மே 21, 2011

பிரதிநிதித்துவ ஜனநாயகம், சீமான்! முத்துக்குமார்!! மற்றும் ஈழத்தமிழர்கள்!!!

பிரதிநிதித்துவ ஜனநாயகம் (Representative Democracy) தற்காலங்களில் பிரதிநிதித்துவம் அதிகமாயும், ஜனநாயகத்தின், அதன் பண்புகளின் அளவுகள் குறைந்தும் காணப்படுகிறது என்று அருந்ததி ராய் எழுதியிருந்தார். வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் அதன் வெளிப்பாட்டை நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம் என் கருத்து. இதன் ஆரம்பம் எங்கே என்று தோண்டினால் ஜனநாயகமும் தாராளமயமாக்கல் சந்தைப் பொருளாதாரமும் கைகோர்த்துக் கொண்டதன் தொடக்கப் புள்ளி என்று தான் சொல்கிறார்கள். நடந்து முடிந்த தமிழக நாடாளுமன்றத் தேர்தல் களம் அதன் முடிவுகள் பற்றி சிந்தித்த போது இது மனதில் தோன்றியது. 

ஜனநாயகம் என்பதன் பண்புகளும் விழுமியங்களும் பல இடர்களை தாங்கித்தான் இன்றைய காலகட்டத்தில் நின்றுபிடிக்கிறது. ஜனநாயகம் என்பது கூட பொருளாதார கொள்கைகளில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட  ஓர் தெரிவுதான். எப்படியோ ஜனநாயகத்தின் மீது இன்னும் நம்பிக்கை கொண்ட நாங்கள் தொடர்ந்து எங்களின் கோரிக்கைகளும், தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கையில் நாங்களும் வாக்களிக்கிறோம். உள்ளூர் பஞ்சாயத்து முதல் பலகோடி ஊழல் வரை நீதிபெறவேண்டிய வரியிறுப்பாளர்களுக்கு பதில் சொல்லவேண்டிய நீதிபரிபாலன அலகுகளும் தவறிப்போகின்றன. முடிவு, தீர்ப்பு வழங்க மக்கள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அட, தமிழ்நாட்டு தேர்தல் கள முடிவுகளை சொல்கிறேன்!

இந்த முடிவுகள் ஒன்றும் தானாக, இயல்பாக அமைந்துவிடவில்லை. முத்துக்குமாரின் தியாகம், சீமானின், அவரோடு இணைந்து அவரைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் இளையதலைமுறைத் தமிழர்களும் உழைத்ததன் விளைவு தான் இது. மன்னர் ஆட்சிக்காலத்தில் சொல்வார்களாம், "மன்னா எதிரிகள் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்" என்று. ஆனால், இன்றோ தாராளமயமாக்களில் பல்தேசிய நிறுவனங்களின் ஆக்கிரமப்பில் நிலைமைகள் தலைகீழ்! 


இனி அடுத்த ஐந்து வருடங்களுக்கு வாக்களித்தவர்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் கட்சிகளின் குறியீடுகள் ஆகிப்போன  எங்கள் பிரதிநிதிகள் என்னென்ன தப்புத் தண்டா செய்கிறார்கள் என்று கண்ணில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு பத்திரிகைகளை வாசிக்கவேண்டும், செய்திகளை கேட்கவேண்டும். காலைக்கடன் போல் இது ஒரு பெரிய வேலை தினமும். பின்னே ஆள் மாற்றி, ஆள் மாற்றி ஆட்சியில் அமர்ந்து சுழற்சி முறையில் ஊழல் செய்யும் ஜனநாயக பிரதிநிதிகளை கண்டும் காணாமல் விடவும் மனம் வராது!

என்ன தத்துப்பித்து தத்துவமோ! அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஜெயலலிதா கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிவிட்டார். தமிழக முதல்வர் ஆகிவிட்டார். இவரின் வெற்றிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் கடுமையான அயராத உழைப்பே காரணம் என்று பரவலாக எல்லோரும் கருத்து வேறுபாடின்றி சொல்கிறார்கள். என்னைக்கேட்டால் சீமான் மட்டுமல்ல தமிழகத்தில் இந்த தேர்தல் மூலம் ஓர் அமைதியான மக்கள் எழுச்சி வரக்காரணம் தியாகி முத்துக்குமாரும் தான். முத்துக்குமார் தீக்குளித்த போது தி.மு.க. வும் காங்கிரசும் எங்கே தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஈழத்திற்காய் இன்னும் கொதித்தெழப் போகிறார்களோ என்று செய்த தகிடு தத்தங்கள் கொஞ்சமல்ல. உண்மையிலேயே தமிழர்கள் முத்துக்குமாருக்கு செய்யவேண்டிய மரியாதையை செய்துவிட்டார்கள். 


