மே 15, 2011

இலங்கையின் இனப்பாகுபாடு, இனவழிப்பு மாதிரி - Model!


இனம் என்கிற சொல் எப்படி வரையறுக்கப்படுகிறது என்று தேடியபோது தோன்றியது தான் இந்தப் பதிவு. ஆங்கிலத்தில் Race, Ethnicity என்கிற சொற்கள் தமிழில் இனம் என்றே கொள்ளப்படுகிறது. Race என்பது உடற்கூற்றின் வெளித் தோற்றங்களிலுள்ள ஒற்றுமைகளை வைத்தே வரையறுக்கப்படுகிறது. Ethnicity என்பது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களின் பிரத்தியேகமான அம்சங்களைக்கொண்டு வரையறுக்கப்படுகிறது. 

Tamil Diasporas Community Network For Tamils In  Ireland. அதனால் தான் தென் ஆபிரிக்காவில் இருப்பதை இனப்பாகுபாடு (Racism) என்றும்,  இலங்கையில் தமிழர்கள், சிங்களர்களுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளை Ethnic Conflict என்றும் அழைக்கிறார்கள்.  எப்படியாகினும்,  இலங்கையில் மதம், பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த முரண்பாடுகள் என்பதைவிடவும் அரசியல் உரிமைகள் சார்ந்தே இருக்கிறது. அதன் அடிப்படை ஆரம்பம் இலங்கையின் அரசியல் யாப்பு. சிங்கள பெளத்த உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழர்களின் மொழி, நிலம், பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம், மத அடையாளங்கள் என்பவற்றுக்குரிய அங்கீகாரம் அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப் படவில்லை. மாறாக இனச்சுத்திகரிப்பு மூலம் தமிழர்களின் உயிர் முதற்கொண்டு எங்களின் அத்தனை பாரம்பரிய அடையாளங்களும் பறிக்கப்படுகிறது, அழிக்கப்படுகிறது 

எந்தவகையில் பார்த்தாலும் இன்று ஈழத்தமிழர்களின் இனவழிப்பு என்பது ருவாண்டா, போஸ்னியா போன்ற நாடுகளின் பிரச்சனைகளோடு மேற்சொன்ன விதங்களில் ஒப்பிட்டுப்பார்க்கப்படுகிறது. ஆனால், தீர்வு மட்டும் எட்டாமல் தூரமாய் விலகிப் போய்க்கொண்டிருக்கிறது. உலகில் தோற்றத்தில், பண்பாடு, கலாச்சாரத்தில் வெவ்வேறு பழக்க, வழக்க, அனுஸ்டானங்களை கொண்ட மக்கள் ஒரே நாட்டில் ஒன்றாய் வாழ்வதில்லையா என்றும் யோசிக்கலாம்.

அப்படி, வாழ்வதும், முரண்பாடுகளில் முட்டிமோதிக்கொள்வதும் ஒவ்வொரு அரசின் கொள்கைகளிலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது. தங்கள் தனித்தன்மைகளை பேணமுடியாமல், பொருளாதார மேம்பாடுகள், கல்வி போன்ற வாழ்வாதார நியமங்கள் கூட அரசியல், பொருளாதார கொள்கைகள் வடிவில் ஓர் மக்கள் குழுமத்தை பாதிக்குமானால் ஈற்றில் பிரச்சனைகள் பூதாகரமாய் எழவே செய்யும். அதன் யதார்த்த வடிவம் தான் இலங்கையும், பிரிந்துபோகத் துடிக்கும் ஈழமும். ராணுவ அடக்குமுறையினாலும் இனப்பாகுபாட்டு கொள்கைகளினாலும் அதன் ஆழமும் பிளவும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

ஓர் அரசின், இனக் குழுக்களுக்கிடையேயான உறவுகளை சிதைக்கும் அல்லது பேணும் கொள்கைகள் இரு துருவங்களை கொண்டது. ஒரு துருவம் 'இனப்படுகொலை என்றால் மறுதுருவம் 'பல்கலாச்சாரம்' பேணுதல் என்பதாகும். அதாவது ஓர் மக்கள் குழு இன்னோர் குழுவை ஏற்க மறுப்பதற்கும் அவரவர் தனித்தன்மைகளோடு ஏற்றுக்கொள்வதற்கும் இடையேயான இடைவெளி. 

