ஜூன் 29, 2011

ஈழம் - ஈழமும் என் புரிதலும்!இப்போ கொஞ்சநாட்களாகவே கனடாவில் தமிழ் தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது உலகச்செய்திகளுக்கு முன்பு கார் விளம்பரம் காண்பிக்கப்படும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிபொருள் சிக்கன கார் விளம்பரம் சரி, ஆனால், அதை உலகச்செய்திகளுக்கு முன் தான் காட்டுவார்களா! ஏன் ஈழத்துச் செய்திகளுக்கு இந்த உலகளாவிய பாரிய கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை (Sponsor) செய்யமாட்டார்களா என்று நான் ஒரு Global Perspective இல் சிந்தித்தால் எரிச்சலாக கூட இருக்கலாம், இவளுக்கு இதுவே வேலையாய்ப் போச்சு என்று :)

ஈழத்துச் செய்திகளுக்கு எம்மவர்களின் உணவகங்கள், உள்ளூர் உற்பத்திப் பொருட்களான அரிசிமா, மிளகாய்த்தூள் போன்ற விளம்பரங்கள் அல்லது ஏதாவதொரு பாரிய நிறுவனத்திற்கு, Law Firm, Insurance Co., Mortgage Co. போன்றவற்றிற்கு எம்மவர்கள் ஏஜென்டாக பணிபுரிந்தால் அவர்களின் விளம்பரங்கள் இவைதான் எம் ஈழத்துச் செய்திகளுக்கு Sponsor செய்வார்கள் போலும். ஈழம் குறித்த எத்தனையோ விடயங்களுக்கு இவர்கள் தான் முன்னின்று உதவியிருக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது. ஈழத்தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களுக்கு இவர்களின் கணிசமான பங்களிப்பு இன்றி அது சாத்தியமுமில்லை. 

அண்மையில் E-Coli தொற்றினால் ஐரோப்பிய விவசாயிகள் பாதிக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பேசுகிறார்கள் அவர்களுக்கு நட்ட ஈடு கொடுக்கப்படவேண்டும் என்று. ஜப்பானின் அண்மைக்கால நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அழிவினால் உண்டான புகுஷீமா அணுமின்நிலைய கதிர்வீச்சை கட்டுப்படுத்த ஜப்பானிடம் எந்தவொரு திட்டமும் இல்லாதிருந்ததாம். இதைப் பார்த்த ஜெர்மனி தன் நாட்டிலுள்ள அணுமின் உற்பத்தி நிலையங்களை கொஞ்சம், கொஞ்சமாக மூடிவிட முடிவெடுத்துள்ளது. 

ஆக நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காய் பேச, செயற்பட, பொருளாதார திட்டங்களை தீட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் எப்போதும் தயாராய் இருக்கின்றன. கூடவே, வளர்ந்துவரும் நாட்டு மக்களின் உயிர்களை பற்றிக்கூட அவர்கள் அக்கறைப்படுவதில்லை. ஐரோப்பிய நாடுகள் ஈழப்பிரச்சனை குறித்து அதிகம் பேசுவது தங்கள் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களை எவ்வளவு விரைவில் மீண்டும் திருப்பி அனுப்ப முடியுமோ அதை துரிதப் படுத்துவதற்குத்தான். 

உலக வல்லரசுகளின் பொருளாதார, புவியியல் போட்டிகள், பொருளாதார நலன்கள் மற்றும் முரண்பாடுகளில் இப்படி ஒவ்வொரு நாடும் மக்களும் சிக்கித் தவிக்கும் போது, இப்போது இலங்கையின் முறை. ஈழத்தில் அமெரிக்க, சீன, இந்திய தலையீடுகள், தீராத குழப்பங்கள், விடை தெரிந்தும், தெரியாததது போல் பாவனையான கேள்விகள். 

மேற்கு ஆசிய, வடக்கு ஆபிரிக்க நாடுகளில் இப்போதான் அமெரிக்கா விரும்பும் ஆட்சி மாற்றங்கள் ஒருவழியாய் மீண்டும் ஏற்படத்தொடங்கி இருக்கின்றன. அரசியல் ஆய்வாளர்களின் சொற்பிரயோகத்தில் அதற்குப் பெயர் "Regime Change". இலங்கையிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகிறது. ராஜபக்க்ஷேக்கள் அமெரிக்காவின் சொல்வழி கேட்காவிட்டால் வேறு எதை எதிர்பார்ப்பது. 

ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையும் கொடுக்க கூடாது, சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவையும் அமெரிக்காவின் சுயலாபங்களுக்காக இழக்க கூடாது.... பிறகு எப்படி!! இதுக்கு அமெரிக்கா எப்படியும் இன்னும் கொஞ்ச நாட்களில் பதில் சொல்லும். உடனே யாராவது சிங்களப் பெரும்பான்மையின் மக்கள் எழுச்சியா என்று கேள்விகேட்டால் என்னிடம் பதில் இல்லை. சிங்களப் பெரும்பான்மை ராஜபக்க்ஷேக்களுக்கு எதிராக பொங்க வேண்டுமா, வேண்டாமா என்பதையும் அமெரிக்கா தான் தீர்மானிக்க வேண்டும். காத்திருப்போம்.

இதுக்கெல்லாம் இலங்கையில் உள்ள தமிழக்கட்சிகளின் பிரதிபலிப்பு, எதிர்வினை என்ன என்றும் யோசிக்கலாம். இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமை, பிரிவு, பிளவு என்று இந்தியாவின் கைப்பொம்மைகளாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே என் கருத்து. அமெரிக்கா நேரடியாய் இவர்களுடன் பேசப்போவதில்லை. இந்தியா மூலமே பேசுவார்கள். நீங்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டும் என்று பாடம் எடுப்பார்கள். புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்று மட்டும் பேசுங்கள் என்று இவர்களுக்கான பேச்சுக்கள் தயார் செய்யப்படும். 

மொத்தத்தில் தமிழர் தரப்பையும் இந்த அரசியல்வாதிகள் மூலம் அடக்கிவைத்து, சிங்களப் பெரும்பான்மையையும் சமாதானப் படுத்தி, இலங்கையில் நடந்தது தமிழனின் இனப்படுகொலை அல்ல போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று படம் காட்டி...... அட போங்கப்பா!!! 

நடிகர் கார்த்திக்கு கல்யாணம், சினிமாக்காரங்க மறுபடியும் ஈழத்தமிழர்களுக்காக ஓர் ஊர்வலமோ ஏதோவொன்று நடத்த தமிழக முதல்வரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள்!! இப்பிடி எத்தனயோ சுவாரஸ்யமான சினிமா தகவல்கள் இருக்க எங்களுக்கு ஏன் ஈழப்பிரச்சனையை. ஏற்கனவே சினிமா நடத்திரங்கள் ஒருமுறை உண்ணாவிரதம் நடத்தி எங்களை கவிழ்த்தது போதாதா! இதையெல்லாம் நீங்க செய்யாவிட்டாலும் சூடு, சுரணையற்ற ஈழத்தமிழன் உங்கள் சினிமாவை இந்தியா கடந்தும் வாழவைப்பான், கவனியுங்கள். 

எங்களுக்காக மெரீனா கடற்கரையில் திரண்டவர்கள் பேசினாலே விடியுமே!!! உங்கள் அனைவருக்கும் நன்றிகள். புலத்தில் ஈழத்துச் செய்திகளுக்கு Sponsor செய்பவர்களும், செயற்படுபவர்களும், தமிழகத்தில் மெரீனா கடற்கரையில் எங்களுக்காய் கூடியவர்களும் தான் ஈழத்தை உண்மையாய், அதிகமாய் நேசிப்பவர்கள் என்பது ஏனோ என் மனதில் பதிந்து போய்விட்டது. 
Image Courtesy: TamilNet

9 கருத்துகள்:

தவறு சொன்னது…

சீனா எவ்வளவோ இலங்கைக்குள் நுழைகிறது அந்தளவிற்கு அமெரிக்காவின் கண்காணிப்பு தீவிரமாகும்.

இந்தியாவை வைத்து அமெரிக்கா இலங்கை விசயத்தில் விளையாடும். பொறுத்திருப்போம்.

