ஆகஸ்ட் 30, 2011

உப்புக்கும் பெறாத கடைநிலை குடிமகனின் கோபம்!நான் ஒரு அறிவுஜீவி என்று எப்படி காட்டிக்கொள்வது! யோசிக்கிறேன். ஒன்று கண்டதையும் படித்துவிட்டு எல்லாத்தையும் சேர்த்துக்குழப்பி எனக்கு புரியுதோ இல்லையோ, படிப்பவர்களுக்கும் புரியாமல் அடர்த்தியாய் எழுதவேண்டும். கேட்டால் அது இந்த கொள்கை, இவர் அப்படி சொன்னார், அதையே அவர் இப்படி சொன்னார் என்று ஐயம் திருபுறக் கூறுவதாய் அடித்துப்பேசப் பழகவேண்டும். உலகப்பிரசித்தமான நிறைய மேற்கோள் காட்டவேண்டும். கற்றுக்கொண்டிருக்கிறேன், என்னை அறிவுஜீவியாய் காட்டிக்கொள்ள!

இப்போ உதாரணம் சொல்கிறேன். ஈழம் பற்றி எரிந்து, ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டபோது போது முத்துக்குமார், முருகதாஸ், இப்போ செங்கொடி இவர்கள் தங்களை தீக்கு இரையாக்கி மாய்த்துக்கொண்டது அறிவுசார் முடிவல்ல. அவர்கள் சொந்தப் பிரச்சனைக்கு தங்களை மாய்த்துக்கொண்டார்கள் என்று தர்கிக்க வேண்டும். இது ஒரு விதமான உளவியல் பிரச்சனை. இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வுகளின், முடிவின் தேடல். இப்படி சொல்வது எனக்கும் வசதி. நானும் அவர்கள் தங்களை தாங்களே மாய்த்துக்கொன்டதன் காரணத்தை தோண்டித்துருவ வேண்டிய அவசியமில்லை.

சமூகப் பிரச்சனைகள், தீர்வுகள் குறித்த என் சுயநலம், கையாலாகாத தன்மை இதையெல்லாம் ஒன்றாய் திரட்டி யாரோ ஒருவர் தங்கள் சமூக, அரசியல் கோபத்தை வெளிப்படுத்துபவர்கள் மீது அள்ளிவீசி விட்டு நடையை கட்டுவேன். அத்தோடு என் கடமையை முடித்துக்கொள்வேன். இங்கே அவர்களது நோக்கம், கொள்கை அது குறித்து நான் ஒரு தர்க்க ரீதியான விசாரணை எனக்குள் செய்யவேண்டியதில்லை. எனக்கு தெரியும் அப்படி ஆராயத் தொடங்கினால் என்னிடமே என் போலித்தன்மை விகாரமாய் பல்லிளிக்கும். எனக்கு வேண்டியது என்னை சுற்றி நடக்கும் சமூக, அரசியல் பிரச்சனை குறித்த கேள்வி விசாரணை அல்ல. அதை பட்டும்படாமலும் விமர்சித்து விட்டு விலகிவிட வேண்டும். என்னையே கேள்வி கேட்டு பதில் சொல்லத்தெரியாமல் என்னை நானே ஏமாற்றும் செப்படி வித்தை தெரியாத பட்சத்தில் நான் தோற்றுப்போவேன்.

என்னை நானேஏமாற்ற முடியாது என்று சொல்வதன் பொருள் என்னவென்று சொல்கிறேன். கேள்விகளின் சரி, பிழையும், அதன் நோக்கமும் சரியான திசையில் செலுத்தப்பட்டால் நாங்கள் அன்றாடம் போராடும் பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் நாங்கள் மட்டுமே காரணம் இல்லை என்பது வெள்ளிடை மழையாய் தெரிந்து போகும். பிறகு யார் தான் காரணம் என்று சொல்வது. நான் எந்த தேசம்/நாட்டின் குடிமகனோ அந்த தேசத்தின்/நாட்டின் அரசும், சட்ட ஒழுங்கும், அரசியல் பொருளாதார கொள்கைகளும் என்பது தான் பதில்.

என் பள்ளிக்கூட நாட்களிலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள், கடமையை செய், பலனை எதிர்பாராதே. அப்போது அதன் அர்த்தம் நீ உன் கடமையை செய். அதேபோல் நீ வாழும் நாட்டின் அரசு அமைப்பு, சட்ட ஒழுங்கு, அரசின் கடமைகளும் அதன் இயல்புகளோடு நடந்தேறும் என்பது தான்.  முன்னதை நான் என்வரையில் மெய்ப்பிக்க வேண்டும் என்பது லட்சியம். என்னை, என் லட்சியத்தை பாதுகாத்து, வளர்க்க வேண்டிய அரசும், சட்ட ஒழுங்கும் என்னை தோற்கடித்து, தான் பொய்யாய் தன்னை உருவகித்துக்கொண்டிருக்கிறது.

