ஆகஸ்ட் 30, 2011

உப்புக்கும் பெறாத கடைநிலை குடிமகனின் கோபம்!நான் ஒரு அறிவுஜீவி என்று எப்படி காட்டிக்கொள்வது! யோசிக்கிறேன். ஒன்று கண்டதையும் படித்துவிட்டு எல்லாத்தையும் சேர்த்துக்குழப்பி எனக்கு புரியுதோ இல்லையோ, படிப்பவர்களுக்கும் புரியாமல் அடர்த்தியாய் எழுதவேண்டும். கேட்டால் அது இந்த கொள்கை, இவர் அப்படி சொன்னார், அதையே அவர் இப்படி சொன்னார் என்று ஐயம் திருபுறக் கூறுவதாய் அடித்துப்பேசப் பழகவேண்டும். உலகப்பிரசித்தமான நிறைய மேற்கோள் காட்டவேண்டும். கற்றுக்கொண்டிருக்கிறேன், என்னை அறிவுஜீவியாய் காட்டிக்கொள்ள!

இப்போ உதாரணம் சொல்கிறேன். ஈழம் பற்றி எரிந்து, ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டபோது போது முத்துக்குமார், முருகதாஸ், இப்போ செங்கொடி இவர்கள் தங்களை தீக்கு இரையாக்கி மாய்த்துக்கொண்டது அறிவுசார் முடிவல்ல. அவர்கள் சொந்தப் பிரச்சனைக்கு தங்களை மாய்த்துக்கொண்டார்கள் என்று தர்கிக்க வேண்டும். இது ஒரு விதமான உளவியல் பிரச்சனை. இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வுகளின், முடிவின் தேடல். இப்படி சொல்வது எனக்கும் வசதி. நானும் அவர்கள் தங்களை தாங்களே மாய்த்துக்கொன்டதன் காரணத்தை தோண்டித்துருவ வேண்டிய அவசியமில்லை.

சமூகப் பிரச்சனைகள், தீர்வுகள் குறித்த என் சுயநலம், கையாலாகாத தன்மை இதையெல்லாம் ஒன்றாய் திரட்டி யாரோ ஒருவர் தங்கள் சமூக, அரசியல் கோபத்தை வெளிப்படுத்துபவர்கள் மீது அள்ளிவீசி விட்டு நடையை கட்டுவேன். அத்தோடு என் கடமையை முடித்துக்கொள்வேன். இங்கே அவர்களது நோக்கம், கொள்கை அது குறித்து நான் ஒரு தர்க்க ரீதியான விசாரணை எனக்குள் செய்யவேண்டியதில்லை. எனக்கு தெரியும் அப்படி ஆராயத் தொடங்கினால் என்னிடமே என் போலித்தன்மை விகாரமாய் பல்லிளிக்கும். எனக்கு வேண்டியது என்னை சுற்றி நடக்கும் சமூக, அரசியல் பிரச்சனை குறித்த கேள்வி விசாரணை அல்ல. அதை பட்டும்படாமலும் விமர்சித்து விட்டு விலகிவிட வேண்டும். என்னையே கேள்வி கேட்டு பதில் சொல்லத்தெரியாமல் என்னை நானே ஏமாற்றும் செப்படி வித்தை தெரியாத பட்சத்தில் நான் தோற்றுப்போவேன்.

என்னை நானேஏமாற்ற முடியாது என்று சொல்வதன் பொருள் என்னவென்று சொல்கிறேன். கேள்விகளின் சரி, பிழையும், அதன் நோக்கமும் சரியான திசையில் செலுத்தப்பட்டால் நாங்கள் அன்றாடம் போராடும் பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் நாங்கள் மட்டுமே காரணம் இல்லை என்பது வெள்ளிடை மழையாய் தெரிந்து போகும். பிறகு யார் தான் காரணம் என்று சொல்வது. நான் எந்த தேசம்/நாட்டின் குடிமகனோ அந்த தேசத்தின்/நாட்டின் அரசும், சட்ட ஒழுங்கும், அரசியல் பொருளாதார கொள்கைகளும் என்பது தான் பதில்.

என் பள்ளிக்கூட நாட்களிலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள், கடமையை செய், பலனை எதிர்பாராதே. அப்போது அதன் அர்த்தம் நீ உன் கடமையை செய். அதேபோல் நீ வாழும் நாட்டின் அரசு அமைப்பு, சட்ட ஒழுங்கு, அரசின் கடமைகளும் அதன் இயல்புகளோடு நடந்தேறும் என்பது தான்.  முன்னதை நான் என்வரையில் மெய்ப்பிக்க வேண்டும் என்பது லட்சியம். என்னை, என் லட்சியத்தை பாதுகாத்து, வளர்க்க வேண்டிய அரசும், சட்ட ஒழுங்கும் என்னை தோற்கடித்து, தான் பொய்யாய் தன்னை உருவகித்துக்கொண்டிருக்கிறது.

நான் வாழும் சமூகம், என் நாடு, என் லட்சியம், என் கனவுகள் எல்லாமே என் கண்முன்னே சிதறடிக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும், நானும் என்போன்றோரும் சொந்தமண்ணை, மக்களை, ஜனநாயகத்தை நேசிப்பதை நிறுத்தவில்லை. ஜனநாயகத்தின் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையை எந்தவொரு பிரதிநித்துவ அரசியல்வாதியும் என்னிடம் நிரூபிக்க வேண்டும் என்பதில்லை. அடுத்தமுறை தேர்தல் வெற்றிக்கு என் ஒற்றைவாக்கு அவர்களுக்கு தேவைப்படும் வரை.

ஜனநாயகம், நீதி, நியாயம் எல்லாமே கற்பனை வாதமாய் ஆகிப்போய்க்கொண்டிருக்கிறது கண் முன்னே. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் இவர்கள் மூன்று பெரும் இன்று மரணத்தின் வாசலுக்கே தள்ளப்பட்டுவிட்டார்கள்.  எப்படி சட்ட ஒழுங்கு யாரால் காப்பாற்றப் படும் என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிகொடுத்தார்களோ அவர்களாலேயே பலியாடுகள் ஆக்கப்பட்டும் விட்டார்கள். எதையெல்லாம் நீதி, நியாயம், தர்மம் என்று கற்றுக்கொடுக்கப்பட்டதோ அதிலிருந்து அதை காப்பாற்ற வேண்டியவர்கள் வழுவிக்கொண்டே இருக்கிறார்கள். இது தான் மூன்றாம் உலக ஜனநாயகம் எனக்கு கற்றுக்கொடுத்த யதார்த்த பூர்வமான அனுபவப் பாடம்.

இப்படி பள்ளிக்கூட படிப்புக்கும், நடைமுறை யதார்த்த அரசியலும் அதன் முரண்பாடுகளும் அரும்பு வயதில் புரிவதில்லை. புரிந்துகொள்ளும் வயது வந்து கேள்வி கேட்க தெரியும் சநதர்ப்பம் வரும்போது எனக்குரிய செளகர்யமான வாழ்க்கைக்குள் நான் என்னை தக்கவைத்துக் கொள்ளவே போராட வேண்டியுள்ளது. என் குடும்பம், என் வீடு, என் சந்தோசங்கள் என்று சுயநலமாய் சுருங்கிப் போகிறது வாழ்க்கை. முரண்பாடுகளுடன் வாழ்ந்தாலும் எனக்கு வசதியானதை உடன்பாடாகவும், என் பங்களிப்பு எதிர்பார்க்கப்பட்டால் முரண்பட்டுக்கொண்டும், விமர்சனம் மட்டும் செய்து கொண்டும் ஒட்டியும், ஒட்டாமலும் சமூகப் பிரச்சனைகளில் என் பங்கு இருக்கும்.

