மே 31, 2011

'கிறுக்கு'னது விந்தைமனிதன் - வாழ்க்கை கோலங்கள்

வாழ்க்கையின் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து, அதுக்கேற்றவராறு இசைவாக்கம் அடைந்து எங்களுக்கு எந்தப் பிரச்சனையிலிருந்தும் ஓர் கவனமாற்றம் வேண்டும் என்பதை பெரும்பாலும் சராசரி மனிதர்கள் மறந்துவிடுவோம். யாராயினும் கொஞ்சம் கவலையை மறந்து சிரிக்க எதையாவது செய்து தான் ஆகவேண்டும், வாழ்க்கையை, மனதை சமப்படுத்த. தவிரவும், நான் எப்பவுமே ரொம்ப சீரியஸ் ஆக பதிவெழுதி சீரியஸ் பதிவர் ஆகிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் ஓர் மாற்றம் வேண்டி இப்பதிவு. 

சமூக, அரசியல், வாழ்வியல் சார்ந்த சமகால நிகழ்வுகளை, மனித இயல்புகளை நகைச்சுவை  உணர்வோடு எல்லோராலும் சொல்ல முடியாது. எனக்கு அதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது. அதனால் விந்தைமனிதனிடம் கடன்வாங்கி இருக்கிறேன். 

விந்தைமனிதன் கூகிள் பஸ்ஸில் பகிர்ந்துகொண்டதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 

1) சாரு நிவேதிதா மாதிரி...

தமிழ்ச்சூழலின் இன்னொரு கொடுமை "காக்காவும் கறுப்பு, யானையும் கறுப்பு...ஆகவே காக்காவும் யானையும் ஒன்றுதான்" என்கிற ரீதியில் பேசுவது.

 முந்தாநாள் இரவு கனுஷ்யகுத்திரனோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு இனிமையான மனநிலையில வீடுவந்து சேர்ந்து கணிணியைத் திறந்தால் காங்கோ பானந்திடமிருந்து ஒரு மெயில். பயமோகனின் "சிந்து கானமரபும் நவீனத்துவர்களும்" கட்டுரையை வாசித்தீர்களா என்று.

நான் தெரியாமல்தான் கேட்கிறேன் என்றாவது கஜினிகோந்திடம் போய் "ஓமக்குச்சி கொரசிம்மனின் ஸ்டைலைக் கவனித்திருக்கிறீர்களா?" என்று கேட்பீர்களா? முந்நூறு ஆண்டுகளுக்குமுன்பு ஸ்பெயினில் வாழ்ந்திருந்த "ஷாக்கு தெரியுதா" என்கிற கஸ்பஞோல் எழுத்தாளன் எழுதிய "மொஸைக்குகளின் சரிதம்" நாவலைப் பற்றி என்னிடம் கேட்டால் நான் மூச்சு விடாமல் முப்பதுமணிநேரம் பேசுவேன். "அது எப்படி மூச்சு விடாமல் முப்பது மணிநேரம்?" என்று குதர்க்கமாகக் கேட்கக்கூடாது. தொமிழ் இலக்கியத்தின் ஒரு நீண்ட மரபுத்தொடர்ச்சியில் திளைத்திருக்கும் ஒரு மகா கலைஞனை அது அவமானப் படுத்துவதாகும். இருந்தாலும் சொல்கிறேன். சித்தர் மரபில் இது பற்றிப் பாடல் இருக்கிறது. பெருமூலரின் கருமந்திரம் புத்தகத்தில் அது பற்றிய ஒரு பாடல் இருக்கிறது. நமது ஆட்களுக்கு இதைப்பற்றியெல்லாம் எங்கே தெரிகிறது! எனவேதான் ஆன்மீக குருக்களின் தேவை அதிகமாக இருக்கிறது. சுந்தரதியானம் வகுப்பில் சுவாமி குத்யானந்தர் இதைப்பற்றி ஏழரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்.

இந்த சமூகத்திற்கு சுந்தரதியானத்தை எடுத்துச்செல்ல வேண்டியதன் அவசியம் பற்றி கவலைப்பட்டார். அதனைப்பற்றி நான் எனது அடுத்த 'கட்டு உரையான' "கடவுளைக் கண்டேன் பெருமானந்தம்" என்ற பத்தியில் எழுதவிருக்கிறேன். ஆனால் பாருங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எழுதவேண்டிய ஒரு நிலையில் எனது வீட்டுச் செல்லங்களான கப்புவுக்கும், நாராவுக்கும் ஆய் போகக்கூட வயிற்றில் ஒன்றுமில்லாத அளவுக்கு மூன்றுமணிநேரமாகப் பட்டினி......

2) கனிமொழிக்கு கலைஞர் பாடுவதாக...

பொன்னால தொட்டில் செஞ்சி
ஒன்ன பூவாட்டம் வளத்து வந்தேன்
மண்ணுல நீ நடந்துவந்தா எங்
கண்ணு ரெண்டும் நோகுமின்னு
மரிக்கொழுந்து பாத செஞ்சேன்
ஊருலகம் பொறுக்கலையே!

செல்லமவ மொகஞ்சுளிச்சா
சேத்துவெச்சி அழுதிருப்பேன்
சின்னதாக சிரிச்சிருந்தா
சீமையெல்லாம் பூத்திடுமே
சித்திரமா வளத்துருந்தேன்
செயிலுக்கு நீ போறத்துக்கா?

லச்சமுன்னா, கோடியின்னா
சொச்சமென்ன வந்திடும்னு
சோசியனுஞ் சொல்லலியே
சோசியனுஞ் சொல்லலியே
சோகத்துல நானழுவ
சொல்லியழ ஆருமில்ல

கொத்துக்கொத்தா சனம்சாவ
கோட்டையில சிரிச்சிருந்தேன்
கோமகளை தொழுதிருந்தேன்
கோமகளுங் கைவிரிக்க
கோடிசனம் சிரிக்குதையா
குலமகளின் நெல பாத்து!

3) ஒரு வூட்ல சாவு விழுந்திடுச்சாம். துக்கத்துக்கு பொண்டுவல்லாம் போயிருக்காங்க. செத்தவனோட பொண்டாட்டிய கட்டிப்புடிச்சி ஒப்பாரி வெச்சி அழுவுறாளுங்க. செத்தவன் வூட்ல தோட்டத்துல நெறைய காய்கறி, பூச்செடில்லாம் இருக்கு. பாவக்காப் பந்தல் கண்ணைப் பறிக்குது. சொரைக்கா, கோவைக்கா அப்டீன்னு நெறைய காச்சி தொங்குது. கட்டிப்புடிச்சி அழுதுட்டு இருக்குற கூட்டத்துல இருந்த ஒருத்திக்கு பாவக்காமேல கண்ணு

பக்கத்துல இருந்த சேக்காளிகிட்ட ஒப்பாரில கலந்து சேதி சொல்றா.

"ஏட்டி! பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
தொங்குதடி கோவைக்கா"

அடுத்தவ சொல்றா. கம்னு இருடி. திரும்பாவுல அறுத்துட்டு போயிடலாம் அப்டீன்னு

"ஏட்டி! போவையில பாத்துக்குவோம்
போவையில பாத்துக்குவோம்"னு.

செத்தவன் பொண்டாட்டிக்கு பகீர்ங்குது. வெளிப்படையாவும் சொல்லமுடியாது. அவளும் ஒப்பாரி பாடுறமாரியே பாடுறா

"அய்யோ நான் வெதைக்கல்லோ வெச்சிருக்கேன்
வெதைக்கல்லோ வெச்சிருக்கேன்" னு.


மே 28, 2011

தமிழ்த்தேசியமும் சுயநிர்ணய உரிமையும்!!

இந்தப் பதிவிற்குள் செல்லுமுன் தேசியம் என்கிற சொல்லின் வரையறையை என் முந்தைய பதிவுகளில் ஒன்றான இலங்கை தேசியம்- ஈழத்தமிழர்கள் ஆற்றவேண்டிய கடமைகள்  என்கிற பதிவில் காணலாம். 

நான் கவனித்த வரையில் தேசியம் என்பதை ஜோசெப் ஸ்டாலின் பொதுவாக வரையறுத்திருந்தாலும் அது 'தமிழ்த்தேசியம்' என்று தமிழர்களின் உரிமைகள் அரசியல் அபிலாஷைகள் என்பன பற்றி குறிப்பிடப்படும் போது இன்று பல முரண்பாடுகள், தெளிவின்மைகள், அது பற்றிய புரிதல் இல்லாமலேயே தொடர்கிறது. தமிழ்த்தேசியம் என்பதற்கு சிலர் கொடுத்த பொதுவான வரையறைகளில் எனக்கு உடன்பாடானது பேராசிரியர் சுப. வீ. அவர்களின் வரைவிலக்கணம் தான். 

"ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்." (தமிழ் விக்கிபீடியா).


சுயநிர்ணய உரிமை (தன்னாட்சி உரிமை - Self-Determination) என்பது ஐ. நா. வின் பிரகடனத்துக்கு அமைய எல்லா மக்களுக்கும் (குழு) அவர்களுக்குரிய குறிப்பிட்ட நிலப்பகுதியில் எந்தவொரு புறநிலை குறுக்கீடின்றி சுயமாக, சுதந்திரமாக தங்கள் அரசியல் நிலையையும், பொருளாதார, சமூக, கலாச்சாரத்தையும் தொடர்ந்து பேணிக்காக்க, மேம்படுத்த உள்ள உரிமை ஆகும். அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம் (ICESCR) ஆகிய ஐ. நாவின் ஆவணங்களிலேயே தன்னாட்சி உரிமை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த தன்னாட்சி உரிமை என்பது ஒன்றுபட்ட நாடு அல்லது தேசத்திற்குள்ளேயே உருவாகக்கூடிய கூட்டாட்சி அல்லது தனியே பிரிந்து செல்லுதல், தனிநாடு என இருவகைப்படும். அதாவது Internal or External Self Determination என்பதாகும். 

சுயநிர்ணய உரிமை என்பது ஒரு நாட்டை துண்டாடவும் வழி செய்யும் என்று அதை எதிர்க்கும் அரசுகளும் உண்டு. அப்படி எதிர்ப்பவர்கள் குறைந்த பட்சம் தன்னாட்சி, கூட்டாட்சி (Internal Self-Determination) என்பதையாவது வழங்கி மக்களின் (குழு) உரிமைகளை உறுத்திப்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை. அதில் கேள்விக்கு இடமில்லை. 

விடுதலைப் போராட்டம் என்பது பல படிநிலைகளைக் கொண்டது, Dynamic Cycle. ஈழப்போராட்டமும் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வி, சத்யாக்கிரகம், காவல்துறை மற்றும் ராணுவ அடக்குமுறைக்கான எதிர்ப்பு என்பது ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது. உலகத்தின் அங்கீகாரத்திற்காய் காத்திருந்த De facto state, இப்படி ஓர் படிநிலை வளர்ச்சி மூலம் தான் ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியமும் சுயநிர்ணய உரிமையும் அதன் களங்களை சந்திக்கிறது.  தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை, ஈழத்தமிழர்கள் உரிமைப்போரில் இந்த இரண்டு கருத்தியல்களும், சொற்களும் தவிர்க்க முடியாத அளவுக்கு சரியான ஓர் படிநிலையில் இன்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

எவ்வளவுக்கு இது பற்றி ஆர்வமாகவும், அக்கறையோடும் பேசுபவர்கள் இருக்கிறார்களோ, அதைப்போலவே தமிழ்த்தேசியம் என்பதை வெறுப்பவர்களும், விமர்சிப்பவர்களும், வெறுத்துக்கொண்டே விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாங்கள் தமிழர்கள் ஆயிற்றே. நாங்கள் எதில் வல்லவர்களோ அதைத்தானே செய்வோம்.  எதையாவது சீர்தூக்கிப் பார்த்து அதிலிருந்து என்ன நன்மைகள் கிடைக்கும், அதை எப்படி மேற்கொண்டு வழிநடத்துவது என்பதை ஒத்த கருத்துடன் மாற்றுக்கருத்துகளையும் உள்வாங்கி பொதுவாக தமிழர்கள் சிந்திப்பதில்லை. அதற்கு தமிழீழ, தமிழ்நாட்டு 'தமிழ்த்தேசியமும்' விதிவிலக்கல்ல. 

