ஆகஸ்ட் 05, 2011

கற்க கசடற.....!!! அரசியல், யாப்பியல் ஜனநாயகம்பதிவுலகத்தின் அறிமுகமும், அங்கேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும், அப்பப்போ வந்து நோட்டம் விட்டுப்போகிரவர்களுக்கும் சமச்சீர் கல்வி, சமச்சீர் கல்வி என்பது கடந்து வரமுடியாத ஒன்றாய் போய்விட்டது. நான் தமிழ்நாட்டை கடந்து எங்கேயோ இருக்கிறேன். இருந்தும் சமச்சீர் கல்வி என்பது இன்று நான் ஒவ்வொரு நாளும் கடந்து வரும் ஓர் சொல்லாகிவிட்டது. பயந்துடாதீங்க, நான் சமச்சீர் கல்வி பற்றி தமிழ்நாட்டு தமிழர்களுக்கு பாடம் எடுக்கப்போவதில்லை :) கல்வி என்பதன் அரசியல், சமூக, பொருளாதார தோற்றுவாய்கள் என்ன என்பதை என் கருத்தில் சொல்லும் ஓர் முயற்சி.

கல்வி என்பதன் தோற்றத்தையும், அதன் தார்ப்பரியங்களையும் கொஞ்சம் யோசித்தால் அதன் ஆரம்பம் எங்கேயோ போய் முடிகிறது. மனித நாகரீகத்தின் தோற்றம், எழுச்சி, வளர்ச்சி என்று அதனோடு பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. மிருகங்களோடு மிருகங்களாய் வாழ்ந்துகொண்டிருந்த மனிதனின் பரிணாம, பரிமாண வளர்ச்சியின் உச்சம் தான் கல்வி. மனித குலம் சமூகமாக வாழத்தொடங்க அதற்குரிய அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்புகள் மற்றும் விழுமியங்கள் என்று தோற்றம் பெற்றன. அதன் பின்னர் உருவான வரலாற்றுப் படையெடுப்புகள், காலனியாதிக்கம்  தமிழர் சமூகத்தில் மத, அரசியல், பொருளியல் தாக்கங்களை இன்னும் மீதம் வைத்திருக்கிறது.

அதில் அதிகம் என்னை வெறுப்படைய வைப்பது Colebrooke -Cameron 'Reforms' (1833) மூலம் பிரித்தானியா இலங்கையின் மூன்று ராச்சியங்களை, தமிழர் ராச்சியம், கண்டி ராச்சியம், கோட்டை ராச்சியம் எனப்படும் தனித்தனி ராச்சியங்களை இணைத்து ஒரு நாடாக்கி அதன் அதிகாரத்தையும் சிங்களவர்களிடம் ஒப்படைத்தது தான். இன்று அதை மீளத்தாருங்கள் என்றால் நாங்கள்..... சரி விட்டுததொலைப்போம். இதெல்லாம் இலங்கைப் பாடத்திட்டத்திலேயே மறைக்கப்படும் உண்மைகள்.

கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்றாலும் அதை முற்றுமுழுதாக ஒழிக்க முடிவதில்லை. அரசியல் தத்துவாசிரியர்களின் ஆராய்ச்சி முடிவுகளுக்கும், அரசியல் கொள்கைகளுக்கும் இடையே சமூக பிரச்சனைகள் குறித்த சமநிலையில் எப்போதுமே பாரிய இடைவெளிகள் இருந்துகொண்டே இருக்கிறது. கல்விக்கொள்கைகளில் அரிசயல் உள்நுழையும் போதில் அது குறைபாடுகள் நிறைந்ததாக ஆகிவிடுகிறது. கல்விக்கொள்கைகளில் எதற்காக அரசியல் நுழைய வேண்டும் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அது குறித்த தெளிவு மக்களிடம் கொண்டு வரப்படவும் வேண்டும்.

தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வி தொடர்பான பிரச்சனை எதற்காக நீதிமன்றம் வரை போகவேண்டும் என்று தோன்றியது. எங்களுக்கு திட்டமிடப்பட்ட அரசியல் பாகுபாட்டுக்கொள்கைகளால் கல்வி பறிபோகிறது. தமிழ்நாட்டில் தமிழர்களே அவர்களுக்குரிய கல்வித்தேவைகளை தீர்மானிக்கும் உரிமையின்றி, போராட்டம், நீதிமன்றம் என்றால் யாருக்காக இந்த ஜனநாயக கட்டமைப்புகளும், ஆட்சியும்!!