இந்த இரண்டுக்குமிடையேயான இடைவெளியில் வருபவை இடப்பெயர்வு (Population Transfer), திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் (Internal Colonialism), தமிழர்களை பிரித்து தனிமைப்படுத்தல் (Segregation), கட்டாய ஒருமைப்படுத்தல் (Forced Assimilation) என்பவை என சமூக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சுதந்திரம் பெற்ற நாள் முதல் இலங்கையின் ஆட்சியாளர்கள் இதே வழிமுறைகளைத் தான் தமிழர்கள் விடயத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் உலகிற்கு. தமிழர்களை ஒடுக்க, ஒழிக்க இந்த மாதிரியைத் தான் சிங்கள ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் உலகமும் வேடிக்கை பார்க்கிறது.

இடப்பெயர்வு: 

இடப்பெயர்வு (Population Transfer) எனப்படும் தமிழர்களை அவர்களின் வரலாற்று மற்றும் பாரம்பரிய இடங்களில் இருந்து வெளியேற்றும் திட்டங்கள். தமிழர்களின் இடப்பெயர்வை தூண்டும், நேரடியாக அவர்களை வெளியேற்றம் செய்யும் கைங்கரியம் இலங்கைக்கு புதிதல்ல. கசப்பான வாழ்க்கைச் சூழலை உருவாக்கி அதன் மூலம் தமிழர்கள் அவர்கள் பூர்வீக இடங்களில் இருந்து அவர்களாகவே வெளியேறச் செய்வது. எங்கேயும், எப்போதும் பிரசன்னமாயிருக்கும் ராணுவம், ராணுவ சோதனை சாவடிகள், தேடுதல் வேட்டைகள் (யாரை தேடுகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்), சட்டத்திற்குப் புறம்பான கைதுகள், தடுத்துவைத்தல், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரம் என மலிந்து கிடக்கும் அபாயங்கள். சிங்கள ராணுவமும், ராணுவத் துணைக்குழுக்களும் சிறுமிகளை கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் கொடுமைகள் இந்த நிமிடம் வரை தொடர்கிறது. 

இதனாலேயே இன்றுவரை பத்து லட்சம் பேருக்கு மேல் இலங்கையை விட்டு வெளியேயும், பல லட்சம் பேர் இலங்கைக்குள்ளேயும் (IDP-Internally Displaced People) இடம்பெயர்ந்திருக்கிறார்கள். வரலாற்றின் ஆரம்பத்தில் D.S. சேனாநாயக்க என்கிற சிங்கள பேரினவாதியால் தமிழகத்திலிருந்து வந்து தங்களை உரமாக்கி மலையகத் தேயிலை தோட்டத்தை உருவாக்கியவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது தான் ஆரம்பம். அது கொஞ்சம், கொஞ்சமாய் பூர்வீக குடிகளான தமிழர் பாரம்பரிய பூமியிலும் ராணுவ அட்டூழியங்களால் அமுல்படுத்தப்பட்டது. 

இன்றைய காலகட்டத்தில் இனப்படுகொலை, கட்டாய இடப்பெயர்வு இரண்டுமே மிக திறமையாக திட்டமிடப்பட்டு இலங்கை அரசால் நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருக்கப்படுகிறது. உயர்பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய பூமி பறிக்கப்பட்டு, சிங்கள பெளத்த குடியேற்றங்கள், பெளத்த விகாரைகளை ஸ்தாபித்தல் என்பன நடந்தேறுகிறது. தமிழர்கள் ஒன்று புலம்பெயர வேண்டும் அல்லது இடம்பெயரவேண்டும் என்கிற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது இரண்டுமே சாத்தியமற்றுப் போனால் முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள்.தமிழர் பூமியில் சிங்கள குடியேற்றங்கள்:

