மே 21, 2011

பெண்களும் சில களங்களும் - அரசியல், பதிவுலகம்

ஈழம் தவிர்ந்த ஓர் பதிவு அதுவும் பெண்கள் பற்றி இந்த வாரத்தில் எழுதவேண்டும் என்கிற ஓர் அவா இருந்துகொண்டே இருந்தது. அதன் முயற்சி தான் இது. உலகளாவிய பொருளாதார கோட்பாடுகள், அதனால் உண்டான சமூக, கலாச்சார, வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பவற்றுக்கு ஏற்ப பெண்ணின் சமூக இருப்பும்  முன்னேற்றங்களும், பின்னடைவுகளும் கூட பல தாக்கங்களை அவர்கள் வாழ்க்கையில் உருவாக்குகிறது. 

பெண்கள் இன்று எத்தனையோ தளங்களில், களங்களில் ஆண்களுக்கு இணையாக முன்னேறியிருக்கிறார்கள் என்று படித்தும், கேட்டும், பார்த்தும் இருக்கிறேன். இருந்தும் அரசியல், பதிவுலகம் என்று நான் கவனித்த வரையில் என் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 

புலம் பெயர்ந்த ஈழப்பெண்கள் நிறையவே முன்னேறியிருக்கிறார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதுவும் சில ஆண்கள் பெண்களை கரித்து கொட்டுமளவிற்கு! சில பெற்றார் நெருப்பை வயிற்றில் கட்டிக்கொண்டு அலைவதைப்போல்! இவையெல்லாம் பெரும்பாலும் சுயமுன்னேற்றம் என்கிற வைகையில் மட்டுமே இருக்கிறது. அதைக் கடந்து அரசியல் என்கிற சாகரத்திற்குள் எம் பெண்கள் குதிப்பது உண்மையிலேயே சவாலான ஓர் காரியம் தான். அந்த வகையில் அண்மையில் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்து பாராளுமன்றம் செல்லும் ராதிகா சிற்சபேசன் ஓர் முன்னுதாரணம். 

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இது ஓர் வரலாறு. எந்தவொரு ஈழத்தமிழன் புலத்தில் எதை சாதித்தாலும் அதனால் எங்கள் விடிவுக்கு வழி கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பே எப்போதும் எம்மவர்களால் முன்னிலைப்படுத்தப்படும். அதில் தவறே இல்லை. அந்த வகையில் ராதிகா என்கிற ஈழத்தமிழரிடமும் கனேடிய தமிழர்கள் நிறையவே எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். இவர் தமிழர் என்பதால் கனேடிய பாராளுமன்றத்தில் எப்போதும் ஈழம் பற்றி பேசமுடியாது. அதே நேரம் நிச்சயம் அதைப் புறக்கணிக்கவும் முடியாது என்பது தான் யதார்த்தம்.

கனடாவின் ஓர் தேசிய ஊடகம் ஒன்றில் அவர் பற்றி குறிப்பிடும் போது அவருடைய Resume சமூக சேவைகள் செய்த அனுபவங்களால் நிரம்பியிருக்கிறது என்று எழுதியிருந்தார்கள். இக்கூற்றின் மூலம் அவர்கள் சொல்லவிளைவது ராதிகா சிற்சபேசன் அரசியல் அனுபவம் அதிகம் இல்லாதவர் என்பது தான். அவர்களைப் பொறுத்தவரை தங்கள் நாட்டை பற்றி அதிகம் அக்கரைப்படுகிறார்களாம் ! யாராவது வேற்றினத்தவர் ஏதாவது பொறுப்பான பதவிகளில் அல்லது முன்னுக்கு வந்தால் குயுக்தியாய் விமர்சிப்பார்கள். ஆனாலும், ராதிகாவின் பேச்சை கேட்டவகையில் அவருடைய பேச்சில் நிறையவே தெளிவும், தன்னம்பிக்கையும் உள்ள ஓர் பெண்ணாக என் பார்வையில் தெரிகிறார்.