இது போன்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுவர கல்வித்திட்டத்தில் "Civic Education" - குடிமக்களுக்குத் தகுந்த கல்வித்திட்டம்  -  யாப்பியல் ஜனநாயகம் (Constitutional Democaracy) என்கிற அரசியல், சமூக, பொருளாதார கருத்தியல் குறித்த கேள்விகள் மற்றும் ஆய்வுகள் என்கிற கண்ணோட்டத்துடனான பாடத்திட்டம் தேவை என்கிறது இந்தக் கட்டுரை. இப்படியெல்லாம் சிங்கள ஆட்சியாளர்கள் யோசித்திருந்தால் அந்த நாட்டுக்கு இந்த நிலை, தமிழின அழிப்பும் நிகழ்ந்திருக்குமா!!

இந்தக்கட்டுரையை எழுதியவர் நோக்கம் நல்லதாகவே இருக்கட்டும் ஒருமுறை அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பிரையன் செநிவிரட்னேவிடம் சொன்னாராம், "If all the sinhalese had your views, we would not need a Separate Tamil State." என்று. ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பிரையன் செநிவிரட்னே போல் மற்றவர்களும் புரிந்துகொண்டிருந்தால் நாங்கள் தனி நாடு கோர வேண்டிய தேவை இருந்திருக்காது என்பதே அதன் கருத்து.

இனிமேல், அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் கூட இவ்வளவு அழிவுக்குப் பின் அந்த வார்த்தைகளை சொல்வாரோ என்பது ஐயமே!

இந்தக்கட்டுரை இலங்கை கல்வித்திட்டம் குறித்து எழுதப்பட்டது என்றாலும் பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும். மனித வரலாறு, நாகரீகங்களின் எழுச்சி என்று ஜனநாயக கருத்தியலை, கட்டமைப்பை கற்றுக்கொண்டவர்கள், தத்தெடுத்தவர்கள் கல்விக்கொள்கையில் மட்டும் ஜனநாயகத்தை கோட்டை விடுவார்கள் போலும்.


கனடா, அமெரிக்க, ஐரோப்பிய செல்வந்த நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் "சந்தர்ப்பங்கள்" என்று சொல்லப்படும் "Opportunity" எல்லோருக்கும் சமமாகவே வழங்கப்படுகிறது. அதையும் தாண்டி முன்னேறுவதென்பது தனிமனித முயற்சி!! அந்த சமமான கல்வி, அதை கற்கும் சந்தர்ப்பங்கள் என்பது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எப்போது சாத்தியம்!!  யாப்பியல் ஜனநாயகத்தை கேள்வி கேட்கும் அளவுக்கு கற்க கசடற..... என்றால் நம்மூர் அரசியல்வாதிகள் வேறு கோபித்துக்கொள்ளப்போகிறார்கள்.

Image Courtsey: Google

18 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆதங்கத்தோடு எழுதியுள்ளீர்கள்...

என்னைக்கேட்டால் நம் கல்விக்கு நாமே பொறுப்பெடுக்க வேண்டும்..மற்றவர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை...

இலங்கை கல்வி சூழ்நிலை எனக்கு அவ்வளவாக தெரியாது... அரசியல்வாதிகள் எல்லா இடத்திலும் ஒரே ரகம் தானே..

வழக்கம் போல் conviction ஓடு எழுதுங்கள்...என் வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>அரசியல் தத்துவாசிரியர்களின் ஆராய்ச்சி முடிவுகளுக்கும், அரசியல் கொள்கைகளுக்கும் இடையே சமூக பிரச்சனைகள் குறித்த சமநிலையில் எப்போதுமே பாரிய இடைவெளிகள் இருந்துகொண்டே இருக்கிறது.

அழகிய அவதானிப்பு

Rathi சொன்னது…

Reverie, கல்வி என்பதற்கு தனிநபர் முயற்சிதான் அதிகம் வேண்டும். இருந்தும் அது குறித்த அரசின் கொள்கைகள் கொஞ்சமேனும் ஆதரவாக இருந்தால் நல்லது. நன்றி.

Rathi சொன்னது…

சி.பி. செந்தில்குமார், அதை கவனித்து குறிப்பிட்ட உங்கள் கவனிப்பும் அழகுதான். நன்றி.

ஹேமா சொன்னது…

ரதி...நிறையப் படிச்சிட்டு எப்பவும் எதையாவது போட்டு உடைச்சுக்கொண்டு இருங்கோ.படிக்காத நான் என்னத்தைச் சொல்ல.