எனக்குரிய ஜனநாயக, பொருளாதார, அரசியல் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டு நான் ஒரு நாட்டின் கடைநிலை குடிமகனாய்/குடிமகளாய் நான் ஜெயிக்காத வரை என் நாடும், சட்ட ஒழுங்கும் அதன் எல்லாப் படிநிலைகளிலும் தோல்வியையே தழுவிக்கொண்டிருக்கும். அதைப் போலவே எந்தக் கொள்கை வகுப்பாளர்களும், ஜனநாயக பிரதிநித்துவ அரசியல்வாதிகளும் ஒரு கடை நிலை குடிமகன் போல் தனது தேசத்தை, நாட்டை நேசிக்காத  வரை ஜனநாயகமும், சட்ட ஒழுங்கும் தோற்றுக்கொண்டே இருக்கும்.Image Courtesy: Google

ஆகஸ்ட் 15, 2011

ஈழமக்களை நம்பவைத்து புலித்தலைவர் ஏமாற்றினாரா!! நிரூபன் பதிவுக்கு பதில்ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து சுதந்திரத்தை இந்த விடயத்தில் கடைப்பிடிக்கவும் தவறுவதில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிராக எழுதும் எழுத்தாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் முதல் கே.பி. என்கிற குமரன் பத்மநாதன் சொல்பவைகளை படித்தாலும் அவைகளை நான் கடந்து வந்துவிடுவதுண்டு. மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லாத இடத்தில் நான் நேரம் கடத்துவதில்லை. ஆனால், நிரூபனின் கருத்துக்கு என் மாற்றுக்கருத்தை பதியலாம் என்று நினைக்கிறேன். பதிவுலகில் மாற்றுக்கருத்தை மறுக்கும் குணம் உண்டு என்றாலும் அதை மதிக்கும் பண்பும் உண்டு. 

அந்தக் கட்டுரையின் முக்கியமாக முன்வைக்கப்பட்ட ஓர் கருத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மக்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு விட்டார் என்பது. இதைப் படித்ததும் என் அறிவுக்கு எட்டியது என்னவென்றால் ஈழப்போராட்டம் என்பது தனிச்சையான ஜனநாயக மக்கள் எழுச்சியாய் உருவானதல்ல. மக்களோடு மக்களாய் நின்று பிரபாகரன் என்பவர் போராடியிருக்க. அதன் அடிப்படை ஆரம்பம் வேறு என்பது என் சிற்றறிவுக்கு கூட எட்டுகிறது.


சிங்கள இனவாதக் கொள்கைகளும், துப்பாக்கிகளும் எங்களை பதம்பார்த்தபோது தலை தெறிக்க ஓடியே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் நாம். எங்களை விரட்டியவர்களுக்கும், கொன்றுகுவித்தவர்களுக்கும் உறுதியாய் நின்று பதில் சொன்னவர் தான் இன்று தமிழினத்துரோகியாய் சிலரால் முத்திரை குத்தப்படும் பிரபாகரன் என்பவர்.

கட்டுரையின் ஆரம்பத்தில் மக்களிடம் இருந்து தன்னை தனிமைப் படுத்திக்கொண்டவர் ஆதலால் மக்களுக்கு அவரிடம் நெருக்கம் குறைந்தது என்கிறது கட்டுரை. பிறகு, புலிகள் தலைவர் நம்பவைத்து ஏமாற்றினார் என்பது கொஞ்சம் முன்னுக்குப் பின் முரண் என தோன்றுகிறது.

ஒரு வார இறுதிக் களியாட்டத்திற்கே நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வாறன் என்று சொல்லுபவர்கள் எம்மில் ஏராளம். ஈழவிடுதலை என்று ஆரம்பித்துவிட்டு இந்தியாவின், சிங்கள ஆட்சியாளர்களின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த பிறழ்ந்து போன மனப்போக்கில் இருந்து கொஞ்சம் விலகி உலகமே ஒன்றாய் நின்றால் தான் அழிக்க முடியும் என்கிற நிலையில் உள்ள ஓர் உன்னதமான விடுதலை அமைப்பை கட்டியெழுப்பி இன்று உலகம் முழுக்க ஈழமக்களின் உரிமைகள் குறித்து பேசவைத்தவரை விமர்சிக்கலாம். தப்பில்லை. அது அவரவர் தனிப்பட்ட கருத்து, அனுபவம், புரிதல் சார்ந்தது.

ஆனால், மனதில் தோன்றியதெல்லாம் மாற்றுரைக்க முடியாத மகத்தான தத்துவங்கள் என்கிற ரீதியில் புலிகளின் தலைமையை விமர்சிக்கிறேன் என்பது அமெரிக்க-இந்திய-இலங்கை தமிழர் விடுதலை எதிர்ப்பு கொள்கைகளுக்கே வழி அமைத்துக் கொடுப்பதாய் அமையும். பிரபாகரன் என்பவர் ஈழப்போராட்டத்தை முன் நின்று நடத்த முதல் 1956 ம்ஆண்டுமுதல் அரசியல் யாப்பிலிருந்து, உங்கள் வாழ்விடத்திலேயே உங்கள் உரிமைகள், உறவுகளின் உயிர்கள், உடைமைகள் பறிக்கப் படவில்லையா? அல்லது,எங்கள் தமிழ்ப் பெண்கள் சிங்களப் படைகள், கூலிகளால் சிதைக்கப்பட்டதில்லையா?

மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் என்பது வேகமாகப் பரவத்தொடங்கிய 1970, 1980 களின் ஆரம்பத்திலேயே எங்களுக்குரிய புதைகுழிகள் இலங்கை ஜனநாயக அரசியல் யாப்பில் தோண்டப் பட்டுவிட்டன. திருத்தி எழுதப்பட்ட இலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசு யாப்பில் கூட எப்போதாவது ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கியதுண்டா! இல்லை என்கிற பதில் எல்லோருக்கும் தெரியும். எங்களுக்கு கிடைத்தது அவசர காலச்சட்டமும், பயங்கரவாதத்துக்கு எதிரான தடைச்சட்டம் என்கிற தமிழர்களுக்கு எதிரான சிங்கள போக்கை நியாயப்படுத்தும் அரசியல் சட்டங்கள் தான்.

அவ்வாறு இலங்கையின் ஜனநாயக அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்தவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனே. அவர் பற்றி த. வி. பு. தலைவர் சொன்னது, ஜெயவர்த்தனே ஓர் உண்மையான பெளத்தர் ஆக இருந்திருந்தால் நான் துப்பாக்கி தூக்கியிருக்க மாட்டேன் என்பது தான். யாருடைய விடுதலைக்காக ஆயுதம் என்தினாரோஅவர்களையே ஏமாற்றினார் என்று சொல்கிற தேவை எங்கள் விடுதலையை விரும்பாத அமெரிக்க-இந்திய-இலங்கை கூட்டணிக்கு வேண்டுமானால் இருக்கலாம். அது குறித்து தமிழர்கள் கொஞ்சம் மேம்போக்காக இல்லாமல் காரண காரியத்தொடர்போடு யோசித்தால் நல்லது. அப்போதும் சரி, இன்று ஈழப்போராட்டம் ஈழத்தில் முடக்கப்பட்ட போதும் சரி போராடியவர்களை விமர்சிப்பதோடு எங்கள் கடமைகளை முடித்துகொள்ளப் போகிறோமா, அதன் எதிர்விளைவுகளை யோசிக்காமலே.

