மே 17, 2011

இனப்படுகொலையும் சுயநிர்ணய உரிமையும் - Genocide & Self- DeterminationUNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization, யுனெஸ்கோ கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை பேணும் ஓர் சர்வதேச அமைப்பு, சொன்னது உலகில் அழிந்துவிடும் என்கிற ஆபத்து நிலையில் இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்று என்று. இதை கேட்ட நானும் கொஞ்ச நாட்கள் விடாப்பிடியாக தமிழில் மட்டுமே பேசி, எழுதி நிறையவே தமிழை வளர்த்தேன், என் பங்கிற்கு. பின்னர் ஓர் நாள் வானொலி ஒன்றில் சொன்னார்கள் தமிழ் அருகிப்போகும் ஆபத்து இருந்தது தான் ஆனால் இப்போ இணையத்திலும் கூட தமிழ் எழுதும் வசதி வந்ததாலும் கூட  தமிழ் அழிந்துவிடும் ஆபத்திலிருந்து தப்பிவிட்டது என்று. தமிழை காப்பாற்றி விட்டார்கள். What about Tamizhan? என்று நினைத்துக்கொண்டேன். 

மேலே தொடர்ந்து படிக்குமுன் ஓர் வேண்டுகோள், இலங்கையின் அடிப்படை அரசியல் யாப்பு, சுயநிர்ணய உரிமைகள் தொடர்பான அடிப்படை சர்வதேச சட்டங்கள் ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறு பொருந்தும், அது எவ்வகையான பாதிப்புகளை உருவாக்கியிருக்கிறது என்று அக்கறை இருந்தால் மேற்கொண்டு படியுங்கள். மற்றவர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்..... இவை என் புரிதல்கள் மட்டுமே. 

இரண்டு வருடங்களுக்கு முன் உலகத்தின் வீதிகளிலெல்லாம் விழுந்து கிடந்து உலகத்திற்கு தமிழர்களும் இதைத்தானே சொன்னார்கள். தமிழ் அழிந்தால் காப்பாற்றும் ஓர் சந்தர்ப்பம் உண்டு. தமிழினம் ஈழத்தில் அழிக்கப்படுகிறதே காப்பாற்றுங்கள் என்று. எப்போதுமே காலங்கடந்து விழித்துக்கொள்ளும் சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் விழித்துக்கொண்டே தூங்குவது போல் பாசாங்கு செய்கிறது.

இனப்படுகொலைக்கும் சுயநிர்ணய உரிமைக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கலாம்! ஒரே வரியில் சொல்வதானால் ஓர் இனம் 'இன அழிப்புக்கு' உடபடுத்தப்படுகிறது என்றால், அந்த இனம் தன்னை காப்பாற்றிக்கொள்ள, தனியே பிரிந்து சென்று தங்களுக்கென்று ஓர் சுதந்திர தனிநாட்டை உருவாக்கிகொள்லாம், சர்வதேச சட்ட திட்டங்களின் கீழ். ஈழத்தமிழர்களும் அவ்வாறு ஓர் தனிநாட்டை அமைத்துக்கொள்வது ஒன்றும் சட்டவிரோத செயல் அல்லவே அல்ல. 

அதன் அடிப்படையில் தான் ஈழத்தமிழர்களும் இலங்கையிலிருந்து தனியே பிரிந்து, வரலாற்றுக் காலத்தில் இருந்ததைப் போன்று எங்கள் மண்ணை நாங்களே ஆளும் உரிமையை மீளத் தரும்படி கோருகிறோம். எங்கள் கோரிக்கை இன்றுவரை நிராகரிப்பு என்கிற குப்பைத்தொட்டியில் தான் வீசப்பட்டுக்கொண்டிருக்கிறது.  எங்களுக்கென்று யாரிடமிருந்தாவது நிலத்தை பிடுங்கி ஓர் தேசத்தை உருவாக்கி கொடுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. யாருடைய மண்ணையும் நாங்கள் ஆக்கிரக்கவும் இல்லை. 

சர்வதேசமும் சட்டங்களும் 

தற்காலத்திலும் மனித உரிமை அமைப்புகள் முதல் ஐ. நா. வரை ஈழத்தில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கிறது, மனித உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் வார்த்தைகளால் விளையாடுகிறார்கள். 'இனப்படுகொலை' என்கிற வார்த்தைப் பிரயோகம் ஈழத்தமிழர் விடயத்தில் இவர்கள் வாயிலிருந்து வருவதில்லை. இனப்படுகொலை என்கிற வார்த்தையை இவர்கள் உச்சாடனம் செய்தால் தமிழனுக்கு அவன் கேட்கும் நியாயமான 'சுயநிர்ணய உரிமையையும்' கொடுக்கவேண்டிய கட்டாயமும், வழியும் தானாகவே உருவாகும். போற்குற்றங்களை விசாரிப்பதேயானாலும் எந்த அடிப்படையில் அதை விசாரிப்பார்கள் என்பது புரிவதில்லை எனக்கு. 

