ஜூலை 05, 2011

ஈழம் - சர்வதேச அரசியலும் மெரீனா ஒருங்குகூடலும்!!ஈழம் அதன் விடுதலை குறித்த மாற்றங்களுக்கான கருத்தியல், களம் மற்றும் பலம் தற்கால புவிமைய சர்வதேச அரசியலில் தமிழ்நாட்டு தமிழர்களிடம் தான் புதைந்துகிடக்கிறது என்று மே 17 இயக்கத்தின் செயற்பாட்டாளர் பேசியபோது தான் நான் தமிழ்நாட்டை முதன்முதல் புதுக் கண்ணோடத்தில் பார்க்கத்தொடங்கினேன். அதற்கு முதல் தமிழகம் குறித்த எனது பார்வை, குறிப்பாக தமிழக அரசியல், குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்பது போல்தான். உருவாகாத இந்திய தேசியத்தின் கண்ணோட்டத்தில்   ஈழப் பிரச்சனையைப் அணுகிப் பார்த்தால் எங்கள் விடுதலை நியாயமற்றது என்றே கூட தோன்றலாம். அதற்கேற்றாற்போல் தான் கருத்துருவாக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. அதன் தோற்றுவாய் குறித்து தோண்டினால் அது சர்வதேச அரசியலில் தான் போய் முடியும்.

தமிழக குண்டுச்சட்டி அரசியலில் வாக்குகள் குறித்தே அரசியல்வாதிகள் அதிகம் அக்கறை கொள்பவர்கள். எந்தவொரு விடயத்தையும் அதன் இலக்கு நோக்கியே பேசுவார்கள், செயற்படுவார்கள். சுயநலம் மட்டும் சார்ந்த அரசியல்! இந்தியாவில் ஓர் அரசியல் கட்சியாக தங்களை பதிவு செய்துகொண்டால் பிறகு அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகத்தான் பேசவேண்டும் என்பது நியதி ஆகிப்போகிறது. இந்த நியதிகள் கூட உள்ளூர் அரசியல்வாதிகளுக்குத்தான். தேசியமைய அரசியலில் இருக்கும் கொள்கை வகுப்பாளர்களான பெருங்குழாம் (Elites) இதற்கு விதிவிலக்கு. எனக்குத் தெரிந்த உதாரணம் ப. சிதம்பரம், எம்.கே. நாராயணன், சு.சுவாமி வகையறாக்கள்.

விதிவிலக்காய் தமிழ்நாட்டையும் தாண்டி இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் ஒருவர் ஈழத்தை பற்றிப் பேசினால் இந்திய ஜனநாயகத்தில் அரசியலிலிருந்து துரத்தியடிக்கப்படுவார் என்பதற்கு வை.கோ. ஓர் சிறந்த உதாரணம்.

மேற்சொன்ன இவர்கள் போன்ற பெரும்குழாம் மக்கள் தங்கள் அறிவுசார் திறமை காரணமாக அல்லது அவர்களின் பதவிகள் மூலம் பன்னாட்டு பல்தேசிய நிறுவனங்களுக்கு தங்கள் சேவையை வழங்கியவர்களாகவோ அல்லது அந்த நிறுவனங்களுக்கு ஏதோவொரு வகையில் உதவி புரிபவர்களாகவோ இருப்பார்கள். கூடவே இன்னோர் பக்கம் இந்திய தேசியத்தையும் நேசிக்கிறேன் என்று தேச பக்தியைப் பிரஸ்தாபமும் செய்வார்கள். கொஞ்சம் விளங்கச் சொன்னால் பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தநாட்டில் விளைவிக்கும் அரசியல், பொருளாதார, சமூக சீர்குலைவுகள் பற்றி கண்டும்காணாமல் இருந்துகொண்டே, இந்தியதேசியத்தையும் நேசிக்கும் இரட்டை நிலை கொண்ட இந்தியர்கள். இவர்களின் பேச்சுக்களால் கவரப்பட்டவர்கள் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை தேவை தான்... ஆ...னா....ல்.... என்று இழுப்பார்கள்.