பிரபாகரன் என்கிற ஓர் தனிமனிதன் ஈழவிடுதலைக்காய் போராடத் தொடங்கிய பின்னர் தான் தமிழினம் இன்னல்பட்டது என்றால், எதற்காக பிரபாகரனை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லை? 

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற போர்வையில் ஈழவிடுதலைக்கான அரசியல் கதவுகள் புலிகளின் பெயரால் அடைக்கப்பட்டுவிட்டதாகத் தான் 'மாமனிதர்' தராக்கி சிவராம் நிறையவே எழுதிவைத்தார். அது தானே மறுக்கமுடியாத உண்மையும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற சதியை புலிகள் எப்படி நீண்டநாட்கள் தாக்குபிடித்தார்கள் என்பது அவரது தீர்க்கதரிசனமான எழுத்தை படித்தால் தான் புரியும். புலிகள் குற்றம் இழைத்தார்கள், அதை செய்தார்கள், இதை நோன்டினார்கள் என்று அவர்களின் பெயரால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தந்திரமாக மறுக்கப்படுகிறது என்பது என் வரையில் தமிழர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.


அங்கே பதிவில் சொல்லப்பட்ட இன்னோர் கருத்து 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரபாகரன் சுதுமலை கூட்டத்தில் தோன்றியதன் பின்னர் மக்கள் பார்வையில் படவில்லை அல்லது தோன்றவில்லை. இந்த இந்திய-இலங்கைஒப்பந்தத்தின் பின்னர் தான் மாத்தையா என்பவர் இந்திய உளவுத்துறையான ரா என்கிற அமைப்பால் பிரபாகரனை இல்லாதொழிக்க ஓர் கருவியாக்கப்பட்டவர் என்பது எல்லோரும் அறிந்த பரகசியம். இந்த உயிர் ஆபத்துக்களை எல்லாம் மீறி ஒரு விடுதலை அமைப்பை நடத்துபவர் பொதுசனத்தின் மத்தியில் தோற்றமளித்து எதை சாதித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை. 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஊடகங்களை சந்திப்பதில்லை என்கிற ஓர் கருத்தும் முன்வைக்கப்பட்டது. ஒரு விடுதலை அமைப்பின் தலைமை ஊடகங்களை சந்திக்காமல் இருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதற்கு அவர் இந்திய ஊடகவியலாளரான அனிதா பிரதாப்புக்கு சொன்ன காரணம், தன்னுடைய கூற்றுக்களை யாரும் திரிவுபடுத்தி கூறக்கூடாது என்பதும் தான். அவர் அதிகம் நம்பிக்கை வைத்து சந்தித்த ஒரே ஊடகவியலாளரும் அந்த இந்திய ஊடகவியலாளர் தான். நான் அறிந்தவரை புலிகளின் போராட்ட நியாயங்களை உலகிற்கு சரியான முறையில் அறியத்தந்ததும் அவரே. உலகில் எத்தனையோ விடுதலை அமைப்புகள் அதன் தலைவர்கள் என்று எல்லோரும் நேரடியாக ஊடகங்களுக்கு பேட்டியா கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 
 
புலிகளும் அதன் தலைமையும் ஈழவிடுதலைக்காய் போராடினார்கள். அவர்களின் பின்னால் போன ஈழத்தமிழர்கள் ஏராளம் தான். அதை அந்தக் கட்டுரையே சொல்கிறது. மக்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டவரின் அல்லது விலகி இருந்தவரின் பின்னால் எதுக்காக, எந்த நம்பிக்கையில் மக்கள் போனார்கள். ஆனால், புலிகளின் நோக்கம் அவர்களை நம்பவைத்து ஏமாற்றுவதில்லை. மக்களை நம்பவைத்து ஏமாற்றும் ஓர் தலைவன் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே ராணுவ சித்திரவைக்குள் சிக்கிக்கொள்ளும் அளவிற்கு காத்திருக்காமலே தப்பிக்கவைத்திருக்கலாமே!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து தன் குடும்பத்தை அவர் ஒருபோதும் விதிவிலக்காய் ஆக்கொண்டதில்லையே! பிரபாகரன் என்பவரின் இரண்டாவது மகன் இறுதிப்போரில் சரணடைந்து எப்படி கொல்லப்பட்டார் என்பதை சனல் நான்கின் சிங்களராணுவ வீரனின் சாட்சியமே சொல்லுதே! பிரபாகரனை பெற்றெடுத்தது தான் குற்றம் என்று அவர் தாயாரை இந்தியா அலைக்கழித்ததே! இதெல்லாம் யாரும் அறியாதது அல்லவே.

வன்னிப்போரின் துயரம் என்பது எல்லோருக்கும் வாழ்நாளில் ஆறவோ, ஆற்றவோ,  முடியாத ரணம் தான். இதில் புலிகளும் அதன் தலைமையும் தங்களை மட்டும் தற்காத்துக் கொண்டது போலவும், மக்களை ஏமாற்றினார்கள் என்று சொல்வதும் எப்படி நியாயமாகிறது!

ஈழ விடுதலையில் புலிகளும் பிரபாகரனும் விட்டுச்சென்றது ஓர் வெற்றிடம் மட்டுமல்ல! அது அடுத்து எங்கள் விடுதலை நோக்கிய அடுத்த கட்டத்தை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் கூட. இறுதிப்போரில் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தார்கள், மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்கிற கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்கள் அதே உறுதியுடன், வேகத்துடன் சிங்கள பேரினவாதத்தின், சிங்கள ராணுவத்தின் கொடூரக் குற்றங்களையும் சர்வதேசத்தில் விசாரிக்க வழிவகை செய்யவேண்டியது தானே முறை. ஆனால், அவர்கள் செய்யமாட்டார்கள். இழுத்தடிப்பார்கள். அலையவிடுவார்கள். அவர்களுக்கு எங்களை அடிக்கச் சொல்லி பொல்லு குடுக்கிற மாதிரி நாங்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுக்கருத்துகள் நிறையவே வைத்திருக்கிறோம்.

புலிகள் குற்றம் இழைத்திருந்தால் அவர்களையும் சேர்த்தே நியாயமான முறையில் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம்.

ஈழத்தின் இறுதிப்போரின் உண்மைகள் என்ன என்பதற்கும் இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரங்களுக்கும் இடையே உள்ள இடைவெளிகளை யார் என்ன இட்டுக்கட்டிசொன்னாலும் நம்பும் ஓர் நிலைக்கு எங்கள் மக்களை நாங்களே தள்ளிவிடலாமா!

