மே 17, 2011

முள்ளிவாய்க்கால் நினைவாக...!


முள்ளிவாய்க்கால்! சொல்லமுடியாத வலிகளை, பேசமுடியாத மெளனத்தை, விவரிக்க முடியாத கொடூரங்களை தாங்கிநிற்கும் ஈழத்தமிழர் ரத்த பூமி. விடுதலை வேண்டிப் போராடிய ஈழத்தமிழினம் இழந்த கெளரவம், சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்ட எங்களுக்கேயுரிய பெருமிதங்கள், சிறுகச் சிறுக, பார்த்துப்பார்த்து கட்டியெழுப்பிய விடுதலைக் கனவு அத்தனைக்கும் ஊமை சாட்சியாய் இன்று முள்ளிவாய்க்கால்.  

ஈழவரலாற்றின் பக்கங்களில் வடுவாய், வலியாய் பதிந்துபோன முள்ளிவாய்க்காலும் அதன் நினைவுகளும் இனி எப்போதுமே மறக்கமுடியாததாய். முள்ளிவாய்க்கால் என்கிற பெயர் இன்று சர்வதேசத்தின் வாய்க்குள் அகப்பட்டு சிக்கித்தவிக்கிறது. தனக்குள்ளே மனிதர்களையும், அவர்தம் கனவுகள், ஆசைகள், அத்தோடு வாழ்வின் கடைசி நாட்கள் நிமிடங்களாகி உயிர் பதைத்த கணங்கள், தமிழர்களும் இந்த உலகமும் அறிய வேண்டிய உண்மைகள் எல்லாத்தையும் தனக்குள்ளே புதைத்துக்கொண்டிருக்கிறது அந்த மண்.

உயிருள்ளவரை என் நினைவுகளை விட்டகலாது எங்கள் உறவுகள் உயிர்பதைத்த கணங்கள், நாதியற்றுப் போய், கையேந்தி இரக்கமில்லாத உலகத்திடம் உயிர்பிச்சை கேட்ட அவலக் கோலங்கள். 

இன்று, இலங்கையின் வடக்கே மன்னார், முல்லைத்தீவு, மற்றும் வவுனியா மாவட்டங்கள்; மற்றும் கிளிநொச்சியின்  பல பகுதிகளை உள்ளடக்கியது  வன்னி. வன்னி பெருநிலப்பரப்பில் உள்ளது முள்ளிவாய்க்கால்.

வரலாற்றுரீதியாக மன்னார், வவுனியா, திருகோணமலை, பொலநறுவ, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், (Hinterlands) ஆகிய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் வன்னி பெருநிலம் இருந்ததாக தயா சோமசுந்தரம் தன், Collective Trauma in the Vanni - a qualitative inquiry into the mental health of internally displaced due to the civil war in Sri Lanks - Intl. Journal of Mental Health Systems இல் குறிப்பிடுகிறார். அப்படியே, ஒரு வரி விலகிப்போய் தயா சோமசுந்தரத்தின் வரலாற்றுக்குறிப்புகளை விடவும் ஈழத்தமிழர்களின் உளவியல் குறித்த அவரது துறைசார்ந்த கண்டுபிடிப்புகள் ஆச்சரியப் படுத்துவதை இங்கே காணலாம். 

வன்னியின் மேற்சொன்ன இந்த புவியியல் அமைப்புத்தான் இன்றுவரை சிங்களம் கூட அதை கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க துடிப்பதன் ரகசியம்.

வன்னி சில வரலாற்று ஆசிரியர்களால் "அடங்கா மண்" எனவும் குறிப்பிடப்படுகிறது. வன்னி மண்ணை ஆண்ட பண்டாரவன்னியன் என்கிற தமிழ் மன்னனால் டச் மற்றும் பிரித்தானிய காலனியாதிக்கத்தில் களம் பல கண்டு வென்றெடுக்கப்பட்ட மண். பண்டாரவன்னியன் தேசியவீரனாக இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு 1982 இல் வவுனியாவில் சிலை வைக்கப்பட்டதாம். வன்னியை ஆண்ட பண்டாரவன்னியனுக்கு இணையாக கலைஞர் கருணாநிதி, பழ. நெடுமாறன் போன்றோரால் விமர்சிக்கப்பட்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். (தயா சோமசுந்தரம், Collective Trauma in the Vanni). ஆனால், ராஜபக்க்ஷேவின் ஆட்சியில் பண்டாரவன்னியனின் சிலைகள் உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. ஏனென்றால் பண்டார வன்னியன் தமிழர்களின் அடையாளமாயிற்றே.