இந்தியதேசியம், தமிழகம் (தமிழக தமிழ்த்தேசியம்!!!) இரண்டுக்குமே ஈழவிடுதலை அவசியம் என்பதை மே 17 அமைப்பு போன்றோர் பேசினால் அது மேற்சொன்ன இந்தியதேசியத்தை நேசிப்பவர்களுக்கு விந்தையாக, கோபமாக கூட உருவகப்படலாம். ஆனால், இது தான் யார்த்த உண்மைகள் என்பதை புரிந்துகொண்டால் அதுவே பாதி வெற்றி தான்.

இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களும் சமூகமும் ஹிட்லரின் நாசிகளின் பாணியில் தங்களது இயல்பான வளர்ச்சிக்குத் தேவையென கருதும் ஈழத்தமிழர்களின் நிலப்பரப்பு, அதன் வளங்கள் (Lebensraum-Living Space); சீனாவின் முத்துமாலை திட்டம் (Sting of Pearls and Blue Water Navey), இது சீனாவின் பொருளாதார நோக்கங்களையும் தாண்டி ஓர் கடற்படை தளம் போல் அசுர வேகத்தில் வளர்வது. இந்து சமுத்திரத்தை சீனா கட்டுபடுத்தக்கூடாது என்கிற அமெரிக்காவின் எச்சரிக்கை, சீனாவோடு ஆசியாவில் இருக்கும் நாடு ஒன்றே போட்டிபோட்டு கட்டுப்படுத்த முடியும் எனக்கருதி அமெரிக்காவால் தயார் செய்யப்படும் இந்தியாவும் அதன் அரசியலும்; இவற்றுக்கு நடுவே சிக்கிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் விடுதலை. ஆக, எல்லோரும் அவரவர் நிகழ்ச்சி நிரல்களோடு செயற்படுகிறார்கள்.

இந்த சர்வதேச அரசியலின் தற்போதைய ஆடுகளம் தான் ஈழமண். அமெரிக்கா சீனாவையோ, இந்தியாவையோ பகைத்துக் கொள்ளாது. அமெரிக்காவின் கணணி தொழில்நுட்பம் இந்தியாவிலும், உழைப்பும் உற்பத்திப் பொருட்களும் சீனாவிலும் குறைந்த கூலிக்கும், விலைக்கும் "Outsourcing" செய்யப்பட்டிருப்பதால் அது இந்த நாடுகளை பகைக்கப் போவதில்லை. சிலர் தமாஷாக சொல்வார்கள், இனி அமெரிக்கர்களால் இந்தியர்களிலும், சீனாக்காரர்களிலும் தங்கியிராமல் வாழமுடியாது என்று.

இந்த நாடுகளுக்கிடைய அரசியல், பொருளாதார, ராணுவச் சமவலு உண்டாகுமா என்பதெல்லாம் கேலிக்குரிய கேள்வி. இவர்களால் போட்டியிட மட்டுமே முடியும். ஒருவரையொருவர் போர்தொடுக்க மாட்டார்கள். தங்கள் பலத்தை நிர்ணயிக்க ஈழம் போன்ற மண்ணை, மக்களை அவர்களின் வரலாற்று வழியில் பலிக்க்கலாமாகவும், பலியாடுகளாகவும் ஆக்குவார்கள். அடிப்படையில் அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கை எப்போதுமே "Benign Negligence" தான். அதன் அர்த்தம் அமெரிக்கா தனது சுயலாப நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளுமே  தவிர, அதன் எந்தவொரு அழிவை, இழப்புகளை உண்டாக்கிய செயலுக்கும் பொறுப்பேற்பது கிடையாது. அது வியட்னாம், லத்தீன் அமெரிக்கா, ஈராக், ஆப்கானிஸ்தான் முதல் பயங்கரவாத ஒழிப்பு என்கிற பெயரில் இனவழிப்புக்கு துணைபோன ஈழம் வரை. தங்கள் அரசியல் பொருளாதார நிகழ்ச்சி நிரல் முற்றுப்பெற்று விட்டால் அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு விடுவார்கள். நாங்கள் ஓர் வெற்றுப் பெருமைக்காக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் வியட்நாமில் அமெரிக்காவும், ஈழத்தில் அமைதிப்படையும் மண்ணை கவ்வவில்லையா என்று!

