ஜூன் 29, 2011

ஈழம் - ஈழமும் என் புரிதலும்!இப்போ கொஞ்சநாட்களாகவே கனடாவில் தமிழ் தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது உலகச்செய்திகளுக்கு முன்பு கார் விளம்பரம் காண்பிக்கப்படும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிபொருள் சிக்கன கார் விளம்பரம் சரி, ஆனால், அதை உலகச்செய்திகளுக்கு முன் தான் காட்டுவார்களா! ஏன் ஈழத்துச் செய்திகளுக்கு இந்த உலகளாவிய பாரிய கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை (Sponsor) செய்யமாட்டார்களா என்று நான் ஒரு Global Perspective இல் சிந்தித்தால் எரிச்சலாக கூட இருக்கலாம், இவளுக்கு இதுவே வேலையாய்ப் போச்சு என்று :)

ஈழத்துச் செய்திகளுக்கு எம்மவர்களின் உணவகங்கள், உள்ளூர் உற்பத்திப் பொருட்களான அரிசிமா, மிளகாய்த்தூள் போன்ற விளம்பரங்கள் அல்லது ஏதாவதொரு பாரிய நிறுவனத்திற்கு, Law Firm, Insurance Co., Mortgage Co. போன்றவற்றிற்கு எம்மவர்கள் ஏஜென்டாக பணிபுரிந்தால் அவர்களின் விளம்பரங்கள் இவைதான் எம் ஈழத்துச் செய்திகளுக்கு Sponsor செய்வார்கள் போலும். ஈழம் குறித்த எத்தனையோ விடயங்களுக்கு இவர்கள் தான் முன்னின்று உதவியிருக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது. ஈழத்தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களுக்கு இவர்களின் கணிசமான பங்களிப்பு இன்றி அது சாத்தியமுமில்லை. 

அண்மையில் E-Coli தொற்றினால் ஐரோப்பிய விவசாயிகள் பாதிக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பேசுகிறார்கள் அவர்களுக்கு நட்ட ஈடு கொடுக்கப்படவேண்டும் என்று. ஜப்பானின் அண்மைக்கால நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அழிவினால் உண்டான புகுஷீமா அணுமின்நிலைய கதிர்வீச்சை கட்டுப்படுத்த ஜப்பானிடம் எந்தவொரு திட்டமும் இல்லாதிருந்ததாம். இதைப் பார்த்த ஜெர்மனி தன் நாட்டிலுள்ள அணுமின் உற்பத்தி நிலையங்களை கொஞ்சம், கொஞ்சமாக மூடிவிட முடிவெடுத்துள்ளது. 

ஆக நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காய் பேச, செயற்பட, பொருளாதார திட்டங்களை தீட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் எப்போதும் தயாராய் இருக்கின்றன. கூடவே, வளர்ந்துவரும் நாட்டு மக்களின் உயிர்களை பற்றிக்கூட அவர்கள் அக்கறைப்படுவதில்லை. ஐரோப்பிய நாடுகள் ஈழப்பிரச்சனை குறித்து அதிகம் பேசுவது தங்கள் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களை எவ்வளவு விரைவில் மீண்டும் திருப்பி அனுப்ப முடியுமோ அதை துரிதப் படுத்துவதற்குத்தான். 

உலக வல்லரசுகளின் பொருளாதார, புவியியல் போட்டிகள், பொருளாதார நலன்கள் மற்றும் முரண்பாடுகளில் இப்படி ஒவ்வொரு நாடும் மக்களும் சிக்கித் தவிக்கும் போது, இப்போது இலங்கையின் முறை. ஈழத்தில் அமெரிக்க, சீன, இந்திய தலையீடுகள், தீராத குழப்பங்கள், விடை தெரிந்தும், தெரியாததது போல் பாவனையான கேள்விகள். 

மேற்கு ஆசிய, வடக்கு ஆபிரிக்க நாடுகளில் இப்போதான் அமெரிக்கா விரும்பும் ஆட்சி மாற்றங்கள் ஒருவழியாய் மீண்டும் ஏற்படத்தொடங்கி இருக்கின்றன. அரசியல் ஆய்வாளர்களின் சொற்பிரயோகத்தில் அதற்குப் பெயர் "Regime Change". இலங்கையிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகிறது. ராஜபக்க்ஷேக்கள் அமெரிக்காவின் சொல்வழி கேட்காவிட்டால் வேறு எதை எதிர்பார்ப்பது. 

ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையும் கொடுக்க கூடாது, சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவையும் அமெரிக்காவின் சுயலாபங்களுக்காக இழக்க கூடாது.... பிறகு எப்படி!! இதுக்கு அமெரிக்கா எப்படியும் இன்னும் கொஞ்ச நாட்களில் பதில் சொல்லும். உடனே யாராவது சிங்களப் பெரும்பான்மையின் மக்கள் எழுச்சியா என்று கேள்விகேட்டால் என்னிடம் பதில் இல்லை. சிங்களப் பெரும்பான்மை ராஜபக்க்ஷேக்களுக்கு எதிராக பொங்க வேண்டுமா, வேண்டாமா என்பதையும் அமெரிக்கா தான் தீர்மானிக்க வேண்டும். காத்திருப்போம்.

இதுக்கெல்லாம் இலங்கையில் உள்ள தமிழக்கட்சிகளின் பிரதிபலிப்பு, எதிர்வினை என்ன என்றும் யோசிக்கலாம். இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமை, பிரிவு, பிளவு என்று இந்தியாவின் கைப்பொம்மைகளாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே என் கருத்து. அமெரிக்கா நேரடியாய் இவர்களுடன் பேசப்போவதில்லை. இந்தியா மூலமே பேசுவார்கள். நீங்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டும் என்று பாடம் எடுப்பார்கள். புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்று மட்டும் பேசுங்கள் என்று இவர்களுக்கான பேச்சுக்கள் தயார் செய்யப்படும். 

மொத்தத்தில் தமிழர் தரப்பையும் இந்த அரசியல்வாதிகள் மூலம் அடக்கிவைத்து, சிங்களப் பெரும்பான்மையையும் சமாதானப் படுத்தி, இலங்கையில் நடந்தது தமிழனின் இனப்படுகொலை அல்ல போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று படம் காட்டி...... அட போங்கப்பா!!! 

நடிகர் கார்த்திக்கு கல்யாணம், சினிமாக்காரங்க மறுபடியும் ஈழத்தமிழர்களுக்காக ஓர் ஊர்வலமோ ஏதோவொன்று நடத்த தமிழக முதல்வரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள்!! இப்பிடி எத்தனயோ சுவாரஸ்யமான சினிமா தகவல்கள் இருக்க எங்களுக்கு ஏன் ஈழப்பிரச்சனையை. ஏற்கனவே சினிமா நடத்திரங்கள் ஒருமுறை உண்ணாவிரதம் நடத்தி எங்களை கவிழ்த்தது போதாதா! இதையெல்லாம் நீங்க செய்யாவிட்டாலும் சூடு, சுரணையற்ற ஈழத்தமிழன் உங்கள் சினிமாவை இந்தியா கடந்தும் வாழவைப்பான், கவனியுங்கள். 

எங்களுக்காக மெரீனா கடற்கரையில் திரண்டவர்கள் பேசினாலே விடியுமே!!! உங்கள் அனைவருக்கும் நன்றிகள். புலத்தில் ஈழத்துச் செய்திகளுக்கு Sponsor செய்பவர்களும், செயற்படுபவர்களும், தமிழகத்தில் மெரீனா கடற்கரையில் எங்களுக்காய் கூடியவர்களும் தான் ஈழத்தை உண்மையாய், அதிகமாய் நேசிப்பவர்கள் என்பது ஏனோ என் மனதில் பதிந்து போய்விட்டது. 
Image Courtesy: TamilNet

ஜூன் 20, 2011

என் வாசிப்பின் பயணம்...!

