ஜூன் 20, 2011

என் வாசிப்பின் பயணம்...!

என் வாசிப்பின் பயணத்தில் எனக்கு அறிமுகமாகி, ரயில் பயணம் போல் காணாமற்போன சில எழுத்துகளையும் எழுத்தாளர்களையும், என்னை நானே அடையாளம் காணவைத்தவர்களையும் ஒருமுறை திரும்பிப்பார்க்கிறேன். என் வாசிப்பின் எல்லைகள் தொட்ட தூரத்திற்கேற்ப வாழ்வின் பரிமாணங்களும் எல்லைக்கோடுகளும் விரிந்ததுண்டு.

வாசிப்பில் நிறைய ஆர்வம் உண்டு. ஆனாலும், எதை வாசிப்பது என்பதில் எனக்கு  கொஞ்சம் குழப்பமும் உண்டு. என் மனநிலைக்கு ஏறாற்போல் ஏதாவது படிப்பேன். இது தான் படிக்கவேண்டும் என்று தீர்மானமாய் எதையும் படிப்பதில்லை. ஆனாலும், வாசிப்பை ஓர் ஒழுங்குவடிவில் இயங்கியல் பால் உள்ள ஈடுபாடு, தனிமனிததத்ததுவம், இவை இரண்டையும் ஒன்றோடொன்று தங்கியிருக்கும் வகையில் உருவாக்கப்படும் கருத்துருவாக்கங்கள் அதன் விமர்சனங்கள் மீது என்று கூறலாம்.

ஆனாலும் அன்டன் பாலசிங்கம், பிரையன் செனிவிரட்னே எப்போது வேண்டுமானாலும் படிக்க பிடிக்கும். அது ஈழம், உலக அரசியல், மனித வரலாறு சம்பந்தப்பட்டது என்பதால். ஆனாலும், தமிழிலில் நான் எப்போது விரும்பி படிப்பது அன்ரன் பாலசிங்கத்தின் எழுத்து. அதற்கு அடுத்து இணையத்தில் நான் தேடிப்படிப்பது பெ.மணியரசன், கொளத்தூர் மணி இவர்கள் இருவரினதும் பேச்சு மற்றும் எழுத்துகள். இப்போது புதிதாய் எனக்கு அறிமுகமானது  யமுனா ராஜேந்திரனின் எழுத்து. இவரது எழுத்து கண்ணில் பட்டால் வாசிக்காமல் போவதில்லை. 

மனித வாழ்வின் வரலாற்றை, மனித விடுதலையின் அசைவியக்கத்தை ஆராயப்போக உலக இயங்கியல் அறிமுகமானது. இயங்கியலின் முன்னோடியாய் ஜெர்மனியைச்சேர்ந்த ஹேகல்  கருதப்படுகிறார். அவருடைய வரலாற்றுத் தத்துவத்தை பொருளியல் அறிவியற் கோட்பாடுகளாக மாற்றியமைத்தவர் கார்ல் மார்க்ஸ் என்கிறார்கள். எனக்கு கார்ல் மார்க்ஸ் சித்தாந்தம் ஒன்றும் உருப்படியாய் தெரியாது. அப்பப்போ அது பற்றி வாசித்ததுண்டு. அது கூட application என்கிற வகையில் தான். அவர் எதையோ நல்ல விதமாகத்தான் சொன்னார். அதன் பிறகு அவரின் சித்தாந்தத்துக்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள் சர்வாதிகாரத்தை கொண்டு அதை நிலை நிறுத்தப்போக வரலாறு வேறு விதமாக திரும்பிவிட்டது. ஆனாலும் கார்ல் மார்க்ஸ் சித்தாந்தம் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளும் ஆவலில் அது குறித்த வாசிப்பை தொடர்கிறேன்.

அத்தோடு பெ.மணியரசன், கொளத்தூர் மணி போன்றோர் பேசும் மார்க்சிய சித்தாந்தம், ம.க.இ.க. பேசும் அதே சித்தாந்தம், ஏன் இவர்களின் அணுகுமுறையில் வேறு படுகிறது என்றும் யோசிப்பதுண்டு. பதில் தெரிவதில்லை. அந்தளவுக்கு எனக்கு ஆழ்ந்த அறிவு அது பற்றி கிடையாது. ஒரு பொதுத்தளத்தில் (இங்கே அது மார்க்சியம்) நின்று பேசும் போதே ஏன் இத்தனை முரண்பாடுகள் என்று புரியாமல்  குழம்பியதுண்டு. நான் வாசிப்பினூடே புரிந்து கொண்டது பெ.தி.க. முதலில் ஓர் தேசிய இனம் தன் விடுதலையை பெற்றால் தான் சர்வதேசியம் பேசலாம் என்கிறார்கள். ம.க.இ.க. தமிழ்த்தேசியம் என்று பேசி, எழுதி நான் கேட்டதில்லை, படித்ததில்லை. அவர்கள் சர்வதேசியம் பேசுகிறார்கள் என்பது என் புரிதல். 