சர்வதேச அரசியலின் பிடிக்குள் ஈழப்பிரச்சனை இனி சிக்கிக்கொண்டுவிட்டது. அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றாற்போல் தான் தமிழர்களின் செயற்பாடுகள் இருக்கவேண்டும். இதையெல்லாம் கவனத்திற் கொண்டு தான் தமிழக அரசியல் மற்றும் அமைப்புகள் சார் ஈழம் குறித்த செயற்பாடுகளை கவனிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், குறிப்பாக நாம் தமிழர் இயக்கம், மே 17 இயக்கம் தமிழ்நாட்டில் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பது என் பார்வை. ஈழம் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளூர் அரசியல் பற்றியும், மே பதினேழு இயக்கம் சர்வதேச அரசியல் நகர்வுகள் பற்றியும் விழிப்புணர்வை தமிழகத்தில் கொண்டுவருவருவது என்பது ஓர் சமப்படுத்தலாகவே எனக்கு தோன்றுகிறது. இந்த இரண்டுமே சந்திக்கும் புள்ளியில் தான் மக்கள் பலம் திரட்டப்பட வேண்டும். அதுவே தமிழீழம் என்கிற தீர்வை நோக்கி சரியான திசையில் பயணிக்க உதவும்.

சர்வதேச அரசியல் நகர்வுகளின் ஆட்டக்காய்களாக உள்ளூர் அரசியல்வாதிகளே இருப்பார்கள். உள்ளூர் பிரதிநிதித்துவ அரசியலில் நாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் எங்கள் பிரச்சனைகளை, அபிலாஷைகளை முன்னிலைப்படுத்தாமல் எங்களை சமாதானப் படுத்தும் விதமாக பேசவும், சில அரசியல் நகர்வுகளையும் நகர்த்துவார்கள். சிறந்த உதாரணம் தற்போதைய தமிழக முதல்வர். ராஜபக்ஷேக்கள் போர்க்குற்றவாளிகள், கச்சதீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்று பேசுவார். இது இரண்டுமே உலகறிந்த உண்மைகள். அதையும் தாண்டி பேசுங்கள் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. What about our freedom struggle and our ultimate goal? என்று எனக்குள் கேள்வி எழுவதுண்டு.

எங்கள் விடுதலையின் தேவையையும், முக்கியத்தையும் தமிழ்நாட்டு தமிழர்கள் தான் இன்றைய அரசியல் சூழ்நிலையில் பேசவேண்டும், அதற்காய் செயற்பட வேண்டும். ஈழத்தில் வாழ்பவர்கள் அடக்குமுறைக்கு உள்ளானவர்கள். அவர்கள் அது பற்றி பேசவே முடியாது. புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு தான் முக்கினாலும் ஓரளவிற்கே சர்வதேச அரசியல் கவனத்தை திருப்பலாம். ஆனால் அதுவும் மிக, மிக முக்கியம். புலத்தில் தமிழர்கள் வாழாதிருந்தால் இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரங்கள் மட்டுமே எடுபடும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தமிழகமும், சிங்கள சமூகத்தை விடவும் எண்ணிக்கையில் பலத்தில் அதிக வலு கொண்ட  தமிழக தமிழர்களும் தான் இன்னும் காத்திரமாக செயற்பட வேண்டிய தருணமிது. அதன் ஆரம்ப படிநிலையாகத் தான் மெரீனா ஒருங்குகூடலை கருத முடிகிறது.