இனப்படுகொலை என்றால் எப்படி வரையறுக்கப்படுகிறது என்று பார்த்தால், 

Article II of the Genocide Convention defines the international crime of genocide in relevant part as follows:

In te present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious such as:

(a) Killing members of the group;
(b) Causing serious bodily or mental harm to members of the group; 
(c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part;....

(Boyle, Fein charge Sri Lanka of Genocide in Chennai Seminar - TamilNet, Tuesday, 09 June 2009)

தமிழ் விக்கிபீடியா இனப்படுகொலையை தடுக்கும் ஐ. நா. வின் நாடுகளின் உடன்படிக்கையை இப்படி தமிழ்ப்படுத்தியிருக்கிறது, 

"இது குறித்து 1948 ல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யபட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 ன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்..."

இலங்கைக்கு பிரித்தானியா காலனி ஆத்திக்கத்திலிருந்து சுதந்திரம் கொடுத்த நாள் முதல் இங்கே மேலே சொல்லப்பட்டிருப்பதில் எல்லாக் கொடுமைகளையும் எங்கள் இனம் வாய்விட்டுச் சொல்லக்கூட முடியாத அளவுக்கு சுமந்துகொண்டிருக்கிறது. 

அதனால் தான் Francis Boyle போன்ற சட்ட வல்லுனர்கள் சர்வதேச சட்ட வரையறைகளிளிருந்து சுட்டிக்காட்டுவது இலங்கை, சமூக மற்றும் குடியுரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights - ICCPR) கையெழுத்திட்ட ஓர் நாடு. அந்த உடன்படிக்கையில் சொல்லப்பட்டிருப்பது எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பது தான். "All peoples have the right of self-determination."

அதனோடு தொடர்புடைய, இலங்கை கையெழுத்திட்ட இன்னோர் சர்வதேச உடன்பாடு, Declaration on Principles of International Law Concerning Friendly Relations and Co-operation Among States in Accordance with the Charter of the United Nations (1971). ஆரம்பத்தில் காலனியாதிகத்தில் இருந்து அரசியல் சுதந்திரம் என்கிற வகையில் தான் சுயநிர்ணய உரிமை பார்க்கப்பட்டது. பிறகு 1970 இல் மேற்சொன்ன இந்த உடன்பாடு நாடுகளுக்கு இடையே உருவாக்கம் பெற்றது.

இதன்படி பார்த்தாலும் ஈழத்தமிழர்களுக்கு தங்களை தாங்களே, தங்கள் விருப்பத்திற்கேற்ப ஆளும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று இலங்கை கையெழுத்து இட்டு ஒத்துக்கொண்டிருக்கிறது. அதன்படி, ஒன்று, தங்களுக்கென்று சுதந்திரமான, இறையாண்மையுடன் கூடிய தனி நாட்டை உருவாக்கி கொள்வது; இரண்டு, ஒரு சுதந்திர நாட்டுடன் இணைந்து செயல்படுவது; மூன்று, தமிழர்களால் தீர்மானிக்கப்படும் மற்றைய அரசியல் நிலைப்பாடுகள்.


ஓர் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க, அரசியல் ஒற்றுமையை பேண, நாட்டை பிளவுபடுத்தாத வகையில் (internal self-determination) மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்பது வழங்கப்படலாம் என்கிற அடிப்படையில் தான் அது உருவாக்கம் பெற்றது. ஆனால், ஓர் அரசு சிறுபான்மையினரை துன்புறுத்தினால் அவர்கள் தனியே பிரிந்து செல்லும், சுயநிர்ணய உரிமையைப் பெறமுடியும். 


நோர்வேயின் சமாதன முயற்சி மற்றும் பேச்சுவார்த்தை காலங்களிலேயே அன்டன் பாலசிங்கத்தால் சுயநிர்ணய உரிமை மற்றும் சமஷ்டி அரசு தீர்வுகள் எல்லாம் முன்வைக்கப்பட்டவை தான். பேச்சுவார்த்தை முறிந்ததோடு அப்போது அது முடிந்து போனது. ஆனால், இப்போது ஈழத்தமிழினம் அடக்குமுறைக்கும், இனப்படுகொலைக்கும் மிக மோசமாக உடபடுத்தப் பட்டிருப்பதால் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் யாரும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை, தனி தமிழீழம், (External Self-Determination) மறுக்க முடியாது என்பதே சர்வதேச சட்ட வல்லுனர்களின் வாதமாகும் என்பது என் புரிதல்.

இலங்கை அரசியல் யாப்பு 

இலங்கையின் அரசியல் யாப்பு முதல் உள்ளூராட்சி உபவிதிகள் வரை எல்லாமே தமிழனுக்கு எந்தவொரு உரிமையும் கிடைக்காத வகையில் தான் இயற்றியும், மாற்றியும் அமைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பு எனக் கருத்தப்பட்டது சோல்பெரி யாப்பாகும். சோல்பெரி யாப்பில் (1948) ஏதாவது திருத்தவோ அல்லது நீக்கம் செய்யவோ வேண்டுமாயின் அது குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் முதலில் சமர்பிக்கப் பட வேண்டும். ஆனால் இதையெல்லாம் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் D. S. சேனாநாயக்கா என்பவரால் குடியுரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு தமிழக வம்சாவழி மலையாக தமிழர்களின் குரியுரிமை பறிக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை குறைக்கும் முயற்சியே இது.

