ஜூலை 26, 2011

ஒழுக்காற்று விழுமியங்களும் Mid-Life Crisis ம்

அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தேறும். எனக்கு அதை விமர்சித்து எழுத தெரியாத ஓர் குறைபாட்டினால் அதிகம் அது பற்றி எழுதுவதில்லை. நான் கடந்து சென்ற அல்லது என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அவர் தம் இயல்புகளோடு, சில நிகழ்வுகள் மூலம் எதையாவது மனதில் பதியவைத்து விட்டுப் போவார்கள். வெறும் பார்வையாளன் என்கிற பிரக்ஞையோடு கடந்து வந்த நிகழ்வுகளும் உண்டு.

ஏதாவது ஓர் பொது இடத்தில் மனிதர்களை அவர்களின் இயல்புகளை ஏதோவொரு விடயத்தில் கவனத்தால் ஈர்க்கப்பட்டு பார்த்தால் இங்கே உள்ளவர்கள் பெரும்பாலும் கோபத்தோடு சொல்வார்கள், "OK folks! the show is over" என்று. இது நாகரீகம் இல்லாத ஓர் செயல் சென்று நானும் இது போன்ற கவனத்தை கலைக்கும் விடயங்களை பார்த்தாலும், கேட்டாலும் தவிர்த்துவிடுவதுண்டு. விலகியும் விடுவதுண்டு. 

இதையும் மீறி ஓர் சில சம்பவங்கள் என் கண் முன்னே நடக்கும் போது சிரித்துக்கொண்டே பார்த்ததும் உண்டு. அப்படி நான் பார்த்து கொஞ்சம் சங்கடப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. அவைகளில் இரண்டு பதின்பருவத்தினரின் வெள்ளந்தியானதும், வில்லங்கம் நிறைந்த சில செயல்கள் மற்றும் நடுத்தர வயதினரின் Mid-life Crisis.

கட்டற்ற சுதந்திரம் எல்லா நேரமும் நாம் எதிர்பார்க்கும் நல்ல விளைவுகளை கொண்டுவருவதில்லை. அதே நேரம் மிகவும் கட்டுப்பாடாய் மதம், கலாச்சாரம் என்கிற தீவிர கட்டுப்பாடுகளும் தீமையை விளைவிக்காமல் இருந்ததில்லை. எந்த விதத்தில் சிந்தித்தாலும் எல்லாமே தனிமனித சுதந்திரம், தனிமனித ஒழுக்கம் சார்ந்தே எடுத்தியம்பப்படுகிறது. சுதந்திரமோ, கட்டுப்பாடோ அவரரவர்கள் தங்களுக்குரிய எல்லைகளை நிர்ணயித்துக்கொண்டால், தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் அதுவே ஆரோக்கியம்.

இங்கே பெரும்பாலும் பொது இடத்தில் ஆணும், பெண்ணும்  கட்டியணைப்பதோ, முத்தமிட்டுக்கொள்வதோ ஒன்றும் நாகரீகமற்ற செயல் அல்ல. அது அவர்கள் வாழும் சூழல், அவர்களின் கலாச்சாரம் என்பதைப் பொறுத்தது. பெரும்பாலும் இவ்வாறு கலாச்சார ஒழுக்காற்று விழுமியங்களைப் பற்றி என்னை இங்கே சிந்திக்க வைப்பவர்கள் பதின்பருவத்தினரே. இளையவர்கள் மட்டுமல்ல வயது வந்தவர்கள் கூட எல்லை மீறாமல் பொது இடத்தில் பிரிவின் நிமித்தமோ அல்லது அன்பை வெளிப்படுத்தவோ இவ்வாறு முத்தமிடுவதுண்டு. ஆனாலும், இளையவர்கள் என்பதால் கொஞ்சம் யோசிக்கவே வைக்கிறார்கள்.

கலாச்சாரம் குறித்ததல்ல என் கவலை. வயதின் வேகம் இவர்களை எந்த பாதாளத்தில் தள்ளிவிடுமோ என்பது தான் காரணம். முத்தக்காட்டில் பற்றிக்கொள்ளும் மோகத்தீயும், அவர்களுக்கு கிடைக்கும் அல்லது அவர்கள் தேடிப்போகும் தனிமையும் எதுவரை அவர்களை இட்டுச்செல்லும் என்றும் பயம் காட்டுவார்கள்.  
முத்தமிடுவதில் தொடங்கி மது, சிகரெட், போதைப் பழக்கம் என்று தங்கள் எதிர்காலத்தை தாங்களே சீரழிக்கும் மூடத்தனம் என்று யோசித்தால் தற்கால சினிமா, சமூக, பொருளாதார ஏற்பாடுகள், கட்டமைப்பு குறித்தே குற்றம் சொல்லும் ஒரு நிலைக்கும் தள்ளவும் படுகிறோம். காதல் தோல்வி என்றால் நண்பர்களோடு உட்கார்ந்து குடித்து தொலைப்பதே அதற்கான தீர்வு என்று சினிமா வேறு கற்றுக்கொடுக்கிறது. இனிமேல் இந்த உலகம் எமக்காய் மாறப்போவதில்லை. இந்த சீர்கேடுகளிளிருந்து எங்களை எப்படி தற்காத்துக்கொள்வது என்பது எங்கள் பொறுப்பு. தீர்வு அவரவர் கைகளிலேயே உள்ளது. நாம் விரும்பும் மாற்றம் என்பது எங்களிடமிருந்து, அதாவது தனி மனிதனிடமிருந்து தொடங்க வேண்டும்.

எப்படியாயினும், இது குறித்த எந்த தாக்கங்களும் பெற்றோருடன் வாழும் வரையில் தெரிவதில்லை. வாழ்க்கை நிறையவே ஜாலியாய்ப் போகும். எந்தப் பொறுப்பும் கிடையாது. வீடு, சாப்பாடு, ஆதரிக்க உறவுகள், அரட்டையடிக்க, படிக்க என்று நட்புகள், சின்ன சின்னதாய் குறும்புகள், கபடமிலாக் காதல் இப்படி வாழ்க்கை அதன் இயல்பில் தான் நகரும். படித்து முழுவதுமாகவோ அல்லது அரைகுறையாகவோ முடித்து, அடித்துப் பிடித்து போட்டிகள் நிறைந்த வேலைச் சந்தையில் ஓர் வேலையும் கிடைத்தாயிற்று. வாழ்க்கையின் அடுத்த கட்டம் திருமணம்.

திருமணம் செய்து நடுத்தர வயதை எட்டியபின் வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை அசைபோடுவார்கள். அப்போது எதை சாத்தித்திருக்கிறோம், எதை
கோட்டை விட்டிருக்கிறோம் என்றெல்லாம் தீவிரமாய் பரிசீலனை செய்பவர்களும் உண்டு. இந்தக் காலகட்டத்தில் சிலருக்கு மறுபடியும் இளமை திரும்பும். இதில் ஆண், பெண் என்கிற வேறுபாடுகள் கிடையாது.


வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்துகொண்டவர்கள் பெரும்பாலும் தங்கள் முதல் காதல், முதல் முத்தம், Autograph Momories, தாங்கள் செய்த குறும்புகள் என்று இளமைக்கால பழைய நினைவுகளில் மூழ்கிப்போவார்கள். வாழ்க்கையை சமப்படுத்தக் கற்றுக்கொள்வார்கள். இன்னும் சிலரோ வயதுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல் அபத்தக் களஞ்சியங்களாக மாறிப்போவார்கள். சிலரின் வாழ்க்கையில் விதி தனது கைவரிசையை காட்டியிருந்தால் துரதிஸ்டவசமாக வாழ்க்கை துணையினை இழந்திருப்பார்கள். இந்நாளில் கொஞ்சம் அதிகரித்து வருவது விவாகரத்து, வேலையிழப்பு, கணவனோ, மனைவியோ ஒருவருக்கு மற்றவர் உணமையாக இல்லாதிருப்பது. இது போன்ற பிரச்சனைகள் தான் Mid-life Crisis, மனிதவாழ்வின் நடுப்பகுதியில் வரும் நெருக்கடி என்று சொல்லப்படுகிறது.

கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம், வாழ்க்கை சூழல் போன்றனவே இது போன்ற Mid-life Crisis என்கிற குழப்பமான விடயங்களை ஒருவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை தீர்மானிக்கும். நம் தமிழ் கலாச்சாரத்தில் எம்மவர்கள் எந்தப் பிரச்சனையையும் நடுத்தர வயதில் அனுபவ அடிப்படையில் சமாளிப்பார்கள். அவர்கள் அதிகம் சிக்கித்தவிப்பது இன்னோர் திருமணம், காதல் என்கிற ஓர் சூழ்நிலை வரும்போது தான். பருவத்தில் வரும் காதலுக்கு சமூக நிர்ப்பந்தம், குடும்ப சூழ்நிலை என்பன குறுக்கே வரலாம். இந்த நடுத்தர வயதுக் காதலுக்கு காதலிப்பவர்களே தங்களுக்கு தாங்களே தடையாய் இருப்பார்கள். இந்த வயதில் காதல், திருமணம் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட முடிவாய்த்தான் இருக்கவேண்டும். இருந்தும், சமூக விழுமியங்களின் விழுதுகளை பிடித்துக்கொண்டு தொங்குபவர்களுக்கு அது சாத்தியமாகாமலும் போகலாம். அது அவர்கள் தவறும் அல்ல. காலங்காலமாய் நம்பிய, கடைப்பிடித்த ஓர் பழக்கத்தை எளிதில் முறித்துக் கொண்டோ அல்லது தாண்டியோ வர முடிவதில்லை. அது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் கைகூடுவதுமில்லை.

அதுவும் இல்லையா குழந்தைகள் இருந்தால் அது குறித்தும் அதிகம் யோசிப்பார்கள். தனது தேர்வான புதியதோர் வாழ்க்கை துணை தன குழந்தைகளை எப்படி நடத்துவார்கள் என்பது தான். அதுவும் இல்லையா இந்த சமூகம் தன்னை பழிக்குமோ, ஒதுக்குமோ என்றெல்லாம் யோசிப்பார்கள். ஒரு திருமணம் பொய்த்துப் போனால், மறுமணம் என்பது ஒரு சிலருக்கு சமூக நிந்தனை ஆக கூட இருக்கலாம். இருந்தாலும் வாழ்க்கையின் நடுப்பகுதி குழப்பங்களுக்கு அதிகம் ஆளாகி தப்புத்தண்டா பண்ணுபவர்கள் ஆண்கள் என்று தான் சொல்கிறார்கள்.

இந்த நடுத்தர வயது குழப்பமான காதலை கொஞ்சம் மெதுவாய் தொட்டு சொல்லியிருக்கிறது  வேட்டையாடு விளையாடு திரைப்படம். மனைவியை இழந்த ஆண், கணவனை விவாகரத்து செய்த பெண் இருவருக்குமிடையே உருவாகும் காதல் என்னும் நெருக்கம். இதையெல்லாம் தனிக்கதையாய் சொல்லப்போனால் நிறையவே அடுக்கடுக்கான காரணங்களை சமூகத்தை சமாளிக்க சொல்லவேண்டும். இப்படி ஓர் கிளைக்கதையாய் சொல்லும் போதில்  அதுகுறித்த தேவையற்ற கேள்விகளும், விதண்டாவாதங்களும் தவிர்க்கப்படுவது போல் தெரிகிறது.

Mid-life Crisis # 1 இங்கே வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் "வெண்ணிலவே, வெள்ளி, வெள்ளி நிலாவே..." பாடலை இணைக்க நினைத்தேன். ஏனோ முடியவில்லை. அது Mid-life Crisis இன் தெளிவில்லாத மனக்குழப்பங்கள் நிறைந்த ஆரம்பக்கட்டங்களை விளக்குவதாய் தோன்றியது.

Mid-life Crisis # 2
.
எல்லாநேரமும், எல்லோருக்கும் Mid-life Crisis அழகான உணர்வுகளோடும், haapy-ending உடனும் இருப்பதில்லை. சிலர் பிறர் மனையை நோக்க வேண்டியது! பிறகு, பாடலில் வரும் "கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேன்" என்கிற வரிகளை மனதில் வைத்துக்கொண்டு சந்தோசமாக இருக்கும் குடும்பத்தை உதறிவிட்டு இன்னோர் பெண்ணிடம் அல்லது ஆணிடம் அதை சொல்லி காமெடி பீஸ் ஆகவேண்டியது.

பிறர்மனை நோக்க இப்போதெல்லாம் Social Media கூட வசதியாய் அமைந்துவிடுகிறது போலும். திருவள்ளுவர் இப்போது இருந்திருந்தால் இது பற்றி என்ன சொல்லியிருப்பார்!!! திருவள்ளுவர் என்ன சொல்லியிருப்பார் என்பதல்ல இங்கே குழப்பம். திருவள்ளுவர் ஏதாவது சொல்லியிருந்தாலும் அவரை பதிவெழுதி விளாசி இருப்போம் என்பது தான் வேடிக்கை. 

Mid-life Crisis எல்லா நேரமும் காமெடியாக இருப்பதில்லை. அதுக்கு சிறந்த உதாரணம் "பச்சைக்கிளி முத்துச்சரம்" என்கிற திரைப்படம். குடும்பம் என்றால் கருத்து வேறுபாடுகள், தவிர்க்க முடியாத பிரச்சனைகள் வருவது தவிர்க்க முடியாதது. இருந்தும் அதிலிருந்து தப்பிக்க தற்காலிகமாய் என்று இன்னோர் துணையைத் தேடுவது பெரும்பாலும் ஒருவர் தனது தலையில் தானே மண் அள்ளிப்போடுவதற்கு சமம்.