தமிழ்நாட்டில் அனேகமாக அரசியல் கூட்டங்கள் என்றால் தான் பெரும்பாலும் இவ்வளவு திரளாய் மக்கள் திரள்வார்கள் என்று மனதில் பதிந்து போனது. பெரும்பாலும் செய்தி ஊடகங்கள் கணிப்பின்படி மெரீனா நிகழ்வில் ஐம்பதாயிரம் முதல் எழுபத்தைந்தாயிரம் பேர்வரை தங்கள் பங்களிப்பையும் அஞ்சலியையும் ஈழத்தமிழர்களுக்காய் செலுத்தினார்கள் என்று தெரிந்துகொண்டேன். இந்த நிகழ்வு நிச்சயமாய் அரசியலில் தமிழக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களுக்கு ஓர் செய்தியை சொல்லியிருக்கும். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இனியும் இவர்களின் அரசியல் சாணக்கியம் செல்லுபடியாகாது என்பது தான் அது. இதுபோன்ற காத்திரமான செயற்பாடுகள் ஈழத்தமிழர்களின் உரிமைகள் விடயத்தில் தொடர வேண்டும்.

இந்த நிகழ்வு குறித்த சில எண்ணங்கள், கருத்துகளையும் பதிந்துகொள்கிறேன். நிகழ்வில் யாரும் அதிகம் மேடைப்பேச்சுக்களை நிகழ்த்தவில்லை என்று படித்தேன். அரசியல் வெற்றுமுழக்கங்கள், பேச்சுகள் தேவையில்லை என்றாலும் ஈழத்தின் விடுதலை குறித்து சில கோஷங்கள் இணையம் மற்றும் பதிவுலகம் பற்றி தெரியாதவர்களுக்கும் ஓர் புரிதலை உண்டாக்கியிருக்கும். ஈழப்பிரச்சனைக்கு தமிழீழமே தீர்வு; டெல்கி இனிமேலும் தமிழர்களை ஈழத்தமிழர் விடயத்தில் ஏமாற்ற முடியாது; ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை மறக்கமாட்டோம் என்பன முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவை. அதிகமான இளைய தலைமுறையினர் பங்கு பற்றியதும் ஓர் ஆரோக்கியமான விடயம். ஜாதி, மதம், அரசியல் வேற்றுமைகள் எல்லாத்தையும் மறந்து பங்குகொண்டார்கள் என்பதும் ஆரோக்கியமே.

அடுத்து, ஈழ விடயத்தில் தமிழகத்தில் ஓர் அமைப்பு இவ்வளவு தெளிவாய், காத்திரமாய் செயற்படும்போது பொதுவாக பொதுசனத்தின் மனதில் இயல்பாய் எழும் கேள்வி, இவர்கள் அரசியலில் ஈடுபட இது ஓர் முஸ்தீபா என்பது தான். என் பொதுப்புத்திக்கு எட்டிய வரையில் மே பதினேழு இயக்கம் அரசியலில் ஈடுபடும் உத்தேசம் இல்லை என்பது தெரிகிறது. இருந்தாலும், இனி இந்த அமைப்பின் மீது அரசியல் பார்வை படும். நாம் தமிழர் இயக்கத்தின் அனுபவத்தின் வழி தெரிந்துகொண்டது. அதனால், மே பதினேழு இயக்கம் இது குறித்து ஓர் தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டும். அரசியல் சார்ந்த, சாராத அனைத்து தரப்பினரையும் ஒரே குறிக்கோளின் அடிப்படையில் இணைக்கும் ஓர் அமைப்பாக இந்த அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும். அரசியல் சார்ந்தோரும் உள்வாங்கப்பட்டால் நிச்சயம் அரசியல் சாயம் பூசும் நிலை உருவாகலாம், தவிர்க்கமுடியாதது. பழ.நெடுமாறன் அவர்களால் ஈழத்தமிழர்களுக்கு என்று ஓர் அமைப்பு பல கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. தியாகி முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் பழ.நெடுமாறன் போன்றோர் செயற்பாடுகள் மூலம் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கை இற்று, அற்றுப்போய்விட்டது.