நான் வாழும் சமூகம், என் நாடு, என் லட்சியம், என் கனவுகள் எல்லாமே என் கண்முன்னே சிதறடிக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும், நானும் என்போன்றோரும் சொந்தமண்ணை, மக்களை, ஜனநாயகத்தை நேசிப்பதை நிறுத்தவில்லை. ஜனநாயகத்தின் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையை எந்தவொரு பிரதிநித்துவ அரசியல்வாதியும் என்னிடம் நிரூபிக்க வேண்டும் என்பதில்லை. அடுத்தமுறை தேர்தல் வெற்றிக்கு என் ஒற்றைவாக்கு அவர்களுக்கு தேவைப்படும் வரை.

ஜனநாயகம், நீதி, நியாயம் எல்லாமே கற்பனை வாதமாய் ஆகிப்போய்க்கொண்டிருக்கிறது கண் முன்னே. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் இவர்கள் மூன்று பெரும் இன்று மரணத்தின் வாசலுக்கே தள்ளப்பட்டுவிட்டார்கள்.  எப்படி சட்ட ஒழுங்கு யாரால் காப்பாற்றப் படும் என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிகொடுத்தார்களோ அவர்களாலேயே பலியாடுகள் ஆக்கப்பட்டும் விட்டார்கள். எதையெல்லாம் நீதி, நியாயம், தர்மம் என்று கற்றுக்கொடுக்கப்பட்டதோ அதிலிருந்து அதை காப்பாற்ற வேண்டியவர்கள் வழுவிக்கொண்டே இருக்கிறார்கள். இது தான் மூன்றாம் உலக ஜனநாயகம் எனக்கு கற்றுக்கொடுத்த யதார்த்த பூர்வமான அனுபவப் பாடம்.

இப்படி பள்ளிக்கூட படிப்புக்கும், நடைமுறை யதார்த்த அரசியலும் அதன் முரண்பாடுகளும் அரும்பு வயதில் புரிவதில்லை. புரிந்துகொள்ளும் வயது வந்து கேள்வி கேட்க தெரியும் சநதர்ப்பம் வரும்போது எனக்குரிய செளகர்யமான வாழ்க்கைக்குள் நான் என்னை தக்கவைத்துக் கொள்ளவே போராட வேண்டியுள்ளது. என் குடும்பம், என் வீடு, என் சந்தோசங்கள் என்று சுயநலமாய் சுருங்கிப் போகிறது வாழ்க்கை. முரண்பாடுகளுடன் வாழ்ந்தாலும் எனக்கு வசதியானதை உடன்பாடாகவும், என் பங்களிப்பு எதிர்பார்க்கப்பட்டால் முரண்பட்டுக்கொண்டும், விமர்சனம் மட்டும் செய்து கொண்டும் ஒட்டியும், ஒட்டாமலும் சமூகப் பிரச்சனைகளில் என் பங்கு இருக்கும்.

எனக்குரிய ஜனநாயக, பொருளாதார, அரசியல் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டு நான் ஒரு நாட்டின் கடைநிலை குடிமகனாய்/குடிமகளாய் நான் ஜெயிக்காத வரை என் நாடும், சட்ட ஒழுங்கும் அதன் எல்லாப் படிநிலைகளிலும் தோல்வியையே தழுவிக்கொண்டிருக்கும். அதைப் போலவே எந்தக் கொள்கை வகுப்பாளர்களும், ஜனநாயக பிரதிநித்துவ அரசியல்வாதிகளும் ஒரு கடை நிலை குடிமகன் போல் தனது தேசத்தை, நாட்டை நேசிக்காத  வரை ஜனநாயகமும், சட்ட ஒழுங்கும் தோற்றுக்கொண்டே இருக்கும்.Image Courtesy: Google

11 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

ரதி,

கோபமும், ஆதங்கமும் ஒருங்கே சேர்ந்து கட்டுரை ஓட்டாம ஓடுது தகிக்கும் அனலுடன்.

