ஜூலை 09, 2011

காட்சிப்பிழைகள்!!! கமலஹாசன் - Russel Croweஅண்மைக்கால தமிழ் இலக்கியம், சினிமா, அன்றாட வாழ்வு என்று சில சொற்கள் தமிழில் உலாவருகின்றன. அப்படி காதில் விழுந்த ஓர் கவர்ச்சியான, மனதில் சந்தோசத்தை கூட்டும் (euphoria) ஓர் வார்த்தையாக 'காட்சிப்பிழை' என்கிற வார்த்தை அடிக்கடி அடிபடுகிறது. உண்மையில் அது விளக்கும் பொருள் என்னவோ தெரியாது. காதலில் தான் இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுகிறது. காதல் உணர்வு தன் இணையை, துணையை காணும் மாத்திரத்தில் அல்லது நினைக்குந்தோறும் மனித மனங்களில், நினைவுகளில் காட்சிப்பிழைகளும் இடம்பிடிக்கும். 

பருவத்தின் அறிகுறி காதல் என்றால் அதை பறைசாற்றுவது இந்தக் காட்சிப்பிழைகள் தான். காதலி தவிர வேறு யாராவது ஓர் பெண்ணை வாய்பிளந்து பார்த்துவிட்டு, பிறகு, "பார்க்க உன்னை மாதிரியே இருந்தாளா.... அ..... தா.....ன்....." என்று பின்விளைவுகளை யோசித்து அசடுவழிந்தால் அது காட்சிப்பிழையில் சேர்த்தியில்லை. அது களவாணித்தனம்!!

காட்சிப்பிழை என்பது எப்படி இருக்கும் என்று உணர்வு பூர்வமாக இல்லாமல், கொஞ்சம் யதார்த்தம் கலந்தும் யோசித்ததும் இப்படி ஓர் பதில் மனதில் தோன்றியது. அகராதியில் காட்சிப்பிழைக்கு விளக்கம் கிடைக்கவில்லை. காட்சிப்பிழை என்றால் அதன் அம்சங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சில ஆங்கில சொற்கள் மனதில் தோன்றின.

பிரமை - இல்லாதது இருப்பது போலவும் நிகழாதது நிகழ்வது போலவும் புலன் (ஐம்புலன்கள்) உணரும் மயக்க உணர்வு, மனதில் ஏற்படும் தோற்றம். (Hallucination)

உருவெளித்தோற்றம், மாயை - ஒன்றைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் அதை கண்ணால் காண்பது போல் தோன்றும் போலித்தோற்றம், உருமாயம். இல்லாதது இருப்பது போலவும் நிகழாதது நிகழ்வது போலவும் புலன் உணரும் மயக்க உணர்வு - மனதில் ஏற்படும் தோற்றம். (Illusion).

மனக்குழப்பம், அறிவு மயக்கம் (Delusion)

ஆக, காட்சி அதுவாய்த்தான் இருக்கிறது. உடல், உள, மனோ நிலைக்கேற்ப காண்பவரால் அதற்குரிய அர்த்தம், அபத்தம் இரண்டுமே கற்பிக்கப்படுகிறது. பாரதியாரின் அற்பமாயை, தோற்றமயக்கம், காட்சிப்பிழை கவித்துவத்துடனேயே பொருத்திப்பார்த்ததுண்டு. அதிலயும் அந்த "பாரதி" படத்தில் "நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே.... அற்ப மாயைகளோ... வெறும் காட்சிப்பிழைதானோ...." வும் என்னை கவர்ந்தது. சரி, சரி, விடுங்க. சில சமயங்களில் நான் அப்படித்தான்.

இந்த பிரமை, உருவமயக்கம், உருவெளித்தோற்றம், மாயை என்கிற பொருள்களை நினைக்குந்தோறும் எனக்கு  கமலஹாசன் நடித்த ஆளவந்தான் காதாபாத்திரம் தான் ஞாபகம் வரும். அதில் Graphics இல் அவர் தன் கைகளின் தசைகளில் இருந்து புழுக்கள் போன்ற ஜந்துக்கள் வெளிவருவது போலவும், மெல்லிய புன்னகையுடன் அதை தன் கைகளினால் மெதுவாக தட்டி உள்ளே அனுப்புவது போலவும் வரும் காட்சி. அதில் ஏகப்பட்ட காட்சிகள் அது போல் விரியும். என் மனதில் நிற்பது என்னவோ அது தான்.

கமலஹாசனுக்கு வேட்டையாடு விளையாடு படத்தில், "பார்த்த முதல்நாளே.....காட்சிப்பிழைபோலே... உணர்ந்தேன் காட்சிப்பிழைபோலே....", பாடலிலும் காட்சிப்பிழை வரும். மனதுக்கு பிடித்த ஒரு பெண்ணை பார்த்தாலும் காட்சிப்பிழை வரும் என்று பாடல் சொல்கிறது. ஆளவந்தான் கதாபாத்திரத்திலும் காட்சிப்பிழை வரும். ஆனால் இரண்டுக்குமே காரணங்கள், இடம், பொருள், ஏவல் வேறு, வேறு, வேறு!!

எத்தனை தரம் திருப்பித் திருப்பி எழுதுவது. Schizophrenia என்கிற ஓர் உளவியல் குறைபாடு காரணமாக தோன்றும் இதுபோன்ற உருவமயக்கம், மாயை என்பது சாராசரி மனிதர்களின் மனக்குழப்பங்களுடன் ஒப்பிடமுடியாது தான். நடைமுறை வாழ்வில் இந்த மூன்று சொற்களிலும் உருவெளித்தோற்றம், மாயை எனப்படும் Illusion பொருந்தி வருகிறது. 

