மே 31, 2011

'கிறுக்கு'னது விந்தைமனிதன் - வாழ்க்கை கோலங்கள்

வாழ்க்கையின் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து, அதுக்கேற்றவராறு இசைவாக்கம் அடைந்து எங்களுக்கு எந்தப் பிரச்சனையிலிருந்தும் ஓர் கவனமாற்றம் வேண்டும் என்பதை பெரும்பாலும் சராசரி மனிதர்கள் மறந்துவிடுவோம். யாராயினும் கொஞ்சம் கவலையை மறந்து சிரிக்க எதையாவது செய்து தான் ஆகவேண்டும், வாழ்க்கையை, மனதை சமப்படுத்த. தவிரவும், நான் எப்பவுமே ரொம்ப சீரியஸ் ஆக பதிவெழுதி சீரியஸ் பதிவர் ஆகிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் ஓர் மாற்றம் வேண்டி இப்பதிவு. 

சமூக, அரசியல், வாழ்வியல் சார்ந்த சமகால நிகழ்வுகளை, மனித இயல்புகளை நகைச்சுவை  உணர்வோடு எல்லோராலும் சொல்ல முடியாது. எனக்கு அதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது. அதனால் விந்தைமனிதனிடம் கடன்வாங்கி இருக்கிறேன். 

விந்தைமனிதன் கூகிள் பஸ்ஸில் பகிர்ந்துகொண்டதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 

1) சாரு நிவேதிதா மாதிரி...

தமிழ்ச்சூழலின் இன்னொரு கொடுமை "காக்காவும் கறுப்பு, யானையும் கறுப்பு...ஆகவே காக்காவும் யானையும் ஒன்றுதான்" என்கிற ரீதியில் பேசுவது.

 முந்தாநாள் இரவு கனுஷ்யகுத்திரனோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு இனிமையான மனநிலையில வீடுவந்து சேர்ந்து கணிணியைத் திறந்தால் காங்கோ பானந்திடமிருந்து ஒரு மெயில். பயமோகனின் "சிந்து கானமரபும் நவீனத்துவர்களும்" கட்டுரையை வாசித்தீர்களா என்று.

நான் தெரியாமல்தான் கேட்கிறேன் என்றாவது கஜினிகோந்திடம் போய் "ஓமக்குச்சி கொரசிம்மனின் ஸ்டைலைக் கவனித்திருக்கிறீர்களா?" என்று கேட்பீர்களா? முந்நூறு ஆண்டுகளுக்குமுன்பு ஸ்பெயினில் வாழ்ந்திருந்த "ஷாக்கு தெரியுதா" என்கிற கஸ்பஞோல் எழுத்தாளன் எழுதிய "மொஸைக்குகளின் சரிதம்" நாவலைப் பற்றி என்னிடம் கேட்டால் நான் மூச்சு விடாமல் முப்பதுமணிநேரம் பேசுவேன். "அது எப்படி மூச்சு விடாமல் முப்பது மணிநேரம்?" என்று குதர்க்கமாகக் கேட்கக்கூடாது. தொமிழ் இலக்கியத்தின் ஒரு நீண்ட மரபுத்தொடர்ச்சியில் திளைத்திருக்கும் ஒரு மகா கலைஞனை அது அவமானப் படுத்துவதாகும். இருந்தாலும் சொல்கிறேன். சித்தர் மரபில் இது பற்றிப் பாடல் இருக்கிறது. பெருமூலரின் கருமந்திரம் புத்தகத்தில் அது பற்றிய ஒரு பாடல் இருக்கிறது. நமது ஆட்களுக்கு இதைப்பற்றியெல்லாம் எங்கே தெரிகிறது! எனவேதான் ஆன்மீக குருக்களின் தேவை அதிகமாக இருக்கிறது. சுந்தரதியானம் வகுப்பில் சுவாமி குத்யானந்தர் இதைப்பற்றி ஏழரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்.

இந்த சமூகத்திற்கு சுந்தரதியானத்தை எடுத்துச்செல்ல வேண்டியதன் அவசியம் பற்றி கவலைப்பட்டார். அதனைப்பற்றி நான் எனது அடுத்த 'கட்டு உரையான' "கடவுளைக் கண்டேன் பெருமானந்தம்" என்ற பத்தியில் எழுதவிருக்கிறேன். ஆனால் பாருங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எழுதவேண்டிய ஒரு நிலையில் எனது வீட்டுச் செல்லங்களான கப்புவுக்கும், நாராவுக்கும் ஆய் போகக்கூட வயிற்றில் ஒன்றுமில்லாத அளவுக்கு மூன்றுமணிநேரமாகப் பட்டினி......

2) கனிமொழிக்கு கலைஞர் பாடுவதாக...

பொன்னால தொட்டில் செஞ்சி
ஒன்ன பூவாட்டம் வளத்து வந்தேன்
மண்ணுல நீ நடந்துவந்தா எங்
கண்ணு ரெண்டும் நோகுமின்னு
மரிக்கொழுந்து பாத செஞ்சேன்
ஊருலகம் பொறுக்கலையே!

