ஜூன் 07, 2011

உருளும் உலகமும் ஈழமும்!

கடந்த சில நாட்களாக அதிக கவனத்தை ஈர்த்தும், கவனிக்கப்படாமலும் சில நிகழ்வுகள் சர்வதேசத்தில் அரங்கேறியது. ஐ. நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில்(European United Left/Nordic Green Left) ஈழத்தமிழர்களின் மாநாடும் தமிழ்நாட்டிலிருந்து ம.தி.மு.க. செயலர் வைகோ அவர்களின் பங்கேற்பும், நேட்டோ விமானப்படையின் விமானக்குண்டு வீச்சில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட பன்னிரண்டு குழந்தைகள், போர்க்குற்றம் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ரட்கோ மிளடிக் போஸ்னியாவில் கைது என்று பட்டியல் நீளும். உருளும் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதை ஈழத்தோடு பொருத்திப்பார்ப்பது எனக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. 

எண்ணெய் வள நாடுகளான மேற்கு ஆசிய நாடுகள், வட ஆபிரிக்க நாடுகளில் மக்கள் எழுச்சி, ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது என்கிற போதெல்லாம் அது குறித்து ஐ. நா. பொதுச்சபையில் மட்டுமல்ல, பாதுகாப்புச் சபையில் முக்கியமாக விவாதிக்கப்படும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது என்றாலும் அது மனிதத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்றே அழைக்கப்படும். ஆனால், மனித உரிமைகள் சபையில் கூட அது பற்றி விவாதிக்க மறுக்கப்படும். இதற்கான மூல காரணங்களாக வன்னி இறுதிப் போரின் முடிவுகள் பற்றிய இலங்கை அரசின் பொய்களுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா முண்டு கொடுப்பதும், மற்றும் வியட்னாம், வடகொரியா, கியூபா, வெனிசுலா போன்ற சர்வதேசியம் பேசி சுதேசியத்தை, தங்கள் பிராந்திய நலன்களை மட்டும் கடைப்பிடிக்கும், வளர்க்கும்  நாடுகளின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடுகளுமே. அடுத்து, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றந்த்தின் ஈழத்தமிழர்களின் கூட்டத்தில் எங்கள் "சுய நிர்ணய உரிமை", தனி நாடே ஆயினும், மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படைகளின் குண்டுவீச்சில் பன்னிரண்டு குழந்தைகளின் உயிர் மாய்க்கப்பட்டதற்கு உலகம் அதிர்ச்சியை மட்டும் காட்டிவிட்டு வழக்கம்போல் அடங்கிப்போயிற்று.

சர்வதேசத்தின் எல்லா நிகழ்வுகளையும் இங்கே விவரிக்க முடியாவிட்டாலும் போஸ்னியாவை சேர்ந்த ராட்கோ மிளடிக் கைது கொஞ்சம் ஈழத்தோடு போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று பொருந்திப்போகவே செய்கிறது. யூகோசிலாவியா என்கிற நாட்டிலிருந்து 1991 இல் குரோசியா, ஸ்லோவேனியா என்கிற நாடுகள் தனியாய் பிரிந்து சுதந்திரப்பிடகடனம் செய்துகொண்டன. விளைவு வழக்கம்போல் ராணுவ படையெடுப்பு, குண்டுத்தாக்குதல்கள் இந்த இரண்டு நாடுகளின் மீதும் யுகோஸ்லாவியாவின் செர்பியப் படைகளால் ஏவி விடப்பட்டன. 

குரோசியா, ஸ்லோவேனியாவைத் தொடர்ந்து 1992 இல் Bosnia-Herzegovina அல்லது பொதுவாக போஸ்னியா என்றழைக்கப்படும் நாடும் சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டது. பல்லின நாடான (முஸ்லிம்கள், செர்பியர்கள், கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள்) Bosnia-Herzegovina வின் இந்த சுதந்திரப் பிரகடனம் போஸ்னியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தால் நிராகரிக்கப்பட்டது. நிராகரித்ததோடு நில்லாமல் செர்பியர்கள் Srpska என்கிற நாட்டையும் உருவாக்கி கொண்டார்கள். Slobodan Milosevic தலைமையிலான இந்த நாட்டுக்கு சேர்பியப் படைகளின் ஆதரவும் சேர செர்பிய பிராந்தியத்தை தக்கவைத்துக்கொள்ள போஸ்னியாவை நோக்கி படையெடுத்து இனவழிப்பை செய்து முடித்தார்கள்.