Schizophrenia, Split-Minded, கொஞ்சம் தமிழ்ப்படுத்தினால் மனப்பித்து என்று சொல்லப்படுகிறது. என்னை கேட்டால் அதை ஏன் பிளவுபட்ட மனம் என்று சொல்லக்கூடாது என்று யோசிப்பேன். இந்த "Split" என்பது உணர்வு, எண்ணம், நடத்தை என்பனவற்றின் பிளவுகளையே சுட்டி நிற்கிறது. அது Dissociative Indentity Disorder or Multiple Personality Disorder என்று தவறாக பொருள் கொள்ளக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இது என்ன என்று கொஞ்சம் பின்னோக்கி யோசித்து, உங்களுக்கு சங்கரின் தமிழ்ப்படமான "அந்நியன்" (Multiple Personality Disorer) ஞாபகத்தில் வரவேண்டும் என்பது எழுதப்படாத தமிழ் பேசும் நல்லுலகின் விதி.

இந்த உணர்வு (Sensory) , மற்றும் புரிந்துகொள்ளும் திறன் (Perception) என்கிற அறிகுறிகள் குறித்த புலன்மயக்கம் (Hallucination), மற்றும் மனக்குழப்பம், அறிவுமயக்கம் (Delusion) என்பனவற்றின் அடிப்படையில் மட்டும் எடுத்துக்காட்டி இந்த உளவியல் குறைபாட்டை விளக்க நான் முற்படவில்லை. இந்த அறிகுறிகளை மட்டுமே ஓர் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களாக சித்தரித்து உளவியல் குறைபாடுகள் குறித்து ஓர் சமூகப் பார்வை எப்படி சினிமா என்கிற ஊடகம் மூலம் உருவாக்கப்படுகிறது என்பது குறித்தே சொல்ல விளைகிறேன்.

அவ்வாறான தமிழ் சினிமா வரிசையில் எனக்கு கொஞ்சம் சிரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கிய திரைப்படங்கள் மூன்றாம்பிறை (Memory Loss-Retrograde Amnesia!!). மூன்றாம்பிறை திரைப்படத்தை ஏனோ என்னால் ரசிக்க முடிந்ததில்லை. அதை ரசிக்க என்பதை விடவும் அதனோடு ஒன்ற முடியவில்லை என்றே சொல்லலாம். மிகவும் நாடகத்தனமானது.  பாலுமகேந்திராவின் ஜூலி கணபதி நான் விரும்பிப் பார்த்த திரைப்படம்.

ஆளவந்தான் (Schizophrenia), அழகிய தமிழ்மகன் (ESP- Extrasensory Perception), அந்நியன் (Multiple Pesonality Disorder).  இந்த மூன்றும், ஆளவந்தான், அந்நியன், அழகிய தமிழ்மகன் கலப்படமே இல்லாத சுத்தமான வியாபாரப்  படங்கள்.

இதை எழுதும்போது இயல்பாய் என் மனதில் ஓர் கேள்வி எழுந்தது. ஏன்! உங்களுக்கும் கூட அது மனதில் தோன்றியிருக்கலாம். அப்படிஎன்றால் இந்த உளவியல் குறைபாடுகள் குறித்த, உனக்குப் பிடித்த திரைப்படம் எது என்று. அப்போதான் மனதில் நான் எப்பவோ பார்த்த ஆங்கிலத்திரைப்படமான A Beautiful Mind மின்னலாய் நினைவில் வெட்டியது. எனக்கு அப்பப்போ ஆளவந்தான் மற்றும் A Beautiful Mind ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் பேசப்படும் அடிப்படையான Schizophrenia குறித்து ஓர் ஆர்வம் எப்போதுமே உண்டு. அந்த ஆர்வக்கோளாறு தான் இரண்டையும் ஒப்பிட்டுப்பார்க்க வைத்தது.

மேலே சொன்ன Schizophrenia என்கிற உளவியல் குறைபாட்டின் இரண்டு துருவங்கள் என்றால் ஒன்று ஆளவந்தான் காதாபாத்திரம். அதாவது தனக்கும் தானேயும், சமூகத்திற்கும் தீங்குவிளைவிக்கும் அளவிற்கு அதன் தாக்கம் இருப்பது. மற்றது இந்த A Beautiful Mind என்கிற திரைப்பத்தில் வரும் Russel Crowe வின் John Nash என்கிற உண்மையில் வாழ்ந்துவரும் ஓர் கணித பொருளியல் மேதையான அமெரிக்கரின் உண்மைக்கதை அனுபவங்கள். இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதைப் பெற்றது மட்டுமல்ல, அந்த நிஜ உலகில் வாழும் நோபல் பரிசுபெற்ற, Schizophrenia என்கிற ஓர் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டாலும் ஒரு தனிமனிதனின் உச்சபட்ச Achievement என்னவென்று காட்டுகிறது. அந்த திரைப்படத்தில் அவரைப்பற்றிய சில குறிப்புகளை நாஷ் மறுக்கவும் செய்கிறார்.

