ஆகஸ்ட் 25, 2011

படிக மனம்!!!


கணவன்- மனைவி, காதலன்-காதலி, சகோதரன்-சகோதரி இந்த உறவுகள் தாண்டி ஆண்-பெண் உறவுக்கு என்ன பெயரும் பொருளும் இருக்கமுடியும். ஆண்-பெண் இருபாலருக்கும் இடையில் இருக்கும் சராசரி மனித உறவுகள் கடந்த இன்னோர் தொடர்பு, நட்போ! நட்பின் விழுமியங்களும், தேவைகளும் கூட ஆங்காங்கே சில சமயங்களில் அற்ப ஆசைகளில் இடறி களங்கப் பட்டு சமூக நிந்தனையாய் மனித மனங்களை, வாழ்க்கையை பதம்பார்க்கிறது. உள்மனக்குழப்பங்கள், உறவுகள் குறித்த உத்தரவாதமின்மை இதுவே மனிதர்களின் உறவுச் சிக்கல்களை உண்டுபண்ணுகிறதோ! சமூக ஒழுக்காற்று விழுமியங்கள் தடை போட்டாலும், அதீத அல்லது நியாயமான ஆசைகள் அணை மீறும் போது ஆண்-பெண் நட்பு என்பது அர்த்தமும் மாறி நிற்கிறது.

நட்புக்கு வரைவிலக்கணம் சொல்லத் தெரியாவிட்டாலும், அது குறித்த புரிதலும், ஆழமும் அறியப்படும் போது தான் அதன் களங்கமில்லா அர்த்தம் மிளிர்கிறது. காதலில் நீ நானாய், நான் நீயாய் என்பார்கள். நிஷ்களங்கமற்ற ஆண்-பெண் நட்பில் தான் பால், திணை வழுக்கள் காணாமற் போகின்றன. அங்கே காதல் இல்லை. காமம் இல்லை. ஆண்-பெண் என்னும் இயற்கையின் உடற்கூறுகள் தாண்டி என் நட்பே நீ நீயாய் இரு. நான் நானாகவே இருந்துவிடுகிறேன் என்று சொல்லமுடிகிறது. அதன்படி நடக்கமுடிகிறது.

இயல்பான மனித தேவைகளுக்கும், ஆசைகளுக்கும் மரபுகளால் வேலி போட்டு, உணர்வுகளால் தடை போட்டு, இயற்கைக்கு மீறிய இயல்புகளால் பூட்டும் போட்டு வைத்தே பழகிவிட்டோம். எல்லாமே மனதின் உள்ளேயே கிடந்து வெந்து, வெதும்பி வடிகால் தேடும் போது அசிங்கமாய் ஆங்காங்கே பல்லிளிக்கவும் செய்கிறது. எங்கள் சுயம் பார்த்தே சொந்த முகம் கண்ணாடியில் சுருங்கிப்போகிறது, சிதறிப்போகிறது. சொந்தமுகமே அந்நியமாய் தெரிகிறது. சுயத்தின் மீதே வெறுப்பை உமிழ்கிறது ஆறாம் அறிவு. ஆனால், ஒன்று மட்டும் தெளிவாய் புரிகிறது சுயமிழக்காத ஆண்-பெண் நட்பு என்பது ஆறாம் அறிவை இன்னும் அழகுபடுத்துகிறது.

நான் நானாகவே இருக்க என் வீடு அனுமதிக்காவிட்டாலோ, அல்லது என்னை நானே கலாச்சார கோலங்களால் போலியாய் சித்தரித்துக்கொண்டாலோ என்றாவது ஒருநாள் என்னிடம் நானே ஏமாந்து போவேன், தெரிகிறது, புரிகிறது. எல்லோருக்கும் வீடு சொர்க்கமும் அல்ல, நரகமும் அல்ல. வீடு என்பது மனிதர்களால் நிரம்பியது. உறவுகளால் அர்த்தப்படுவது. ஒருவேளை, அந்த மனிதர்களும், உறவுகளும் பொய்த்துப் போகும் போது  என்னை கட்டுக்குள் வைத்துக்கொள்ள அறிவும், அனுபவமும் உண்டு. சரி, பிறகு நான் மட்டும் எப்படி, எத்தனை நாளைக்கு என்னிடமே பேசிக்கொண்டிருக்க முடியும், யோசிக்கிறேன்.