1992-1996 ஆண்டுகளுக்கிடையில் போஸ்னியாவின் தலைநகரான சரஜீவோ மீது செர்பியர்களால் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. விளைவு உயிர்ச்சேதம், காயங்களோடு மக்கள். 1993 இல் போஸ்னியாவின் வட-கிழக்கு பகுதியிலுள்ள Srebrenica ஐ. நாவின் பாதுகாப்பு பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் 1995 இல் சேர்பியப் படைகள் ராட்கோ மிலாடிக் தலைமையில் Srebrenica விற்குள் நுழைந்து பத்தாயிரக் கணக்கானோரை இடம்பெயர வைத்ததுடன் ஏழாயிரம் போஸ்னிய முஸ்லிம் ஆண்களை படுகொலை செய்தனர். அது சர்வதேசத்தால் இனப்படுகொலை என்றே அழைக்கப்படுகிறது. அதற்கு தலைமை தாங்கியவர் ராணுவத்தளபதியான ராட்கோ மிலாடிக். 

மொத்தத்தில் Sarajevo-சரஜீவோ, Srebrenica-சிரிப்றேனிகா ஆகிய இரண்டு படுகொலைகளிலும் ராணுவத்தலைமை தாங்கியவர் ராட்கோ மிலாடிக். இப்போ, தெற்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விருப்பம் தெரிவித்த நாள் முதல் அவர்களிடம் முன் நிபந்தனையாக வைக்கப்பட்டதில் ஒன்று இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்ட ராட்கோ மிலாடிக் கைது செய்யப்பட்டு போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது. 

வடக்கு ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஐரோப்பிய ஒன்றியம் என்கிற ஜோதியில் ஐக்கியமாக மற்றைய ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் வைப்பதும், அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்புங்கள். வேலைவாய்ப்பை உருவாக்குங்கள் என்று கட்டளைகள் வைப்பதும் தொடர்ந்து இழுபறியாகவே நடந்துவருகிறது.

இதை தவிர கடந்த மே மாதம் அதிகம் உலகின் கவனத்தை பெறாத ஆனால், முக்கியமான ஓர் நிகழ்வு FAIR-Fairness and Accuracy in Reporting, the media watch group in New York, தனது 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. அதில் அமெரிக்காவின் மாற்றுக்கருத்தாளர் என்று சர்வதேசத்தால் அறியப்பட்ட நோம் சாம்ஸ்கி உரையாற்றியிருந்தார். சொம்ஸ்கி உரையாற்றினால் வேறென்ன, அமெரிக்க ஜனநாயகத்தை அதன் ஊடக விழுமியங்களை, தார்ப்பரியங்களை விமர்சிக்காமல் இருப்பாரா!! தாரளாமாய் வேண்டுமென்கிற அளவுக்கு விமர்சித்தார்.

அமெரிக்காவின் அரபுநாடுகள் மீதான ஜனநாயகப்பார்வையை அங்குள்ள எண்ணெய் வளங்களோடு தொடர்பு படுத்தி பேசியிருந்தார். வழமையாக, நோம் சொம்ஸ்கி முன்வைக்கும் குற்றச்சாட்டு வியட்னாம் போரிலிருந்து அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் படையெடுப்பு வரை அமெரிக்க ஊடகங்கள் Pentagon சொல்வதையே செய்தியாக செய்தியாக பிரசுரித்து வருகின்றன என்பது தான். 

இதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு விவரண, விளக்க மாநாட்டில் கலந்துகொண்ட US Defence attache' Lt.Col. Lawrence Smith இன் கூற்றுக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துகளே அன்றி அது அமெரிக்க நாட்டின் கொள்கைகள் பற்றிய பிரதிபலிப்பு அல்ல என்று அவசர, அவசரமாய் அமெரிக்கா அறிக்கை விட்டது. இவர் அப்படி என்னதான் பேசினார் என்று நானும் தேடிப்பார்த்தேன் காணக்கிடைக்கவில்லை. கிடைத்தால் இணைப்பு கொடுங்கள். ஆனால், Francis Boyle தமிழ் நெட்டில் இப்படி சொல்கிறார், 

"....In this case, he could have been acting pursuant to Instructions by the Pentagon and not by the State Department, ....."