நிலமும், களமும், வீரர்களும், அவர் தம் நோக்கமும் ஒன்றே. ஆனால், முடிவு மட்டும் இன்று வேறாய்! 

முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட உயிர்கள், உண்மைகள் அத்தனையையும் இன்று ஐ. நாவின் அறிக்கை என்கிற காகிதங்களில் தேடிக்கொண்டிருக்கிறது உலகம். உண்மைகளை எங்கிருந்து தோண்டி எடுக்க வேண்டுமோ அங்கிருந்து தேடாமல் எங்கெங்கோ காகிதங்கள், காண் ஒளிகளில் தேடுகிறார்கள். இவர்களின் அகராதியில் வரைவிலக்கணம் சொல்லக்கூடத் தெரியாத பயங்கரவாதத்தை ஒழித்த, ஒழிக்க துணைபோன சூத்திரதாரிகளுக்குமா தெரியாது உண்மைகளை தேடவேண்டிய இடம். வன்னியில் ஏறக்குறைய 40,000 - 70, 000 வரை மனித உயிர்கள் பலிவாங்கப் பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பப்படுகிறது. ஏறக்குறைய மூன்று லட்சம் பேர் அடைக்கப்பட்ட அந்த சிறு நிலப்பரப்பை இன்றுவரை எந்தவொரு ஊடகமும் பார்வையிட அனுமதியில்லை. முள்ளிவாய்க்காலின் எல்லைக்குள்ளே உண்மைகளும், அதன் எல்லைக்கு வெளியே உண்மையை கண்டறியும் அதிகாரம் கொண்டவர்கள் வெறும் பார்வையாளர்களாய் மட்டும். 

அமெரிக்காவும், இந்தியாவும் அதன் சோனியா காங்கிரசும் தான் ஈழத்தின் இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகள் என்பது யாவரும் அறிந்ததே. ஓர் இனப்படுகொலை நடத்தி தான் ஈழத்தமிழர்களுக்கு அறுபத்துமூன்று வருடங்களாக மறுக்கப்படும் உரிமைகளை மீட்டுத் தரப்போகிறார்களா என்றால், இல்லை என்பது தான் உண்மையான பதில். அது அவர்களுக்கும் நன்கு தெரியும். அவரவர் நலன்கள் சார்ந்த பூகோள, பிராந்திய புவியியல், அரசியல், பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள தமிழீழ விடுதலைப்புலிகளும், அப்பாவி ஈழத்தமிழனும் உயிர்துறக்க வேண்டிய அவலம். அமெரிக்காவின், இந்தியாவின் பிரச்சனை புலிகள் இல்லை. புலிகள் ஈழத்தமிழர்களுக்காக கேட்ட தனி தமிழீழம் தான். புலிகள் அழிக்கப்பட்டால் தமிழர்கள் தனி ஈழம் என்பதையும் மறந்துவிடுவார்கள், மறக்கடிப்போம் என்று தீர்மானித்துவிட்டார்கள் போலும்.

வன்னிப் போரும் ஒருவகையில் ஈழத்தமிழர்கள் மீது, ஈழத்தின் மீதான சர்வதேசத்தின் பிரகடனப் படுத்தப்படாத போர் தான். அதன் முடிவில், முள்ளிவாய்க்காலின் அவலத்தில் தான் "ஈழம்" என்பதன் தேவையை, அதன் தார்ப்பரியத்த்தை அதிகம் எங்களுக்கு சர்வதேசம் உணர்த்தியிருக்கிறது.

