மே 25, 2011

மனித உரிமைகள் சபையும் அணிசேரா நாடுகளும்! - ஈழம்


இழப்புகள், இழப்புகள், இழப்புகள் இதை தவிர ஈழத்தமிழர்களாகிய எங்களிடம் சொல்லவும் வார்த்தைகள் இல்லை. இனிமேல் யாருக்கும் அது பற்றி சொல்லவும் வெறுப்பாய், எரிச்சலாய் இருக்கிறது. ஈழத்தின் வாழ்வும், தாழ்வும், எதிர்காலமும் சர்வதேச அரசியலில் குரல்வளை நெரிக்கப்பட்டு மூச்சுத் திணறுகிறது. 

உலக அதிகாராங்களின் உச்ச பீடமாய் ஐ. நா. அதன் அதிகாரங்கள் நிறைந்த ஆனால், புதிய உலக ஒழுங்கின் எழுதப்படாத விதிகளுக்கு சலாம் போடும் செயற்திறனற்ற செயலர் பதவியே உலக கெளரவம். அங்கே உண்மைகளுக்கு, நியாயங்களுக்கு இடமில்லை என்கிற அரசியல் சதுரங்கம். அதை விளையாட மூன்று களங்கள் பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, மனித உரிமைகள் சபை. அப்பப்போ விமர்சிக்க இன்னர் சிட்டி பிரஸ். மற்றப்படி தேவைக்கேற்ப விமர்சிக்கவும், பாராட்டவும் சர்வதேச ஊடகங்கள், வேடிக்கை பார்க்க பாதிக்கப்படாதவர்களும் அறிவுஜீவிகளும், தீண்டப்படாத ஜாதிஜாய் அங்கே ஈழத்தமிழனுக்குரிய நீதி! இது தான் புதிய உலக ஒழுங்கின் சர்வதேச கட்டமைப்பு. 

இவ்வளவு விவரணைகள் எதுக்கு என்று யோசிக்கலாம் படிப்பவர்கள். வருகிற May 30 இல் ஐ. நா. மனித உரிமைகள் சபை கூட்டம் மீண்டும் கூடுகிறது. ஏற்கனவே கடந்த 2009 மே மாதம் நடந்த கூட்டத்தொடரில் இலங்கையின் இனவழிப்பை பயங்கரவாத ஒழிப்பு என்று பாராட்டு விழா நடத்தி ஓர் தீர்மானம் (A/HRC/8-11/L.1/Rev.2) நிறைவேற்றியாகிவிட்டது. இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இலங்கை தன்னைத்தானே தானே பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் என்று பாராட்டி நிறைவேற்றப்பட்டது தான் அந்த மேற்சொன்ன தீர்மானம். ஆரம்பத்தில் ஐ. நா. மனித உரிமைகள் சபையின் சிறப்புக்கூட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தால் கூட்டப்பட்ட போது இந்தியாவின் பிரதிநிதி அந்த கூட்டம் தேவையற்றது. பயங்கரவாத இயக்கத்தை இலங்கை ஒழித்தது என்று பாராட்ட வேண்டும், தண்டனை கொடுக்க கூடாது என்று சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளின் துணையுடன் அதை தோற்கடித்தார்கள்.

இந்த வருகிற கூட்டத்தொடரில் ஐ.நா. வின் மூவர் குழு அறிக்கையில் கூறப்பட்ட மனித உரிமைகள் விடயத்தை, குறிப்பாக மேலே சொன்ன அந்த தீர்மானத்தை (A/HRC/8-11/L.1/Rev.2) மறுபரிசீலனை செய்யச்சொல்லி அவர்களின் ஆலோசனைக்கேற்ப பரிசீலிப்பார்களா! அவ்வாறெனின், ஈழத்தின் இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள், மனிதத்திற்கெதிரான குற்றங்கள் சம்பந்தமான விசாரணைகள் மூவர் குழு அறிக்கைகேற்ப சர்வதேசா, சுயாதீன விசாரனைக்குழுவால் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை ஐ. நாவின் செயலருக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுமா? ஐ. நா. செயலரும் அறிக்கையில் சொல்லப்பட்ட படி எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ள மூன்று அமைப்பின் ஏதாவதொரு ஒரு அமைப்பு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தானே சொன்னார். 

இங்கே தான் ஆரம்பமாகும் இரண்டாய்ப் பிரிந்து கிடக்கும் உலக ஒழுங்கின் அரசியல் சாணக்கியமும், சதுரங்கமும். இலங்கை ஐ. நா. மூவர் குழு அறிக்கை கைவரப்பெற்றதும் உடனேயே 'அணிசேரா நாடுகளின்' ஆதரவைத்தான் முதலில் நாடி ஓடியது. இந்த அணிசேரா நாடுகள் பற்றி மிக சுருக்கமாக பார்க்கலாம். 