இவ்வாறாக, ஆரம்பம் முதல் வரலாற்றுக்காலம் தொட்டு இன்றுவரை மார்க்சிய-லெனினிய சித்தாந்தங்கள், அதற்கு வடிவம் கொடுத்தவர்கள் முதல் அந்த சித்தாந்தத்தின் வழி இன்று வடிவம் கொடுக்க முயல்பவர்கள் வரை ஏதோவொரு வகையில் முரண்பாடுகளில் முட்டி மோதிக்கொண்டே இருக்கிறார்கள் என்று புரிகிறது. 

எனக்கு உலக இயங்குவிதிகளில் உள்ள அதீத ஆர்வம் தான் கார்ல்மார்க்சை அறிமுகப்படுத்தியது. தவிர ஈழத்தின் தலைவிதியை இதே நவீன உலக இயங்குவிதிகள் தான் தீர்மானிக்கின்றன எனும் போது அது பற்றி தெரிந்து கொள்ளுதல் தவிர்க்க இயலாத ஒன்றாகிப் போகிறது.

நான் தமிழில் எந்தெந்த எழுத்தை அல்லது யாருடைய எழுத்தை இலக்கியம் என்று கருதி ஆரம்பத்தில் படித்திருக்கிறேன் என்றால் நீங்கள் சிரிப்பீர்கள். என் பதின் பருவங்களில் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், ரமணிசந்திரன் என்று ஒன்றிரண்டு புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். வாழ்க்கையின் யதார்த்தங்கள் புரிபட இவர்களும், இவர்களின் எழுத்தும் தூரமாகிப் போனது. அது தான் தமிழ் இலக்கியத்தின் தரம் போலும் என்று வெறுத்துப் போய்விட்டது. அப்படியே, அதையும் தாண்டிப் புனிதமான இலக்கியம் என்றாலும் மகாபாரதம், கம்பராமாயணம் என்றார்கள். நான் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் முதல் விமானக்குண்டுவீச்சுவரை கம்பராமாயணத்தில், மகாபாரதத்தில் விடை சொல்லப்படாததால் அன்றுமுதல் அவற்றோடு என்னால் ஒன்றமுடிவதில்லை. சரிதான் என்று என் இலக்கியத் தேடலில் முதல் வெட்டு விழுந்தது. அதைத் தொடர்ந்து ஈழத்திலுள்ள போர்ச்சூழில் அநேகமான நூலகங்கள் இலங்கை அரசால் திட்டமிடப்பட்டே விமானக்குண்டு வீச்சில் அழிக்கப்பட்ட பின் இலக்கியத்தேடலுக்கான ஆர்வம் இருந்தாலும் புத்தகங்கள் கிடைத்ததில்லை. எங்கள் ஊரில் விமானக்குண்டு வீச்சில் ஒரு தடவை நூலகத்தை அழித்தார்கள். சரியென்று, மிகவும் சிரமப்பட்டு மறுபடியும் அதை ஊரில் உள்ளவர்கள் சொந்தக்காசில் மீளக்கட்டிஎழுப்பி மிக அழகாக அதை நடத்தி வந்தார்கள். சில மாதங்களிலேயே அது மறுபடியும் விமானக் குண்டுவீச்சுக்கு பலியாகிவிட்டது. 


பிறகு, கனடா வந்தபின் நான் தமிழில் படித்தது அமரர் கல்கியின் சரித்திர நாவல்கள் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், கொஞ்சம் வைரமுத்து, நிறைய பாலகுமாரன். இந்நாளில் ஏனோ கவிஞர் வைரமுத்து, பாலகுமாரன் இவர்கள் இருவரின் எழுத்தில் ஓர் அயற்சி ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் வைரமுத்துவின் "இந்தக்குளத்தில் கல் எறிந்ததவர்கள்", பாலகுமாரனின் எழுத்துகள் புலம்பெயர் அந்நிய தேசத்தில் என் சொந்தவாழ்க்கையில் முன்னேற நிறைய உந்துதலை கொடுத்தது என்றால் மிகையில்லை. குறிப்பாக கவிஞர் வைரமுத்துவின் இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள் என்னை வாழ்க்கையின் நான் விரும்பிய தூரத்திற்கு இட்டுச்செல்ல உதவிய ஓர் உளவியல் பாதிப்பை உருவாக்கிய, எனக்குள் நம்பிக்கையை விதைத்த ஓர் வாசிப்பு. 

