ஜூலை 15, 2011

இதயம் பேசுகிறேன்....!!!


மனித மண்டை ஓட்டிற்குள் சதா ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும் மூளையே மனம்!! இந்த மனம் விசித்திரமானது, எளிதில் புரிந்துகொள்ள முடியாதது. எப்போதும் என் சுயம் பற்றியும், அப்பப்போ கொஞ்சம் அடுத்தவர் பற்றியும் சிந்திக்கவும் வைக்கிறது. எல்லா மனிதமனமும் இப்படித்தானா அல்லது நான் மட்டுமா இப்படி!! நான் என் தனித்தன்மையை பேண விரும்பும் அதேநேரம் இந்த உலகத்துடனும் இயைந்துவாழவே ஆசைப்படுகிறேன். அங்கேயும் நான் உள்வாங்கப்படவேண்டும். இந்த உலகத்திலிருந்து வெட்டிக்கொண்டு பிரிந்துபோய் தனியனாய் வாழவும் முடியாது. என் மனம் எப்படி என்னை, என் தனித்தன்மையை இந்த உலகத்துக்கு காட்டுகிறது. எதுவெல்லாம் என் மனதை கட்டமைக்கிறது, வழிநடத்துகிறது. அதற்கு பதில் வாசிப்பு, என்னை சுற்றுயுள்ள சகமனிதர்கள், சதா தேய்ந்தும், வளர்ந்தும், புதிதாய் உருவாக்கப்படும் கருத்துகள், என் வாழ்வின் சுவையான, கசப்பான அனுபவங்கள் தான் என் மனதை கட்டமைக்கிறது என்று தோன்றுகிறது.

வாசிப்பு என்று அலைந்ததில் தேவையானதும், தேவையற்றதுமாய் நிறையவே கருத்துருவாக்கங்கள் மனதில் நிறைந்து கிடக்கிறது. கருத்துக்களால் மட்டுமே வனையப்பெற்ற பொம்மையாய் வாழ விரும்பாவிட்டாலும், கருத்துகள் என்பது இருபத்தொராம் நூற்றாண்டில் தவிர்க்கவோ, தாண்டிப்போகவோ முடியாததாய் உள்ளது. அதை அடிக்கடி ஒழுங்குபடுத்த நினைத்து கவனமாற்றங்களால் கவனிப்பாரற்ற கலாச்சார சின்னங்கள் போல் மனதில் தேங்கிவிட்டன. இருந்தாலும் அவ்வப்போது ஞாபகக் கிறுக்கல்களாய் என் மனதின் கருத்துருவாக்கங்களை எழுத்தில் பதிவாய் வடிக்கிறேன்.
கருத்துக்களை எழுத்தாய் வடிக்கும் போது தான் அது என் மறுபரிசீலனைக்கும் உட்படுகிறது. பிழை என்றால் திருத்திக்கொள்ளவும், தவறு என்றால் தவிர்க்கவும் கற்றுக்கொள்கிறேன்.


என் எழுத்து பல சமயங்களில் வீதியோர வரைபடம் போல் அவரவர் அவசரத்தில் கவனிக்கப்படாமலும், சில சமயங்களில் ஓவியக்கண்காட்சியில் கண்ணைக்கவரும் ஓவியாமாய் என் எழுத்துக்குரிய அங்கீகாரம் அதற்குரிய கவனிப்பைப் பெறுகிறது. என் எழுத்து விரும்பப்பட்டாலும், விட்டாலும் எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் என் மனதில் தோன்றுவதை என் இயல்பில் எழுதுகிறேன். விட்டுக்கொடுப்புகளுக்கு என் எழுத்து பழகிப்போனால் நான் என் சுயத்தை இழந்துவிடுவேன். விட்டுக்கொடுத்து எழுதிப்பழகு என்று என்னை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. யாராவது கட்டாயாப்படுத்தினால் எனக்கு எழுதவும் வராது. அனுபூதிமான்களின் அனுபவத்தெளிவும், சித்தாந்தங்கள், கருத்துக்களின் கருவூலத்திலிருந்து தருவிக்கப்பட்ட திவ்வியத்தன்மையும் என் எழுத்தில் குறைவாய் இருக்கலாம். இருந்தாலும் அது பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை. நான் எழுத்தையே தொழிலாய் கொண்ட துறைசார் எழுத்தாளர்/எழுத்தாளினி(!!!) கிடையாது.  நான் கற்றுத்தெளிந்ததை இன்னும் யாருக்கும் நன்மை தரும் என்று கருதுவதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் எனக்கோர் ஆத்மதிருப்தி.