//எனக்கு வேண்டியது என்னை சுற்றி நடக்கும் சமூக, அரசியல் பிரச்சனை குறித்த கேள்வி விசாரணை அல்ல. அதை பட்டும்படாமலும் விமர்சித்து விட்டு விலகிவிட வேண்டும்.//

இதுவே சமச்சீரான முறையில் வாழ்வு எனும் மகா சமுத்திரத்தை கடந்து செல்வதற்கான ஒரே வழி. இல்லையெனில் உலக வாதைகளை பூராவும் தனதாக்கிக் கொண்டு தினமும் மண்டை ஹெவியாகவே இருக்கும். என்னதான் இதற்கெல்லாம் தீர்வு என்ற கேள்விக்கு, அடையாள உண்ணவிரதமுமில்லை, மனிதச் சங்கிலியுமில்லை, கடையடைப்பு போராட்டமுமில்லை வேறு என்னதான் தீர்வு என்பதாக சிந்தித்து சிந்தித்து... கேள்விகளுக்கு விடையே கிடைக்காமல் க்வீக் வழியான இந்த உலகத்தை விட்டே சென்று விடுவதே வழியாக படும்.
ஆனால், தனிப்பட்ட முறையில் அது தேவையற்ற ஒன்று, உலகப்படம் பெரிய திரையில் விரிந்து, அனைவரும் அமர்ந்து பார்க்கடப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் நம்மை வருத்தி கொள்வதில் என்ன இருக்கிறது?

எனவே எளியவனின் வலியும், கோபமும், பொருமலும் எஸ் உப்பிற்கும் பெறாததுதான்.

பதிவு இன்றைய தமிழக, ஈழ அரசியல் பின்னணிக்கு மிகவும் பொருந்தி போயி கதறி நிற்கிறது.

Thekkikattan|தெகா சொன்னது…

இன்னும் காணொளி பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பேசலாம். நன்றி!

துஷ்யந்தன் சொன்னது…

நியாமான ஆதங்கமே.. இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு,
பதிவுலகில் சராமரியாக எல்லோரையும் விமர்சிக்க தெரிந்து இருக்க வேண்டும்,
அனான் யாரும் எதுவும் எழுதினால் போய் ஆதற்க வேண்டும் இல்லியோ
நீங்கள் துரோகி ஆகிவிடுவீர்கள்.

துஷ்யந்தன் சொன்னது…

//ஜனநாயக பிரதிநித்துவ அரசியல்வாதிகளும் ஒரு கடை நிலை குடிமகன் போல் தனது தேசத்தை, நாட்டை நேசிக்காத வரை ஜனநாயகமும், சட்ட ஒழுங்கும் தோற்றுக்கொண்டே இருக்கும்//

நிஜம் சொல்லும் வரிகள்,
பிரமாதம்........

பெயரில்லா சொன்னது…

பெரிய பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க...நம்ம மண்டைல ஒன்னும் ஏறலைங்க...மறுபடி மத்தியானம் டீயோட படிச்சி பார்க்கிறேன்....

JOTHIG ஜோதிஜி சொன்னது…

ஒரு வகையில் சந்தோஷமாக இருக்கிறது. தெளிவான நடையில் குழப்பம் இல்லாத கருத்துக்கள்.

இதைப் போலவே தொடந்தால் இன்னமும் எழுத்து நடையில் மெருகேறும் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு வந்துள்ளது.

Rathi சொன்னது…

தெக்கி, ம்ம்ம்.... யதார்த்தமாக அலட்டாமல் சமகால அரசியலை எப்படி கையாண்டுகொண்டிருக்கிறோம் என்பதை சொல்லியிருக்கிறீர்கள்.

// ஆனால், தனிப்பட்ட முறையில் அது தேவையற்ற ஒன்று, உலகப்படம் பெரிய திரையில் விரிந்து, அனைவரும் அமர்ந்து பார்க்கடப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் நம்மை வருத்தி கொள்வதில் என்ன இருக்கிறது?//

ம்ம்ம்ம்.... புரியுது.

அப்புறமா, உப்பென்று சும்மா பேச்சுக்குத் தான் குறைவாய் சொல்கிறோம். மனித உடலில் அதன் மருத்துவ குணம் போல் தான் ஓர் கடைநிலை குடிமகனின் கோபமும் என்பதற்கும் அழகாய்ப் பொருந்தும்.

Rathi சொன்னது…

துஷ்யந்தன், உங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

Rathi சொன்னது…

Reverie, ம்ம்ம்ம்... மறுபடியும் படிச்சிருப்பீங்கன்னு நெனைக்கிறேன் :)

Rathi சொன்னது…

ஜோதிஜி, எல்லாமே உங்கள் ஆசீர்வாதம் :)

siva சொன்னது…

நடைமுறை யதார்த்த அரசியலும் அதன் முரண்பாடுகளும் அரும்பு வயதில் புரிவதில்லை.//


அதனால எனக்கும் ஒன்றும் புரிய வில்லை :)
எவ்ளோ யோசிக்கிறீங்க..
என்ன சொல்றது வியந்து விலகி நிற்கின்றேன்