மேலே சொன்ன ஸ்டாலினின் விளக்கம் (1942), அவரை ஒத்துக்கொள்ளாதவர்கள் கூட அவரது தேசியம் என்கிற வரையறையை ஏற்கவே செய்கிறார்கள். அதாவது குறிப்பிட்ட நிலப்பகுதியை பரம்பரை/பூர்வீக தாய்நிலமாகவும், பொது மொழி, பொதுப் பொருளாதாரம், பொதுப்பண்பாடு இவற்றின் வழி உருவானது தான் தேசம், தேசியம் என்கிற கருத்துருவாக்கம் ஆகும். 

தமிழ்த்தேசியம் என்றவுடன் சிலரால் தமிழீழ தேசியம், தமிழ்நாட்டு தேசியம் என்பதைக் கூட பிரித்துப் பார்க்க முடியாத வகையில் குழப்பமாகவே நோக்கப்படும் ஓர் சூழ்நிலை காணப்படுகிறது. இரண்டுமே அதனதன் நிலைகளில் வேறுபாடுகளை கொண்டவை தான். ஆனால், இரண்டுமே சரியான பாதையில் அவற்றிற்குரிய நியாயங்களோடு கட்டி எழுப்பப்படுமாயின் ஒன்று மற்றொன்றுக்கு பலம் சேர்க்கும் என்பதே என் புரிதல். 

இன்றைய உலகப் பொருளாதார ஒழுங்கமைப்பில் புதிதாய் உருவாகும் ஓர் தேசம், தேசியம் என்கிற கருத்தியலை ஏகாதிபத்திய முதலாளியப் பொருளாதார முறைமைகள் சுலபமாக ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ போவதில்லை. அத்தோடு, என் புரிதலில் ஸ்டாலின் வரையறை செய்த தேசியம் என்பதன் அடிப்படைக்கூறுகளுக்கும், தன்னாட்சி அல்லது சுயநிர்ணய உரிமை என்பதன் அடிப்படை கூறுகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்பது தான். ஐ. நாவின் உருவாக்கம் சுயநிர்ணய உரிமை என்பதைத்தான் வரையறை செய்திருக்கிறது. தேசம், தேசியம் என்கிற கருத்துருவாக்கங்கள் ஐ. நா. பிரகடனங்களில் உருவானால் பிறகு அவர்கள் விரும்பும் ஒன்றுபட்ட தேசம்/நாடு (Unitary State) (அடித்தாலும், கொன்றாலும்) என்று போதிக்க முடியாது. நான் படித்தவரை ஐ. நா. வின் ஆவணங்களில் குறிப்பிடப்படும் வார்த்தைகள் அரசு (State), இறையாண்மை (Sovereingnty), மக்கள்குழு (Peoples), சமவுரிமை (Equal Rights) etc. என்பவை தான். ஆனாலும், இனம் மற்றும் மொழி சார் தேசிய உரிமைகள் ஐ. நா. வின் பிரகடனங்கள் மூலம் வென்றேடுக்கப்படக் கூடியவையே.

இதை மிகத் தெளிவாக தமிழ்நாட்டு தமிழ் தேசியத்தில் காணக்கூடியதாய் உள்ளது. பெரும்பாலான தமிழர்கள் இந்தியர்கள் என்கிற அடையாளத்தையே விரும்புகிறார்கள். இந்திய தேசியத்தை நேசிக்கிறார்கள். தமிழ்த்தேசியம் என்றவுடன் இந்தியர்கள் என்கிற தங்கள் அடையாளத்தை தொலைத்தவர்கள் ஆகிவிடுவோமோ என்று அஞ்சுவது  போல் சில கருத்துகளை படித்திருக்கிறேன். தமிழ்த்தேசியம் பேசினால் அது இந்தியாவிலிருந்து ஒரேயடியாய்ப் பிரிந்து போவதல்ல. அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதும் அல்ல. தமிழ்த்தேசியம் மொழியின் அடிப்படையில் உருவான உரிமை, அறிவு மற்றும் உணர்வு சார் கருத்தியல்.

இங்கே எனக்கு கனடாவில் பிரெஞ்ச் தேசியம் பேசும் நண்பர்கள் ஞாபகம் வருகிறது. என் பிரெஞ்ச் நண்பர் ஒரு சில சமயங்களில் சொல்வார், கியூபெக் தனியே பிரிந்து போக ஆசைப்படுகிறது பிரித்தானியாவின் முடியாட்சியின் கூறுகளையும் சேர்த்துக்கொண்டே, Constitutional Monarchy!! ??

தமிழ்த்தேசியத்தை யார் முன்வைத்தாலும் தமிழ்நாடு இந்தியாவோடு சேர்ந்தே இருக்கவேண்டுமா அல்லது பிரிந்து தனிநாடாய் அமைய வேண்டுமா என்றால் அதற்கு விடை கானவேண்டியவர்கள் தமிழ்நாட்டு தமிழர்களே. ஈழத்தமிழர்களோ அல்லது வேறு யாரோ எந்தவொரு முடிவையும் தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் திணிக்க முடியாது. ஆனாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் Wishful Thinking என்று ஒன்று இருக்கவே செய்கிறது!!

தமிழீழத்தேசியம், தமிழ்நாட்டு தமிழ்த்தேசியம் என்கிற தமிழ்மொழித் தேசியத்தின் மூலம் சர்வதேச சட்டங்களிற்கு இணங்க சுயநிர்ணய உரிமை அல்லது தன்னாட்சியை வென்றெடுக்கலாம் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை அது தமிழ்மொழிக்கு மட்டுமன்றி மற்றைய மொழிசார் தேசியமும் உள்வாங்கப்படவேண்டும். சாதியை ஒழித்துவிட்டு, பொருளாதார சமநிலையை உருவாக்கிவிட்டு தமிழ்த்தேசியம் பேசலாம் என்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று. அது கடலில் அலை ஓய்ந்த பின் குளிக்கலாம் என்பது போன்று. சாதி ஒழிக்கப்பட வேண்டியது தான். அதில் எனக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. சாதி, மதம் (இந்துத்துவா) என்கிற வரையறைகளை தாண்டி மத்தியில் எல்லா மொழிசார் மாநிலங்களும் அரசியல் சமவலுப்பெற்று இருக்கவேண்டும். அதுவே சரியான ஓர் ஜனநாயக அமைப்பின் பிரதிநிதித்துவமாக இருக்கும். இந்தியா தன்னை ஓர் ஜனநாயக நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் அப்போதான் அர்த்தமிருக்கும். 

இந்துத்துவா என்பது மேலும், மேலும் ஒன்றுபட்ட இந்தியாவின் எல்லாக்கூறுகளிலும் அதன் ஆதிக்கத்தை செலுத்துமாயின் அதே வேகத்திற்கு இந்தியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதமும் வளர்ந்துகொண்டே போகும் என்கிற கசப்பான உண்மையையும் கவனத்திற் கொண்டால் நன்று.

எனக்கு இந்திய அரசியல், தமிழக அரசியல் பற்றிய பூரண அறிவு கிடையாது. எனக்கு தெரிந்த வரை, நான் அறிந்தவரை என் கருத்துகளை இங்கே முன்வைக்கிறேன். 

இனி தமிழ்த்தேசியம் பேசுபவர்களைப் பற்றி கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம். என்வரையில், ஈழத்தில் தமிழ்தேசியத்தின் முன்னோடி ஆறுமுக நாவலர் என்று சொல்வது எவ்வாறான முரண்நகையோ அது போன்றது பா.ம.க. ராமதாஸ் தமிழ்தேசியம் பேசுவது. 

ஈழத்தில் ஆறுமுக நாவலர் தமிழுக்கும், சைவத்துக்கும் தொண்டாற்றினார் என்பது மறுக்க முடியாதது தான். தமிழர்கள் ஓர் தனி தேசிய இனம், எங்களுக்கு என்றோர் வரலாறு, இலக்கியம், அது சார்ந்த வாழ்க்கை முறை என்பனவெல்லாம் இருக்கிறதென்று உலகிற்கு எடுத்துக்காட்டியவர் தான், மறுப்பதற்கில்லை. ஆனால், அவர் எல்லோருக்கும் பொதுவான தமிழ்த்தேசியம் பேசினார் என்பதை என் முன்னோர்கள் சொன்ன கூற்றுகளின் அடிப்படையில் யோசித்தால் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. 

ஈழத்தமிழர்கள் ஓர் தனி தேசிய இனம். எங்களின் அந்த தேசிய அடையாளக்கூறுகள் அழிக்கப்பட்டது, அழிக்கப்படுகிறது என்பது வரலாற்றில் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. இருந்தாலும், ஈழத்தில் தமிழ்தேசியம் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தந்தை செல்வாவால் தான் முன்வைக்கப்பட்டது. ஜி.ஜி. பொன்னம்பலம் (இலங்கை தமிழ் காங்கிரஸ்) போன்றோர் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் சமவுரிமைகளுடன் வாழவேண்டும் என்று சொன்னபோது, தந்தை செல்வாவால் (தமிழரசுக்கட்சி) முன்வைக்கப்பட்டது தான் தமிழ்தேசியம். குறைந்த பட்ச உரிமையாய் அவர் தமிழர்களுக்கு கேட்டது மாநில சுயாட்சி. 

இதில் வேடிக்கை என்னவென்றால், 1952 இல் ஜி. ஜி. பொன்னம்பலம் தேர்தலில் வெற்றிபெற்று தந்தை செல்வா வெற்றியீட்டாமல் போனது தமிழர்கள் அன்று தமிழ்தேசியத்தை கட்டியெழுப்பும் ஓர் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார்கள் என்கிற விமர்சனப் பார்வை தான். என்னுடைய கருத்து அன்று இருந்த அரசியல் சூழலில் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்தேசியம் என்கிற கருத்தியல் நிச்சயம் தெளிவாக புரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான். அதே தந்தை செல்வா தலைமையில் (தமிழர் ஐக்கிய விடுதலை  முன்னணி) உருவான வட்டுக்கோட்டை தீர்மானம் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ்தேசியம் பின்னர் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றியீட்டியது. அதுவும் தமிழ்மொழிக்குரிய சட்டரீதியான அந்தஸ்தை 1956 இல் பண்டாரநாயக்க பறித்துக்கொண்டது தமிழ்தேசியத்தை அதன் அவசியத்தை ஈழத்தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள். இப்படி வரலாறு ஈழத்தமிழர்களுக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் ஏராளம்.

இப்போ தமிழ்நாட்டிலும் தமிழ்தேசியம் என்பது அதனைப் பேசும் தனிமனித கூறுகளை கொண்டே மதிப்பிடப்படும் ஓர் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அதன் விளைவாய் தமிழ்த்தேசியம் விமர்சிக்கப்படுகிறது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஜாதியைக் காட்டி தேர்தல் அரசியலில் மந்திரிப்பதவி கனவு காணும் ராமதாஸ் தமிழ்தேசியம் பேசினால் யாருக்குமே தமிழ்த்தேசியம் மீது நம்பிக்கை வர மறுப்பது இயல்பே. இவர் போன்றோர் தமிழ்தேசியத்துக்கும் இந்திய இறையாண்மைக்கும் இடையே கோடு போட்டு ரோடு போட்டு தங்களை வளர்த்துகொண்டது தான் வரலாறு. தமிழ்நாட்டையே பிரிக்கவேண்டும் என்று சொல்பவர்களில் இவர் முன்னணியில் இருப்பவர். இதைத்தவிர இவர் பற்றி எனக்கு சொல்ல ஏதுமில்லை. 