"நாஷின் கூற்றுப்படி, எ ப்யூட்டிபுல் மைன்ட் திரைப்படத்தில், இந்தக் கால கட்டத்தில் அவர் எடிப்பிகல் ஆன்ட்டிசைகாடிக் மருந்தினை எடுத்துக் கொண்டதாக தவறாக காட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இத்திரைப்படத்தில் சித்தரித்ததற்கு வசனகர்த்தாவே காரணமெனவும் (வசனகர்த்தாவின் தாய் ஒரு மனநோய் மருத்துவர்) இதனை மனநோயாளிகள் முன் உதாரணமாகக் கொண்டு மருந்துகளை ஏற்க மறுத்து விடக்கூடாதென்பதற்காக இவ்வாறு எடுக்கப்பட்டதென்றும் விளக்கம்அளித்தார். இவ்வாறு விவரிக்கப்பட்டது நாஷ் போன்றவர்கள் ஆரோக்கியம் பெற அம்மருந்துகள் தடையாக உள்ளனவா என்ற கேள்வியை மறைத்துவிட்டதாக மற்றவர்கள் எண்ணுகின்றனர். இதற்கு நாஷ் பதிலளிக்கும் போது இம்மருந்துகள் அதிக செயலாற்றலுள்ளதாக எண்ணுவதாகவும், இதனால் ஏற்படும் அழிவான பக்க விளைவுகளுக்கு போதுமான கவனம் செலுத்தாமை மன நோயாளிகளுக்கு பாதகமாக அமையும் எனவும் தெரிவிக்கிறார்".
 
நன்றி: தமிழ் விக்கிபீடியா


ஒருவர் ஓர் நோயினால் அல்லது ஏதோவொரு உடல், உள குறைபாட்டினால் பாதிக்கப்பட்டால் உருவாகும் சமூக நிந்தனை (Social Stigma) என்னவென்று சொல்லும் விதம் தான் அது குறித்து ஓர் விழிப்புணர்வை உண்டாக்கும். குறிப்பாக சமூக, பொருளாதார, வாழ்க்கைச் சுட்டிகளின் குறைப்பாட்டுக் காரணங்களாலேயே அது குறித்த புரிதலும் குறைபாடுடையாதாகவே உள்ளது. தமிழ் சமூகத்தின் இந்த குறைபாடு பற்றி சொல்லவே வேண்டாம். முன்பைவிடவும் விழிப்புணர்வு அதிகம் என்றாலும், இன்னும் அது மேம்படவேண்டும்.


நித்தியானந்தா, சாருநிவேதிதா போன்றோரை ஏற்றுக்கொள்ளும் சமூகம் கொஞ்சம் உளவியல் குறைபாடுடையவர்களை ஒதுக்குவது தான் விந்தை.


தவிர இந்த Schizophrenia மருத்துவச்செலவிற்கும், மருந்துகளுக்கான செலவிற்கும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எத்தனை பேரால் செலவு செய்ய முடியும் என்பதும் கவலைக்குரியது. மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலும் வைத்தியர்களின் வேலை Prescription எழுதிக் கிழிப்பதோடு முடிந்துவிடும். தொடர்ந்து இவர்கள் சிகிச்சைக்கு வருகிறார்களா அல்லது மருந்துகளை ஒழுங்காய் எடுத்துக்கொள்கிறார்களா, குறிப்பிட்ட நோயின் அல்லது குறைபாட்டின் தீவிரம் என்ன என்பதெல்லாம் தொடர்ச்சியாய் கவனிக்கப்படுவதில்லை. இந்த Atypical Antipsychotic மருந்துகளும் அதன் உபயோகம், பக்கவிளைவுகள் குறித்த அறிவு பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் தெளிவாக இருக்கவேண்டும்


இது போன்ற விடயங்களை ஓர் பாரிய செய்தி கடத்தும் ஊடகமாக சினிமா சொல்லும் போது தமிழ்த்திரையுலகமும் குறைபாடுடையாதாகவே தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் இதையெல்லாம் எதிர்பார்ப்பது எனது அதிகப்படியான அபத்தமாக கூட இருக்கலாம். சரி, அப்படியே வைத்துக்கொண்டாலும், தமிழ் சினிமா எப்போதான் திருந்தும்!!! என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. மொத்தத்தில் Schizophrenia குறித்து A Beautiful MInd ஏற்படுத்திய தாக்கம் என்னுள் இன்றுவரை உண்டு. அதை ஏன் ஆளவந்தான் "நந்து" காதாபாத்திரம் ஏற்படுத்தவில்லை என்றும் யோசிக்க வைக்கிறது. ஹோலிவுட் என்றாலும் கோலிவுட் என்றாலும் சினிமா வியாபாரம் தான். ஆனால், அதிலும் ஓர் செய்தி அல்லது சமூகத்துக்கு தேவையான கருத்து எப்படி சொல்லப்படுகிறது என்பது குறித்து நோக்கினால் கோலிவுட் தோற்றுத்தான் போகிறது.
 
இருந்தாலும், தமிழ் பேசும் நல்லுலகிற்கு காட்சிப்பிழையை எடுத்துக்காட்டியது யார் என்று இனி ஏதாவது பரீட்சையில் கேள்வி கேட்டால் நான் பாரதியார், நடிகர் கமல்ஹாசன் என்று தான் பதில் எழுதுவேன்.
 

காட்சிப்பிழை பற்றிய இணையத்தேடலில் சிக்கியவை சில, 

காட்சிப்பிழைக்கு எனக்குப் பிடித்த ஓர் விளக்கம், இதோ காட்சிப்பிழைக்கு நல்லதோர் விளக்கம். 