நான் இவரை குறிப்பிட்டு உதாரணம் காட்டக் காரணம் அகதியாய் புலம்பெயர்ந்து தமிழ்ப் பெண்கள் எவ்வளவு தூரம் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற பேரவாவோடு அதற்குரிய முயற்சிகளை செய்கிறார்கள் என்பதை உணர்த்தவே. தவிரவும், ராதிகா என்கிற கனேடிய தமிழ்ப் பெண் மற்றைய புலம்பெயர் தமிழ் இளையசமூகத்துக்கு ஓர் முன்னுதாரணமாகவும் இருக்கிறார்.

புலம் பெயர் தேசங்களில் பெண்களும் துணிச்சலோடு ஈழம் தொடர்பான செயற்பாடுகளில் முன் நிற்பார்கள். குறிப்பாக இளைய தலைமுறை. அது தவிர நாடு கடந்த தமிழீழ அரசில் பெண்களுக்குரிய இடமும் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. குறிப்பாக சுபா சுந்தரலிங்கம் என்பவர் துணிச்சலாய் முன்னாள் இலங்கை இராணுவத்தளபதியும் இந்நாள் ஐ. நா. வின் பிரதி நிரந்தரவதிவிடப் பிரதிநிதியுமாகிய சவேன்திரா செல்வாவை துணிச்சலாய் நேருக்கு நேர் நின்று அவரின் போர்க்குற்றச்சாட்டு படி கேட்டது வியக்க வைத்தது.

பெண்களாலும் அரசியலில் எத்தனையோ விடயங்களை சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு தான் நான் ராதிகாவை மற்றும் இளைய தலைமுறைப் பெண்களை பார்க்கிறேன்.

அதே நேரம் இந்தியாவை சோனியாவும், தமிழ்நாட்டை ஜெயலலிதாவும் என்கிற இரு பெண்கள் தானே இப்போ ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இருந்தும் அவர்களின் அரசியல் களம், பிரவேசம் என்பவை வெவ்வேறு காரணங்களால் உருவானவை என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.

அடுத்து பதிவுலகைப் பொறுத்தவரை ஆண்களே அதிகமுள்ள நிலையிலும் பல பெண்பதிவர்களும் எழுதிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான விடயம். இருந்தும் பெண் பதிவர்களும் ஆண் பதிவர்கள் போல் எதைப் பற்றி வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதமுடிகிறதா என்கிற கேள்வி எங்கேயோ மனதில் தொக்கி நிற்கவே செய்கிறது.

ஆம், பெண்களும் எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற அனுமதி நிச்சயம் உண்டு. அதற்கு யாருடைய அனுமதியும் கோரவேண்டியதில்லை. ஆனால், அந்த எழுத்தின் விளைவுகள், விமர்சனங்கள் ஆண்பதிவர்களை விடவும்  ஓர் பெண் பதிவருக்கு உருவாகுவது என்பதில் வேறுபாடுகள் இருக்கிறது என்பது மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத ஓர் கசப்பான யதார்த்தம்.

ஆண்கள் செக்ஸ் முதற்கொண்டு சிக்கலான அரசியல், பொருளாதார கண்ணோட்டங்களை எழுதினால் நிறையப்பேர் ரசிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பதே நான் கவனித்தது. உடனே யாராவது உங்களை யார் அதைப்பற்றி எல்லாம் எழுத வேண்டாம் என்று சொன்னது என்று எதிர்க்கேள்வி கேட்கலாம், ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நான் சொல்வது என் ஊகம் மட்டுமே. பெண்கள் அரசியல், பொருளாதார ஆய்வுகள், கண்ணோட்டங்களை எழுதமுடியுமா, முடியாதா என்கிற வகையில் தங்களை தாங்களே சந்தேகிக்கிறார்களோ தெரியவில்லை என்பது தான். நிறையப் பெண்கள் அரசியல், பொருளாதாரம் பற்றி பதிவுகள் எழுதுவது மிகவும் குறைவு. சமூகப் பிரச்சனைகள் பற்றி பல பெண் பதிவர்கள் எழுதுகிறார்கள், வரவேற்க்கத்தக்கது.