தமிழர் தாயகத்தில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் (Internal Colonialism) மிக நீண்ட காலமாக சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிடப்பட்டே நிறைவேற்றப்படுகின்றன. என் அறிவுக்கு எட்டியவரை பிரித்தானியா இலங்கையை விட்டு வெளியேறிய காலத்திலிருந்தே பெரும்பாலும் கிழக்கில் தொடங்கியது இந்த தமிழர் பாரம்பரிய நிலப்பறிப்பு. கல் ஓயா, மதுர ஓயா என்கிற நதிதிட்டங்களில் மட்டக்களப்பு தமிழ் முஸ்லிம்களிடமிருந்து நிலப்பறிப்பும்; அல்லை, கந்தளாய், யான் ஓயா திட்டங்களில் திருகோணமலையிலும் தமிழர்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் ஈற்றில் நிறுவப்பட்டன. 

அந்த திட்டங்கள் கொஞ்சம், கொஞ்சமாய் வியாபித்து இன்று வடக்கில் 'உயர் பாதுகாப்பு வலயம்' என்கிற பெயரில் தமிழர் நிலங்கள் பறிக்கப்பட்டு அங்கே சிங்கள குடியேற்றங்கள் ராணுவ பாதுகாப்புடன் இடம்பெறுகின்றன. இந்த திட்டங்களின் அடிப்படை நோக்கம் தமிழர் பாரம்பரிய பூமியிலேயே அவர்களை எண்ணிக்கையில் சிறுபான்மையாக்குவது (Demographic Pattern Change). அதாவது, சிங்கள பெரும்பானமியின அரசியல் மேலாதிக்கத்திற்காய் மக்கள் தொகை கட்டமைப்பை மாற்றியமைப்பது. அதன் மூலம் தமிழர்களின் குரல்களை பாராளுமன்றம் வரை ஒடுக்குவது.

பிரித்து ஆளுதல்:

திட்டமிடப்பட்ட சிங்களகுடியேற்றங்கள், அதன் நீட்சியாய் தொடர்வது தமிழர்களை பிரித்து, தனிமைப்படுத்துவது (Segregation). ஆரம்பத்தில் மொழி, தரப்படுத்தல் என்பதன் மூலம் தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை பறித்தது சிங்கள பேரினவாதம். அங்கிருந்துதான் இனப்பிரச்சனை பூதாகரமானது. இன்றும் அதன் நீட்சியானது உள்ளூராட்சியில் கூட ராணுவ நிர்வாகம் தலையை நுழைக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. 

சிங்களர்களை தமிழர்பகுதிகளில் குடியேற்றி அதிகாரமிக்க பதவிகளில் அவர்களை அமரவைத்து, அதிகாரமற்ற பதவிகளில் தமிழர்களை அவர்களின் கீழே அடிமைகள் போல் வேலைக்கு அமர்த்துவது. இவற்றின் மூலம் சிங்கள குடியேற்றங்களில் உள்ளவர்களின் தேவைகள் முதன்மையாய் தீர்மானிக்கப்பட்டு, தமிழர்களின் அத்தியாவசிய தேவைகள் கூட புறக்கணிக்கப்படும். இதன் மூலம் தமிழர்கள் அவர்கள் சொந்த இடங்களிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கட்டாய ஒருமைப்படுத்தல்:

அடுத்து, ஒருமைப்படுத்தல் (Assimilation) என்பது இருவகைப்படும், விருப்பமுடன் ஒருமைப்படுவது, கட்டாய ஒருமைப்பாடு எனபனவாகும். என் அறிவுக்கு எட்டியவரையில் ஈழத்தில் ஒரு சிலர் தங்கள் சொந்த வாழ்வில் முன்னேற விரும்பியோ, விரும்பாமலோ இந்த படிமுறைக்குள் தங்களை திணித்துக் கொள்கிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகளைப் பொறுத்தவரை, சுவிட்சலாந்து, கனடா போன்ற நாடுகளில் பெரும்பாலும் இது விருப்பமுடைய ஒன்றாகவே நிறைவேறிப்போகிறது. காரணம், இங்கே பல்கலாச்சாரம் என்பது முறையே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.  