காட்சிப்பிழை கவிதை ஒன்று, 

காட்சிப்பிழை

மேகக்கூட்டங்களைப்
புகைப்படம் எடுத்தவனின்
ஆல்பத்தில் இருந்தன
எனக்கொரு மயில்,
அவனுக்கொரு தடாகம்,
உங்களுக்கொரு ஏதோ.


சரி, சரி, காட்சிப்பிழைக்கு ஓர் பதிவு தேவையா என்று நீங்கள் யோசிக்கலாம். நானும் சீரியஸா இல்லாம, ஏதோ கொஞ்சம் இயல்பா ஒரு பதிவெழுதிவிட்டேன் என்று சந்தோசப்பட இதை சேர்த்துக்கொள்கிறேன். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்

Image Courtesy: அறியது

30 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

மனதின் அசைக்கமுடியாத நினைவுதான் காட்சிப்பிழை.நீங்கள் முந்தைய பதிவிலிட்ட கோ படப் பாடலிலும் வருவதா ஒரு நினைப்பு எனக்கு.அதுவும் காட்சிப்பிழையோ.கவிதையில அழகாச் சொல்லியிருக்கு !

ஒரு காட்சிப்பிழைக்கு இவ்வளவு பெரிய அலசல் செய்திட்டு இதை இயல்பா எழுதினதாம்...யாராச்சும் சரியாச் சொல்லுங்கோ.இது இயல்போ !

Rathi சொன்னது…

ஹேமா Darling, என்னடா என்னை யாராச்சும் இதுவரைக்கும் இந்தப் பதிவு குறித்து கலாய்க்கவில்லையே என்று நினைத்தேன். :)) வந்திட்டீங்களா.

கோ படப்பாடல், "என்னமோ ஏதோ...." பாடல்வரிகள் என்னை கவர்ந்தவை. Rap தவிர. அது தேவையே இன்றி புகுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அப்பப்போ அந்தப் பாடலை கேட்பதுண்டு. அந்தக் "காட்சிப்பிழை" பாடலில் அழகாய் காட்சிப்படுத்தப்படவில்லை. எல்லாம் வியாபாரம் தான்.

ஹேமா, சத்தியமா இது இயல்புதான். நம்புங்கோ. ஒருவேளை இது தான் என் இயல்போ என்று நினைக்க கூடாது. என் நிஜவாழ்வில் என்னிடம் seriouesness கிடையவே கிடையாது.

யாராச்சும் சரியாச்சொல்லுங்கோ என்று வேறு ஆள் சேர்க்கிறீங்க. இது நியாமில்லை. :)

காட்சிப்பிழை குறித்த தேடலில் தான் சேரலாதன் தளம் அறிமுகமாயிற்று. உங்களைப்போலவே நன்றாக கவிதை எழுதுகிறார்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

நோயின் தாக்கத்தைப் பற்றி படம் எடுப்பதற்கும், அது பற்றி மக்கள் அவ்வளவாக அறிந்திருக்காத அதிர்ச்சியூட்டும் விடயங்களை சுவாரசியமாகப் படமாக்கி காசு பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.. இதே கேள்வி தான் நடுநிசி நாய்கள் பார்த்த போது எனக்கும் எழுந்தது..

சில தினங்களுக்கு முன்பு தான் நானும் தெகாவும் 15 park avenue என்ற படம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.. மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் படத்தை உருவாக்கிய அதே டீம்..பார்க்க முடிந்தால் உங்கள் எண்ணத்தைப் பகிருங்கள்..

Rathi சொன்னது…

எல் போர்ட்... பீ சீரியஸ்.., ஒரு disease, disorder or condition பற்றி அதிர்ச்சி ஊட்டுமளவு படம் எடுக்க வேண்டுமென்பதல்ல என் வாதம். Schizophrenia குறித்த ஆளவந்தான் "நந்து" கதாபாத்திரம் மூலம் அது குறித்த மிகைப்படுத்தல் தேவையா என்பதே. A Beautiful Mind ஏதோ திகில் படம் போல் எடுக்கப்பட்டிருப்பதாக நாஷ் கூட அதிருப்தி வெளிடிருந்தாராம். ஆனாலும், அதில் Schizophrenia குறித்து ஒரு சாமானியனுக்கும் புரியும் வகையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் என்கிற கோணத்திலும் எடுக்கப்படிருந்ததே.

ஒரு நோயின் தாக்கம் பற்றி என்றால் அரசாங்கம் தான் ஆவணப்படம் எடுக்கவேண்டும்.

வியாபார நோக்கம் என்றாலும் அதிலும் ஓர் Message சொல்வாரே கமல் :) இதில் ஏன் தவறினார்??? அத்தோடு அதற்குரிய மருந்துகளுக்கு மாற்றீடாக அல்லது Coping Mechanism??? ஆக Substance Abuse பாதிக்கப்படுபவர்களால் (நந்து) கையாளப்படுவது பாரதூரமான விளைவுகளை கொண்டுவரும். இதை சொல்லத் தெரிந்தவருக்கு அது (Schizophrenia) குறித்து வேறெதுவும் சொல்லத்தெரியவில்லையா என்றும் கேள்வி எழுகிறதே. கமல் ஏன் சொல்லவில்லை என்பதல்ல என் வாதம். சொல்லியிருக்கலாமே என்கிற ஆதங்கம்.