செல்லமவ மொகஞ்சுளிச்சா
சேத்துவெச்சி அழுதிருப்பேன்
சின்னதாக சிரிச்சிருந்தா
சீமையெல்லாம் பூத்திடுமே
சித்திரமா வளத்துருந்தேன்
செயிலுக்கு நீ போறத்துக்கா?

லச்சமுன்னா, கோடியின்னா
சொச்சமென்ன வந்திடும்னு
சோசியனுஞ் சொல்லலியே
சோசியனுஞ் சொல்லலியே
சோகத்துல நானழுவ
சொல்லியழ ஆருமில்ல

கொத்துக்கொத்தா சனம்சாவ
கோட்டையில சிரிச்சிருந்தேன்
கோமகளை தொழுதிருந்தேன்
கோமகளுங் கைவிரிக்க
கோடிசனம் சிரிக்குதையா
குலமகளின் நெல பாத்து!

3) ஒரு வூட்ல சாவு விழுந்திடுச்சாம். துக்கத்துக்கு பொண்டுவல்லாம் போயிருக்காங்க. செத்தவனோட பொண்டாட்டிய கட்டிப்புடிச்சி ஒப்பாரி வெச்சி அழுவுறாளுங்க. செத்தவன் வூட்ல தோட்டத்துல நெறைய காய்கறி, பூச்செடில்லாம் இருக்கு. பாவக்காப் பந்தல் கண்ணைப் பறிக்குது. சொரைக்கா, கோவைக்கா அப்டீன்னு நெறைய காச்சி தொங்குது. கட்டிப்புடிச்சி அழுதுட்டு இருக்குற கூட்டத்துல இருந்த ஒருத்திக்கு பாவக்காமேல கண்ணு

பக்கத்துல இருந்த சேக்காளிகிட்ட ஒப்பாரில கலந்து சேதி சொல்றா.

"ஏட்டி! பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
தொங்குதடி கோவைக்கா"

அடுத்தவ சொல்றா. கம்னு இருடி. திரும்பாவுல அறுத்துட்டு போயிடலாம் அப்டீன்னு

"ஏட்டி! போவையில பாத்துக்குவோம்
போவையில பாத்துக்குவோம்"னு.

செத்தவன் பொண்டாட்டிக்கு பகீர்ங்குது. வெளிப்படையாவும் சொல்லமுடியாது. அவளும் ஒப்பாரி பாடுறமாரியே பாடுறா

"அய்யோ நான் வெதைக்கல்லோ வெச்சிருக்கேன்
வெதைக்கல்லோ வெச்சிருக்கேன்" னு.


4 கருத்துகள்:

தவறு சொன்னது…

நான் தவறு...வறு என்று எப்போது மாறினேன் ரதி...மாற்றமாய் எழுத வேண்டுகோள் விடுக்க எண்ணினேன் உண்மையிலே மாற்றமாய் தான் எழுதியுள்ளீர்கள்...

Rathi சொன்னது…

தவறு, உண்மையிலேயே இதற்கு பயந்து கொண்டுதானிருந்தேன். இப்படித்தான் முன்னர் சி.பி. செந்தில்குமாரின் பெயரும் எழுதிவிட்டு copy & paste செய்யும் போது முதல் எழுத்து விடுபட்டுப்போய்விட்டது. அதற்காக அந்த கருத்தை நீக்கினால் அது அரசியல் ஆகிவிடுமோ என்று அப்படியே விட்டுவிட்டேன்.

தவறுக்கு வருந்துகிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.

எனக்கே ஓர் மாற்றம் வேண்டும் போல் தோன்றியது. அதான் இது.

பெயரில்லா சொன்னது…

Gosh. finally I could post a comment in your blog. ஒரு மாதிரி கொமன்ட் போட முடியுது. உங்கள கடைசியா வந்த மூன்டு நாலு பதிவுகளுக்கும் கருத்துரை லிங்க் வேலை செய்யவே இல்லை. தட்டி தட்டி களைத்துப் போனேன். சிலரது பதிவுகளிலும் அதே பிரச்சினை. இன்டைக்கு இன்ட்லியில் வந்து கொமன்ட் போடுவோம் என்டு வந்த போது நீண்ட கொமன்ட் என்டு இன்ட்லி போட விடமாட்டன் என்டுட்டு. எல்லாருமே எனக்கு எதிராக சதி செய்யற மாதிரி ஒரு கட்டத்தில் அழுகை + எரிச்சல் வந்துட்டுது. இப்ப கடைசியாக கொமன்ட் போகுதா என்று தட்டிப் பார்க்க வேலை செய்யுது. சுடச்சுட எழுதின கொமன்டை எல்லாம் போட முடியாமல் போனது வருத்தமே. 6 ம் திகதி சோதனை தொடங்குது. சோதனை என்டு பெயர் வைச்ச ஆளுக்கு கோவில் கட்ட வேணும். எல்லாவற்றையும் ஆறுதலாக வந்து வாசிக்கிறேன்.

Rathi சொன்னது…

அனாமிகா, எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் தான் தெரியும் கருத்துரைப் பகுதியில் ஏதோ பிரச்சனை என்று. தடங்கலுக்கு வருந்துகிறேன். :)

சோதனை எல்லாம் வெற்றிகரமாய் முடித்துக்கொண்டு வாங்கோ. சாவகாசமாய் கதைப்பம்.

Good Luck with your சோதனை!!