ஜூலை 26, 2011

ஒழுக்காற்று விழுமியங்களும் Mid-Life Crisis ம்

அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தேறும். எனக்கு அதை விமர்சித்து எழுத தெரியாத ஓர் குறைபாட்டினால் அதிகம் அது பற்றி எழுதுவதில்லை. நான் கடந்து சென்ற அல்லது என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அவர் தம் இயல்புகளோடு, சில நிகழ்வுகள் மூலம் எதையாவது மனதில் பதியவைத்து விட்டுப் போவார்கள். வெறும் பார்வையாளன் என்கிற பிரக்ஞையோடு கடந்து வந்த நிகழ்வுகளும் உண்டு.

ஏதாவது ஓர் பொது இடத்தில் மனிதர்களை அவர்களின் இயல்புகளை ஏதோவொரு விடயத்தில் கவனத்தால் ஈர்க்கப்பட்டு பார்த்தால் இங்கே உள்ளவர்கள் பெரும்பாலும் கோபத்தோடு சொல்வார்கள், "OK folks! the show is over" என்று. இது நாகரீகம் இல்லாத ஓர் செயல் சென்று நானும் இது போன்ற கவனத்தை கலைக்கும் விடயங்களை பார்த்தாலும், கேட்டாலும் தவிர்த்துவிடுவதுண்டு. விலகியும் விடுவதுண்டு. 

இதையும் மீறி ஓர் சில சம்பவங்கள் என் கண் முன்னே நடக்கும் போது சிரித்துக்கொண்டே பார்த்ததும் உண்டு. அப்படி நான் பார்த்து கொஞ்சம் சங்கடப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. அவைகளில் இரண்டு பதின்பருவத்தினரின் வெள்ளந்தியானதும், வில்லங்கம் நிறைந்த சில செயல்கள் மற்றும் நடுத்தர வயதினரின் Mid-life Crisis.

கட்டற்ற சுதந்திரம் எல்லா நேரமும் நாம் எதிர்பார்க்கும் நல்ல விளைவுகளை கொண்டுவருவதில்லை. அதே நேரம் மிகவும் கட்டுப்பாடாய் மதம், கலாச்சாரம் என்கிற தீவிர கட்டுப்பாடுகளும் தீமையை விளைவிக்காமல் இருந்ததில்லை. எந்த விதத்தில் சிந்தித்தாலும் எல்லாமே தனிமனித சுதந்திரம், தனிமனித ஒழுக்கம் சார்ந்தே எடுத்தியம்பப்படுகிறது. சுதந்திரமோ, கட்டுப்பாடோ அவரரவர்கள் தங்களுக்குரிய எல்லைகளை நிர்ணயித்துக்கொண்டால், தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் அதுவே ஆரோக்கியம்.

இங்கே பெரும்பாலும் பொது இடத்தில் ஆணும், பெண்ணும்  கட்டியணைப்பதோ, முத்தமிட்டுக்கொள்வதோ ஒன்றும் நாகரீகமற்ற செயல் அல்ல. அது அவர்கள் வாழும் சூழல், அவர்களின் கலாச்சாரம் என்பதைப் பொறுத்தது. பெரும்பாலும் இவ்வாறு கலாச்சார ஒழுக்காற்று விழுமியங்களைப் பற்றி என்னை இங்கே சிந்திக்க வைப்பவர்கள் பதின்பருவத்தினரே. இளையவர்கள் மட்டுமல்ல வயது வந்தவர்கள் கூட எல்லை மீறாமல் பொது இடத்தில் பிரிவின் நிமித்தமோ அல்லது அன்பை வெளிப்படுத்தவோ இவ்வாறு முத்தமிடுவதுண்டு. ஆனாலும், இளையவர்கள் என்பதால் கொஞ்சம் யோசிக்கவே வைக்கிறார்கள்.

கலாச்சாரம் குறித்ததல்ல என் கவலை. வயதின் வேகம் இவர்களை எந்த பாதாளத்தில் தள்ளிவிடுமோ என்பது தான் காரணம். முத்தக்காட்டில் பற்றிக்கொள்ளும் மோகத்தீயும், அவர்களுக்கு கிடைக்கும் அல்லது அவர்கள் தேடிப்போகும் தனிமையும் எதுவரை அவர்களை இட்டுச்செல்லும் என்றும் பயம் காட்டுவார்கள்.  
முத்தமிடுவதில் தொடங்கி மது, சிகரெட், போதைப் பழக்கம் என்று தங்கள் எதிர்காலத்தை தாங்களே சீரழிக்கும் மூடத்தனம் என்று யோசித்தால் தற்கால சினிமா, சமூக, பொருளாதார ஏற்பாடுகள், கட்டமைப்பு குறித்தே குற்றம் சொல்லும் ஒரு நிலைக்கும் தள்ளவும் படுகிறோம். காதல் தோல்வி என்றால் நண்பர்களோடு உட்கார்ந்து குடித்து தொலைப்பதே அதற்கான தீர்வு என்று சினிமா வேறு கற்றுக்கொடுக்கிறது. இனிமேல் இந்த உலகம் எமக்காய் மாறப்போவதில்லை. இந்த சீர்கேடுகளிளிருந்து எங்களை எப்படி தற்காத்துக்கொள்வது என்பது எங்கள் பொறுப்பு. தீர்வு அவரவர் கைகளிலேயே உள்ளது. நாம் விரும்பும் மாற்றம் என்பது எங்களிடமிருந்து, அதாவது தனி மனிதனிடமிருந்து தொடங்க வேண்டும்.

எப்படியாயினும், இது குறித்த எந்த தாக்கங்களும் பெற்றோருடன் வாழும் வரையில் தெரிவதில்லை. வாழ்க்கை நிறையவே ஜாலியாய்ப் போகும். எந்தப் பொறுப்பும் கிடையாது. வீடு, சாப்பாடு, ஆதரிக்க உறவுகள், அரட்டையடிக்க, படிக்க என்று நட்புகள், சின்ன சின்னதாய் குறும்புகள், கபடமிலாக் காதல் இப்படி வாழ்க்கை அதன் இயல்பில் தான் நகரும். படித்து முழுவதுமாகவோ அல்லது அரைகுறையாகவோ முடித்து, அடித்துப் பிடித்து போட்டிகள் நிறைந்த வேலைச் சந்தையில் ஓர் வேலையும் கிடைத்தாயிற்று. வாழ்க்கையின் அடுத்த கட்டம் திருமணம்.