அரசியல் ஆய்வுகளில் சொல்கிறார்கள் தி.மு.க. வை வீழ வைத்தது காங்கிரஸ் என்று. அந்தக்காரணம் தவிர, ஈழத்திற்கும், ஈழத்தமிழர்களுக்கும் செய்த துரோகமே அவர்கள் ஆட்சி கவிழக் காரணம்; ஆனாலும், ஊடகங்கள் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் தான் காரணம் என்று சொல்கிறார்களாம். இதில் தொக்கி நிற்கும் விடயம் அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஜெயலலிதா தேர்தல் களத்தில் முன்வைத்த வாக்குறுதிகளில் ஒன்று ஈழத்தமிழர்கள் பற்றியது. ராஜபக்க்ஷேவை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என்று சொன்னதாக எனக்கு ஞாபகம். தேர்தல் வெற்றிக்குப்பின் ஈழப்பிரச்சனையில் தன்னால் ஓர் வரையறைக்கு உட்பட்டே செயற்பட முடியும். மத்திய அரசு தான் ஈழப்பிரச்சனையை கவனிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கே உரிய Selective Amnesia வின் அறிகுறிகளை (symptoms) காட்டினார்.

இவர் பாட்டுக்கு இந்திய மத்திய அரசு தான் ஈழப்பிரச்சனையை கவனிக்க வேண்டும் என்றவுடன் எனக்கு இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்தியா ஈழப்பிரச்சனையை இழவுப்பிரச்சனை ஆக்கியது போதாதா!!!! தேர்தலில் வென்றால் வந்தமா, கையசைத்தமா, உதடுகள் அசையாமல், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் எதையாவது பேசினமா, போனமா என்றில்லாமல் இவருக்கு ஏன் இந்த வேலை என்று நான் பாட்டுக்கு கதி கலங்கிப் போய் யோசித்தேன்.

எப்படியோ, ஜெயலலிதாவின் ஈழம் சம்பந்தமான வாக்குறுதிகளை மறக்கடிக்கவே தமிழர்கள் தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் காரணமாகத்தான் மக்கள் அ.தி.மு.க. வைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று ஊடகங்கள் சொல்வதாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள். ஆனாலும், ஈழம், எங்கள் உறவுகள் என்றவுடன் நாங்கள் சோனியா காந்தி, ராஜபக்க்ஷேக்கள் வகையறாக்களிடம் கூட கருணைமனு கொடுக்கத் தயக்கம் காட்டாதவர்கள். தமிழக முதல்வரை விடுவோமா! ஈழத்தமிழர்கள் விடயத்தில் குறிப்பாக போர்க்குற்ற விசாரணைகளுக்காக என்றாலும் ஓர் துரும்பையேனும் டெல்கியிடம் தூக்கிப் போடுவார் என்று ஓர் பகற்கனவு உண்டு. அது பலிக்கிறதா பார்க்கலாம். 

இது தான் என் நட்சத்திர வாரத்தின் கடைசிப் பதிவு. என்னை இந்த ஒரு வாரம் முழுக்க ஊக்கம் கொடுத்து, சகித்துக்கொண்ட உங்கள் எல்லோருக்கும் என் வந்தனங்களும், நன்றிகளும். 


13 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

வீட்டுப் பாட அக்கறை போல எப்படியோ பிரயாசைப்பட்டு வெற்றிகரமாக கொடுத்த பொறுப்பை நிறைவேற்றியதற்கு என் வாழ்த்துகள்.

சீமான் பற்றி பலரும் பேசப் பயப்படுகிறார்கள். நிச்சயம் என் பார்வையில் முதல் தடவையாக ஓட்டுப் போட வந்த இளையர்களில் நிச்சயம் சீமான் உருவாக்கிய தாக்கம் உண்டு. ஜெயலலிதா ஜெயித்து அதுவும் இந்தஅளவிற்கு வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் இவரின் பங்கும் சிறிதளவு உண்டு என்பது தான் உணமை.