அமெரிக்கா கண்டுபிடித்த பயங்கரவாத தத்துவத்தில் புலிகளின் வழிகளை இனி உலகில் எந்தவொரு இயக்கமோ, அமைப்போ கடைப் பிடிக்க கூடாது. சுதந்திரத்துக்காய் போராடவே கூடாது, அமெரிக்காவிடம் அனுமதி பெற்றாலன்றி. புலிகளோடு போகாதே, எங்கள் பின்னால் வா முட்கம்பிகளுகுப் பின்னே மோட்சம் தருகிறோம் என்று சிங்களம் சொன்னது கூட வியட்நாம் - அமெரிக்கா பாணிதான் போலும். இந்தியா என்கிற மிகப்பெரிய ஜனநாயக நாடு இனப்படுகொலைக்கு திட்டம் தீட்டி, அறிவுரையும் உதவியும் வழங்கி, இப்போ இலங்கை சிங்கள பெளத்த ஆட்சியாளர்களே நிராகரித்த அரசியல் தீர்வு 13+ என்கிறது. விக்கி லீக்ஸ் இந்தியாவின் போர்க்குற்றங்களுக்கு துணை போன ஆதாரங்களை கூட வெளியிட்டது. ஆனாலும் கண்டுகொள்ள ஆளில்லை.

இந்தியாவின் போரை இலங்கை நடத்திக்கொடுத்ததால், இந்தியா எப்போதுமே இலங்கையை ஐ.நா. சபை என்றாலும் காப்பாற்றுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது. இலங்கை தான் இழைத்த போர்க்குற்றங்களை மறைக்க தன்னைத் தானே பாராட்டி ஐ. நாவின் மனித உரிமைகள் சபையில் May 2009 இல் கொண்டுவந்த தீர்மானத்தை (A/HRC/8-11/L.1Rev.2) வெற்றியடைய வைத்தது. இலங்கை ஜனாதிபதி கூட இந்தியா எங்களை காப்பாற்றும், எங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று இறுமாப்புடன் சொல்வது, இதெல்லாம் இந்தியா எவ்வளவு தூரம் முள்ளிவாய்க்கால் அவல முடிவில் பங்கேற்றிருக்கிறது என்பதை தெளிவாய் காட்டுகிறது. ஒரு வேளை தாங்கள் மாட்டினால் கூட இலங்கை ஆட்சியாளர்கள் மிகத் தெளிவாக இந்தியாவையும் போர்க்குற்றங்களில் பங்குபற்றியிருக்கிறது என்பதை மறைமுகமாக சொல்கிறார்கள் போலும்.

பயங்கரவாத ஒழிப்பு என்று சொல்லிச்சொல்லி இறுதியில் சிங்கள ராணுவத்தின் கோணத்தில் பார்த்து அவர்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லாதவரை ஈழத்தமிழனுக்கு நியாயம் கிடைக்க வழியுண்டு. பிரகடனப் படுத்தப்படாத அமெரிக்க வியட்நாம் போரில் எப்படி அமெரிக்க படைவீரர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இன்றுவரை அமெரிக்காவால் சித்தரிக்கப்படுகிறார்களோ, அதே போல் May 19 என்பதும் இனி இலங்கையின் வரலாற்றில் 20 உலக நாடுகளின் உதவியுடன் சிங்கள ராணுவம் நடத்தி முடித்த ஈழத்தமிழின அழிப்பை, அதன் கொடூரங்களை எப்போதும் வீர, தீர செயல்கள் என்றே  முன்னிலைப்படுத்தப்படும், சிங்கள பெளத்த ஆட்சியாளர்களால். பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்தில் கூட வரலாறு திரிக்கப்படும்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது ஓர் இனவழிப்பு என்று சர்வதேச சட்ட, தர்ம, நியாயங்களுக்கு தெரிந்தாலும், அது இன்றுவரை "பயங்கரவாத ஒழிப்பு", மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டு, மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கிறது என்கிற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. தமிழர்கள் என்கிற ஓர் தேசிய இனத்தின் நிலம், பொருளாதாரம், அதனோடு இயைந்த வாழ்க்கை, பண்பாடு, மொழி இவற்றுக்கெல்லாம் மேல் ஆயிரமாயிரம் அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது என்கிற கோணத்தில் பிரச்சனை அணுகப்படுவதில்லை. இந்தக்கோணத்தில் ஈழப்பிரச்சனை அணுகப்பட்டால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு நீதியும், நியாயமும் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு எந்தவொரு எத்துவாளி நீதிபதியும் தள்ளப்படுவார் என்பது நிச்சயம். ஆக, மனித உரிமை மீறல்கள் என்கிற மந்திர உச்சாடனத்தால் 'இனவழிப்பு' என்பது மறைக்கப்படுகிறது.

