ஆகஸ்ட் 10, 2011

இனப்படுகொலையும் காரியவசமும்...!! Headlines Today!"What genocide looks like...." இது தான் Headlines Today வின் நான் போர்க்குற்றங்களை கண்ட சாட்சி (I witnessed Genocide) என்கிற ஓர் ஆவணத்தொகுப்பின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஓர் வாசகம். இதன் அடிப்படிப்படையிலேயே காட்சிகள் விரிவதாக புரிந்துகொண்டேன். திட்டமிட்ட ஈழத்தமிழின அழிப்பில் "இனப்படுகொலை" என்கிற வார்த்தைப் பிரயோகத்தை பாதிக்கப்பட்ட நாங்கள் தான் சொல்லிக்கொண்டிருந்தோம். அதை இந்த உலகம் ஓங்கி ஒருமுறையேனும் சொன்னால் எங்களுக்கு நியாயமான உலகில் எல்லோருக்கும் பிறப்பால் உள்ள அடிப்படை உரிமைகள் கிடைக்கும் என்று நம்புகிறோம், இந்தக்கணம் வரை.

இலங்கையின் இனவழிப்பு போருக்கு இந்தியா துணை போனது என்று சொல்லப்படும் சமகால அரசியல் சூழலில் இந்திய ஊடகம் ஒன்று இனப்படுகொலை என்பது இப்படித்தான் இருக்கும் என்று ஈழத்தமிழர்கள் விடயத்தில் சொல்வது கொஞ்சம் கூர்மையோடு பார்க்கவைக்கிறது. சமகால பொருளாதார, அரசியல் நெருக்கடிகள்  சூழ் உலகில் எந்தவொரு ஊடகமும் இப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளுமா என்கிற கேள்வி எழாமலும் இல்லை. இருந்தாலும் Headlines Today வுக்கு என்ன இந்திய ஆளும் வர்க்கத்தைவிட, இந்திய அயலுறவுக் கொள்கையை விட தமிழர்கள் மேல் அவ்வளவு அக்கறை என்கிற ஐயமும் எழாமல் இல்லை. இந்தக் கேள்விகளை தற்காலிகமாக கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு அந்த செய்தி தொகுப்பு ஆவணம் பற்றிய என் பார்வைகள்.

இவர்களின் செய்தி தொகுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா உடன்பாட்டின்  அடிப்படையில் குறிப்பாக போர்க்காலங்களில் குடிமக்கள், மற்றும் சரணடைந்த போராளிகள் ஆகியோரின் உரிமைகள் எப்படி பாதுகாக்கப் பட வேண்டும் என்பதிலிருந்து ஓர் அரசு தவறியிருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறது. கூடவே, பொதுமக்களுக்கு தேவையான உணவு, மருந்து கிடைக்காமல் செய்யப்பட்டது, வைத்தியசாலைகள் தாக்கப்பட்டது, தடை செய்யப்பட்ட இரசாயன வெடிகுண்டுகள் பாவிக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்களை ஜெனீவா உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இலங்கை எப்படி மீறியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அத்துடன், நடுநிலைமையை மனதிற் கொண்டு புலிகளையும், அவர்கள் பக்க குற்றம் என்று சொல்லப்படுவதையும் சொல்லியிருக்கிறார்கள்.

உலகின் எந்தவொரு சாசனப்படியும், மானுட தர்மப்படியும் பார்த்தாலும் ஈழத்தமிழினம் இனப்படுகொலை தான் செய்யப்படுகிறது. அதில் மனட்சாட்சியுள்ள யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கவே முடியாது. ஈழத்தமிழனைப்போல், அவன் உரிமைகளைப் போல்  இழுத்துக்கொண்டிருந்த "இனப்படுகொலை" என்கிற வார்த்தை தான் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் என்பவரை நிறையவே மனம் நோகவைத்துவிட்டதாம் :)

பொதுவாக இலங்கையின் எந்தவொரு வெளிநாட்டுப் பிரதிநிதியின் இயல்பான குணமான "Dominating the Conversation" என்பது இவரிடமும் தென்பட்டது. நீ எப்படி இனப்படுகொலை என்கிற வார்த்தையை பாவிக்கலாம், அதுவும் இலங்கை விடயத்தில் என்று பொங்கியே விட்டார் மனிதர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதுவோ கேள்வி கேட்க இவரோ இனப்படுகொலை என்கிற வார்த்தைப்பிரயோகத்தை பிடித்தே தொங்கிக்கொண்டிருந்தார்.