இதையே தான் கனடாவும் ஆரம்பத்தில் இலங்கைக்கு எடுத்துச் சொன்னது. இலங்கைக்கு தேவை பல் கலாச்சார பொருளாதார, அரசியல் கொள்கைகளே என்று. வழக்கம் போல் தமிழனுக்கு எதையும் கொடுப்பதில்லை என்கிற கொள்கையில் உறுதி பூண்டிருந்த சிங்கள ஆட்சியாளர்களின் காதுகளில் அது ஏறவேயில்லை. 

இப்போது ஈழத்தில் அரங்கேறிக்கொண்டிருப்பது கட்டாய ஒருமைப்படுத்தலே (Forced Assimilation). அதாவது தமிழர்கள் பலவந்தமாக சிங்கள மொழியை கற்கவும், சிங்களத்தில் தேசிய கீதம் பாடவும், மாவீரர் தினம் கொண்டாடவே கூடாது என்கிற வலுக்கட்டாய உரிமை பறிப்பும், தமிழர்களுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்புகள், ஐ. நா. போன்றவற்றின் முயற்சிகளுக்கு தமிழர்களின் விருப்பமின்றியே அவர்களை வலிந்து பங்கேற்க வைப்பது நடந்தேறுகிறது. 

சுருக்கமாய்ப் பார்த்தால், தமிழர்களின் உரிமை விடயத்தில் மனிதாபிமான வழியில் பல்கலாச்சார கொள்கைகளை உருவாக்க மறுத்து, மனிதாபிமானமற்ற இன அழிப்பு கொள்கைகளின் வழி இலங்கை பயணித்துக்கொண்டிருக்கிறது. உலகின் அத்தனை அடக்குறை, ஆதிக்கசக்திகளின் மாதிரிகளை தேர்ந்தெடுத்து அத்தனை வழியிலும் தமிழர்கள் அழித்தொழிக்கப்படுகிறார்கள். தமிழர் பூமியில் சிங்களகுடியேற்றங்கள், தமிழர்களை அவர்கள் வாழ்விடங்களிலேயே சிறுபான்மையினராக்கி, தமிழர் பூமியை ராணுவமயப்படுத்தல், அடக்குமறை மூலம் அடிபணிய வைத்து இணைப்பிரச்சனைக்கு தீர்வு சொல்ல நினைக்கிறது. 

இலங்கையில் 'இனச்சுத்திகரிப்பு' (Ethnic Cleansing) நடக்கிறது என்பது உலக வரலாற்றில்இருந்து சர்வதேசம் புரிந்துகொள்ளாமல் இல்லை. அகதிமுகாம்கள் என்கிற பெயரில் வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு Dachu - ஜெர்மனி, Auschwitz - தெற்கு போலந்து, Cambodia, Sabra & Shatilla - பாலஸ்தீனிய அகதிமுகாம்கள்- பெய்ரூட், லெபனான், Srebrenica, Rwanda, Kosovo..... Now Vanni என்று இனப்படுகொலைகள் தொடர்வதாக வரலாற்று மற்றும் அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இன  சுத்திகரிப்பு என்பது இனப்படுகொலை மட்டுமல்ல எமது வரலாற்று, பண்பாட்டு, கலாச்சார விழுமியங்களையும் சேர்த்தே அழிப்பதாகும். இருந்தும் இன்றுவரை இனங்களுக்கு இடையேயான 'மீள் இணக்கம்', 'நல்லிணக்கம்' என்று சொல்லிச்சொல்லியே இனச் சுத்திகரிப்பை மேலும் அனுமதித்துக்கொண்டு இருக்கிறது சர்வதேசம். இலங்கையை முற்றுமுழுதாக ஓர் பெளத்த, சிங்கள தேசமாக மாற்றும் சிங்கள பேரினவாதத்தின் முன் மாதிரி இனி வரும் காலங்களில் மற்ற நாடுகளுக்கு உதாரணமாய் அமையும் என்பது கண்கூடு, சர்வதேசம் அதை கண்டும்காணாது போகும்வரை.