நீங்க குறிப்பிட்ட திரைப்படம் பார்க்க முயற்சிக்கிறேன். Mr. & Mrs. Iyer கூட நான் மிகவும் ரசித்த ஓர் படம்.

உங்கள் வருகைக்கும், நல்ல கருத்துக்கும் நன்றி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

அரசாங்கம் தான் என்றில்லை.. திரைப்பட இயக்குனரும், நோயின் தாக்கம் புரியும்படியாக, நீங்கள் சொல்லுவது போல் மிகைப்படுத்தாமல் படம் எடுக்கலாம், நான் சொல்லியிருந்த படம் அப்படி எடுக்கப்பட்டது போல் தான் தோன்றியது.. அதனால் தான் பகிர்ந்தேன்..

நீங்கள் சொல்ல வந்ததைத் தான் நானும் சொல்ல வருகிறேன்.. (இல்லையென்றால் என் புரிதலில் பிழை எனக் கொள்க).. எனக்கென்னமோ இந்த மிகைப்படுத்துதலே - அதிர்ச்சி மற்றும் சுவாரசியம் ஏற்படுத்தி - அதனால் திரைப்படம் குறித்த பரபரப்பு ஏற்படுத்தத் தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.. நம் மக்களுக்கு இம்மாதிரியான நோய்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது.. அதனால் வாய் பிளந்தபடி பார்க்கிறோம் (இந்த "றோம்" க்குள் நீங்கள் உள்ளடங்கவில்லை :)) )..

என்னைக் கேட்டால்.. திரைப்படம் காணச் செல்லும் சராசரி ரசிகனுக்கு, இதுவரை அவன் அனுபவித்தோ அல்லது நேரில் கண்டோ இருக்காத ஒரு நோயை அறிமுகம் செய்யும் பொழுது - அதன் அறிகுறிகள், manifestations ஆகியவற்றை வைத்து, ட்விஸ்ட் உடனோ இல்லை அது இல்லாமலோ சுவாரசியத்தை ஏற்படுத்துவதை விட, பாதிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்தல் நன்று.. இப்படியான படங்களை வரவேற்பேன்.. Beautiful mind இன்னும் பார்க்கவில்லை.. நீங்கள் சொல்லுவதை வைத்துப் பார்க்கும் பொழுது, திகிலைக் கொண்டிருக்கும் அதே சமயம் , நோயும் யதார்த்தமாகக் கையாளப்பட்டுள்ளதாக அறிகிறேன்..

//வியாபார நோக்கம் என்றாலும் அதிலும் ஓர் Message சொல்வாரே கமல் :) இதில் ஏன் தவறினார்??? அத்தோடு அதற்குரிய மருந்துகளுக்கு மாற்றீடாக அல்லது Coping Mechanism??? ஆக Substance Abuse பாதிக்கப்படுபவர்களால் (நந்து) கையாளப்படுவது பாரதூரமான விளைவுகளை கொண்டுவரும். இதை சொல்லத் தெரிந்தவருக்கு அது (Schizophrenia) குறித்து வேறெதுவும் சொல்லத்தெரியவில்லையா என்றும் கேள்வி எழுகிறதே. கமல் ஏன் சொல்லவில்லை என்பதல்ல என் வாதம். சொல்லியிருக்கலாமே என்கிற ஆதங்கம்.//

எனக்கும் கமல் திரைப்படங்களுக்கும் நிறைய தூரம், அதனால் அவர் ஏன் சொல்லவில்லை என்று கேட்கத் தோன்றவில்லை :) நான் பொதுவாகத் தான் சாடுகிறேன்..

substance abuse பற்றிச் சொல்லுவதென்றால், அயன் திரைப்படத்தில், body packing எனும் அதனுடைய கடத்தல் முறை மற்றும் விளைவுகள் துல்லியமாக விவரிக்கப்பட்டு விறுவிறுப்பாக மசாலா கலந்து வழங்கப்பட்டன .. இது போன்ற விஷயங்களில் மசாலா பரவாயில்லை.. ஆனால், சமூகத்தில் மனநோய் குறித்த விழிப்புணர்வு முக்கியத்தேவை என்றிருக்கும் பொழுதில், நோயை ஊறுகாயாகவும் ரசிகனை உண்பவராகவும் பயன்படுத்திக் கொள்ளும் வியாபார அறிவுசீவித்தனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை..

Rathi சொன்னது…

எல் போர்ட்.. பீசீரியஸ்.., ரெண்டு பெரும் ஒரே எண்ணத்தைத் தான் பகிர்ந்துகொள்கிறோம் போலுள்ளது. ஆனால் வேறு, வேறு வார்த்தைகளில். :)

தமிழ் சமூகத்தில் மன நலக் குறைபாடுகள் இருந்தாலும் பெரும்பாலும் அது குறித்த அறிவு குறைவு என்றே தோன்றுகிறது. ஒன்று முதலில் அதை மறுதலிப்பது. அது கூட ஓர் இயல்பான படிநிலைதான், பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால், அதற்கு மருந்து சாப்பிடாமல் மந்திர, தந்திர, மாய வழிகளில் குணமாக்க முயல்வார்கள். அல்லது, பொதுவாக அதெல்லாம் திருமணம் ஆனால் சரியாய்ப் போகும் என்பார்கள். அவ்வாறு திருமணமும் செய்துவைத்து சீரழிந்த குடும்பங்கள் சில புலம் பெயர் தேசங்களில் உண்டு. அவாறான கேள்விப்பட்ட, பார்த்த கதைகள் என்னைப் பாதித்ததுண்டு.

