ஆகஸ்ட் 01, 2011

இளைய தலைமுறையும் தமிழின அடையாளங்களும்!!
இந்தியா, மேற்குலகத்தின் செல்வத்தையும், ஆபிரிக்காவின் வறுமையையும் தன்னிடத்தில் கொண்ட நாடு. ஒரு பதிவர் எழுதியிருந்தார் இந்தியா பணக்காரர்கள் நிறைந்த ஏழை நாடு!! அங்கே ஜனநாயகம் இருக்கு..... ஆ...னா....ல்.....இல்லை. இன்று ஆசியாவில் அமெரிக்காவின் செல்லபிள்ளையாய் தத்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஈழம் பற்றி பேசத்தொடங்கி இந்தியா குறித்துப் பேசவேண்டியதன் தேவை தான் என்ன என்று யோசிக்கலாம். ஈழத்தின் கழுத்தை சுற்றிய பாம்பாய் என்றுமே புவியல் அமைப்பிலும், இன்று உணமையிலேயே ஈழத்தமிழனின் கழுத்தை நெரிப்பதாலும் அதை பேசித்தான் ஆகவேண்டிய கட்டாயம் எங்களுக்கு. 

ஐரோப்பிய ஒன்றியத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக்குட்பட்ட நாடுகளே ஆனாலும் முஸ்லிம் நாடுகளை இணைத்துக்கொள்வதில் பெருவிருப்பம் இல்லையாம் அவர்களுக்கு. புக்குயாமா எழுதியதைப் படித்ததாய் ஓர் ஞாபகம். இவர்கள் ஏய்க்கவே படுவார்கள். உலகம் ஒருசாராருக்குத் தேவையான இயங்குவிதிகளின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கேற்றாற்போல் தான் அவை உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறன என்பது என் புரிதல். இருந்தாலும் அடிப்படை வாதம், ஏகாதிபத்தியம் இரண்டுக்குமிடையேயான மோதல்களில் எங்கள் ஈழ விடுதலைப்போரில் அதன் தாக்கங்களை தேவைக்கு அதிகமாகவே உண்டுபண்ணியிருக்கிறது, உணரப்படுகிறது என்றால் அது மிகையில்லை.

சரி, ஈழத்தைப் பார்ப்போம். ஈழத்தில் அண்மையில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றியீட்டியதாக தமிழர்கள் ஒரு பகுதியினர் சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். என்னால் சந்தோசமும் பட முடியவில்லை. எனக்கு அது குறித்து துக்கமும் இல்லை. என் புரிதலில் இவையெல்லாம் ஒரு விதத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றிகளே. இலங்கையின் போர்க்குற்றங்களை கண்டும், காணாமல் விடவும், ஈழத்தை இன்னோர் ஆப்கானிஸ்தான் ஆக்கவும் (நன்றி திருமுருகன்) அங்கே இவர்களுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு, ஓர் அதிகம் அதிகாரங்கள் அற்ற ஓர் பொம்மை அமைப்பு தேவை. என் வரையில் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது என் புரிதல். 

உள்ளூராட்சி தேர்தலின் பின் செய்திகளை கவனித்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை விடவும் "ஒன்று பட்ட இலங்கைக்குள்" தீர்வு என்கிற கோணத்தில் தான் பேசிக்கொண்டிருக்கிறது. ராஜபக்க்ஷேக்களின் ராட்சசப்பிடியில் இருந்துகொண்டு அவர்களாலும் இதைத் தவிர வேறெதையும் குறித்து பேசவோ, செயற்படவோ முடியாத நிலையோ! அரசியல் கட்சிகளின் நிலையே இதுவானால், பொதுசனம் பற்றி சொல்லவே வேண்டாம்.


இந்த நிலையில் ஈழம் குறித்து பேசவேண்டிய, அது குறித்து ஆவன செய்ய வேண்டியது என்னென்ன என்பதை புலம் பெயர் தமிழர்களே முன்னெடுக்க வேண்டிய நிலை. "நீங்க கொஞ்சம் சும்மா இருந்தாலே சிங்களவன் எங்களை வாழவிடுவான்" என்று அப்பாவித்தனமாய் நம்பும், புலத்து தமிழனை திட்டும் ஈழத்தில் வாழும் எம் உறவுகளுக்கு நாம் எதையாவது செய்து தான் ஆகவேண்டும்.