நன்றி: முதல் படம் Google. 

18 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

வினோதமாக இருக்கிறது. இன்னும் தமிழ்மணத்தில் நட்சத்திர அறிமுக குறிப்புகள் கூட இடம் பெறவில்லையே? முதல் வாழ்த்துகளை எழுதி வைக்கின்றேன்.

சார்வாகன் சொன்னது…

//இலங்கையை முற்றுமுழுதாக ஓர் பெளத்த, சிங்கள தேசமாக மாற்றும் சிங்கள பேரினவாதத்தின் முன் மாதிரி இனி வரும் காலங்களில் மற்ற நாடுகளுக்கு உதாரணமாய் அமையும் என்பது கண்கூடு.//
உண்மைகளை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்.எதிரிக்ளும்,துரோகிகளும் செய்யும் பரப்புரையில் உண்மையை தமிழக தமிழர்களுக்கு கண்டறிவது மிக கடினமாக உள்ளது.இந்த போர்க் குற்ற ஐ.நா அறிக்கை என்பதும் தமிழர்களுக்கு ஏதாவது செய்யுமா என்றே சந்தேகத்தோடே பார்க்கிறோம்.
நன்றி

பெயரில்லா சொன்னது…

இலங்கையில் சிங்கள் அரசு தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோரை இல்லாமல் செய்ய நடத்திய நடவடிக்கைகள் எவ்வளவு கேவலானமை ஆகும். முதலில் அது ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை இல்லாமல் செய்தலே அவசியமானது. அது மட்டுமின்றி இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போலே அங்கேயும் மதங்கள் கடந்து 1948யின் மக்கள் தொகை அடிப்படையில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநிலத்தின் நிர்வாகத்தை மாநில மக்களிடம் கொடுக்கப்படல் வேண்டும். மத்திய அரசில் தமிழர் சிங்களவர் இணைந்த கூட்டாட்சி முறை அமுல்படுத்திருந்தால் இன்று இலங்கைத் தீவின் தலையெழுத்து வேறாக அமைந்திருக்கும்...........

ஐநா சபையின் நடவடிக்கைகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, தமிழர்களில் நடுநிலையானவர்கள் உலக அரங்கில் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய இருக்குதுங்க.. இருப்பதையே பெரிதாக எண்ணி ஆகாயக் கோட்டைக் கட்டும் ஈழத்தமிழர்கள் - முதலில் யதார்த்தத்தை உணர்ந்து ஒன்றுப்பட்டு, கட்சி பேதங்கள் இன்றி - ஒரு பொது திட்டத்தின் கீழ் செயல்பட்டு அடைய வேண்டிய இலக்குகள் பல உள்ளன.

இதுவரைக் காலமும் தமிழர்களுக்காக போராடிக் கொண்டே அவர்களுக்கு தடையாக இருந்த தமிழ்ப் புலிகள் இல்லாமல் போன படியால் ஜனநாயக ரீதியான வெற்றிகள் அடைய இன்று ஈழத்தமிழர்களுக்கான வாய்ப்புகள் அதிகம்.

மற்றப்படி காலம் தான் பதில்களை அவிழ்க்க வேண்டி இருக்கு.........

ஹேமா சொன்னது…

தெரிந்து அறிந்த விஷயத்தைச் சொல்லிப் புலம்பிக்கொண்டே இருக்கிறோம் ரதி.
சிங்களவனுக்கு வெள்ளிதிசை.யார் என்ன சொன்னாலும் போங்கடா சொல்லிட்டு போய்க்கொண்டே இருக்கிறான் அவன் இலக்குக்கு.நாங்கள் !

Rathi சொன்னது…

ஜோதிஜி, நான் என் கடமையை செய்துவிட்டேன் என்பதை தவிர சொல்வதற்கு ஏதுமில்லை.