 இது எல்லாத்துக்கும் மேலே ஒரு உலகமகா பொய்யை கேழ்வரகில் நெய்வடிகிறது என்பது போல் சொன்னார். இலங்கை அரசு தமிழர்களுக்கு "Restorative Justice", அதாவது மீள்கட்டுமானம், மீளிணக்கம்  என்கிற அடிப்படையில் மனித உரிமைகள் மீறப் பட்டதற்கான நியாயங்களை பெற்றுக்கொடுக்கப் போராடுகிறார்களாம். அவர்கள் தமிழர்களுக்கு வழங்கும் நீதி "Retributive", அதாவது தமிழர்களை பழிவாங்கும் அடிப்படையில் இல்லையாம். இப்போது, இந்த செய்தியின் ஆவணத்தொகுப்பு அந்த கவர்ச்சியான "நல்லிணக்க, மீளினக்க" முயற்சிகளுக்கு பங்கம் செய்து விட்டதாம் என்பது தான் அவரின் முதலைக்கண்ணீர். Restorative Justice ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது என்றால் எதுக்காக அந்த ஆவணத்தில் உள்ளவர்கள் சாட்சி சொல்லப் பயப்படுகிறார்கள் என்று யாராச்சும் கேடால் நல்லது. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் என்று யோசித்தால், இந்தியாவும் அமெரிக்காவும் ஆதரவு கொடுக்கும் வரை என்று தான் தோன்றுகிறது.இவரை விட, இலங்கையின் பாதுகாப்பு செயலர் வழக்கம் போல் பொதுமக்கள் யாருமே கொல்லப்படவில்லை என்று சொன்னவர் இப்போது மிக, மிகச் சிறிய அளவிலேயே கொல்லப்பட்டார்களாம் அதைவிட, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் இருந்த வாணி ஞான குமார் பற்றி வேறு தேவையின்றி உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறார்.

இலங்கையின் இந்த வழமையான கட்டுக்கதைகளும், பொய்களும் யாவரும் அறிந்ததே என்பதால் இத்தோடு இப்போது நிறுத்திக்கொள்கிறேன்.

தன்னுடைய சொந்தப் பாதுகாப்பையும் மீறி ஈழம் சென்று பிரியம்வதா என்கிற பெண்நிருபர் ஓர் துணிச்சல்காரர் தான். பெண் நிருபர்கள் பற்றி உன்னைப்போல் ஒருவன் கமல்ஹாசன் சொன்னது போல் உங்களைப்போல் இப்படி நிறைய நிருபர்கள் இருக்கிறார்கள் என்று கேலி தொனிக்கும் வகையில் சொன்னது ஏனோ ஞாபகம் வந்தது. அந்த பெண் நிருபர் சிங்கள ராணுவத்திடம் மாட்டியிருந்தால் என்ன பாடுபட்டிருப்பார் என்பதயும் ஓர் பெண்ணாய் நினைத்துப்பார்க்கவே நடுங்குகிறது. இருந்தாலும், இனி சிங்களராணுவம் ஈழத்தில் உள்ள பெண்களை எல்லாம் நீ பிரியம்வதா' வா என்று இம்சைப்படுத்தப்போவதும் உறுதி.

தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியா என்கிற அளவில் ஈழத்தமிழர் பிரச்சனை இந்த செய்தி ஆவணத்தின் மூலம் கொண்டு செல்லப்படும் என்று தோன்றுகிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டு உடனேயே இந்திய குடிமக்களுக்கு அரசாட்சி செய்பவர்கள் ஈழத்தமிழர் விடயத்தில் மனுநீதி வழங்குவோம் என்று சொல்லமாட்டார்கள் என்பதும் உறுதி. ஓரளவிற்கேனும் இந்தியா என்கிற அளவில் ஈழத்தமிழினம் "இனப்படுகொலை" செய்யப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பது தெரியவந்தது ஓர் ஆரோக்கியமான மாற்றமே.

இனப்படுகொலை   என்பது ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஒதுக்கொள்ளப்படுவது என்பதே  எங்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியானதும், நியாயமானதுமான தீர்ப்பு!!!

Justice Theory Model: TamilNet
Image Courtesy: Google

18 கருத்துகள்:

தவறு சொன்னது…

ரதி எத்தனகாலம் தான் ஒரு உண்மைய பொய்யாக்க முடியும்.

கால மாறுதல்கள் நிகழ்ந்தால் தானாய் உண்மை வெளிப்பட போகிறது.