என் வாசிப்பின் பயணத்தில் எனக்கு அறிமுகமாகி, ரயில் பயணம் போல் காணாமற்போன சில எழுத்துகளையும் எழுத்தாளர்களையும், என்னை நானே அடையாளம் காணவைத்தவர்களையும் ஒருமுறை திரும்பிப்பார்க்கிறேன். என் வாசிப்பின் எல்லைகள் தொட்ட தூரத்திற்கேற்ப வாழ்வின் பரிமாணங்களும் எல்லைக்கோடுகளும் விரிந்ததுண்டு.

வாசிப்பில் நிறைய ஆர்வம் உண்டு. ஆனாலும், எதை வாசிப்பது என்பதில் எனக்கு  கொஞ்சம் குழப்பமும் உண்டு. என் மனநிலைக்கு ஏறாற்போல் ஏதாவது படிப்பேன். இது தான் படிக்கவேண்டும் என்று தீர்மானமாய் எதையும் படிப்பதில்லை. ஆனாலும், வாசிப்பை ஓர் ஒழுங்குவடிவில் இயங்கியல் பால் உள்ள ஈடுபாடு, தனிமனிததத்ததுவம், இவை இரண்டையும் ஒன்றோடொன்று தங்கியிருக்கும் வகையில் உருவாக்கப்படும் கருத்துருவாக்கங்கள் அதன் விமர்சனங்கள் மீது என்று கூறலாம்.

ஆனாலும் அன்டன் பாலசிங்கம், பிரையன் செனிவிரட்னே எப்போது வேண்டுமானாலும் படிக்க பிடிக்கும். அது ஈழம், உலக அரசியல், மனித வரலாறு சம்பந்தப்பட்டது என்பதால். ஆனாலும், தமிழிலில் நான் எப்போது விரும்பி படிப்பது அன்ரன் பாலசிங்கத்தின் எழுத்து. அதற்கு அடுத்து இணையத்தில் நான் தேடிப்படிப்பது பெ.மணியரசன், கொளத்தூர் மணி இவர்கள் இருவரினதும் பேச்சு மற்றும் எழுத்துகள். இப்போது புதிதாய் எனக்கு அறிமுகமானது  யமுனா ராஜேந்திரனின் எழுத்து. இவரது எழுத்து கண்ணில் பட்டால் வாசிக்காமல் போவதில்லை. 

மனித வாழ்வின் வரலாற்றை, மனித விடுதலையின் அசைவியக்கத்தை ஆராயப்போக உலக இயங்கியல் அறிமுகமானது. இயங்கியலின் முன்னோடியாய் ஜெர்மனியைச்சேர்ந்த ஹேகல்  கருதப்படுகிறார். அவருடைய வரலாற்றுத் தத்துவத்தை பொருளியல் அறிவியற் கோட்பாடுகளாக மாற்றியமைத்தவர் கார்ல் மார்க்ஸ் என்கிறார்கள். எனக்கு கார்ல் மார்க்ஸ் சித்தாந்தம் ஒன்றும் உருப்படியாய் தெரியாது. அப்பப்போ அது பற்றி வாசித்ததுண்டு. அது கூட application என்கிற வகையில் தான். அவர் எதையோ நல்ல விதமாகத்தான் சொன்னார். அதன் பிறகு அவரின் சித்தாந்தத்துக்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள் சர்வாதிகாரத்தை கொண்டு அதை நிலை நிறுத்தப்போக வரலாறு வேறு விதமாக திரும்பிவிட்டது. ஆனாலும் கார்ல் மார்க்ஸ் சித்தாந்தம் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளும் ஆவலில் அது குறித்த வாசிப்பை தொடர்கிறேன்.

அத்தோடு பெ.மணியரசன், கொளத்தூர் மணி போன்றோர் பேசும் மார்க்சிய சித்தாந்தம், ம.க.இ.க. பேசும் அதே சித்தாந்தம், ஏன் இவர்களின் அணுகுமுறையில் வேறு படுகிறது என்றும் யோசிப்பதுண்டு. பதில் தெரிவதில்லை. அந்தளவுக்கு எனக்கு ஆழ்ந்த அறிவு அது பற்றி கிடையாது. ஒரு பொதுத்தளத்தில் (இங்கே அது மார்க்சியம்) நின்று பேசும் போதே ஏன் இத்தனை முரண்பாடுகள் என்று புரியாமல்  குழம்பியதுண்டு. நான் வாசிப்பினூடே புரிந்து கொண்டது பெ.தி.க. முதலில் ஓர் தேசிய இனம் தன் விடுதலையை பெற்றால் தான் சர்வதேசியம் பேசலாம் என்கிறார்கள். ம.க.இ.க. தமிழ்த்தேசியம் என்று பேசி, எழுதி நான் கேட்டதில்லை, படித்ததில்லை. அவர்கள் சர்வதேசியம் பேசுகிறார்கள் என்பது என் புரிதல். 

இவ்வாறாக, ஆரம்பம் முதல் வரலாற்றுக்காலம் தொட்டு இன்றுவரை மார்க்சிய-லெனினிய சித்தாந்தங்கள், அதற்கு வடிவம் கொடுத்தவர்கள் முதல் அந்த சித்தாந்தத்தின் வழி இன்று வடிவம் கொடுக்க முயல்பவர்கள் வரை ஏதோவொரு வகையில் முரண்பாடுகளில் முட்டி மோதிக்கொண்டே இருக்கிறார்கள் என்று புரிகிறது. 

எனக்கு உலக இயங்குவிதிகளில் உள்ள அதீத ஆர்வம் தான் கார்ல்மார்க்சை அறிமுகப்படுத்தியது. தவிர ஈழத்தின் தலைவிதியை இதே நவீன உலக இயங்குவிதிகள் தான் தீர்மானிக்கின்றன எனும் போது அது பற்றி தெரிந்து கொள்ளுதல் தவிர்க்க இயலாத ஒன்றாகிப் போகிறது.

நான் தமிழில் எந்தெந்த எழுத்தை அல்லது யாருடைய எழுத்தை இலக்கியம் என்று கருதி ஆரம்பத்தில் படித்திருக்கிறேன் என்றால் நீங்கள் சிரிப்பீர்கள். என் பதின் பருவங்களில் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், ரமணிசந்திரன் என்று ஒன்றிரண்டு புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். வாழ்க்கையின் யதார்த்தங்கள் புரிபட இவர்களும், இவர்களின் எழுத்தும் தூரமாகிப் போனது. அது தான் தமிழ் இலக்கியத்தின் தரம் போலும் என்று வெறுத்துப் போய்விட்டது. அப்படியே, அதையும் தாண்டிப் புனிதமான இலக்கியம் என்றாலும் மகாபாரதம், கம்பராமாயணம் என்றார்கள். நான் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் முதல் விமானக்குண்டுவீச்சுவரை கம்பராமாயணத்தில், மகாபாரதத்தில் விடை சொல்லப்படாததால் அன்றுமுதல் அவற்றோடு என்னால் ஒன்றமுடிவதில்லை. சரிதான் என்று என் இலக்கியத் தேடலில் முதல் வெட்டு விழுந்தது. அதைத் தொடர்ந்து ஈழத்திலுள்ள போர்ச்சூழில் அநேகமான நூலகங்கள் இலங்கை அரசால் திட்டமிடப்பட்டே விமானக்குண்டு வீச்சில் அழிக்கப்பட்ட பின் இலக்கியத்தேடலுக்கான ஆர்வம் இருந்தாலும் புத்தகங்கள் கிடைத்ததில்லை. எங்கள் ஊரில் விமானக்குண்டு வீச்சில் ஒரு தடவை நூலகத்தை அழித்தார்கள். சரியென்று, மிகவும் சிரமப்பட்டு மறுபடியும் அதை ஊரில் உள்ளவர்கள் சொந்தக்காசில் மீளக்கட்டிஎழுப்பி மிக அழகாக அதை நடத்தி வந்தார்கள். சில மாதங்களிலேயே அது மறுபடியும் விமானக் குண்டுவீச்சுக்கு பலியாகிவிட்டது. 