மொத்தத்தில் வதைப்படுவது என்னவோ நம்ம மக்கள் தான் ரதி.

raja சொன்னது…

பணக்கார நாடுகள் தங்களது உற்பத்தி பொருட்களுக்கான சந்தையை தேடுவதும் அதற்கான கச்சாபொருட்களையும் தேடுவது மட்டுமே.... பிறநாட்டின் அரசியல் நியாயத்தன்மையை பேசுவதாகும். மற்றபடி சிறுபான்மைமக்களின் அரசியல் விடுதலையாவது.... புடலங்காயவது..

கும்மி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Rathi சொன்னது…

தவறு, எல்லாக் கஷ்டங்களும், சிரமங்களும் ஈழத்தில் வாழ்பவர்களுக்குத் தான். புலத்திலும், தமிழகத்திலும் உள்ள தமிழர்களின் குரல் அவர்களுக்காய் ஒலிக்காவிட்டால் அவர்களின் நிலை இன்னும் மோசமாகும். மறுவளத்தில் அவர்களை கஷ்டப்படுத்தி எங்கள் முயற்சிகளை அடக்கப் பார்ப்பார்கள்.

Rathi சொன்னது…

ராஜா, மற்றவர்களுக்கு வேண்டுமானால் எங்கள் அடிப்படை உரிமைகள் புடலங்காயாய் இருக்கலாம். உரிமைகள் மறுக்கப்படும் நாங்களே வெறும் புடலங்காய் என்று சும்மா இருக்க முடியுமா!!!

raja சொன்னது…

நாம் ஒரு காலமும் நமக்கான விடுதலையை விட்டுத்தரமுடியாது. நான் மேற்கோள் காட்டியது பணக்கார நாடுகளின் அக்கறையை.... ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் என்ன செய்கிறார்கள் எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்து தமிழகத்தில் வாரம் ஒரு முறை கட்டுரை அ பொதுக்கூட்டம் அ கருத்தரங்கம் அ கூட்டறிக்கைகள் அ போராட்டங்கள் போன்றவைகள் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. ரதி. ஈழவிடுதலை என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கான அடிப்படையான கௌரவம் மட்டுமல்ல அது ஒரு இன அடையாளம். என்று புரிந்துகொள்வீர்கள் என நிணைக்கிறேன் ரதி.

Rathi சொன்னது…

ராஜா,


//ஈழவிடுதலை என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கான அடிப்படையான கௌரவம் மட்டுமல்ல அது ஒரு இன அடையாளம். //

சரியான பார்வை.

நீங்கள் குறிப்பிடும் தமிழகத்தில் வாரம் ஒரு முறை கட்டுரை அ பொதுக்கூட்டம் அ கருத்தரங்கம் அ கூட்டறிக்கைகள் அ போராட்டங்கள் போன்றன பற்றி என் பார்வையை விரைவில் ஓர் பதிவாய் எழுதுகிறேன்.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

அன்புச் சகோதரி

புலம் பெயர்ந்த தமிழர்,ஈழத்தி
லேயே வாழ்கின்ற தமிழர்,தமிழ் நாட்டிலே வாழ்கின்ற தமிழர் எவரானா
லும் இன உணர்வில் உள்ள ஒற்றுமை
மன உணவில் காணப்படவில்லை
என்பதே என்னுடைய பெருங்கவலை
இம்மூவரிடையே ஒன்று பட்ட
உணர்வும் எழுச்சியும் ஏற்படுமானால்
வெற்றி உறுதி
என் வலைப்பதிவில் முன்
வந்த சில பதிவுகளை படித்தால்
என் வேதனைகள் புரியும்

புலவர் சா இராமாநுசம்

Rathi சொன்னது…

புலவர் சா. இராமாநுசம், என் கவனக்குறைவால் உங்கள் பதிலை கவனிக்கத் தவறிவிட்டேன்.

இன உணர்வின் ஒற்றுமை தமிழன் என்கிற மன உணர்விலும் விரைவில் உண்டாகும் என்று நம்புவோம். தமிழர்கள் தாங்களாய் பிரிந்துகிடப்பதை விடவும் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் ஒன்று சேர்வது கொஞ்சம் காலகடக்கிறது.