யார் உள்வாங்கப்பட்டாலும், விட்டாலும் மே பதினேழு இயக்கம் தங்கள் நோக்கம், செயற்பாடுகள் குறித்த தெளிவான விளக்கங்களை கொடுப்பதன் மூலம் அதிகம் பொதுமக்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது என் கருத்து. ஓர் அமைப்பின் பலம் என்பது அரசியல் பிரதிநிதித்துவமோ அல்லது சார்போ அல்ல. எத்தனை பேர் ஓர் அமைப்பின் சரியான நோக்கத்தை புரிந்துகொண்டு அவர்களோடு தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் என்பதிலேயே உண்டு. ஒரு அரசியல் கட்சியை விடவும் இப்படி ஓர் அமைப்பின் பின்னால் பலபேர் ஒன்று சேரும் போது அது அரசியல்வாதிகளையே யோசிக்க வைக்கும். ஒரு நீதியான, நேர்மையான நோக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் சக்தியின் முன்னால் எந்த அரசியலும் எடுபடாது.

தமிழ்நாட்டின் ஈழம் குறித்த தெளிவான நிலைப்பாடுகளை இந்த அமைப்பாவது சர்வதேசத்தின் செவிகளை எட்ட வைக்கவேண்டும். இல்லாது போனால் இந்திய தேசியமைய அரசியலின் பொய்களே இலங்கை அரசின் பொய்கள் போல் சர்வதேசத்தினால் வாங்கப்படும். மெரீனா நிகழ்வு குறித்து ஐ. நா.வுக்கும் சில வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் அறியத் தரப்பட்டதாக தெரிகிறது. இதுவும் ஓர் சரியான நகர்வு தான்.

மொத்தத்தில் இந்திய வெளியுறவு கொள்கை, கொள்கை வகுப்பாளர்கள், சரவதேசம் இவர்கள் அனைவரையும் ஈழம் குறித்த சரியான நகர்வுகளை நோக்கி செலுத்த தமிழகத்தின் இதுபோன்ற செயற்பாடுகள் தொடரவேண்டும். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் தலையீடுகள் சரியான முறையில் இருக்க வேண்டுமானால் தமிழக தமிழர்களாலேயே அதை சாத்தியமாக்க முடியும்.


பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற போர்வையில் இனப்படுகொலையை தூண்டிவிட்டது அமெரிக்கா. இறுதிப்போரின் போது ஆயுதங்கள் விற்றது ஐக்கிய ராச்சியம். உலகில் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் (Cluster Bombs), White Phosphorus எரிகுண்டுகள், நச்சுக்குண்டுகள் இவற்றை தமிழனை கொன்றொழிக்க இலங்கைக்கு விற்றவர்கள், சித்தாந்தங்களின் அடிப்படையில் தங்கள் நாடுகளை ஆளும் போலி இடதுசாரிகள், நிபந்தனையின் பேரில் அமெரிக்காவிடம் தங்களை அடகு வைத்த நாடுகள் யாருமே ஈழத்தமிழனின் இனப்படுகொலையை ஒத்துக் கொள்ளவோ அல்லது எங்களுக்குரிய நியாயமான தீர்வு குறித்தோ பேசவே போவதில்லை.


ஒட்டு மொத்த உலகமே இன்று ஈழத்தமிழனுக்கு எதிராகத்தான் செயற்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த நிலையில் எங்களுக்காய் உரிமையோடும், வலுவோடும் பேசவும், செயற்படவும் கூடிய சகல சாத்தியங்களும் ஆறரை கோடிப்பேர் கொண்ட தமிழகத்துக்கே உண்டு. 


14 கருத்துகள்:

தவறு சொன்னது…

நான் தமிழன் நீயும் தமிழன் என்கிற உணர்வுதான் ஜாதி , மதம் பிரிவுகள் அற்று பார்கக சொல்லியிருக்கும் போல எப்படியிருந்தாலும் நல்லது நடக்கவேண்டு்ம் ரதி.

மே 17 இயக்கம் தாங்கள் சொல்வது போல் தெளிவான வரையறைகளை கொடுத்தால் தான் நல்லது.

ராஜ நடராஜன் சொன்னது…

தற்போதைய நிலையில் ஈழ உணர்வை உயிர்ப்பித்தல் ஒன்றையே கடந்த இரண்டு வருடங்களில் செய்து வந்துள்ளோம்.