புத்தக வாசிப்பைப் போல் மனிதர்களை அவர்களின் இயல்புகளை கவனித்து கற்றுக்கொளவும் என்னை என் மனம் பழக்கிக்கொள்கிறது. எந்தவொரு மனிதனின் இயல்பையும் நான் மாற்ற முற்பட்டதில்லை. அது அபத்தமும் கூட. அதையே மற்றவர்கள் எனக்கு செய்யக்கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பேன்.  அதைப்போலவே யாரிடமிருந்தாவது எண்ணங்களை கடன்வாங்கி என்னை அர்த்தப்படுத்திக்கொள்ளவும் முடியாது. இருந்தாலும், யாரிடமிருந்தாவது ஓர் நல்ல இயல்பு என்னிடம் ஒட்டிக்கொண்டால் அது என்னை அறியாமல் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு நிற்கும். தலையை ஆட்டி எனக்குள் நானே சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவேன். திருவள்ளுவர் சொன்னது போல் கனியிருக்க காய் கவர்தல் என்பதாயும் சில வார்த்தைகள் என்னிடம் ஒட்டிக்கொண்டுவிட்டன :) ஆனால், அப்படி நடப்பதென்பது அரிது. அப்போது என் அடிமனம் விழித்துக்கொண்டு இது தவறு என்று சுட்டி நிற்கும். என் சிந்தனைக்கு எல்லைக்கோடுகள் இல்லாவிட்டாலும் செயல்களுக்கு எல்லைகளை நிர்ணயித்துக்கொண்ட பின் அவ்வாறான அத்துமீறுதல் என்பது அபூர்வமாகிவிடும். என் செயல்களுக்கு நான் தானே பொறுப்பேற்க வேண்டும் என்கிற முன்னெச்சரிக்கையாக கூட இருக்கலாம். இது எனக்கு நானே போட்டுக்கொண்ட விலங்கல்ல. என்னை நானே பண்படுத்திக்கொள்ளும் விதம். நான் நானாய் இருக்கும் அதேவேளை சில மனிதர்களிடமிருந்து நற்பண்புகளை கற்றுக்கொள்வதிலும் தவறில்லை என்று நினைக்கிறேன்.

என்னைச்சுற்றி எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கும் கருத்துருவாக்கத்தின் அசைவிற்கு ஏறாற்போல் என் மனம் அதையும் உள்வாங்கி அசை போடும். கருத்துருவாக்கம் என்பது மதம் அரசியல் என்பதில் தொடங்கி நான் உண்ணும் உணவு என்பதுவரை. திணிக்கப்படும் கருத்துக்களை கேள்வியின்றி அப்படியே விழுங்கிக்கொண்டால் கூட என் சுயத்தை இழந்துவிடுவேன். அடுக்கடுக்கான கேள்விகளால் என்னை நானே துளைத்தெடுப்பதும் உண்டு. அப்போதெல்லாம் எனக்குள் நானே முரண்பட்டும், உடன்பட்டும் கொள்வதுண்டு. ஏற்கனவே மனதில் உருவாகிவிட்டிருக்கும் கருத்துக்களோடு புதிதாய் எந்தக்கருத்தாவது மோதிக்கொள்ளும் போது அதுவே தேடலுக்குரிய அடுத்த படியாயும் ஆகிப்போகிறது. அந்த தேடலில் தான் நான் என்கிற கர்வமும் அடங்கிப்போகிறது. தேடும் போது தான் தெரியும், எனக்குத் தெரிந்தது வெறும் கைமண்ணளவு என்பது. என் தேடலின் நோக்கம் என்னை அறிவுஜீவியாக்கிக்கொள்வதல்ல. அது என் உய்வுக்கான ஓர் வழிமுறை, அவ்வளவே. தேவையற்ற கருத்துருவாக்கங்களில் இருந்தும், கவனமாற்றங்களில் இருந்தும் என்னை நானே தான் உய்வித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் என் சுயத்தை இழக்க கூடாது என்பதில் நான் எப்போதும் குறிக்கோளோடு இருக்கிறேன்.