அத்தோடு, இவர் அமெரிக்காவின் சார்பாக அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இலங்கையில் இருக்கும் ஓர் அமெரிக்க அதிகாரியின் சராசரி கடமைகளில் ஒன்று தான் அந்த மாநாட்டில் இவர் கலந்து கொண்டது என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள் போலும். ஆனால், இலங்கை அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்கிற பட்டியலில் அமெரிக்காவையும் சேர்த்திருந்தது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதில் கலந்து கொள்ள வேண்டாமென கோரிக்கை வைத்ததும் அமெரிக்கா தாங்கள் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்ததும் உண்டு. 

மறுபடியும் சொம்ஸ்கியிடம் வருவோம். FAIR மாநாட்டில் அவர் பேசியதை இந்த இணைப்பில் காணலாம். இருந்தாலும், சுருக்கமாக அவர் பேசியதன் சில கருத்துகள் என் புரிதலில்...

பொதுவாக அமெரிக்க ஊடகங்கள் மத்திய கிழக்கில் வாழும் மக்களின் கருத்துகளை பிரதிபலித்து எழுதாமல் அமெரிக்க நலன் சார்ந்தே செய்திகள் தயாரிக்கிறார்கள். பெரும்பாலான மக்களின் கருத்து ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால் அது பிராந்திய நலன் சார்பில் அதிக பாதுகாப்பை கொடுக்கும். அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிக்கு துணை போய் மக்களை அவர்கள் மூலம் அடக்கி வைத்து, முடியாத கட்டத்தில் அந்த சர்வாதிகாரியை தூக்கி எறிந்துவிட்டு அதே போல வேறோர் பெயரில் இன்னோர் சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தும். அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் அரபு நாடுகளில் அதிகாரபூர்வமான, நம்பத்தகுந்த ஜனநாயக ஆட்சியை மலர அனுமதிக்கப் போவதில்லை. இதற்கு அவர் எடுத்துக்காட்டும் மிக சிறந்த உதாரணம் சிறுபான்மையான Shiites (தமிழ்ப்படுத்த தெரியவில்லை)  முஸ்லிகள் வாழும் நாடான பாஹ்ரைன் நாட்டில் மக்கள் எழுச்சி நடந்த போது சவூதி அரேபியாவின் படைகள் அங்கு நுழைந்து தாக்குதல் நடத்தியதை குறிப்பிடுகிறார். காரணம், சவூதி அரேபியா அமெரிக்க சார்பு நாடு. 

Shiites முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிழக்கு சவூதி அரேபியா, தெற்கு ஈராக், தென்-மேற்கு ஈரான் ஆகிய பகுதிகளிலேயே எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதால் அவர்கள் சுதந்திரம் நோக்கி நகர்வதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிறார் சாம்ஸ்கி. 

மிகுதியை இணைப்பிலுள்ள கானொளியில் கேட்கலாம். 

இறுதியாக, இதெல்லாம் ஏதோவொரு வகையில் ஈழத்தோடு சர்வதேசம் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை, அதன் தாக்கத்தை இன்னோர் கோணத்தில் பார்க்க உதவுகிறது. 

போஸ்னியாவின் ஏழாயிரம் பேர் கொள்ளப்பட்டது இனப்படுகொலை. அதற்கு ராட்கோ மிலாடிக் கைது செய்ப்பட்டு நீதி விசாரணைக்கு உடப்படுத்தப்படுகிறார். அதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க. வன்னியில் இறுதிப்போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் அடிப்படைக்காரணம் இனவழிப்பு. அந்த நோக்கம் அங்கே தெளிவாக எல்லோருக்கும் புரியும், தெரியும். எங்கள் இழப்பின் எண்ணிக்கையும் எழாயிரத்தின் ஆறு அல்லது ஏழு மடங்கு அதிகம். ஆனால், தமிழர்களுக்கு மட்டும் நீதி கிடைக்காது. ராஜபக்ஷேக்களும், உயர் ராணுவ அதிகாரிகளும் Diplomatic Immunity என்கிற கவசத்தின் கீழே தங்களை பாதுகாத்து, தங்கள் ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்வர். 