இதையெல்லாம் உடைக்க வேண்டும் என்கிற ஓர் நப்பாசையில் ஏதோ நானும் என் பங்கிற்கு எழுதி வைக்கிறேன். :) அதற்கு கமலும் Russell Crowe வும் எனக்கு உதவுகிறார்கள் :))) உங்களுக்குப் புரியும்.

கமலின் படங்களை நானும் விமர்சனம் செய்வதுண்டு. கமல் ஆளவந்தானில் இதை சொல்லவில்லை, அதை சொல்லவில்லை என்று முற்றுமுழுதாக அவரை குறை சொல்லவும் முடியாது. அவர் சுகாதார அமைச்சர் கிடையாதே. :)) சொல்லவந்ததை இன்னும் கொஞ்சம் தெளிவாய் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

A Beautiful Mind - Russell Crowe வுடைய அந்தப் பாத்திரத்தை உணர்ந்து நடித்த நடிப்புக்காகவே பார்க்கலாம் என்பது என் கருத்து. ஒரு முறை பாருங்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பைத்தியம் குணமானால் திருமணம் நட்டுக்கும். திருமணம் நடந்தால் பைத்தியம் குணமாகும்.

பகிர்வ் ரசிக்கும்படி இருக்கிறது. பாராட்டுக்கள்.

கருணாகார்த்திகேயன் சொன்னது…

// "பார்க்க உன்னை மாதிரியே இருந்தாளா.... அ..... தா.....ன்....." என்று பின்விளைவுகளை யோசித்து அசடுவழிந்தால் அது காட்சிப்பிழையில் சேர்த்தியில்லை. அது களவாணித்தனம்!!//

ரசித்து சிரித்தேன் ..

//"நாஷின் கூற்றுப்படி, எ ப்யூட்டிபுல் மைன்ட் திரைப்படத்தில், இந்தக் கால கட்டத்தில் அவர் எடிப்பிகல் ஆன்ட்டிசைகாடிக் மருந்தினை எடுத்துக் கொண்டதாக தவறாக காட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இத்திரைப்படத்தில் சித்தரித்ததற்கு வசனகர்த்தாவே காரணமெனவும் (வசனகர்த்தாவின் தாய் ஒரு மனநோய் மருத்துவர்) இதனை மனநோயாளிகள் முன் உதாரணமாகக் கொண்டு மருந்துகளை ஏற்க மறுத்து விடக்கூடாதென்பதற்காக இவ்வாறு எடுக்கப்பட்டதென்றும் விளக்கம்அளித்தார். இவ்வாறு விவரிக்கப்பட்டது நாஷ் போன்றவர்கள் ஆரோக்கியம் பெற அம்மருந்துகள் தடையாக உள்ளனவா என்ற கேள்வியை மறைத்துவிட்டதாக மற்றவர்கள் எண்ணுகின்றனர். இதற்கு நாஷ் பதிலளிக்கும் போது இம்மருந்துகள் அதிக செயலாற்றலுள்ளதாக எண்ணுவதாகவும், இதனால் ஏற்படும் அழிவான பக்க விளைவுகளுக்கு போதுமான கவனம் செலுத்தாமை மன நோயாளிகளுக்கு பாதகமாக அமையும் எனவும் தெரிவிக்கிறார்".//

அமெரிக்காவில் இந்த மாதிரி மருந்த்க்கள் எராளம்.. எல்லாம் பணத்துக்காக மட்டுமே

//தமிழ் சினிமா வரிசையில் எனக்கு கொஞ்சம் சிரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கிய திரைப்படங்கள் மூன்றாம்பிறை (Memory Loss-Retrograde Amnesia!!). மூன்றாம்பிறை திரைப்படத்தை ஏனோ என்னால் ரசிக்க முடிந்ததில்லை. அதை ரசிக்க என்பதை விடவும் அதனோடு ஒன்ற முடியவில்லை என்றே சொல்லலாம். மிகவும் நாடகத்தனமானது.//

உங்களது கருத்தை மதிக்கிறேன் .. அதே சமயம் " நடகத்தனமானது" என்ற வர்த்தைகாக எனது எதிப்பை பதிவு செய்கிறேன் ...நல்ல பத்தி .. தொடரவும் ..

அன்புடன்

கருணா கார்த்திகேயன்

தவறு சொன்னது…

ரதி...எனக்கு எப்பொழுதாவது 6 , 9 தாகவும் 9 , 6 கவும் காட்சிதரும்.

தமிழ் சினிமா உங்களமாதிரி ரசிகர்களுக்கு படம் தயாரிக்கனும் தயாரிப்பாளர் நிறைய நிறையவே கத்துகணும்.

100 க்கு 80 பேர் தமிழகத்தை பொறுத்தவரையில் சினிமாவ அறிவா பாக்கமா உணர்வாதான் பார்கிறார்கள்.
அதனால் எந்த கருத்த சொல்லவந்தாலும் காதல்,சண்டை என்கிற உணர்வ புகுத்தி அசிங்கப்படுத்திவிடுகிறார்கள்.

காட்சி பிழை நீங்க இயல்பா எழுதி எங்கள யோசிக்க வைச்சிட்டீங்களே...