பிறகு, கனடா வந்தபின் நான் தமிழில் படித்தது அமரர் கல்கியின் சரித்திர நாவல்கள் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், கொஞ்சம் வைரமுத்து, நிறைய பாலகுமாரன். இந்நாளில் ஏனோ கவிஞர் வைரமுத்து, பாலகுமாரன் இவர்கள் இருவரின் எழுத்தில் ஓர் அயற்சி ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் வைரமுத்துவின் "இந்தக்குளத்தில் கல் எறிந்ததவர்கள்", பாலகுமாரனின் எழுத்துகள் புலம்பெயர் அந்நிய தேசத்தில் என் சொந்தவாழ்க்கையில் முன்னேற நிறைய உந்துதலை கொடுத்தது என்றால் மிகையில்லை. குறிப்பாக கவிஞர் வைரமுத்துவின் இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள் என்னை வாழ்க்கையின் நான் விரும்பிய தூரத்திற்கு இட்டுச்செல்ல உதவிய ஓர் உளவியல் பாதிப்பை உருவாக்கிய, எனக்குள் நம்பிக்கையை விதைத்த ஓர் வாசிப்பு. 

நிறைய தமிழாக்கங்களை, குறிப்பாக தாஸ்தாவெஸ்கி, படிக்க வேண்டும் என்னும் ஓர் ஆவல் எனக்குள் உண்டு. காரணம் நான் எவ்வளவு தூரம் உலக இயங்குவிதிகளை நம்புகிறேனோ அதேயளவிற்கு தனிமனித தத்துவத்தையும் நம்புவது தான். தத்துவம் என்றால் சிலருக்கு  ஒவ்வாமை ஆக கூட இருக்கலாம். Dostoyevsky படித்திருக்கிறேன் என்று சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். மனித இருப்பு, வாழ்வானுபவம் இவைதானே தனிமனித தத்துவத்தில் கருதுபொருளாக விளக்கப்படுகிறது. தனிமனித் கூறுகளுக்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைத்தால் தான் சமூக கூட்டு வாழ்வு சாத்தியம் என்பதே தனிமனித தத்துவம் விளக்கி நிற்கிறது. ஹேஹல் மற்றும் மார்க்ஸ் எப்படி இயங்கியல் கருத்துலகத்தை உருவாக்கினார்களோ, அதே போல் மனித இருப்பியல் கருத்துலகை கட்டியமைத்த சிலரை குறிப்பிடலாம், Soren Kierkegaard, நீச்சே (Nietzsche), மார்டின் ஹைடேகர், ஜான் போல் சாத்தர் (John Paul Satre). 

இவர்களின் எழுத்தை படித்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? ம்ஹீம், இல்லை. பொதுவாக தனிமனித தத்துவம் பற்றியும் ஜான் போல் சாத்தரின் எழுத்தையும் கொஞ்சம் படித்திருக்கிறேன்.

அப்படி தனிமனித தத்துவதேடலில் அறிமுகமானவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி.  ஆனாலும், ஜே. கிருஷ்ணமூர்த்தி ஓர் தனிமனித தத்துவாசிரியர் இல்லை. ஒருவேளை ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று நான் கூறுவதால் தத்துவம் பற்றி யாராவது சிரித்தீர்களோ என்று நினைத்துக்கொண்டேன். நான் கிருஷ்ணமூர்த்தி படித்திருக்கிறேன். அவ்வப்போது தொடர்ந்து படித்துக்கொண்டும் இருக்கிறேன். தவிர அவரின் எழுத்து தத்துவவிசாரனைகள் செய்வதில்லை என்பது என் புரிதல். எங்களை நாங்களே கேள்வி கேட்கும், எங்களை நாங்களே எங்கள் இயல்புகளில் இருந்து அறிந்துகொள்ளும் வழிகள் பற்றி நிறையவே பேசியிருக்கிறார். நான் படித்த தமிழாக்கம் அனேகமாக இவருடைய எழுத்தாகத்தான் இருக்கும்.

நான் ஆன்மீக தத்துவ பித்தோ அல்லது அதில் ஈடுபாடு கொண்ட ஜென்மம் கிடையாது. கடவுளை மறுப்பதும் கிடையாது, ஏற்பதும் கிடையாது. காரணம் அது பற்றி அக்கறை கிடையாது. என் வாழ்வு என் கையில் என்று நம்புகிறேன். வலிகளில் இருந்து வாழ்க்கையை வாழும் விதத்தை, தனிமனித ஒழுக்கத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் விரும்பும் மாற்றத்தின் முன்னோடியாய் நானே இருக்கவேண்டும் என்று முயல்வேன். அவ்வளவுதான். 

ஆங்கிலம்!! இதை நான் படிக்க, பேச கனடாவில் நிறையவே பிரயாசைப்பட்டேன். அரை குறையாய் ஆங்கிலத்தை கொன்று தான் நான் என்னை முழுமையாக்கிக்கொண்டேன் நான் வாழும் அந்நியதேசத்தில். ஈழத்திலிருந்து, அதுவும் வடக்கில் எங்கோ ஓர் மூலையில் இருந்து வந்த எனக்கு ஆங்கிலம் தான் முதலில் பயமுறுத்திய விடயம். இன்று நோம் சாம்ஸ்கியை கூட படிக்கிற அளவுக்கு அந்த மொழியறிவை, மொழியாற்றலை என்னிடம் நானே வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனாலும், தமிழில் படிப்பதை போல் ஓர் சந்தோசம் இல்லை. சொந்த மொழியில் படிக்கும் போது எந்தவொரு விடயமும் சட்டென்று புரிந்து விடுவதும் உண்டு. நோம் சாம்ஸ்கியின் எழுத்து அறிமுகமானது உலக இயங்கியலுக்கும் தனிமனித தத்துவத்துக்கும் இடையேயான இடைவெளியில் ஊடுருவிய ஊடகங்களின் கருத்துருவாக்கங்கள் குறித்த தேடலின் விளைவால். 

முன்பெலாம் சராசரி மனிதர்களின் தேவைகள், அது குறித்த பிரச்சனைகள் என்றால் ஓரளவுக்கு வீட்டுக்கு வெளியே வந்து போராடினார்கள். காலப்போக்கில் பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாய் அல்லது விளைவாய் இன்று எங்கள் பொருளியல்வாழ்வை பாதிக்கும் விடயங்களுக்காக, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக மெய்நிகர் உலகில் கருத்து பரிமாற்ற ஊடகங்கள் வழி போராடினால் தீர்வு கிடைத்துவிடும் எங்கள் பிரச்சனைக்களுக்கு என்று கண்களை மூடிக்கொண்டு நம்புகிறோமோ என்றும் எனக்கு தோன்றுகிறது. ஆனாலும், இன்றும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களும்  உருவாக்கம் பெறுகிறதே என்றும் யதார்த்தம் சொல்கிறது. இப்படி பாஹ்ரைனையும் சவூதி அரேபியாவையும் மக்கள் புரட்சியையும் திரிபுபடுத்தி ஊடகங்கள் சொல்வதை விடவும் நோம் சாம்ஸ்கி வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் பேசுவது அவரிடம் அதிக ஈடுபாட்டை கொடுக்கிறது எனக்கு.