நோம் சாம்ஸ்கியும் மத்திய கிழக்கைப் பற்றி பேசி, ஈழத்தில் இனப்படுகொலையின் அமெரிக்காவின் பங்கு குறித்து பேச மறந்தது ஏனோ தெரியவில்லை. ஈழத்தமிழர்கள் விடயத்தில் அமெரிக்க அரசின் கொள்கைகள் ஒன்றாகவும், பெண்டகானின் கொள்கைகள் வேறாகவும் இரட்டை நிலை என்பது சாம்ஸ்கி போன்றோரால் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இந்த சர்வதேச நிகழ்வுகளை எடுத்துக்காட்டி ஈழத்தமிழர்களுக்கான நியாயங்களை சர்வதேசத்திடம் கொண்டுசெல்லும் கடமையும் புலம் பெயர் தமிழர்களிடமும், அவர்களின் ஒற்றுமையிலுமே தங்கி இருக்கிறது என்பது எனது கருத்து.


8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//உருளும் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதை ஈழத்தோடு பொருத்திப்பார்ப்பது எனக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. //
பாதிக்கப்படவனின் வலியினால் ஏற்படும் பந்தம் அது. இங்கேயும் அதே.

//இலங்கை அரசின் பொய்களுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா முண்டு கொடுப்பதும், மற்றும் வியட்னாம், வடகொரியா, கியூபா, வெனிசுலா போன்ற சர்வதேசியம் பேசி சுதேசியத்தை, தங்கள் பிராந்திய நலன்களை மட்டும் கடைப்பிடிக்கும், வளர்க்கும் நாடுகளின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடுகளுமே.//

இதில் வேடிக்கை என்ன என்றால் வியட்னாம், கியூபா போன்ற அடிமைத்தனத்தின் வலியை உணர்ந்த நாடுகளும் எங்களை கைவிட்டதே.

நேட்டோ போட்ட குண்டில் 12 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டாலும் அவர்களுக்காக கண்ணீர் விடுவது நாங்கள் மட்டுமே. மத்தவனுக்கு இதுக்கெல்லாம் எங்கே நேரம். கண்ணீர் விடுவது எல்லாம் சுத்த முட்டாள் தனம். அறிவுபூர்வமாக நட. உணர்ச்சி வசப்படாதே என்று ஒரு குரல் எங்கேயோ கேட்கிறதே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

//அவர்களின் ஒற்றுமையிலுமே தங்கி இருக்கிறது என்பது எனது கருத்து.//
யக்கோவ், ஒற்றுமையா? இந்த நக்கல் தானே கூடாது. எங்கட சனத்திட்ட அது இல்லவே இல்லையே =((

ராஜ நடராஜன் சொன்னது…

சில சமஸ்கிருத உச்சரிப்புக்களில் உங்களுக்கு பிரச்சினையில்லையென்றால் Shiites ஷியா என்றே விளிக்கிறார்கள்.

நோம் சாம்ஸ்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரலை நீண்ட நாட்களாக எழுப்பி வருகிறார்.ஆனால் கேட்பதற்குத்தான் ஆளில்லை.அமெரிக்கா இரட்டை நிலைக் கொள்கைகள் எடுத்தாலும்

(நீங்கள் சொன்னமாதிரி பஹ்ரைன்க்கு மக்களாட்சி வேண்டாம்,அதுவே ஈரானோ,லிபியாவாக இருந்தால் ஆயுதம் கொடுத்தாவது மக்களாட்சி நிறுவ தயார்.அதே ஆயுதத்தை தமிழன் தூக்கினால் தீவரவாத முத்திரை என பல சொல்லலாம்)

அமெரிக்காவுக்கு மாற்றாக வேறு எந்த ஒரு நாடும் மக்கள் உரிமை,சுதந்திரம் பற்றி பேசும் வலிமை இல்லையென்பதும் உண்மையே.