நான் சிரித்தால் சிரிக்கவோ அல்லது அழுதால் என்னோடு சேர்ந்து மூக்கை உரிஞ்சவோ எனக்கு நட்பு தேவையில்லை. எனக்கு நல்ல வழிகாட்டல் தேவை. நான் வழி தவறினால் இடித்துரைக்க குருவாய் ஓர் நட்பு தேவை. அந்த நட்பு என்பது எனது இயல்புகளோடு என்னை ஏற்றுக்கொள்ளும் இன்னோர் இயல்பான சக மனிதனாய் இருக்கவேண்டும். தன்னை மட்டுமே கெளரவப் படுத்தி உயர்த்திக்காட்டாத உயர்ந்த பண்பு வேண்டும். அந்த மனிதனை உறவுகளின் பெயரால் இணைத்துக்கொள்ள இஷ்டமில்லை. பிறகு எப்படி என்று கேள்வியும் எழுகிறது. நட்பு என்பதே சரியென்று பதிலாய் தோன்றுகிறது.

எந்தவொரு உறவும் நட்பாக இருக்கமுடியாது என்பதும் வறட்டு வாதம். உறவே நட்பாய் அமைந்தால் அது வாழ்க்கையை இன்னும் அமைதிப்படுத்தும், ஆழப்படுத்தும். கணவனும் மனைவியும், காதலனும் காதலியும், சகோதரனும் சகோதரியும் கூட நட்பாய் இருந்தால் அற்புதம். யாரிடமும் சொல்லமுடியாத, பேசமுடியாத தனிமைத வாழ்வின் பொக்கிஷ அனுபவங்களை, அற்பங்களை, எமக்கே உரிய அன்றாட நிகழ்வுகளை நட்பின் ஆழம் தான் தன்னிடத்தே உள்வாங்கி மெளனமாய் ஒருவனை அல்லது ஒருத்தியை நிர்ப்பந்தங்கள் இன்றி அங்கீகரிக்கிறது. அங்கே ஒருவரின் வாழ்வனுபவங்கள் காரணமாக காட்டப்பட்டு தனிமனித நிராகரிப்பு இடம்பெறுவதில்லை.

நிர்ப்பந்தங்கள் இல்லாத நட்பும் அன்பும் நிறைந்த இடம் தான் படிக மனம்! எப்போதுமே தெளிவான பளிங்கு போல் தனது சுயம் காட்டும். சக மனிதன் தன்னை உணரவும், தெரிந்துகொள்ளவும் கூட வழி காட்டும். அதற்கு யாரையும் எதுக்குமே நிர்ப்பந்திக்க தெரியாது. இதில் சிக்கல் என்னவென்றால், இந்த மனோபாவம் யாருக்கும் எளிதில் கைவரப் பெறுவதில்லை. சிலருக்கு இயல்பாகவும், சிலருக்கு வாழ்வின் அனுபவங்கள் மூலமும் தான் அந்த நிலை கைகூடுகிறது. அப்படிப்பட்டவர்களை துணையாகவோ, நட்பாகவோ அமையப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நன்றாக யோசித்துப் பாருங்கள் இப்படி யாரையாவது வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள். ஆனால், உங்கள் அவசரப் புத்தியால் கோட்டை விட்டிருப்பீர்கள். புரியலையா, அவர்களுக்கு நாங்கள் "இளிச்சவாயர்கள்" என்று பட்டம் கொடுத்திருப்போம்.

 
Image Courtesy: தெகா
 

 

19 கருத்துகள்:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

கடைசியில் இப்படி சொல்லிட்டீங்களே :))

உண்மைதான் .. சிரிச்சா சிரிச்சி ..அழுதா அழுது ..யாருக்கு வேணும்.. அப்பப்ப சரியான பாதையில் போறோமான்னு அறிவுறுத்தற மாதிரி இருக்கனும் நட்பு..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில் ..

பல்சுவை வலைதளம் விருது

siva சொன்னது…

ஆனால், உங்கள் அவசரப் புத்தியால் கோட்டை விட்டிருப்பீர்கள். புரியலையா, அவர்களுக்கு நாங்கள் "இளிச்சவாயர்கள்" என்று பட்டம் கொடுத்திருப்போம்.
//?

siva சொன்னது…

நல்லாதானே ஆரம்பித்து இருக்கீங்க
ரொம்ப யோசித்தும் இருக்கீங்க என்பது எழுத்து நடையில்
எண்ணங்களை தெரிகின்றது.
வாழ்த்துக்கள் ..(Vaaltha vayathu ellai)..