அடுத்து, பெ.மணியரசன், கொளத்தூர் மணி போன்றோர் தமிழ்த்தேசியம் குறித்த ஓர் சரியான பார்வையை கொண்டவர்களாக எனக்கு தெரிகிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் தேவை முதற்கொண்டு சமூக, பொருளாதார கூறுகள், அதன் பண்புகள், வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைக்கிறார்கள். நதி நீர்ப்பிரச்சனை மற்றும் பங்கீடு, மொழி சார் குடியுரிமை, தமிழக வளங்கள் அதன் பயன்பாடு, தமிழகத்தின் புவியியல் அமைப்பு அதன் பாதுகாப்பு போன்ற விடயங்களை தெளிவான ஓர் பார்வையில் விளக்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் அரசியல், பொருளாதார, கல்வி, சமூக கட்டுமானங்கள் அதன் பொருட்டு உருவாக்கப்பட வேண்டிய தமிழ்த்தேசியம் குறித்து என் போன்றோருக்கு ஓர் தெளிவான பார்வையை கொடுக்கிறார்கள். 

இவர்கள் பேசும் தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நாடு தனிநாடாய் உருவாக்கப்படவேண்டும் என்பதானதே என்கிறது தான் என் புரிதல். அதாவது External Self-Determination என்பதாகும். இவர்கள் ஈழத்தமிழர்களின் நாடு கடந்த தமிழீழத்தை, அது தாங்கி நிற்கும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பது வரவேற்கத்தக்கது. 

அடுத்து வை.கோ., பழ நெடுமாறன் போறோரைப் பார்த்தால் இவர்கள் ஒன்றுபட்ட இந்தியாவிற்குள் அரசியல் சமவுரிமைகளுடன் கூடிய ஓர் கூட்டாட்சியை வலியுறுத்துபவர்களாக காணப்படுகிறார்கள். இந்திய இறையாண்மையையும் தமிழ்தேசியத்தையும் ஒருசேர நேசிப்பவர்கள். ஆனால், ஈழம் குறித்து அதிகம் பேசுபவர்கள் என்பதால் இவர்கள் பேசும் தமிழ்த்தேசியம் ஈழம் சார்ந்தது என்கிற ஓர் தப்பான அபிப்பிராயம் உண்டு. 

இங்கே ஓர் விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். அறிஞர் அண்ணா காலத்தில் ஹிந்தி எதிர்ப்பிற்காய் பேசப்பட்ட தமிழ்நாட்டு தமிழ்த்தேசியம் எப்படி தந்தை செல்வாவை பற்றிக்கொண்டதோ, அதே போல் ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கொடுத்த உடலும், உயிரும் வை.கோ., பழ. நெடுமாறன் ஆகிய இவர்கள் இருவரையும் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை. ஆக தமிழீழ தமிழ்தேசியம், தமிழ்நாட்டு தமிழ்த்தேசியம் இரண்டும் வெவ்வேறு. ஆனால், இரண்டிலுமே ஒன்றின் பாதிப்பு இன்னொன்றில் இருக்கவே செய்யும். 

இறுதியாக, திருமாவளவன் பற்றி நான் பேசவே விரும்பவில்லை. அவரின் கொள்கை என்னவென்று அவருக்கே தெளிவில்லாத போது, அது பற்றி நான் என்ன விவரிக்க. இவர் தமிழ்தேசியத்தை நேசிக்கிறாரா அல்லது இந்திய இறையாண்மையை பூஜிக்கிறாரா என்பதே எனக்கு புரிவதில்லை. அதனால் இவரை எனக்கு விமர்சிக்கத்தெரியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

தந்தை பெரியார், அவரை நேசிக்கும் வே.மதிமாறன் போன்றோரது தமிழ்தேசியம் குறித்த பார்வை பற்றி இன்னோர் பதிவில் என் கருத்துகளை பதிய வேண்டும் என்றோர் விருப்பமுண்டு. நேரமிருக்கும் போது அதையும் முயற்சிக்க வேண்டும். 

ஈழத்தமிழர்கள் ஆனாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆனாலும் தமிழ்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பன இனி தவிர்க்க முடியாத கருத்தியலாய் ஆகிப்போயின. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அது தனித்தமிழீழம் என்கிற தனிநாடு தான். அதன் மூலமே இனி எங்கள் மொழி, அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளையும், எங்கள் தேசியத்தையும்; இவை எல்லாவற்றிகும் மேல் தமிழன் என்கிற ஓர் தேசிய இனத்தை பாதுகாக்கவும், தக்கவைத்துக்கொளவும் முடியும் என்று முள்ளிவாய்க்கால் முடிவு உணர்த்தியிருக்கிறது. முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரும் தமிழ்தேசியத்தின் அவசியத்தை தமிழர்கள் உலகிற்கு உணர்த்தவில்லை என்றால் எங்கள் இனம் மட்டுமல்ல நாங்கள் வாழ்ந்ததின் அடையாளங்கள் கூட அழிக்கப்படும். 

தமிழ்நாட்டு தமிழ்த்தேசியம் ஒன்றுபட்ட இந்தியாவிற்குள்ளா அல்லது தனி தமிழ்நாடா என்பது வேண்டுமானால் கேள்விக்குள்ளாகலாம். தமிழ்தேசியம் தமிழ்நாட்டுக்கு தேவையா இல்லையா என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காலம் கடந்த கேள்வி!!!


மே 25, 2011

மனித உரிமைகள் சபையும் அணிசேரா நாடுகளும்! - ஈழம்


இழப்புகள், இழப்புகள், இழப்புகள் இதை தவிர ஈழத்தமிழர்களாகிய எங்களிடம் சொல்லவும் வார்த்தைகள் இல்லை. இனிமேல் யாருக்கும் அது பற்றி சொல்லவும் வெறுப்பாய், எரிச்சலாய் இருக்கிறது. ஈழத்தின் வாழ்வும், தாழ்வும், எதிர்காலமும் சர்வதேச அரசியலில் குரல்வளை நெரிக்கப்பட்டு மூச்சுத் திணறுகிறது. 

உலக அதிகாராங்களின் உச்ச பீடமாய் ஐ. நா. அதன் அதிகாரங்கள் நிறைந்த ஆனால், புதிய உலக ஒழுங்கின் எழுதப்படாத விதிகளுக்கு சலாம் போடும் செயற்திறனற்ற செயலர் பதவியே உலக கெளரவம். அங்கே உண்மைகளுக்கு, நியாயங்களுக்கு இடமில்லை என்கிற அரசியல் சதுரங்கம். அதை விளையாட மூன்று களங்கள் பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, மனித உரிமைகள் சபை. அப்பப்போ விமர்சிக்க இன்னர் சிட்டி பிரஸ். மற்றப்படி தேவைக்கேற்ப விமர்சிக்கவும், பாராட்டவும் சர்வதேச ஊடகங்கள், வேடிக்கை பார்க்க பாதிக்கப்படாதவர்களும் அறிவுஜீவிகளும், தீண்டப்படாத ஜாதிஜாய் அங்கே ஈழத்தமிழனுக்குரிய நீதி! இது தான் புதிய உலக ஒழுங்கின் சர்வதேச கட்டமைப்பு. 

இவ்வளவு விவரணைகள் எதுக்கு என்று யோசிக்கலாம் படிப்பவர்கள். வருகிற May 30 இல் ஐ. நா. மனித உரிமைகள் சபை கூட்டம் மீண்டும் கூடுகிறது. ஏற்கனவே கடந்த 2009 மே மாதம் நடந்த கூட்டத்தொடரில் இலங்கையின் இனவழிப்பை பயங்கரவாத ஒழிப்பு என்று பாராட்டு விழா நடத்தி ஓர் தீர்மானம் (A/HRC/8-11/L.1/Rev.2) நிறைவேற்றியாகிவிட்டது. இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இலங்கை தன்னைத்தானே தானே பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் என்று பாராட்டி நிறைவேற்றப்பட்டது தான் அந்த மேற்சொன்ன தீர்மானம். ஆரம்பத்தில் ஐ. நா. மனித உரிமைகள் சபையின் சிறப்புக்கூட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தால் கூட்டப்பட்ட போது இந்தியாவின் பிரதிநிதி அந்த கூட்டம் தேவையற்றது. பயங்கரவாத இயக்கத்தை இலங்கை ஒழித்தது என்று பாராட்ட வேண்டும், தண்டனை கொடுக்க கூடாது என்று சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளின் துணையுடன் அதை தோற்கடித்தார்கள்.

இந்த வருகிற கூட்டத்தொடரில் ஐ.நா. வின் மூவர் குழு அறிக்கையில் கூறப்பட்ட மனித உரிமைகள் விடயத்தை, குறிப்பாக மேலே சொன்ன அந்த தீர்மானத்தை (A/HRC/8-11/L.1/Rev.2) மறுபரிசீலனை செய்யச்சொல்லி அவர்களின் ஆலோசனைக்கேற்ப பரிசீலிப்பார்களா! அவ்வாறெனின், ஈழத்தின் இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள், மனிதத்திற்கெதிரான குற்றங்கள் சம்பந்தமான விசாரணைகள் மூவர் குழு அறிக்கைகேற்ப சர்வதேசா, சுயாதீன விசாரனைக்குழுவால் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை ஐ. நாவின் செயலருக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுமா? ஐ. நா. செயலரும் அறிக்கையில் சொல்லப்பட்ட படி எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ள மூன்று அமைப்பின் ஏதாவதொரு ஒரு அமைப்பு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தானே சொன்னார். 

இங்கே தான் ஆரம்பமாகும் இரண்டாய்ப் பிரிந்து கிடக்கும் உலக ஒழுங்கின் அரசியல் சாணக்கியமும், சதுரங்கமும். இலங்கை ஐ. நா. மூவர் குழு அறிக்கை கைவரப்பெற்றதும் உடனேயே 'அணிசேரா நாடுகளின்' ஆதரவைத்தான் முதலில் நாடி ஓடியது. இந்த அணிசேரா நாடுகள் பற்றி மிக சுருக்கமாக பார்க்கலாம். 

அணிசேரா நாடுகள் அமைப்பு (Non-Alligned Movement - NAM) என்பது பனிப்போர் காலத்தில் 1961 ம் ஆண்டு ஆரம்பிக்கட்டது. இதில் இலங்கை, இந்தியாவும் அடக்கம். இதன் நோக்கம் தங்களை அமெரிக்க, பிரித்தானிய மறைமுக, நேரடி காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்டு இனிமேல் அப்படி ஓர் நிலை தங்கள் நாட்டின் இறையாண்மைக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ நேரக்கூடாது என்றும்; ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும்; மற்றும் மாறிவரும் அரசியல், பொருளாதார உலக ஒழுங்கிற்கேற்ப தங்கள் நாட்டை கட்டியமைக்க வேண்டும் என்று மூன்றாம் உலக நாடுகளால் உருவாக்கப்பட்டது. இது ஐ. நா. வின் ஓர் அங்கமாக அதன் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு ஏற்றாற் போல் தான் தங்கள் நடைமுறைகளை வகுத்திருக்கிறார்கள். 

இந்த அணிசேரா நாடுகள் தான் ஐ. நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் அதிக அங்கத்துவம் பெற்றிருக்கிறார்கள். இந்த அமைப்பில் 118 நாடுகள் உறுப்பினர்களாகவும், 47 நாடுகள் ஐ. நாவின் மனித உரிமைகள் சபையில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பிடிக்கிறார்கள். இந்த வருடம் இந்தியாவும் இந்த சபையில் உண்டு. 

இனி, ஈழம் தொடர்பான மூவர் குழு அறிக்கையின் ஆலோசனைகளை ஏற்று போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் ஒன்று மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட இந்த அணிசேரா நாடுகள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமா என்பதே கேள்வி. 

அணிசேரா நாடுகளுடன் கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளும் அமெரிக்க, பிரித்தானிய எக்கதிபத்தியத்திற்கு எதிராக, இலங்கைக்கு ஆதரவாக மறுபடியும் மனித உரிமைகள் சபையில் செயற்படுவார்களா என்பது தான் பலரின் கேள்வி. முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் இலங்கைக்கே உண்டு. காரணம், அமெரிக்கா என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. ஆக, இந்த போர்க்குற்றங்களும் விசாரணைகளும் மீண்டும் ஓர் ஏகாதிபத்திய, அணிசேரா நாடுகளின் அரசியல் சதுரங்கத்தில் சிக்கித்தவிக்கத்தான் போகும் போலுள்ளது.