1970 இல் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் ஐக்கிய முன்னணியால் (சிறீலங்கா சுதந்திர கட்சி, இலங்கை communist கட்சி, சிறீலங்கா சமசமாயக் கட்சி) சோல்பெரி அரசியல் அமைப்புக்குப் பதிலாக "குடியரசு அரசியலமைப்பு' வகுக்கப்பட்டது.

சிறிமாவோ பண்டாரநாயக்க தன் இஸ்டத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக சோல்பரி யாப்பில் கூறப்பட்ட, அரசியல் யாப்பின் மாற்றத்திற்கான வேண்டுகோள் பிரித்தானியா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதையும்; அதில் குறிப்பிடப்பட்ட இன, மத ரீதியிலான மக்கள் பிரிவின் உரிமை பகுதிகளை/ஷரத்துகளை (Solbury Constituion Section 29 (2)) நீக்கினார். 1972 ம் ஆண்டின் 'குடியரசு' யாப்பின்படி  சிலோன் என்கிற பெயரை 'ஜனநாயக குடியரசு' (?) என்று மாற்றினார்கள். இவர்களின் பின்னால் வந்த J.R. ஜெயவர்த்தனா இலங்கையை "ஜனநாயக சோஷலிச குடியரசு சிறீ லங்கா" என்று மாற்றினார். இலங்கைக்கு ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சேனாநாயக்க ஆட்சிக்காலத்திலிருந்து ராஜபக்க்ஷே ஆட்சிக்காலம் வரை அரசியல் யாப்பு பலமுறை இலங்கையில் திருத்தப்பட்டிருக்கிறது. இன்று இலங்கை ஜனாதிபதி ஆக இருக்க கூடியவர் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்டிருக்கிறார். (Diaspora Referenda on Tamil Eelam in Sri Lanka - Brian Senewiratne).

ஆக, இலங்கையில் அரசியல் யாப்பு என்பது அதன் பெயருக்கேற்றாற்போல் ஜனநாயகத்தை பிரதிபலிப்பதோ அல்லது ஜனநாயக விழுமியங்களை பெளத்த சிங்களர் அல்லாதவர்களின் விடயத்தில் பேணிக்காப்பதோ அல்ல. குடியரசு யாப்பு என்கிற பெயரில் எப்படியும் பெரும்பான்மை சிங்கள பெளத்தரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது. இலங்கையை பெளத்த சிங்கள நாடாக மாற்றுவது இது தான் அவர்களின் கடைசி இலக்கு. என்னதான் தமிழர்கள் இங்கே ஜனநாயக வழியில் முக்கினாலும் எங்கள் பிரதிநித்திதுவம் இலங்கை அரசியல் யாப்பில் வெல்லவே போவதில்லை. 

இலங்கை சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையில் இன்னோர் சட்டத்தையும் தமிழர்கள் இலங்கையிலிருந்து பிரிந்து போவது பற்றி பேசவே முடியாத படி இயற்றி வைத்திருக்கிறார்கள். 1978 ம் ஆண்டின் அரசியல் யாப்பில் 6 வது திருத்தச்சட்டம் J.R. ஜெயவர்த்தனாவால் 1983 இல்  உருவாக்கப்பட்டது. ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி (Prohibition Against Violation of Territorial Integrity) இலங்கை குடிமகன்(ள்) பிரிவினை பற்றி பேசமுடியாது. அவ்வாறான பேச்சு செயல் எதுவானாலும் இந்த சட்டத்தின் கீழ் மிக பாரதூரமான தண்டனைக்குரியது. இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் 1977 இல் வென்ற வட்டுக்கோட்டை தீர்மானம் என்கிற மக்கள் ஆணை, அதன் பிறகு 1983 இல் கொழும்பில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை இவையெல்லாம் தமிழர்கள் மத்தியில் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பதை ஏற்கனவே உணர்ந்த சிங்கள ஆட்சியாளர்களின் நரித்தனம் தான். 

பின்னாளில், இந்திய அமைதிப்படை (???) ஈழத்தில் இருந்து விரட்டியடிக்கப்படவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது சிங்கள குடியேற்றங்கள் தமிழர் பகுதியில் நிறுத்தப்படவேண்டும், தமிழர்கள் புனர்வாழ்வு மற்றும் தமிழர் பகுதியில் பொருளாதார கட்டுமானங்கள் தவிர, அரசியல் யாப்பிலிருந்து 6 வது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது தான்அவர்களது கோரிக்கை, (War and Peace, Anton Balasingam, pg. 185-186).  வி. பி. சிங் ஒருவழியாய் இந்திய ராணுவத்தை திருப்பியழைத்துவிட்டார். வழக்கம் போல் சிங்கள ஜனாதிபதி முந்தையவர்களிடமிருந்து தான் வேறுபட்டவன் அல்ல என்பதை காட்டிவிட்டார். அந்த சட்டமூலத்தை இலங்கை அரசியல் யாப்பிலிருந்து நீக்க பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். பெளத்த, சிங்கள இலங்கையை விரும்பும் பிக்குகள், மற்றைய அரசியல்வாதிகளிடமிருந்து அதற்கு பிரேமதாசாவிற்கு ஆதரவு கிடைத்திருக்குமா என்பதும் சந்தேகம் தான். ஒருவேளை அப்படி அந்த சட்ட மூலம் நீக்கப்பட்டிருந்தால்  புலிகளும் அரசியல் தீர்வு நோக்கிய வழிகளில் உள்வாங்கப்பட்டிருப்பார்கள். புலிகள் வழி ஈழத்தின் தலைவிதி மாறியிருந்தாலும் இருக்கலாம்.