இந்த ஒழுங்கு முறையில் என் வாசிப்பு இருந்தாலும் சில சமூக நாவல்களையும் படித்ததுண்டு. நான் படித்ததில் பிடித்த ஓர் நாவல் Rohinton Mistry என்கிற கனடாவில் வாழும் ஓர் இந்தியர் எழுதிய A Fine Balance என்கிற நாவல். இந்திரா காந்தி காலத்து போலியான அரசியல் நெருக்கடி அதன் மூலம் பாதிக்கப்படும் எல்லாநிலை மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் அனுபவத்தின் வழி சொல்லும் ஓர் படைப்பு. மனித இயல்புகள், வாழ்க்கைப் போராட்டங்கள், அறிமுகம் கூட பூர்த்தியில்லாத ஆண், பெண் என்கிற பிரகிருதிகளுக்கிடையே உண்டாகும் அவசரப் புணர்ச்சி முதல் வறுமையில் வாழ்ந்தாலும் சில மனிதர்கள் தங்களை பண்போடு எப்படி சமப்படுத்திகொள்ள முயல்கிறார்கள் என்பது வரை அழகாய் எழுத்தில் படம் பிடித்துக் காட்டும் ஓர் எழுத்திலக்கியம்.

என் வாழ்நாளில் முற்றுபெறாத என் வாசிப்பின் பயணத்தில் தமிழ், ஆங்கிலம் என்கிற மொழியின் துணையும், ஆளுமையும் இன்னும் என்னை என் அற்பவாழ்வை சமப்படுத்தும் என்கிற நம்பிக்கையுடன் அதை தொடர்கிறேன்.

வாசிப்போடு கொஞ்சம் இசையும் என்னை கவரும் விடயம். அப்படி என்னை அண்மையில் கவர்ந்த ஓர் பாடல் இது. பாடலின் இசையை விடவும், வரிகள் அதிகம் கவர்கிறது.  ஜூன் 15, 2011

வலியின் மொழி!!! As one we will rise!!பாப் மார்லி பாடிய "Buffalo Soldiers" என்கிற பாடல் கறுப்பின மக்களின் அடிமைத்தனத்தை பேசமுடியாத துன்பத்தை, சோகத்தை தனக்குள் புதைத்து வைத்திருப்பதாக சொல்வார்கள். 

இன்று ஈழத்தமிழர்களின், அமெரிக்காவால் கவர்ச்சியாய் பேசப்படும் தனிமனித உரிமைகள், சுதந்திரம், ஓர் இனத்தின் கெளரவம், காலங்காலமாய் நாங்கள் இறுமாந்திருந்த பெருமைகள் சிதறடிக்கப்பட்டு மண்டியிட்டு கெஞ்சியும் கூட மறுக்கப்பட்ட உயிர்ப்பிச்சை இதையெல்லாம் சொல்லும் ஓர் பாடல் தான் இது. 

ஈழம் குறித்த வலிகள் சொல்ல எந்த ஊடகம் வேண்டும் என்று அடிக்கடி எண்ணங்கள் என்னை வதைப்பதுண்டு. வலி சொல்ல சில சமயங்களில் மொழி கூட தேவையில்லை. மெளனம் கூட சிலசமயங்களில் போதுமானது. ஆனாலும், ஈழத்தின் வலியை உலகமே கேட்குமளவிற்கு மீண்டுமொருமுறை உரக்க வாய்விட்டு கத்தவேண்டும் போல் உள்ளது. ஈழம் குறித்த நினைவுகளில் இந்தப்பாடலின் வரிகளும், காட்சிகளும் கூட அடக்கம்.

நேற்று பிரித்தானிய ஊடகமான சனல் நான்கு வெளியிட்ட ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை ஆவண காணொளிகள் எனக்குள் அப்படி ஓர் உணர்வை மிச்சம் விட்டுச்சென்றிருக்கிறது. இது ஆங்கிலம் தான். சில தடவைகள் கேட்டால் நிச்சயம் புரியும். மொழி புரியாவிட்டாலும், காட்சிகளின் தொகுப்புகளின் மூலம் ஈழத்தின் கதையை சொல்லியிருக்கிறார்கள் எம் இளையவர்கள். 


ஜூன் 11, 2011

தமிழ்த்தேசியம் கேள்வி - பதில்.


கேள்வி: 

1. தந்தை பெரியார் தமிழ்தேசியத்தை அந்நாளில் ஆதரிக்கவில்லை அல்லது அந்தக் கருத்தியலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஏறக்குறைய அதே கருத்தை வே. மதிமாறன் போன்றோரும் இக்காலத்தில் முன்வைப்பது எனக்கே கூட சற்று விநோதமாகப் படுகிறது. 

2. அத்தோடு சீமான், முத்துராமலிங்கத் தேவர் மற்றும் குஜராத் மோடி போன்றோரை உயர்த்திப் பேசுவதாக பலர் அதிருப்தி கொண்டிருப்பதாக படித்தேன். இங்கே முன்நிலைப்படுத்தப்படுவது ஜாதி மற்றும் மதம் என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. இதனால் சீமானின் தமிழ்த்தேசியமும் காயம்பட்டுப்போகிறது. இது பற்றி உங்கள் பார்வை என்ன?

பதில்: 

திராவிட இயக்கம் பெரியார் வழியொற்றி வந்ததன் காரணமாகவும்.. தமிழ் வரலாற்றில் பெரியாருக்கு இருந்த கசப்புகள் காரணமாகவும் அவர்கள் அந்த காலத்திற்கு மட்டுமே உகந்த ஒரு கொள்கையை தீவிரமாக முன் வைத்து போராடினார்.. ஆனால் இந்த காலகட்டத்தில் நிச்சியம் அவர் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவே செய்வார்.

அப்படியான ஒரு கொள்கை மாற்றம் இருக்குமெனில் அது தமிழ் தேசியமாக்கத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் பிறப்பால் ஒரு கன்னடராக இருந்தவர் தன் கடைசி மூச்சு வரை தமிழ் மக்களின் இருளை போக்கவே அயராது பாடுபட்டார். 

திரு வே. மதிமாறன் நிகழ்கால அரசியல் போக்கினை எதையும் அவர் உள் வாங்க வில்லை என்பது எனது கருத்து.  நானோ நீங்களோ நாம் ஒரு கொள்கையை அழமாக கடைப்பிடிப்பது தவறில்லை. அந்த கொள்கைகள் காலத்தின் தேவைக்கு ஈடுகொடுக்கிறதா.. என்பது தான் நமது முக்கிய தேடல்களாக இருக்கவேண்டும். அவ்வண்ணமே  அனைத்து விடுதலைக்கான பாதைகளாகவும்  இருக்கவேண்டும். அதை விடுத்து கொள்கையை சடங்கு போல் பாவித்தால் இறுதியில் அதுவும் ஒரு மதமாக மாறி மனிதர்களின் கழுத்தை இறுக்கிவிடும் என்பது எண்ணம். 

தமிழகத்தில் நிறைய பிரதிநிதிகளிடம் இப்படி கரடு தட்டிப்போகும் அளவுக்கு கொள்கைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருப்பதன் முதற்காரணம் அவர்கள் யதார்த்தை நேர்கொள்ள அச்சபட்டு கொள்கையை கவர்ச்சிபடுத்தி முன்னிறுத்துவது. பெரும்பான்மையின் அசட்டுத்தனங்களை சமதானம் செய்து கொள்வதல்ல என் நோக்கம்...  பெரும்பான்மையின் கவனம் இல்லாமல் செயல்படுவது ஆபத்தை விளைவிக்கும் என்பது என் கருத்து.

பெரியார் ஏன் அவ்வளவு உக்கிரமாக பணியாற்றியும்  இன்னும் முடநம்பிக்கை பரவலாக இருக்கிறது ...?

ஒரே காரணம் அதற்கான மாற்று வழிகள் இல்லாததே. அதை அவர் உருவாக்கியிருக்கவேண்டும் என்பது என் வாதமில்லை. அதில் அவர் அவனம் கொண்டு இருக்கலாம் என்பது எண்ணம்.