இந்த மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் அணிசேரா நாடுகள் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பரிந்துரைக்கும் பட்டும் படாத, அரைகுறையான தீர்மானத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்களா! இல்லையென்றால் தங்கள், தங்கள் நாடுகள் காலனியாதிக்கத்தில், புதிய உலக ஒழுங்கில் பட்ட கஷ்டங்களுக்குள்ளேயே ஈழத்தமிழர்களையும் தள்ளிவிடுவார்களா! 

உதவி:http://tamilnet.com/art.html?catid=79&artid=33955

படம்: Google 

மே 24, 2011

இந்திய ஜனநாயகம் Vs தமிழக ஜனநாயகம்!

நட்சத்திரப் பதிவர் வாரம் முடிந்த கையோடு சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். இருந்தும், இரண்டு பேர் சொன்ன கருத்துகள் இந்த நிமிடம் வரை என் மூளைக்குள் ஏதோ எதிரொலிப்பது போல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

"இந்திய ஜனநாயகத்தில் இங்குமங்கும் குறைபாடுகள் இருந்தாலும் ஜனநாயக பாதையில் தளைத்து நிற்கிறதென்றே கூறலாம்." - ராஜநடராஜன்

"சீமான் பற்றி பலரும் பேசப் பயப்படுகிறார்கள்". - ஜோதிஜி.

இந்த இரண்டு கூற்றுக்களையும் இரண்டு வெவ்வேறு பதிவுகளில் படித்த போது இந்தியாவில் தானே தமிழகம் இருக்கிறது. பிறகேன் சீமான் பற்றி பேசக்கூட தமிழக தமிழர்கள் பயப்பட வேண்டும் என்று நினைக்கத்தோன்றியது. இவற்றுக்கிடையே இருக்கும் உண்மை, பயம், வேற்றுமைகள் நிறையவே யோசிக்க வைக்கின்றன. 

சீமான் பற்றி பேசப்பயப்படுகிறார்களா அல்லது சீமான் பேசும் உண்மைகளும் கருத்துகளும் பயம் காட்டுகின்றனவா? இந்திய இறையாண்மை எத்தனை தடவைகள் சீமானை மட்டும் சிறையில் வதைத்து தண்டித்தது என்று யோசிக்கும் போது இந்திய ஜனநாயகம் குறித்த ஐயப்பாடு எழவே செய்கிறது. 

இறையாண்மை என்கிற கருத்தியலே இப்போதெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது அது பற்றி இலங்கையும், இந்தியாவும் மட்டுமே எப்போதும் இடைவிடாது பேசுவதன் நோக்கம் புரியாததல்ல. இலங்கையின் இறையாண்மை பற்றி இந்தியாவிற்கு இருக்கும் அக்கறை இந்தியாவின் இறையாண்மை பற்றி இலங்கைக்கு கிடையாது. அதற்குரிய அரசியல் சூழ்நிலைகள் இந்திய அரசியல் அறிவுஜீவிகலாலேயே  உருவாக்கப்பட்டுவிட்டது. அதன் ஆழ, நீள, அகலங்கள் இலங்கையில், இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கத்தின் எல்லை கொண்டே தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. 

சீனாவின் String of Pearl Theory- Bluewater Ampition என்றெல்லாம் வர்ணிக்கப்படும் எந்த ஒரு திட்டமும் இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் இல்லையாம். சீமான் பேசும் போது மட்டும் இறையாண்மை களங்கப் படுகிறதாம். சிறையில் அடைபட்டும் சீமான் தனக்கு மட்டும் மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்காமல் இன்றுவரை பேசிக்கொண்டே இருக்கிறார். இனி எதிர்காலத்தில் அவர் மீது எந்த ஜனநாயகம் காக்கும் கறுப்புச் சட்டம் பாயும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


நாங்கள் அதில் தானே வல்லவர்கள். சீமான் போல் யாராவது பேசினால், செயற்பட்டால் அவர்களைப் பற்றி விமர்சிப்பதோடு எங்கள் கடமையை முடித்துக்கொள்வோம்! ஏதாவது கருப்புச்சட்டம் பாயும் என்றால் பிறகு அவர் பற்றி பேசக்கூட பயப்படுவோம். 

சுப்பிரமணிய சுவாமி பேசினால் களங்கப்படாத இந்திய இறையாண்மை சீமான் பேசினால் மட்டும் களங்கம். ஒருவேளை சு.சுவாமி அறிவுஜீவி, intellectual! சீமான் தமிழன் என்கிற வேறுபாடாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இந்த ஒப்பீடு அறிவீனமானதாக கூட இருக்கலாம். எஸ். எம். கிருஷ்ணா இந்தியா அல்லாத ஓர் நாட்டு அறிக்கையை தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பது கூட தெரியாமல் ஐ. நா. மன்றத்தில் நின்றபோது எத்தனை இந்தியர்கள் வெட்கித்தலை குனிந்தீர்கள்!

அருந்ததி ராய் இந்திய ஜனநாயகம் அதன் குறைபாடுகள் பற்றி சர்வதேசத்திற்கும் கேட்குமளவிற்கு பேசிக்கொண்டிருக்கிறார். அவரை ஒருநாளுக்கு மேல் சிறையில் அடைக்க முடியாது!! மிஞ்சிப்போனால் தங்கள் உரிமைகளுக்காக நியாயமாகப் போராடும் யாரையாவது ஆதரிக்கிறாய் என்று ஒப்புக்கொள் என்று தேசிய மைய ஊடகத்தில் பேட்டி காணுவார்கள். அருந்ததி ராயை சிறையில் அடைக்கத்தான் விருப்பம் இந்திய ஆளும்வர்க்கத்திற்கு. ஆனால் அவரை சிறையில் அடைத்தால் இந்திய ஜனநாயகம் சர்வதேச அரங்கில் சிரிப்பாய் சிரிக்கும் என்பது தான் யதார்த்தம். 

இறையாண்மை என்பது ஜனநாயக பண்புகளை, தார்மீக விழுமியங்களைப் பேணுவதால் தான் காப்பாற்றப்படும் என்றால் இந்தியா அதிலிருந்து என்றோ மிக மோசமாக தவறிவிட்டது. இந்தியா போன்றதோர் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு ஏன் 'பொடா' என்கிற பயங்கரவாத தடுப்பு சட்டம். இந்தியா தன்னைச் சுற்றியுள்ள அயல்நாடுகளின் இறையாண்மையை பாதிக்கும் அல்லது பாதுகாக்கிறேன் பேர்வழி என்கிற இந்திய கொள்கையை ஜனநாயகத்துக்கு பாதகமாய் யாரும் கருதுவதே இல்லையா! திபெத்தின் தலாய் லாமாவை இந்தியா ஆதரித்தால் அது சீனாவின் இறையாண்மைக்கு களங்கம் இல்லை! சீமான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காய் பேசினால் இறையாண்மைக்கு களங்கம். 


ஈழம் பற்றி எரிந்துகொண்டிருந்த போது தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். பிறகு, அது எப்படி சந்தடியே இல்லாமல் காணாமற் போனது என்கிற போது இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து தான் போகிறது. 


ஈழத்தில் தமிழர்களை எப்படி அடக்கி ஒடுக்குவது என்று சிங்கள பெளத்த ஆட்சியாளர்கள் கற்றுக்கொண்டதே இந்திய-காஷ்மீர், சீன-திபெத்திய அடக்குமுறைகளின் மூலம் தான். 

இப்போ ஐ. நாவின் மனித உரிமைகள் சபையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா அமரப்போகிறது. இனிமேல் ராஜபக்க்ஷேவுக்கு கொண்டாட்டம் தான். இந்தியாவின் இன்னோர் ஜனநாயக முகம் இனிமேல் வெளிப்படும் என்பதில் ஆச்சர்யமில்லை. ஈழத்தமிழர்களுக்கு இந்தியா எந்தவொரு உரிமையையும் பெற்றுத்தரப்போவதில்லை என்று உறுதியான பின் இந்தியாவின் ஜனநாயக மூடி மனித உரிமைகள் சபையில் கிழிபட்டால் எங்களுக்கு சந்தோசமே!


இன்று உலகமே போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்களை இந்தியா வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கிறது. ஆனால், வெட்கக்கேடு தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஓர் சீமானை தமிழ்தேசியம் பேசுபவர்கள் கூட ஒரே அணியில் சேர்ந்து நின்று ஆதரிப்பதில்லை என்பது தான். என்ன காராணம், Power Struggle or Ego!!!!


மே 21, 2011

பிரதிநிதித்துவ ஜனநாயகம், சீமான்! முத்துக்குமார்!! மற்றும் ஈழத்தமிழர்கள்!!!

பிரதிநிதித்துவ ஜனநாயகம் (Representative Democracy) தற்காலங்களில் பிரதிநிதித்துவம் அதிகமாயும், ஜனநாயகத்தின், அதன் பண்புகளின் அளவுகள் குறைந்தும் காணப்படுகிறது என்று அருந்ததி ராய் எழுதியிருந்தார். வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் அதன் வெளிப்பாட்டை நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம் என் கருத்து. இதன் ஆரம்பம் எங்கே என்று தோண்டினால் ஜனநாயகமும் தாராளமயமாக்கல் சந்தைப் பொருளாதாரமும் கைகோர்த்துக் கொண்டதன் தொடக்கப் புள்ளி என்று தான் சொல்கிறார்கள். நடந்து முடிந்த தமிழக நாடாளுமன்றத் தேர்தல் களம் அதன் முடிவுகள் பற்றி சிந்தித்த போது இது மனதில் தோன்றியது. 

ஜனநாயகம் என்பதன் பண்புகளும் விழுமியங்களும் பல இடர்களை தாங்கித்தான் இன்றைய காலகட்டத்தில் நின்றுபிடிக்கிறது. ஜனநாயகம் என்பது கூட பொருளாதார கொள்கைகளில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட  ஓர் தெரிவுதான். எப்படியோ ஜனநாயகத்தின் மீது இன்னும் நம்பிக்கை கொண்ட நாங்கள் தொடர்ந்து எங்களின் கோரிக்கைகளும், தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கையில் நாங்களும் வாக்களிக்கிறோம். உள்ளூர் பஞ்சாயத்து முதல் பலகோடி ஊழல் வரை நீதிபெறவேண்டிய வரியிறுப்பாளர்களுக்கு பதில் சொல்லவேண்டிய நீதிபரிபாலன அலகுகளும் தவறிப்போகின்றன. முடிவு, தீர்ப்பு வழங்க மக்கள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அட, தமிழ்நாட்டு தேர்தல் கள முடிவுகளை சொல்கிறேன்!

இந்த முடிவுகள் ஒன்றும் தானாக, இயல்பாக அமைந்துவிடவில்லை. முத்துக்குமாரின் தியாகம், சீமானின், அவரோடு இணைந்து அவரைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் இளையதலைமுறைத் தமிழர்களும் உழைத்ததன் விளைவு தான் இது. மன்னர் ஆட்சிக்காலத்தில் சொல்வார்களாம், "மன்னா எதிரிகள் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்" என்று. ஆனால், இன்றோ தாராளமயமாக்களில் பல்தேசிய நிறுவனங்களின் ஆக்கிரமப்பில் நிலைமைகள் தலைகீழ்! 


இனி அடுத்த ஐந்து வருடங்களுக்கு வாக்களித்தவர்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் கட்சிகளின் குறியீடுகள் ஆகிப்போன  எங்கள் பிரதிநிதிகள் என்னென்ன தப்புத் தண்டா செய்கிறார்கள் என்று கண்ணில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு பத்திரிகைகளை வாசிக்கவேண்டும், செய்திகளை கேட்கவேண்டும். காலைக்கடன் போல் இது ஒரு பெரிய வேலை தினமும். பின்னே ஆள் மாற்றி, ஆள் மாற்றி ஆட்சியில் அமர்ந்து சுழற்சி முறையில் ஊழல் செய்யும் ஜனநாயக பிரதிநிதிகளை கண்டும் காணாமல் விடவும் மனம் வராது!