நிறைய தமிழாக்கங்களை, குறிப்பாக தாஸ்தாவெஸ்கி, படிக்க வேண்டும் என்னும் ஓர் ஆவல் எனக்குள் உண்டு. காரணம் நான் எவ்வளவு தூரம் உலக இயங்குவிதிகளை நம்புகிறேனோ அதேயளவிற்கு தனிமனித தத்துவத்தையும் நம்புவது தான். தத்துவம் என்றால் சிலருக்கு  ஒவ்வாமை ஆக கூட இருக்கலாம். Dostoyevsky படித்திருக்கிறேன் என்று சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். மனித இருப்பு, வாழ்வானுபவம் இவைதானே தனிமனித தத்துவத்தில் கருதுபொருளாக விளக்கப்படுகிறது. தனிமனித் கூறுகளுக்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைத்தால் தான் சமூக கூட்டு வாழ்வு சாத்தியம் என்பதே தனிமனித தத்துவம் விளக்கி நிற்கிறது. ஹேஹல் மற்றும் மார்க்ஸ் எப்படி இயங்கியல் கருத்துலகத்தை உருவாக்கினார்களோ, அதே போல் மனித இருப்பியல் கருத்துலகை கட்டியமைத்த சிலரை குறிப்பிடலாம், Soren Kierkegaard, நீச்சே (Nietzsche), மார்டின் ஹைடேகர், ஜான் போல் சாத்தர் (John Paul Satre). 

இவர்களின் எழுத்தை படித்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? ம்ஹீம், இல்லை. பொதுவாக தனிமனித தத்துவம் பற்றியும் ஜான் போல் சாத்தரின் எழுத்தையும் கொஞ்சம் படித்திருக்கிறேன்.

அப்படி தனிமனித தத்துவதேடலில் அறிமுகமானவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி.  ஆனாலும், ஜே. கிருஷ்ணமூர்த்தி ஓர் தனிமனித தத்துவாசிரியர் இல்லை. ஒருவேளை ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று நான் கூறுவதால் தத்துவம் பற்றி யாராவது சிரித்தீர்களோ என்று நினைத்துக்கொண்டேன். நான் கிருஷ்ணமூர்த்தி படித்திருக்கிறேன். அவ்வப்போது தொடர்ந்து படித்துக்கொண்டும் இருக்கிறேன். தவிர அவரின் எழுத்து தத்துவவிசாரனைகள் செய்வதில்லை என்பது என் புரிதல். எங்களை நாங்களே கேள்வி கேட்கும், எங்களை நாங்களே எங்கள் இயல்புகளில் இருந்து அறிந்துகொள்ளும் வழிகள் பற்றி நிறையவே பேசியிருக்கிறார். நான் படித்த தமிழாக்கம் அனேகமாக இவருடைய எழுத்தாகத்தான் இருக்கும்.

நான் ஆன்மீக தத்துவ பித்தோ அல்லது அதில் ஈடுபாடு கொண்ட ஜென்மம் கிடையாது. கடவுளை மறுப்பதும் கிடையாது, ஏற்பதும் கிடையாது. காரணம் அது பற்றி அக்கறை கிடையாது. என் வாழ்வு என் கையில் என்று நம்புகிறேன். வலிகளில் இருந்து வாழ்க்கையை வாழும் விதத்தை, தனிமனித ஒழுக்கத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் விரும்பும் மாற்றத்தின் முன்னோடியாய் நானே இருக்கவேண்டும் என்று முயல்வேன். அவ்வளவுதான். 