இதை மனதில் நிறுத்தி இங்குள்ள இளைய தலைமுறையினர் செயற்படுவது கொஞ்சம் உற்சாகத்தை கொடுக்கிறது. அண்மையில் கனடாவில் உள்ள தமிழ் பல்கழைக்கழக மாணவர்கள் York பலகலைக்கழகத்தில் தமிழர்களின் தேசியக் கொடியினை எங்கள் ஒருமித்த அடையாளமாக கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறார்கள். அது கொடி என்கிற அடையாளத்தோடு முடிவதல்ல.

நான் கவனித்த வரையில் Samuel Huntington, Dr. Imtiyaz, முதல் தமிழ் கூறும் நல்லுலகின் ஜமுனா ராஜேந்திரன் வரை கலாச்சார, தேசிய அடையாளங்கள் குறித்த பார்வைகள் அதிகம் என்னை யோசிக்கவைத்தன. ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்கும்போது ஒவ்வொரு சமூகமும் தங்களின் அடையாளங்களின் அடிப்படியிலேயே ஒன்று சேருகிறார்கள். இது தான் இயல்பு. இது தான் வரலாறு. Dr. Imtiyaz இந்த தேசிய அடையாளங்களின் அடிப்படியில் தான் சிங்கள ஆட்சியாளர்களால் தமிழினத்துக்கு எதிரான துவேசம் வளர்த்தெடுக்கப்படுகிறது என்கிறார்.

இந்த கலாச்சார மற்றும் தேசிய அடையாளங்கள் குறித்த பார்வைகள் முதல் இருவரும் ( Samuel Huntington, Dr. Imtiyaz) விளக்குவது புரிகிறது. நடைமுறை யதார்த்தங்களோடு ஒத்தும் போகிறது

யமுனா ராஜேந்திரனின் தமிழ்த்தேசியம் குறித்த தியாகுவுடனான ஓர் கலந்துரையாடலை படித்தபோது இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு குழப்பமாகவே இருந்தது. இருந்தாலும், யமுனா ராஜேந்திரனைப் புரிந்துகொள்ளும் கெட்டிக்காரத்தனம் என்னிடம் இல்லை என்கிற அடிப்படியில் நோக்கினாலும்,  தமிழ்த்தேசியம் என்பது அவரது மார்க்சியப்பர்வையில் ஓர் தெளிவான விளக்கத்தை கொடுக்காத போதும் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

யமுனா ராஜேந்திரன் சொன்னதில் ஒரு சிறு பகுதி, ".... இன்னும் மொழி கலாச்சாரம், சார்ந்த விடயங்களை அது மதத்தோடு சேர்த்து வரையறை செய்யும் அப்படியான நிலை வரும்போது இந்தக் குறிப்பிட்ட வரையறைக்கு வெளியில் இருக்கிற அனைவருமே அன்னியர்களாகப் பார்க்கப்படுவார்கள் எனும் அளவிலேயே  பார்க்கப்படுவார்கள். மற்றவர்கள் அல்லது அடையாளம் அற்றவர்கள் என்னும் அளவிலேயே பார்க்கப்படுவார்கள்..."

(மூலம்: தமிழ்த் தேசியம் குறித்து மார்க்சீயர் தியாகுவுடன் யமுனா ராஜேந்திரன் மற்றும் விசுவநாதன் உரையாடல், 10 May, 2011)


என் அறிவுக்கு எட்டியவரை நடைமுறை யதார்த்தத்துடன் யோசித்தாலும் ஈழத்தமிழர்களின் தேசியம் என்பது யாரையும் ஒதுக்கியதும் இல்லை. அது இலங்கைத் தேசியத்தில் மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட தமிழர்கள் என்கிற ஓர் தனி இனத்தின் மொழி, கல்வி, பொருளாதார உரிமைகளின் அடிப்படையிலேயே கட்டியமைக்கப்பட்டது. அது யாருக்கும் எதிரானதும் அல்ல. அது தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இந்த உலகமே அவரவர் வசதிக்கு ஏற்புடையதாய் எதையோ பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் பொது நான் மட்டும் எதற்காக என் அடையாளங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்.