என்ன தத்துப்பித்து தத்துவமோ! அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஜெயலலிதா கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிவிட்டார். தமிழக முதல்வர் ஆகிவிட்டார். இவரின் வெற்றிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் கடுமையான அயராத உழைப்பே காரணம் என்று பரவலாக எல்லோரும் கருத்து வேறுபாடின்றி சொல்கிறார்கள். என்னைக்கேட்டால் சீமான் மட்டுமல்ல தமிழகத்தில் இந்த தேர்தல் மூலம் ஓர் அமைதியான மக்கள் எழுச்சி வரக்காரணம் தியாகி முத்துக்குமாரும் தான். முத்துக்குமார் தீக்குளித்த போது தி.மு.க. வும் காங்கிரசும் எங்கே தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஈழத்திற்காய் இன்னும் கொதித்தெழப் போகிறார்களோ என்று செய்த தகிடு தத்தங்கள் கொஞ்சமல்ல. உண்மையிலேயே தமிழர்கள் முத்துக்குமாருக்கு செய்யவேண்டிய மரியாதையை செய்துவிட்டார்கள். 


அரசியல் ஆய்வுகளில் சொல்கிறார்கள் தி.மு.க. வை வீழ வைத்தது காங்கிரஸ் என்று. அந்தக்காரணம் தவிர, ஈழத்திற்கும், ஈழத்தமிழர்களுக்கும் செய்த துரோகமே அவர்கள் ஆட்சி கவிழக் காரணம்; ஆனாலும், ஊடகங்கள் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் தான் காரணம் என்று சொல்கிறார்களாம். இதில் தொக்கி நிற்கும் விடயம் அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஜெயலலிதா தேர்தல் களத்தில் முன்வைத்த வாக்குறுதிகளில் ஒன்று ஈழத்தமிழர்கள் பற்றியது. ராஜபக்க்ஷேவை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என்று சொன்னதாக எனக்கு ஞாபகம். தேர்தல் வெற்றிக்குப்பின் ஈழப்பிரச்சனையில் தன்னால் ஓர் வரையறைக்கு உட்பட்டே செயற்பட முடியும். மத்திய அரசு தான் ஈழப்பிரச்சனையை கவனிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கே உரிய Selective Amnesia வின் அறிகுறிகளை (symptoms) காட்டினார்.

இவர் பாட்டுக்கு இந்திய மத்திய அரசு தான் ஈழப்பிரச்சனையை கவனிக்க வேண்டும் என்றவுடன் எனக்கு இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்தியா ஈழப்பிரச்சனையை இழவுப்பிரச்சனை ஆக்கியது போதாதா!!!! தேர்தலில் வென்றால் வந்தமா, கையசைத்தமா, உதடுகள் அசையாமல், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் எதையாவது பேசினமா, போனமா என்றில்லாமல் இவருக்கு ஏன் இந்த வேலை என்று நான் பாட்டுக்கு கதி கலங்கிப் போய் யோசித்தேன்.

எப்படியோ, ஜெயலலிதாவின் ஈழம் சம்பந்தமான வாக்குறுதிகளை மறக்கடிக்கவே தமிழர்கள் தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் காரணமாகத்தான் மக்கள் அ.தி.மு.க. வைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று ஊடகங்கள் சொல்வதாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள். ஆனாலும், ஈழம், எங்கள் உறவுகள் என்றவுடன் நாங்கள் சோனியா காந்தி, ராஜபக்க்ஷேக்கள் வகையறாக்களிடம் கூட கருணைமனு கொடுக்கத் தயக்கம் காட்டாதவர்கள். தமிழக முதல்வரை விடுவோமா! ஈழத்தமிழர்கள் விடயத்தில் குறிப்பாக போர்க்குற்ற விசாரணைகளுக்காக என்றாலும் ஓர் துரும்பையேனும் டெல்கியிடம் தூக்கிப் போடுவார் என்று ஓர் பகற்கனவு உண்டு. அது பலிக்கிறதா பார்க்கலாம். 

இது தான் என் நட்சத்திர வாரத்தின் கடைசிப் பதிவு. என்னை இந்த ஒரு வாரம் முழுக்க ஊக்கம் கொடுத்து, சகித்துக்கொண்ட உங்கள் எல்லோருக்கும் என் வந்தனங்களும், நன்றிகளும். 


பெண்களும் சில களங்களும் - அரசியல், பதிவுலகம்

ஈழம் தவிர்ந்த ஓர் பதிவு அதுவும் பெண்கள் பற்றி இந்த வாரத்தில் எழுதவேண்டும் என்கிற ஓர் அவா இருந்துகொண்டே இருந்தது. அதன் முயற்சி தான் இது. உலகளாவிய பொருளாதார கோட்பாடுகள், அதனால் உண்டான சமூக, கலாச்சார, வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பவற்றுக்கு ஏற்ப பெண்ணின் சமூக இருப்பும்  முன்னேற்றங்களும், பின்னடைவுகளும் கூட பல தாக்கங்களை அவர்கள் வாழ்க்கையில் உருவாக்குகிறது. 

பெண்கள் இன்று எத்தனையோ தளங்களில், களங்களில் ஆண்களுக்கு இணையாக முன்னேறியிருக்கிறார்கள் என்று படித்தும், கேட்டும், பார்த்தும் இருக்கிறேன். இருந்தும் அரசியல், பதிவுலகம் என்று நான் கவனித்த வரையில் என் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 

புலம் பெயர்ந்த ஈழப்பெண்கள் நிறையவே முன்னேறியிருக்கிறார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதுவும் சில ஆண்கள் பெண்களை கரித்து கொட்டுமளவிற்கு! சில பெற்றார் நெருப்பை வயிற்றில் கட்டிக்கொண்டு அலைவதைப்போல்! இவையெல்லாம் பெரும்பாலும் சுயமுன்னேற்றம் என்கிற வைகையில் மட்டுமே இருக்கிறது. அதைக் கடந்து அரசியல் என்கிற சாகரத்திற்குள் எம் பெண்கள் குதிப்பது உண்மையிலேயே சவாலான ஓர் காரியம் தான். அந்த வகையில் அண்மையில் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்து பாராளுமன்றம் செல்லும் ராதிகா சிற்சபேசன் ஓர் முன்னுதாரணம். 

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இது ஓர் வரலாறு. எந்தவொரு ஈழத்தமிழன் புலத்தில் எதை சாதித்தாலும் அதனால் எங்கள் விடிவுக்கு வழி கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பே எப்போதும் எம்மவர்களால் முன்னிலைப்படுத்தப்படும். அதில் தவறே இல்லை. அந்த வகையில் ராதிகா என்கிற ஈழத்தமிழரிடமும் கனேடிய தமிழர்கள் நிறையவே எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். இவர் தமிழர் என்பதால் கனேடிய பாராளுமன்றத்தில் எப்போதும் ஈழம் பற்றி பேசமுடியாது. அதே நேரம் நிச்சயம் அதைப் புறக்கணிக்கவும் முடியாது என்பது தான் யதார்த்தம்.

கனடாவின் ஓர் தேசிய ஊடகம் ஒன்றில் அவர் பற்றி குறிப்பிடும் போது அவருடைய Resume சமூக சேவைகள் செய்த அனுபவங்களால் நிரம்பியிருக்கிறது என்று எழுதியிருந்தார்கள். இக்கூற்றின் மூலம் அவர்கள் சொல்லவிளைவது ராதிகா சிற்சபேசன் அரசியல் அனுபவம் அதிகம் இல்லாதவர் என்பது தான். அவர்களைப் பொறுத்தவரை தங்கள் நாட்டை பற்றி அதிகம் அக்கரைப்படுகிறார்களாம் ! யாராவது வேற்றினத்தவர் ஏதாவது பொறுப்பான பதவிகளில் அல்லது முன்னுக்கு வந்தால் குயுக்தியாய் விமர்சிப்பார்கள். ஆனாலும், ராதிகாவின் பேச்சை கேட்டவகையில் அவருடைய பேச்சில் நிறையவே தெளிவும், தன்னம்பிக்கையும் உள்ள ஓர் பெண்ணாக என் பார்வையில் தெரிகிறார்.

நான் இவரை குறிப்பிட்டு உதாரணம் காட்டக் காரணம் அகதியாய் புலம்பெயர்ந்து தமிழ்ப் பெண்கள் எவ்வளவு தூரம் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற பேரவாவோடு அதற்குரிய முயற்சிகளை செய்கிறார்கள் என்பதை உணர்த்தவே. தவிரவும், ராதிகா என்கிற கனேடிய தமிழ்ப் பெண் மற்றைய புலம்பெயர் தமிழ் இளையசமூகத்துக்கு ஓர் முன்னுதாரணமாகவும் இருக்கிறார்.

புலம் பெயர் தேசங்களில் பெண்களும் துணிச்சலோடு ஈழம் தொடர்பான செயற்பாடுகளில் முன் நிற்பார்கள். குறிப்பாக இளைய தலைமுறை. அது தவிர நாடு கடந்த தமிழீழ அரசில் பெண்களுக்குரிய இடமும் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. குறிப்பாக சுபா சுந்தரலிங்கம் என்பவர் துணிச்சலாய் முன்னாள் இலங்கை இராணுவத்தளபதியும் இந்நாள் ஐ. நா. வின் பிரதி நிரந்தரவதிவிடப் பிரதிநிதியுமாகிய சவேன்திரா செல்வாவை துணிச்சலாய் நேருக்கு நேர் நின்று அவரின் போர்க்குற்றச்சாட்டு படி கேட்டது வியக்க வைத்தது.

பெண்களாலும் அரசியலில் எத்தனையோ விடயங்களை சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு தான் நான் ராதிகாவை மற்றும் இளைய தலைமுறைப் பெண்களை பார்க்கிறேன்.

அதே நேரம் இந்தியாவை சோனியாவும், தமிழ்நாட்டை ஜெயலலிதாவும் என்கிற இரு பெண்கள் தானே இப்போ ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இருந்தும் அவர்களின் அரசியல் களம், பிரவேசம் என்பவை வெவ்வேறு காரணங்களால் உருவானவை என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.

அடுத்து பதிவுலகைப் பொறுத்தவரை ஆண்களே அதிகமுள்ள நிலையிலும் பல பெண்பதிவர்களும் எழுதிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான விடயம். இருந்தும் பெண் பதிவர்களும் ஆண் பதிவர்கள் போல் எதைப் பற்றி வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதமுடிகிறதா என்கிற கேள்வி எங்கேயோ மனதில் தொக்கி நிற்கவே செய்கிறது.

ஆம், பெண்களும் எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற அனுமதி நிச்சயம் உண்டு. அதற்கு யாருடைய அனுமதியும் கோரவேண்டியதில்லை. ஆனால், அந்த எழுத்தின் விளைவுகள், விமர்சனங்கள் ஆண்பதிவர்களை விடவும்  ஓர் பெண் பதிவருக்கு உருவாகுவது என்பதில் வேறுபாடுகள் இருக்கிறது என்பது மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத ஓர் கசப்பான யதார்த்தம்.

ஆண்கள் செக்ஸ் முதற்கொண்டு சிக்கலான அரசியல், பொருளாதார கண்ணோட்டங்களை எழுதினால் நிறையப்பேர் ரசிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பதே நான் கவனித்தது. உடனே யாராவது உங்களை யார் அதைப்பற்றி எல்லாம் எழுத வேண்டாம் என்று சொன்னது என்று எதிர்க்கேள்வி கேட்கலாம், ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நான் சொல்வது என் ஊகம் மட்டுமே. பெண்கள் அரசியல், பொருளாதார ஆய்வுகள், கண்ணோட்டங்களை எழுதமுடியுமா, முடியாதா என்கிற வகையில் தங்களை தாங்களே சந்தேகிக்கிறார்களோ தெரியவில்லை என்பது தான். நிறையப் பெண்கள் அரசியல், பொருளாதாரம் பற்றி பதிவுகள் எழுதுவது மிகவும் குறைவு. சமூகப் பிரச்சனைகள் பற்றி பல பெண் பதிவர்கள் எழுதுகிறார்கள், வரவேற்க்கத்தக்கது.