திருமணம், குடும்பம், குழந்தைகள் என்பன "life time commitment" என்று சொல்வார்கள். இந்தப் பொறுப்பிலிருந்து யார் வழுவினாலும் பெரும்பாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். திருமணம், குடும்பம் என்கிற பொறுப்புகளை சுமக்க விரும்பாதர்வகள் அதிலிருந்து விலகியிருப்பதே மேல். இதுபோன்ற பொறுப்புகளை ஏற்க விரும்பாதவர்களுக்கு இப்போ அமேரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் புதிதாய் ஓர் கருத்துருவாக்கம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் பெயர், "Friends with Benefits". இதன் அர்த்தம் திருமணம், குடும்பம் என்கிற பொறுப்புகள் இல்லாமல் வெறும் உடற்கூற்றின் சந்தோசங்களுக்காக மட்டும் நட்பாய் இருப்பது. தமிழ் சமூகத்துக்கு இந்த தேவை இதுவரை ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. இனிமேலும் அப்படியே இருக்குமா சொல்லவும் தெரியவில்லை.

என்னமோ போங்கப்பா!!

I can't thank Google enough for those two hilarious images :)))

ஜூலை 24, 2011

பதிவர் தெகாவுக்கு ஓர் பதில்!!தெகா,

"I am experiencing an Oscar moment". என் உடைந்த ஆங்கிலம் புரியாதவர்களுக்காக, நான் சொல்லவருவது, நான் ஓர் ஆஸ்கார் விருது வாங்கியதைப் போன்ற ஓர் கணத்தினுள் சந்தோசத் திணறல்களோடு இருக்கிறேன். இந்த ஆஸ்கார் விருதை வாங்க வருபவர்களை கவனித்தால், குறிப்பாக அவர்கள் முக பாவங்களை, முகத்தின் அத்தனை அசையும் தசைநார்களும், கண்களும் அவர்களின் சந்தோஷ தருணங்களை முகத்தில் படம்பிடித்துக்காட்டும். சிலர் பேச்சில் திணறுவார்கள்.

நீங்கள் என் பதிவுகளான "காட்சிப்பிழைகள்" மற்றும் "இதயம் பேசுகிறேன்" பதிவுகளுக்கு கொடுத்த இழுத்துக்கட்டிய புற்களின் பொக்கேவை தான் சொல்கிறேன். "இயற்கை நேசியின் சார்பில் அதுக்கு ஒரு பிடி இழுத்து கட்டிய புற்களின் பொக்கே பிடிங்க :))". இந்தப் புற்களின் பொக்கே இனி என் எழுத்தின் ஓவொரு சொல்லையும் ஆளுமை செய்யும் என்பதில் ஐயமில்லை.

உங்களைப்பற்றி ஜோதிஜி சொல்லக்கேட்டதிலிருந்து உங்கள் கள்ளிக்காட்டு இதிகாச இயல்புகள் மீது ஓர் தனி மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்ப்பட கதாநாயகியை கடத்திக்கொண்டு போன நாயகன் போல், நீங்கள் ஜோதிஜியை இரண்டு நாட்கள் காட்டிற்குள் கடத்திச்சென்று, பத்திரமாய் திருப்பி கூட்டிவந்ததை இன்றும் சிலாகித்து சொல்வார். பதிவுலகில் இது போன்ற நட்புகள் அமைவது அபூர்வம்.

ஜோதிஜி என்றவுடன் தான் இன்னோர் விடயமும் சொல்லத்தோன்றுகிறது. நான் இவ்வளவு நாளும் ஜோதியை என் பெரிய குருஜி என்று தான் பதிவுலகில் குறிப்பிட்டிருக்கிறேன். இன்றிலிருந்து அதை மாற்றலாம் என்றிருக்கிறேன். அதாவது, ஜோதிஜி எழுத்தின் உச்சங்களை தொட்டுக்கொண்டிருப்பதால், இனி அவரை என் குருஜி என்று சொன்னால், அவரின் தரத்துக்கு என் எழுத்தும் இருக்கவேண்டும். அது சாத்தியமா தெரியவில்லை எனக்கு. அதனால் இன்றுமுதல் நான் ஜோதிஜியின் எழுத்துக்கு ஓர் வாசகியாக இருப்பதே சாலப் பொருந்தும் என்று நம்புகிறேன். திறக்காத கதவொன்று திறந்திருக்கிறது. அது பற்றி ஜோதிஜி விரைவில் ஓர் பதிவெழுதி அசத்த வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன்.

அப்புறம் தெகா, என் சின்னக் குருஜி விந்தைமனிதன் என்கிற ராஜாராமன் கூட இன்று என் பதிவுலக அசுர வளர்ச்சியை பார்த்து "சந்தோசமாருக்கு" ன்னு கண்ணு கலங்கி கடுதாசு போட்டுப்பிட்டு ஊருக்கு போயிட்டாரு. ஒரு விஷயம், இந்த "அசுர வளர்ச்சி", "கண்கலங்கினார்" என்பதெல்லாம் நானாக கொடுத்துக்கிட்ட ஓர் பில்டப்!! :) மற்றதெல்லாம் நெசம். நம்புங்க. நம்பணும் நீங்க!!!

இவர்கள் இருவரையும் தவிர என் எழுத்தை எப்போதும் மறக்காமல் ஊக்கப்படுத்தி என்னோடு பயணிக்கும் இன்னும் இருவர், என் ஈழத்து உறவு ஹேமா மற்றும் சக பதிவர் தவறு. ஹேமா என்னை உரிமையோடு ரதி "உஷ்" என்று மிரட்டுமளவிற்கு உரிமையுள்ளவர். :) பதிவர் தவறு என்றதும் தான் ஓர் விடயம் ஞாபகம் வருகிறது. என் காட்சிப்பிழைகள் பதிவு எப்பவோ எழுத தொடங்கி நாலு வரிகளோடு நிறுத்தியிருந்தேன். அவரது அறியது தளத்தில் நான் பார்த்த அந்தப் படம் தான் என் மிச்சப்பதிவை எழுத தூண்டியது. முகத்தில் உதடுகள் வரையப்படாமல், எதையோ சொல்ல நினைத்தும் சொல்லமுடியாதது போன்றதும், உடலும் மனமும் பிரிந்துகிடக்கும் அந்த படம் எதையோ சொல்லாமல் சொல்வது போலிருந்தது.

சில பதிவுலக வரையறைகள் தாண்டி என் எழுத்தை உண்மையான அக்கறையோடு விமர்சிப்பவர்கள் இன்னும் எல்லோருக்கும் என் நன்றிகளை இந்த கடிதம் மூலம் தெரியப்படுத்துகிறேன். குறிப்பாக என் அரசியல் அறிவையும் மதிச்சு என்னோடு அரசியல் பதிவுகளில் மல்லுக்கட்டும் பதிவர் ராஜ நடவுக்கு என் நன்றிகள்.