இந்தியாவிற்கென்று சோனியா காந்தியின் கொள்கை. அது இந்தியா பற்றியும், இந்தியர்கள் பற்றியுமே கவலைப்படாதது. இந்தியா என்கிற பணக்காரர்கள் நிறைந்த ஏழை நாட்டின் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உக்கிரமடைந்தது இவரது ஆட்சியல் தான். அதில் ஈழத்தையும் சேர்க்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்.


ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஓர் கொள்கை, அது முஸ்லிம்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதை குறைக்க வேண்டும் அல்லது தடுக்க வேண்டும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர்கள் ஒன்றும் வரவேற்கப் படவில்லை. இதே ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை அடிப்படை தான் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலை குறித்தும் அப்பப்போ வெளிப்படுகிறது.


இந்தியா அழித்த ஈழத்தமிழர்களின் அடையாளம் தமிழீழ விடுதலைப் புலிகள். ஐரோப்பிய ஒன்றியம் அழிக்க நினைத்து தடை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை.

இந்த அடிப்படையில் தான் எங்கள் தேசிய அடையாளங்களும் புலத்தில் அழிக்கப்பட்டால் அல்லது அதற்குரிய அங்கீகாரம் மறுக்கப்படால் எங்கள் கொள்கைகளும், கோரிக்கைகளும் கூட கைவிடப்படும் என்கிற ஓர் எதிர்பார்ப்பாக கூட இருக்கலாம். இருந்தும், நம் தமிழ் இளைய தலைமுறை அதை சரியான முறையில் தமிழர்களிடமும், சர்வதேசத்திடமும் எடுத்துசென்று எங்கள் தேசிய அடையாளங்கள் வெறும் வறட்டு வாதங்களை அடிப்படையாக கொண்டு கட்டியமைக்கப்பட்டவை அல்ல என்பதை புரியவைக்கிறார்கள். அவர்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

18 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

எப்பொழுதும் போலவே பன்முகப் பார்வையோட எழுதப்பட்டிருக்கிற கட்டுரை.

//இந்தியாவிற்கென்று சோனியா காந்தியின் கொள்கை. அது இந்தியா பற்றியும், இந்தியர்கள் பற்றியுமே கவலைப்படாதது.//

இது எத்தனை தூரம் உண்மையானது. உணர்ந்திருக்கிறோமா என்றால் இல்லையென்றுதான் நினைக்கிறேன். எது எங்கே கொண்டு போயி நிறுத்தப்போகிறது என்பதும் யாரும் அறிந்திருக்கவில்லை.

காந்தி என்ற அடைமொழியுடன் நாட்டை சுருட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு வட்டம் 1.2 பில்லியன் மக்களையும் சிக்கலில் சிக்கி வைக்கப் போகிறது என்பது மட்டும் இப்பொழுதிற்கு விளங்குகிறது.

பெயரில்லா சொன்னது…

வித்தியாசமான கட்டுரை...அதே நடை..ரசித்தேன்..முரண்பாடு இல்லை...

ஹேமா சொன்னது…

//"நீங்க கொஞ்சம் சும்மா இருந்தாலே சிங்களவன் எங்களை வாழவிடுவான்" என்று அப்பாவித்தனமாய் நம்பும், புலத்து தமிழனை திட்டும் ஈழத்தில் வாழும் எம் உறவுகளுக்கு//

என்ன செய்யலாம் ரதி.அவர்களும் பாவம்தான்.ஓடுதலும் ஒளிதலுமாக இருந்தவர்கள்.எதிர்காலம் பற்றி யோசிக்காமல் பிச்சையெடுத்தாலும் ஓரிடத்தில் இருப்பது நிம்மதி என்கிறார்கள் !

தவறு சொன்னது…

ஹேமா..அவர்கள் பிச்சையா எடுக்கிறார்கள். நரகம்...நிரந்தரம் போல் அனுபவிக்க புலத்து தமிழனை நீங்கள் சும்மா இருங்கள் என்று திட்டுகிறார்களோ...?

ரதி சொல்வது போல் ஈழ உறவுகளுக்காக எதையோ ஒன்றை செய்யவேண்டியது தான்.

Rathi சொன்னது…

தெகா, உண்மைதான் இந்த "காந்தி" என்கிற அவர்களின் குடும்பப் பெயர் அவர்களுக்கு ஓர் சாதகமாகவே போய்விட்டது.