சீமான் அதில் தெளிவாக இருக்கிறார் என்பது என் எண்ணம்  நீங்கள் இந்து மத சாயங்கள் மெல்ல தடவியிருக்கிறார் என்று கூறியிருந்தீர்கள். ஈழ விஷயத்தில் அவர்   நிச்சியமாக காங்கிரஸை நாட முடியாது. அதற்கு மாற்றாக நரேந்திரமோடியை துணைக்கு அழைக்கிறார்  இதில் பெரிய கொள்கைள் முரண்களை கண்டிருக்கிறார்கள்... பெரியார் கொள்கையாளர்கள். உண்மையில் நமக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவேண்டிய இயக்கம் இடது சாரிகள். ஆனால் அவர்கள் ஆள் காட்டி கொடுப்பதில் போட்டி போட்டு தமிழர்கள் கொன்றார்கள். இப்பொழுது சொல்லுங்கள் கொள்கைகோமான்கள் லட்சணங்கள் எப்படிபட்டதென்று. 


ஜூன் 07, 2011

உருளும் உலகமும் ஈழமும்!

கடந்த சில நாட்களாக அதிக கவனத்தை ஈர்த்தும், கவனிக்கப்படாமலும் சில நிகழ்வுகள் சர்வதேசத்தில் அரங்கேறியது. ஐ. நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில்(European United Left/Nordic Green Left) ஈழத்தமிழர்களின் மாநாடும் தமிழ்நாட்டிலிருந்து ம.தி.மு.க. செயலர் வைகோ அவர்களின் பங்கேற்பும், நேட்டோ விமானப்படையின் விமானக்குண்டு வீச்சில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட பன்னிரண்டு குழந்தைகள், போர்க்குற்றம் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ரட்கோ மிளடிக் போஸ்னியாவில் கைது என்று பட்டியல் நீளும். உருளும் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதை ஈழத்தோடு பொருத்திப்பார்ப்பது எனக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. 

எண்ணெய் வள நாடுகளான மேற்கு ஆசிய நாடுகள், வட ஆபிரிக்க நாடுகளில் மக்கள் எழுச்சி, ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது என்கிற போதெல்லாம் அது குறித்து ஐ. நா. பொதுச்சபையில் மட்டுமல்ல, பாதுகாப்புச் சபையில் முக்கியமாக விவாதிக்கப்படும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது என்றாலும் அது மனிதத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்றே அழைக்கப்படும். ஆனால், மனித உரிமைகள் சபையில் கூட அது பற்றி விவாதிக்க மறுக்கப்படும். இதற்கான மூல காரணங்களாக வன்னி இறுதிப் போரின் முடிவுகள் பற்றிய இலங்கை அரசின் பொய்களுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா முண்டு கொடுப்பதும், மற்றும் வியட்னாம், வடகொரியா, கியூபா, வெனிசுலா போன்ற சர்வதேசியம் பேசி சுதேசியத்தை, தங்கள் பிராந்திய நலன்களை மட்டும் கடைப்பிடிக்கும், வளர்க்கும்  நாடுகளின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடுகளுமே. அடுத்து, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றந்த்தின் ஈழத்தமிழர்களின் கூட்டத்தில் எங்கள் "சுய நிர்ணய உரிமை", தனி நாடே ஆயினும், மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படைகளின் குண்டுவீச்சில் பன்னிரண்டு குழந்தைகளின் உயிர் மாய்க்கப்பட்டதற்கு உலகம் அதிர்ச்சியை மட்டும் காட்டிவிட்டு வழக்கம்போல் அடங்கிப்போயிற்று.

சர்வதேசத்தின் எல்லா நிகழ்வுகளையும் இங்கே விவரிக்க முடியாவிட்டாலும் போஸ்னியாவை சேர்ந்த ராட்கோ மிளடிக் கைது கொஞ்சம் ஈழத்தோடு போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று பொருந்திப்போகவே செய்கிறது. யூகோசிலாவியா என்கிற நாட்டிலிருந்து 1991 இல் குரோசியா, ஸ்லோவேனியா என்கிற நாடுகள் தனியாய் பிரிந்து சுதந்திரப்பிடகடனம் செய்துகொண்டன. விளைவு வழக்கம்போல் ராணுவ படையெடுப்பு, குண்டுத்தாக்குதல்கள் இந்த இரண்டு நாடுகளின் மீதும் யுகோஸ்லாவியாவின் செர்பியப் படைகளால் ஏவி விடப்பட்டன. 

குரோசியா, ஸ்லோவேனியாவைத் தொடர்ந்து 1992 இல் Bosnia-Herzegovina அல்லது பொதுவாக போஸ்னியா என்றழைக்கப்படும் நாடும் சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டது. பல்லின நாடான (முஸ்லிம்கள், செர்பியர்கள், கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள்) Bosnia-Herzegovina வின் இந்த சுதந்திரப் பிரகடனம் போஸ்னியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தால் நிராகரிக்கப்பட்டது. நிராகரித்ததோடு நில்லாமல் செர்பியர்கள் Srpska என்கிற நாட்டையும் உருவாக்கி கொண்டார்கள். Slobodan Milosevic தலைமையிலான இந்த நாட்டுக்கு சேர்பியப் படைகளின் ஆதரவும் சேர செர்பிய பிராந்தியத்தை தக்கவைத்துக்கொள்ள போஸ்னியாவை நோக்கி படையெடுத்து இனவழிப்பை செய்து முடித்தார்கள்.

1992-1996 ஆண்டுகளுக்கிடையில் போஸ்னியாவின் தலைநகரான சரஜீவோ மீது செர்பியர்களால் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. விளைவு உயிர்ச்சேதம், காயங்களோடு மக்கள். 1993 இல் போஸ்னியாவின் வட-கிழக்கு பகுதியிலுள்ள Srebrenica ஐ. நாவின் பாதுகாப்பு பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் 1995 இல் சேர்பியப் படைகள் ராட்கோ மிலாடிக் தலைமையில் Srebrenica விற்குள் நுழைந்து பத்தாயிரக் கணக்கானோரை இடம்பெயர வைத்ததுடன் ஏழாயிரம் போஸ்னிய முஸ்லிம் ஆண்களை படுகொலை செய்தனர். அது சர்வதேசத்தால் இனப்படுகொலை என்றே அழைக்கப்படுகிறது. அதற்கு தலைமை தாங்கியவர் ராணுவத்தளபதியான ராட்கோ மிலாடிக். 

மொத்தத்தில் Sarajevo-சரஜீவோ, Srebrenica-சிரிப்றேனிகா ஆகிய இரண்டு படுகொலைகளிலும் ராணுவத்தலைமை தாங்கியவர் ராட்கோ மிலாடிக். இப்போ, தெற்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விருப்பம் தெரிவித்த நாள் முதல் அவர்களிடம் முன் நிபந்தனையாக வைக்கப்பட்டதில் ஒன்று இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்ட ராட்கோ மிலாடிக் கைது செய்யப்பட்டு போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது. 

வடக்கு ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஐரோப்பிய ஒன்றியம் என்கிற ஜோதியில் ஐக்கியமாக மற்றைய ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் வைப்பதும், அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்புங்கள். வேலைவாய்ப்பை உருவாக்குங்கள் என்று கட்டளைகள் வைப்பதும் தொடர்ந்து இழுபறியாகவே நடந்துவருகிறது.

இதை தவிர கடந்த மே மாதம் அதிகம் உலகின் கவனத்தை பெறாத ஆனால், முக்கியமான ஓர் நிகழ்வு FAIR-Fairness and Accuracy in Reporting, the media watch group in New York, தனது 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. அதில் அமெரிக்காவின் மாற்றுக்கருத்தாளர் என்று சர்வதேசத்தால் அறியப்பட்ட நோம் சாம்ஸ்கி உரையாற்றியிருந்தார். சொம்ஸ்கி உரையாற்றினால் வேறென்ன, அமெரிக்க ஜனநாயகத்தை அதன் ஊடக விழுமியங்களை, தார்ப்பரியங்களை விமர்சிக்காமல் இருப்பாரா!! தாரளாமாய் வேண்டுமென்கிற அளவுக்கு விமர்சித்தார்.