இனவழிப்பு தான் வன்னி இறுதிப்போரின் நோக்கம், முடிவு என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர் கைகளிலேயே உண்டு. முள்ளிவாய்க்கால் முடிவுக்காய் ஒரு நாள் அழுவோம், அழத்தான் வேண்டும். அழுவதும், புலம்புவதும் மட்டும் நாம் இழந்தவர்களுக்கு செய்யும் மரியாதை அல்ல. அவர்களின் அத்தனை பேரின் உயிர்த்தியாகத்துக்கு நீதி கிடைக்கப் போராடவேண்டும், சர்வதேச அரங்கில்! Brian Senewiratne சொன்னது போல், "உண்மையான யுத்தம் இப்போது தான் தொடங்குகிறது" - "The real war is just begining", என்று உறுதிகொள்வோம். ஈழத்தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காய் போர்க்குற்றவாளிகளை, அதற்கு துணைபோனவர்களை கூண்டில் ஏற்றும்வரை ஓயமாட்டோம், ஒன்றாய் நிற்போம் என்று ஒவ்வொரு இன, மான உணர்வுள்ள தமிழனும் முடிவெடுத்துக்கொள்வோம். 

ஈழம் நிச்சயம் ஒருநாள் நீதி பெறும் என்கிற நம்பிக்கையுடன்...

முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்காய் புதைக்கப்பட்ட, தங்களை புதைத்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் என் அஞ்சலிகள்!!

13 கருத்துகள்:

சுடுதண்ணி சொன்னது…

//ஒன்றாய் நிற்போம்//

நம்பிக்கை பலிக்கட்டும்.

//முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்காய் புதைக்கப்பட்ட, தங்களை புதைத்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் என் அஞ்சலிகள்!!//

அஞ்சலிகளும், பிரார்த்தனைகளும்!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

விதைகளக விழுந்தோம்,, விருட்சங்களாய் எழுவோம்...

பெயரில்லா சொன்னது…

உண்மைகளை உரக்கச் சொல்லி இருக்கின்றீர்கள்... தமிழர்கள் உணர்ச்சிவசப்படாதவராய் , நீண்டகால திட்டங்களை, பொறுமையாகவும், ஆழமாகவும் சாதிக்க வேண்டும். ஈழத்தில் வலிகளோடு வாழும் ஏழைத் தமிழர்களுக்கு உண்டிக் கொடுத்து உயிர்க் கொடுத்து உதவுங்கள் .. இது தான் எனது தாழ்மையான வேண்டுகோள் ... !!! தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி...

தவறு சொன்னது…

முள்ளிவாய்க்கால் நினைவாக...என்று எழுத தொடங்கியதும் தங்களுக்கு வாழ்த்துகள் கூறமுடியா சூழலுக்கு தள்ளப்பட்டேன் ரதி.

உண்மைகள் என்றும் உண்மையே ரதி...காலங்கள் தான் அவற்றை வித்தியாசப்படுத்துகிறது தவறானவர்களினால் ...
மாறும் என்ற நம்பிக்கையோடு நாம் இருப்போம்.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

முள்ளி வாய்க்கால் நினைவாக நான்

மே-பதினெட்டே என்ற தலைப்பில்
கவிதை ஒன்று என்னுடைய வலைப்பூவாகிய
புலவர் குரலில வெளியிட்டு அக்கவிதை
தமழ்மணம், தமிழ் நண்பர்கள் ஆகிய இரண்டு
வலை திரட்டிகளிலும் வந்துள்ளன படித்துப்
பார்க வேண்டுகிறன்

புலவர் சா இரமாநுசம்

ஹேமா சொன்னது…

கண்ணீர் தவிர வேறேதுமில்லை ரதி.இதோ ஐ.நா நோக்கி இப்போதும் போகிறோம்.எவர் காதிலாவது மனதிலாவது விழுகிறோமா பார்ப்போம் !