இதெல்லாம் எங்கே போய் முடியுமென்று மனதில் கேள்விய எழுந்தால், "தமிழ் சமூகம் இரண்டாய் பிளவுபட்டுபோகும் இழிநிலையில்" என்று பதில் வருகிறது. பிரபாகரனையும், புலிகளையும் திட்டித்தான் பிழைப்பு நடத்தவேண்டும் என்கிற மோசமான கூட்டுமனோநிலை எம் ஈழத்தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

பிரபாகரன் வெள்ளைக்கொடியுடன் சமாதானம் பேச வரும்போது சுட்டுவிடு என்று தனது ராணுவத் தளபதிக்கு முன்னாள் இந்திய பிரதமர் உத்தரவு பிறப்பித்த போதும், மறுத்துரைத்த போர் தர்மம் மீறாத அந்த இந்திய இராணுவத்தளபதிக்கு இருக்கும் கடுகளவு நேர்மையேனும் எம்மிடம் இல்லாது போனது தான் எங்கள் பெருமையோ?? 


Image: Google

ஆகஸ்ட் 10, 2011

இனப்படுகொலையும் காரியவசமும்...!! Headlines Today!"What genocide looks like...." இது தான் Headlines Today வின் நான் போர்க்குற்றங்களை கண்ட சாட்சி (I witnessed Genocide) என்கிற ஓர் ஆவணத்தொகுப்பின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஓர் வாசகம். இதன் அடிப்படிப்படையிலேயே காட்சிகள் விரிவதாக புரிந்துகொண்டேன். திட்டமிட்ட ஈழத்தமிழின அழிப்பில் "இனப்படுகொலை" என்கிற வார்த்தைப் பிரயோகத்தை பாதிக்கப்பட்ட நாங்கள் தான் சொல்லிக்கொண்டிருந்தோம். அதை இந்த உலகம் ஓங்கி ஒருமுறையேனும் சொன்னால் எங்களுக்கு நியாயமான உலகில் எல்லோருக்கும் பிறப்பால் உள்ள அடிப்படை உரிமைகள் கிடைக்கும் என்று நம்புகிறோம், இந்தக்கணம் வரை.

இலங்கையின் இனவழிப்பு போருக்கு இந்தியா துணை போனது என்று சொல்லப்படும் சமகால அரசியல் சூழலில் இந்திய ஊடகம் ஒன்று இனப்படுகொலை என்பது இப்படித்தான் இருக்கும் என்று ஈழத்தமிழர்கள் விடயத்தில் சொல்வது கொஞ்சம் கூர்மையோடு பார்க்கவைக்கிறது. சமகால பொருளாதார, அரசியல் நெருக்கடிகள்  சூழ் உலகில் எந்தவொரு ஊடகமும் இப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளுமா என்கிற கேள்வி எழாமலும் இல்லை. இருந்தாலும் Headlines Today வுக்கு என்ன இந்திய ஆளும் வர்க்கத்தைவிட, இந்திய அயலுறவுக் கொள்கையை விட தமிழர்கள் மேல் அவ்வளவு அக்கறை என்கிற ஐயமும் எழாமல் இல்லை. இந்தக் கேள்விகளை தற்காலிகமாக கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு அந்த செய்தி தொகுப்பு ஆவணம் பற்றிய என் பார்வைகள்.

இவர்களின் செய்தி தொகுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா உடன்பாட்டின்  அடிப்படையில் குறிப்பாக போர்க்காலங்களில் குடிமக்கள், மற்றும் சரணடைந்த போராளிகள் ஆகியோரின் உரிமைகள் எப்படி பாதுகாக்கப் பட வேண்டும் என்பதிலிருந்து ஓர் அரசு தவறியிருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறது. கூடவே, பொதுமக்களுக்கு தேவையான உணவு, மருந்து கிடைக்காமல் செய்யப்பட்டது, வைத்தியசாலைகள் தாக்கப்பட்டது, தடை செய்யப்பட்ட இரசாயன வெடிகுண்டுகள் பாவிக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்களை ஜெனீவா உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இலங்கை எப்படி மீறியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அத்துடன், நடுநிலைமையை மனதிற் கொண்டு புலிகளையும், அவர்கள் பக்க குற்றம் என்று சொல்லப்படுவதையும் சொல்லியிருக்கிறார்கள்.

உலகின் எந்தவொரு சாசனப்படியும், மானுட தர்மப்படியும் பார்த்தாலும் ஈழத்தமிழினம் இனப்படுகொலை தான் செய்யப்படுகிறது. அதில் மனட்சாட்சியுள்ள யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கவே முடியாது. ஈழத்தமிழனைப்போல், அவன் உரிமைகளைப் போல்  இழுத்துக்கொண்டிருந்த "இனப்படுகொலை" என்கிற வார்த்தை தான் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் என்பவரை நிறையவே மனம் நோகவைத்துவிட்டதாம் :)

பொதுவாக இலங்கையின் எந்தவொரு வெளிநாட்டுப் பிரதிநிதியின் இயல்பான குணமான "Dominating the Conversation" என்பது இவரிடமும் தென்பட்டது. நீ எப்படி இனப்படுகொலை என்கிற வார்த்தையை பாவிக்கலாம், அதுவும் இலங்கை விடயத்தில் என்று பொங்கியே விட்டார் மனிதர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதுவோ கேள்வி கேட்க இவரோ இனப்படுகொலை என்கிற வார்த்தைப்பிரயோகத்தை பிடித்தே தொங்கிக்கொண்டிருந்தார்.

 இது எல்லாத்துக்கும் மேலே ஒரு உலகமகா பொய்யை கேழ்வரகில் நெய்வடிகிறது என்பது போல் சொன்னார். இலங்கை அரசு தமிழர்களுக்கு "Restorative Justice", அதாவது மீள்கட்டுமானம், மீளிணக்கம்  என்கிற அடிப்படையில் மனித உரிமைகள் மீறப் பட்டதற்கான நியாயங்களை பெற்றுக்கொடுக்கப் போராடுகிறார்களாம். அவர்கள் தமிழர்களுக்கு வழங்கும் நீதி "Retributive", அதாவது தமிழர்களை பழிவாங்கும் அடிப்படையில் இல்லையாம். இப்போது, இந்த செய்தியின் ஆவணத்தொகுப்பு அந்த கவர்ச்சியான "நல்லிணக்க, மீளினக்க" முயற்சிகளுக்கு பங்கம் செய்து விட்டதாம் என்பது தான் அவரின் முதலைக்கண்ணீர். Restorative Justice ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது என்றால் எதுக்காக அந்த ஆவணத்தில் உள்ளவர்கள் சாட்சி சொல்லப் பயப்படுகிறார்கள் என்று யாராச்சும் கேடால் நல்லது. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் என்று யோசித்தால், இந்தியாவும் அமெரிக்காவும் ஆதரவு கொடுக்கும் வரை என்று தான் தோன்றுகிறது.இவரை விட, இலங்கையின் பாதுகாப்பு செயலர் வழக்கம் போல் பொதுமக்கள் யாருமே கொல்லப்படவில்லை என்று சொன்னவர் இப்போது மிக, மிகச் சிறிய அளவிலேயே கொல்லப்பட்டார்களாம் அதைவிட, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் இருந்த வாணி ஞான குமார் பற்றி வேறு தேவையின்றி உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறார்.

இலங்கையின் இந்த வழமையான கட்டுக்கதைகளும், பொய்களும் யாவரும் அறிந்ததே என்பதால் இத்தோடு இப்போது நிறுத்திக்கொள்கிறேன்.