ஆண் பதிவர்கள் செக்ஸ் பற்றியோ அல்லது அது தொடர்பிலோ எழுதினால் இங்கே பெரிதாய் எந்தவொரு பாதிப்பும் புதிதாய் வந்துவிடப்போவதில்லை என்று சிலர் வாதித்திருக்கிறார்கள். ஆனால் இது என் அனுபவம் மட்டுமா தெரியவில்லை. சில தளங்களில் எழுதப்படும் பதிவுகளை, காட்சிகளை படித்தும், பார்த்தும் ஓர் பெண்ணாக வெறுத்துப்போய் திரும்பி ஓடிவந்திருக்கிறேன். மறுபடியும் அந்த தளங்களின் பக்கம் சென்றதில்லை. அது அவர்களுக்கும் இழப்பில்லை. எனக்கும் இழப்பில்லை. 13+, 18+ பதிவுகள் தொடரவே செய்கின்றன. அதுவும் யதார்த்தம் ஆகிப்போனது. 

ஜனரஞ்சக ஊடகங்கள், நடைமுறை யதார்த்தங்கள் மற்றும் வாழ்க்கைமுறையில் இல்லாததையா பதிவுலகில் எழுதுகிறோம் என்றும் சிலர் வாதிடலாம். அப்படிப்பார்த்தால் இன்று அந்த ஊடகங்களை எத்தனை பேர் விமர்சிக்கிறார்கள், அதனால் உண்டாகும் விளைவுகளை எங்கள் கண்களின் முன்னேயே பார்க்கிறோமே. அவற்றிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டு பதிவுலகையும் ஏன் நாங்கள் அதற்கென்றோர் நியமத்தோடு (Standard) கட்டியமைக்கவோ, பேணவோ கூடாது!

Social Media என்றழைக்கப்படும் சமூக கருத்துப் பரிமாற்ற ஊடகங்களில் ஒன்றாகவே பதிவுலகம் இருக்கிறது என்பது என் கருத்து. இங்கே நாங்கள் (ஆண்கள், பெண்கள் இருபாலரும்) அரசியல் பற்றி எதையாவது எழுதினால் சில ஊடகங்கள் அவற்றை 'Conspiracy Theory' என்று ஏதோ வஞ்சம் தீர்க்க எழுதுவது போல் கூட சில சமயங்களில் விமர்சிக்கிறார்கள். ஆனாலும், பதிவுலகில் தான் நாட்டுநடப்பின், செய்திகளின் உண்மையான பல கோணங்களை அறியமுடிகிறது. 

இதெல்லாம் வெறும் கவனிப்புகள் மூலம் என் மனதில் தோன்றிய ஊகங்களே எனலாம். இருந்தும், என்னுடைய அவா பெண்கள் இன்னும் அதிகம் சமூக, அரசியல், பொருளாதார களங்கள் குறித்த ஆய்வுகளை, விமர்சனங்களை எழுதவேண்டும் என்பதே. எத்தனையோ ஆண் பதிவர்கள் அவ்வாறு எழுதும் பெண் பதிவர்களை இங்கே ஆரோக்கியமான முறையில் ஊக்குவிக்கிறார்கள். பெயர்களை குறிப்பிட்டால் யாராவது விடுபட்டுப் போவார்களோ என்பதால் தவிர்க்கிறேன். 

பதிவுலகையும் பலர் இப்போ திரும்பிப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆக, இங்கேயும் பெண்களுக்குரிய களம் வலுவாக இருக்கவேண்டும். இல்லையென்றால் பலபேர் இங்கிருந்தும் காணாமற் போய்விடுவார்களோ என்று தோன்றுகிறது. பெண்கள் தயக்கமின்றி தங்கள் எல்லாவிதமான கண்ணோட்டங்களையும் சமூக, அரசியல், பொருளாதார களங்களிலும் பதிவுலகில் தங்கள் முத்திரையைப் பதிக்கவேண்டும். 

நன்றி: படம் Google

மே 19, 2011

தமிழீழ தேசிய தலைமையாய் பிரபாகரன் என் பார்வையில்!


வரலாறு மாமனிதர்களை உருவாக்குகிறதா அல்லது மனிதர்கள் வரலாற்றை படைக்கிறார்களா என்று நான் சிந்திப்பதுண்டு. என் மனதில் எழும் இந்தக் கேள்விக்கு நான் விடை தேடி அதிகம் எங்கும் வரலாற்றின் பக்கங்களில் விழுந்து புரள வேண்டி இருக்கவில்லை. ஓர் இனத்தின் மானத்தை, வரலாற்றை உயிர் மூச்சாய் கொண்டே வரலாறாகிப்போன ஓர் மனிதர் இவர்! அவர் எங்கள் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். இன்னும் எங்கள் விடுதலை உணர்வில் நீங்காமல் கலந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் தங்கள் தமிழ்த் தேசிய தலைவராய் வரித்துக்கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே. 

இலங்கையில் தமிழினம் என்கிற ஓர் பாரம்பரிய, வரலாற்று தேசிய இனத்தின் மீதான அடக்குமுறை தான் பிரபாகரன் என்கிற ஓர் தனிமனிதனை வரலாறு உருவாக்க காரணமானது. தன் பதின்பருவங்களில் இருந்து கல்வி, அரசியல், பொருளாதார அடிப்படையில் ராணுவ அடக்குமுறையால் அடக்கி ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழினத்துக்காய் வாழ்ந்து இன்னும் ஈழக்கனவை தமிழர்கள் நெஞ்சில் வாழவைத்துக்கொண்டிருப்பவர். இந்த தனிமனிதனின் கொண்ட கொள்கை மேலிருந்த பற்றும், இறுதிவரை குலையாத உறுதியும் ஓர் வரலாற்றை படைத்திருக்கிறது. யார் ஏற்க மறுத்தாலும் ஓர் தமிழினத் தலைவராய் அவரை உயர்த்தியிருக்கிறது. வரலாறு பற்றி அவர் சொன்னது, 

"வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீகச் சக்தியன்று. அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திரப்பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஓர் வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கிறான். மனிதனே தனது தலைவிதியை நிர்ணயிக்கிறான்"

கொண்ட கொள்கை வேறு, மேடைப் பேச்சு வேறு, செயல் வேறு என்று தலைவர் என்கிற தகமைக்கு புது அர்த்தங்கள் கொடுப்பவர்கள் மத்தியில், இப்படித்தான் தன் தலைவிதியை இவர் தன் இனத்துக்காய் நிர்ணயித்துக்கொண்டாரோ!

தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற அமைப்பு இன்று உலகில் எத்தனையோ நாடுகளால் அவர்களின் புவிசார் பிராந்திய, பொருளாதார தேவைகள் கருதி பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு தடை செய்யாத நாடுகளும் உண்டு. அந்த தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன். ஓர் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றால் அதன் தலைவரையும் பயங்கரவாதி என்று தானே நாமகரணம் சூட்டுவார்கள். அப்படித்தான் முத்திரை குத்தினார்கள் புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்டதைப் பற்றி Karen Parker, மனித உரிமைகள் மற்றும் ஆயுதப்போராட்டம் பற்றிய சர்வதேச சட்டங்களை கற்றறிந்த, நீண்டகாலமாக தமிழீழப் போராட்டம் பற்றி பேசி வந்தவர், கூறியது, 

"I state categorically that LTTE is not a "terrorist" organization, but rather an armed force in a war against the government of Sri Lanka. Characterization of the LTTE as a "terrorist" organization is politically motivated having no basis in law or fact". (Brian Senewiratne, Diaspora Referenda on Tamail Eelam in Sri Lanka).

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல. அது இலங்கை அரசுக்கு எதிரான ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பு. புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வர்ணித்தது சட்ட அல்லது உண்மைகள் அடிப்படையிலோ  இல்லாமல் அரசியல் நோக்கம் கொண்டது.  இது தான் மேற்சொன்ன கூற்றின் சாரம். 

ஐ. நா. வின் ஜெனீவா ஒப்பதப்படியும் ஆயுதப் போராட்டம் என்பது ஒன்றும் சட்டத்திற்கு புறம்பானதல்ல. இருந்தும் எழுதப்படாத சர்வதேச விதிகளின் படி புலிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டுவிட்டார்கள். அமெரிக்கா தடை செய் என்று சொன்னவுடன் பெரும்பாலான நாடுகள் கேள்வி இல்லாமலேயே அதை செய்து விட்டார்கள். தடைகளால் இவர்கள் முடக்க நினைத்தது புலிகளை அல்ல, ஈழப்போராட்டத்தை.

ஈழத்தையும், ஈழத்தமிழர்களையும் (சில விதிவிலக்குகள், வில்லங்கங்கள் தவிர்ந்த) பொறுத்தவரையில் புலிகள், அதன் தலைமை இரண்டுமே இலங்கை என்கிற நாட்டில் ஓர் தேசிய இனமான எங்களின் மறுக்கப்பட்ட அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். உரிமைகள் மறுக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் தனி  ஈழம் என்கிற தீர்வை நோக்கிய புலிகளின் போராட்ட வழிமுறைகள் அவரவர் அறிவுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்றாற் போல் விமர்சிக்கப்படுகிறது. இதை யோசிக்கும் போது Brian Senewiratne அவர்கள் சுட்டிக்காடிய தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா அவர்களின் பேச்சு இங்கே பிரபாகரனுக்கும் ஈழப்போராட்டத்திற்கும் சாலப் பொருந்தும்.  

"All lawful modes of expressing opposition to the principle (of white supremacy) had been closed by legislation, and we were placed in a position in which we had either to accept a permanent state of inferiority, or defy the government. We chose to defy the law" (Diaspora Referenda On Tamil Eelam in Sri Lanka - Brian Senewiratne).

தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் எல்லாவிதமான சட்டரீதியான வழிமுறைகளும் அரசியல் யாப்பின் மூலம் அடைக்கப்பட்டபின் ஒன்று வெள்ளையின மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது அரசை எதிர்க்கவேண்டும். அவர்கள் சட்டத்தை எதிர்ப்பதை தங்கள் வழியாய் தேர்வு செய்தார்கள் என்கிறார் நெல்சன் மண்டேலா.

தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலாவும் 'பயங்கரவாதி' என்று முத்திரை குத்தப்பட்டு அமெரிக்காவுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டவர் தான். அது நோபல் பரிசை அவர் வாங்கச் செல்லும் போது தான் பெரிதாய் கிளம்பியது. இவர் நோபல் பரிசுக்கு தகுதியானதும், கனடா இவருக்கு 'கெளரவ குடியுரிமை' கொடுத்ததும் உலகறிந்த தனிக் கதை.

ஆனாலும், பிரபாகரன் அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன், நெல்சன் மண்டேலாவை விட இந்தியாவின் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், பகத் சிங், காந்தி இவர்களாலேயே அதிகம் கவரப்பட்டவர். இலங்கை அரசியல் யாப்பின் குறைபாடுகளை, அதில் பெளத்த சிங்களர்கள் அல்லாதவர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெறுவதை மையமாய் வைத்து  தந்தை செல்வாவின் காந்தீய வழிமுறைகள் நம்பிக்கையற்று, தோற்றுப்போனபின்  பிரபாகரன் கூட நெல்சன் மண்டேலா மேலே குறிப்பிட்ட வழியில்  தான் போராட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டார். சிங்களப் பேரினவாத ராணுவ அடக்குமுறைக்கு காந்தீய வழிகளில் போராடுவதில் பயனில்லை என்பதை தந்தை செல்வாவின் வழிமுறைகள் தோற்றுப்போனதில் இருந்து கற்றுக்கொண்டவர். ஈழவிடுதலைக்காய் ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்தார். ஈழவிடுதலையை விரும்பியவர்கள் அவரோடு இணைந்துகொண்டார்கள்.

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் கடைசிவரை செய்யாதவர் என்றுதான் பார்க்கப்படுகிறார். போர்க்காலங்களிலும் சரி, அமைதிப் பேச்சுவார்த்தகளிலும் சரி எப்போதும் ஈழத்தமிழர்களின் உரிமைகளை, நலன்களையே முன்னிறுத்தியவர். இதை அனிதா பிரதாப் என்கிற இந்திய பத்திரிகையாளர் தனது 'Island of Blood' என்கிற புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். 1983 ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்குப் பிறகு எல்லா விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டில் அலுவலகம் திறப்பதிலும், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதிலும் முனைப்பாயிருக்க, புலிகள் அமைப்பை பிரபாகரன் அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று. அவர்களை அவ்வாறு தனியே பிரித்துக்காட்டியது பிரபாகரனும் அவரது போராளிகளும் சயனைட் குப்பிகள் மூலம் ஈழத்திற்காய் தாங்கள் செய்த, செய்ய துணிந்த தியாகத்தை வெளிப்படுத்தியது தான் என்கிறார் அனிதா பிரதாப்.