(மன்னிக்கவும் உங்கள் போல அறிவாளி இல்லை.கடைசி வரிகள் எனக்கு புரிய வில்லை)

நல்ல நட்பு கூடவே இருப்பதும் இல்லை
பிரிந்து போவதும் இல்லை.
எங்கோ ஒரு மூலையில் இவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்து கொண்டு இருக்கும்...

Thekkikattan|தெகா சொன்னது…

/எனக்கு நல்ல வழிகாட்டல் தேவை. நான் வழி தவறினால் இடித்துரைக்க குருவாய் ஓர் நட்பு தேவை.

நிர்ப்பந்தங்கள் இல்லாத நட்பும் அன்பும் நிறைந்த இடம் தான் படிக மனம்! எப்போதுமே தெளிவான பளிங்கு போல் தனது சுயம் காட்டும்.//

எண்ணங்களிலும், எழுத்திலும் அகத்தின் முதிர்ச்சி தெரிகிறது, ரதி!

Thanks for the post!

Rathi சொன்னது…

முத்து, கடைசியில் சொன்னதுக்கும், முதலில் சொன்னதுக்கும் சரியான தொடர்பை கண்டுபிடித்துவிட்டீர்கள் :)

Rathi சொன்னது…

"என் ராஜபாட்டை" ராஜா, ம்ம்ம்ம்....

Rathi சொன்னது…

சிவா, இதையும் படிப்பவர்களின் அனுபவ அனுமானத்திற்கே விட்டுவிடுகிறேன்.

அதெப்படிப்பா.... வாழ்த்த வயது இல்லையா.... இது புதுசா இருக்கே :)

Rathi சொன்னது…

தெகா,You're welcome :)

ரெவெரி சொன்னது…

கடைசியில் இப்படி சொல்லிட்டீங்களே :))

உண்மைதான் .. சிரிச்சா சிரிச்சி ..அழுதா அழுது ..யாருக்கு வேணும்.. அப்பப்ப சரியான பாதையில் போறோமான்னு அறிவுறுத்தற மாதிரி இருக்கனும் நட்பு..

Amen.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

நல்லாதானே ஆரம்பித்து இருக்கீங்க
ரொம்ப யோசித்தும் இருக்கீங்க என்பது எழுத்து நடையில்
எண்ணங்களை தெரிகின்றது.


சிவா நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. ரதி இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வந்து கொண்டு இருக்காங்க. இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்.

ரதி தொடக்கம் நன்றாக வந்து, மன வேகத்தில் வந்த எழுத்துக்கள் சற்று இறுக்கமான நிலைக்குச் அழைத்துச் சென்று கட்டுபாடு இல்லாமல் வினோதமாக முடித்து இருக்கீங்க.

தெகா போல சில சமயம் வார்த்தைகள் வாசகங்கள் கோர்வையாக போய்க் கொண்டே இருப்பதை தவிர்க்க.

நான் இதை கற்றுக் கொள்ள 16 மாதங்கள் ஆகிவிட்டது. நீங்கள் குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டுங்க.

படம் நன்றாக இருந்தது.

மற்றபடி கருத்துக்கள் சொல்ல ஒன்றுமில்லை. நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலை தான் நான் பார்க்கும் மனிதர்கள் என் கண்களில் தெரிகிறார்கள். ஒரு வேளை விசா அனுப்பி வைத்தால் கனடா வந்தால் இந்த நட்பு, விருப்பம், உறவுகள், தனி மனித விருப்பங்கள் எப்படி இருக்கிறது போன்றவற்றை பார்க்க முடியும்.

இங்கே நீங்க சொல்லும் அளவுக்கு எதுவம் சிறப்பா இல்லை. ஆனால் எல்லாமே நடக்குது. கொஞ்சம் மாறும். அதற்கே இன்னும் 30 ஆண்டுகள் ஆகலாம்.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

நிர்ப்பந்தங்கள் இல்லாத நட்பும் அன்பும் நிறைந்த இடம் தான் படிக மனம்! எப்போதுமே தெளிவான பளிங்கு போல் தனது சுயம் காட்டும். சக மனிதன் தன்னை உணரவும், தெரிந்துகொள்ளவும் கூட வழி காட்டும்.