ஆறாவது திருத்தச் சட்டம் இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளவரை தமிழ்தேசிய கூட்டமைப்பு கூட தமிழர்களின் சுய நிர்ணய உரிமை பற்றி பேசமுடியுமா தெரியவில்லை. 

மொத்தத்தில், இலங்கை - ஈழத்தமிழர்கள் விடயத்தில் அரசியல் யாப்பிலிருந்து சர்வதேச சட்டங்கள் வரை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கோலங்கள், குழப்பங்கள் தான் மிஞ்சிப்போயிருக்கின்றன. எந்தவொரு சர்வதேச சட்டத்தில் இலங்கை கையெழுத்து போட்டாலும் அதை பின்பற்றவேண்டிய தேவை இல்லாத படி அரசியல் அமைப்பில் ஏதாவது புதிதாய் சேர்ப்பது அல்லது எதையாவது ரத்துச் செய்வது, இதுவே அவர்களின் வரலாறு. இலங்கை சுதந்திரம் பெற்ற நாட்களில் இருந்து அங்கு ஆட்சி செய்த எந்தவொரு சிங்கள பெளத்த ஆட்சியாளரும் அங்கு வாழும் சிங்கள பெளத்தர் அல்லாத மக்களின், குறிப்பாக தமிழர்கள், உரிமைகளுக்கு அரசியல் யாப்பில் கூட எந்தவொரு உத்தரவாதத்தையும் கொடுக்க கூட இன்றுவரை முயன்றதில்லை.

தீர்வை நோக்கி.....

ஆனால், தீர்வு எட்டப்படாததன் காரணம் இந்த முரண்பாடுகள் மட்டுமல்ல. நேரு, இந்திரா, ராஜீவ்,  சோனியா  என்கிற இந்திய காங்கிரஸ் கொள்கைகளும் தான். நேரு காலத்தில் தொடங்கிய தமிழக வம்சாவழி மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது முதல் இன்று தமிழக மீனவர் வரை இந்தியா எப்போதுமே தமிழர்கள் நலனில் அக்கறை காட்டியதில்லை என்பது தான் வரலாறு.

ஆனால், ஒரேயொரு விடயத்திற்கு இந்தியாவுக்கு ஈழத்தமிழர்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இலங்கையின் வடக்கும், கிழக்கும் தமிழர்களுக்கு சொந்தமான பாரம்பரிய பூமி என்பதை பண்டாரநாயக்கா - செல்வா ஒப்பந்தம் (1957), டட்லி சேனாநாயக்கா - செல்வா ஒப்பந்தம் (1965), என்கிற வெறும் எழுத்து வடிவிலேயே முடிந்துபோன ஒப்பந்தங்களில் சொல்லப்பட்டதை இந்திய இலங்கை ஒப்பந்தந்தத்தில் (1987) உறுதிப்படுத்தியது தான் அது.

இந்தியா மட்டுமல்ல இதில் இன்று அமெரிக்கா, சீனா என்கிற சர்வதேச, பிராந்திய வல்லரசுக்கனவுகளின் பொருளாதார நலன் சார்ந்த ஆதிக்கம் வேறு. ஒரு பொருளியல் ஆய்வாளர் China's Blue Water Ambitions என்று குறிப்பிட்டு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், ஹம்பாந்தோட்ட துறைமுக விஸ்தரிப்பு பற்றி எழுதியிருந்தார். படித்த போது கொஞ்சம் பயம் உண்டானதை தவிர்க்க முடியவில்லை. 

இன்று, அமெரிக்கா, இந்தியா மட்டுமல்ல மார்க்சியம் பேசும், மார்க்சிய அடிப்படையில் தங்கள் கொள்கைகளை வகுத்துக்கொண்ட நாடுகள் கூட தங்கள் தேசிய நலன்கள் என்கிற வரையறைக்குள் நின்று தங்களை சுருக்கிக்கொண்டே சிந்திக்கிறார்கள் என பெ.மணியரசன் அவர்கள் கூற்றும் ஞாபகத்தில் வந்துபோகிறது. அவர்கள் கூட ஈழத்தமிழனின் உரிமைகள் பக்கமுள்ள நியாயம் குறித்து வாய்திறப்பதில்லை. அதுகூடப் பரவாயில்லை. ஆனால், ராஜபக்க்ஷே ஆட்சிக்கு முண்டுகொடுக்க முனைவது தான் விந்தை.