திருமணம் செய்து நடுத்தர வயதை எட்டியபின் வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை அசைபோடுவார்கள். அப்போது எதை சாத்தித்திருக்கிறோம், எதை
கோட்டை விட்டிருக்கிறோம் என்றெல்லாம் தீவிரமாய் பரிசீலனை செய்பவர்களும் உண்டு. இந்தக் காலகட்டத்தில் சிலருக்கு மறுபடியும் இளமை திரும்பும். இதில் ஆண், பெண் என்கிற வேறுபாடுகள் கிடையாது.


வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்துகொண்டவர்கள் பெரும்பாலும் தங்கள் முதல் காதல், முதல் முத்தம், Autograph Momories, தாங்கள் செய்த குறும்புகள் என்று இளமைக்கால பழைய நினைவுகளில் மூழ்கிப்போவார்கள். வாழ்க்கையை சமப்படுத்தக் கற்றுக்கொள்வார்கள். இன்னும் சிலரோ வயதுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல் அபத்தக் களஞ்சியங்களாக மாறிப்போவார்கள். சிலரின் வாழ்க்கையில் விதி தனது கைவரிசையை காட்டியிருந்தால் துரதிஸ்டவசமாக வாழ்க்கை துணையினை இழந்திருப்பார்கள். இந்நாளில் கொஞ்சம் அதிகரித்து வருவது விவாகரத்து, வேலையிழப்பு, கணவனோ, மனைவியோ ஒருவருக்கு மற்றவர் உணமையாக இல்லாதிருப்பது. இது போன்ற பிரச்சனைகள் தான் Mid-life Crisis, மனிதவாழ்வின் நடுப்பகுதியில் வரும் நெருக்கடி என்று சொல்லப்படுகிறது.

கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம், வாழ்க்கை சூழல் போன்றனவே இது போன்ற Mid-life Crisis என்கிற குழப்பமான விடயங்களை ஒருவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை தீர்மானிக்கும். நம் தமிழ் கலாச்சாரத்தில் எம்மவர்கள் எந்தப் பிரச்சனையையும் நடுத்தர வயதில் அனுபவ அடிப்படையில் சமாளிப்பார்கள். அவர்கள் அதிகம் சிக்கித்தவிப்பது இன்னோர் திருமணம், காதல் என்கிற ஓர் சூழ்நிலை வரும்போது தான். பருவத்தில் வரும் காதலுக்கு சமூக நிர்ப்பந்தம், குடும்ப சூழ்நிலை என்பன குறுக்கே வரலாம். இந்த நடுத்தர வயதுக் காதலுக்கு காதலிப்பவர்களே தங்களுக்கு தாங்களே தடையாய் இருப்பார்கள். இந்த வயதில் காதல், திருமணம் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட முடிவாய்த்தான் இருக்கவேண்டும். இருந்தும், சமூக விழுமியங்களின் விழுதுகளை பிடித்துக்கொண்டு தொங்குபவர்களுக்கு அது சாத்தியமாகாமலும் போகலாம். அது அவர்கள் தவறும் அல்ல. காலங்காலமாய் நம்பிய, கடைப்பிடித்த ஓர் பழக்கத்தை எளிதில் முறித்துக் கொண்டோ அல்லது தாண்டியோ வர முடிவதில்லை. அது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் கைகூடுவதுமில்லை.

அதுவும் இல்லையா குழந்தைகள் இருந்தால் அது குறித்தும் அதிகம் யோசிப்பார்கள். தனது தேர்வான புதியதோர் வாழ்க்கை துணை தன குழந்தைகளை எப்படி நடத்துவார்கள் என்பது தான். அதுவும் இல்லையா இந்த சமூகம் தன்னை பழிக்குமோ, ஒதுக்குமோ என்றெல்லாம் யோசிப்பார்கள். ஒரு திருமணம் பொய்த்துப் போனால், மறுமணம் என்பது ஒரு சிலருக்கு சமூக நிந்தனை ஆக கூட இருக்கலாம். இருந்தாலும் வாழ்க்கையின் நடுப்பகுதி குழப்பங்களுக்கு அதிகம் ஆளாகி தப்புத்தண்டா பண்ணுபவர்கள் ஆண்கள் என்று தான் சொல்கிறார்கள்.

இந்த நடுத்தர வயது குழப்பமான காதலை கொஞ்சம் மெதுவாய் தொட்டு சொல்லியிருக்கிறது  வேட்டையாடு விளையாடு திரைப்படம். மனைவியை இழந்த ஆண், கணவனை விவாகரத்து செய்த பெண் இருவருக்குமிடையே உருவாகும் காதல் என்னும் நெருக்கம். இதையெல்லாம் தனிக்கதையாய் சொல்லப்போனால் நிறையவே அடுக்கடுக்கான காரணங்களை சமூகத்தை சமாளிக்க சொல்லவேண்டும். இப்படி ஓர் கிளைக்கதையாய் சொல்லும் போதில்  அதுகுறித்த தேவையற்ற கேள்விகளும், விதண்டாவாதங்களும் தவிர்க்கப்படுவது போல் தெரிகிறது.

Mid-life Crisis # 1 இங்கே வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் "வெண்ணிலவே, வெள்ளி, வெள்ளி நிலாவே..." பாடலை இணைக்க நினைத்தேன். ஏனோ முடியவில்லை. அது Mid-life Crisis இன் தெளிவில்லாத மனக்குழப்பங்கள் நிறைந்த ஆரம்பக்கட்டங்களை விளக்குவதாய் தோன்றியது.

Mid-life Crisis # 2
.
எல்லாநேரமும், எல்லோருக்கும் Mid-life Crisis அழகான உணர்வுகளோடும், haapy-ending உடனும் இருப்பதில்லை. சிலர் பிறர் மனையை நோக்க வேண்டியது! பிறகு, பாடலில் வரும் "கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேன்" என்கிற வரிகளை மனதில் வைத்துக்கொண்டு சந்தோசமாக இருக்கும் குடும்பத்தை உதறிவிட்டு இன்னோர் பெண்ணிடம் அல்லது ஆணிடம் அதை சொல்லி காமெடி பீஸ் ஆகவேண்டியது.

பிறர்மனை நோக்க இப்போதெல்லாம் Social Media கூட வசதியாய் அமைந்துவிடுகிறது போலும். திருவள்ளுவர் இப்போது இருந்திருந்தால் இது பற்றி என்ன சொல்லியிருப்பார்!!! திருவள்ளுவர் என்ன சொல்லியிருப்பார் என்பதல்ல இங்கே குழப்பம். திருவள்ளுவர் ஏதாவது சொல்லியிருந்தாலும் அவரை பதிவெழுதி விளாசி இருப்போம் என்பது தான் வேடிக்கை. 