வேங்கட ஸ்ரீனிவாசன் சொன்னது…

// "பார்க்க உன்னை மாதிரியே இருந்தாளா.... அ..... தா.....ன்....." என்று பின்விளைவுகளை யோசித்து அசடுவழிந்தால் அது காட்சிப்பிழையில் சேர்த்தியில்லை. அது களவாணித்தனம்!!//
ஏறக்குறைய இது போலவே “வாழ்வே மாயம்” படத்தில் காதலி என நினைத்து வேறு ஒரு பொண்ணை (அம்பிகா என நினைவு) மணக்க சம்மதிப்பது போல் ஒரு காட்சி வரும். இதுவும் காதலை சிறப்பித்து காட்டுவதற்காக சொல்லப் பட்ட “காட்சிப் பிழை” தானா? (incidentally, இதுவும் கமல் படம் தான்).

vidivelli சொன்னது…

சகோ/நல்ல ஆய்வு...
எதுவும் என்னால் சொல்ல முடியல....
பதிவிற்கு வாழ்த்துக்கள்....

Rathi சொன்னது…

இராஜேஸ்வரி, சில வார்த்தைப் பிரயோகங்கள் கூட அது சமூகத்தில் என்ன கருத்தோடு பார்க்கப்படுகிறது என்பது குறித்தே அதன் அர்த்தம் வேறுபடுகிறது. அப்படித்தான் பைத்தியம் என்கிற வார்த்தையும் அதற்குரிய அர்த்தம், புரிதல் எல்லாமே அதன் பொருட்டு மாறுபடுகிறது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Rathi சொன்னது…

கருணாகார்த்திகேயன், உங்க மீன்குழம்பு பதிவை நானும் ரசிச்சு சிரிச்சேன். :)

அமெரிக்காவில் எல்லா மருந்துமே அப்படித்தான், பணத்துக்குக்காகத்தான் என்றால் Cure என்பது எப்படி சாத்தியம். Schizopherina விற்கு cure என்பது கிடையாது என்று தான் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அதன் தாக்கம், விளைவுகள், சில மருந்துகளின் பக்கவிளைவுகள் என்பதும் கட்டுப்படுத்த மருந்து அவசியம் தானே, இல்லையா.

அடுத்து, "நாடகத்தனமானது" என்பதற்கு உங்கள் எதிர்ப்பை பதிந்ததுக்கும் நன்றி. திரைப்படங்களை எப்படி வகைப்படுத்துகிறார்கள், Action, Drama, etc. என்றுதானே. அந்த அர்த்தத்தையும் சேர்த்தே சொன்னேன்.

Rathi சொன்னது…

தவறு, //காட்சி பிழை நீங்க இயல்பா எழுதி...// இன்னும் ஒரு முறை சத்தமா சொல்லுங்கள். ஹேமாவிற்கு கேட்கட்டும்.

நானும் இன்றுவரை பார்க்காமல் தப்பித்துக்கொண்டே இருக்கும் ஓர் திரைப்படம் Lord of the Rings. Science Fiction - Genius களுக்கு என்றார்கள். அதனால் தவிர்த்துவிட்டேன். எதுக்கு வேண்டாத வம்பு என்று :))

Rathi சொன்னது…

வேங்கட ஸ்ரீனிவாசன், இப்போ வரும் அநேகமான சினிமாக்களில் காதலை உயர்த்திக்காட்ட (காதலை மட்டுமே சொல்கிறார்கள் என்பது வேறு விடயம்) பெரும்பாலும் காட்சிப்பிழைகளே சினிமாவாய் விரிகிறது, அதுவும் Graphics இல் என்பது என் கருத்து.

வாழ்வே மாயம் திரைப்படம் அங்கொன்று, இங்கொன்றாக ஒரு சில காட்சிகள் பார்த்ததோடு சரி. அந்த திரைப்படம் நான் முழுதாய் பார்த்ததில்லை. அதனால் நீங்கள் குறிப்பிடும் காட்சி பற்றி தெரியவில்லை. அத்துடன், வாழ்வே மாயம் திரைப்படத்தில் சொல்லப்பட்டது புற்று நோய், கமல் கதாபாத்திரத்திற்கு.

என்ன!!!! காட்சிப்பிழைகள் கருத்துப்பிழைகளாய் பல சமயங்களில் திரிபுபடுகிறது. அது ஆரோக்கியமா என்று யோசிப்பதுண்டு.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Rathi சொன்னது…

விடிவெள்ளி, நன்றி என்பதை தவிர எனக்கும் வேறேதும் சொல்லத்தெரியவில்லை.

தமிழ்நதி சொன்னது…

"தமிழ் பேசும் நல்லுலகிற்கு காட்சிப்பிழையை எடுத்துக்காட்டியது யார் என்று இனி ஏதாவது பரீட்சையில் கேள்வி கேட்டால் நான் பாரதியார், நடிகர் கமல்ஹாசன் என்று தான் பதில் எழுதுவேன்."

கவிஞர் தாமரையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். காட்சிப்பிழை பற்றிய உங்கள் பதிவு நீங்கள் பயணிக்கும் வாசிப்புத் தளத்தைக் காட்டுகிறது.

Rathi சொன்னது…

தமிழ்நதி, கவிஞர் தாமரையை, அதுவும் நீங்கள் சொல்லியும் சேர்க்காமல் விடுவேனா. கவிஞர் தாமரையின் ஈழம் குறித்த ஓர் கவிதைக்கு அழுது தீர்த்தபின் அவர் கவிதைகளைப் படிக்கவே பயம் எனக்கு.