தன்னுடைய சொந்தப் பாதுகாப்பையும் மீறி ஈழம் சென்று பிரியம்வதா என்கிற பெண்நிருபர் ஓர் துணிச்சல்காரர் தான். பெண் நிருபர்கள் பற்றி உன்னைப்போல் ஒருவன் கமல்ஹாசன் சொன்னது போல் உங்களைப்போல் இப்படி நிறைய நிருபர்கள் இருக்கிறார்கள் என்று கேலி தொனிக்கும் வகையில் சொன்னது ஏனோ ஞாபகம் வந்தது. அந்த பெண் நிருபர் சிங்கள ராணுவத்திடம் மாட்டியிருந்தால் என்ன பாடுபட்டிருப்பார் என்பதயும் ஓர் பெண்ணாய் நினைத்துப்பார்க்கவே நடுங்குகிறது. இருந்தாலும், இனி சிங்களராணுவம் ஈழத்தில் உள்ள பெண்களை எல்லாம் நீ பிரியம்வதா' வா என்று இம்சைப்படுத்தப்போவதும் உறுதி.

தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியா என்கிற அளவில் ஈழத்தமிழர் பிரச்சனை இந்த செய்தி ஆவணத்தின் மூலம் கொண்டு செல்லப்படும் என்று தோன்றுகிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டு உடனேயே இந்திய குடிமக்களுக்கு அரசாட்சி செய்பவர்கள் ஈழத்தமிழர் விடயத்தில் மனுநீதி வழங்குவோம் என்று சொல்லமாட்டார்கள் என்பதும் உறுதி. ஓரளவிற்கேனும் இந்தியா என்கிற அளவில் ஈழத்தமிழினம் "இனப்படுகொலை" செய்யப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பது தெரியவந்தது ஓர் ஆரோக்கியமான மாற்றமே.

இனப்படுகொலை   என்பது ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஒதுக்கொள்ளப்படுவது என்பதே  எங்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியானதும், நியாயமானதுமான தீர்ப்பு!!!

Justice Theory Model: TamilNet
Image Courtesy: Google

ஆகஸ்ட் 08, 2011

இரவின் பயணம்!!


Image from Love of my life...!!

பயணம்!!!  வாழ்க்கை கூட ஓர் மிக நீண்ட பயணம் தான். சில சமயங்களில் சுகமாகவும், சில சமயங்களில் கொஞ்சம் நிறுத்தி, நிதானித்து யோசிக்கவைப்பதாயும் இருக்கும். இருந்தும் பயணத்தை நிறுத்திக்கொள்வதில்லை. அலட்டிக் கொள்ளாமல் ரசிக்கத் தெரிந்தால் நிறைய பிடித்துப்போகிறது இந்தப் பயணங்களும். அன்றாட அற்பப் பிரச்சனைகளில் தலையை உடைக்கும் போதும் கூட இந்தப் பயணம் என்பது சுகமானதே.

பயணம் என்று நான் குறிப்பிடுவது காலாற, மனமாற பத்து நிமிடங்கள் நடப்பது என்பதிலிருந்து விமானப்பயணம் வரை. அதாவது பயணம் என்பதும் அவரவர் அனுபவத்தைப் பொறுத்து மாறுபடும், வேறு பொருள் தரும். சில சமயங்களில் தூர தேசம் போய் கிடைக்காத பயணத்தின் அனுபவம் பக்கத்தில் இருக்கும் ஓர் பூங்காவில் மரத்தின் கீழ் பத்து நிமிடங்கள் இருந்தால் கிடைக்கிறது. இது புத்தரின் தத்துவமல்ல. அனுபவம்!

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் நான் ஆஸ்திரேலியாவில் இருந்திருக்க வேண்டும். ஏனோ எனக்கு நானே தடையாய் இருந்து இருந்த இடம் விட்டு நகராமல் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஐரோப்பா (பிரித்தானியா, பிரான்ஸ்), ஆஸ்திரேலியா (பெர்த், சிட்னி), தாய்லாந்து என்று உலகம் சுற்றும் சந்தர்ப்பம், அதுவும் ஒன்றரை மாதம் போகத்தோன்றவில்லை. இங்கேயே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டலாமே என்று தங்கிவிட்டேன். இது என் இயல்பு. மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாய் எல்லாம் யோசிப்பதில்லை. என்ன! என் உறவுகள் தான் என்னை ஏதோ கொஞ்சம் அதிசயப்பிறவி போல் பார்ப்பார்கள். எதுவும் சொல்லமாட்டார்கள், சிரித்துக்கொண்டே நகர்ந்துவிடுவார்கள். இந்தப் பயணத்தின் அனுபவங்களை இழந்திருக்கலாம் நான். இருந்தாலும் மீண்டுமொருமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். நாளை என்பது நிச்சயமில்லாமல் கூட இருக்கலாம். ஆனாலும், நாளை என்பது ஓர் நம்பிக்கை!
 
பயணங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்குப் பிடித்த பயணம் இரவின் அமைதியான நேரத்தில் கொஞ்சம் காலாற நடப்பது தான். இரவில் தூக்கம் விரட்டி அதன் அமைதியை ரசிக்க பிடிக்கும். அப்போது யோசிப்பதுண்டு, தனியே கொஞ்சம் நடந்தால் என்ன என்று. எனக்கு இரவுப்பொழுதில் யாராவது பேசிக்கொண்டு நடந்தால் ஏனோ பிடிப்பதில்லை. எனக்குரிய பொழுதுகள் எப்போதும் அமைதியாய், எனக்குள் நானே பேசிக்கொள்ளும் தருணங்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைப்பேன்.

எனக்குப் பிடித்த இன்னோர் பயணம் இரவில் பொதுப்போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்வது. அந்தப் பொழுதுகளில் தான் மனிதர்கள் பெரும்பாலும் அவர்களின் அமைதியான இயல்புகளோடு இருப்பது போல் எனக்கு தோன்றும். அது ஓர் அலாதியான அனுபவம். கூட்டமே இல்லாத பொதுப்போக்குவரத்து வண்டியில் எனக்குப் பிடித்தமான ஓர் இருக்கையில் அமர்ந்து நாகரீகம் மீறாமல் மனிதர்களை நோட்டம் விடுவது. அதிகம் பேசிக் கொள்ளமாட்டார்கள். அதுவும் ஆண், பெண் இருபாலர் என்றால் தங்கள் நெருக்கத்தை கண்ணியம் மீறாத மெல்லிய தொடுகையில் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். இளைய தலைமுறை என்றால் வார இறுதியை கழித்துவிட்டு வீடு திரும்புபவர்கள்  என்றால் ஒன்றிரண்டு வார்த்தைகளில் தங்கள் அனுபவங்களை சுருக்கமாய் ஏதோ பகிர்ந்துகொண்டிருப்பார்கள். இந்த அகால வேளையில் வயதானவர்களை இப்படி பயணிப்பதை பார்க்க முடியாது.

இவ்வாறு பயணிப்பவர்களில் சிலர் இந்த உலகையே மறக்குமளவிற்கு போதையோடும் காணப்படுவார்கள். பெரும்பாலும் இங்குள்ள நாரிகம் கருதியோ என்னவோ தாங்களும் தங்கள் பாடும் என்று அமைதியாய் உட்கார்ந்திருப்பார்கள். அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ரகம் கிடையாது.