இயற்கையிடமிருந்து கூட மனிதன் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கு. இருந்தாலும் நானும் என்போன்றவர்களும் Material Culture எனப்படும் உடைமைகளின் இருப்பையே கணக்கில் எடுத்துக்கொண்டு இயற்கையை கழித்துவிடுவோம். சூரியன் வெளிச்சத்தையும், இயற்கை சுவாசிக்க காற்றை மட்டும் தானே இலவசமாக கொடுக்கும். வயிற்றுக்கு உணவுமா கொடுக்கும்!! அதனால் இயற்கையையிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது என் பட்டியலில் இறுதியில் இடம்பிடித்துக்கொண்டது. அது என் தவறல்ல. அரசின் அரசியல், பொருளாதார கொள்கை வகுப்புகள் தான் நான் எவ்வளவு தூரம் மனிதத்தை பேணுகிறேன், இயற்கையை மதிக்கிறேன் என்பதை கற்றுக்கொடுக்கிறது. இருந்தாலும், இயற்கையை மதிக்கத்தெரியாவிட்டாலும், மனிதத்தை மதிக்கத்தெரியாவிட்டால் என் சுயத்தை இழந்து விடுவேன். அது தானே நான் மனிதன் என்பதன் அடையாளம். மனிதத்தை இழந்தாலும் என் சுயத்தை இழந்தவள் ஆவேன்.


நான் இயற்கையோடும் என்னையறியாமல் ஒன்றிய ஓர் கணம் என்றால், அண்மையில் நான் நயாகரா நீர்வீழ்ச்சியின் மெளனமான அசைவில் என்னை மறந்த ஓர் கணம் தான். விடுமுறை நாளில் இரண்டுநாட்களை நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகில் கொண்டாடலாம் என்று நயாகரா வீழ்ச்சியின் கண்கொள்ளாகாட்சியை காணுமாறு இருக்கும்படி ஹோட்டலில் தங்கியாயிற்று. நான் நயாகரா நீர்வீழ்ச்சியை பார்ப்பது இது முதல் தடவை அல்ல. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் அதன் அருகில் சென்று அதன்"கோ'வென்ற இரைச்சலிலும், மெல்லிய சாரலிலும் காதுகளும், உடலும் நனைவதுண்டு. எனக்கு புகைப்படக்கலையில் ஒன்றும் ஆர்வம் இல்லை என்றாலும், அந்த பாறைகளில் இருந்து செங்குத்தாய் விழும் ராட்சச நீர்வீழ்ச்சியை தங்கள் புகைப்படக் கருவிக்குள் அடக்கத்துடிக்கும் மனிதர்களை வேடிக்கைபார்ப்பதுண்டு. வாழ்வின் எல்லா சந்தோசத்தின் கணங்களையும் புகைப்படத்துக்குள் அடக்கிவிட முடியாது. இருந்தாலும் புகைப்படம் இல்லாமலேயே இந்த நயாகரா அருவியும் என்மனதில் முதல் முறையாய் ஓர் "Photograph Memoy" ஆகப் பதிந்துபோய்விட்டது.