ஐ.நா அறிக்கையின் போர்க்குற்றத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு இதிலிருந்து எப்படித் தப்பித்துக்கொள்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

இரண்டு தமிழக கழக கட்சிகளும் அவரவர் தேவைக்கு சட்டசபை தீர்மானங்களை இயற்றியுள்ள போதிலும் ஜெயலலிதா ஈழ மக்களின் துயரங்கள் குறித்து தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்துவேன் என்கிறார்.முந்தைய நிலையின் ஜெயலலிதாவின் ஈழநிலைப்பாடு இன்னும் சந்தேகத்தையே தோற்றுவித்தாலும் சட்டசபை தீர்மானம் அளவுக்கு மாறியது வரவேற்க வேண்டிய ஒன்று.கருணாநிதியால் செய்ய இயலாததை செய்து முடிக்கும் சந்தர்ப்பம் ஜெயலலிதாவுக்கு வாய்த்திருக்கிறது.

கடந்த வாரம் மன்மோகன் ஐந்து பத்திரிகையாளர் சந்திப்பில் விடுதலைப்புலிகள் குறித்தும்,ஈழமக்களின் வாழ்க்கை குறித்தும்,தமிழகத்தின் தீர்மானம் குறித்த கவலைகளையெல்லாம் வெளியிட்டிருக்கிறார்.இது குறித்த தகவல்களை தமிழகத்தின் பொது ஊடகங்கள் கூட வெளிக்கொண்டு வருவதில்லை.எப்படியோ காங்கிரஸ் ஆட்சியில் ஈழப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு இல்லை என்பது மட்டும் உறுதியாக சொல்லலாம்.

ராஜ நடராஜன் சொன்னது…

தமிழகத்தில் காங்கிரஸ் தவிர ஏனைய கட்சி சார்பாளர்கள் ஒன்றாக இணைந்து பணிபுரியா விட்டாலும் கூட மொழி உணர்வை அவரவர் தரப்பில் தக்க வைத்துகொண்டிருக்கிறார்கள்.அதே போல் புலம்பெயர் தமிழ்மக்கள் இயக்கங்களும் செயல்பட்டாலும் குறைகாணும் போக்கை இணையம் வாயிலாக காண முடிகிறது. இதனை தொடர்ந்து நான் பதிவு செய்து வருகிறேன்.இருந்தாலும் எதிர்ப்புக்கள் இல்லாமல் எதுவுமில்லையென்பதால் அமெரிக்க,கனடா மற்றும் ஏனைய புலம்பெயர் தமிழர்கள் லண்டன் வாழ் தமிழர்களுடன் இணைந்து செயல்படலாம்.

பிரிட்டனின் செயலுக்கும்,நிலைப்பாட்டுக்கும் அமெரிக்கா ஓரளவு செவி சாய்க்கும் சாத்தியங்கள் இருப்பதாலும்,பிரிட்டனின் கடந்த கால தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டிய தார்மீக கடமை இருப்பதாலும் லண்டனை மையப்படுத்திய முன்நகர்வுகள் வெற்றியை அடையும் இலக்காக அமையும்.

ராஜ நடராஜன் சொன்னது…

மே 17 இயக்கத்தின் இணைப்பாளர் திருமுருகன் நம்பிக்கைக்குரிய முகமாகத் தென்படுகிறார்.பதிவுலகில் கூட மே 17 இயக்கத்துடன் இணைந்து களத்தில் பணி செய்யும் சமூக ஆர்வலர்கள் உள்ளார்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.நிறைய பேர் முக அடையாளமில்லாது மொழி உணர்வை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

நீங்கள் கூறியபடி நாம் தமிழர் இயக்கமும்,மே 17 இயக்கமும் சரியான Cloning!

vidivelli சொன்னது…

nallla pathivu...
valththukkal...


can you come my said?

Rathi சொன்னது…

தவறு, தமிழன் என்கிற உணர்வுடன் ஆறரை கோடிப் பேரையும் சிங்களம் ஏய்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் கூட.

Rathi சொன்னது…

ராஜநட, காங்கிரஸ் ஆட்சியில் ஈழப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா என்பதை விடவும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் இல்லை வேறு யார் ஆட்சி என்றாலும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மாறுமா??