இப்படி, நேரம் கழித்து ஓர் இரவில் அதுவும் சாமம் பன்னிரண்டு மணிக்கு  பிறகு தனியே பயணம் செய்யும் ஓர் அனுபவம் நேற்று கிடைத்தது, நீண்ட நாட்களுக்குப் பிறகு. அந்த பயணத்தின் அழகை, தனிமையை ரசிக்க நினைத்து பொதுப்போக்குவரத்தை தேர்ந்தெடுத்தேன். இதைப் படிப்பவர்கள் தயவு செய்து நான் ஏதோ சமூக விழுமியங்களை மீறி அதுவும் இந்த அகால வேளையில் ஊர்வலம் போகிறேன் என்று அதீத கற்பனை செய்யாதீர்கள். என்னால் அந்த நேரத்திலும் பயமின்றி பயணம் செய்யுமளவிற்கு ஒன்று துணிச்சல் இருக்கு; இரண்டாவது கனடாவில் பெண்கள் இவ்வாறு பயமின்றி போய்வர வேண்டும் என்கிற அளவிற்கு சட்டம், ஒழுங்கு பேணப்படுகிறது. கனடாவின் அரசியல் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் நான் வியந்துபோகும் விடயங்களில் இதுவும் ஒன்று.

அந்தப்பயணம் குறுகிய தூரமே என்றாலும் நிறையவே ரசித்தேன். மெல்லிய வெளிச்சத்தில் சுத்தமான, குளிரூட்டப்பட்ட பொதுப்போக்குவரத்து வாகனம், அமைதியான இயல்பான சகபயணிகள், ஆங்காங்கே கடந்து செல்லும் அதே போன்ற வாகனங்கள், பூமியிலும் நட்சத்திரங்கள் முளைக்கும், சிரிக்கும் என்று சொல்லாமல் சொல்லும் இரவின் மின்சார விளக்குகள், அவசரகதியில் இல்லாமல் அமைதியாய், நிதானமாய் வீதியின் இருமருங்கிலும் நடந்து போகும் ஒன்றிரண்டு மனிதர்கள் என எல்லாமே பகற்பொழுதின் அத்துமீறிய ஆர்ப்பாட்டாங்கள் இன்றி ஆழமான அமைதியுடன் கண்முன்னே கனவு போல் விரிந்து கிடந்தது, ஆச்சர்யப்படுத்தியது.

பொதுப் போக்குவரத்தே ஆனாலும், சட்டமும் ஒழுங்கும் அதன் இயல்பின் வழி கடைப்பிடிக்கப்பட்டாலும் நான் இரவில் தனியே பயணம் செய்யும்பெண் என்பதால் அரசு எனக்கு அளித்த சலுகையைப் பயன்படுத்தவும் தவறவில்லை. வாகன சாரதியிடம் என் வீடு இருக்கும் பகுதிக்கு அருகில் வாகனத்தை நிறுத்தச் சொல்லி, அவருக்கு நன்றி சொல்லி இறங்கி வீடு நோக்கி நடந்தேன். வீட்டுக்கு வந்தபோது வாசல் கதவை திறந்துவைத்து விட்டு என் தாயார் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்.

 
இந்த ஒரு இரவின் பயணத்தில் எனக்குள் விதைக்கப்பட்ட நம்பிக்கைகள் தான் எத்தனை, வியப்பாய் இருந்தது. என் சமூகத்தில் வாழும் சகமனிதர்கள் மீதான நம்பிக்கை, அரசின் சட்டம், ஒழுங்கு, காவல் மீதுள்ள நம்பிக்கை, வீட்டை திறந்துபோட்டு வைத்தாலும் தனது பாதுகாப்பு பயமின்றி தூங்கிப்போகும் என் தாயாரின் நம்பிக்கை, நான் ஏற்கனவே நேரம் கழித்து வீடு வரும் காரணத்தை சொல்லியிருந்தேன் என்றாலும், என்னை என் பாதுகாப்பை மட்டுமே யோசிக்கும் என் வீட்டுக்கு என் மேலுள்ள நம்பிக்கை.

என் வீடு, நான் வாழும் சமூகம், எனக்குரிய பாதுகாப்பான சூழல் எல்லாத்தையும் நினைக்குந்தோறும் மறக்காமல் ஈழத்தில் பெண்கள் நிலை கூட ஞாபகத்தில் வந்தது.

Yes, I am taking many things for granted!


ஆகஸ்ட் 05, 2011

கற்க கசடற.....!!! அரசியல், யாப்பியல் ஜனநாயகம்பதிவுலகத்தின் அறிமுகமும், அங்கேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும், அப்பப்போ வந்து நோட்டம் விட்டுப்போகிரவர்களுக்கும் சமச்சீர் கல்வி, சமச்சீர் கல்வி என்பது கடந்து வரமுடியாத ஒன்றாய் போய்விட்டது. நான் தமிழ்நாட்டை கடந்து எங்கேயோ இருக்கிறேன். இருந்தும் சமச்சீர் கல்வி என்பது இன்று நான் ஒவ்வொரு நாளும் கடந்து வரும் ஓர் சொல்லாகிவிட்டது. பயந்துடாதீங்க, நான் சமச்சீர் கல்வி பற்றி தமிழ்நாட்டு தமிழர்களுக்கு பாடம் எடுக்கப்போவதில்லை :) கல்வி என்பதன் அரசியல், சமூக, பொருளாதார தோற்றுவாய்கள் என்ன என்பதை என் கருத்தில் சொல்லும் ஓர் முயற்சி.

கல்வி என்பதன் தோற்றத்தையும், அதன் தார்ப்பரியங்களையும் கொஞ்சம் யோசித்தால் அதன் ஆரம்பம் எங்கேயோ போய் முடிகிறது. மனித நாகரீகத்தின் தோற்றம், எழுச்சி, வளர்ச்சி என்று அதனோடு பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. மிருகங்களோடு மிருகங்களாய் வாழ்ந்துகொண்டிருந்த மனிதனின் பரிணாம, பரிமாண வளர்ச்சியின் உச்சம் தான் கல்வி. மனித குலம் சமூகமாக வாழத்தொடங்க அதற்குரிய அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்புகள் மற்றும் விழுமியங்கள் என்று தோற்றம் பெற்றன. அதன் பின்னர் உருவான வரலாற்றுப் படையெடுப்புகள், காலனியாதிக்கம்  தமிழர் சமூகத்தில் மத, அரசியல், பொருளியல் தாக்கங்களை இன்னும் மீதம் வைத்திருக்கிறது.

அதில் அதிகம் என்னை வெறுப்படைய வைப்பது Colebrooke -Cameron 'Reforms' (1833) மூலம் பிரித்தானியா இலங்கையின் மூன்று ராச்சியங்களை, தமிழர் ராச்சியம், கண்டி ராச்சியம், கோட்டை ராச்சியம் எனப்படும் தனித்தனி ராச்சியங்களை இணைத்து ஒரு நாடாக்கி அதன் அதிகாரத்தையும் சிங்களவர்களிடம் ஒப்படைத்தது தான். இன்று அதை மீளத்தாருங்கள் என்றால் நாங்கள்..... சரி விட்டுததொலைப்போம். இதெல்லாம் இலங்கைப் பாடத்திட்டத்திலேயே மறைக்கப்படும் உண்மைகள்.

கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்றாலும் அதை முற்றுமுழுதாக ஒழிக்க முடிவதில்லை. அரசியல் தத்துவாசிரியர்களின் ஆராய்ச்சி முடிவுகளுக்கும், அரசியல் கொள்கைகளுக்கும் இடையே சமூக பிரச்சனைகள் குறித்த சமநிலையில் எப்போதுமே பாரிய இடைவெளிகள் இருந்துகொண்டே இருக்கிறது. கல்விக்கொள்கைகளில் அரிசயல் உள்நுழையும் போதில் அது குறைபாடுகள் நிறைந்ததாக ஆகிவிடுகிறது. கல்விக்கொள்கைகளில் எதற்காக அரசியல் நுழைய வேண்டும் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அது குறித்த தெளிவு மக்களிடம் கொண்டு வரப்படவும் வேண்டும்.

தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வி தொடர்பான பிரச்சனை எதற்காக நீதிமன்றம் வரை போகவேண்டும் என்று தோன்றியது. எங்களுக்கு திட்டமிடப்பட்ட அரசியல் பாகுபாட்டுக்கொள்கைகளால் கல்வி பறிபோகிறது. தமிழ்நாட்டில் தமிழர்களே அவர்களுக்குரிய கல்வித்தேவைகளை தீர்மானிக்கும் உரிமையின்றி, போராட்டம், நீதிமன்றம் என்றால் யாருக்காக இந்த ஜனநாயக கட்டமைப்புகளும், ஆட்சியும்!!

இது போன்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுவர கல்வித்திட்டத்தில் "Civic Education" - குடிமக்களுக்குத் தகுந்த கல்வித்திட்டம்  -  யாப்பியல் ஜனநாயகம் (Constitutional Democaracy) என்கிற அரசியல், சமூக, பொருளாதார கருத்தியல் குறித்த கேள்விகள் மற்றும் ஆய்வுகள் என்கிற கண்ணோட்டத்துடனான பாடத்திட்டம் தேவை என்கிறது இந்தக் கட்டுரை. இப்படியெல்லாம் சிங்கள ஆட்சியாளர்கள் யோசித்திருந்தால் அந்த நாட்டுக்கு இந்த நிலை, தமிழின அழிப்பும் நிகழ்ந்திருக்குமா!!

இந்தக்கட்டுரையை எழுதியவர் நோக்கம் நல்லதாகவே இருக்கட்டும் ஒருமுறை அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பிரையன் செநிவிரட்னேவிடம் சொன்னாராம், "If all the sinhalese had your views, we would not need a Separate Tamil State." என்று. ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பிரையன் செநிவிரட்னே போல் மற்றவர்களும் புரிந்துகொண்டிருந்தால் நாங்கள் தனி நாடு கோர வேண்டிய தேவை இருந்திருக்காது என்பதே அதன் கருத்து.

இனிமேல், அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் கூட இவ்வளவு அழிவுக்குப் பின் அந்த வார்த்தைகளை சொல்வாரோ என்பது ஐயமே!

இந்தக்கட்டுரை இலங்கை கல்வித்திட்டம் குறித்து எழுதப்பட்டது என்றாலும் பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும். மனித வரலாறு, நாகரீகங்களின் எழுச்சி என்று ஜனநாயக கருத்தியலை, கட்டமைப்பை கற்றுக்கொண்டவர்கள், தத்தெடுத்தவர்கள் கல்விக்கொள்கையில் மட்டும் ஜனநாயகத்தை கோட்டை விடுவார்கள் போலும்.


கனடா, அமெரிக்க, ஐரோப்பிய செல்வந்த நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் "சந்தர்ப்பங்கள்" என்று சொல்லப்படும் "Opportunity" எல்லோருக்கும் சமமாகவே வழங்கப்படுகிறது. அதையும் தாண்டி முன்னேறுவதென்பது தனிமனித முயற்சி!! அந்த சமமான கல்வி, அதை கற்கும் சந்தர்ப்பங்கள் என்பது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எப்போது சாத்தியம்!!  யாப்பியல் ஜனநாயகத்தை கேள்வி கேட்கும் அளவுக்கு கற்க கசடற..... என்றால் நம்மூர் அரசியல்வாதிகள் வேறு கோபித்துக்கொள்ளப்போகிறார்கள்.

Image Courtsey: Google

ஆகஸ்ட் 01, 2011

இளைய தலைமுறையும் தமிழின அடையாளங்களும்!!
இந்தியா, மேற்குலகத்தின் செல்வத்தையும், ஆபிரிக்காவின் வறுமையையும் தன்னிடத்தில் கொண்ட நாடு. ஒரு பதிவர் எழுதியிருந்தார் இந்தியா பணக்காரர்கள் நிறைந்த ஏழை நாடு!! அங்கே ஜனநாயகம் இருக்கு..... ஆ...னா....ல்.....இல்லை. இன்று ஆசியாவில் அமெரிக்காவின் செல்லபிள்ளையாய் தத்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஈழம் பற்றி பேசத்தொடங்கி இந்தியா குறித்துப் பேசவேண்டியதன் தேவை தான் என்ன என்று யோசிக்கலாம். ஈழத்தின் கழுத்தை சுற்றிய பாம்பாய் என்றுமே புவியல் அமைப்பிலும், இன்று உணமையிலேயே ஈழத்தமிழனின் கழுத்தை நெரிப்பதாலும் அதை பேசித்தான் ஆகவேண்டிய கட்டாயம் எங்களுக்கு. 

ஐரோப்பிய ஒன்றியத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக்குட்பட்ட நாடுகளே ஆனாலும் முஸ்லிம் நாடுகளை இணைத்துக்கொள்வதில் பெருவிருப்பம் இல்லையாம் அவர்களுக்கு. புக்குயாமா எழுதியதைப் படித்ததாய் ஓர் ஞாபகம். இவர்கள் ஏய்க்கவே படுவார்கள். உலகம் ஒருசாராருக்குத் தேவையான இயங்குவிதிகளின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கேற்றாற்போல் தான் அவை உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறன என்பது என் புரிதல். இருந்தாலும் அடிப்படை வாதம், ஏகாதிபத்தியம் இரண்டுக்குமிடையேயான மோதல்களில் எங்கள் ஈழ விடுதலைப்போரில் அதன் தாக்கங்களை தேவைக்கு அதிகமாகவே உண்டுபண்ணியிருக்கிறது, உணரப்படுகிறது என்றால் அது மிகையில்லை.

சரி, ஈழத்தைப் பார்ப்போம். ஈழத்தில் அண்மையில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றியீட்டியதாக தமிழர்கள் ஒரு பகுதியினர் சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். என்னால் சந்தோசமும் பட முடியவில்லை. எனக்கு அது குறித்து துக்கமும் இல்லை. என் புரிதலில் இவையெல்லாம் ஒரு விதத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றிகளே. இலங்கையின் போர்க்குற்றங்களை கண்டும், காணாமல் விடவும், ஈழத்தை இன்னோர் ஆப்கானிஸ்தான் ஆக்கவும் (நன்றி திருமுருகன்) அங்கே இவர்களுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு, ஓர் அதிகம் அதிகாரங்கள் அற்ற ஓர் பொம்மை அமைப்பு தேவை. என் வரையில் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது என் புரிதல். 