Rathi சொன்னது…

சார்வாகன், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

நீங்களும் ஓர் உண்மையை நெற்றிபோட்டில் அறைந்தாற்போல் சொல்லியிருக்கிறீர்கள், நன்றி.

//எதிரிக்ளும்,துரோகிகளும் செய்யும் பரப்புரையில் உண்மையை தமிழக தமிழர்களுக்கு கண்டறிவது மிக கடினமாக உள்ளது.//

Rathi சொன்னது…

இக்பால் செல்வன், புலிகள் எதுக்காவது தடையாய் இருந்தார்கள் என்பது உங்கள் தனிப்பட்ட கருத்து.

Rathi சொன்னது…

ஹேமா, காலம் மாறும். நம்பிக்கையோடு இருப்போம்.

செயபால் சொன்னது…

பாகுபாடு என்பது ஒரு சார்பு நிலைப் பதம் (relative term).
இது ஒரு குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. இது பற்றி ஒரு கவிதை கூட எழுதியிருக்கிறேன். இது பின்னர் பெருத்துக் கொண்டே போய் அண்டங்கள் வரை ஆட்சி செலுத்தும். ஆக மொத்தத்தில் பாகுபாடு எங்களைப் பாதிக்கும் போது அதன் தாக்கம் எங்களுக்குப் புரிகிறது, அது ஏற்படுத்தும் வலி தெரிகிறது. தமிழர் சிங்களவர் என்று கவலையடைகிறோம். அவ்வளவு தான்.
எழுதி எழுதி மறக்கலாம் கவலையை.

வாழ்த்துக்கள் வார வாட்சத்திரமாக மின்னுவதற்கு.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!தற்போதைக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் மட்டுமே சொல்ல முடிகிறது.

விந்தைமனிதன் சொன்னது…

நினைவேந்தல் வாரத்தில் தமிழ்மணம் நட்சத்திரம்! என்ன பொருத்தம்!! உலகம் முழுக்க பல்லாயிரம், பல லட்சம் தமிழர்களால் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களக்கா! ஈழ இனவழிப்பினை ஆவணப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பும் வலுப்பெற வாழ்த்துக்கள்!

ஜூன் மாதம் தங்களது "ஈழம்! பெண்ணின் வலி!" நூலை வெளியிட முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

Rathi சொன்னது…

செயபால், ராஜ நடராஜன், விந்தைமனிதன், முள்ளிவாய்க்கால் நினைவுவாரத்தில் என்னை நட்சத்திரப் பதிவராக்கியது எனக்கு சந்தோசம், வலி இரண்டுமே.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

பெயரில்லா சொன்னது…

நட்சத்திர வார வாழ்த்துக்கள் ரதி !!!

புலிகளின் லட்சியத்திற்கு அவர்களின் செயல்பாடுகளே தடையாக இருந்தது என்பது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, உலக அரங்கில் இருந்து இலங்கைப் பிரச்சனைக்கு நடுநிலையாளராக இருப்பவர்கள் அனைவரின் கருத்தும் கூட... இதனால் என்னவோ தான் ஈழத்தமிழர் விடயத்தில் உலக நாடுகள் துரோகம் இழைப்பது போன்றதொரு உணர்வு எழுகின்றது .......

நற்பயனாய் தமது வழிக்கு தாமே தடை என்பதை உணர்ந்து கௌரவமாக விலகிக் கொண்டார்கள் புலிகள் ... அவர்கள் செய்த பிழைகளைத் திருத்தியவண்ணம் நடுநிலையோடும் யதார்த்தங்களைத் தாங்கிய வாறு முன்னே செல்வதே ஈழத்தமிழர்களின் கடமையாகும் ......

வாழ்த்துக்கள்.

ஜோதிஜி சொன்னது…

இக்பால் செல்வன் நீங்க உடனடியாக செய்ய வேண்டியது புலிகள் இயக்கம் என்ன தவறுகள் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? செய்யாமல் இருந்தால் எங்கங்கே பாலும் தேனும் ஓடியிருக்கும் போன்றவற்றை ஒரு பதிவாக எழுதவும்.