ஆங்கிலம்!! இதை நான் படிக்க, பேச கனடாவில் நிறையவே பிரயாசைப்பட்டேன். அரை குறையாய் ஆங்கிலத்தை கொன்று தான் நான் என்னை முழுமையாக்கிக்கொண்டேன் நான் வாழும் அந்நியதேசத்தில். ஈழத்திலிருந்து, அதுவும் வடக்கில் எங்கோ ஓர் மூலையில் இருந்து வந்த எனக்கு ஆங்கிலம் தான் முதலில் பயமுறுத்திய விடயம். இன்று நோம் சாம்ஸ்கியை கூட படிக்கிற அளவுக்கு அந்த மொழியறிவை, மொழியாற்றலை என்னிடம் நானே வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனாலும், தமிழில் படிப்பதை போல் ஓர் சந்தோசம் இல்லை. சொந்த மொழியில் படிக்கும் போது எந்தவொரு விடயமும் சட்டென்று புரிந்து விடுவதும் உண்டு. நோம் சாம்ஸ்கியின் எழுத்து அறிமுகமானது உலக இயங்கியலுக்கும் தனிமனித தத்துவத்துக்கும் இடையேயான இடைவெளியில் ஊடுருவிய ஊடகங்களின் கருத்துருவாக்கங்கள் குறித்த தேடலின் விளைவால். 

முன்பெலாம் சராசரி மனிதர்களின் தேவைகள், அது குறித்த பிரச்சனைகள் என்றால் ஓரளவுக்கு வீட்டுக்கு வெளியே வந்து போராடினார்கள். காலப்போக்கில் பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாய் அல்லது விளைவாய் இன்று எங்கள் பொருளியல்வாழ்வை பாதிக்கும் விடயங்களுக்காக, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக மெய்நிகர் உலகில் கருத்து பரிமாற்ற ஊடகங்கள் வழி போராடினால் தீர்வு கிடைத்துவிடும் எங்கள் பிரச்சனைக்களுக்கு என்று கண்களை மூடிக்கொண்டு நம்புகிறோமோ என்றும் எனக்கு தோன்றுகிறது. ஆனாலும், இன்றும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களும்  உருவாக்கம் பெறுகிறதே என்றும் யதார்த்தம் சொல்கிறது. இப்படி பாஹ்ரைனையும் சவூதி அரேபியாவையும் மக்கள் புரட்சியையும் திரிபுபடுத்தி ஊடகங்கள் சொல்வதை விடவும் நோம் சாம்ஸ்கி வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் பேசுவது அவரிடம் அதிக ஈடுபாட்டை கொடுக்கிறது எனக்கு.

இந்த ஒழுங்கு முறையில் என் வாசிப்பு இருந்தாலும் சில சமூக நாவல்களையும் படித்ததுண்டு. நான் படித்ததில் பிடித்த ஓர் நாவல் Rohinton Mistry என்கிற கனடாவில் வாழும் ஓர் இந்தியர் எழுதிய A Fine Balance என்கிற நாவல். இந்திரா காந்தி காலத்து போலியான அரசியல் நெருக்கடி அதன் மூலம் பாதிக்கப்படும் எல்லாநிலை மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் அனுபவத்தின் வழி சொல்லும் ஓர் படைப்பு. மனித இயல்புகள், வாழ்க்கைப் போராட்டங்கள், அறிமுகம் கூட பூர்த்தியில்லாத ஆண், பெண் என்கிற பிரகிருதிகளுக்கிடையே உண்டாகும் அவசரப் புணர்ச்சி முதல் வறுமையில் வாழ்ந்தாலும் சில மனிதர்கள் தங்களை பண்போடு எப்படி சமப்படுத்திகொள்ள முயல்கிறார்கள் என்பது வரை அழகாய் எழுத்தில் படம் பிடித்துக் காட்டும் ஓர் எழுத்திலக்கியம்.

என் வாழ்நாளில் முற்றுபெறாத என் வாசிப்பின் பயணத்தில் தமிழ், ஆங்கிலம் என்கிற மொழியின் துணையும், ஆளுமையும் இன்னும் என்னை என் அற்பவாழ்வை சமப்படுத்தும் என்கிற நம்பிக்கையுடன் அதை தொடர்கிறேன்.

வாசிப்போடு கொஞ்சம் இசையும் என்னை கவரும் விடயம். அப்படி என்னை அண்மையில் கவர்ந்த ஓர் பாடல் இது. பாடலின் இசையை விடவும், வரிகள் அதிகம் கவர்கிறது.  19 கருத்துகள்:

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

அலைந்ததையும் திரிந்ததையும் தற்போது அமர்ந்திருத்தலையும் சிறப்பாக காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள்.
படித்து முடித்த போது மனதிற்கு வெகு நிறைவாய் இருந்தது...

சரி.. விந்தை மனிதரை வெகு நாளாக காணவில்லையே.. உங்களோடு தொடர்பில் தான் இருக்கிறாரா...