ஆண் பதிவர்கள் செக்ஸ் பற்றியோ அல்லது அது தொடர்பிலோ எழுதினால் இங்கே பெரிதாய் எந்தவொரு பாதிப்பும் புதிதாய் வந்துவிடப்போவதில்லை என்று சிலர் வாதித்திருக்கிறார்கள். ஆனால் இது என் அனுபவம் மட்டுமா தெரியவில்லை. சில தளங்களில் எழுதப்படும் பதிவுகளை, காட்சிகளை படித்தும், பார்த்தும் ஓர் பெண்ணாக வெறுத்துப்போய் திரும்பி ஓடிவந்திருக்கிறேன். மறுபடியும் அந்த தளங்களின் பக்கம் சென்றதில்லை. அது அவர்களுக்கும் இழப்பில்லை. எனக்கும் இழப்பில்லை. 13+, 18+ பதிவுகள் தொடரவே செய்கின்றன. அதுவும் யதார்த்தம் ஆகிப்போனது. 

ஜனரஞ்சக ஊடகங்கள், நடைமுறை யதார்த்தங்கள் மற்றும் வாழ்க்கைமுறையில் இல்லாததையா பதிவுலகில் எழுதுகிறோம் என்றும் சிலர் வாதிடலாம். அப்படிப்பார்த்தால் இன்று அந்த ஊடகங்களை எத்தனை பேர் விமர்சிக்கிறார்கள், அதனால் உண்டாகும் விளைவுகளை எங்கள் கண்களின் முன்னேயே பார்க்கிறோமே. அவற்றிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டு பதிவுலகையும் ஏன் நாங்கள் அதற்கென்றோர் நியமத்தோடு (Standard) கட்டியமைக்கவோ, பேணவோ கூடாது!

Social Media என்றழைக்கப்படும் சமூக கருத்துப் பரிமாற்ற ஊடகங்களில் ஒன்றாகவே பதிவுலகம் இருக்கிறது என்பது என் கருத்து. இங்கே நாங்கள் (ஆண்கள், பெண்கள் இருபாலரும்) அரசியல் பற்றி எதையாவது எழுதினால் சில ஊடகங்கள் அவற்றை 'Conspiracy Theory' என்று ஏதோ வஞ்சம் தீர்க்க எழுதுவது போல் கூட சில சமயங்களில் விமர்சிக்கிறார்கள். ஆனாலும், பதிவுலகில் தான் நாட்டுநடப்பின், செய்திகளின் உண்மையான பல கோணங்களை அறியமுடிகிறது. 

இதெல்லாம் வெறும் கவனிப்புகள் மூலம் என் மனதில் தோன்றிய ஊகங்களே எனலாம். இருந்தும், என்னுடைய அவா பெண்கள் இன்னும் அதிகம் சமூக, அரசியல், பொருளாதார களங்கள் குறித்த ஆய்வுகளை, விமர்சனங்களை எழுதவேண்டும் என்பதே. எத்தனையோ ஆண் பதிவர்கள் அவ்வாறு எழுதும் பெண் பதிவர்களை இங்கே ஆரோக்கியமான முறையில் ஊக்குவிக்கிறார்கள். பெயர்களை குறிப்பிட்டால் யாராவது விடுபட்டுப் போவார்களோ என்பதால் தவிர்க்கிறேன். 

பதிவுலகையும் பலர் இப்போ திரும்பிப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆக, இங்கேயும் பெண்களுக்குரிய களம் வலுவாக இருக்கவேண்டும். இல்லையென்றால் பலபேர் இங்கிருந்தும் காணாமற் போய்விடுவார்களோ என்று தோன்றுகிறது. பெண்கள் தயக்கமின்றி தங்கள் எல்லாவிதமான கண்ணோட்டங்களையும் சமூக, அரசியல், பொருளாதார களங்களிலும் பதிவுலகில் தங்கள் முத்திரையைப் பதிக்கவேண்டும். 

நன்றி: படம் Google

24 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

பெண்கள் கருத்து சொல்லியிருப்பார்களா என பதிவை படித்து எதிர்பார்த்து பின்னூட்டப் பக்கத்திற்கு வந்தேன்.

இந்திய அரசியலில் சோனியா,ஜெயலலிதா தவிர மம்தா,மாயாவதி,சபாநாயகர் மீரா குமார் எனவும் பிரச்சார பீரங்கிகளாக காங்கிரஸ்,பி.ஜே.பி கட்சிகளில் பெண்களும்,எம்.எல்.ஏ க்களாகவும் பெண்கள் வலம் வருகிறார்கள்.இந்திய ஜனநாயகத்தில் இங்குமங்கும் குறைபாடுகள் இருந்தாலும் ஜனநாயக பாதையில் தளைத்து நிற்கிறதென்றே கூறலாம்.