இரவும் பகலும் அலுக்காமல் அந்த நீர்வீழ்ச்சியையும், அதை சுற்றியுள்ள இடங்களையும் சுற்றி, மனிதர்களை வேடிக்கை பார்த்து, ஹோட்டலிலும், விரைவு உணவகத்திலும் சாப்பிட்டு வாழ்க்கை வாழ்வதற்கே என்கிற புதிதாய் ஓர் தத்துவத்துக்குள் என் மனம் புதைந்துகொண்டிருந்தது. நேரம் கழித்து தூங்கி, மறுநாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்து எல்லாக்காரியங்களையும் முடித்தபின் மெதுவாய் நீர்வீழ்ச்சி இருந்த பக்கத்து திரைச்சீலையை சூரிய வெளிச்சத்துக்காய், சுவாசிக்க சுத்தமான காற்றுக்காய் கண்ணாடி கதவையும்
விலக்கியபோது தான் நான் கல்லாய் சமைந்து போனேன். எனக்குள் ஓர் காட்சிப்பிழை வேர்விட்டு ஓடிக்கொண்டிருந்ததை அறியாமல் அதை ரசித்துக்கொண்டு கனவுலகில் மனம் பதித்து நின்றேன். இதுவரை அருகில் சத்தத்தோடு பார்த்த ராட்சச அருவி இப்போது கொஞ்சம் தூரத்தில், ஆனால் கண்முன்பே அமைதியாய் வெள்ளை வெளேரென்று பாலூற்றாய் பறவைகள் மேலே வட்டமிட ஓர் அமைதியுடன் என் மனதை ஆக்கிரமித்தது. சத்தமும், சலனமும் அற்ற அந்த இயற்கை எனக்குள் எதையோ விதைத்துவிட்டு சென்றது.


என் மனதுக்குள் சதா இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற எண்ணங்களுக்கு நடுவிலும் ஓர் அசைக்க முடியாத அமைதி உண்டு என்பதை அந்த இயற்கை எனக்கு புரியவைத்தது. அந்த அமைதியின் கணங்கள் தான் என்னை இன்னும் நானாக வைத்திருக்கிறது. என்னை சுற்றி ஆயிரமாயிரம் கருத்துருவாக்கங்கள் நிகழ்ந்தாலும் நானும் இயற்கையின் ஓர் அங்கம் என்பது புரியும் போது தான் இயல்பான மனம் தன் சுயத்தை வெளிக்காட்டுகிறது.

Image Courtesy: Google


19 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு..,வாழ்த்துக்கள்...

ஹேமா சொன்னது…

ம்...இதயம் பேசுகிறது உங்கள் இயல்போடு.கிட்டத்தட்ட என்னோடு பொருந்திப்போகிறது ரதி உங்கள் இயல்பும்.தனித்திருக்கவும் அதே நேரத்தில் சமூகத்தைவிட்டுத் தள்ளியிருக்காமலும் விரும்புகிறேன்.
ஆனால் சமூகத்தின் தவறுகளைக் கை காட்டும்போது அவர்களுக்குமுன் மீண்டும் என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்கிறேன்.
இயற்கையோடு ஒன்றிணைவதைத் தடுக்க யார்.நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டேயிருப்பதும் வழக்கம்.

இனித் தொடர வழியில்லை
இறகு என்று
சற்றுமுன் ஆரம்பித்த கவிதையொன்று
முறிந்து கிடக்கிறது
இடை மறித்த
உங்கள் கைகளில் !

மனதின் உணர்வோடு எழுதும் எதையும் யாரும் திணித்தெழுத முடியாது.உணர்வை இடைநிறுத்தினால் தொடரவும் முடியாது ரதி !

Rathi சொன்னது…

Reverie, நன்றி. உங்களைப் பற்றிய அறிமுகம் உங்கள் தளத்தின் சுயவிவரத்தில் வித்தியாசமாய் சுவாரசியமாய் இருக்கிறது.

Rathi சொன்னது…

ஹேமா, தனித்தும் இருக்கவேண்டும். சமூக கூட்டுவாழ்க்கை கூட தேவைதான். இருந்தாலும் நியாயங்களுக்கு கட்டுப்படும் மனம் அபத்தம் மற்றும் அதிகாரங்களுக்கு அடிபணிவதில்லை. இது தான் பொதுவான மனித இயல்பு.

என் எழுத்து உங்கள் கவிதையை இடைமறித்தது கொஞ்சம் வருத்தம் தான். இருந்தாலும் கவிதை நிறையவே அர்த்தம் பொதிந்திருப்பதாய் தெரிகிறது. நான் நீட்டி முழக்கி எழுதியதை நீங்கள் சட்டென்று நான்கு வரிகளில் சொல்கிறீர்கள்.

தவறு சொன்னது…

ரதி...ஹேமா நச்சுன்னு நாலு வரியில அசத்திட்டாங்க ... நீங்க அனுபவிச்ச அந்த அமைதிய நிறைய சந்தர்ப்பங்களில் அனுபவித்துள்ளேன்.

