மே 03, 2011

இடதுசாரி, வலதுசாரி...... ஈழத்தமிழர்கள் - கனடா அரசியல்

ஜனநாயகத்தை எல்லா கட்சிகளுமே கூவிக் கூவி விற்று ஒரு வழியாய் கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து முடிவும் தெரிந்தாச்சு. கனேடிய ஜனநாயக தேர்தல் வரலாற்றில் சில சரித்திரங்களும் புதிதாய் படைக்கப்பட்டிருக்கின்றன. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சிறுபான்மை அரசு அமைத்து நொண்டியடித்த மரபுக்கட்சி, Conservative Party, இந்த தேர்தலில் அதிகப் பெரும்பான்மை, 167 ஆசனங்கள் பெற்று வெற்றி ஈட்டியிருக்கிறது.  308 ஆசனங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 155 ஆசனங்கள் பெறவேண்டும் ஆட்சியமைக்க. புதிய ஜனநாயக கட்சி, New Democratic Party, கனேடிய வரலாற்றில் முதல்முறையாக 102 ஆசனங்களைப் பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள். 

கனடாவில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட தாராண்மை கட்சி, Liberal Party, 34 ஆசனங்களோடு வரலாற்றுத் தோல்வியை தழுவி இருக்கிறது. Bloc. Quebec கட்சியும் அவர்கள் மாநிலத்தில் அவர்கள் தொகுதிகளில் கூட மிகப் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறார்கள். கியுபெக் தனி நாடாய் பிரிந்து செல்ல வேண்டும் என்னும் கொள்கைகையை கொண்ட கட்சி. கட்சித் தலைவர் தேர்தல் முடிவையொட்டி பதவியை துறந்துவிட்டார். 

இந்த தேர்தல் முடிவுகளில் என்னை கவர்ந்த விடயங்கள், 

முதலாவது, தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து தோற்றுப்போன கட்சிகள் கூட வென்று ஆட்சியமைக்கப் போகும் கட்சிக்கு நாகரீகமாக வாழ்த்துச் செய்தி சொன்னது. பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட ஆசனங்களுக்கு மேல் பெறமாட்டார்கள் என்று பொதுவாக நம்பப்பட்ட புதிய ஜனநாயக கட்சி எதிர்பாராத வகையில் அதிக ஆசனங்களைப் பெற்று எதிர்கட்சி ஆனது. தேர்தலுக்கு முன் கட்சித்தலைவர்களின் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் எந்த இடத்திலுமே வெற்றி பெறவில்லை என்று விலக்கி வைக்கப்பட்ட பசுமைக் கட்சி, Green Party, அதன் தலைவி ஓர் ஆசனத்தை பெற்றிருப்பது. 

இனி கொஞ்சம் யதார்த்த அரசியல் பேசலாம். 

கடந்த ஏழு வருடங்களில் கனேடியர்கள் மூன்று நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து வெறுப்பாகி கிடந்தார்கள். இந்த நாலாவது தேர்தலில் கொஞ்சம் யோசித்து இந்த தேர்தலில் 61.4% பேர் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு நொந்துபோயிருக்க வேண்டும் என்பதற்கு 'புதிய ஜனாயக கட்சியின்' (இடதுசாரிகள்)வெற்றி ஒன்றே சாட்சி என்பது என் கருத்து. இடதுசாரிகள் ஆயிற்றே மக்கள் நல திட்டங்களில் அதிக அக்கறை காட்டுவார்கள் என்கிற நம்பிக்கை தான். 

மரபுக்கட்சி தன் வலது சாரிக் கொள்கைகளால் கார்பரேட் நிறுவனங்களின் நலம் பேணுவதையே, நேரடியாக சொல்லாவிட்டாலும், மறைமுகமாய் கொள்கையாய் கொண்டவர்கள். கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுத்து அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் என்று இவர்கள் சொன்னதை பலர் மறுக்கிறார்கள். அவர்கள் வரிச்சலுகை பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்புகளை பிடுங்கியிருக்கிறார்களே தவிர புதிதாய் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாது என்பது மறுப்பவர்களின் வாதம். தவிர, பெரும்பான்மை கனேடியர்களின் விருப்பங்களுக்கே அதிக மதிப்பு கொடுப்பவர்கள். Visible Minority என்று சொல்லப்படும் எங்களைப் போன்ற புலம் பெயர்ந்துவாழும் மக்களின் நலன்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அக்கறையோடு முன்வைக்காதவர்கள். 