தமிழீழ அரசு தேர்தல் நேரத்தில் சில பெண்களை அடையாளம் காண நேர்ந்தது.இன்னும் அவர்கள் திரை மறைவில் தங்களது பணிகளை செய்யக்கூடும்.இருந்தாலும் இவர்கள் சிறப்பாக செயல்பட ஊடக வெளிச்சம் கட்டாயம் தேவை.

பதிவுலகிலும் பெண்கள் துணிந்து தங்கள் கருத்தை வெளிப்படுத்த வரும் போது ஏதோ ஒரு விதத்தில் ஆண் பெண் குழாயடிச்சண்டை மாதிரி கருத்து மோதலில் பெண்கள் ஒதுங்கி விடுவதாகவே உணர்கிறேன்.அப்படியும் பல பெண்கள் பதிவுலகிலும் வலம் வருவது ஆரோக்கியமான விசயமே.

ஹேமா சொன்னது…

ரதி...பெண் எழுத்து உங்கள் அலசலில் பலரையும் தொட்டு வலம் வந்திருக்கு.ஈழத்துப் பெண்களின் துணிச்சல் உலகறிந்ததே.நீங்கள் இன்னும் அறிந்து சொல்லியிருக்கிறீர்கள்.இந்த வரிசையில் உங்கள் பெயரும்தான் இப்போது.

பதிவுலகத்தில் அளவோடு உலவி அளவோடுதான் பெண்களின் எழுத்துரிமை.மீறினால் கஸ்டம்தான்.ஓரளவு மனம் நோகாமல் பயமில்லாமல் உள்ளக் கருத்தை எழுத எங்களுக்கும் துணிச்சல் வேணும்.அவ்வளவுதான் !

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>அந்த எழுத்தின் விளைவுகள், விமர்சனங்கள் ஆண்பதிவர்களை விடவும் ஓர் பெண் பதிவருக்கு உருவாகுவது என்பதில் வேறுபாடுகள் இருக்கிறது என்பது மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத ஓர் கசப்பான யதார்த்தம்.

உண்மைதான்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>ஜனரஞ்சக ஊடகங்கள், நடைமுறை யதார்த்தங்கள் மற்றும் வாழ்க்கைமுறையில் இல்லாததையா பதிவுலகில் எழுதுகிறோம் என்றும் சிலர் வாதிடலாம்.

மேடம் .. அப்படி இல்லை.. நான் போட்ட குப்பைப்பட சினிமா விமர்சனத்துக்கு வந்த ஹிட்ஸ் 3800. ஆனா உருப்படியா பெண்பதிவர்கள் பற்றி ஒரு போஸ்ட் ரொம்ப சிரமப்பட்டு பல புள்ளி விபரங்கள் ரெடி பண்ணீ கடுமையா உழைச்சுப்போட்ட பதிவு வெறும் 189 பேர் படிச்சாங்க.. இப்போ நான் அடுத்த பதிவு எப்படி போடுவேன்னு யோசிங்க.. ஜனங்க ரசனை மாறனும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தன் படைப்பு அதிகமான பேரை சென்றடைய வேண்டும் என்றே படைப்பாளி நினைக்கிறான்.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

தேவையான அலசல்


நட்சத்திர வாழ்த்துக்கள்.

ஜோதிஜி சொன்னது…

என் கருத்தை சொன்னால் அடிக்க வருவீங்க?

ஜோதிஜி சொன்னது…

ராதிகா சிற்பேசன் பற்றி நேற்று நண்பர் பேசும் போது உரையாடிக் கொண்டிருந்தார். அவருடன் இங்கு பதிவுலகத்தில் வலம் வருபவர்களை ஒப்பீடாதீர்கள்.
தமிழர்களில் பல விதங்களில் புலம் பெயர்ந்த ஈழ மக்கள் சிறப்பானவர்கள் மேன்மையானவர்களும் கூட.

தவறு சொன்னது…

இப்பொழுதுகூட தங்களுடைய பதிவுகளைப்பற்றி எம்நண்பர்களிடம் குறிப்பிட்டு பேசுவது உண்டு ரதி.