அமெரிக்காவின் அரபுநாடுகள் மீதான ஜனநாயகப்பார்வையை அங்குள்ள எண்ணெய் வளங்களோடு தொடர்பு படுத்தி பேசியிருந்தார். வழமையாக, நோம் சொம்ஸ்கி முன்வைக்கும் குற்றச்சாட்டு வியட்னாம் போரிலிருந்து அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் படையெடுப்பு வரை அமெரிக்க ஊடகங்கள் Pentagon சொல்வதையே செய்தியாக செய்தியாக பிரசுரித்து வருகின்றன என்பது தான். 

இதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு விவரண, விளக்க மாநாட்டில் கலந்துகொண்ட US Defence attache' Lt.Col. Lawrence Smith இன் கூற்றுக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துகளே அன்றி அது அமெரிக்க நாட்டின் கொள்கைகள் பற்றிய பிரதிபலிப்பு அல்ல என்று அவசர, அவசரமாய் அமெரிக்கா அறிக்கை விட்டது. இவர் அப்படி என்னதான் பேசினார் என்று நானும் தேடிப்பார்த்தேன் காணக்கிடைக்கவில்லை. கிடைத்தால் இணைப்பு கொடுங்கள். ஆனால், Francis Boyle தமிழ் நெட்டில் இப்படி சொல்கிறார், 

"....In this case, he could have been acting pursuant to Instructions by the Pentagon and not by the State Department, ....."

அத்தோடு, இவர் அமெரிக்காவின் சார்பாக அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இலங்கையில் இருக்கும் ஓர் அமெரிக்க அதிகாரியின் சராசரி கடமைகளில் ஒன்று தான் அந்த மாநாட்டில் இவர் கலந்து கொண்டது என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள் போலும். ஆனால், இலங்கை அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்கிற பட்டியலில் அமெரிக்காவையும் சேர்த்திருந்தது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதில் கலந்து கொள்ள வேண்டாமென கோரிக்கை வைத்ததும் அமெரிக்கா தாங்கள் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்ததும் உண்டு. 

மறுபடியும் சொம்ஸ்கியிடம் வருவோம். FAIR மாநாட்டில் அவர் பேசியதை இந்த இணைப்பில் காணலாம். இருந்தாலும், சுருக்கமாக அவர் பேசியதன் சில கருத்துகள் என் புரிதலில்...

பொதுவாக அமெரிக்க ஊடகங்கள் மத்திய கிழக்கில் வாழும் மக்களின் கருத்துகளை பிரதிபலித்து எழுதாமல் அமெரிக்க நலன் சார்ந்தே செய்திகள் தயாரிக்கிறார்கள். பெரும்பாலான மக்களின் கருத்து ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால் அது பிராந்திய நலன் சார்பில் அதிக பாதுகாப்பை கொடுக்கும். அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிக்கு துணை போய் மக்களை அவர்கள் மூலம் அடக்கி வைத்து, முடியாத கட்டத்தில் அந்த சர்வாதிகாரியை தூக்கி எறிந்துவிட்டு அதே போல வேறோர் பெயரில் இன்னோர் சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தும். அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் அரபு நாடுகளில் அதிகாரபூர்வமான, நம்பத்தகுந்த ஜனநாயக ஆட்சியை மலர அனுமதிக்கப் போவதில்லை. இதற்கு அவர் எடுத்துக்காட்டும் மிக சிறந்த உதாரணம் சிறுபான்மையான Shiites (தமிழ்ப்படுத்த தெரியவில்லை)  முஸ்லிகள் வாழும் நாடான பாஹ்ரைன் நாட்டில் மக்கள் எழுச்சி நடந்த போது சவூதி அரேபியாவின் படைகள் அங்கு நுழைந்து தாக்குதல் நடத்தியதை குறிப்பிடுகிறார். காரணம், சவூதி அரேபியா அமெரிக்க சார்பு நாடு. 

Shiites முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிழக்கு சவூதி அரேபியா, தெற்கு ஈராக், தென்-மேற்கு ஈரான் ஆகிய பகுதிகளிலேயே எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதால் அவர்கள் சுதந்திரம் நோக்கி நகர்வதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிறார் சாம்ஸ்கி. 

மிகுதியை இணைப்பிலுள்ள கானொளியில் கேட்கலாம். 

இறுதியாக, இதெல்லாம் ஏதோவொரு வகையில் ஈழத்தோடு சர்வதேசம் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை, அதன் தாக்கத்தை இன்னோர் கோணத்தில் பார்க்க உதவுகிறது. 

போஸ்னியாவின் ஏழாயிரம் பேர் கொள்ளப்பட்டது இனப்படுகொலை. அதற்கு ராட்கோ மிலாடிக் கைது செய்ப்பட்டு நீதி விசாரணைக்கு உடப்படுத்தப்படுகிறார். அதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க. வன்னியில் இறுதிப்போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் அடிப்படைக்காரணம் இனவழிப்பு. அந்த நோக்கம் அங்கே தெளிவாக எல்லோருக்கும் புரியும், தெரியும். எங்கள் இழப்பின் எண்ணிக்கையும் எழாயிரத்தின் ஆறு அல்லது ஏழு மடங்கு அதிகம். ஆனால், தமிழர்களுக்கு மட்டும் நீதி கிடைக்காது. ராஜபக்ஷேக்களும், உயர் ராணுவ அதிகாரிகளும் Diplomatic Immunity என்கிற கவசத்தின் கீழே தங்களை பாதுகாத்து, தங்கள் ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்வர். 

நோம் சாம்ஸ்கியும் மத்திய கிழக்கைப் பற்றி பேசி, ஈழத்தில் இனப்படுகொலையின் அமெரிக்காவின் பங்கு குறித்து பேச மறந்தது ஏனோ தெரியவில்லை. ஈழத்தமிழர்கள் விடயத்தில் அமெரிக்க அரசின் கொள்கைகள் ஒன்றாகவும், பெண்டகானின் கொள்கைகள் வேறாகவும் இரட்டை நிலை என்பது சாம்ஸ்கி போன்றோரால் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இந்த சர்வதேச நிகழ்வுகளை எடுத்துக்காட்டி ஈழத்தமிழர்களுக்கான நியாயங்களை சர்வதேசத்திடம் கொண்டுசெல்லும் கடமையும் புலம் பெயர் தமிழர்களிடமும், அவர்களின் ஒற்றுமையிலுமே தங்கி இருக்கிறது என்பது எனது கருத்து.


ஜூன் 03, 2011

இலங்கை முஸ்லிம்கள் -Dr. Imtiyaz, கனேடிய ஊடகப்பார்வை

இலங்கையின் சிறுபான்மை இனங்கள் என்று குறிப்பிடப்படுபவைகளில் தமிழர்களுக்கு அடுத்தது முஸ்லிம்கள் தான். அங்கு வாழும் முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தமிழ் மொழியையே தாய்மொழியாக கொண்டதால் அவர்களும் தமிழ் முஸ்லிம்கள் என்றே கருதவும், அழைக்கவும் படுகிறார்கள். இலங்கையின் சனத்தொகையில் கிட்டத்தட்ட எட்டு வீதமானோர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இலங்கை முழுவதும் அவர்கள் பரவி வாழ்ந்தாலும் பெரும்பான்மையினர் கிழக்கு மாகாணங்களிலேயே வாழ்கின்றனர்.

இலங்கையின் இனப்பிரச்சனை என்கிறபோதெல்லாம் பெரும்பாலும் தமிழர்கள், சிங்களர்களே குறிப்பிடப்படுகிறார்கள். இலங்கை தமிழ் முஸ்லிம்களும் காட்சியில் உண்டு என்றாலும் அவர்கள் குறித்த கருத்துகளோ அல்லது விமர்சனங்களோ அதிகம் எழுப்பப்படுவதில்லை. ஆனாலும், இலங்கை இனப்பிரச்சனையில் அவர்கள் பங்கெடுத்ததொடு பாதிக்கப்படவும் செய்தார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. இதில் எந்த நிகழ்வு முதல் நடந்தது என்கிற ஆய்வுக்கு கட்டுரையின் முடிவிலுள்ள கனேடிய ஊடகத்தில் வெளியான Dr.Imtiyaz அவர்களின் கேள்வி பதில் இணைப்பிற்கு செல்லவேண்டும். அதற்கு முன் சில விடயங்களை பார்க்கலாம்.