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

//இனப்படுகொலை என்பது ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஒதுக்கொள்ளப்படுவது என்பதே எங்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியானதும், நியாயமானதுமான தீர்ப்பு!!!//

கடைசியாக எழுதி இருந்தாலும்
இதுதான் என்னைப்போன்ற பலரின் எதர் பார்ப்பும்.
எங்களை கொத்து கொத்தாக கொன்றோம் என்று
அந்த அரக்கர்கள் ஒத்துகொண்டாலே போதும்
இப்போதும் நாங்கள் உள்ள நிலையில்

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

ஆனாலும் எங்கள் எத்ர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என்றே
தோணுகிறது. எவ்வளவு காலம்தான் ஏமாத்துவார் எல்லோரையும் ....

siva சொன்னது…

காலம் நிச்சயம் பதில் சொல்லும்
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்
தண்டிக்கபடுவார்கள்
ஒரு நாள் .

Rathi சொன்னது…

தவறு, காலமும், காட்சிகளும் என் வாழ்நாளில் நிகழவேண்டும் என்கிற விருப்பம்.

Rathi சொன்னது…

துஷ்யந்தன், எங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று நம்புவதை தவிர வேறு என்ன செய்யலாம்!!

Rathi சொன்னது…

சிவா, நான் மேலே சொன்னது போல் சில விடயங்கள் எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்க்க வேண்டும். அகதியாய் ஓடித்திருந்ததில் மிகவும் அயர்சியே மிஞ்சுகிறது.

பெயரில்லா சொன்னது…

ரதி...உங்கள்...மற்றும் எண்ணற்ற சகோதர சகோதரிகளின் எண்ணம்,கனவு விரைவில் ஈடேறும்...உங்கள் வாழ்நாளிலே...

ஹேமா சொன்னது…

ரதி...நீங்கள் சனல் 4ன் சாட்சிகளோடு கூடிய காணொளியின் பாதிப்பே இந்தப் பதிவென்று நினைக்கிறேன்.எனக்கென்ன அதிசயம், அசிங்கமென்றால் வெட்கமேயில்லாமல் தலை நிமிர்த்தி தாங்கள் செய்ததும் செய்வதும் பிழையேயில்லை என்று சொல்ல எப்படி மனம் வருகிறது இந்த ... ....க்கு !

பார்க்கலாம் ரதி.ஜெயா அம்மா - கோத்தபாய கொஞ்சம் காரமாவே கதைக்கினம் !

Rathi சொன்னது…

நன்றி Reverie. உங்கள் வாக்கும், எங்கள் விருப்பமும் விரைவில் நிஜமாகட்டும்.

Rathi சொன்னது…

ஹேமா, Channel 4 & Headlines Today இரண்டும் தொகுத்த காட்சிகள், சாட்சிகள் என்பனவற்றின் அடிப்படை ஒன்றுதான். Channel 4 focus செய்வது "War Crime & Crime against Humanity" என்பது தான். அதற்கேற்றாற்போல் காட்சிகள் விரிகிறது. Headlines Today focus செய்வது எதுவென்று அவர்கள் ஒவ்வொரு தலையங்கத்திலும் சொல்வது போல் எனக்கு தோன்றியது. ஆனாலும், "இனப்படுகொலை" என்பது இங்கே தான் முதன் முதல் ஓர் அதுவும் ஓர் ஆங்கில ஊடகத்தில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் பாவிக்கப்பட்டிருக்கிறது.

எது எப்படி என்றாலும் இந்த செய்தி ஆவணம் இலங்கை அரசுக்கு மறுபடியும் Homework கொடுத்திருக்கிறது. இனி மண்டையை உடைத்துக்கொண்டு அதை செய்து முடிக்க இந்தியாவை கேட்பார்கள் :)) யாதுக்கு எதிராகவும் ஓர் காணொளியை இலங்கை அரசு தயாரிக்கும் என்று நினைக்கிறேன்.

கோத்தபாய தானே, எனக்கு மனதில் அடிக்கடி ஓர் காட்சி இவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது தான். நுணலும் தன் வாயால் கெடும் என்பது இங்கேயும் பொருந்தும். யாராவது கேள்வி கேட்டால் போதும் "நான் மட்டும் தான் கதைப்பன். நான் மட்டும் தான் கதைக்கவேணும்" என்பது போல் வேர்த்து, விறுவிறுத்து பொளந்து கட்டுவார்கள். ஒவ்வொரு தொலைக்காட்சியும் கோத்தபாயவின் "Non-Verbal Cues" ஐ வேறு படம்பிடித்து அவரை பொய்யராக்க முயற்சிப்பதை அவர் அறிவதில்லை போலும் :))

ஜெ-கோத்தபாய :))) சபாஷ் சரியான போட்டி, பார்ப்போம்.