அரசியலிலும் சரி பதிவுலகிலும் சரி பாராட்ட வேண்டியவர்கள் பெண்களில் நிறைய....கட்டாயம் தாங்கள் உண்டு என்னுடைய வாழ்த்துகளில்.

Rathi சொன்னது…

ராஜ நட, நானும் கவனித்திருக்கிறேன். பெரும்பாலும் எந்தவொரு ஊடகம் சார்ந்த கலந்துரையாடலிலும் பெண் பிரதிநிதிகள் கலந்து கொள்வது என்பது அரிது தான்.

ஏதோ பெண் பதிவர்களிடம் திட்டு வாங்கிறது என்று முடிவெடுத்தாச்சு போல. குழாயடடிச்சண்டை என்றால் உங்களை வையப்போறாங்க.

பெயரில்லா சொன்னது…

ராதிகா அவர்களின் துணிவு வேறு யாருக்குமே இல்லை. தைரியமாக முன்னாள் இராணுவ அதிகாரியை எதிர்த்து கதைக்க நானே போகமாட்டேன். அவர்களுடன் பெண் பதிவர்களை ஒப்பிடுவது மலையுக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணராதது போல இருக்கிறது. She has balls. அவவின்ட பேச்சைப் பாத்துக்கொண்டிருக்கவே எனக்கு கை எல்லாம் நடுங்கியது. அவரைத் தெரிந்தவர்கள் இருந்தால் நான் அவருக்கு ஒரு சலூட் வைத்தேன் என்று சொல்லுங்கள் ப்ளீஸ். தலைவரின் வீரத்திற்கு கொஞ்சமும் குறையாத வீரம் என்றால் அது ராதிகாவின் வீரமே. வேறு யாருடனும் அவரை ஒப்பிட முடியாது. கை நடுக்கத்துடனேயே இதையும் எழுதுகிறேன்.

Rathi சொன்னது…

ஹேமா, பெண்கள் ஓர் விடயத்தை மனதில் நினைத்தை நினைத்தது போல் சொல்லமுடியாத அளவுக்கு சமூக ஏற்பாடுகள் குறுக்கே நிற்பதாக நான் கருதுகிறேன்.

Rathi சொன்னது…

.பி., செந்தில்குமார், நீங்கள் சொன்னதில் என் மனதில் நிற்பது, 'ஒரு குப்பைபட விமர்சனத்திற்கு'! அதில் இருந்தாவது எதை எழுதக்கூடாது என்று உங்களால் தீர்மானம் பண்ணமுடியவில்லை என்று நான் புரிந்து கொண்டால் அதுக்கு நீங்க கோபப்படக்கூடாது. :)
//ஜனங்க ரசனை மாறனும்// அவங்க சொல்லுவாங்க நீங்க எழுதுறீங்க நாங்க படிக்கிறோம். நீங்க மாறுங்கன்னு.! அப்போ யார் தான் முதலில் மாறுவது!

நீங்கள் புள்ளிவிவரத்தோட போட்ட பதிவை 189 பேர் படிச்சதே பதிவுலகில் பெரிய ஹிட் ஆச்சே. "தன் படைப்பு" என்று சொல்வதை விடவும் தன் தரமான படைப்பு என்று ஏன் மாற்றி யோசிக்க கூடாது. எழுதுபவருக்கு நிச்சயம் தெரியும் அது மசாலாவா, அறிவார்த்தமானதா என்று.

ஆரோக்கியமான் வாததத்தை முன்வைத்திருக்கிறீர்கள், நன்றி.

ராஜ நட சொன்னது போல் பெண்கள் வந்து கருத்தாடுவார்கள் என்று பார்த்தால் யாரையும் காணோம்

Rathi சொன்னது…

முனைவர் குணசீலன், தேவையான அலசல் தான். அலச வேண்டிய பெண்பதிவர்கள் யாராவது வருவார்களா தெரியவில்லை.