சரி, என் பதிவு குறித்த உங்கள் விமர்சனத்துக்கு வருவோம்.  காட்சிப்பிழை பதிவில் நான் குறிப்பிட்ட Schizophrenia குறித்து ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன். குணா படத்திலும் கமல்ஹாசன் Schizophrenia குறித்து முக்கிய காதாபாத்திரமான குணா மூலம் சொல்லியிருப்பார். அதில் அவர் விவரித்துக் காட்டிய "Catatonic Schizophrenia" என்கிற, ஓர் இடத்தில் ஆடாமல், அசையாமல் நின்றோ, இருந்தோ, அல்லது ஏதாவதொரு நிலையில் மணிக்கணக்காக அப்படியே உறைந்துபோவதை காட்சிப்படுத்திய விதம் அருமை. ஏதோவொரு இடத்தின் உச்சியில் மணிக்கணக்கில் ஒற்றைக்காலில் கமல் நிற்கும் காட்சியைத்தான் சொல்கிறேன். மனதில் பதிந்து போனது அது.

ஆனாலும், கமல் ஏன்தான் Schizophrenia குறித்துக் காட்சிகளில் விளக்கும் போதில் ஓர் பெண்ணால் தான் அந்த ஆணின் நிலை மோசமானது என்கிற மாதிரி காட்சி அமைக்கிறார் என்றும் கேள்வி எழுகிறது. ஆளவந்தானின் சித்தி கொடுமை, குணாவின் தாயார், ரேகாவின் கதாபாத்திரம், மற்றும் அபிராமி கதாபாத்திரம். இதுவும் காட்சிப்பிழைகளோ!!! கமலின் திரைப்படங்களில் பெண்களின் கதாபாத்திரத்துக்கு முக்கியம் கொடுப்பதில்லை எனபது கூட ஓர் குற்றச்சாட்டுத்தான். அதுவும் இதுவும் பொருந்திப் போகிறதோ!

தெகா, நீங்க சொல்ற மாதிரி கமல் தமிழ் ரசிகர்களுக்காக எதையாவது காட்சியை கரைத்துக்கொடுக்க நினைத்து அது வேறு விதமாய் முடிந்து போகிறது. சில சமயங்களில் தேவையில்லாத காட்சிப்பிழைகள் ஆக ஆகிப்போகிறது.

அது சரி, ஆஸ்கார் விருது வாங்குறவங்க இப்பிடித்தான் உணர்ச்சிவசப்பட்டு பேசுவாங்களோ!!! :)))

நன்றி தெகா. மீண்டும் சிந்திப்போம். 

Image: Google.

ஜூலை 15, 2011

இதயம் பேசுகிறேன்....!!!


மனித மண்டை ஓட்டிற்குள் சதா ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும் மூளையே மனம்!! இந்த மனம் விசித்திரமானது, எளிதில் புரிந்துகொள்ள முடியாதது. எப்போதும் என் சுயம் பற்றியும், அப்பப்போ கொஞ்சம் அடுத்தவர் பற்றியும் சிந்திக்கவும் வைக்கிறது. எல்லா மனிதமனமும் இப்படித்தானா அல்லது நான் மட்டுமா இப்படி!! நான் என் தனித்தன்மையை பேண விரும்பும் அதேநேரம் இந்த உலகத்துடனும் இயைந்துவாழவே ஆசைப்படுகிறேன். அங்கேயும் நான் உள்வாங்கப்படவேண்டும். இந்த உலகத்திலிருந்து வெட்டிக்கொண்டு பிரிந்துபோய் தனியனாய் வாழவும் முடியாது. என் மனம் எப்படி என்னை, என் தனித்தன்மையை இந்த உலகத்துக்கு காட்டுகிறது. எதுவெல்லாம் என் மனதை கட்டமைக்கிறது, வழிநடத்துகிறது. அதற்கு பதில் வாசிப்பு, என்னை சுற்றுயுள்ள சகமனிதர்கள், சதா தேய்ந்தும், வளர்ந்தும், புதிதாய் உருவாக்கப்படும் கருத்துகள், என் வாழ்வின் சுவையான, கசப்பான அனுபவங்கள் தான் என் மனதை கட்டமைக்கிறது என்று தோன்றுகிறது.

வாசிப்பு என்று அலைந்ததில் தேவையானதும், தேவையற்றதுமாய் நிறையவே கருத்துருவாக்கங்கள் மனதில் நிறைந்து கிடக்கிறது. கருத்துக்களால் மட்டுமே வனையப்பெற்ற பொம்மையாய் வாழ விரும்பாவிட்டாலும், கருத்துகள் என்பது இருபத்தொராம் நூற்றாண்டில் தவிர்க்கவோ, தாண்டிப்போகவோ முடியாததாய் உள்ளது. அதை அடிக்கடி ஒழுங்குபடுத்த நினைத்து கவனமாற்றங்களால் கவனிப்பாரற்ற கலாச்சார சின்னங்கள் போல் மனதில் தேங்கிவிட்டன. இருந்தாலும் அவ்வப்போது ஞாபகக் கிறுக்கல்களாய் என் மனதின் கருத்துருவாக்கங்களை எழுத்தில் பதிவாய் வடிக்கிறேன்.
கருத்துக்களை எழுத்தாய் வடிக்கும் போது தான் அது என் மறுபரிசீலனைக்கும் உட்படுகிறது. பிழை என்றால் திருத்திக்கொள்ளவும், தவறு என்றால் தவிர்க்கவும் கற்றுக்கொள்கிறேன்.


என் எழுத்து பல சமயங்களில் வீதியோர வரைபடம் போல் அவரவர் அவசரத்தில் கவனிக்கப்படாமலும், சில சமயங்களில் ஓவியக்கண்காட்சியில் கண்ணைக்கவரும் ஓவியாமாய் என் எழுத்துக்குரிய அங்கீகாரம் அதற்குரிய கவனிப்பைப் பெறுகிறது. என் எழுத்து விரும்பப்பட்டாலும், விட்டாலும் எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் என் மனதில் தோன்றுவதை என் இயல்பில் எழுதுகிறேன். விட்டுக்கொடுப்புகளுக்கு என் எழுத்து பழகிப்போனால் நான் என் சுயத்தை இழந்துவிடுவேன். விட்டுக்கொடுத்து எழுதிப்பழகு என்று என்னை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. யாராவது கட்டாயாப்படுத்தினால் எனக்கு எழுதவும் வராது. அனுபூதிமான்களின் அனுபவத்தெளிவும், சித்தாந்தங்கள், கருத்துக்களின் கருவூலத்திலிருந்து தருவிக்கப்பட்ட திவ்வியத்தன்மையும் என் எழுத்தில் குறைவாய் இருக்கலாம். இருந்தாலும் அது பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை. நான் எழுத்தையே தொழிலாய் கொண்ட துறைசார் எழுத்தாளர்/எழுத்தாளினி(!!!) கிடையாது.  நான் கற்றுத்தெளிந்ததை இன்னும் யாருக்கும் நன்மை தரும் என்று கருதுவதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் எனக்கோர் ஆத்மதிருப்தி.