♔ம.தி.சுதா♔ சொன்னது…

இன்று மனதை நெருடும் நாள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

என் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி!

இந்த விதைகள் துளிர்ப்பது நிச்சயம்!!

Nesan சொன்னது…

துயரங்கள் சுமந்து அன்று கோசமிட்ட பாரிஸின் வழிகளில் இதோ இன்னும் சில நிமிடங்களில் ஏங்கள் உறவுகளுக்காக மீண்டும் ஒருதடவை ஓங்கி ஒலிக்கப் போகிறது அகதிகளின் குரல்கள் கேட்குமா நீதி தேவதையின் செவிகளில்!

ஜோதிஜி சொன்னது…

இந்த அளவிற்கு எதிர்ப்பு போற்றி துதி எந்த பாகுபாடும் இல்லாத இந்த நல்ல கருத்துக்களை தந்தமைக்கு என் வந்தனம்.

இந்த நினைவு நாளில் மற்றவர்கள் போல் போரினால் இழந்த, இறந்த தமிழ் சொந்தகளுக்கு என்று என் வருத்தங்களை எழுதி வைக்க விரும்பவில்லை.

காரணம் சற்று நேரத்திற்கு முன்பு பழமைபேசியின் இடுகையில் படித்த அமெரிக்காவில் கனடாவில் கல்வியினால் உயர்ந்து கொண்டிருக்கும் ஈழ சமூகத்தில் இருந்து வரும் எவரோ ஒருவரால் நிச்சயம் இழந்த துக்கத்திற்கு சமன் செய்யும் அளவிற்கு இந்த சிங்கள இனவாதத்திற்கு உண்டான நீதி கிடைக்கும்.

இதை படித்து முடித்தவுடன் வேலுப்பிள்ளை பிரபாரகன் அவர்களின் மாவீரர் உரைகளை வெளியிட வேண்டும் போல் உள்ளது. முயற்சிக்கின்றேன்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் உங்களை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்த தமிழ்மண குழுவினருக்கு என் வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!கடந்த இரு தினங்களின் உணர்வுகள் எப்பொழுதும் உயிர்ப்பித்துக்கொண்டே இருப்பது அவசியம்.நீங்கள் உரைநடையிலும்,ஹேமா கவிதையிலும்,நிரூபன் வன்னி மண்ணிலிருந்தும் பதிவுலகை வலம் வருவதைப் போல் நிறையப்பேர் கருத்து பரிமாற்றங்கள் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

கோர்வையாக சொல்ல இயலாத காரணத்தால் இன்னும் எனது இடுகை தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

இன்றைய புலம்பெயர் தமிழர்கள் பொதுக்கூடலை பின்னூட்டமாகவோ தனிப்பதிவாகவோ தெரிவிக்கவும்.

நேற்றைய பதிவுக்கு மீண்டும் வந்து விட்டு சென்றேன்.

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் சொன்னது…

personally ashamed of being mere spectator of genocide killing of 70,000 tamilians

Rathi சொன்னது…

ராஜ நட, இன்று நியுயோர்க்கில் ஐ. நா. சபை அலுவலகம் முன்பாக நடக்கும் கவனயீர்ப்பு, அது தான் மிகவும் முக்கியமானது. இங்கே ரொறொண்டோவில் ஒண்டாரியோ நாடாளுமன்றத்தில் முன் இன்று மாலை ஓர் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. இவையெல்லாம் ஏற்கனவே நன்கு அறியத்தரப்பட்டிருக்கிறது.

ஐ. நா. அலுவலகம் முன் இடம்பெறும் நிகழ்வுக்கு நாம் பலம் சேர்க்கவில்லை என்றால் சிங்கள அரசியல் வென்றதாகிப் போகும் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். புரிந்தே வைத்திருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்.

இன்று அதிகம் எதையும் பேசவோ அல்லது எழுதவோ முடியாத ஓர் இறுக்கமான ஓர் மனோநிலை வேறு. முள்ளிவாய்க்கால் கண் முன் நின்று கலங்க வைக்கிறது.