எங்கள் விடுதலையின் முழுமுதல் முட்டுக்கட்டை இந்தியா, இந்தியா, இந்தியா தான். இந்தியா இந்தியர்களையும் வாழவிடுவதில்லை. ஈழத்தமிழர்களையும் உயிர்வாழவே விடுவதில்லை.

சர்வதேசம் ஈழத்தமிழர்களுக்கு செய்த, செய்துகொண்டிருக்கிற கொடுமைகளுக்கு செய்யவேண்டிய ஒரே பிராயச்சித்தம் தமிழீழம் தான் தீர்வா என்கிற ஓர் வாக்கெடுப்பை (Referundum) ஐ. நா. சபை மூலம் நடத்த வேண்டும். தென் சூடானுக்கு அது சாத்தியம், கிழக்கு திமொருக்கு சாத்தியம். ஏன் ஈழத்துக்கு மட்டும் சாத்தியமில்லை. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் சொன்னது போல் தமிழீழம் தான் தீர்வு. அதை ஓர் வாக்கெடுப்பே தீர்மானம் செய்யவேண்டும் என்பதை ஈழத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் காத்திரமாக சொல்லவேண்டும். எங்கள் சுயநிர்ணய உரிமைக்கான எல்லா நியாயங்களும் சரிவரவே இருக்கிறது.


ஐரோப்பாவின் ஈழத்தமிழர்கள் பற்றிய அக்கறை எப்போ அவர்களை திருப்பி அனுப்பலாம் என்பது தான் என் கருத்து.

Rathi சொன்னது…

விடிவெள்ளி, நன்றி. உங்கள் தளத்துக்கு வரச்சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நிச்சயம் வருகிறேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!மறுமொழி என்ன சொன்னீர்கள் என்று பார்க்க மீண்டும் வந்தேன்.வெளியுறவுக்கொள்கை என்பது இரும்பால் அச்சடித்த வாசகங்கள் அல்ல.உலக நகர்விற்கும்,உள் அழுத்தங்களுக்கும் தக்கவாறு செயல்படுவதே.இது வரை வாய் திறக்காமல் இருந்த வெளியுறவுத்துறை தமிழர்களை பேச்சாலாவது திருப்தி படுத்த வேண்டியோஅல்லது ஜெயலலிதாவின் தீர்மானத்துக்கு முகம் காட்டும் முகமாக முதல் முறையாக நிருபாராவ் வாய் திறந்திருக்கிறார்.தமிழகத்தின் அழுத்தங்களுக்குத் தக்கவாறே மத்திய அரசு செயல்படும்.எனவே தமிழகத்திலிருந்து எழும் அரசியல் ரீதியான அரசு சார்ந்த குரலைப் பொறுத்தே இந்தியா செயல்படும்.

Referendum பற்றி முன்பே பதிவில் பேசியாகிவிட்டது.அதனை நோக்கி எப்படி செல்வது என்பதை சிந்திக்க வேண்டும்.

ஐரோப்பிய நாடுகள் அதற்கான உத்தரவாதத்தையும் பெற்றுத்தரும் பொருட்டு திருப்பி அனுப்புவதில் கவனமாக இருப்பது நல்லதுதான்.

நாளை மீண்டும் ஒரு போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் முன்னெடுக்கிறார்கள்.பார்ப்போம்.

Rathi சொன்னது…

ராஜ நட, இந்திய வெளியுறவுக்கொள்கை, rererendum இரண்டிலுமே உங்கள் வார்த்தைகளை இறுதியாய், உறுதியாய் கொள்கிறேன். இது இரண்டுமே தமிழ்நாட்டு தமிழர்கள் நினைத்தால் சாத்தியம் என்று நீங்கள் சொல்வதாக புரிந்து கொள்கிறேன்.

கும்மி சொன்னது…

சிறப்பான கட்டுரை. வாழ்த்துகளும் நன்றியும்.

மே 17 இயக்கத்தின் மீதான உங்கள் அக்கறைக்கு நன்றி.