ஐரோப்பிய நாடுகளின் பாடமுறைக்கும் நம் நாட்டுப் பாடமுறைக்கு எவ்வளவு வித்தியாசம்.சமய பாடத்தில தேவாரம் பொழிப்புரை எல்லாம் ஒரு சொல் தவறவிடாமப் பாடமாக்கி 99 1/2 புள்ளி எடுத்தேன்.நம்புங்கோ சிரிக்காமலுக்கு.ஆனா இப்ப என்ன தேவாரம் அது எண்டே மறந்துபோச்சு.இப்பிடி இருந்தா எப்பிடி உருப்படுறது.இங்க பிள்ளைகள் 18 வயதிலேயே தங்கட சொந்தக்காலில நிக்க வெளிக்கிடுதுகள்.நாங்கள் அப்பா அம்மாவை அரிச்சபடியெல்லோ இருப்பம் 28-30 வயசு வரைக்கும்.
சம்பந்தமில்லாமப் புலம்புறேனோ !

(பொழிப்புரை - கலாவுக்கு நீங்க சொன்ன பொ...ழி...ப்பு ஞாபகம் வந்திட்டுது ரதி !

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

சூப்ராக சொன்னிங்க அக்கா,
வாழ்த்துக்கள்

தவறு சொன்னது…

தமிழ்நாட்டில் தமிழர்களே அவர்களுக்குரிய கல்வித்தேவைகளை தீர்மானிக்கும் உரிமையின்றி, போராட்டம், நீதிமன்றம் என்றால் யாருக்காக இந்த ஜனநாயக கட்டமைப்புகளும், ஆட்சியும்!!

ரதி மேற்சொன்ன உங்க கருத்தை என்னுள் கேட்டு்ப்பார்த்தால் முதலில் என்னுடைய வாழ்வும் அதற்கு தகுந்த பொருள் ஆதாரபாதுகாப்பு அதற்கான உந்துதல் அதற்கு பிறகே அடிப்படை உரிமைகள்.

இரண்டாவதாக பிள்ளைகளைப் பெற்ற பொற்றோர்களுக்கிடையே எந்தகல்வி என்பதில் நிறைய குழப்பங்கள்.

Thekkikattan|தெகா சொன்னது…

ஹேமா சொன்ன மாதிரி, நீங்க எதையாவது வாசிச்சு ரொம்ப சிந்திக்க வேண்டியது. அதன் விளைவா இப்படி ஏதாவது எழுதி ஆழமான கேள்வியா கேட்டு வைச்சிப்புடுறீங்க. பதில் சொல்ல கையை கட்டிகிட்டு வானம் வெறிக்க வேண்டியதிருக்கே :)

தமிழகத்தில் ஏன் இந்த குழப்ப நிலை?

இதுக்கு பின்னான ஒரு முழுச் சமூகத்தின், நாட்டின் பிரஜைகள் எப்படி நீண்ட நெடிய பாதையில் எந்த விதமான புற அழுத்தங்களுமற்று, மேலோட்டமான தேவைகளுக்கு மட்டுமே தத்தளிக்க விடும் பொழுது (உ.தா: சில மக்களுக்கு மட்டும் உணவு தட்டுப்பாடு, சிலருக்கு கேபிள் டிவி சரியா தெரியல, சிலருக்கு வாங்குற சம்பளம் தேதி 10க்குள்ளர செலவாகிடுது...) அதனைத் தாண்டிய பெரிய விசயங்கள தங்களது ஆழ மன சிந்தனைக்குள் புகுவது கிடையாது.

இது ஒரு சமூக உளவியல் பின்னணியில் அலசப்பட வேண்டியது. தேவைகளையும், அதற்கான நிர்பந்தங்களையும் கொண்டே மனித மூளை அந்த சூழ்நிலைக்கேற்ப சிந்திக்கிறது.

இந்த அடிப்படையில் மேலோட்டமான தேவைகளுக்காக ஒரு விதமான மயக்கத்தை (சினிமா, டிவி, நுகர்வோர் கலாச்சாரம்...) ஊட்டி அதனைத் தாண்டி சிந்திக்கா வண்ணம் ஒரு கூட்டத்தை உருவாக்கி விட்டால் - நீங்கள் குறிப்பிட்ட சீரியஸ் கேள்விகள் உதிக்கவே வாய்ப்பில்லை.