ஹேமா சொன்னது…

ஈழத்தமிழர்கள் சார்பில் உங்களுக்குக் காற்றலையில் கை கொடுத்து நன்றி சொல்லிக்கொள்கிறேன் ரதி.இவ்வளவு தெளிவாக எல்லோருக்கும் நம் பிரச்சனைகளை அதைத் தீர்ப்பதற்கான ஆலோசனை எல்லாமே உங்கள் எழுத்தில் சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி வாழ்த்தும்கூட !

பெயரில்லா சொன்னது…

இந்த தமிழகத் தேர்தலில் சீமான், முத்துக்குமார் போன்றோரின் தாக்கங்கள் இருக்கின்றது உண்மை. ஆனால் அது தான் காரணம் என நாடிப் பிடிப்பது மிகவும் தவறான ஒன்று. காரணம் சென்னை நகரத்தில் அதிமுக ஈட்டிய வெற்றி சீமானாலோ, முத்துகுமாரினாலோ ஏற்பட்டதாக அனுமானிக்க முடியாது. இதே போல தான் ஒவ்வொரு பிரதேசத்திலும் வெவ்வேறு காரணங்களாலும், சில ஒரேக் காரணங்களாலும் திமுக தோற்றது .......

திமுகவை வீழ வைத்ததற்கு காரணம் காங்கிரஸ் மட்டுமல்ல திமுகவும் தான். அந்த பெரும் புகழ் இராசாவையே சாரும் எனலாம் .......

ஈழப் பிரச்சனையால் மாத்திரமே அதிமுக அரசுக் கட்டில் ஏறியது என நினைத்தால் அது மிகவும் தவறான அரசியல் கணிப்பாகும் சகோதரி. அதுவும் ஒரு காரணம், ஆனால் முதன்மையான காரணம் அதுவல்ல...

ஊழல், மின்வெட்டு, குடும்ப அரசியல் இவை தான் முதன்மையான காரணம் ... அது மட்டுமல்ல அதிமுக - தேமுதிக வாக்கு வங்கி இணைந்ததும் ஒரு காரணம் ... அத்தோடு ஈழத் தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை ஆகும்.

ஈழத்தமிழர் பிரச்சனை தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்குமாயின் சென்ற நடுவண அரசு தேர்தலிலேயே திமுக மண்ணைக் கவ்வி இருக்குமே !!!

Rathi சொன்னது…

ஜோதிஜி, எப்படி இவ்வளவு சரியாய் சொல்கிறீர்கள்! ஈழம் பற்றி சொதப்பியவர்கள் என்கிற பட்டியலில் என் பெயர் கடைசியில் வருவதைக் கூட விரும்பவில்லை நான். நீங்க சொன்னது போல் வீட்டுப்பாடத்தை என் வரையில் திருப்தியாக செய்திருக்கிறேன்.

Rathi சொன்னது…

ஹேமா, நன்றி என்று ஒற்றைவார்த்தையில் சொன்னால் அது தீருமா தெரியவில்லை. இருந்தாலும் நன்றி. ஓர் ஈழத்தமிழராய் இருந்து இந்தவாரம் முழுக்க என்னோடு வந்ததிற்கு என் நன்றிகள்.

Rathi சொன்னது…

இக்பால் செல்வன், தமிழக தேர்தல் கள வெற்றிக்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். முத்துக்குமார் சீமானோடு இணையாமல் அவரின் முடிவு உண்மையிலேயே எங்களை கலங்க வைத்த ஒன்று.

தங்கள் முடிவைக்கூட யோசிக்காமல் ஈழத்திற்காய் சில வெட்டிப்பேச்சு ஈழத்தமிழர்கள் கூட செய்யத்துணியாத காரியங்களை இருவரில் ஒருவர் செய்திருக்கிறார். ஒருவர் இன்னும் அந்த முயற்சியில் முனைப்போடு இருக்கிறார். உங்கள் பார்வையில் நாங்க உணர்ச்சிவசப்படும் கூட்டமாக முத்திரை கூட குத்தப்படலாம்.