அணிசேரா நாடுகள் அமைப்பு (Non-Alligned Movement - NAM) என்பது பனிப்போர் காலத்தில் 1961 ம் ஆண்டு ஆரம்பிக்கட்டது. இதில் இலங்கை, இந்தியாவும் அடக்கம். இதன் நோக்கம் தங்களை அமெரிக்க, பிரித்தானிய மறைமுக, நேரடி காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்டு இனிமேல் அப்படி ஓர் நிலை தங்கள் நாட்டின் இறையாண்மைக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ நேரக்கூடாது என்றும்; ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும்; மற்றும் மாறிவரும் அரசியல், பொருளாதார உலக ஒழுங்கிற்கேற்ப தங்கள் நாட்டை கட்டியமைக்க வேண்டும் என்று மூன்றாம் உலக நாடுகளால் உருவாக்கப்பட்டது. இது ஐ. நா. வின் ஓர் அங்கமாக அதன் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு ஏற்றாற் போல் தான் தங்கள் நடைமுறைகளை வகுத்திருக்கிறார்கள். 

இந்த அணிசேரா நாடுகள் தான் ஐ. நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் அதிக அங்கத்துவம் பெற்றிருக்கிறார்கள். இந்த அமைப்பில் 118 நாடுகள் உறுப்பினர்களாகவும், 47 நாடுகள் ஐ. நாவின் மனித உரிமைகள் சபையில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பிடிக்கிறார்கள். இந்த வருடம் இந்தியாவும் இந்த சபையில் உண்டு. 

இனி, ஈழம் தொடர்பான மூவர் குழு அறிக்கையின் ஆலோசனைகளை ஏற்று போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் ஒன்று மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட இந்த அணிசேரா நாடுகள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமா என்பதே கேள்வி. 

அணிசேரா நாடுகளுடன் கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளும் அமெரிக்க, பிரித்தானிய எக்கதிபத்தியத்திற்கு எதிராக, இலங்கைக்கு ஆதரவாக மறுபடியும் மனித உரிமைகள் சபையில் செயற்படுவார்களா என்பது தான் பலரின் கேள்வி. முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் இலங்கைக்கே உண்டு. காரணம், அமெரிக்கா என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. ஆக, இந்த போர்க்குற்றங்களும் விசாரணைகளும் மீண்டும் ஓர் ஏகாதிபத்திய, அணிசேரா நாடுகளின் அரசியல் சதுரங்கத்தில் சிக்கித்தவிக்கத்தான் போகும் போலுள்ளது.

இந்த மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் அணிசேரா நாடுகள் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பரிந்துரைக்கும் பட்டும் படாத, அரைகுறையான தீர்மானத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்களா! இல்லையென்றால் தங்கள், தங்கள் நாடுகள் காலனியாதிக்கத்தில், புதிய உலக ஒழுங்கில் பட்ட கஷ்டங்களுக்குள்ளேயே ஈழத்தமிழர்களையும் தள்ளிவிடுவார்களா! 

உதவி:http://tamilnet.com/art.html?catid=79&artid=33955

படம்: Google 

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உங்கள் முதல் பதிவும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்த போதே அயர்ச்சியாக இருந்ததால் எந்த பின்னூட்டமும் போடவில்லை. பிரபிப்புடன் ப்ரசன்ட் போட்டுவிட்டு போகிறேன். இன்னும் ஒரு முறை ஆற அமற இருந்து வாசிக்க வேணும். எப்படித் தான் உங்களால் இலகுவாக ஆனால் ஆணித்தரமான கருத்துக்களை முன் வைக்க முடிகிறதோ தெரியவில்லை. வாவ்.

Rathi சொன்னது…

வாங்க அனாமிகா, நலமா! நேரமிருக்கும் போது மறுபடியும் வாங்க. நானும் வருகிறேன்

தவறு சொன்னது…

விரக்தி தெரிகிறது ரதி எழுத்துகளில்....ஊகும் துன்பபடும் ஒவ்வொரு தமிழனையும் நினையுங்கள் ஆனித்தரமாக தங்களை கருத்துகளை பதியுங்கள்.

Rathi சொன்னது…

வறு, அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் எல்லாவற்றையும் அதனதன் இயங்குவிதிகளோடு பொருத்திப்பார்த்தால் அடுத்து இப்படித்தான் நடக்கலாம் என்கிற ஊகம் வரும். அது ஈழம் என்று வரும்போது ஊகத்தோடு கூடிய ஓர் அல்லது அதையும் தாண்டிய ஓர் வலியும், சொல்லமுடியாத வேதனைகளும் கூடவே வெளிப்பட்டு நிற்கிறது போலும்.

Thanks for your moral support.