Mid-life Crisis எல்லா நேரமும் காமெடியாக இருப்பதில்லை. அதுக்கு சிறந்த உதாரணம் "பச்சைக்கிளி முத்துச்சரம்" என்கிற திரைப்படம். குடும்பம் என்றால் கருத்து வேறுபாடுகள், தவிர்க்க முடியாத பிரச்சனைகள் வருவது தவிர்க்க முடியாதது. இருந்தும் அதிலிருந்து தப்பிக்க தற்காலிகமாய் என்று இன்னோர் துணையைத் தேடுவது பெரும்பாலும் ஒருவர் தனது தலையில் தானே மண் அள்ளிப்போடுவதற்கு சமம்.

திருமணம், குடும்பம், குழந்தைகள் என்பன "life time commitment" என்று சொல்வார்கள். இந்தப் பொறுப்பிலிருந்து யார் வழுவினாலும் பெரும்பாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். திருமணம், குடும்பம் என்கிற பொறுப்புகளை சுமக்க விரும்பாதர்வகள் அதிலிருந்து விலகியிருப்பதே மேல். இதுபோன்ற பொறுப்புகளை ஏற்க விரும்பாதவர்களுக்கு இப்போ அமேரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் புதிதாய் ஓர் கருத்துருவாக்கம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் பெயர், "Friends with Benefits". இதன் அர்த்தம் திருமணம், குடும்பம் என்கிற பொறுப்புகள் இல்லாமல் வெறும் உடற்கூற்றின் சந்தோசங்களுக்காக மட்டும் நட்பாய் இருப்பது. தமிழ் சமூகத்துக்கு இந்த தேவை இதுவரை ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. இனிமேலும் அப்படியே இருக்குமா சொல்லவும் தெரியவில்லை.

என்னமோ போங்கப்பா!!

I can't thank Google enough for those two hilarious images :)))

40 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

தர்க்கவிக்க நிறைய இடமிருக்கோங்க இந்தப் பதிவில. தயாரா இருங்க விடிய விடிய கருத்துரையாடல் செய்வோம் ... :)

Thekkikattan|தெகா சொன்னது…

//வயதின் வேகம் இவர்களை எந்த பாதாளத்தில் தள்ளிவிடுமோ என்பது தான் காரணம். முத்தக்காட்டில் பற்றிக்கொள்ளும் மோகத்தீயும், அவர்களுக்கு கிடைக்கும் அல்லது அவர்கள் தேடிப்போகும் தனிமையும் எதுவரை அவர்களை இட்டுச்செல்லும் என்றும் பயம் காட்டுவார்கள்.//

நீங்க கனடியன்/அமெரிக்கன் பிள்ளைகளை பத்தி பேசுறீங்களா இல்ல நம்முடைய சமூகத்தின் பின்னணியில் வளர்க்கப்படுகிற குழந்தைகளை சொல்லுறீங்களா (அதிலும் மேற்கத்திய பின்னணியில் வளரும் நம்மூர் பிள்ளைகளையும் தவிர்த்து விடலாம்)? ஏனெனில், இங்கு அடிப்படையில் அமைந்த கலாச்சார நிமித்தமே பசங்களுக்கு தங்களுடைய ஜோடியை தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய அமைப்பு.

அந்த நிலையில் அவர்களும் சிறிதே சில எக்ஸ்ட்ரீம்களை சந்தித்தே தீர வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த நிலையில் டீன் பருவத்தில் குழந்தை பெற்றுக்கிற அளவில் சென்று விட்டால் வாழ்க்கை முடிந்தது என்ற மட்டில் சொல்லியே வளர்க்கப்படுகிறார்கள். எனவே, அந்த பயம் இருக்கும். அந்த அளவிற்கு சென்று விடாமல் ஷேஃப் கேம் விளையாடுபவர்கள் தப்பி பிழைத்து கற்றறிந்தவர்களாக(?!) கல்லூரி செல்லும் அளவிற்கு பொறுமை காக்கிறார்கள். இருந்தாலும் எல்லா வயதிலும் தேவையான வாழ்க்கை பாடம் கிடைத்து கொண்டே இருக்கிறது.

இருப்பினும் இந்த அடிப்படை பயம்தானே ஆண்/பெண் நட்பு நம் சமூகத்தில் மலர விடாமலேயே வெகு தொலைவில் நிறுத்தி பொது இடங்களில் வீங்கி வெடிக்க வைக்கும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது (பஸ்களிலிருந்து கோவில்கள் வரைக்கும் கூட) ...

Thekkikattan|தெகா சொன்னது…

// இந்த நடுத்தர வயதுக் காதலுக்கு காதலிப்பவர்களே தங்களுக்கு தாங்களே தடையாய் இருப்பார்கள். இந்த வயதில் காதல், திருமணம் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட முடிவாய்த்தான் இருக்கவேண்டும்.//

ஏன் இருக்கணுங்கிறேன்...

//அது அவர்கள் தவறும் அல்ல. காலங்காலமாய் நம்பிய, கடைப்பிடித்த ஓர் பழக்கத்தை எளிதில் முறித்துக் கொண்டோ அல்லது தாண்டியோ வர முடிவதில்லை. அது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் கைகூடுவதுமில்லை.//

இப்படி வெளங்காம அந்த வயசிலும் இருந்தால் அப்பிடியே யாருக்காகவோ வாழ்ந்து முடிச்சிக்கட்டும். தான் சார்ந்த சமூகத்திற்காக, மரபிற்காக வாழ்ந்து முடித்த தியாகச் செம்மல்னு நடு வீதியில காகம் உட்கார ஒரு சிலை வைச்சு அது மண்டையில கக்கா போயி வைக்கவாவது உதவலாம். :))

என்னய பொருத்த மட்டில் 45 வயசெல்லாம் எட்டி இருக்கும் பட்சத்தில ஒரளவிற்கு மனுசங்களை, உறவுகளை பொருத்து ஒரு தெளிவான முடிவிற்கு வந்திருக்கணும். வாழ்வோ/தாழ்வோ அனைத்தும் நம்மை பொருத்ததே! மத்தியானம் சாப்பாடு நான் சாப்பிடுகிறேனா இல்லையா என்பது எங்கோ இருக்கும் சம்பந்தமில்லாத என் பெரியப்பாவிற்கோ/ மாமாவிற்கோ அக்கறை இருக்க வேண்டியதில்லை என்பது தினப்படி வாழ்க்கையில் எவ்வளவு உண்மையோ அது போலவே எனது வாழ்க்கை பொருத்தான முடிவுகளிலும் அக்கறை இருக்க முடியும் என்று எப்படி எனக்கு நானே ஹல்வா கொடுத்துக்கொள்ள முடியும்? :)

Thekkikattan|தெகா சொன்னது…

//இருந்தும் அதிலிருந்து தப்பிக்க தற்காலிகமாய் என்று இன்னோர் துணையைத் தேடுவது பெரும்பாலும் ஒருவர் தனது தலையில் தானே மண் அள்ளிப்போடுவதற்கு சமம்.//

இதச் சொல்லுங்க. ஒத்துக்கிறேன். இருந்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கு. அந்த தனி மனுசன் சில இழப்புகளின் மூலமா ஏதோ தெரிஞ்சிப்பார் அவருக்கே தேவையான பாடத்தை. Of course, along with him immediate fellow family members suffer too...

உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் - உண்மையின் விலை - கமல்ஹாசன்? கமலின் சூழ்நிலையின் பின்னணியை பயன்படுத்துவதற்காக மட்டுமே அவரின் பெயரை பயன்படுத்தியிருக்கிறேன். மற்றபடி விசயம் பேசுவது நீங்க குறிப்பிட்ட mid life crisis :))... if you have not read that essay before read it fully including the comments you might like it.

Rathi சொன்னது…

தெகா, நான் இங்கே என் கண்முன்னே காணும் கனேடிய சமூகத்தில் வாழ்பவர்களைத்தான் சொல்கிறேன். இங்கே அவர்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பாடம் கிடைத்துக்கொண்டே தான் இருக்கு. Have safe sex என்று தான் இங்கே கற்றுக்கொடுக்கிறார்கள். அது கூடவே கூடாது என்று சொல்வதில்லை. அப்படி சொன்னாலும் இவர்கள் கேட்கப்போவது கிடையாது. அதுக்குரிய காரணங்கள் நிறையவே இருக்கு. இருந்தும் teen pregnancy குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் இருக்கத்தானே செய்கிறது. அது வயதின் வேகம் தானே!!

நம் சமூகத்தில் எதையும் சமூக நிந்தனையோடு பொருத்திப்பார்த்தே பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட சமூக, பொருளாதார கட்டமைப்பு இருக்கு. இங்கே அப்படி நடந்தாலும் அரசு நிறையவே உதவுமளவிற்கு திட்டங்கள் உண்டு. ஒருவேளை அதுபோன்றதோர் அமைப்பு உருவானால் நம் சமூகத்தில் ஆண், பெண் நட்பு கூட கணிசமான அளவில் அனுமதிக்கப்படுமோ!! வெறுமனே சமூகப் பார்வையை மாற்றுவதால் மட்டும் ஆண், பெண் நட்பு சுலபமாகி விடாது. நிறைய மாற்றங்கள் அரசியல், பொருளாதார கொள்கை அளவிலும் உருவானால் தான் அது சாத்தியம்.

Rathi சொன்னது…

/இந்த நடுத்தர வயதுக் காதலுக்கு காதலிப்பவர்களே தங்களுக்கு தாங்களே தடையாய் இருப்பார்கள். இந்த வயதில் காதல், திருமணம் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட முடிவாய்த்தான் இருக்கவேண்டும்.//

ஏன் இருக்கணுங்கிறேன்...//

தெகா, நீங்க நினைக்கிறத தான் நானும் நினைச்சேன். தங்கள் வாழ்க்கை பற்றிய முடிவை அவர்களே எடுக்க வேண்டுமென்று சொன்னேன். சமூக நிர்ப்பந்தம், குடும்ப உறவுகளின் நிர்ப்பந்தன் என்பதெல்லாம் கடந்து வரவேண்டிய வயது என்று சொன்னேன்.

Thekkikattan|தெகா சொன்னது…

hmmm keep it going :)... I am listening

Rathi சொன்னது…

தெகா, தற்காலத்தில் பெண்களால் அவ்வளவு சுலபமாய் சில சமூக விழுமியங்களை கட்டுடைத்து வெளியே வரமுடிவதில்லை. ஒருவேளை அடுத்த தலைமுறையில் வேண்டுமானால் அது சாத்தியப்படலாம்.

அது சரி, நான் மட்டும்... அதென்னவோ சொல்லுவாங்களே ஆள்ளிலாத கடையில டீ ஆத்துறது போல.... எங்க லேடீசுக்கு என்னாச்சு. mid-life crisis என்கிற பெயரில் ஆண்கள் அடிக்கும் கூத்தை ஒரு பிடி பிடிப்பார்கள் என்று காத்திருக்கிறேன் :)))

தவறு சொன்னது…

ரதி..இங்குள்ள இளைய சமுதாயத்தில் தாக்கத்தை உண்டுபண்ணுவது முக்கியம் சினிமா தாங்க...சினிமா பட காதல் தான் அதிகம்.

இரண்டு நாள் காதலித்து மூன்றாம் நாள் உறவு கொள்வது என்று அவ்ளோ வேகமுங்க...

இருக்குதோ.. இல்லையோ...தன்னை ஹீரோவாவும்...ஹீரோயினாவும் வெளிகாட்டி வரும் சமுதாயம் தாங்க இப்பொழுது உள்ள இளையசமுதாயம்.

நடுத்தர வயது மாற்றங்கள் இச்சமுதாயத்தில் மாறுதல் என்பது அவ்வளவு சுலபமாக இல்லை. ஏனென்றால் அதை நிர்மாணிப்பது பொருளாதார இடர்பாடுகள்.

நிறைய கஷ்டங்களுக்கு உட்பட்டதே நடுவயது மாறுதல்...

தானாக முடிவெடுத்தாலும் ஓர் குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் கடுமையான சமுதாய நெருக்கடிக்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது ரதி.

நல்ல அலசல்.....வரவேண்டியவர்கள் வரட்டும்...

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

இந்த மனைவியைக்கொன்னாங்க , கணவனைக் கொன்னாங்கன்னு அடிக்கடி வருதே.. அதும் படிச்ச , பெரிய வேலையில் இருக்கவங்க தான் இதை செய்யராங்களாம்.. கொன்னு டப்பால வச்சி வீட்டுலயே வச்சிக்கிறாங்க..இல்லன்னா பெட்டில கட்டி எங்க போடறதுன்னு அல்லாடராங்க..

ஊரு என்ன சொல்லும்ன்னு இல்லாம பிரிஞ்சு போயோ அல்லது நீங்க சொல்ற அந்த பெனிபிட் ப்ரண்ட்ஷிப் வச்சிக்கிட்டு மண்ணாப்போனாங்கன்னாலோ பாவம் ஒரு உயிர் மிச்சமாகுங்க ஒரு குடும்பத்துக்கு..:(

Rathi சொன்னது…

தவறு, நான் சொல்லவந்ததை நீங்க சரியா புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மேலைத்தேயங்களில் சினிமாவுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் பெரும்பாலும் வேறுபாடுகள் குறைவு. சில திரைப்படங்களைத் தவிர. தமிழ் சினிமா நிறையத் திருந்த வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

தெகா, தவறு சொன்னதை கவனிச்சீங்களா.

