த நாடுகளின் ஊடகங்களும்  ஜனநாயகம், தேர்தல், பஞ்சாயத்து என்று தமக்கு சாதகமான கருத்துகளை உருவாக்குகிறார்கள். மற்றைய நாடுகளில் தங்களது தலையீடுகளை நியாயப் படுத்தவோ அல்லது அரசியல் களநிலவரங்களை கவனமாற்றம் செய்யவோ நிறையவே கருத்துருவாக்கங்கள் இடம்பெறுகின்றன. பத்திரிக்கை தர்மம் கூட செத்துப்போகிறது.

 அமேரிக்கா எப்போதுமே தனது பொருளாதார நலன்களை முன்னிறுத்தி ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கிறேன் பேர்வழியாய் எத்தனையோ நாடுகளை சிதைத்தது தான் வரலாறு. முன்னாள் அதிபர் கிளிண்டன் காலத்தில் ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க வெளிநாட்டுக்கொள்கை, அதற்குரிய நிதி என்று நிறையவே முயற்சிகள் செய்யப்பட்டன. இருந்தும் என்ன! லத்தீன் அமேரிக்கா முதல் இஸ்லாமிய நாடுகளில் அமேரிக்கா வளர்த்துவிட்ட ஜனநாயகம் கொள்ளையடிக்கும் அரசுகளாலும், அமெரிக்காவின் கைப்பொம்மை ஆட்சியாளர்களாலும் சீரழிந்துகொண்டிருப்ப்பதே  தற்கால வரலாற்றிலும் தொடர்கிறது. இந்த உண்மைகளை எவ்வளவு தூரம் அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்கர்களிடம் சொல்கிறது என்பதும் கவலைக்குரியது. இதே நிலையைத் தான் இலங்கை விடயத்திலும் கையாள்கிறது.
 
இன்றைய காலகட்டத்தில் இலங்கை என்கிற நாட்டின் ஊடக சுதந்திரம் குறித்து நிறையவே யோசிக்க வைக்கிறது. மனித உரிமைகளே மதிக்கப்படாத ஓர் நாட்டின் ஊடக சுதந்திரம் குறித்து நம்பத்தகுந்த தன்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் அதன் தாக்கங்கள் என்பது பத்திரிகையாளர்களின் உயிர்கள் கூட பறிக்கப்படும் அளவிற்கு மிகவும் சீர்கெட்டுப் போய் கிடக்கிறது. எத்தனையோ தமிழ் ஊடகவியலாளர்கள் முதல் ஆங்கிலப் பத்திரிக்கை சண்டே லீடர் எட்டிடர் லசந்த விக்ரமதுங்கே வரை படுகொலை செய்யப்பட்டவர்கள்; உதயன் தமிழ்பத்திரிகை வித்தியாதரன் முதல் ஆங்கில ஊடகவியலாளர் திசாநாயக்க வரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டார்கள். தமிழர் பகுதியில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையாளர்கள் இலங்கை அரசால் அதிகம் பாதிக்கபடுபவர்கள். அண்மைய தாக்குதலுக்கு இலக்கான  உதயன்பத்திரிகையாளர் திரு. ஞா. குகநாதன்.

இதில் என்ன ஒற்றுமை என்றால் இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் முதல் பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தான் அடிக்கடி பத்திரிகையாளர்கள் கைது, கொலை என்று நிகழ்ந்தேறும். ஆட்சியாளர்கள் விரும்பாத எதையோ ஒரு பத்திரிகையாளர் எழுதினால் அவர்கள் இது போன்று தண்டிக்கப்படுவார்கள். இதில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டவர்கள் 'தராக்கி' சிவராம் மற்றும் லசந்தா விக்ரமதுங்கே.

இவ்வாறாக பத்திரிகையாளர்களையும், பத்திரிக்கை தர்மத்தையும் கொலை செய்தும், கொலை மிரட்டல் விட்டும் அவர்களை சுயதணிக்கை செய்ய வைப்பது இலங்கையில், குறிப்பாக ராஜபக்க்ஷே அரசில் ஜரூராக நடந்து வருகிறது. உதயன் பத்திரகையின் ஞா. குகநாதன் விடயத்தில் இலங்கையில் உள்ள எல்லாப் பத்திரிகையாளர்களும் வடக்கில் யாழ்ப்பாணத்தில் கூடி தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்ட ஏறக்குறைய பதினேழு பத்திரிகையாளர்களின் வழக்குகளில் யாருமே இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கே இந்த நிலை என்றால் பொதுசனத்தின் வழக்குகளுக்கு என்ன நீதியை வழங்குவார்கள்!!

இது தவிர, இலங்கை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலில் உயிரை தக்கவைக்க வேறுநாடுகளில் தஞ்சமடைந்து வாழ்பவர்களும் உண்டு. அவ்வாறானவர்கள் உருவாக்கிய எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்களின் அமைப்புத் தான் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குறித்த சனல் நான்கின் முயற்சிகள் சிலவற்றிகும் உதவியவர்கள். தங்களுக்கு இலங்கையில் இருக்கும் உயிராபத்து தவிர்க்கப்பட்டால் மீண்டும் தமது குடும்பங்களோடு இலங்கையில் சேர்ந்துவாழ விரும்புவர்கள். இவர்கள் குடும்பங்களை தாங்கள் வாழும் நாட்டிற்கு அழைக்கும் முயற்சி எடுத்தால் தாங்கள் எங்கே வாழ்கிறோம் என்பது தெரிந்து தங்கள் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்கிறார் சுனந்தா தேஷப்ரியா என்கிற பத்திரிகையாளர். இவரது தளத்தைப் படித்தால் தான் தெரிகிறது இலங்கை அரசுக்கும், பத்திரிகைத்துறைக்கும் இடையே நடக்கும் யுத்தமும், வெளிவராத உண்மைகளும்.

மனித உரிமைகள் பிரகடனம், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தத்தின் (Iinternational Covenant on Civil and Politkal Rights- ICCPR)அடிப்படையில் தனிமனித அடிப்படை உரிமைகளும், பத்திரிக்கை சுதந்திரமும், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது நியதி. இருந்தாலும், மனித உரிமைகள் பிரகடனம், சர்வதேச ஒப்பந்தம் என்பன போர்ப்பூமியில் வாழ்பவர்களால் மட்டுமே பேசப்படுபவை. அதிலேயும், இலங்கையைப் பொறுத்தவரை குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பதந்ததுக்கு இலங்கையில் உள்நாட்டு சட்டத்தின் கீழ் கட்டுப்பட வேண்டியதில்லை என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றமே தீர்ப்பு எழுதியிருக்கிறது. அதாவது அந்த பன்னாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் யாரும் மனித உரிமைகள் சபையிடத்தில் தங்கள் மனித உரிமைகள் மீறப்படுவதாக முறைப்பாடு செய்யமுடியாது.

இலங்கை அரசியல் யாப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டு, பன்னாட்டு உடன்படிக்கைகளுக்கு அமைவாக பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், தகவல்களை தெரிந்து கொள்ளும் உரிமை, பத்திரிக்கை சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்யப்படுகிறது. பரிந்துரைகள்  தானே.....! இலங்கையைப் பொறுத்தவரை அது விழலுக்கு இறைக்கப்படும் நீர்.

Image Courtesy: Google