ஜோதிஜி, பெண்கள் பற்றிய உங்கள் கருத்தை தான் பதிவுலகில் தொடர் போட்டு சொன்னீர்களே. பிறகேன் நாங்க அடிக்க வரப்போறம். நான் யாரையும் ஒப்பிடவில்லை. பெண்களுக்கு ஒப்பிடுவது பிடிக்காது. இது பெண்கள் psychology. :))

Rathi சொன்னது…

தவறு, நீங்களும் ஹேமாவும் ஏதும் கதைச்சு, பேசி தான் விமர்சனம் எழுதுவீங்க போல. என்னை ஒரு வழி பண்ணப்போறீங்க ரெண்டு பேரும்.

Rathi சொன்னது…

அனாமிகா துவாரகன், இந்தப் பெயரப் பார்த்தவுடன் எனக்குள் வழமையாக உற்சாகம் பிறக்கும். என்னாச்சு அனாமிகா? பதட்டத்தில் கனேடிய பாராளுமர உறுப்பினர் ராதிகாவை, நாடு கடந்த அரசின் சுபா சுந்தரலிங்கம் என்று நினைத்துவிட்டீர்கள் போலுள்ளது. சவேன்திரா செல்வாவை கேள்வி கேட்டது சுபா சுந்தரலிங்கம்.
It's OK!

பெயரில்லா சொன்னது…

Sorry its Suba. I was literally shivering when I was listening to her speech. I am still shivering.

//இந்தப் பெயரப் பார்த்தவுடன் எனக்குள் வழமையாக உற்சாகம் பிறக்கும். //
Ha ha. Thank you.

பெயரில்லா சொன்னது…

ஆணுக்கு பெண் குறைந்தவள் இல்லை. இருவரும் சமமானவர்களே தமிழ் பதிவுலகில் பல பெண்கள் பல விடயங்களை எழுத வேண்டும். பெண்கள் பலர் வலைப்பதிவினைப் பற்றி தெரிந்திருப்பதில்லை. தெரிந்தாலும் எழுத வருவதில்லை. எழுத வருபவர்களும் தொடர்ந்து எழுதுவதில்லை என்பதே வருத்தமான விடயம். ஆனால் இங்கும் இட ஒதுக்கீடு என வந்து நின்றால் என் செய்வேன் .. ஹிஹி !!!

பெயரில்லா சொன்னது…

@ அனாமிகா - ராதிகா இராணுவ அதிகாரியை எதிர்த்துப் பேசியதாக கேள்விபடவில்லையே அனாமிகா. கொஞ்சம் பொறுமையாகவும், ஆழமாகவும் பதிவுகளைப் படிப்பது நலம்.

Rathi சொன்னது…

இக்பால் செல்வன், அனாமிகா தான் சரியாக புரிந்துகொண்டதை பின்னர் குறிப்பிடிருக்கிறாரே.

ஏன் இப்பிடி!!!!!!!

பதிவுலகில் இட ஒதுக்கீடு என்று என்ன ஜோக்கா?

//எழுத வருபவர்களும் தொடர்ந்து எழுதுவதில்லை என்பதே வருத்தமான விடயம். //

ஏன் என்று இதற்கான விளக்கத்தை உங்கள் தளத்தில் எழுதுங்கள். நான் வந்து படிக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

@ இக்பால் செல்வன் ,
//கொஞ்சம் பொறுமையாகவும், ஆழமாகவும் பதிவுகளைப் படிப்பது நலம்.//
Duh! You try to practice it before advising me!

பெயரில்லா சொன்னது…

such a hypocrite.

பெயரில்லா சொன்னது…

@ ரதி - பதிவுலகில் மட்டுமல்ல எதிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்ற ஒன்றில் எனக்கு நம்பிக்கை இல்லை .... பெண்கள் நிறைய எழுத வேண்டும் என்பது எனது ஆசை. பெண்களின் எழுத்து தமிழ் பதிவுலகில் ஏன் குறைவாக இருக்கிறது என்பதைப் பற்றி நிச்சயம் ஒரு சிறு ஆய்வுக்குப் பின் எழுதுவேன் சகோதரி...

பெயரில்லா சொன்னது…

@ அனாமிகா துவாரகன் - // Duh! You try to practice it before advising me! // அப்படியாங்கோ மிக்க மகிழ்ச்சி அக்கா !


// such a hypocrite. //

பொய்மையும் வாய்மையுடைத்து என வைத்துக் கொள்ளுங்களேன் .........