சதா ஓடிக்கொண்டிருக்கத்தான் நிறைய உள்வாங்கி கொண்டிருக்கிறோம் ரதி.

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

 நல்ல பதிவு,
அமைதியான நதிதைப்போல் ஓடிக்கொண்டு இருக்கிறது உங்கள் எழுத்து ^_^

JOTHIG ஜோதிஜி சொன்னது…

ரதி ஆய்வுக்கட்டுரைகளும் சில அலசல்களும் அப்டின்னு ஒரு புத்தகம் வெளியிட்டு விடலாமா?

Rathi சொன்னது…

தவறு, என்னால் உணர்வுபூர்வமாக மட்டும் வாழ்க்கையைப் பரிசீலனை செய்யமுடிவதில்லை. கொஞ்சம் இயங்குவிதி,கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் நம்பிக்கை ....இப்படித்தான் இருக்கிறது. நான் இந்தப்பதிவிற்கு தேர்ந்தெடுத்த படம் ஓர் செய்தி சொல்கிறது, கவனிக்கவில்லையா.

என் இயல்புகளோடு நான்.

Rathi சொன்னது…

"கற்றது தமிழ்" துஷ்யந்தன், அமைதியான நதியை ரசித்துப் போனதுக்கு நன்றி.

Rathi சொன்னது…

ஜோதிஜி, உங்கள் கருத்துக்கு என் பதிவிலேயே பதில் உண்டு. என் இயல்புகளோடு நான்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>என் எழுத்து பல சமயங்களில் வீதியோர வரைபடம் போல் அவரவர் அவசரத்தில் கவனிக்கப்படாமலும், சில சமயங்களில் ஓவியக்கண்காட்சியில் கண்ணைக்கவரும் ஓவியாமாய் என் எழுத்துக்குரிய அங்கீகாரம் அதற்குரிய கவனிப்பைப் பெறுகிறது

aahaa ஆஹா அபாரம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>புத்தக வாசிப்பைப் போல் மனிதர்களை அவர்களின் இயல்புகளை கவனித்து கற்றுக்கொளவும் என்னை என் மனம் பழக்கிக்கொள்கிறது.

aahaa நீங்க ஞாநியோ?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>என்னை சுற்றி ஆயிரமாயிரம் கருத்துருவாக்கங்கள் நிகழ்ந்தாலும் நானும் இயற்கையின் ஓர் அங்கம் என்பது புரியும் போது தான் இயல்பான மனம் தன் சுயத்தை வெளிக்காட்டுகிறது.

அநேகமா நீங்க சைக்காலஜி ஸ்டூடண்ட்னு நினைக்கறேன்

Rathi சொன்னது…

சி.பி.செந்தில்குமார்,

// aahaa நீங்க ஞாநியோ? அநேகமா நீங்க சைக்காலஜி ஸ்டூடண்ட்னு நினைக்கறேன்//

"இவை எல்லாமாக நான் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், இருந்துகொண்டே இல்லாமலும் இருக்கலாம், இல்லாமலே இருந்துகொண்டும் இருக்கலாம். சி.பி.செந்திக்ல்குமார் புரிந்துகொள்ள இது கடி ஜோக் அல்ல. அதையும் தாண்டி காமெடியானது. அபிராமி.... அபிராமி... அபிராமி...."

சி.பி.செ, சி.பி.செ....... இப்ப சொல்லுங்க நா யாரு.........!!!! :)

Thekkikattan|தெகா சொன்னது…

A collection of rambling, mindful jottings! அப்படின்னு இந்த மாதிரி கட்டுரைகளுக்கு பெயர் வைச்சு ஒரு தொகுப்பா வெளியிடலாம் போலவே. உங்கட காட்சிப்பிழை பதிவும் அப்படித்தான் எங்கோ ஆரம்பிச்சு ஒரு ரவுண்ட் பொயிட்டு வந்துச்சு. ரொம்ப ஆழமா போறீங்க... பார்த்துங்க மூழ்கிடாதிங்க அந்த ஆழ்கடல்ல :))...