ஆனாலும், மற்றைய விடுதலை அமைப்பை சேர்ந்தவர்களை இல்லாதொழித்தார்கள் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. இவரும் அமெரிக்காவையும், இந்தியாவையும் அனுசரித்துப் போனால் ஓர் வரதராஜப்பெருமாள் போல் இந்தியாவில் சொகுசாய் வாழ்ந்திருக்கலாம். கருணா போல் சிங்கள பெளத்த பேரினவாதத்தை அனுசரித்திருந்தால் அமைச்சே இல்லாத ஓர் அமைச்சர் ஆகியிருக்கலாம். அல்லது, டக்ளஸ் தேவானந்தா போல் தமிழர்களின் தேசிய அடையாளங்களை அழித்து சிங்கள பெளத்த தேசியத்தை வடக்கில் வளர்க்க அரும்பாடு பட்டிருக்கலாம். இவரோ இவை எலாவற்றுக்கும் விதிவிலக்காய் இருந்தார். விதிவிலக்காய் இருந்ததாலோ என்னவோ எப்போதுமே மற்றவர்களை விடவும் அதிகம் விமர்சிக்கப்பட்டவர்.

ஈழத்தமிழர்களின் உரிமைகள் எந்தக் காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாத ஒன்று என்கிற இவரின் உறுதி தான் ஈழப்போராட்டம் இன்று வரை உறுதியோடு இருக்க காரணம். போராட்டத்தின் களங்களும், வடிவங்களும் தான் மாறியிருக்கிறது. உரிமைப் போராட்டத்திற்கான காரணம் இன்றும் அதே வீச்சுடன் சர்வதேச அரங்கில் தொடர்கிறது.

தன் பதினேழு வயதில் புதிய தமிழ்ப் புலிகள் என்கிற இளையோர் அமைப்பை 1972 இல் வல்வெட்டித்துறை கடற்கரையோரத்தில் ஆரம்பித்து, அதுவே பின்னாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கிற அமைப்பாய் வளர்ந்ததாய் சொல்லப்படுகிறது. தன் பதின்பருவங்களிலேயே இலங்கை காவற்துறை, மற்றும் ராணுவத்தால் தேடப்பட்டு தன் வயதிற்குரிய இளமைக்கால சந்தோசங்களை கூட தொலைத்தவர். தான் ராணுவத்தால் தேடப்படுவதால் தன் குடும்பம் பாதிக்கப்படுகிறது என்று குடும்பத்தை விட்டு தனியே தன் பதின்பருவத்தில் பிரிந்து சென்று ஈழத்திற்காய் தனை முழுமையாய் அர்ப்பணித்துக்கொண்டார். 

தனக்கு எப்போதும் வழிகாட்டியாய் அவர் குறிப்பிட்டவை; "இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவ மெய்யுணர்வுக் கோட்பாடு. வரலாறு எனது வழிகாட்டி" என்பது தான். ஈழவிடுதலை நோக்கிய பயணத்தில் நம்பிக்கை துரோகம், தோல்விகள் தவிர்க்கமுடியாததாய் இருந்தபோதும், தளராது தான் கொண்ட இலட்சியத்தை நோக்கி பயணித்த உறுதி அளப்பரியது. இவர் கொண்ட கொள்கையை விடவும் இவரது போராட்ட வழிமுறைகளே அதிகம் விமர்சிக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்.

போராடியவர்களில் எத்தனையோ பேர் இந்தியாவில் தஞ்சம் கோர, சிலர் சிங்களப் பேரினவாதத்திற்கு குற்றேவல் புரிய, அரசியல்வாதிகள் பெரும்பாலும் கொழும்பில் குளிர்காய மறுக்கப்பட்ட தமிழர்கள் உரிமைகள் மட்டும் எப்போதும் போல் கிணற்றில் போட்ட கல்லாய் கிடந்தது.  அந்தக் கல்லை புரட்டி எடுத்து இன்று உலகின் கண்கள் முன்னால் போட்டவர்கள் புலிகளும் அதன் தலைமையுமே.  

ஆயுதப் போராட்டத்திற்கு கொடுத்த அதே சம பங்கை சமாதான அமைதி முயற்சிகளுக்கும் கொடுத்தார் என்றாலும், எப்போதுமே சிங்கள பெளத்த ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஒருவிதமாகவும், எதிர்க்கட்சியில் இருக்கும் போது இன்னோர் விதமாகவும் மாற்றி, மாற்றி பேசி சமாதான முயற்சிகளுக்கு குந்தகம் செய்பவர்கள் என்பதை நன்கு புரிந்துகொண்டவர். அதை தனது 2003 ம் ஆண்டு மாவீரர் உரையில் குறிப்பிட மறக்கவில்லை. தற்போதைய எதிர்கட்சி தலைவர் ரணிலுக்கு அன்று ஜனாதிபதி தேர்தலில் (2005) ஆதரவு தெரிவிக்காதது தவறு, அது சமாதான முயற்சிகளை பாதித்தது என்கிற குற்றச்சாட்டும் இவர்மேல் வைக்கப்படுகிறது.

ஈழம் பற்றிய வரலாற்றில் ஒவ்வொருவருக்கும் ஒரு திருப்புமுனை இப்படி இருந்திருந்தால் முடிவு இப்படி இருந்திருக்கலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். நான் கூட பிரேமதாசா அரசியல் யாப்பில் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கியிருந்தால் ஆயுதப் போராட்டம் அரசியல் வழியில் திரும்பியிருக்கும் என்று நினைத்ததுண்டு. அப்படி ஒன்று தான் புலிகள், முன்னாள் பிரதமரும் இந்நாள் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கேவின் பேச்சுவார்த்தை முயற்சிகளும் அதன் விளைவுகளும்.

ரணிலுக்கு அன்று தமிழ்த் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தெரிவிக்காவிட்டாலும் தமிழர்கள் தலைவிதி நிச்சயமாய் மாறியிருக்கப்போவதில்லை என்பது தான் என் புரிதல்.

ரணில் விக்ரமசிங்கே அவர்கள் மற்றைய சிங்கள பெளத்த ஆட்சியாளர்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டவர் என்கிற பார்வை சிலரால் முன்வைக்கப்படுகிறது. எப்போதும் போல் பிரபாகரன் புலிகளின் கண்ணோட்டத்தில் ஈழப்பிரச்சனையை பார்த்தவர்கள், இப்போதும் அப்படித்தான் பார்த்தார்கள். இங்கே ரணில் விக்ரமசிங்கே சமாதானம் விரும்பி ஆக்கப்பட்டுவிட்டார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோதே புலிகள் தடை செய்யப்பட்டது ரணிலுக்கு தெரியாமலா நடந்தது! என்பது என்போன்ற சாராசரி ஈழத்தமிழனுக்கு கூட புரியும். அத்தோடு ரணில் மிதமான அரசியல் போக்குகளால் மேற்குலக பொருளாதார நலன்களுக்கு துணை போனவர் என்கிற குற்றச்சாட்டும் உண்டு.

தேர்தலில் போட்டியிட்ட போது ஐக்கிய தேசிய கட்சி தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொள்கை விளக்க அறிவிப்பில் எல்லா சமூகத்தின் பெரும்பான்மையினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஓர் அரசியல் தீர்வு எட்டப்படும் வரை அரசியல் யாப்பில் எந்தவொரு மாற்றத்தையும் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று ஒரு உறுதியையும் வழங்கினார்கள். (Anton Balasingam - War & Peace, Pg.354). இதைவிடவும் தமிழர்களுக்கு அதை செய்வோம், இதை செய்வோம் என்று என்னென்னவோ சொன்னார்கள், வழக்கம் போல். 

ஆக, இவர்கள் அரசியல் யாப்பில் எந்தவொரு மாற்றத்தையும் அவ்வளவு சுலபத்தில் செய்யமாட்டோம் என்று குயுக்தியாய் ஓர் உத்தரவாதத்தை பெரும்பான்மை சமூகத்திற்கு உறுதியளித்துவிட்டுத் தான் பின் கதவால் சமாதான பேரம் பேசினார்கள், பேசுகிறார்கள். அரசியல் யாப்பு திருத்தப்படாமல் எப்படி அரசியல் தீர்வை எட்ட முடியும்! எல்லா சிங்கள அரசியல்வாதிகளைப் போல் காலம் கடத்தி தங்கள் நோக்கத்தில் கவனமாய் இருந்தார்கள்.

பழ. நெடுமாறன் அவர்கள் தன், "தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார்" என்கிற கட்டுரையில் ரணில் பற்றி சொன்னது,

"குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர். ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார். இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார். உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவு படுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்த பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை."


இன்று ராஜபக்க்ஷேக்களின் கருவியாய் மாறியிருக்கும் கருணா கூட ரணிலின் கட்சியை சேர்ந்த ஓர் எம்.பியின் மூலம் தான் திரைமறைவு சதிமூலம் உருவாக்கப்பட்டார் என்று புலிகளின் வரலாறு தெரிந்த வை. கோ. சொல்கிறார். இந்த முயற்சி ஓர் பிரதம மந்திரியாய் ரணிலுக்கு தெரியாமலா இருந்திருக்கும்!

என் பார்வையில், ரணில் அவர்கள் நினைத்தால் கூட எந்த தீர்வையும் தமிழர்களுக்கு கொடுக்க முடியாதபடி இலங்கை அரசியல் யாப்பு பெளத்த சிங்கள ஆட்சியாளர்களால் வகுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் இங்கே அனேகம்பேர் புரிந்துகொள்ளாத ஓர் உண்மை. ரணில் அவர்கள் ஆட்சி அமைத்திருந்தாலும் இலங்கை அரசியல் யாப்பில் தமிழர்கள் உரிமை தொடர்பில் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்திருக்கப் போவதில்லை. அடுத்து, சீமான் சொன்னது போல் ஒருவேளை ரணில் விக்ரமசிங்கே அன்று ஆட்சி அமைத்திருந்தாலும் இந்தியா காங்கிரஸ் அதன் மூலம் தமிழர்களுக்கு கிடைக்கும் தீர்வுக்கு குறுக்கே நின்றிருக்கும் என்பது தான் உண்மை. தனித்தமிழீழம் கோரியதால் புலிகளை அழிப்பது தானே என்றைக்குமே இந்தியாவின் நோக்கம்.

ஆக, ராஜபக்க்ஷேவுக்கு பதில் ரணில் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆகியிருந்தாலும் ஈழத்தின் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்பது என் புரிதல். சமாதானக் காலத்தில் புலிகளை தடை செய்து, நோர்வேயும், இந்தியாவும் காட்சியில் மறைவில் வர, தொடங்கியது ஈழத்தின் வீழ்ச்சி. மறுவளத்தில், ஈழப்போராட்ட வரலாற்றில் பிரபாகரன் என்பவர் நீண்டதோர் சகாப்தம் ஆகிப்போனதால் ஈழம் தொடர்பான முடிவுகளுக்கு அவரே குற்றவாளியாக்கப்படுகிறார் சிலரால். "தலைவருக்கு சர்வதேச அரசியல் தெரியவில்லை" என்று அங்கலாய்க்கிறார்கள். சரி, பிரபாகரன் இப்போது காட்சியில் இல்லை. நோர்வேயும், இந்தியாவும் இன்னும் ஆட்டத்தில் உள்ளது. சிங்கள பேரினவாத அரசியல் வாதிகளை மீறி சர்வதேச அரசியல் தெரிந்தவர்கள் ஈழத்திற்காய் இனிமேலாவது எதையாவது சாதிப்பார்களா!