மொத்த உலகத்தையும் என் வாசிப்பில் அளக்க பேராசை எனக்கு. ஏதோ முயல்கிறேன்:)

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

வித்தியாசமான பதிவு அக்கா

அழகான அசத்தல் அலசல்,

இதுவரை காட்சிப்பிழை என்பது அதிகம் அறிந்திராதா பயன்படுத்தாத அந்நிய சொல்லாகவே இருந்தது,

உங்கள் பதிவை படித்ததும் காட்சிப்பிழை என் அருகே நெருங்கி வந்தமாதிரி ஒரு பீலிங்

Rathi சொன்னது…

"கற்றது தமிழ்" துஷ்யந்தன், நன்றி தம்பி :)

மாய உலகம் சொன்னது…

காட்சி பிழை -
மௌனத்தில் ஒளிந்துக்கொண்டிருக்கும்
வார்த்தைகள்......

Rathi சொன்னது…

மாய உலகம், இது ஹைக்கூ கவிதையா!!! நல்லா இருக்கு. நீங்க உதவி இயக்குனரா இருந்த கதையைப் படித்தேன், :))

ஹேமா சொன்னது…

http://www.youtube.com/watch?v=hzuH7OtpKiE&feature=player_embedded#at=209

JOTHIG ஜோதிஜி சொன்னது…

உங்க டார்லிங் இது போன்ற விசயங்களில் வெளுத்து வாங்குவாங்க. எல் போர்டு கூட ரொம்ப நாளைக்குப் பிறகு வந்து இருப்பாங்க போலிருக்கே?

Thekkikattan|தெகா சொன்னது…

ஹே ஹப்பா! இந்த பதிவு எப்போ எழுதீனிங்க. ஒத்த வார்த்தைய பிடிச்சு அப்படியே ஒரு ரவுண்ட் கட்டி அடிச்சிருக்கீங்க. கொஞ்சம் கஷ்டம்தான், இந்த மண்டைகளை கட்டி மேய்க்கிறது :)). ரொம்ப அவசியமான வார்த்தைகளுக்கு தமிழில் உடைத்து உடைத்து பொருள் கொடுத்து மன நோய் சம்பந்தமான விசயங்களை கூறு கட்டி வைச்சிருக்கீங்க பதிவில. ஐ லைக் தட்!

இதுதான் உங்க இயல்பான சிந்தனையேவா? கொஞ்சம் பயமாத்தான் இருக்கு, பழக :))...

சரி எல்போர்ட் சொன்ன மாதிரி அவசியம் ’15 பார்க் அவென்யூ’ பார்த்திடுங்க. நானும் த ப்யூட்டிஃபுல் மைண்ட் பார்த்திருக்கேன்... நீங்க சொன்ன எஃபெக்ட் கிடைச்சிது. கமல் படத்தில கொஞ்சம் நேரடியா சொல்லாம நம்மூர் மக்களுக்காக டைலூட் பண்ணி சொல்ல வந்ததை சொதப்பி இருப்பார், கமலூஊ.

இருங் நான் ‘காட்சிப்பிழை’ வார்த்தையை வைச்சு பேசின இந்தப் பதிவு குறும்படம் - தருமியின் காட்சிப் பிழை : What is that

ஆளவந்தான் படக் கான்செப்டை பத்தி பேசின இந்த பதிவு *ஆளவந்தான், கமல்----பரிணாமம்* பாருங்களேன்.

Thekkikattan|தெகா சொன்னது…

கொஞ்சம் பெருசா போயிருச்சு பின்னூட்டம். ஆமா, இந்த மாதிரி பதிவெல்லாம் கூகுள் பஸ்லயும் பகிர்ந்துகிட்டா அப்பப்போ வாசிக்க எல்லாருக்கும் ஒரு வாய்ப்பா இருக்குமில்ல. எல்போர்ட் நீங்களாவது பஸ்ல பகிர்ந்துருக்கலாம்.

ரதி, நீங்க பஸ்ல இருக்கீங்களா? thekkikattan at gmail dot comக்கு ஒரு மெயில் செய்யுங்க சொல்லுறேன்.

மாய உலகம் சொன்னது…

Rathi சொன்னது…
//மாய உலகம், இது ஹைக்கூ கவிதையா!!! நல்லா இருக்கு. நீங்க உதவி இயக்குனரா இருந்த கதையைப் படித்தேன், :))//

ஆஹா தெரிஞ்சுபோச்சா சிரிக்கறதுக்கு முன்னால ....எஸ்கேப் ஆகிடுவோம்

மாய உலகம் சொன்னது…

//http://www.youtube.com/watch?v=hzuH7OtpKiE&feature=player_embedded#at=209//


காட்சி பிழை குறும்படம் பார்த்தேன்... திரு.சேரலாதனின் காட்சி பிழை கவிதை ஒத்துப்போகிறது...இங்குள்ள மக்களுக்கு வேடிக்கை என்றால்... அங்குள்ளவர்களுக்கு ஒவ்வொரு நினைவுகளும் மருந்தில்லாத நோயாய் அவஸ்தை...

Rathi சொன்னது…

மாய உலகம், நீங்கள் அனுப்பிய காணொளி பார்க்கவில்லை. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

கார்த்திக் (Karthick) சொன்னது…

சிறப்பு.. சிறப்பு..!!!