புத்தக வாசிப்பைப் போல் மனிதர்களை அவர்களின் இயல்புகளை கவனித்து கற்றுக்கொளவும் என்னை என் மனம் பழக்கிக்கொள்கிறது. எந்தவொரு மனிதனின் இயல்பையும் நான் மாற்ற முற்பட்டதில்லை. அது அபத்தமும் கூட. அதையே மற்றவர்கள் எனக்கு செய்யக்கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பேன்.  அதைப்போலவே யாரிடமிருந்தாவது எண்ணங்களை கடன்வாங்கி என்னை அர்த்தப்படுத்திக்கொள்ளவும் முடியாது. இருந்தாலும், யாரிடமிருந்தாவது ஓர் நல்ல இயல்பு என்னிடம் ஒட்டிக்கொண்டால் அது என்னை அறியாமல் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு நிற்கும். தலையை ஆட்டி எனக்குள் நானே சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவேன். திருவள்ளுவர் சொன்னது போல் கனியிருக்க காய் கவர்தல் என்பதாயும் சில வார்த்தைகள் என்னிடம் ஒட்டிக்கொண்டுவிட்டன :) ஆனால், அப்படி நடப்பதென்பது அரிது. அப்போது என் அடிமனம் விழித்துக்கொண்டு இது தவறு என்று சுட்டி நிற்கும். என் சிந்தனைக்கு எல்லைக்கோடுகள் இல்லாவிட்டாலும் செயல்களுக்கு எல்லைகளை நிர்ணயித்துக்கொண்ட பின் அவ்வாறான அத்துமீறுதல் என்பது அபூர்வமாகிவிடும். என் செயல்களுக்கு நான் தானே பொறுப்பேற்க வேண்டும் என்கிற முன்னெச்சரிக்கையாக கூட இருக்கலாம். இது எனக்கு நானே போட்டுக்கொண்ட விலங்கல்ல. என்னை நானே பண்படுத்திக்கொள்ளும் விதம். நான் நானாய் இருக்கும் அதேவேளை சில மனிதர்களிடமிருந்து நற்பண்புகளை கற்றுக்கொள்வதிலும் தவறில்லை என்று நினைக்கிறேன்.

என்னைச்சுற்றி எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கும் கருத்துருவாக்கத்தின் அசைவிற்கு ஏறாற்போல் என் மனம் அதையும் உள்வாங்கி அசை போடும். கருத்துருவாக்கம் என்பது மதம் அரசியல் என்பதில் தொடங்கி நான் உண்ணும் உணவு என்பதுவரை. திணிக்கப்படும் கருத்துக்களை கேள்வியின்றி அப்படியே விழுங்கிக்கொண்டால் கூட என் சுயத்தை இழந்துவிடுவேன். அடுக்கடுக்கான கேள்விகளால் என்னை நானே துளைத்தெடுப்பதும் உண்டு. அப்போதெல்லாம் எனக்குள் நானே முரண்பட்டும், உடன்பட்டும் கொள்வதுண்டு. ஏற்கனவே மனதில் உருவாகிவிட்டிருக்கும் கருத்துக்களோடு புதிதாய் எந்தக்கருத்தாவது மோதிக்கொள்ளும் போது அதுவே தேடலுக்குரிய அடுத்த படியாயும் ஆகிப்போகிறது. அந்த தேடலில் தான் நான் என்கிற கர்வமும் அடங்கிப்போகிறது. தேடும் போது தான் தெரியும், எனக்குத் தெரிந்தது வெறும் கைமண்ணளவு என்பது. என் தேடலின் நோக்கம் என்னை அறிவுஜீவியாக்கிக்கொள்வதல்ல. அது என் உய்வுக்கான ஓர் வழிமுறை, அவ்வளவே. தேவையற்ற கருத்துருவாக்கங்களில் இருந்தும், கவனமாற்றங்களில் இருந்தும் என்னை நானே தான் உய்வித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் என் சுயத்தை இழக்க கூடாது என்பதில் நான் எப்போதும் குறிக்கோளோடு இருக்கிறேன்.


இயற்கையிடமிருந்து கூட மனிதன் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கு. இருந்தாலும் நானும் என்போன்றவர்களும் Material Culture எனப்படும் உடைமைகளின் இருப்பையே கணக்கில் எடுத்துக்கொண்டு இயற்கையை கழித்துவிடுவோம். சூரியன் வெளிச்சத்தையும், இயற்கை சுவாசிக்க காற்றை மட்டும் தானே இலவசமாக கொடுக்கும். வயிற்றுக்கு உணவுமா கொடுக்கும்!! அதனால் இயற்கையையிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது என் பட்டியலில் இறுதியில் இடம்பிடித்துக்கொண்டது. அது என் தவறல்ல. அரசின் அரசியல், பொருளாதார கொள்கை வகுப்புகள் தான் நான் எவ்வளவு தூரம் மனிதத்தை பேணுகிறேன், இயற்கையை மதிக்கிறேன் என்பதை கற்றுக்கொடுக்கிறது. இருந்தாலும், இயற்கையை மதிக்கத்தெரியாவிட்டாலும், மனிதத்தை மதிக்கத்தெரியாவிட்டால் என் சுயத்தை இழந்து விடுவேன். அது தானே நான் மனிதன் என்பதன் அடையாளம். மனிதத்தை இழந்தாலும் என் சுயத்தை இழந்தவள் ஆவேன்.


நான் இயற்கையோடும் என்னையறியாமல் ஒன்றிய ஓர் கணம் என்றால், அண்மையில் நான் நயாகரா நீர்வீழ்ச்சியின் மெளனமான அசைவில் என்னை மறந்த ஓர் கணம் தான். விடுமுறை நாளில் இரண்டுநாட்களை நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகில் கொண்டாடலாம் என்று நயாகரா வீழ்ச்சியின் கண்கொள்ளாகாட்சியை காணுமாறு இருக்கும்படி ஹோட்டலில் தங்கியாயிற்று. நான் நயாகரா நீர்வீழ்ச்சியை பார்ப்பது இது முதல் தடவை அல்ல. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் அதன் அருகில் சென்று அதன்"கோ'வென்ற இரைச்சலிலும், மெல்லிய சாரலிலும் காதுகளும், உடலும் நனைவதுண்டு. எனக்கு புகைப்படக்கலையில் ஒன்றும் ஆர்வம் இல்லை என்றாலும், அந்த பாறைகளில் இருந்து செங்குத்தாய் விழும் ராட்சச நீர்வீழ்ச்சியை தங்கள் புகைப்படக் கருவிக்குள் அடக்கத்துடிக்கும் மனிதர்களை வேடிக்கைபார்ப்பதுண்டு. வாழ்வின் எல்லா சந்தோசத்தின் கணங்களையும் புகைப்படத்துக்குள் அடக்கிவிட முடியாது. இருந்தாலும் புகைப்படம் இல்லாமலேயே இந்த நயாகரா அருவியும் என்மனதில் முதல் முறையாய் ஓர் "Photograph Memoy" ஆகப் பதிந்துபோய்விட்டது.