//சில சமயங்களில் ஓவியக்கண்காட்சியில் கண்ணைக்கவரும் ஓவியாமாய் என் எழுத்துக்குரிய அங்கீகாரம் அதற்குரிய கவனிப்பைப் பெறுகிறது.//

:) நிச்சயமா! அதற்குண்டான சன்மானமாக நூறு பேர் வாசித்து கடந்து செல்வதனைக் காட்டிலும் ஒருவரின் மனதில் தன் வாழ்வு முழுதுக்குமே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி ஏதோ ஒரு மூளையில் ஒட்டிக் கொண்டு... நீங்க சொன்ன மாதிரி இப்படியாக ஆகிவிட்டாலே போதும்தானே...?

...யாரிடமிருந்தாவது ஓர் நல்ல இயல்பு என்னிடம் ஒட்டிக்கொண்டால் அது என்னை அறியாமல் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு நிற்கும்...

அப்படியாக ஏதோ ஒரு வகையில் நல்ல எழுத்தும், செயல் முறை வாழ்க்கையும் சில பாசிடிவ் பாதிப்பை வழங்கி நம்மையும் அறியாமல் நம்மாள் உட்கிரகிப்பட்டு, பகுதியாகி விடுவதுண்டு. சோ, நீங்க பாட்டுக்கு எழுதி வைங்க... நீங்களே கீழே சொன்ன மாதிரி ...

...விட்டுக்கொடுப்புகளுக்கு என் எழுத்து பழகிப்போனால் நான் என் சுயத்தை இழந்துவிடுவேன்.
செளகர்யமான சமரசங்கள் நம்மை பிழைத்து கெடப்பதற்கான சந்தர்ப்பங்களை இன்று வழங்கி இருக்கலாம், ஆனால் தொலை நோக்கு பாதையில் மீண்டும் நம்மை நாமே உட்நோக்கி பார்த்துக் கொள்ளும் பொழுது நம்மையே வேறு யாராகவோ உணர்வதாக அமைந்து போகுமல்லவா? so, my vote is to remain be who you are... read this when you get a chance Why We Should Be Different? :)

//தேடும் போது தான் தெரியும், எனக்குத் தெரிந்தது வெறும் கைமண்ணளவு என்பது. என் தேடலின் நோக்கம் என்னை அறிவுஜீவியாக்கிக்கொள்வதல்ல.//

true! that also helps us to be grounded and always prepare us on the go... கற்றுக் கொள்ளும் திறந்த மனதில் இருக்கும் பொழுது our ego comes under constant vigilance of our consciousness.

என்னது உங்களோட ஒவ்வொரு பதிவிற்கும் பெரிசு பெரிசா பின்னூட்டமிடுற மாதிரி ஆயிடுது...? ஏதோ மாஜிக் இருக்குங்கோ உங்க எழுத்தில... :)

Thekkikattan|தெகா சொன்னது…

சொல்லாம விட்டுப்போனது. பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு :)

கடைசி பத்தி, நயகரா நீர் வீழ்ச்சியின் அமைதியை எங்க மனதில் அழுத்தமா பதிச்சி வெற்றி கோப்பையை தட்டி பறிச்சிட்டீங்க... இயற்கை நேசியின் சார்பில் அதுக்கு ஒரு பிடி இழுத்து கட்டிய புற்களின் பொக்கே பிடிங்க :))

siva சொன்னது…

me the firstu..

siva சொன்னது…

வாழ்க வளமுடன்

இந்த பதிவை வாசிக்குபோதே
நான் ஒண்டுமே இல்லை
என்று புரிந்து விட்டது

வாழ்க வளமுடன்

Rathi சொன்னது…

சிவா, உங்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் போலும்!


நான் எப்போதுமே, எனக்கு ஒண்டும் தெரியாது என்று நினைப்பதில்லை. எனக்கு எல்லாம் தெரியாது. ஆனாலும், ஏதோ சில விஷயங்கள் தெரியும் என்று நினைத்துக்கொள்வேன். அது மற்றவர்களின் அறிவு, அனுபவம், அளவு என்பதன் அடிப்படையில் மாறுபடலாம் என்று நினைப்பேன்.