Dr.Imtiyaz தன் கட்டுரைகளில் பல சமயங்களில் வலியுறுத்துவது இலங்கை முஸ்லிம்கள் ஈழத்தமிழர்களின் தனித்தேசிய கோட்பாட்டை ஆதரிக்கப்போவதில்லை என்றுதான். ஈழத்தமிழர்களின் உரிமைப்பிரச்சனைகளை புரிந்துகொண்டு ஒரே இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை என்பதை வலியுறுத்துகிறார். இருந்தாலும் இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடும் ஈழத்தமிழர்களின் தமிழ்தேசிய உரிமைப்போராட்டம் பற்றியும் இங்கே என் பார்வைகளை கொஞ்சம் பகிர்ந்துகொள்கிறேன்.

இலங்கையில் தமிழர்களின் மொழி, அரசியல், பொருளாதார, கல்வி உரிமைகள் அரசியல் யாப்பின் மூலமும் அரசின் கொள்கைகள் மூலமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பறிக்கப்பட்டே வருவதால் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை, தனி தமிழீழம், வலியுறுத்தியே போராடி வருகிறார்கள். இதில் பொதுவாக முஸ்லிம்களின் நிலைப்பாடு  இன்றுவரை தெளிவில்லாமலே தொடர்கிறது. தமிழ்த்தேசியத்தை முஸ்லிம் சமூகம் ஆதரிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தங்கள் உரிமைகள் அதிகம் பாதுகாக்கப்படும் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருக்கலாம். இலங்கையில் சிங்கள சமூகத்தை தவிர வேறு யாருக்காவது சமவுரிமை இருக்கிறதா அல்லது அது இனியும் கிடைக்குமா என்கிற யதார்த்தபூர்வமான கேள்விகளை தவிர்த்துவிட்டுப் பார்ப்போம்.

பிறிதோர் கட்டுரையில் Dr. Imtiyaz கூற்றுப்படி இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கென்று தாங்கள் தமிழர்கள் அல்லாத ஓர் அடையாளத்தை இஸ்லாம் என்கிற மதத்தின் அடிப்படையிலான ஓர் அடையாளத்தையும், பாதுகாப்பையுமே விரும்புகிறார்கள் என்பதுதான். 

முஸ்லிம் சமூகம் இஸ்லாம் அடிப்படையிலான ஓர் அடையாளத்தை தேடுவது தமிழர்களிடத்தில் கோபத்தை உண்டாக்கியுள்ளது என்று தமிழர்கள் மீது பழிபோட்டு Dr. Imtiyaz தமிழர்கள், முஸ்லிம்கள் இடையேயான முரண்பாடுகளை உண்டாக்க முயற்சிக்கிறாரா என்கிற கோணத்திலும் சிந்திக்க தோன்றுகிறது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நிலைப்பாடு என்று பார்த்தாலும், இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுதியாக இருந்தாலும் அது அவர்களின் சமூகத்திற்கு அதிக நன்மைகள் எதையும் கொண்டுவரவில்லை என்பதே பல முஸ்லிம்களால் முன்மொழியப்படும் ஓர் பொதுவான கருத்து. அரசியல் கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சிங்கள பெளத்த அரசுடன் கொண்டுள்ள உறவும், அவர்களின் கொள்கைகளுக்கு துணைபோகும் தன்மைகளும் யாரும் அறியாத ரகசியம் அல்ல.

இடதுசாரிகள் உட்பட மற்றைய சில கட்சிகளோடு இலங்கை முஸ்லிம்களை பிரதிநித்திதுவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் 2010 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 18 வது திருத்தச் சட்டத்திற்கு தன் அமோக ஆதரவை வழங்கி இலங்கை சிங்கள பெளத்த ஜனாதிபதியை சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட, இரண்டு தடவைகளுக்கு மேல் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதியாய் இருக்க போட்டியிடலாம் என்கிற ஒற்றையாட்சி முறைக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது.

இருப்பினும் வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கூட்டத்தின் போது, பின்னாளில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரான M.H.M. அஷ்ரப் அன்று சொன்னதாக சில முஸ்லிம்கள் சுட்டிக்காட்டுவது மூத்த சகோதரர் அமிர்தலிங்கம் தமிழர்களுக்கு தமிழீழம் பெற்றுத்தர தவறினால் இந்த இளைய சகோதரன் அஷ்ரப் பெற்றுக்கொடுப்பன் என்கிற கூற்றைத்தான், (Tamil Guardian, "Factual distortions can destroy the fundamentals of a community). இன்று, முஸ்லிம் காங்கிரஸ் அரசியற் போக்கிற்கும் , அன்று மதிப்பிற்குரிய அஷ்ரப் அவர்கள் சொன்னதிற்கும் இடையேயுள்ள இடைவெளி நிறையவே வியக்கவைக்கிறது.

என்னைப் பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் மேற்சொன்ன மதிப்பிற்குரிய அஷ்ரப் அவர்களின் இந்தக்கூற்று Dr. Imtiyaz அவர்களின் கூற்றுக்கு மாற்றுக்கருத்தாக எடுத்தாளப்படுகிறது என்பதைத் தவிர வேறு கண்ணோட்டத்தில் பார்க்கமுடியவில்லை. யதார்த்தம் இன்று வேறுவிதமாய் இருக்கிறது. எங்களுக்காக தமிழ்தேசியத்தைப் பெற்றுத்தாருங்கள் என்பதல்ல தமிழர்களாகிய எங்கள் கோரிக்கை. எங்கள் மறுக்கப்பட்ட உரிமைககளுக்கான நியாயமான அரியல் அபிலாஷைக்கு ஆதரவு கொடுங்கள் என்பதே! எங்களுக்கு மறுக்கப்படும் அதே அடிப்படை உரிமைகள் தானே முஸ்லிம் சமூகத்திற்கும் இலங்கையில் மறுக்கப்படுகிறது. பிறகு எங்கே முரண்படுகிறோம்!

இலங்கை - இந்திய ஒப்பந்தப்படி 1987 இல் தமிழர்களின் தாயக பூமி என்று ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை இலங்கை உச்சநீதிமன்றம் 2006 இல் ரத்துச் செய்ததை முஸ்லிம் சமூகம் மிகவும் சந்தோசமாக வரவேற்கிறது. கிழக்கில் முஸ்லிம் சமூகத்தினர் அதிகம் வாழ்கிறார்கள். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் தங்கள் சமூகம் சிறுபான்மை ஆகிவிடும் என்பது அவர்கள் வருத்தமும் வாதமும். இலங்கை முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்பவில்லை என்பதை Minority Rights Group International - No war, No peace: the denial of minority rights and justice in Sri Lanka என்கிற அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது. 

இது ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைபிரச்சனையின் இன்னோர் பரிமாணம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் வெற்றிபெறாமல் போனபோது நான் சந்தோசப்பட்டது உண்டு. அதுக்கு முக்கிய காரணம் ஒருவேளை அதில் குறிப்பிட்டது போன்று பின்னர் ஓர் வாக்கெடுப்பு நடத்தி வடக்கையும் கிழக்கையும் இணைப்பதா என்றால் முஸ்லிம் சமூகத்தின் பதில் என்னவாய் இருந்திருக்கும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. அன்று வாக்கெடுப்பு நிகழ்ந்திருந்தால் நிச்சயம் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய பூமியான கிழக்கை இலங்கை அரசிடம் அன்றே இழந்தவர்கள் ஆகியிருப்போம்.