Rathi சொன்னது…

முத்துலெட்சுமி, பெண்களை துன்புறுத்துவதில் படிச்சவங்க, படிக்காதவங்க என்கிற வேறுபாடெல்லாம் கிடையவே கிடையாது.

என்ன, மேல்தட்டு வாழ்க்கையில் அவர்கள் அதை விடுத்து வெளியே வருவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதால் அது வெளியே தெரிவதில்லை. திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகளை சுமக்க மறுப்பவர்கள் பேசாமல் மேலைத்தேச வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக் கொள்ளலாம் தான். அதிலும் ஓர் சிக்கல் இவர்களுக்கு. சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் கலாச்சாரம் தழுவிய போலி மரியாதையை இவர்கள் இழக்க விரும்புவதில்லை. தமிழ் சமூகத்தில் சட்டம் வழங்கும் நீதியை விட மதமும், கலாச்சாரமும் வழங்கும் நீதியே அதிகம் நம்பப்படுகிறது.

ஐயோ பாத்தீங்களா!! நான் கண்டபடி யோசிக்கத்தொடங்கி விட்டேன் :)))

Thekkikattan|தெகா சொன்னது…

திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகளை சுமக்க மறுப்பவர்கள் பேசாமல் மேலைத்தேச வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக் கொள்ளலாம் தான். //

ரதி, அப்படின்னா மேலைத்தேச நாடுகளில் வாழ்பவர்கள் குடும்பம், குட்டின்னு வாழவில்லைன்னு எடுத்துக்கிறதா? நம்மை விட இங்கு சற்றே அதிக பொறுப்புடன் குழந்தைகளை இரண்டு பெற்றோர்களின் கண்கானிப்பில் வளர்த்தெடுக்கிறார்கள் என்றே அவதானித்து வைத்திருக்கிறேன்.

உ.தா: நம்மூரில் வெட்டிக்கொண்டு சென்று விட்டால் குழந்தை யார் ஒருவரிடத்திலாவது மட்டுமே ஒட்டி கொண்டு இருப்பது போல ஒரு சூழ்நிலையை நிறைய நெகடிவ்வான விசயங்கள் இன்னொரு பெற்றேரின் மீது சுமத்தி, மனத்தில் நஞ்சை ஊட்டி வளர்க்கிறார்கள்.

மேலும் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு இன்னொரு பெற்றோரை பார்க்கவே விடாத ஒரு சூழ்நிலையையும் உருவாக்கி கொள்கிறார்கள்தானே!

இரண்டாவது எத்தனை பேர் குழந்தை வளர்ப்பில் சமமான பங்களிப்பை செய்ய முன் வருகிறார்கள்? அதுவும் மகப்பேறு காலத்திலிருந்தே... சொல்லுங்க.

Rathi சொன்னது…

தெகா, மறுபடியும் misunderstanding....

நான் யார் சிறந்த பெற்றோர்கள் என்கிற விவாதத்துக்கே போகவில்லையே. இங்கே தங்கள் சுதந்திரம் தான் முக்கியம் என்று நினைப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். இருந்தாலும் சமூக, கலாச்சார அமைப்பும் அதுக்கு வசதியாய் இருக்கு. இங்கே எந்தப் பெற்றோரையும் வெட்டி விடுவதில்லை. அதுக்குரிய காரணம் அரசாலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் எத்தனை இழுபறி. எந்தவொரு பெற்றோரும் பொறுப்புகளில் இருந்து விலக கூடாது, அரசுக்கு பாரமாய் இருக்க கூடாது என்கிற கொள்கை.

நீங்கள் கார் ஓடும் போது ஏன் பாதுகாப்பு பட்டியை அணிய வேண்டும், குடித்துவிட்டு வண்டி ஓடக்கூடாது என்று சட்டம் போடுகிறார்கள். உங்கள் உயிர் மீது அரசுக்கு என்ன அவ்வளவு அக்கறையா! விபத்துக்குள்ளாகி அரசுக்கு செலவு வைக்க கூடாது, அதனால் தான். செலவு என்றால் விபத்துக்குள்ளாகும் ஒருவர் Health Care cost முதல் வாழ்முழுக்க Wheelchair bound என்றால் இங்கே அவர்களை அரசு தான் ஆயுள் பூராவும் பராமரிக்க வேண்டும் என்பது வரை. அது தான் குடும்பம் என்கிற அமைப்புக்கும் பொருந்தும். Best country to live.. என்கிற சுட்டிகளில் இவையும் உள்ளடக்கம். அதுக்குத்தான் இந்த அக்கப்போர்.

எல்லா சமூகத்திலும் குறைபாடுகள் உண்டு. இங்கே நான் சொன்னது பொறுப்புகளை சுமக்க விரும்பாமல் சுதந்திரமாய் இருக்க விரும்பினால் மேலைத்தேசத்தில் இருக்கும் "ஒரு சாராரைப் போல" வாழ வேண்டியது என்பது தான்.

Thekkikattan|தெகா சொன்னது…

எல்லா சமூகத்திலும் குறைபாடுகள் உண்டு. இங்கே நான் சொன்னது பொறுப்புகளை சுமக்க விரும்பாமல் சுதந்திரமாய் இருக்க விரும்பினால் மேலைத்தேசத்தில் இருக்கும் "ஒரு சாராரைப் போல" வாழ வேண்டியது என்பது தான்..//

:)) அது அது வந்து... ஹிஹிஹி நான் பின்னூட்டத்தை அடிக்க ஆரம்பிச்சு பாதி போனதிற்கு மேலே நீங்க அதை வைச்சுதான் சொல்லியிருக்கீங்கன்னு வெளங்கினிச்சு எனக்கு. சரி என்னாத்திற்கு கருத்தை குப்பைத் தொட்டியில போட்டுகிட்டுன்னு போட்டுவிட்டுட்டேன். இருந்தாலும், அதுவும் நம்ம மக்களுக்கு ஞாபக படுத்த வேண்டிய விசயம்தானே.

நீங்க கூலா இருங்க. எந்த சமூகம் 100% perfect இல்லன்னு நமக்குத் தெரியும்... நம்ம சமூகத்தை இன்னமும் கூடுதலா முன்னேத்தணுங்கிற அக்கறையிலதான் ஊர்ல கண்ணுறுகிற நிகழ்வுகளை இப்படியா சுட்டிக்காட்டி பேசிக்கிறது.

peace be on us :) !