க்யூபாவின் இலங்கை ஆதரவு நிலை க்யூபாவுக்கும் சேகுவரேவுக்குத்தான் தலைக்குனிவு.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!தமிழக சூழல்,இலங்கை மீதான போர்க்குற்ற அறிக்கை போன்றவையும் ஜூன் 14ம் தேதி வெளிவரும் இனப்படுகொலை ஆவணப்படம் போன்றவை தமிழர்கள் இன்னும் உரத்து குரல் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஜூன் 26ம் தேதி மெரினாவில் கூடும் கூட்டத்தைப் பொறுத்து தமிழகத்தின் குரல் உலகமெங்கும் உரக்க கேட்கும் சூழல் உருவாகுமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.மெரினா மெழுகுவர்த்தி தினத்தை மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்து விட்டால் பின் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

வழக்கமாக உங்களிடம் உரைக்கும் ஒன்றுதான்.நாடு கடந்த தமிழீழத்தின் செயல்பாடுகளின் வேகத்தை இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்.

Rathi சொன்னது…

ராஜ நட, Shiites, ஷியா தெளிவு படுத்தியதுக்கு நன்றி. எனக்கு இந்த பிரிவுகள், மத சம்பிரதாயங்கள் பற்றிய தெளிவான அறிவு கிடையாது.

அது என்னவோ தெரியவில்லை. ஈழம் என்றவுடன் உலக அரசியலே தலைகீழாய் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து கொஞ்சம் ஓங்கி குரல் கொடுத்தால் தமிழர்களுக்கு பலமாக இருக்கும்.

ஜூன் பதின்நான்கு, இருபத்தாறு இரண்டையும் பொறுத்திருந்து பார்ப்போம், என்ன விளைவுகளை கொடுக்கிறது என்று.

ராஜபக்க்ஷேவின் பேச்சை கவனித்தால், வடக்கில் தொலைத்தொடர்பு /தொலைக்காட்சி கோபுரத்தை திறந்து வைக்க போய், அவர்கள் மத்தியில் புலம் பெயர் தமிழர்களை திட்டியிருக்கிறார். கூடவே இங்குள்ளவர்களை விடவும் தான் நன்றாக தமிழ் பேசுவாராம் என்று வேறு சொல்லியிருக்கிறார்.

அப்படியானால், புலம் பெயர் தமிழர்கள் அவருக்கு சர்வதேசத்தில் தலையிடி என்பதை சொல்லாமல் சொல்கிறார் போலும்.

Rathi சொன்னது…

அனாமிகா, எங்கட ஆட்களிடம் ஒற்றுமை இல்லையா என்பதல்ல, இனி அது இருந்தே ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இனிமேலும் புலத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் இவர்களை என்ன சொல்வது. ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை இப்போ கொஞ்சம் தேறியிருக்கிறது என்றே சொல்வேன்.

பெயரில்லா சொன்னது…

உலக அரங்கில் ஈழம் நோக்கிய பார்வை கொஞ்சம் கொஞ்சமாகவே திரும்புகின்றது. அமைதியாக ஆனால் ஆக்குரோசமாக போராடவும், உண்மையாக உழைக்கவும், தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் தமிழர்கள் முன்வந்தால் வெற்றி நிச்சயம் ... நல்ல பதி ரதி அவர்களே ! :)

Rathi சொன்னது…

ஆரோணன், நீங்களே எல்லாத்தையும் தெளிவாக சொல்லிவிட்டீர்கள். இனி நான் என்ன சொல்ல :)

JOTHIG ஜோதிஜி சொன்னது…

இந்த கட்டுரையை விமர்சிக்கும்அளவுக்கு சர்வதேச உற்று நோக்கல் என்னிடம் இல்லை என்பது நன்றாகவே தெரிகின்றது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும்.

சமீப சர்வதேச நடவடிக்கைகள் எந்த அளவுக்கு ராஜபகேஷவுக்கு மண்டையிடியை உருவாக்குமோ தெரியாது ஆனால் தமிழர்களை ஒரே அணியில் கொண்டு வராது என்பது மட்டும் திண்ணம்.

காரணம் 100 ஆண்டுகளில் பட்ட பாடுகளில் புரிந்து கொள்ளாமல் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைப் பற்றி என்னை விட ஈழ மக்கள் உங்களுக்கே நன்றாகவே தெரியும் அல்லவா?