இறுதியில், ஈழத்தமிழர்களின் தலைவிதியை எதுதான் தீர்மானிக்கும் என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். பொறுமையின் முடிவில் ஈழத்தில் தமிழன் யாராவது மிஞ்சியிருந்தால்!!!!!

இலங்கையில் ஒற்றையாட்சி முறையை நீக்கி அரசியல் யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டு சமஷ்டி ஆட்சி முறை (தன்னாட்சி அதிகாரங்கள் கொண்ட பிரதேச அலகுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஜனநாயக குடியரசு- Federalism... இங்கே கொஞ்சம் சிரித்துக்கொள்கிறேன்) தான் இலங்கைக்கு தேவை என்று சில தமிழர்களே பரிந்துரை செய்யும் போது என்ன சொல்வதென்றே புரிவதில்லை. முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் கூட இப்படியெல்லாம் இவர்களால் பேச முடிகிறதா என்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள். 

ஈழத்தில் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடக்கிறது என்று சர்வதேசம் ஒப்புக்கொண்டால் எங்களுக்குரிய சுயநிர்ணய உரிமை அதுவாய் அமையும் என்பது என் புரிதல். அதற்குரிய அழுத்தங்களை ஏதாவதொரு வகையில் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்துக்கு உருவாக்க வேண்டும். எங்களுக்கு என்ன காலத்தின் தேவை என்பதை நாங்களே புரிந்துகொள்ளாவிட்டால், வேறுயாரும் புரிந்துகொள்ளவில்லையே என்கிற புலம்பல்கள் மட்டுமே மிஞ்சும்.

நாங்கள் ஈழத்தமிழனுக்காய் புதிதாய் எந்தவொரு விதியையோ, சட்டத்தையோ உருவாக்கும்படி சர்வதேசத்தை கேட்கவில்லை. ஏற்கனவே உள்ள சட்டங்களின் படி எங்களுக்குரிய நீதியை தான் வேண்டி நிற்கிறோம்!!!

21 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!முழுவதுமாக வாசித்தேன்!தற்போதைய நிலையில் தமிழர் சார்ந்த தேவைகள் சமநிலை கூட கிடையாது,கிள்ளிக்கொடுப்பேன் என்றளவிலும் கூட கிடையாது வெறும் யாசிப்பு என்ற நிலையில் மட்டுமே உள்ளது.

உலக அரங்கில் முக்கியமாக அமெரிக்க ராபர்ட் பிளேக்கின் கூற்றிலும்,தற்போதைய இந்திய ஆட்சியில் இருக்கும் காங்கிரஸின் நிலைப்பாட்டிலும் ஒன்றுபட்ட இலங்கையென்ற நிலையிலேயே பிரச்சினைகளை பார்க்கிறாகள்.எனவே தீர்வுகளுக்கான வற்புறுத்தும் நிலையிலோ ஏன் நீங்கள் பதிவில் குறிப்பிட்ட படி Federalism என்ற நிலையில் கூட யாரும் தீர்வை முன்வைக்கிற மாதிரி தெரியவில்லை.

அப்ப தமிழீழ கனவு?இதனை உலக தமிழர்களும்,தற்போதைய வடக்கு,கிழக்கு ஈழத்தில் வசிக்கும் மக்களும் ஒன்றுபடுவதிலும்,பிரிந்து நிற்பதிலும் உள்ள சூட்சுமம் என்பேன்.

ஏற்கனவே ஏற்பட்ட உடன்படிக்கைகள் அனைத்தும் போருக்குப் பின்னால் கிழித்துப் போடப்பட்டிருக்கின்றன.அவற்றை புதிப்பிக்க இயலுமா என்ற அடிப்படையில் இணைந்து போராடுவதிலும் மேற்கத்திய,இந்தியா நாடுகளின் ஆதரவும் அவசியம்.

ஐ.நா போர்க்குற்ற அறிக்கையில் இந்தியாவின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை கண்டறிவதும் அதன் மௌனத்தைக் கலைப்பதும் தற்போதைய முதல் தேவை.

ஜோதிஜி சொன்னது…

என்னால் பதில் சொல்ல முடியாத அளவிற்கு ஆய்வுக்குரிய கட்டுரை இது.

ராஜ நடராஜன் சொன்னது…

கனடா தேர்தலில் ராதிகாவின் வெற்றி ஒரு நல்ல அறிகுறி.ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பொறுத்திருந்து பார்க்கலாம்.லண்டன் புலம்பெயர் தமிழர்கள் ஓரளவுக்கு ஈழம் குறித்த உயிர்ப்புடன் இருக்கிறார்கள் எனினும் புலம்பெயர்ந்தோர் உட்பூசல்களை குறைப்பது அவசியம்.

Also I would like to emphasize on the diaspora to shorten the luxury of spending so much on temple,gold and other substances and build a strong fund to flow for people who survived the war atrocities and others too, plus to donate for democratic Eelam activities through a legalized proper channel.Why not an Internaional Tamil bank too?

ராஜ நடராஜன் சொன்னது…

இடுகையை இண்ட்லியில் இணைத்துள்ளேன்.

தவறு சொன்னது…

உங்களுடைய சொல்லாற்றல் பிரமிக்கவைக்கிறது ரதி.