உங்கள் கருத்துரைக்கு..
சாரு என்கிற கோணல் மனிதரின் தப்புத் தாளங்கள்
http://neo-periyarist.blogspot.com/2011/06/blog-post.html

Rathi சொன்னது…

Surprise! :)

வாங்க நியோ! நிறைய நாள் கழிச்சு வந்திருக்கிறீர்கள். உங்கள் வாசிப்புக்கு நன்றி.

விந்தைமனிதன் தொடர்பில் தான் இருக்கிறார். நீங்கள் விசாரித்ததாக சொல்கிறேன்.

சாரு எழுத்தை ஒரு போதும் நான் படித்ததில்லை. தரங்கெட்ட மனிதர்களின் எழுத்தை ஏன் படிக்கவேண்டும் என்று நான் படிப்பதில்லை அவர் எழுத்துகளை. ஒரேயொரு ஆனந்த விகடனோ அல்லது குமுதமோ பேட்டி கண்டதை தவிர. இப்போ அவர் பற்றிய செய்தி எல்லோரையும் சென்று சேரவேண்டும் என்று நினைக்கிறேன்.

தவறு சொன்னது…

ரதி உங்கபதிவின் மூலமாகதான் யமுனா ராஜேந்திரன் அறிந்தேன். அவர் எழுதிய மூன்று தெய்வங்கள் தலைப்பில் சாநி ஜெமோ எஸ்.ரா பற்றி தோலுரித்தன.

நான் அப்பதிவின் மூலம் அவர்களை பற்றி அறியும் வரையில் அறியாமையில் இருந்தது போல் இன்னும் எத்தனைபேரோ தெரியவில்லை...

Rathi சொன்னது…

தவறு, இதுக்கேன் பதறிப் போகிறீர்கள். கற்றது கையளவு. கல்லாதது கடலளவு என்று சொல்வார்களே. எல்லாமே தேடத் தேட தெரிந்து கொள்வது தான்.

இதுவரை படித்ததில் யமுனா ராஜேந்திரன் தேவையான விடயங்களை தெளிவான பார்வையோடு எழுதுகிறார் என்பது என் கருத்து. இதுக்கு முதல் ஓர் பதிவில் அவருடைய ஓர் சினிமா விமரசனத்திற்கு என் தளத்தில் இணைப்பு கொடுத்திருந்தேன். யாருமே அதை கண்டுகொள்ளவில்லை. நானும் பதிவுலகம் பற்றி தெரிந்தததால் ஆச்சர்யப்படவில்லை.

நாங்கள் தான் எப்போதுமே சாரு, ஜெமோ என்று இலக்கியத்தின் பிதாமகன்கள் அவர்கள் தான் என்று புகழ் பாடவே நேரம் சரியாய் இருக்கிறதே.

யமுனா ராஜேந்திரன் பொங்குதமிழ், கீற்று தளத்தில் எழுதியவைகளை வாசித்திருக்கிறேன். சொந்தமாய் தளம் வைத்திருக்கிறாரா என்பதெல்லாம் தெரியாது. நீங்கள் அறிந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

Nesan சொன்னது…

வாசிப்பில் நல்லாக எழுதியிருக்கிறீர்கள். செங்கை ஆழியான், வ.ஆ இராசரத்தினம்,தாமரைச்செல்வி, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஜோகநாதன்,என பலர் எழுதிய நல்ல நூல்கள் பல நம் துயரங்களைப் பாடு பொருளாக எழுதியிருக்கிறார்கள்!

Rathi சொன்னது…

நேசன், நன்றி.

நான் செங்கை ஆழியானின் ஓர் கதை படித்ததாக ஞாபகம். மற்றவர்களை இனிமேல் தான் தேடிப்படிக்க வேண்டும். உங்கள் தெரிவுகளுக்கு நன்றி.

Thekkikattan|தெகா சொன்னது…

ரதி எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாட்களா நான் இங்கிருந்து காணமல் போயிருக்கிறேன். நிறைய வாசிக்க கிடைக்கும் போலவே!

இந்த கட்டுரையில மிரட்டுறீங்க! எழுத்து ரொம்ப அடர்த்தியா இருக்கு, உங்க மண்டை மூளை மாதிரியே :) ...