தேவைகளுக்கான அவசியத்தை இரண்டு சமூகங்களைக் கொண்டு நாம் பிரித்துணரலாம். நாளை ஈழம் அங்கீகரிக்கப்பட்டால் தமிழகத்தில் இன்று நிகழும் குழப்பம், முயன்று பெற்ற சுதந்திரத்தில் அதற்கான founders இப்படி ஏனோ தானோ என்று கல்வி விசயத்தில் தனது தேசத்தில் நிகழ விடுவார்களா?

அதற்கு உண்டான பதிலே ஏன் இப்படி குழப்ப நிலையில் போராடி சமச்சீர் கல்வி போன்ற உரிமைகளைக் கூட பெற வேண்டிய அவலத்தில் உள்ளோம் என்பது விளங்கும்.

Thekkikattan|தெகா சொன்னது…

Rathi,

It is about time for you I guess to change your old style blog template :) - change it into நீண்ட வரிகளை உள்ளடக்குமாறான மார்ஜின்களை கொண்ட டெம்ப்ளேட். பதிவுகள் பெரிசான கூட அணில் வாலு மாதிரி கீழே கீழே என ஸ்குரோல் பண்ண தேவையிருக்காது; ரெண்டாவது பதிவும் சிறுசா இருக்கிற மாதிரி ஒரு மயக்கத்தை கொடுக்கும் :)

மேலும் பல mind blowing and interesting templates are around. So, consider changing one over this weekend if you find time. இந்த ரெக்வெஸ்டும் நீண்டு போச்சு :)

Rathi சொன்னது…

ஹேமா, நீங்களும் சிரிக்காமலுக்கு நம்புங்கோ, இதெல்லாம் நீங்க வாசிக்கும் போது ஈழத்தில் "சமூகக் கல்வி" பாடம் ஞாகம் வரேல்லையோ!! இங்கே Public School - Civic Studies பற்றி செய்தி படித்த போது ஈழத்தின் சமூக கல்வி ஞாபகம். கூடவே தமிழ் கனேடியன் கட்டுரையும் கண்ணில் பட்டது.

இருந்தாலும் என்னை இவ்வளவு தூரம் யோசிக்க வைக்கும் கனேடிய ஆங்கில, தமிழ் ஊடகங்களுக்கு, குறிப்பாக தமிழர்களின் CMR- Canadian Multicultural Radio விற்கும் நன்றி.

நீங்கள் தேவாரம் என்றால் நான் சமூக கல்வியோடு கொஞ்சம் ஊரில் மினக்கட்டனான் :)) கட்டுரையும் சமூக கல்வி அரசியல் யாப்பை கேள்வி கேட்குமளவிற்கு இலங்கையர்கள் படிக்க வேண்டுமாம். அப்படி யாராவது ஒரு சிங்கள புண்ணியவான் செய்திருந்தால் சிங்களவர்களே தமிழர்களுக்கு அரசியல் யாப்பில் மறுக்கப்படும் உரிமைகளை ஏன் என்று கேட்டிருப்பார்களோ என்று ஓர் சிந்தனை. இப்போ என் விளக்கத்தை சொல்லிவிட்டேன் :))

Rathi சொன்னது…

துஷ்யந்தன், உங்களுக்கு ஊரில படிச்ச சமூக கல்விப் பாடம் ஞாபகம் வரேல்லையோ! பொறுங்கோ நான் இப்பிடியே எல்லாரையும் கேட்கப் போறனோ ?? :)

அந்தப் பாடத்தில் நான் படிச்ச மகாவலி, கல்லோயா திட்டம் எல்லாம் விவசாயம் செழிக்கவும்.. நீர் உயர நெல் உயரும்.....அல்ல. மகாவலி விஸ்தரிக்கப்பட தமிழர்களின் வாழ்நிலங்கள் பறிபோகும் என்று மறைக்கப்பட்ட உண்மைகள் என்னைப் பாதிப்பதுண்டு. இருந்தாலும் புரிந்து கொண்டதுக்கு நன்றிகள்.

Rathi சொன்னது…

தவறு, நீங்கள் சொல்வது ஓரளவுக்கு சரி என்றாலும், அந்த "பொருளாதார பாதுகாப்பு" என்பது கல்வி மூலம் தானே நிச்சயப்படுத்தப்டுகிறது. ஒரு வேளை உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் சந்ததிக்காகவேனும் அந்த உரிமை குறித்து காத்திரமாக பேசத்தேவையில்லையா?