உங்கள் விமர்சனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது எங்கள் ஈழத்தின் வலி. அந்த வகையில் முத்துக்குமாரும், சீமானும் எங்களுக்கு கடவுளாகத் தான் தெரிவார்கள். தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரண காரிய தொடர்களாய் அல்ல.

raja சொன்னது…

திரு ரதி தமிழகத்தில் தமிழ் தேசிய இயக்கங்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்காதவரை ஈழ பிரச்சினை பற்றிய மழுங்கடிப்பு தொடர்ந்து நடைபெற்றுதான் கொண்டிருக்கும். முக்கியமாக நாம் தமிழர்,நெடுமாறனின் அரசியல் இயக்கம், மதிமுக, பா.ம.க. வி.சி போன்றவைகள் ஒரணியாக திரளாதவரை ஈழப்பிரச்சினையை கருணாவும் ஜெயும் மழுங்கடிக்கவே செய்வார்கள் ஏனெனில் இந்த இருவரும் இந்திய தேசியத்தின் அல்லக்கைகள்.இருவரில் ஒருவர் இந்த பூவுலகை விட்டு கம்பிநீட்டாத வரை இந்த சகுனிகளின் பிடியில் தான் தனி ஈழம் அல்லாடிக்கொண்டிருக்கும்.

ராஜ நடராஜன் சொன்னது…

ராஜாவுக்கு ராஜாவின் ஓட்டு:)

தமிழ் தேசிய இயக்கங்கள் இப்பொழுதிருந்தே அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.இவர்கள் பிரிந்திருப்பதே எதிரிக் கட்சிகளின் வலிமை.

நட்சத்திர வாரம் கடந்தும் தொடர்ந்து கருத்துப் பரிமாற்ற்ம் செய்வோம்.

தவறு சொன்னது…

என்னமோ நடக்குது..தமிழகத்தில் ரதி.

நட்சத்திர வாழ்த்துகள்...ரதி.

Rathi சொன்னது…

ராஜா, எனது எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது உங்கள் கருத்து. என்ன இந்திய, தமிழக அரசியல் என்பதால் எனக்கு இவ்வளவு தெளிவாய் சொல்லத்தெரியவில்லை, அவ்வளவு தான். உங்க தளம் இருக்கான்னு தேடிப்பார்த்தால் பெயர் மட்டுமே காட்டுகிறது. இருந்தாலும், ராஜ நட சொல்வது போல் தொடருங்கள். நானும் நாலு விஷயத்தை இது பற்றி தெரிந்துகொள்கிறேன்.

தமிழ்நாட்டு தமிழ்த்தேசியம் என்கிற கருத்தியலை எத்தனை தமிழ்நாட்டு தமிழர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Rathi சொன்னது…

தவறு, நன்றி, என்னதான் நடக்கிறது பார்க்கலாம்.

raja சொன்னது…

திரு ரதி விரிவாக தங்களுக்கு பதில் பின்னூட்டம் இட்டேன். என்ன காரணம் தெரியவில்லை கூகுள் சொதப்பிவிட்டது. முடிந்தால் எனது மின்னஞ்சல் rajaframes@gmail.com எனும் முகவரிக்கு ஒரு அடையாள மின்னஞ்சல் அனுப்பவும். தங்களுக்கு எழுதுகிறேன். நன்றி. எழுதுவதை நிறுத்தாமல் தொடருங்கள்.

பெயரில்லா சொன்னது…

சீமான், நெடுமாறன், கொளத்தூர் மணி, வைக்கொ, ராமதாஸ், திருமாவளவன் என அனைவரும் ஒன்றாக நின்றுத் தேர்தலைச் சந்திக்கட்டும் .. ஒருவேளை மக்கள் கிருபையால் அந்த அணி ஆட்சி அமைக்கட்டும்..

அப்புறம் அவர்கள் என்ன செய்வார்கள் ?

அவர்களின் பணி என்ன.. ஒரு இராணுவம் உருவாக்கி ஈழ நாடு அமைப்பதா> இல்லை தமிழ்நாட்டை தனிநாடாக பிரகடனப்படுத்துவதா ? சுயாட்சி வாங்குவதா?

என்ன செய்வார்கள் ? அல்லது அவர்கள் செய்ய ஆசைப் படுகின்றீர்கள் .. சொன்னால் புரிந்துக் கொள்வேன் ...

ஒரு ultimatum-உம் அவர்களிடம் இல்லை. தமிழ் தேசியம் என்ற வார்த்தையைத் தவிர ....