நல்லா இருங்க! :) இன்னும் நிறைய வாசிச்சு இன்னும் பல உயரங்களை எட்டி பிடிங்க சொல்லுறேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அனுபவப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

கற்றது கையளவு கல்லாதன உலகளவு
உற்ற கலைமடைந்தை ஓதுவது
உண்மை தானே
நடக்கட்டும் உங்கள் வாசிப்பின்
பயணம்
வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்

Rathi சொன்னது…

தெகா....... !! Welcome back. நான் நல்லாவே இருக்கிறேன். நீங்களும் நலம் என்பது உங்கள் உற்சாகமான வார்த்தைகளில் தெரிகிறது.

உங்களை நீங்களே காணாமப் போகவச்ச அனுபவத்தை பகிருங்கள்.

சில பேரின் விமரசனங்கள் என் எழுத்தை நானே மீண்டும் படிக்கத்தூண்டும். அவர்களில் நீங்களும் ஒருவர். மிரட்டுகிறேன் என்பதைப் படித்ததும் நான் மிரண்டுவிட்டேன். :)

நன்றி, உங்கள் வருகைக்கும், என்னை மிரள வைத்த விமர்சனத்துக்கும். :)))

Rathi சொன்னது…

இராஜராஜேஸ்வரி, நன்றியை தவிர எனக்கு வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் வருகையின் சந்தோசம் தான் காரணம்.

Rathi சொன்னது…

புலவர் சா இராமாநுசம் அவர்களுக்கு, உங்கள் வருகை, வாழ்த்துக்கள் இரண்டுமே என் சந்தோசங்கள். அத்தோடு என் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் சொன்னது…

உங்கள் எழுத்து என்னை நான் படித்து வளர்ந்ததை நினைவுக்கு வர செய்தது. தமிழ்வாணன், சாண்டியன்,.... என.
நெகிழ்வான பதிவு.

Rathi சொன்னது…

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன், சரி தான். ஏதோவொரு குறிக்கோளோடு வாழ்க்கையில் நீச்சலடிப்போம். அந்த முயற்சியில் அயற்சி ஏற்படும் போதெல்லாம் வாசிப்பில் இளைப்பாறும் பழக்கமும் எனக்குண்டு. ஒருவிதமான கவனமாற்றம் என்றும் சொல்லலாம்.

தவிர மொழிப் பயிற்சி எப்போதுமே உள்வாங்குதல் (receptive) , வெளிப்படுத்துதல் (expressive) என்கிற வாசிப்பு, பேச்சும் மற்றும் எழுத்தின் மூலம் தானே வளர்த்தெடுக்கப்படுகிறது. மொழியை லாவகமாக கையாள வாசிப்பும் தேவை என்று சொல்லவந்தேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_25.html//

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். நன்றி.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

இந்த கட்டுரையில மிரட்டுறீங்க! எழுத்து ரொம்ப அடர்த்தியா இருக்கு, உங்க மண்டை மூளை மாதிரியே :) ...


தெகா நாங்க சொன்னா இவுகளுக்கு இந்த மூளையிலே ஏறாது?

அதென்ன ராஜேஷ்குமார், ரமணிச்சந்திரன்.........

நாங்க மொதல்ல மந்திரவாதி மாண்ட்ரேக் என்ற காமிக்ஸ் புத்தகத்திற்காக நூலகத்தில் அடித்து பிடித்து லவட்டி படித்தது இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது.

அப்பறம் அம்புலிமாமா தொடங்கி வைத்தது தான் இந்த பயணம். இப்போது படிப்பதை விட வெளியே நம் முன்னால் நடப்பதை அந்த நிகழ்வுகளை உள்வாங்கத் தான் நேரம் இருக்கிறது.

பாலகுமாரன் என்பவரை மனதிற்குள் வைத்துக் கொள்ள வேண்டியது தான்.
ஆனால் இன்று வரை சுஜாதா எனக்கு ஆச்சரிய மனிதராகவே இருக்கிறார்.

கருணாகார்த்திகேயன் சொன்னது…

// தமிழில் படிப்பதை போல் ஓர் சந்தோசம் இல்லை.//

கண்களில் நீர் .....

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

Rathi சொன்னது…

ஜோதிஜி, ஆஹா! கூட்டணி வச்சு என்னை கலாய்க்கிறீங்களா. பாத்தீங்களா அம்புலிமாமா படிச்சுத்தான் இப்போ நீங்க ஒரு அரசியல் எழுத்தாளராய் மிளிருகிறீர்கள்

Rathi சொன்னது…

கருணா கார்த்திகேயன், தாய்மொழியில் பேசுவதை, எழுதுவதைப் போல் சந்தோசம் வேறெந்த மொழியிலும் வராது.