நானும் படித்தேன் தமிழக பெற்றோர்களின் குழந்தைகள் கல்வி பற்றிய குழப்பமான மனோநிலைகளை.

Rathi சொன்னது…

தெகா, நீங்களும், ஹேமாவும் அதகளம் பண்ணுகிறீர்கள் :) படித்துவிட்டு கொஞ்சநேரம் எனக்குள் சிரித்துக்கொண்டிருந்தேன். நீங்க ஈழத்து கல்வி பற்றி தெரியாமல் வானம் பார்த்தீர்கள். ஹேமா.... ம்ம்ம்ம்......

பாத்தீங்களா, வானத்தை பார்த்தும் இவ்வளவு விளக்கமா எப்படி மேலோட்டமான தேவைகளுக்கு மட்டும் போராடுகிறோம் என்பதை சொல்லியிருக்கிறீர்கள்:)

தவறு சொன்னதுக்கும், நீங்க சொன்னதுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் தெரிகிறது.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

ரதி ஹேமா பக்கத்தில் இருந்து இருந்தால் கை வலிக்கும் அளவுக்கு பாராட்டி இருப்பேன். உங்களின் ஒவ்வொரு சிந்தனைகளும் கல்லூரி விரிவுரையாளர்களுக்குச் சமம். ஹேமா சொன்னது போல் திருப்பாவை, திருவெம்பாவை, திருக்குற்ள் போன்று எத்தனையோ படித்து ஒப்பித்து அத்துடன் உருண்டு புரண்டு வாழ்ந்து இருக்கின்றேன். இன்று எதுவுமே நினைவில்லை. இடையில் விந்தை மனிதன் இதைப் பற்றி எழுதும் போது அட இது சிறு வயதில் படித்தது தானே என்று யோசிக்க வைக்கின்றது. என்னத்த சொல்ல? பண்ம் பணம் என்று தேடி ஓடி எத்தனையோ இழந்தது ஹேமா வார்த்தைகள் மூலம் இப்போது நினைவுக்கு வந்து போகின்றது.

Rathi சொன்னது…

ஜோதிஜி, மூன்று பேருக்கு என் கட்டுரை புரியவில்லை என்றால் என் எழுத்தில் தான் ஏதோ திருத்த வேண்டியுள்ளது.

//உங்களின் ஒவ்வொரு சிந்தனைகளும் கல்லூரி விரிவுரையாளர்களுக்குச் சமம்.//
இப்பிடியெல்லாம் சொல்வது அதிகம் :)) நான் அந்தளவுக்குப் படிக்கவில்லை.

ஒரு வேளை ஹேமா சொன்னது போல் 28-30 வயது வரை அம்மாவை அல்லது வேறு யாரையாவது நம்பி வாழ்ந்திருந்தால் நானும் உங்களைப்போல் அல்லது ஹேமாவைப் போல் யோசித்திருப்பேன் :)

இது அத்தனையும் கனடா எனக்கு கற்றுக்கொடுத்த, இன்னும் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் பாடம்.

Thekkikattan|தெகா சொன்னது…

hey you got it :)) already, thanks! make this comment pop up window to disappear and activate the one when we click to take it to the next page... plz :)

ராஜ நடராஜன் சொன்னது…

வாசகர் பரிந்துரை வரைக்கும் வளர்ச்சி தெரியுதே:)வாழ்த்துக்கள்.தமிழகத்தின் சமச்சீர்க்கல்விக்குப் பின்னால் தி.மு.கvs அ.தி.மு.க என்ற குடுமிப்பிடி சண்டை இருப்பதே தமிழக கல்வியின் கலவர நிலைக்கு காரணம்.புத்தகம் மட்டுமே படிப்பு என்ற செக்குமாட்டு நிலை மாறுவதற்கும் கூட இப்போதைய சமச்சீர் கல்வியின் பிரச்சினை ஒரு அழகான சந்தர்ப்பம்.ஆனால் இரு கட்சிகள் தாண்டி நீங்கள் சொல்லும் தொடுப்பு மாதிரியான கல்விக்கான முயற்சிகளுக்கான சூழல்கள் உருவாகாமல் போவதற்கும் அரசியல்,பொருளாதார,சமூக நிலைகளே பாதகமாக இருக்கின்றன.பதிவர் மதுரை சரவணன் தனது பள்ளி மாணவர்களுக்கு அவரவர் கற்பனைகளை உருவாக்கும் விதத்தில் குட்டிக்கதைகளை சில வார்த்தைகளின் மூலம் சொல்லிக்கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்.மனப்பாடம் ஒன்று மட்டுமே புத்தகப் படிப்பின் நன்மை.இந்தியாவை எகிப்துடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.நேரு,நாசர் காலத்தில் கல்வியறிவுக்கான சந்தர்ப்பம் இப்போது இந்தியா,சீனாவுக்கான பொருளாதார வாய்ப்புக்கள் மாதிரி அமைந்திருந்தது.இந்தியா தனது கல்விக்கான வாய்ப்புக்களை ஓரளவுக்கு பயன்படுத்திக்கொண்டதென்றே சொல்லலாம்.ஐ.ஐ.டி,ஐ.பி.எம் போன்றவை உலகத்தரம் வாய்ந்தவை.எகிப்து அரேபியர்களின் அமெரிக்காவாக மட்டுமே கல்வியில் மாறியது.இன்றைக்கு வளைகுடா நாடுகள் எகிப்தையும் புறக்கணித்து அமெரிக்க,ஐரோப்பிய கல்வியாளர்களாக மாறிவிட்டார்கள்.