மாய உலகம் சொன்னது…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... தர்மம் மறுபடியும் வெல்லும்...உண்மை என்றானாலும் வெளியே வந்தே தீரும்... அது விரைவில் ஆனால் நல்லது..இல்லையென்றால் இவர்கள் காலத்திற்குள் தப்பித்துவிடலாம் என பொய் என்ற போர்வையை போர்த்திக்கொண்டேயிருப்பார்கள்... நன்றி

JOTHIG ஜோதிஜி சொன்னது…

உள்ளே நுழைந்ததும் வேறு தளம் வந்து விட்டோமோ என்று பயந்து அலறும் அளவுக்கு ஆடை அலங்காரம் மற்ற விசயங்கள் அற்புதம்.

தன் கையே தனக்குதவியா?

ஸ்வீட் எடு......... கொண்டாடு............

Rathi சொன்னது…

ஜோதிஜி, நீங்க என் தளத்துக்கு வந்தததையும் கொண்டாடத்தான் வேண்டும். அவ்வளவு பிசியாச்சே நீங்க :))

JOTHIG ஜோதிஜி சொன்னது…

ரதி உண்மை தான். நேற்றும் இன்றும் முழுமையான ஓய்வு. நிறைய நிறைய வேண்டுமளவிற்கு கேட்டு கேட்டு சாப்பிட்டேன். வீட்டில் இருந்தாலே வீட்டுக்குள் குழந்தைகளுக்கு இருக்கும் ஸ்நாக்ஸ் அத்தனையும் காலி செய்து விடுவேன். இல்லத்தரசி எப்ப அலுவலகத்திற்கு செல்லப் போகிறீர்கள் என்பாள்.

கருணாநிதியை எப்போதும் கலைஞர் என்று மரியாதையுடன் தான் எழுதுவது வழக்கம். என்னைப் பொறுத்தவரையிலும் அவர் மோசமான அரசியல்வாதி. ஆனால் நல்ல திறமைசாலி. ஜெ வை எந்த இடத்திலும் புரட்சித்தலைவி என்று நான் எழுதியதே இல்லை. ஆனால்
திருப்பூர் குறித்து அந்தம்மா காட்டிய ஆர்வத்தின் பலனாக இப்போது மெதுமெதுவாக சாயப்பட்டறைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஈழம் சார்பாக சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்ததை விட கோத்தபயாவுக்கு பயாஸ்கோப்பு காட்டி பொளந்து கட்டிய விதத்தைப் பார்த்து உண்மையிலேயே இனி அவரை புரட்சித்தலைவி என்று தான் அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

மாநில அரசாங்கத்தை இப்போதுள்ள சூழ்நிலையில் மத்திய அரசாங்கம் அடக்க முடியாது என்ற நோக்கத்தில் ராஜபக்ஷே சீனா சென்று படம் காட்டியதை பார்த்தீங்க தானே?

அப்புறம் இந்தியாவில் தொலைக்காட்சி அத்தனையும் படிப்படியாக ஈழம் சார்ந்த விசயங்களின் கவனம் செலுத்துவதும் ஒளிபரப்புவதற்குப் பினனால் வேறொரு காரணம் உண்டு.

இப்போது இந்திய உளவுத்துறையான ரா வுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை ராஜபக்ஷேவை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும். இதன் காரணமாக மறைமுக அழுத்தம் கொடுக்கவே பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் இந்தியா ஆட்டிக் கொண்டு இருக்கிறது.

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் சொன்னது…

இனப்படுகொலை என்பது ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஒதுக்கொள்ளப்படுவது என்பதே எங்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியானதும், நியாயமானதுமான தீர்ப்பு!!!
உண்மை. அப்பொழுதுதான் ஈழம் அடுத்த கட்டத்திற்கு போகும்.

Rathi சொன்னது…

ஜோதிஜி, கொஞ்சம் காலம் தாமதமாகிவிட்டது :) நீங்கள் சொல்வது சரிதான் இந்தியா அதாவது ரா பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது. பார்க்கலாம். ஜே என்ன செய்கிறார் போகப்போக என்று.

Rathi சொன்னது…

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன், நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம். நீங்க சொல்வது சரிதான். இனப்படுகொலை என்பது நிரூபிக்கப்பட்டால் மீதி தானே நடக்கும்.