இரவும் பகலும் அலுக்காமல் அந்த நீர்வீழ்ச்சியையும், அதை சுற்றியுள்ள இடங்களையும் சுற்றி, மனிதர்களை வேடிக்கை பார்த்து, ஹோட்டலிலும், விரைவு உணவகத்திலும் சாப்பிட்டு வாழ்க்கை வாழ்வதற்கே என்கிற புதிதாய் ஓர் தத்துவத்துக்குள் என் மனம் புதைந்துகொண்டிருந்தது. நேரம் கழித்து தூங்கி, மறுநாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்து எல்லாக்காரியங்களையும் முடித்தபின் மெதுவாய் நீர்வீழ்ச்சி இருந்த பக்கத்து திரைச்சீலையை சூரிய வெளிச்சத்துக்காய், சுவாசிக்க சுத்தமான காற்றுக்காய் கண்ணாடி கதவையும்
விலக்கியபோது தான் நான் கல்லாய் சமைந்து போனேன். எனக்குள் ஓர் காட்சிப்பிழை வேர்விட்டு ஓடிக்கொண்டிருந்ததை அறியாமல் அதை ரசித்துக்கொண்டு கனவுலகில் மனம் பதித்து நின்றேன். இதுவரை அருகில் சத்தத்தோடு பார்த்த ராட்சச அருவி இப்போது கொஞ்சம் தூரத்தில், ஆனால் கண்முன்பே அமைதியாய் வெள்ளை வெளேரென்று பாலூற்றாய் பறவைகள் மேலே வட்டமிட ஓர் அமைதியுடன் என் மனதை ஆக்கிரமித்தது. சத்தமும், சலனமும் அற்ற அந்த இயற்கை எனக்குள் எதையோ விதைத்துவிட்டு சென்றது.


என் மனதுக்குள் சதா இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற எண்ணங்களுக்கு நடுவிலும் ஓர் அசைக்க முடியாத அமைதி உண்டு என்பதை அந்த இயற்கை எனக்கு புரியவைத்தது. அந்த அமைதியின் கணங்கள் தான் என்னை இன்னும் நானாக வைத்திருக்கிறது. என்னை சுற்றி ஆயிரமாயிரம் கருத்துருவாக்கங்கள் நிகழ்ந்தாலும் நானும் இயற்கையின் ஓர் அங்கம் என்பது புரியும் போது தான் இயல்பான மனம் தன் சுயத்தை வெளிக்காட்டுகிறது.

Image Courtesy: Google


ஜூலை 05, 2011

ஈழம் - சர்வதேச அரசியலும் மெரீனா ஒருங்குகூடலும்!!ஈழம் அதன் விடுதலை குறித்த மாற்றங்களுக்கான கருத்தியல், களம் மற்றும் பலம் தற்கால புவிமைய சர்வதேச அரசியலில் தமிழ்நாட்டு தமிழர்களிடம் தான் புதைந்துகிடக்கிறது என்று மே 17 இயக்கத்தின் செயற்பாட்டாளர் பேசியபோது தான் நான் தமிழ்நாட்டை முதன்முதல் புதுக் கண்ணோடத்தில் பார்க்கத்தொடங்கினேன். அதற்கு முதல் தமிழகம் குறித்த எனது பார்வை, குறிப்பாக தமிழக அரசியல், குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்பது போல்தான். உருவாகாத இந்திய தேசியத்தின் கண்ணோட்டத்தில்   ஈழப் பிரச்சனையைப் அணுகிப் பார்த்தால் எங்கள் விடுதலை நியாயமற்றது என்றே கூட தோன்றலாம். அதற்கேற்றாற்போல் தான் கருத்துருவாக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. அதன் தோற்றுவாய் குறித்து தோண்டினால் அது சர்வதேச அரசியலில் தான் போய் முடியும்.

தமிழக குண்டுச்சட்டி அரசியலில் வாக்குகள் குறித்தே அரசியல்வாதிகள் அதிகம் அக்கறை கொள்பவர்கள். எந்தவொரு விடயத்தையும் அதன் இலக்கு நோக்கியே பேசுவார்கள், செயற்படுவார்கள். சுயநலம் மட்டும் சார்ந்த அரசியல்! இந்தியாவில் ஓர் அரசியல் கட்சியாக தங்களை பதிவு செய்துகொண்டால் பிறகு அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகத்தான் பேசவேண்டும் என்பது நியதி ஆகிப்போகிறது. இந்த நியதிகள் கூட உள்ளூர் அரசியல்வாதிகளுக்குத்தான். தேசியமைய அரசியலில் இருக்கும் கொள்கை வகுப்பாளர்களான பெருங்குழாம் (Elites) இதற்கு விதிவிலக்கு. எனக்குத் தெரிந்த உதாரணம் ப. சிதம்பரம், எம்.கே. நாராயணன், சு.சுவாமி வகையறாக்கள்.

விதிவிலக்காய் தமிழ்நாட்டையும் தாண்டி இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் ஒருவர் ஈழத்தை பற்றிப் பேசினால் இந்திய ஜனநாயகத்தில் அரசியலிலிருந்து துரத்தியடிக்கப்படுவார் என்பதற்கு வை.கோ. ஓர் சிறந்த உதாரணம்.

மேற்சொன்ன இவர்கள் போன்ற பெரும்குழாம் மக்கள் தங்கள் அறிவுசார் திறமை காரணமாக அல்லது அவர்களின் பதவிகள் மூலம் பன்னாட்டு பல்தேசிய நிறுவனங்களுக்கு தங்கள் சேவையை வழங்கியவர்களாகவோ அல்லது அந்த நிறுவனங்களுக்கு ஏதோவொரு வகையில் உதவி புரிபவர்களாகவோ இருப்பார்கள். கூடவே இன்னோர் பக்கம் இந்திய தேசியத்தையும் நேசிக்கிறேன் என்று தேச பக்தியைப் பிரஸ்தாபமும் செய்வார்கள். கொஞ்சம் விளங்கச் சொன்னால் பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தநாட்டில் விளைவிக்கும் அரசியல், பொருளாதார, சமூக சீர்குலைவுகள் பற்றி கண்டும்காணாமல் இருந்துகொண்டே, இந்தியதேசியத்தையும் நேசிக்கும் இரட்டை நிலை கொண்ட இந்தியர்கள். இவர்களின் பேச்சுக்களால் கவரப்பட்டவர்கள் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை தேவை தான்... ஆ...னா....ல்.... என்று இழுப்பார்கள்.

இந்தியதேசியம், தமிழகம் (தமிழக தமிழ்த்தேசியம்!!!) இரண்டுக்குமே ஈழவிடுதலை அவசியம் என்பதை மே 17 அமைப்பு போன்றோர் பேசினால் அது மேற்சொன்ன இந்தியதேசியத்தை நேசிப்பவர்களுக்கு விந்தையாக, கோபமாக கூட உருவகப்படலாம். ஆனால், இது தான் யார்த்த உண்மைகள் என்பதை புரிந்துகொண்டால் அதுவே பாதி வெற்றி தான்.

இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களும் சமூகமும் ஹிட்லரின் நாசிகளின் பாணியில் தங்களது இயல்பான வளர்ச்சிக்குத் தேவையென கருதும் ஈழத்தமிழர்களின் நிலப்பரப்பு, அதன் வளங்கள் (Lebensraum-Living Space); சீனாவின் முத்துமாலை திட்டம் (Sting of Pearls and Blue Water Navey), இது சீனாவின் பொருளாதார நோக்கங்களையும் தாண்டி ஓர் கடற்படை தளம் போல் அசுர வேகத்தில் வளர்வது. இந்து சமுத்திரத்தை சீனா கட்டுபடுத்தக்கூடாது என்கிற அமெரிக்காவின் எச்சரிக்கை, சீனாவோடு ஆசியாவில் இருக்கும் நாடு ஒன்றே போட்டிபோட்டு கட்டுப்படுத்த முடியும் எனக்கருதி அமெரிக்காவால் தயார் செய்யப்படும் இந்தியாவும் அதன் அரசியலும்; இவற்றுக்கு நடுவே சிக்கிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் விடுதலை. ஆக, எல்லோரும் அவரவர் நிகழ்ச்சி நிரல்களோடு செயற்படுகிறார்கள்.

இந்த சர்வதேச அரசியலின் தற்போதைய ஆடுகளம் தான் ஈழமண். அமெரிக்கா சீனாவையோ, இந்தியாவையோ பகைத்துக் கொள்ளாது. அமெரிக்காவின் கணணி தொழில்நுட்பம் இந்தியாவிலும், உழைப்பும் உற்பத்திப் பொருட்களும் சீனாவிலும் குறைந்த கூலிக்கும், விலைக்கும் "Outsourcing" செய்யப்பட்டிருப்பதால் அது இந்த நாடுகளை பகைக்கப் போவதில்லை. சிலர் தமாஷாக சொல்வார்கள், இனி அமெரிக்கர்களால் இந்தியர்களிலும், சீனாக்காரர்களிலும் தங்கியிராமல் வாழமுடியாது என்று.

இந்த நாடுகளுக்கிடைய அரசியல், பொருளாதார, ராணுவச் சமவலு உண்டாகுமா என்பதெல்லாம் கேலிக்குரிய கேள்வி. இவர்களால் போட்டியிட மட்டுமே முடியும். ஒருவரையொருவர் போர்தொடுக்க மாட்டார்கள். தங்கள் பலத்தை நிர்ணயிக்க ஈழம் போன்ற மண்ணை, மக்களை அவர்களின் வரலாற்று வழியில் பலிக்க்கலாமாகவும், பலியாடுகளாகவும் ஆக்குவார்கள். அடிப்படையில் அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கை எப்போதுமே "Benign Negligence" தான். அதன் அர்த்தம் அமெரிக்கா தனது சுயலாப நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளுமே  தவிர, அதன் எந்தவொரு அழிவை, இழப்புகளை உண்டாக்கிய செயலுக்கும் பொறுப்பேற்பது கிடையாது. அது வியட்னாம், லத்தீன் அமெரிக்கா, ஈராக், ஆப்கானிஸ்தான் முதல் பயங்கரவாத ஒழிப்பு என்கிற பெயரில் இனவழிப்புக்கு துணைபோன ஈழம் வரை. தங்கள் அரசியல் பொருளாதார நிகழ்ச்சி நிரல் முற்றுப்பெற்று விட்டால் அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு விடுவார்கள். நாங்கள் ஓர் வெற்றுப் பெருமைக்காக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் வியட்நாமில் அமெரிக்காவும், ஈழத்தில் அமைதிப்படையும் மண்ணை கவ்வவில்லையா என்று!

சர்வதேச அரசியலின் பிடிக்குள் ஈழப்பிரச்சனை இனி சிக்கிக்கொண்டுவிட்டது. அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றாற்போல் தான் தமிழர்களின் செயற்பாடுகள் இருக்கவேண்டும். இதையெல்லாம் கவனத்திற் கொண்டு தான் தமிழக அரசியல் மற்றும் அமைப்புகள் சார் ஈழம் குறித்த செயற்பாடுகளை கவனிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், குறிப்பாக நாம் தமிழர் இயக்கம், மே 17 இயக்கம் தமிழ்நாட்டில் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பது என் பார்வை. ஈழம் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளூர் அரசியல் பற்றியும், மே பதினேழு இயக்கம் சர்வதேச அரசியல் நகர்வுகள் பற்றியும் விழிப்புணர்வை தமிழகத்தில் கொண்டுவருவருவது என்பது ஓர் சமப்படுத்தலாகவே எனக்கு தோன்றுகிறது. இந்த இரண்டுமே சந்திக்கும் புள்ளியில் தான் மக்கள் பலம் திரட்டப்பட வேண்டும். அதுவே தமிழீழம் என்கிற தீர்வை நோக்கி சரியான திசையில் பயணிக்க உதவும்.

சர்வதேச அரசியல் நகர்வுகளின் ஆட்டக்காய்களாக உள்ளூர் அரசியல்வாதிகளே இருப்பார்கள். உள்ளூர் பிரதிநிதித்துவ அரசியலில் நாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் எங்கள் பிரச்சனைகளை, அபிலாஷைகளை முன்னிலைப்படுத்தாமல் எங்களை சமாதானப் படுத்தும் விதமாக பேசவும், சில அரசியல் நகர்வுகளையும் நகர்த்துவார்கள். சிறந்த உதாரணம் தற்போதைய தமிழக முதல்வர். ராஜபக்ஷேக்கள் போர்க்குற்றவாளிகள், கச்சதீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்று பேசுவார். இது இரண்டுமே உலகறிந்த உண்மைகள். அதையும் தாண்டி பேசுங்கள் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. What about our freedom struggle and our ultimate goal? என்று எனக்குள் கேள்வி எழுவதுண்டு.

எங்கள் விடுதலையின் தேவையையும், முக்கியத்தையும் தமிழ்நாட்டு தமிழர்கள் தான் இன்றைய அரசியல் சூழ்நிலையில் பேசவேண்டும், அதற்காய் செயற்பட வேண்டும். ஈழத்தில் வாழ்பவர்கள் அடக்குமுறைக்கு உள்ளானவர்கள். அவர்கள் அது பற்றி பேசவே முடியாது. புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு தான் முக்கினாலும் ஓரளவிற்கே சர்வதேச அரசியல் கவனத்தை திருப்பலாம். ஆனால் அதுவும் மிக, மிக முக்கியம். புலத்தில் தமிழர்கள் வாழாதிருந்தால் இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரங்கள் மட்டுமே எடுபடும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தமிழகமும், சிங்கள சமூகத்தை விடவும் எண்ணிக்கையில் பலத்தில் அதிக வலு கொண்ட  தமிழக தமிழர்களும் தான் இன்னும் காத்திரமாக செயற்பட வேண்டிய தருணமிது. அதன் ஆரம்ப படிநிலையாகத் தான் மெரீனா ஒருங்குகூடலை கருத முடிகிறது.