Rathi சொன்னது…

தெகா.... :) Yeah.. yeah... I am always cool yaar :))

//நம்ம சமூகத்தை இன்னமும் கூடுதலா முன்னேத்தணுங்கிற அக்கறையிலதான் ஊர்ல கண்ணுறுகிற நிகழ்வுகளை இப்படியா சுட்டிக்காட்டி பேசிக்கிறது.//

M...m..m... understood.

வருண் சொன்னது…

நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு தெரியலை. இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்னனா தம்பதிகளிடம் "காதல்" "கவர்ச்சி" "ஒருவர்மேல் இன்னொருவருக்கு மரியாதை" எல்லாம் இல்லாமல்போயிடுது. புதிதாக ஒருவரிடம் "காதல்" "கவர்ச்சி" "ஒருவர்மேல் இன்னொருவருக்கு மரியாதை" அடைவது எளிது. அதனால் ஒரு சிலர் "துணிந்து" பிறமனை, அல்லது யாராவது கல்யாணம் ஆகாத பெண்/ஆண் னு போயி "வாழ்றாங்க".

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை இது, அதைப்பத்தி நீ யார் கேக்க னு சொல்லி "நல்லவர்களாகி"விடவும் செய்றாங்க! Usually the second or third relationship they built wont last long either. Because the same thing will repeatedly happen, same situation will come back after while, with a new person too!

It has happened, it is happening, it will happen! :)

Rathi சொன்னது…

வருண், இந்தப்பிரச்சனை வள்ளுவர் காலத்தில் இருந்தே இருக்கும் போல. அதானே அவர் கடுப்பாகி அறத்துப்பாலில் குறள் எழுதியிருக்கிறார். Just joking :))

நீங்க சொல்வது மேலைத்தேசங்களில் உள்ளவர்களுக்கா அல்லது தமிழ் கூறும் நல்லுலகிற்கா தெரியவில்ல. இருந்தாலும், ஒரு பிரச்சனை ஒரு தடவை நடந்து அது சரி செய்யப்பட்டால் அத்தோடு முடிந்துவிடும். இதுவே இப்படி பலமுறை என்றால் அதுவும் வாழ்க்கையின் பாதியில் என்றால் நிச்சயம் அங்கே ஏதோவொரு குறைபாடு இருக்கு. அதை தகுந்த வைத்திய ஆலோசனை மூலம் சீர் செய்வதே சாலச் சிறந்தது. அல்லது இப்போ தான் நிறைய counselling அது, இதுவென்று நிறைய இருக்கே.

பலமுறை இதுவே தொடர்ந்து அவர்களுக்கு குழந்தைகள் வேறு இருந்தால் யார் பொறுப்பேற்பது. வரி செலுத்துபவர்களா!!! நான் வெளிநாட்டை கருத்திற் கொண்டு இதை சொல்கிறேன். அது எந்த நாடானாலும் இது தொடரத்தான் போகிறது. அதில் சந்தேகமில்லை. அதுவே அவர்களின் முடிவென்றால் அதனால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அதை அரசுகளும் அதற்குரிய திட்டங்களுடன் தடுக்க வேண்டும். இன்னொருவரின் பொறுப்பில்லாத தனியுரிமைக்கெல்லாம் நான் ஏன் வரி அழவேண்டும்.

vidivelli சொன்னது…

வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்துகொண்டவர்கள் பெரும்பாலும் தங்கள் முதல் காதல், முதல் முத்தம், Autograph Momories, தாங்கள் செய்த குறும்புகள் என்று இளமைக்கால பழைய நினைவுகளில் மூழ்கிப்போவார்கள். வாழ்க்கையை சமப்படுத்தக் கற்றுக்கொள்வார்கள்.

சரியாக சொன்னீங்க...

vidivelli சொன்னது…

இந்த உலகத்தில் மலிந்து கிடப்பது இவைதான்...
எல்லாமே மாறி ஒருநாளைக்கு ஒருவராய்த்தான் நடக்கிறது...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் உறவே!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்க எழுத்துக்களில் நல்ல மெச்சூரிட்டி. குட்

வருண் சொன்னது…

***நீங்க சொல்வது மேலைத்தேசங்களில் உள்ளவர்களுக்கா அல்லது தமிழ் கூறும் நல்லுலகிற்கா தெரியவில்ல.***

எல்லாருமே சாதாரண மனுஷங்கதாங்க. தமிழ் பேசுவதாலோ, தமிழ்த்தாயை மதிப்பதாலோ, ஒருவருக்கு தனிமனித ஒழுக்கமும், பொறுப்பும் வந்துவிடுமா என்ன?

இந்த பிரச்சினை மேலைநாடுகளிலும், நம் ஊரில் உள்ள தமிழர்களிடமும் இருக்குங்க.

தனிமனித ஒழுக்கம் தவறுவது தவிர்க்க முடியாது என்றால் பரவாயில்லை. அப்படி தவறுபவர்கள் "பொறுப்புடன்" தன் தவறுக்கு மற்றவர்கள் (இவர்கள் தவறால் உருவாகும் குழந்தையும்தான்) பாதிக்கப்படுகிறார்களே? அது எந்த விதத்தில் நியாயம் னு மனசாட்சிக்கு பயந்து நடக்காத "பொறுப்பின்மை"தான் மிகப்பெரிய பிரச்சினை!

நீங்க யாரு செஞ்ச தப்புக்கோ நான் ஏன் வரி கட்டி அழனும்னு சொல்றீங்க. I used to myself in that "illegitimate child" situation and think what kind of social, psychological stress I will have to go thru if I were born like that? என்று யோசிப்பது வழக்கம். Why do such children deserve this kind of life? நாம் கேட்டு தாய் தந்தை படைத்தாரா? என்கிற கண்னதாசன் வரிகள் அவர்களுக்குத்தான்.

You can go on talk like this. Eventually you will come to a conclusion that IT IS ALL IGNORANCE!

Rathi சொன்னது…

விடிவெள்ளி, இது மலிந்து கிடந்தால் உலகமே இன்று வேறுவிதமாக இருக்கும். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஏதோவொரு Value System இருக்கிறதால் தான், குறிப்பாக குடும்பம் என்கிற தேவையும், அமைப்பும், இன்னும் நாங்கள் மனிதர்களாக இருக்கிறோம். நான் பதிவில் பேசும் இந்தப் பிரச்சனைக்கு சமூகத்தில் எல்லோரும் ஏதோவொரு விதத்தில் முகம் கொடுக்கிறோம் என்பதால் இதை இங்கே பேசிக்கொண்டிருக்கிறேன். பெரியவர்கள் செய்யும் தவறுக்காய் குழந்தைகள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்.