இந்த தேர்தலிலும் ஈழத்தமிழர்கள் வந்த அகதிக் கப்பலை தங்கள் தேர்தல் கட்சி விளம்பரத்தில் காட்டி எதிர்க்கட்சியை (தாராண்மை கட்சி), அவர்களது குடிவரவு மற்றும் குற்றவியல் கொள்கைகளில் "Dangerously soft on crime" என்று விமர்சித்தவர்கள். ஒருவாறு பெரும்பான்மை கனேடியர்களின் வாக்குகளை பெற்று அரசு அமைக்கப் போகிறார்கள். தவிர இவர்கள் ஆட்சி அமைத்தால் கனடாவின் 'வெளியுறவு கொள்கை' அமெரிக்காவின் கொள்கைகளில் இருந்து வேறுபடாது என்பது பொதுவான ஓர் கருத்து. இப்போ லேடனும் போயாச்சு. அமெரிக்கா வியட்நாமில் தொடங்கி ஆப்கான், ஈராக் வரை மனிதத்தை வாழவைத்துவிட்டது. இனி இவர்கள் மனிதத்தை அடுத்து லிபியாவில் தான் அனேகமாக காப்பாற்ற முழுமூச்சோடு தோள் தட்டிப் புறப்படுவார்கள். 

God bless Canada!

சரி, ஈழத்தமிழர்கள் விடயத்துக்கு வருவோம். 

புதிய யனநாயக கட்சியின் சார்பில் ஓர் தொகுதியில் (Scarborough Rouge River) ஓர் ஈழத்தமிழர், ராதிகா சிற்சபேசன், வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்கிறார். கனேடிய பாராளுமன்றம் செல்லும் முதல் தமிழர். அவருக்கு வாழ்த்துக்கள். அதேநேரம், அந்த தொகுதியில் இவருக்கு வாக்களித்தவர்கள், தமிழர்கள் உட்பட, என்ன வேண்டி வாக்களித்தார்களோ அதை பாராளுமன்றம் போனபின்னும் மறக்காமல் இருந்தால் நல்லது. மறந்தாலும், இங்கெல்லாம் அடுத்த தேர்தலில் இவரை மக்கள் மறந்துவிடுவார்கள்.

மரபுக்கட்சி சார்பில் போட்டியிட்ட ராகவன் பரஞ்சோதி பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இந்த தேர்தலில் இழந்துவிட்டார். இருந்தாலும், இவரோடு போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சி உறுப்பினருக்கும் இவருக்கும் இடையே மிக இறுக்கமான போட்டியே இருந்தது. இரண்டாம் நிலையில் வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருக்கிறார். முதல் தடவை போட்டியிடும் ஒருவருக்கு இது ஓர் விதத்தில் வெற்றி தான். ஓர் ஈழத்தமிழராய் இவர் வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்லவேண்டும் என்று எதிர்பார்த்தேன். நான் அறிந்த வரையில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதிக அக்கறை கொண்டவர். 

''The extent of the transformation is startling." Globe and Mail பத்திரிக்கை இப்படித்தான் தேர்தல் முடிவுகள் குறித்து எழுதியிருக்கிறது. 

பொறுத்திருந்து பார்ப்போம், இனி கனடா எந்த திசையில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு பயணிக்கிறது என்று. வலதுசாரி ஆளும்கட்சி, இடதுசாரி எதிர்கட்சி. இதில் கனேடியர்களின் நலன்கள் எப்படி பேணப்படுகிறது; எங்களைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கு ஈழம் தொடர்பாக என்ன அரசியல் நன்மைகள் என்று யோசிக்கலாம். மரபுக் கட்சி ஆட்சியில் நாங்கள் அதிகம் ஏதும் எங்களுக்கு சார்பாய் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், புதிய ஜனநாயக கட்சி ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஏதோ கொஞ்சம் அக்கறை உடையவர்கள் என்பதை தவிர இப்போதைக்கு வேறேதும் சொல்வதற்கில்லை. 

நாங்கள் தொடர்ந்தும், ஐ. நா. போர்குற்ற விசாரணைகளிலேயே கவனத்தை செலுத்தவேண்டும். கனேடிய அரசியல் மாற்றங்கள் எங்களுக்கு நன்மைகளை கொண்டுவந்தால் நல்லது. ஆனால், அதை நம்பி வாழாதிருத்தல் வேண்டாமே!

பி.கு: என்ன தான் இருந்தாலும் தாராண்மை கட்சியின் (Liberal Party) Pierre Trudeau என்பவர் "பலகாச்சார கொள்கைகளை" கொண்டுவந்திராவிட்டல் நாங்கள் எல்லாம் கனடாவை நினைத்திருப்போமா தெரியாது. 

2 கருத்துகள்:

தவறு சொன்னது…

ஏங்க ரதி...உங்க கனடா ஈழதமிழர் எம்.பி. பற்றி ஓர் அறிமுகபதிவு தரலாமா....

Rathi சொன்னது…

தவறு, அதுக்குரிய காலம் வரும்போது நிச்சயம் எழுதுகிறேன்.