நட்சத்திர ஆசை நிறைவேறிவிட்டது போல...

நாளை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஈழத்தின் ஒவ்வொரு துன்பமும் நினைவுகள் ஆகிறது.
அதற்குண்டான முயற்சியில் தமிழர்களாகிய நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும் ரதி.

சார்வாகன் சொன்னது…

நல்ல பதிவு,
இலங்கையில்2009ல் நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல,தொடர்ந்து ந்டந்து வரும் இனப் படுகொலையின் உச்சக் கட்டமே என்று நிரூபிக்கப் பட்டால் சுய நிர்ணய தீர்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறீர்கள்.ஆனால் போர்க் குற்றம் என்ற பதமே இவ்விஷயத்தை முன்னெடுக்கும் நாடுகளால் பயன் படுத்தப் படுகின்றது.எவ்வளவு ஈழ தமிழர்கள் இக்கருத்தை கொண்டிருக்கிறார்கள்?. தமிழகத்தில் கூட உங்களின் கருத்தை கொண்டவர்கள் மிக குறைவு.இப்படி போர்க் குற்றம் என்று மட்டுமே கூறும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் மாறிய(?) அரசியல் சூழ்நிலையில் பொறுத்து பார்க்க வேண்டும்.அருமையான விளக்கம்.
நன்றி

Rathi சொன்னது…

ராஜ நட,

You said it!!!


//அப்ப தமிழீழ கனவு?இதனை உலக தமிழர்களும்,தற்போதைய வடக்கு,கிழக்கு ஈழத்தில் வசிக்கும் மக்களும் ஒன்றுபடுவதிலும்,பிரிந்து நிற்பதிலும் உள்ள சூட்சுமம் என்பேன்.//

பார்க்கலாம் நாளை பதினெட்டாம் திகதி வடஅமெரிக்க தமிழர்கள் எத்தனை பேர் நியுயோர்க்கில் ஐ. நா. சபை அலுவலகம் முன் நிற்கிறார்கள் என்று. எங்களுக்கு இருக்கும் ஒரே பிடி தற்சமயம் ஐ. நா. குழு அறிக்கை தான் அது குறித்த இந்த ஒன்றுகூடலில் தமிழர்கள் தங்கள் நிலை என்ன என்பதை காட்ட நல்லதோர் சந்தர்ப்பம்.

முக்கிய சர்வதேச ஊடகங்கள், Chanel 4, அல்ஜசீரா உட்பட, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எல்லாம் எங்களோடு சேர்ந்து நிற்கப் போகிறார்கள். தமிழர்கள் தங்கள் பலத்தையும் நாடு கடந்த அரசு மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளின் இந்த முயற்சிக்கு வழங்க வேண்டும்.

இதுவும் சுய நிர்ணய உரிமை கோருவதில் ஓர் துரும்பை அசைப்பது தான்.

Rathi சொன்னது…

ஜோதிஜி, உங்களிடமிருந்து நீண்டதோர் விமர்சனத்தை எதிர்பார்த்தேன்!!

Rathi சொன்னது…

ராஜ நட, நான் ஏற்கனவே புலம் பெயர் தமிழர்கள் பற்றி ஓர் பதிவெழுதி வைத்திருக்கிறேன். நீங்கள் மேலே சொன்னதையும் ஓர் 'quote' ஆக உங்கள் அனுமதியுடன் சேர்த்துக்கொள்கிறேன். அப்போ, அது பலரை சென்றடையும்.

இடுகையை இன்ட்லியில் இணைத்தமைக்கு நன்றி.

Rathi சொன்னது…

தவறு, வாங்க! ஈழம் குறித்த உங்கள் வார்த்தைகள் நிறையவே நம்பிக்கை ஊட்டுவதாய் இருக்கின்றன. நன்றி.

நட்சத்திர ஆசை என்பதை விடவும், இந்த முள்ளிவாய்க்கால் வாரத்தில் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்ததை கெளரவமாய் கருதுகிறேன். அதுக்கு தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.

Rathi சொன்னது…

சார்வாகன், உங்கள் வருகையும் ஆக்கபூர்வமான் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நீங்கள் சொல்வது சரிதான். இனப்படுகொலையின் உச்சமே "போர்க்குற்றம்". என் சிற்றறிவுக்கு தோன்றுவது என்னவென்றால், போர்க்குற்றம் என்று விசாரித்தாலும் அதுக்கு ஆங்கிலத்தில் "MOTIVE" என்று ஒன்று இருக்கவேண்டுமே!!! அதனால் தான் நினைப்பதுண்டு இவர்கள் போர்க்குற்றங்களை விசாரித்தாலும் என்ன அடிப்படையில் அதை அணுகுவார்கள் என்று.

எழுபதாயிரம் உயர்களை பறித்து, சர்வதேச போர்விதிகளை மீறி தமிழர்களை காப்பாற்றுவது இலங்கை அரசின் நோக்கமல்ல என்பதை புரிந்தும் புரியாதது போல் இருக்கும் சர்வதேசத்திற்கு தமிழர்கள் இடித்துரைக்க வேண்டும்.