உள்ளூராட்சி தேர்தலின் பின் செய்திகளை கவனித்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை விடவும் "ஒன்று பட்ட இலங்கைக்குள்" தீர்வு என்கிற கோணத்தில் தான் பேசிக்கொண்டிருக்கிறது. ராஜபக்க்ஷேக்களின் ராட்சசப்பிடியில் இருந்துகொண்டு அவர்களாலும் இதைத் தவிர வேறெதையும் குறித்து பேசவோ, செயற்படவோ முடியாத நிலையோ! அரசியல் கட்சிகளின் நிலையே இதுவானால், பொதுசனம் பற்றி சொல்லவே வேண்டாம்.


இந்த நிலையில் ஈழம் குறித்து பேசவேண்டிய, அது குறித்து ஆவன செய்ய வேண்டியது என்னென்ன என்பதை புலம் பெயர் தமிழர்களே முன்னெடுக்க வேண்டிய நிலை. "நீங்க கொஞ்சம் சும்மா இருந்தாலே சிங்களவன் எங்களை வாழவிடுவான்" என்று அப்பாவித்தனமாய் நம்பும், புலத்து தமிழனை திட்டும் ஈழத்தில் வாழும் எம் உறவுகளுக்கு நாம் எதையாவது செய்து தான் ஆகவேண்டும்.

இதை மனதில் நிறுத்தி இங்குள்ள இளைய தலைமுறையினர் செயற்படுவது கொஞ்சம் உற்சாகத்தை கொடுக்கிறது. அண்மையில் கனடாவில் உள்ள தமிழ் பல்கழைக்கழக மாணவர்கள் York பலகலைக்கழகத்தில் தமிழர்களின் தேசியக் கொடியினை எங்கள் ஒருமித்த அடையாளமாக கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறார்கள். அது கொடி என்கிற அடையாளத்தோடு முடிவதல்ல.

நான் கவனித்த வரையில் Samuel Huntington, Dr. Imtiyaz, முதல் தமிழ் கூறும் நல்லுலகின் ஜமுனா ராஜேந்திரன் வரை கலாச்சார, தேசிய அடையாளங்கள் குறித்த பார்வைகள் அதிகம் என்னை யோசிக்கவைத்தன. ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்கும்போது ஒவ்வொரு சமூகமும் தங்களின் அடையாளங்களின் அடிப்படியிலேயே ஒன்று சேருகிறார்கள். இது தான் இயல்பு. இது தான் வரலாறு. Dr. Imtiyaz இந்த தேசிய அடையாளங்களின் அடிப்படியில் தான் சிங்கள ஆட்சியாளர்களால் தமிழினத்துக்கு எதிரான துவேசம் வளர்த்தெடுக்கப்படுகிறது என்கிறார்.

இந்த கலாச்சார மற்றும் தேசிய அடையாளங்கள் குறித்த பார்வைகள் முதல் இருவரும் ( Samuel Huntington, Dr. Imtiyaz) விளக்குவது புரிகிறது. நடைமுறை யதார்த்தங்களோடு ஒத்தும் போகிறது

யமுனா ராஜேந்திரனின் தமிழ்த்தேசியம் குறித்த தியாகுவுடனான ஓர் கலந்துரையாடலை படித்தபோது இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு குழப்பமாகவே இருந்தது. இருந்தாலும், யமுனா ராஜேந்திரனைப் புரிந்துகொள்ளும் கெட்டிக்காரத்தனம் என்னிடம் இல்லை என்கிற அடிப்படியில் நோக்கினாலும்,  தமிழ்த்தேசியம் என்பது அவரது மார்க்சியப்பர்வையில் ஓர் தெளிவான விளக்கத்தை கொடுக்காத போதும் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

யமுனா ராஜேந்திரன் சொன்னதில் ஒரு சிறு பகுதி, ".... இன்னும் மொழி கலாச்சாரம், சார்ந்த விடயங்களை அது மதத்தோடு சேர்த்து வரையறை செய்யும் அப்படியான நிலை வரும்போது இந்தக் குறிப்பிட்ட வரையறைக்கு வெளியில் இருக்கிற அனைவருமே அன்னியர்களாகப் பார்க்கப்படுவார்கள் எனும் அளவிலேயே  பார்க்கப்படுவார்கள். மற்றவர்கள் அல்லது அடையாளம் அற்றவர்கள் என்னும் அளவிலேயே பார்க்கப்படுவார்கள்..."

(மூலம்: தமிழ்த் தேசியம் குறித்து மார்க்சீயர் தியாகுவுடன் யமுனா ராஜேந்திரன் மற்றும் விசுவநாதன் உரையாடல், 10 May, 2011)


என் அறிவுக்கு எட்டியவரை நடைமுறை யதார்த்தத்துடன் யோசித்தாலும் ஈழத்தமிழர்களின் தேசியம் என்பது யாரையும் ஒதுக்கியதும் இல்லை. அது இலங்கைத் தேசியத்தில் மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட தமிழர்கள் என்கிற ஓர் தனி இனத்தின் மொழி, கல்வி, பொருளாதார உரிமைகளின் அடிப்படையிலேயே கட்டியமைக்கப்பட்டது. அது யாருக்கும் எதிரானதும் அல்ல. அது தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இந்த உலகமே அவரவர் வசதிக்கு ஏற்புடையதாய் எதையோ பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் பொது நான் மட்டும் எதற்காக என் அடையாளங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்.

இந்தியாவிற்கென்று சோனியா காந்தியின் கொள்கை. அது இந்தியா பற்றியும், இந்தியர்கள் பற்றியுமே கவலைப்படாதது. இந்தியா என்கிற பணக்காரர்கள் நிறைந்த ஏழை நாட்டின் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உக்கிரமடைந்தது இவரது ஆட்சியல் தான். அதில் ஈழத்தையும் சேர்க்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்.


ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஓர் கொள்கை, அது முஸ்லிம்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதை குறைக்க வேண்டும் அல்லது தடுக்க வேண்டும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர்கள் ஒன்றும் வரவேற்கப் படவில்லை. இதே ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை அடிப்படை தான் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலை குறித்தும் அப்பப்போ வெளிப்படுகிறது.


இந்தியா அழித்த ஈழத்தமிழர்களின் அடையாளம் தமிழீழ விடுதலைப் புலிகள். ஐரோப்பிய ஒன்றியம் அழிக்க நினைத்து தடை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை.

இந்த அடிப்படையில் தான் எங்கள் தேசிய அடையாளங்களும் புலத்தில் அழிக்கப்பட்டால் அல்லது அதற்குரிய அங்கீகாரம் மறுக்கப்படால் எங்கள் கொள்கைகளும், கோரிக்கைகளும் கூட கைவிடப்படும் என்கிற ஓர் எதிர்பார்ப்பாக கூட இருக்கலாம். இருந்தும், நம் தமிழ் இளைய தலைமுறை அதை சரியான முறையில் தமிழர்களிடமும், சர்வதேசத்திடமும் எடுத்துசென்று எங்கள் தேசிய அடையாளங்கள் வெறும் வறட்டு வாதங்களை அடிப்படையாக கொண்டு கட்டியமைக்கப்பட்டவை அல்ல என்பதை புரியவைக்கிறார்கள். அவர்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.