அடுத்து பிரபாகரன் காட்சியில் இல்லாத இந்த நேரத்தில் சிங்கள இனவாதம் என்ன உதவிகள் இந்த தமிழர்களுக்கு கொடுத்து உள்ளது? இனிமேல் என்ன கொடுக்கும்? தமிழர்கள் மகிழ்ச்சி கடலில் நீந்தும் இந்த சூழ்நிலையில் எந்த பாடலை ஹம் செய்து பாடலாம் என்பதை எழுதினால் என்னை கொஞ்சம் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

செய்வீர்களா?

துளசி கோபால் சொன்னது…

நட்சத்திரத்துக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

Rathi சொன்னது…

இக்பால் செல்வன் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

துளசி கோபால் அவர்களுக்கு,

மிக, மிக நன்றி. உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

பெயரில்லா சொன்னது…

@ ஜோதிஜி - நிச்சயமாக சகோ. தமிழர்கள் எப்போதுமே உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், ஒற்றை நோக்கில் இருந்து ஒரு விடயத்தை அவதானிப்பவர்கள்.

புலிகள் செய்த தவறுகள் ஏராளம் உண்டு ? சிங்கள இனவாதம் செய்த தவறுகளும் ஏராளம் ?

ஒன்றைத் தாங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும், தமிழர்கள் மகிழ்ச்சிக் கடலில் பிராபகரன் இருக்கும் போதும் நீந்தவில்லை, இப்போதும் நீந்தவில்லை ...... இரண்டு பேய்களிடமும் மாட்டித் தவித்தவர்கள் என்பதையும் மறக்கக் கூடாது.

தமிழர்களின் பிரச்சனையே பரப்புரைகளை நம்பி, உணர்ச்சிகளையும் பொங்க விடுவது ....

பதிவாக எழுதும் போது பல விடயங்களை எழுதுகின்றேன் சகோ. ரதியின் நட்சத்திர வாரத்தில் பல விடயங்களை அவர் வெளிக்கொணர்வார் என்பதில் ஐயமில்லை ..

சுந்தரவடிவேல் சொன்னது…

இக்பால் செல்வன் போன்ற 'மதியுரைஞர்கள்' புரிந்துகொள்ள வேண்டியது - புலியெதிர்ப்புக்கான காலமும் நேரமும் இதுவல்ல. உங்களுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்களின்பால், அவர்களது விடுதலையின்பால் பற்று இருக்குமென்றால் நீங்கள் பேசிக்கொண்டிருக்கவேண்டியது புலிகளைப் பற்றியோ, ஈழத்தமிழர்களின் தங்கம், சொத்து, மதம் அல்லது வாழ வகையற்றுப் போனவர்களுக்கு வழங்க வேண்டிய பிச்சைகளைப் பற்றியோ அல்ல. மாறாகச் சட்டரீதியான முன்னெடுப்புகளுக்கு ஆதரவைக் கொடுங்கள். உலகில் எந்த இனத்தினுள்ளும் ஒற்றுமை என்பது முழுமையாக இராது. எனவே அந்த ஒற்றுமை தமிழர்களுக்குள் மட்டும் வந்துவிடவேண்டும் என, அதுவும் எல்லாத் தளங்களிலும், அங்கலாய்ப்பது மடமை. தமிழர்களுக்குச் சுயநிர்ணயம் வேண்டும் என்ற கருத்தில் எல்லோருக்கும் ஒற்றுமைதானே இருக்கிறது. ஆனால் ஒற்றுமையாகப் போய்க் கேட்டாலும், தனித்தனியே கேட்டாலும் சிங்களத்திடம் நீதி கிடைக்காது. வெத்துவேட்டாக இந்திய மொழிவாரி மாநிலம், புலியெதிர்ப்பு, ஒற்றுமை, உணர்ச்சிவசப்படுபவர்கள், மூடநம்பிக்கை என்று இவர் எழுதிப் பரப்புவது மோசமான உள்நோக்கங்களைக் கொண்டது.