Rathi சொன்னது…

Reverie, நன்றி. Same wave length.... :)

Rathi சொன்னது…

ஹேமா, நான் அவர்களை குறை சொல்லவில்லை. அப்படி அவர்கள் எங்களை திட்டவில்லை என்றால் தான் there must be something wrong என்று நினைத்திருப்பேன். மனித குணங்கள், இயல்புகளோடு பெரும்பாலும் ஒத்துப்போக நினைப்பேன். அதனால் அதை குறிப்பிட்டேன்.

அப்புறம் எங்க சில நாட்களாய் ஆளை காணவில்லை.

Rathi சொன்னது…

தவறு, எங்களால் முடிந்தது ஏதாவது. வீதியோரங்களில் வாழ்வதே அவர்களின் தலைவிதி என்று ஆகக்கூடாது அல்லவா.

ஹேமா சொன்னது…

ரதி...நான் எங்க போனேன்.
இருக்கிறனே இங்கதான்.ரதிக்கொக்கார் சில சமயம் நிறைய சொல்லேக்க கேக்க மட்டும்தான் முடியுது எனக்கு.அதான்...!

ரதி நானும் உங்களைக் குறை சொல்லவில்லை.அவர்கள் நிலையில் நாங்கள் ஏதாவது கதைப்பதோ செய்வதோ தங்கள் நின்மதியைக் குறைப்பதாக நினைத்துத்தான் குறை சொல்கிறார்கள்போலும்.ஏனென்றால் பாவம் அவர்கள் களைத்துத்தான் போனார்கள்.அவர்களைப் புரிந்துகொள்வோம்.எங்களால் ஆனதைச் செய்வோம் !

ராஜ நடராஜன் சொன்னது…

சில பதிவர்களின் கருத்துக்குப் பின்னூட்டமிடுவதே அலாதி ரசனை.அதில் நீங்களும் ஒருவர் என்ற முகவுரையோடு தற்போதைய இலங்கை உள் தேர்தலின் முடிவுகள் ஓரளவுக்கு நம்பிக்கைகளைத் தருகிற போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுவது தமிழீழமல்ல!மாநில சுயாட்சியே! என்ற குரலுக்கான ஆதரவும்,எதிர்ப்புமான விவாதங்களை உருவாக்கும் என நினைக்கின்றேன்.இந்தக் குரலுக்கும் அப்பால் இலங்கை அரசின் நிலை,புலம் பெயர் தமிழர்கள்,தமிழகம்,இந்தியா,உலக நாடுகள் என்ற இன்னும் கடக்க வேண்டிய வட்டங்கள் உள்ளன.உலக நாடுகளின் மொத்தப் பார்வையின் நாட்டாமையில் மக்கள் வேண்டுவது ஒன்று சேர்ந்த இலங்கையா அல்லது தமிழீழமா என்ற Referendum வாக்கெடுப்பு நிலைக்கு இலங்கை அரசை நிர்பந்திக்கும் அளவுக்கு நிலம்,புலம்,தமிழகம் கொண்டு செல்வதில் மட்டுமே தமிழர்களின் வெற்றி அமைந்திருக்கிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

யமுனா ராசேந்திரன் எங்கோ குறிப்பிட்ட ஜெமொ,சாரு,எஸ்ரா பற்றிய எழுத்தியல் கருத்தில் எனக்கு உடன்பாடும் அதேசமயத்தில் கியூபாவை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடியதை குறித்து எப்பொழுதாவது எனது பதிவில் சொல்ல வேண்டுமென்றிருந்தேன்.நீங்கள் யமுனா ராசேந்திரன் குறித்துப் பேசியதால் நினைவு வந்தது.எனவே உங்களுக்கான அவரது குழப்பம் எனக்கு இல்லையென்றாலும் விமர்சனம் இருக்கிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