ஆனால், இன்றுவரை அரசியல் யாப்பில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் மூலம் தமிழர்களின் உரிமைகள் ஓரளவுக்கு கிடைக்கும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுவதால் தங்களுக்கு பாதகமான விளைவுகளே உருவாகும் என்பதுதான். தவிர தொகுதிமுறை பிரதிநித்துவம் கைவிடப்பட்டு விகிதாசாரா பிரதிநிதித்துவ முறைமூலம் பாராளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவம் குறைந்திருக்கிறது என்றும் ஏற்கனவே கவலைப்படுகிறது முஸ்லிம் சமூகம். போர் முடிவுக்கு வந்தபின், அரசியல், பொருளாதாரம், கல்வி, மீள்குடியேற்றம், மக்கள் தொகை கட்டமைப்பு (Demographic Pattern) என்பவற்றின் மூலம் தங்களை கட்டியெழுப்ப உண்டான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்றும் அவாவோடு செயற்படுகிறார்கள்.

வடக்கு, கிழக்கில் முஸ்லிம் சமூகத்திற்கு வியாபாரம், விவசாயம், மீன்பிடித்தொழில், தங்கள் மீள்குடியேற்றம் சம்பந்தமான உத்தரவாதம், செயற்திட்டம் என்பன இலங்கை அரசால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது. ஆனால், முஸ்லிம்களின் நிலங்களில் சிங்கள குடியேற்றங்கள் நிகழ்வதாகவும் அதை அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை என்பதே அரசியல்வாதிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. 

கூடவே, ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசு தான் முடிவெடுக்கவேண்டும், சர்வதேசம் விலகியே இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். சர்வதேச சூழ்ச்சியில் தங்கள் உரிமைகள் மறுக்கப்படும் என்பது அவர்களது வாதம். ஆனால், இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதில் முஸ்லிம் சமூகத்திற்கே குழப்பம்!!

முஸ்லிம் சமூகத்தால் அடிக்கடி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தங்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, தமிழீழ விடுதலிப் புலிகள் தங்களை யாழ்ப்பாணம், வடக்கில் இருந்து வெளியேற்றினார்கள் என்பதே. வடக்கிலிருந்து புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றினார்கள் என்கிற குற்றச்சாட்டு மட்டுமே வைக்கப்படுகிறதே ஒழிய அதன் பின்னணி காரணங்கள் ஒரு போதும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளப்படுவதில்லை. புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தினரை வெளியேறச் சொன்னது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை யாழ்ப்பணத்தில் முஸ்லிம் சமூகத்திலிருந்து இலங்கை அரசுக்கு ராணுவ நடவடிக்கைகளுக்கு துணைபோனார்கள் என்பதும். புலிகள் அன்று முஸ்லிம்களை விரட்டியது தவறென்றால் அவர்களுக்கு இதைவிட (May 2009 வன்னி-முள்ளிவாய்க்கால்) அதிகமான உட்சபட்ச தண்டனையை இனி வழங்கமுடியாது. 

சமீபத்தில் காலச்சுவடு தளத்தில் படித்த கருணா பற்றியதும் அவர் எப்படி, யாரால் புலிகளுக்கு எதிராக மாற்றப்பட்டார் என்கிற இந்தக்கட்டுரை கூட இங்கு பொருந்திவருமோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

இப்போது தற்காலத்திற்கு வருவோம். அண்மையில் ஓர் கனேடிய ஆங்கில காட்சி ஊடகம் (tvo) ஒன்றின் இணையத்தளத்தில் இலங்கை முஸ்லிம்கள் பற்றி ஓர் கேள்விபதில் முறையிலான ஓர் கட்டுரை படிக்க நேர்ந்தது. அதில் குறிப்பிடப்பட்ட சில மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாத உண்மைகள் என்னை உண்மையிலேயே ஆச்சர்யப்படுத்தின. அதன் இணைப்பு இது.

அதில் குறிப்பிடப்பட்ட ஓர் உண்மை, முஸ்லிம் அறிவுஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் புலிகள் மீதே சுமத்தி, இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் தாங்கள் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களுடன் உடனுழைத்ததையும், அவர்களுக்கு தங்கள் இணக்கத்தை வழங்கியதையும் வசதியாக மறந்து போகிறார்கள் என்பது தான். என்னுடைய ஆங்கில மொழி பெயர்ப்பில் ஏதாவது குறை இருந்தாலும் என்பதால் அதன் ஆங்கில வடிவம் கீழே.

"Many Muslim scholars and activists simply put all the blame on the Tamil Tigers while conveniently forget their collaborations and cooperation with the Sinhala political elites since independence".

அதில் மேலும் சொல்லப்பட்ட விடயங்களில் ஒன்று இலங்கையில் போருக்கும் தங்கள் ஆதரவை வழங்கி, புலிகள் அழிக்கப்பட்டதை, அதன் வெற்றியையும் அவர்கள் கொண்டாடினாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் சிங்கள ஆட்சியாளர்களின் போருக்கு முஸ்லிம்கள் துணை போனதை எதிர்த்தார்கள் என்பதே.

போர்க்காலங்களிலும், அதன் பின்பும் முஸ்லிம் அடிப்படைவாதம் வளர்ந்த தன்மையை காணமுடிந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது. 

எது எப்படி என்றாலும், இலங்கை வாழ் முஸ்லிம்கள் தாங்கள் தங்களுடைய மத, கலாச்சார அடையாளங்கள் மூலம் தங்கள் தனித்தன்மையைப் பேணவே விரும்புகிறார்கள். தங்களுக்கு அமைதியும், நீதியும் கிடைக்கவேண்டும் என்று விரும்பும் அதேநேரம் தங்கள் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு குறித்தும் கவலை கொள்கிறார்கள் என்பதே அதன் சாரம்.

இலங்கை முஸ்லிம்கள் தங்கள் மத அடிப்படையிலான கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணுவதோடு தங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அது அடிப்படை மனித உரிமைகள் சம்பந்தப்பட்டதும் கூட. ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கூறுகள் மேலோங்கி அது பாதகமான விளைவுகளை கொண்டுவருமோ என்றும் அறிவுஜீவிகளால் விசனம் வெளியிடப்படுகிறது.

கூடவே, முஸ்லிம் சமூகம் பேண விரும்பும் மத, கலாச்சார, அரசியல், பொருளாதார உரிமைகள் மூலம் ஈழத்தமிழர்கள் விரும்பும் எங்களின் உரிமைசார் தமிழ்தேசியம் சிக்கிக்கொண்டுள்ளது! அதையும் மறுக்கமுடியாது. அது ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதஉரிமைகள் சார்ந்தது.

மொத்தத்தில் இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாம் அடிப்படையிலான ஓர் அடையாளம், பாதுகாப்பு இரண்டையும் விரும்புவதோடு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பூமியை எந்த தீர்வின் மூலமும் இணைக்கப்படுவதையும் விரும்பவில்லை என்பதே என் புரிதல். 

யார் வேண்டுமானாலும் எந்த அடிப்படையிலும் அவர்களுக்குரிய அடையாளத்தை, உரிமைகளை தக்கவைத்துக்கொள்ளலாம். அது ஒருவர் உரிமை, மற்றவரின் உரிமையை பாதிக்காதவரை தான் சாத்தியம். முரண்பாடுகள், பிணக்குகள் வரும்போது ஓர் பொது தளத்தை அடைய வேண்டியது என்பதும் தவிர்க்க முடியாததாகிறது. 

இலங்கை முஸ்லிம்கள் பற்றிய Dr. Imtiyaz இன் கருத்துக்களை ஆர்வம் உள்ளவர்கள் மேற்சொன்ன அந்த இணைப்பில் படித்து தெரிந்துகொள்ளலாம். இவரின் முஸ்லிம் சமூகம் பற்றிய கருத்துகளுக்கு வழக்கமாக கூறப்படும் எதிர்க்கருத்தும் மேலே சொன்ன 'Tamil Guardian' (2008) தளத்தில் காணக்கிடைக்கும்.