Rathi சொன்னது…

ராஜ நட, நன்றி. மதுரை சரணவணன் பதிவு நான் படிக்கவில்லை. இருந்தாலும் கீற்று தளத்தில் ஆசிரியர் தரப்பில் இருந்து மாணவர்களின் கல்வி குறித்தும், அவர்களின் பங்கு என்னென்ன, அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பது போலவும் ஓர் கட்டுரை படித்தேன். தமிழகச் சூழலில் நான் இல்லாத போதும் அது நியாயமாக எனக்குப் பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாய சித்தியால் மாணவர்கள் எப்படி கணிதம் மற்றும் மொழி குறித்த அடிப்படை இன்றி மேலே தொடர்ந்து படிக்க சிரமப்படுகிறார்கள், அதன் அடிப்படைக்கராரனங்கள் என்ன என்றும் சொல்லப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டு கல்வியில் இப்படி கட்சிச்சண்டை ஆதிக்கம் செலுத்துவது வரவேற்க்கத்தகதல்ல என்பதை தவிர என்ன சொல்ல.

//ஆனால் இரு கட்சிகள் தாண்டி நீங்கள் சொல்லும் தொடுப்பு மாதிரியான கல்விக்கான முயற்சிகளுக்கான சூழல்கள் உருவாகாமல் போவதற்கும் அரசியல்,பொருளாதார,சமூக நிலைகளே பாதகமாக இருக்கின்றன.//

இது விவாதிக்கப்படவேண்டிய விடயம் தான். ஆனால், விவாதத்தால் மட்டும் தீர்க்கமுடியாத பிரச்சனை என்று புரிகிறது.

எகிப்து மாதிரி கல்வியில் இந்தியா இருக்கவேண்டியதில்லை தான். வளை குடா நாடுகளுக்கு அமெரிக்க "Modernization" தான் தேவை. அவர்கள் அமெரிக்க கல்விமுறையையோ அல்லது நாகரிகத்தையோ வரவேற்பவர்கள் அல்ல. ஒரு முறை சவூதி அரேபியாவின் பாடசாலை ஒன்றில் தீப்பிடித்த போது மாணவிகள் அவர்கள் முறைப்படி தலையை மூடவில்லை என்கிற காரணத்தால் கடைசிவரை வெளியே வராமல் நெருப்பில் கருகியே உயிரை விட்டார்கள் என்று Morgan Spurlock எழுதியதைப் படித்திருக்கிறேன். கொஞ்சம் யோசிக்க வைத்த வாசிப்பு அது. இங்கே அது பொருந்துமா தெரியவில்லை. ஞாபகம் வந்தது.

இந்தியாவில் நேருவால் ஆரம்பிக்கப்பட்ட IIT தான் அமெரிக்காவை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது என்று படித்திருக்கிறேன். ஆனால், திறமை என்பதை விடவும், எத்தனை பேருக்கு வசதியும், வாய்ப்பும் இருக்கு அங்கே போய் படிக்க. முக்கியமாக அதற்கு ஆங்கில வழி கல்வி வேண்டுமே. பிரித்தானியா இலங்கையை கட்டியாண்டதில் அது ஒரு அனுகூலம். அந்த அனுகூலம் இல்லாமல் தான் சீனா பொருள் உற்பத்தியில் :)