Rathi சொன்னது…

சி.பி. செந்தில்குமார், சீரியசாய் ஓர் கருத்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. :)

Rathi சொன்னது…

வருண், மீண்டும் உங்கள் கருத்தை இது குறித்து தெரிவித்தமைக்கு நன்றி. நான் மேலைத்தேசம் என்று குறிப்பிட்டு சொல்லக்காரணம் இங்குள்ள அரசின் சமூகநல திட்டங்களின் அடிப்படையில் தான். இந்தியா, இலங்கையை எடுத்துக்கொண்டால் தீர்வு காணும் விதம் வேறாய் உள்ளது. மேலை நாடுகளில் அரசு குழந்தைகள் பாதிக்கப் படக்கூடாது என்பதுக்காகவே இது போன்ற பொறுப்பற்ற செயல்களை சில சமயங்களில் அனுமதித்துக்கொண்டிருக்கிறது. இருந்தும் சில சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா, இலங்கையில் இப்படி இல்லையே. இங்கெல்லாம் வரிப்பணம் எங்கே போகிறது எனபது உங்களுக்கு தெரியாததல்ல.

வருண், நான் ஏன் வரி கட்ட வேண்டும் என்று சொன்னது இங்கே சமூக நலக் கொடுப்பனவு என்கிற வாழ்வாதரத்துக்குரிய பணத்தை பெற்றுக்கொண்டு கூத்தடிக்கும் மனிதர்களை. அவர்களுக்குரிய பணம் எங்கள் வரிப்பணத்தில் இருந்து தானே கொடுக்கப்படுகிறது, இல்லையா!!!

Yes, I can go on and talk like this. May be.... I am labeled as "Ignorant".

//Why do such children deserve this kind of life? // யாராக இருந்தாலும் இதுக்கு என்னதான் தீர்வு என்று நினைக்கிறீர்கள்.

வருண் சொன்னது…

I did not mean that you are ignorant or anything. I meant to say, எல்லாத் தவறுகளுக்குமே அறியாமைதான் காரணம்! எந்த ஒரு தவறையும் உள்ளே நுழைந்து தோண்டித் தோண்டி அனலைஸ் செய்து பார்த்தால் ஒருவருடைய "அறியாமை"தான் காரணம்னு வரும்னு சொல்ல வந்தேன்!

Anyway I will get back to these issues later when time permits! :)

Nesan சொன்னது…

பலவிடயங்களை அலசுகின்றீர்கள் ஒருமையுடன் கூடிய கட்டுப்பாடு இனிய இல்லறமாக இருக்கும் ஐரோப்பாவிலும் ஏன் கீழைத்தேசத்திலும் ஒத்து வாழ்தல் /சேர்ந்து வாழ்தல் கலியாணம் இல்லை இப்படி இருக்கின்றது தேவைகள் முடியும் போது பிரிந்து போகின்றார்கள் இதில் எவ்வளவு திருப்தி/ நன்மை என ஆராய்ந்தால் இனிவரும் நம் தலைமுறையும் இப்படித்தான் போகும் இதில் பல கலாச்சார மாறுதலை ஈழத்தவர் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆகனும் காலத்தின் கட்டாயம் கமல்-கெளதமி ஊருக்கே வழிகாட்டுகிறார்கள் .

வருண் சொன்னது…

***கட்டாயம் கமல்-கெளதமி ஊருக்கே வழிகாட்டுகிறார்கள் .***

Well, Nasan, Suppose(I am saying suppose) Kamal dumps Gautami (I mean mutually they agree each other and get separated) and then starts living with a 25-year old HOT chick (like nayanthara), Will Tamils like you, still take him as a role model or NOT?

தமிழலயே சொல்றேன், இப்போ ஒரு சூழ்நிலை கொண்டு வறேன்,

சப்போஸ் கமல், கவுதமியுடன் உறவை முறித்துக்கொண்டு (சுமூகமாகத்தான்) இன்னொரு 25 வயது கவர்ச்சியான இளமையான அழகான பெண்ணுடன் (நம்ம நயந்தாரா மாதிரி) -அந்தப்பெண்ணின் முழு சம்மதத்துடந்தான் -"சேர்ந்து வாழுதல்" முறையில் நாளைக்கு வாழ்றார்னு வச்சுக்குவோம்

அப்போவும் நம்ம கமலை ரோல் மாடலா எடுத்துவீங்களா? இல்லை மாட்டீர்களா, நேசன், cher ami?

தெக்கி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Thekkikattan|தெகா சொன்னது…

இங்கு பேசி கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு தொடர்பான சில பதிவுகள் அதற்குண்டான எனது பார்வை... நேரமிருக்கும் பொழுது வாசிச்சு வைங்க don't miss the comment part as usual, ரதி!

1) காகிதப் புலிகளும் *வச்சிபார்க்கத் தெரியாத* கமலும்!!

2) கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post

வருண் சொன்னது…

thega; You know what you have done here? You screwed up the FLOW of the DISCUSSION by bringing up some old crap from you site!

Are you HAPPY NOW?!

Look at yourself. Like someone has said, you are kissing Kamalahassan's bottom in your link! And you expect everybody to do the SAME! LOL

***Thekkikattan said...

காட்டுவாசி,

// என்னை பொறுத்த வரை இந்த பதிவு கூட கமல் என்கிற தனிப்பட்ட மனிதனுக்கு வக்காலத்து வாங்குவது போலதான் தெரிகிறது... //

தலிவா, I am not getting paid by Kamal or anyone. நாளைக்கு எழுந்து நான் வேலைக்கு போகவில்லையென்றால், யாரும் வந்து எனக்கு சாப்பாடு போடப் போவதில்லை. அதனால், நான் யாருக்காவும் வக்கலாத்து வாங்கி பேச வேண்டிய கட்டாயத்திலும் இல்லை :-).

//அதாவது மீண்டும் நாம் சினிமா மீதான கவர்ச்சியால் அதில் சம்மந்தப்பட்வர்களை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம்...நானும் கூட..//

ரெண்டாவது, சினிமாக்காரங்களா நான் எங்க வச்சு பாக்கணுமோ அங்கதான் வச்சு பார்க்கிறேன். என்ன, கமல் என் சிந்தனையுடனும் என் வாழ்வு முறையுடனும் ஒத்துப் போவதால், என்னால் அவரின் Shoeவுக்குள் பொருத்தி பார்க்க முடிகிறது. அவ்வளவே, மற்றபடி அந்த அளவுக்கு எனக்கு புத்தி மழுங்க வில்லை, யாருடைய வாழ்கையும் பார்த்து என் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவா பிறக்க.
November 10, 2006 10:47 PM ***

கமல் செருப்புக்குள் போனவர்கலையெல்லாம் எவனும் காப்பாத்த முடியாது!