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் சொன்னது…

நட்சத்திர வார வாழ்த்துக்கள் ரதி! Good article. All the democratic mind people of world join together to punish the war criminals inn Srilanka.

Rathi சொன்னது…

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன், உங்கள் வருகை, வாழ்த்து, கருத்து எல்லாவற்றிகும் நன்றி.

இக்பால் செல்வன் சொன்னது…

ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமை மறுக்க முடியாத ஒன்று. ஒரு இனம் என்பது வெறும் சாதிகளாலும், மதங்களாலும் பிரிந்து இருப்பது அல்ல. மாறாக தமக்கான கலாச்சாரம், மொழி, மதம் மற்றும் நீண்டகாலமாக வாழும் ஒரு நிலப்பரப்பு. அந்த வகையில் ஈழத்தமிழர்கள் தாம் வாழும் நிலப்பரப்பினை ஆளவும், பாதுகாக்கவும் முழு உரிமை உடையவர்கள்.

ஈழத்தமிழர்கள் எப்போது அங்கே போனார்கள் என்பது எல்லாம் தேவையற்ற ஒன்று ........ ஒரு இனம் நீண்டகாலமாக ஒரு நிலப்பரப்பில் வாழ்கின்றார்கள்.. ஒரு தேசத்துக்குள் அவர்களின் உரிமைகளை தாமே ஆள முழு அதிகாரமும் உண்டு. இதனைத் தான் இந்தியா முதல் பல நாடுகளில் பின்பற்றுகின்றார்கள்...

ஆனால் இலங்கையில் சிங்கள தேசியம் தமிழ தேசியம் என்ற ஒன்று இருக்கக் கூடாது என நினைக்கின்றது..... தமிழ் தேசியம் என்ற ஒன்றை அமைக்கும் சந்தர்ப்பங்கள் பலவற்றைத் தமிழர்கள் கைதவறிவிட்டார்கள் என்பதே உண்மை . 1948, 1977, 1987, 2004 ஆகிய நான்கு முறையும் கிடைத்த வாய்ப்புகள் பறிபோயின ..... ஆனால் இம்முறை அதற்கான இறுதி வாய்ப்பு இருக்கின்றது .. அதனை செவ்விய முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், புலம் பெயர் தமிழீழ அரசு வெவ்வேறு வழிகளில் அடைய முற்படுகின்றன.

இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கும் காலத்தில் சிங்கள அரசும், தமிழ் புலிகளும் நடத்திய போர்க்குற்றம் சர்வதேச அரங்கில் கூண்டில் ஏறிக் கொண்டிருக்கும் ..... தமிழர்கள் தெளிவாக இருந்தால் அனைத்தும் சாத்தியமே !!!

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

ஹேமா சொன்னது…

நடசத்திர வாழ்த்துகள் ரதி.இந்தக் கட்டுரை விளங்கினாலும் அதுக்குக் கருத்துச் சொல்லத் தெரியவில்லை.நடாவின் பின்னூட்டமும் கட்டுரையோடு இணைகிறது !

இக்பால் செல்வன் சொன்னது…

// Also I would like to emphasize on the diaspora to shorten the luxury of spending so much on temple,gold and other substances and build a strong fund to flow for people who survived the war atrocities and others too, plus to donate for democratic Eelam activities through a legalized proper channel.Why not an Internaional Tamil bank too? //

@ ராஜநடராஜன் - அருமையான எண்ணங்கள். ஆனால் சாத்தியப்படாத ஒன்று. டேவிட் அய்யா என்ற ஈழத்தமிழ் பெரியவர், பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காந்தியம் என்ற ஒரு அமைப்பை ஈழத்தில் நிறுவிய, புகழ்பெற்ற ஒரு ஆர்கிடெக்ட் பலமுறைக் கூறியது தான். ஆனால் அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டன.

புலம் பெயர் தமிழர்கள் தம் தாயகத்தில் வறுமையில் சிக்கிய மக்களுக்கு உதவுவதை விடவும், கோயில்களுக்கு காணிக்கை இடுவதையும், இந்தியாவில் உள்ள அம்மா பகவான், சத்ய சாய் போன்ற போக்கிரி சாமியார்களின் நேரிடை தரிசனம் பெறவும், வகை வகையான உணவுகள், உடைகள், கார்கள், வீடுகள் வாங்குவதிலுமே முனைப்பாக உள்ளனர். இதனை எடுத்துச் சொன்னால் நம்மைத் தான் கேவலமாகப் பார்க்கின்றார்கள் ....

பத்து மில்லியன் டாலரில் கனடாவில் ஈழத்தமிழர்கள் தீப்பெட்டிக் கணக்கா ஒரு கோயில் கட்டியுள்ளனர் ( அதிலும் ஊழல் நடந்தது தனிக்கதை ) ........... ஆனால் தமிழ்ப் புலிகள் ஆயுதங்கள் சேர்க்க நிதி வழங்கிய அளவுக்கு, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ பலர் முன்வரவில்லை என்பது வேதனையான உண்மை ......... !!!

என்ன செய்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம் .....