புலம்பெயர் தமிழர்களைப்பற்றி ஓரளவுக்கு அறிந்து கொள்ள உதவியாக இருப்பது தொலைக்காட்சிகள் வாயிலாக அவர்களது கலந்துரையாடல்களே.80களில் புலம் பெயர்ந்த முந்தைய தலைமுறைகளிடம் தமிழீழ உணர்வும் எல்லாம் சிவமயம் என்ற பக்திதனங்கள் இருப்பதையும்,இங்கொன்றும் அங்கொன்றுமாக திசை மாறிய ஆடுகளாய் சில இளையதலைமுறையினர் காணப்பட்டாலும் தமது வேர்கள் எங்கே எனபதை அறிந்தவர்களாக இளையதலைமுறையினர் இருக்கிறார்கள் என்று அவதானிக்க முடிகிறது.இப்போதைய இளைய தலைமுறை காலத்துக்குள்ளாவது ஈழம் மலர்வதற்கான சாத்தியங்கள் உருவாக வேண்டும்.இன்னுமொரு தலைமுறைக்கான தீர்க்கதரிசனம் என்னிடமில்லை.

ராஜ நடராஜன் சொன்னது…

நிலத்தில் வாழும் மக்களுக்கு Survival Factor மட்டுமே இப்போதைய தேவையென்பதால் ஹேமா சொல்வது போல் // என்ன செய்யலாம் ரதி.அவர்களும் பாவம்தான்.ஓடுதலும் ஒளிதலுமாக இருந்தவர்கள்.எதிர்காலம் பற்றி யோசிக்காமல் பிச்சையெடுத்தாலும் ஓரிடத்தில் இருப்பது நிம்மதி// என்ற சொல் யதார்த்தம் என்ற போதிலும் இவ்வளவு போராட்டங்களும் எதற்காக,எது நிரந்தரம் என்ற தூரப்பார்வையைக் கொண்டவர்களாய் புலம்பெயர் தமிழர்களும்,தமிழக தமிழ் உணர்வாளர்கள் மட்டுமே.இலங்கையில் தற்போது போர் குறித்த பயம் இல்லையென்பது இலங்கை அரசுக்கான சாதகமாகவும் உரிமைக்கான கலகக்குரல்களாய் உலகத்தமிழர்களின் குரல்கள் எழுவது பயத்தையுமே இலங்கைக்கு உருவாக்குகின்றது.

ராஜ நடராஜன் சொன்னது…

ஐரோப்பிய,அமெரிக்க நாடுகள் நாடு கடந்த தமீழீழ அரசை அங்கீகரிப்பதில் இருக்கிறது தமீழத்தின் அடையாளம்.பிரிட்டன் ஆயுதம் ஏந்திப் போராடும் லிபிய்ப்போராளிகளுக்கே ஆதரவு தரும் போது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு கடந்த தமீழீழ அரசை அங்கீகரிப்பதில் உள்ள முட்டுக்கட்டையாக விளங்குவது விடுதலைப்புலிகளின் மீதான தடை.ஆயுதங்கள் ஓய்ந்த பின் இலங்கை அரசே அமைதியாக இலங்கை இருக்கிறதென்று அறிக்கை விடும் போது விடுதலைப்புலிகளின் மீதான தடையை உடைத்தெறிவதும் அவசியம்.இதன் தேவை மீண்டும் ஆயுதம் தூக்குவதற்காக அல்ல என்பதும் தமிழீழ அரசுக்கான தேவை என்பதையும் World Stage Actors புரிந்து கொள்ளும் சூழலை உருவாக்குவது அவசியம்.ஜெயலலிதாவின் ஐந்து வருட கால ஆட்சிக்குள் இணைந்து செயல்படுவதும் மேலும் சில நம்பிக்கைகளை எதிர்காலத்தில் தரும்.

Rathi சொன்னது…

ராஜ நட, ரசனையோடு கருத்து சொல்லியிருக்கிறீங்க :) எனக்கிருந்த அக்கப்போரில் உடனேயே பதில் சொல்ல முடியவில்லை.