இல்லை ரதி. ரொம்ப கஷ்டம். இதுவரைக்கும் அப்படி ஒரு நபரை திருப்பூர் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை.

அதற்கு யாரையும் எதுக்குமே நிர்ப்பந்திக்க தெரியாது.

விருப்பங்கள் ஆசைகள் சார்ந்தே இங்கு நட்பும் தெடர்ந்து செல்வது தீர்மானிக்கப்படுகின்றது.

இதில் சிக்கல் என்னவென்றால், இந்த மனோபாவம் யாருக்கும் எளிதில் கைவரப் பெறுவதில்லை.

இது தான் முற்றிலும் உண்மை. நான் கற்றுக் கொள்ளவே எனக்கு பாதி வாழ்நாட்கள் தேவைப்பட்டது.

சிலருக்கு இயல்பாகவும், சிலருக்கு வாழ்வின் அனுபவங்கள் மூலமும் தான் அந்த நிலை கைகூடுகிறது.

அனுபவமே ஆசிரியர். இன்றும், என்றும் எப்போதும்.

அப்படிப்பட்டவர்களை துணையாகவோ, நட்பாகவோ அமையப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

ரதி, தெகா இன்னும் பலர்.


நன்றாக யோசித்துப் பாருங்கள் இப்படி யாரையாவது வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள்.

சாக்கடை சுத்தம் செய்பவர்கள், தெருவை கூட்டுபவர்கள், அன்றாடங் காய்ச்சிகள் போன்றவர்களின் இருந்து இது போன்ற நபர்களை பார்த்து பேசி இருக்கின்றேன்.

ஆனால், உங்கள் அவசரப் புத்தியால் கோட்டை விட்டிருப்பீர்கள்.

இது கூட உண்மையாக இருக்கலாம். யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்.


புரியலையா, அவர்களுக்கு நாங்கள் "இளிச்சவாயர்கள்" என்று பட்டம் கொடுத்திருப்போம்.

என்னுடன் இருக்கும் அக்கா மகன் குறித்து யோசித்து சிரித்துக் கொண்டு இருக்கின்றேன்.

அளவுக்கு அதிகமாக நல்லவனாக இருக்காதே என்று திட்டுவதுண்டு. ஒரு வேளை அவன் தான் இவனோ?

துஷ்யந்தன் சொன்னது…

ரெம்ப வித்தியாசமாக எழுதி இருக்கிறீர்கள், ரெம்ப நேரம் செலவழித்து எழுதி இருக்கிறீர்கள்
வசனகோர்ப்பின் அழகில் தெரிகிறது.
அழகான அசத்தல் பதிவு.

Rathi சொன்னது…

Reverie, Amen.... :)

Rathi சொன்னது…

ஜோதிஜி, நிறைய புரிந்துகொண்டேன், நன்றி.

Rathi சொன்னது…

துஷ்யந்தன், நன்றி. உங்க பக்கமும் சில நாட்களாக வரவில்லை. விரைவில் வருகிறேன்.

தவறு சொன்னது…

ரதி ...என்னதான் வாழ்க்கையில சங்கடங்கள் வந்தாலும் அலட்டல் இல்லாத வாழ்க்கை தான் வாழ்கிறீர்கள் போல..ம்ம்ம்...படிக(படிந்த)மனம்
உங்கள் மனம் .

அன்பின் ஜோதிஜி அழகாய் விளக்கிவிட்டார்.

நீங்கள் சொல்வதுபோல் இடிந்துரைக்கும் நட்பு அபூர்வம் தான் அமைவது.

ரதி வாழ்த்துகள்.

Rathi சொன்னது…

தவறு, Welcome back. விடுமுறையில் போயிருந்தீர்கள் போல.

// ..ம்ம்ம்...படிக(படிந்த)மனம் உங்கள் மனம் .//
:))

வாழ்த்துக்களுக்கு நன்றி

Rathi சொன்னது…

தவறு, Welcome back. விடுமுறையில் போயிருந்தீர்கள் போல.

// ..ம்ம்ம்...படிக(படிந்த)மனம் உங்கள் மனம் .//
:))

வாழ்த்துக்களுக்கு நன்றி