கடவுளையே என்ன பெரிய புடுங்கியானு கேக்கிற தமிழன் கேவலம் ஒரு சாதாரண உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட மனுஷன் கமலஹாசனையும் கடவுளாக்கி வணங்கி வழிபடுறான்னா!

-------------


I realize why I HATE some bloggers like you! May be because they are closed-minded morons and pretending to be an open-minded "genius" I guess!

Thanks Rathi for bringing up mid-life crisis! It is an interesting topic, indeed!

You could remove this response if you find it harsh and unnecessary. Take care!

வருண் சொன்னது…

***//Why do such children deserve this kind of life? // யாராக இருந்தாலும் இதுக்கு என்னதான் தீர்வு என்று நினைக்கிறீர்கள்.***

The society around them and govt must help such children. That is happening in the west. They adopt such children.

Here are few personal experiences with my friends.

* 1) My friend's husband had a girl friend in high school and that girl became pregnant at 16 yr-old because of her husband he was 16 too. They talked with counselor and the girl DID NOT want to go for abortion as she felt like killing the child. So, they went for "adopting to another couple". Some couple wanted that child. She delivered baby and gave the child to them and moved on with her life! :) I dont know where she is now. But the boy married my friend. Today, he (my friend's husband) does not have any contact with his high school girl friend or the child he had with her! She is someone else child now (one who adopted her).

* 2) I have a friend (a girl, not girl friend! LOL) who was brought up by single mother. Her mom (was single then) had an affair with a married guy. They had this relationship at work (obviously the my friend's biological dad was cheating on his "real wife"). She wanted to have a child with that guy (her boyfriend). That is how she was born. But her mom made her boyfriend very clear that she wont reveal the secret affair to anybody and ruin his "family life". Now I see that girl. She was completely brought up by her mom, nothing she has with her biological dad. Her mom married someone else.

My friends are all in US. Not in India and These are true stories! :)

In the west such children do not become orphans MOST of the TIME. At least they try fix their mistake to some extent fairly well> :)

Rathi சொன்னது…

நேசன், நான் இதையெல்லாம் அலசுமளவிற்கு அதுகுறித்த துறைசார் அறிவெல்லாம் கிடையாது. நான் பார்ப்பதை, கேட்பதை, படிப்பதை வைத்து என் எண்ணங்களை பகிர்கிறேன். மற்றப்படி, யாரையாவது முன் உதாரணம் காட்டி அவர்களை பின்பற்றுங்கள் என்று சொல்வதல்ல என் நோக்கம்.

அவரவர் வாழ்க்கையை தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது போல் வேறெதுவும் ஈடாகாது. :) எங்களுக்கு நாங்களே சுதந்திரத்தின் எல்லைகளை விரிவாக்கி கொள்ளும்போது, அதுக்குரிய எல்லைக்கோடுகளையும் வரையறுத்துக்கொள்ளல் நல்லது.

ஒரு விழிப்புணர்வு, தனிமனித மாற்றம் என்பது தான் நல்ல விளைவுகளை கொண்டுவரும் மாற்றம்.

Rathi சொன்னது…

தெகா, இருங்க எல்லாத்தையும் ஒரேயடியாய் படிக்க முடியவில்லை. நீங்க முன்னர் கொடுத்த இணைப்புகளை படித்துவிட்டேன். மீதியையும் படித்துவிட்டு எழுதுகிறேன். இப்பத்தான் அரிச்சுவடி படிப்பவளை நீங்க thesis எழுத வைக்காம விடமாட்டீங்க போல :))

Rathi சொன்னது…

வருண், உங்கள் நட்புகளின் அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள்.

குடும்பம் என்கிற அமைப்பு (அதை என்ன பெயர் கொண்டு அழைத்தாலும்) அரசுக்கும் அவசியம், தனிமனித, சமூக வாழ்வுக்கும் அவசியம். அதனால், இரு சாராரும் தங்களுக்குரிய பொறுப்புணர்வுடன் நடத்தல் அவசியம் என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

ரதி.. இந்தக் கட்டுரைக்கும் அதைக் குறித்து நடந்த பின்னூட்ட
வாதங்களுக்கும் கீழுள்ளதற்கும் ஏதாவது சம்பந்தம் தென்படுகிறதா என்று பாருங்கள்.. :))

//Contentment, that admirable, enviable state: How is it achieved?

A few theories:

The All-American get-what-you-want theory: Contentment is the state achieved when appetites are satisfied.

The Buddhist get-over-what-you-want theory: Contentment comes not from satiation but cessation of appetite.

And a hybrid:

The want-what-you-have theory: Contentment is wanting just what you have and nothing more. Some of your appetites are satisfied and the ones that aren't, you've let go of.//

இணையத்திலே பொறுக்கியது.. :))

வருண் சொன்னது…

“Everyone chases after happiness, not noticing that happiness is right at their heels.”

Bertolt Brecht quotes (German poet and playwright, 1898-1956)

--------------

“We may pass violets looking for roses. We may pass contentment looking for victory.”

---------------------

The pity here is "Everyone" and "we" includes the persons who quote these! :(

Rathi சொன்னது…

எல். போர்ட்.. பி சீரியஸ், பதிவுலகில் எதையும் சமபந்தம் இல்லாமல் சொல்பவரல்ல நீங்கள் என்பது என் கணிப்பு. Hybrid theory தான் பெரும்பாலானர்வர்கள் கடைப்பிடிப்பார்களோ!!

JOTHIG ஜோதிஜி சொன்னது…

என் டார்லிங்கை விட வருண் எழுதிய கருத்துக்களுக்கு பல இடங்களில் கை தட்ட வேண்டும் போல் உள்ளது.

Avargal Unmaigal சொன்னது…

அது அவர்கள் தவறும் அல்ல. காலங்காலமாய் நம்பிய, கடைப்பிடித்த ஓர் பழக்கத்தை எளிதில் முறித்துக் கொண்டோ அல்லது தாண்டியோ வர முடிவதில்லை.//

மிக சரியான வார்த்தை......


//வாழ்க்கையின் நடுப்பகுதி குழப்பங்களுக்கு அதிகம் ஆளாகி தப்புத்தண்டா பண்ணுபவர்கள் ஆண்கள் என்று தான் சொல்கிறார்கள்.///

அந்த மாதிரி தப்பு தண்டாவிற்கு தள்ளிவிடுவதே பெண்கள் என்று கூட சொல்லாம் இல்ல்லியா?