தமிழ்நாட்டில் அனேகமாக அரசியல் கூட்டங்கள் என்றால் தான் பெரும்பாலும் இவ்வளவு திரளாய் மக்கள் திரள்வார்கள் என்று மனதில் பதிந்து போனது. பெரும்பாலும் செய்தி ஊடகங்கள் கணிப்பின்படி மெரீனா நிகழ்வில் ஐம்பதாயிரம் முதல் எழுபத்தைந்தாயிரம் பேர்வரை தங்கள் பங்களிப்பையும் அஞ்சலியையும் ஈழத்தமிழர்களுக்காய் செலுத்தினார்கள் என்று தெரிந்துகொண்டேன். இந்த நிகழ்வு நிச்சயமாய் அரசியலில் தமிழக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களுக்கு ஓர் செய்தியை சொல்லியிருக்கும். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இனியும் இவர்களின் அரசியல் சாணக்கியம் செல்லுபடியாகாது என்பது தான் அது. இதுபோன்ற காத்திரமான செயற்பாடுகள் ஈழத்தமிழர்களின் உரிமைகள் விடயத்தில் தொடர வேண்டும்.

இந்த நிகழ்வு குறித்த சில எண்ணங்கள், கருத்துகளையும் பதிந்துகொள்கிறேன். நிகழ்வில் யாரும் அதிகம் மேடைப்பேச்சுக்களை நிகழ்த்தவில்லை என்று படித்தேன். அரசியல் வெற்றுமுழக்கங்கள், பேச்சுகள் தேவையில்லை என்றாலும் ஈழத்தின் விடுதலை குறித்து சில கோஷங்கள் இணையம் மற்றும் பதிவுலகம் பற்றி தெரியாதவர்களுக்கும் ஓர் புரிதலை உண்டாக்கியிருக்கும். ஈழப்பிரச்சனைக்கு தமிழீழமே தீர்வு; டெல்கி இனிமேலும் தமிழர்களை ஈழத்தமிழர் விடயத்தில் ஏமாற்ற முடியாது; ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை மறக்கமாட்டோம் என்பன முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவை. அதிகமான இளைய தலைமுறையினர் பங்கு பற்றியதும் ஓர் ஆரோக்கியமான விடயம். ஜாதி, மதம், அரசியல் வேற்றுமைகள் எல்லாத்தையும் மறந்து பங்குகொண்டார்கள் என்பதும் ஆரோக்கியமே.

அடுத்து, ஈழ விடயத்தில் தமிழகத்தில் ஓர் அமைப்பு இவ்வளவு தெளிவாய், காத்திரமாய் செயற்படும்போது பொதுவாக பொதுசனத்தின் மனதில் இயல்பாய் எழும் கேள்வி, இவர்கள் அரசியலில் ஈடுபட இது ஓர் முஸ்தீபா என்பது தான். என் பொதுப்புத்திக்கு எட்டிய வரையில் மே பதினேழு இயக்கம் அரசியலில் ஈடுபடும் உத்தேசம் இல்லை என்பது தெரிகிறது. இருந்தாலும், இனி இந்த அமைப்பின் மீது அரசியல் பார்வை படும். நாம் தமிழர் இயக்கத்தின் அனுபவத்தின் வழி தெரிந்துகொண்டது. அதனால், மே பதினேழு இயக்கம் இது குறித்து ஓர் தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டும். அரசியல் சார்ந்த, சாராத அனைத்து தரப்பினரையும் ஒரே குறிக்கோளின் அடிப்படையில் இணைக்கும் ஓர் அமைப்பாக இந்த அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும். அரசியல் சார்ந்தோரும் உள்வாங்கப்பட்டால் நிச்சயம் அரசியல் சாயம் பூசும் நிலை உருவாகலாம், தவிர்க்கமுடியாதது. பழ.நெடுமாறன் அவர்களால் ஈழத்தமிழர்களுக்கு என்று ஓர் அமைப்பு பல கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. தியாகி முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் பழ.நெடுமாறன் போன்றோர் செயற்பாடுகள் மூலம் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கை இற்று, அற்றுப்போய்விட்டது.

யார் உள்வாங்கப்பட்டாலும், விட்டாலும் மே பதினேழு இயக்கம் தங்கள் நோக்கம், செயற்பாடுகள் குறித்த தெளிவான விளக்கங்களை கொடுப்பதன் மூலம் அதிகம் பொதுமக்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது என் கருத்து. ஓர் அமைப்பின் பலம் என்பது அரசியல் பிரதிநிதித்துவமோ அல்லது சார்போ அல்ல. எத்தனை பேர் ஓர் அமைப்பின் சரியான நோக்கத்தை புரிந்துகொண்டு அவர்களோடு தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் என்பதிலேயே உண்டு. ஒரு அரசியல் கட்சியை விடவும் இப்படி ஓர் அமைப்பின் பின்னால் பலபேர் ஒன்று சேரும் போது அது அரசியல்வாதிகளையே யோசிக்க வைக்கும். ஒரு நீதியான, நேர்மையான நோக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் சக்தியின் முன்னால் எந்த அரசியலும் எடுபடாது.

தமிழ்நாட்டின் ஈழம் குறித்த தெளிவான நிலைப்பாடுகளை இந்த அமைப்பாவது சர்வதேசத்தின் செவிகளை எட்ட வைக்கவேண்டும். இல்லாது போனால் இந்திய தேசியமைய அரசியலின் பொய்களே இலங்கை அரசின் பொய்கள் போல் சர்வதேசத்தினால் வாங்கப்படும். மெரீனா நிகழ்வு குறித்து ஐ. நா.வுக்கும் சில வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் அறியத் தரப்பட்டதாக தெரிகிறது. இதுவும் ஓர் சரியான நகர்வு தான்.

மொத்தத்தில் இந்திய வெளியுறவு கொள்கை, கொள்கை வகுப்பாளர்கள், சரவதேசம் இவர்கள் அனைவரையும் ஈழம் குறித்த சரியான நகர்வுகளை நோக்கி செலுத்த தமிழகத்தின் இதுபோன்ற செயற்பாடுகள் தொடரவேண்டும். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் தலையீடுகள் சரியான முறையில் இருக்க வேண்டுமானால் தமிழக தமிழர்களாலேயே அதை சாத்தியமாக்க முடியும்.


பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற போர்வையில் இனப்படுகொலையை தூண்டிவிட்டது அமெரிக்கா. இறுதிப்போரின் போது ஆயுதங்கள் விற்றது ஐக்கிய ராச்சியம். உலகில் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் (Cluster Bombs), White Phosphorus எரிகுண்டுகள், நச்சுக்குண்டுகள் இவற்றை தமிழனை கொன்றொழிக்க இலங்கைக்கு விற்றவர்கள், சித்தாந்தங்களின் அடிப்படையில் தங்கள் நாடுகளை ஆளும் போலி இடதுசாரிகள், நிபந்தனையின் பேரில் அமெரிக்காவிடம் தங்களை அடகு வைத்த நாடுகள் யாருமே ஈழத்தமிழனின் இனப்படுகொலையை ஒத்துக் கொள்ளவோ அல்லது எங்களுக்குரிய நியாயமான தீர்வு குறித்தோ பேசவே போவதில்லை.


ஒட்டு மொத்த உலகமே இன்று ஈழத்தமிழனுக்கு எதிராகத்தான் செயற்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த நிலையில் எங்களுக்காய் உரிமையோடும், வலுவோடும் பேசவும், செயற்படவும் கூடிய சகல சாத்தியங்களும் ஆறரை கோடிப்பேர் கொண்ட தமிழகத்துக்கே உண்டு.