தமிழகத் தமிழர்கள் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்தத் தமிழர்களும் ஈழத்தை மீளக் கட்டமைப்பதில் பெரும் பங்காற்றுவார்கள் என்று எண்ணுகின்றேன். இணைப்புப் புள்ளி ஒன்று குறித்து ராஜ நடராஜன் அவர்களை நேரில் சந்தித்தபோது உரையாடினேன். இடையில் ஏற்பட்ட சிறு உடல் நலக் குறைவினால் அதனை செயல்படுத்த இயலாமல் போய்விட்டது. வெகு விரைவில் தொடங்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். இப்பொழுது ஒத்தக் கருத்துள்ள நண்பர்களும் இணைந்து கொள்ளும் வாய்ப்பிருப்பதால், இன்னும் சிறப்பாக செய்ய இயலும் என்று எண்ணுகின்றேன்.

கும்மி சொன்னது…

ராஜ நடராஜன் அவர்கள் நான் கூற விரும்பிய பலவற்றைக் கூறிவிட்டதால், எனது பின்னூட்டம் சுருக்கமாகவே அமைந்துவிட்டது.

மே 17 குறித்த விளக்கங்கள் அனைத்தையும் எங்கள் வலைத்தளத்தில் வெளியிடுகின்றோம். இப்பொழுது இயங்கும் வலைப்பூவிலும் தகவல்கள் சேர்க்கப்படும்.

http://may17movement.blogspot.com/

.

Rathi சொன்னது…

கும்மி, நன்றி உங்கள் பதிலுக்கு. இணைப்புள்ளி என்பது என் பார்வையில் ஏன் முன்பு போல் உலகளாவிய நிகழ்வாய் (உ-ம்: பொங்குதமிழ்) உலகத்தமிழக்ர்களின் குரல் ஒரே நேரத்தில் இன்னோர் முறை ஒலித்தால் என்ன என்று தோன்றுகிறது. அதற்கு ஏற்றாற்போல் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து அழைக்கலாம். ஆனாலும், உலகத்தமிழர்களின் ஒருமித்த குரலாய் ஏன் மறுபடியும் ஈழத்தின் தீர்வு குறித்து ஒலிக்கக் கூடாது!!! அதுவும் தெற்கு சூடான் விடுதலையோடு ஓர் ஒப்பீடாய் ஏன் இருக்கக்கூடாது. இது என்னுடைய எண்ணம். மிகப் பெரிய முயற்சி தான்.

புலம் பெயர் தமிழர்கள் என்னும் போது இப்போது ஐரோப்பிய தமிழர்களுக்கு சனல் நான்கு, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது ஆதரவு, கிரிக்கெட் எதிர்ப்பு என்று அங்கே களங்கள் சாதகமாய் உண்டு. இங்கே கனடாவில் தமிழர் தரப்பு சில அரசியல் முன்னெடுப்புகளை செய்கிறார்கள் என்று தான் சொல்கிறார்கள். ஆனாலும், தற்போதைய அரசு இன்னும் ஈழத்து அகதிகள் கப்பல் விவகாரத்தையே காட்டி எத்தனை தரம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று யோசிப்பவர்கள். இப்படி சில காரணங்களால் எங்களுக்குரிய களங்கள் குறிப்பாக கனடாவில் கட்டிஎழுப்பப்படுவதில் நிறையவே சவால்கள் உண்டு. அதனால் தான் ராஜ நட புலம் பெயர் தமிழர்கள் குறித்து பேசியபோதும் பேசாமல் இருந்தேன்.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

கும்மியிடம் என் கருத்துக்களை தெரிவித்து மின் அஞ்சல் அனுப்பினேன். இது குறித்து திருமுருகனிடம் நிறைய பேச வேண்டும். இயக்கம் குறித்து முழுமையான புரிதல்களை வெளியே சொல்ல வேண்டும் என்று ரூவாண்டா நண்பர் கூட கூட்டத்தில் கலந்து விட்டு என்னை அழைத்து சொல்லியிருந்தார். ஆனால் நான் நினைத்தபடியே அணைவரும் என் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் இருக்கிறார்கள்.