விந்தைமனிதன் சொன்னது…

//ஈழத்தமிழர்கள் எப்போது அங்கே போனார்கள் என்பது எல்லாம் தேவையற்ற ஒன்று ........ ஒரு இனம் நீண்டகாலமாக ஒரு நிலப்பரப்பில் வாழ்கின்றார்கள்..//

இங்கேதான் துவங்குகிறது வரலாற்றுத் திரிபுவாதம். ஈழத்தமிழர்கள் போனவர்கள் அல்ல. அந்த மண்ணின் மைந்தர்கள். வரலாற்றில் மிகவும் முன்னே போய்ப்பார்த்தால் இலங்கையில் பூர்வகுடிகள் இனம் இன்று இல்லை. எனவே அவர்களுக்கு அடுத்ததான தமிழினமே அம்மண்ணுக்குச் சொந்தமான இனம். சிங்களர் குடியேற்றம் வெகுபின்னே நிகழ்கிறது.

Rathi சொன்னது…

நன்றி ஹேமா.

விந்தைமனிதன்,

அற்புதமான விளக்கம். இன்று, இலங்கையின் பாடப்புத்தகங்களிலும் இந்த வரலாற்று திரிபுவாதம் தான் நிகழ்ந்தேறுகிறது.

இக்பால் செல்வன் சொன்னது…

நிச்சயம் - உண்மை தான் சிங்களவர் முதலில் இலங்கைக்கு வந்தவரா தமிழர் வந்தவரா என்ற சிக்கலில் தான் இனப் பிரச்சனை ஆரம்பம் ஆகின்றன. சிங்களவரின் மூதாதையரும், தமிழரின் மூதாதையரும் சமகாலத்திலயே இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் என்பது தான் உண்மை. சொல்லப் போனால் அல்பேனியரிகள் எப்போது அல்பேனியாவுக்கு குடியேறினார்களோ அதன்முன்னரே, தமிழர்கள் இலங்கைக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள்.

ஆகவே ஈழத்தமிழர் எப்போது அங்கே போனார்கள் என்பது அரசியல் ரீதியாக நிச்சயம் தேவையற்ற ஒன்றே என்பது எனதுக் கருத்து.

சுந்தரவடிவேல் சொன்னது…

விரிவான இடுகைக்கு நன்றி.
போர்க்குற்றம் என்ற பதத்தை ஒழித்து இனவழிப்பு என்ற பதத்தையே அனைவரும் பயன்படுத்த வேண்டும். ஐ.நாவினால் வலிந்து புகுத்தப்பட்ட இந்தப் போர்க்குற்றம் என்ற பதம், சில ஆண்டுகளில் இலங்கையைக் காப்பாற்றிவிடவே வழிவகுக்கும். அதுவே சர்வதேசத்தின் நோக்கமாகக்கூட இருக்கலாம். மகிந்தவை, அவரது அரசாங்கத்தை "War Criminals" என்று சொல்வதை விட "Genocide perpetrators" என்றே அழைக்க வேண்டும். விக்கிப்பீடியாவின் இனவழிப்புப் பக்கத்தில் தமிழின அழிப்பைப் பற்றிய செய்திகளைச் சேர்க்கவேண்டும் (http://en.wikipedia.org/wiki/Genocide). உள்நாட்டுச் சட்டங்கள் என்றுமே தமிழருக்கான உரிமையைப் பெற்றுத்தராது என்றும், சர்வதேச சட்டங்களின் மூலம் மட்டுமே விடுதலை என்பதைச் சுருக்கென உணர்த்தியிருக்கிறீர்கள். இருந்தும் இக்பால் செல்வன் என்பவர் //தமிழ் தேசியம் என்ற ஒன்றை அமைக்கும் சந்தர்ப்பங்கள் பலவற்றைத் தமிழர்கள் கைதவறிவிட்டார்கள் என்பதே உண்மை . 1948, 1977, 1987, 2004 ஆகிய நான்கு முறையும் கிடைத்த வாய்ப்புகள் பறிபோயின .// என்று குறிப்பிடுவது அவரது புரிதலில் இருக்கும் குறைபாடே. நீங்கள் குறிப்பிட்டதைப் போல ஆறாவது சட்டத் திருத்தத்தை அரசு நீக்கியிருந்திருந்தால் ஒருவேளை இளைஞர்கள் ஆயுதங்களைக் கைவிட்டிருக்க வாய்ப்புண்டு. புலிகளின் மீதான விருப்பு வெறுப்புக்களை கடந்து ஒன்றிணைய வேண்டிய தருணமிது! நட்சத்திர இடுகைகளுக்கு நன்றி, அனைத்தையும் வாசிக்கிறேன்.

Rathi சொன்னது…

சுந்தரவடிவேல் அவர்களுக்கு, உங்கள் வருகைக்கும், பொருத்தமான கருத்துக்கும் நன்றி.

இலங்கை அரசியல் யாப்பில் எங்களின் போராட்டங்களுக்குரிய வழிமுறைகள் அடைக்கப்பட்டுவிட்டன. இனி சர்வதேச சட்டங்களை எங்களுக்கு பொருந்தும் வகையில் முயற்சி செய்வதை தவிர வேறு வழியில்லை.