இலங்கையில் நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தல் இரண்டுவிதமான சிந்திக்க வைக்கிறது. ஒன்று ராணுவ அடக்குமுறை என்றாலும் மக்கள் துணிந்து வாக்களித்தார்கள் என்று பார்ப்பது. இன்னொரு கோணம் என்வரையில் அங்கே ஜனநாயகம் குறிப்பாக ஈழத்தில் மிக சிறப்பாக இருக்கிறது என்று உலகின் கண்களில் மண்ணை தூவும் முயற்சி. ஜனாயக வழியில் மக்கள் வாக்களித்து அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பக்கம் என்று காட்டிவிடார்கள் என்பதை இனி இலங்கையும், சர்வதேசமும் தூக்கிப்பிடிப்பார்கள். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையை கோரப்போவதில்லை என்பது வேறுவிடயம். அது தானே அவர்களுக்கும் வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை சில வெளிநாட்டு ஆங்கில ஊடகங்களே குறிப்பிட்டு எழுதியிருந்தன. அது தான் அதிகம் யோசிக்க வைத்தது. இது போன்ற சில்லறை விடயங்களில் தமிழர்கள் தரப்பை ஏய்க்கவே செய்வார்கள். இனப்படுகொலையைச் சந்தித்து இனி வாழவே வழியின்றி இருப்பவர்களுக்கு "ஜனநாயகம்" என்பது சந்தோசமான விடயம் தானே.

"Counterinsurgengcy" என்பதன் ஓர் அங்கம் தான் புலிகள் ஜனநாயக வழியில் தேர்தல் மூலம் ரணிலை ஆதரிக்கவில்லை என்று அவர்கள் மீது சேறு அடிக்கப்பட்டது. ஈழம் போன்ற தேசங்களில் தேர்தல் என்பதும் மேலைத்தேசங்களால் தேவைகேற்ப அர்த்தப்படுத்தவும், கையாளவும் படும்.

நீங்கள் குறிப்பிடும் ஐ. நா. மூலம் ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்கிற Referendum சரிதான். அதற்குரிய வேலைத்திட்டங்கள் தமிழர் தரப்பால் இன்னும் காத்திரமாக செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

Rathi சொன்னது…

யமுனா ராஜேந்திரனின் தமிழ்த்தேசியம் குறித்த பொதுவான கருத்துகள் மிகவும் நடைமுறைக்கு ஒத்துவராதது போல் எனக்கு தோன்றுகிறது. தமிழ்த்தேசியம் குறித்து அவர் சொன்னதை படித்தபோது தொட்டதுக்கெல்லாம் "go by the book" என்பது போன்ற ஓர் பார்வையா என்று தோன்றுகிறது.

அவர் மார்க்கிசியத்தின் வழி கியூபாவை பார்க்கிறார் போலும். ஆனால், அண்மையில் கூட அவர்களின் பொருளாதார கொள்கைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்திருந்தார்கள் :)

ஜனநாயக வழியில் செயற்படும் நாடு கடந்த தமிழீழ அரசை ஏன் சர்வதேசம் அங்கீகரிக்க கூடாது என்பது எங்கள் எல்லோரினதும் ஆதங்கம் தான். அதன் ஆரம்பம் தமிழ்நாடு, இந்தியா என்று தொடங்கவேண்டும். அது சாத்தியப்பட்டால் சர்வதேசம் தானே ஆதரிக்கும்.!!!!!!!!

இந்தியா கொஞ்சங்கூட யோசிக்காமல் இன்னும் போர்க்குற்றம் சுமத்தப்படுபவர்களை தாங்கத்தானே செய்கிறது. தமிழர் தரப்பிற்காய் நியாய பூர்வமாய் ஓர் அறிக்கையேனும் விட்டதுண்டா?

Thekkikattan|தெகா சொன்னது…

இன்னொரு கோணம் என்வரையில் அங்கே ஜனநாயகம் குறிப்பாக ஈழத்தில் மிக சிறப்பாக இருக்கிறது என்று உலகின் கண்களில் மண்ணை தூவும் முயற்சி.//

இதுக்குப் பின்னான அரசியல் சூழ்ச்சி இப்படியும் போக முடியும் என்ற மாற்றுக் கோணம் நன்று. இதுக்குத்தான் எழுதுங்க, எழுதுங்கன்னு அடிச்சிக்கிட்டு கெடக்கிறது :).

ஆமாம், நியூயார்க் டைம்ஸ்ல எழுதி இருந்தாங்க. அதைக் கூட நான் கூகுள் பஸ்ல பகிர்ந்கிட்டேன். ஆனா, உங்க கோணத்தில யோசிக்கல... I took it as it is... at face value :)

Rathi சொன்னது…

தெகா, ம்ம்ம்ம்..... என்ன சொல்ல............ நன்றி :)