ஈழத்தின் முடிவும், புலிகளின் இழப்பும் ஈடுசெய்யமுடியாது தான். இருந்தும், ஈழவிடுதலை நோக்கிய பயணம் நீண்ட நெடுந்தொலைவு கொண்டது. பிரபாகரன் கேட்டதை, அவருக்கு கொடுக்காததை  நாங்கள் வேறுயார் கேட்டாலும் கொடுக்கப்போவதில்லை என்று சிங்கள பெளத்த ஆட்சியாளர்கள் சொல்லலாம். தமிழர்கள் விரும்பியத்தைத்தான், மக்கள் ஆணை மூலம் அனுமதி கொடுத்ததை தான்  புலிகளும் பிரபாகரனும் கேட்டார்கள் என்கிற உண்மை உலகிற்கு உறைக்கும் போது பிரபாகரன் என்பவரும் புரிந்துகொள்ளப்படுவார். மகாத்மா காந்தியும், சுபாஸ் சந்திரபோசும் எதற்காய் போராடினார்களோ, அதே காரணத்திற்காய் தான் புலிகளும் பிரபாகரனும் போராடினார்கள் என்கிற உண்மை இந்தியாவுக்கும் புலப்பட்டாலும் புலப்படும்.

ஈழத்தின் தந்தை செல்வா என்றால், தமிழீழ தேசிய தலைமை என்பது எப்போதுமே பிரபாகரன் தான் என்பதை பெரும்பான்மை தமிழர்கள் இனி தங்கள் மனதிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் மாற்றவோ, மாறவோ போவதில்லை.

Photo Courtesy: Google - Wikipedia 

மே 18, 2011

புலம்பெயர் தமிழர்களும் (கனடா) ஈழமும்!

தமிழர்கள் நாங்கள் புலம் பெயர்ந்து உலகின் எந்த மூலையில் சிதறிக்கிடந்தாலும் எங்களை ஒன்றாய் சிந்திக்க, பேச, செயற்பட வைப்பது 'ஈழம்' என்கிற ஒற்றைச்சொல்லும் அதன் உயிர்நாடியும் தான். நாங்கள் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடிகள்! வரலாறு சொல்கிறது. அப்படிப்பட்ட வரலாற்று இனமான பெருமைக்கும் எங்களிடம் குறைவில்லை, சிறுமைக்கும் குறைவில்லை. 

ஒரு நாள் வேலைத்தளத்தில் என்னோடு பணிபுரிபவர் சொன்னார் உங்கள் தமிழ் சமூகத்திலும் "Millionaire" இருக்கிறார்கள் என்று. நான் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, "ஒ! அப்படியா!" என்றேன். நான் யோசித்ததைப் பார்த்துவிட்டு அவர் சிரித்துக்கொண்டே கேட்டார், இதற்கேன் இவ்வளவு யோசித்து பதில் சொல்கிறாய் என்று. நான் சொன்னேன் ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம். சராசரியாய் ஒரு சாதாரண வியாபாரம் தொடங்கவோ அல்லது அதை கொண்டுநடத்தவோ கிட்டத்தட்ட அவ்வளவு பணம் கனேடிய டொலர்களில் தேவை. அப்படிப் பார்த்தால் உன் பார்வையில் எங்களில் பல லட்சாதிபதிகள் இருக்கிறார்கள் என்று. 

அடுத்து கல்வியை எடுத்துக்கொண்டாலும் எம் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் புலத்தில் எந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கும் குறைவில்லாத வகையில் கல்வியில் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு என் குடும்பத்தில் இருந்தே உதாரணங்கள் காட்டலாம். அது ஒருபுறமிருக்க, புலம்பெயர் தமிழ் சமூகம் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வியக்க வைக்கும். வேற்றினத்தை சேர்ந்தவர்களிடமிருந்தே இதை நான் கேட்டிருக்கிறேன். உங்கள் சமூகத்தில் உள்ளவர்கள் கல்வியை நிறையவே மதிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு சரஸ்வதி பூஜை பற்றி எல்லாம் குறிப்பிட்டார் ஒருவர். ஓர் பாரம்பரிய யூத இனத்தை சேர்ந்தவராய் இருந்து இதை அவர் சொன்னது தான் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தியது. அடிக்கடி அவர் எனக்கு சொல்வது நீங்கள் இங்கே Toronto வில் இருக்கும் வேற்றின சமூகத்திற்கு உங்கள் பிரச்சனைகளை சொல்லி புரியவைக்கவேண்டும் என்பது தான்.


இன்னோர் உதாரணம் அடிக்கடி அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுவது, நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் சுதந்திரம் பெற்ற இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தீமோர் மற்றும் சூடானிலிருந்து தெற்கு சூடான் சமூகத்தின் கல்வியறிவு வீதத்தோடு ஒப்பிடும்போது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சமூகம் கல்வியில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் முன்னணியில் இருக்கிறது என்பது தான். இருந்தும் அந்த வளம் என்பது ஈழவிடுதலை நோக்கிய முயற்சிகளில் முற்றுமுழுதாக பயன்படுத்தப்படவில்லை என்பதும் தான். அவர்களின் அரசியல் களம் வேறாக இருக்கலாம். ஆனாலும், அந்த முயற்சி அவர்களிடமிருந்து புலம்பெயர் சமூகமான நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
தனியார்துறை, பொதுத்துறை, சேவைகள், அரசியல் என்று தமிழர்களும் புலம்பெயர் தேசங்களில் கல்வி மூலம் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த முன்னேற்றம் ஒருவரின் சுயமுன்னேற்றமாக மட்டுமின்றி புலத்தில் எங்களை பண்பான, அறிவுசார் தகமைகள் கொண்ட ஓர் இனமாகவும் பெருமையோடு அடையாளப்படுத்துகிறது. எவ்வளவுதான் படித்து முன்னேறினாலும் எங்கள் வேர்களை மறக்காமல் விடுதலையை நோக்கிய பயணத்தில் தங்கள் நேரம், அறிவு, துறைசார் வல்லமை என்பவற்றையும் ஈழத்திற்காய் அற்பணித்தவர்கள், அற்பணிப்பவர்கள் நிறையப்பேர்.

கனேடிய தமிழர் தேசிய அவையின் முயற்சியில் கனேடிய சமூகத்தில் ஓர் சமூகமாக இன்று இரத்ததானத்தில் முன்னணியில் இருப்பவர்கள் என்றால் அது ஈழத்தமிழர்கள் தான். தானங்களில் சிறந்தது இரத்ததானம் என்பார்கள். அதையும் எம்மவர்கள் வன்னியில் மாண்டவர்கள் நினைவாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எத்தனையோ முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டாலும் இது தான் அதிகம் அறியப்பட்ட ஒன்று. ஆனால், வன்னியில் தண்ணியே இல்லாமல் நாவறண்டு செத்துப்போன எம் குழந்தைகளை நினைக்கூட இங்கே பெரும்பாலானவர்கள் மறந்தே போகிறார்கள் என்பதும் ஓர் கசப்பான யதார்த்தம்.

இங்கேயெல்லாம் தமிழன் நிற்கிறான்!!! 

பிறகு, எங்கே தலை குப்புறவா விழுகிறான் என்று யோசிக்கிறீர்களா! 

தமிழன் தலைகுப்புறவா விழுந்திருக்கிறேன் என்பது கூட தெரியாத நிலையில் இருக்கிறானோ என்று யோசிக்க வைக்கும் நிலையில் இருக்கிறான் என்பது தான் கவலையளிக்கும் விடயம். கடந்த முள்ளிவாய்க்கால் முடிவுக்காலங்களில் தமிழர்களிடம் நிறையவே வியக்கும் படியான ஒற்றுமை இருந்தது என்னவோ உண்மை தான். இடையில் கொஞ்சகாலம் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் போய்விட்டது. அதற்கு காரணம், ஒன்று பாரிய இழப்புகளில் இருந்து உளவியல் ரீதியாக மீளமுடியாமல் தமிழர்களுக்கு ஈழம் குறித்த அடுத்த செயற்பாடு என்ன என்கிற குழப்பம். 

அடுத்து, எந்த செயற்பாடாயினும் அதை உண்மையான ஈழம்பற்றிய அக்கறையோடு செய்பவர்கள் யார் என்கிற பயம் கலந்த இன்னோர் குழப்பம். சிங்கள கைக்கூலிகள் எம் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் ஊடுருவியதும், உளவியல் தாக்கத்தை உண்டுபண்ணுவதும் இன்றுவரை தொடர்கிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அண்மையில் ஆளும்கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் தோற்றுப்போனது. இரண்டு தமிழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் அது தமிழர்களின் அரசியல் நிலையை கனடா போன்ற ஓர் நாட்டில் ஸ்திரப்படுத்தாதா! 

சிறிது காலத்திற்கு முன் கே.பி. என்கிற பத்மநாதன் அழைத்தார் என்று ஓர் கூட்டம் ஈழத்தில் வடக்கில் பொருளாதார முயற்சிகளில் பங்கெடுக்கிறோம் பேர்வழி என்று கிளம்பிப் போனார்கள். அது குறித்த எந்தவொரு விளக்கமும் தமிழ் ஊடகங்கள் மூலமாகவேனும் சரியான முறையில் தமிழர்களுக்கு அறியத்தரப்படவில்லை என்பது என் கருத்து. ஒருவேளை அதை அறியத்தந்து நான் கவனிக்காமல் விட்டேனா தெரியவில்லை.

ஈழத்தில் வடக்கில் பொருளாதார முயற்சிகளில் எம்மவர்கள் கை ஒங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. அது பசில் ராஜபக்க்ஷேவை மீறி நடக்குமா என்கிற யத்தார்த்தை கொஞ்சம் ஒதுக்கிவிட்டுப் பார்ப்போம். ஆனால், அதை ராஜபக்க்ஷேவின் பிடியில் இருக்கும் பத்மநாதனின் அழைப்பின் பேரில் போய் செய்தோம் என்பது தான் எனக்கு எரிச்சலாய் பட்டது. இப்படி தமிழ் செயற்பாட்டாளர்களாகவும் அதே நேரம் ராஜபக்க்ஷேக்களின் உறவை பேணியது பற்றிய சரியான ஓர் விளக்கம் தமிழ் சமூகத்திற்கு கொடுக்கப் படாமையும் தமிழர்கள் யார் எதிரி, யார் நண்பன் என்கிற குழப்பத்தின் குட்டைக்குள் தள்ளப்பட்டது தான் மிச்சம். ராஜபக்க்ஷேக்களுடன் ஈழம் பற்றி எங்களின் உரிமைகள் பற்றி பேசுவதில் தவறில்லை. ஆனால், அது குறித்த மிகத் தெளிவான விளக்கம் தமிழ்சமூகத்திற்கு அளிக்கப்படவேண்டும். இல்லை என்றால் அது தவறான புரிதலுக்கே வழிசமைக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் உங்களை யாராவது பிரதிநித்துவப் படுத்துகிறோம் என்பவர்களிடம் அவர்கள் செயல்களுக்கான விளக்கத்தை விலாவாரியாய் கேளுங்கள். நிச்சயமாய் அவர்களுக்கு என்றோர் தளம் இருக்கும். அங்கே சென்று அவர்களின் பணித்திட்டம் (Mission), தொலைநோக்கு (Vision) என்பன பற்றி தெரிந்துகொள்ளுங்கள், கேள்வி கேளுங்கள், அவர்களிடமிருந்து சரியான, திருப்தியான பதில் கிடைக்கும் வரை. உங்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம் என்பவர்களுக்கு, உங்களுக்கு பதில் சொல்லும் பொறுமையும், கடமையும் அவர்களுக்கும் உண்டு என்பதை தெளிவுபடுத்துங்கள். உங்களுக்கு யார் திட்டம் சரியென்று படுகிறதோ அவர்களோடு உங்களை உறுப்பினராய் இணைத்துக்கொள்ளலாம். நிச்சயமாய் புலம்பெயர் தேசங்களின் சட்டதிட்டங்களை மதித்து அதற்கேற்றாற்போல்  தான் எந்தவொரு அமைப்புமே இயங்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

கனடாவில் நான் கவனித்த வரையில் பெரும்பாலும் இவ்வாறான அமைப்புகளை சேர்ந்தவர்கள் தமிழ் ஊடகங்கள் மூலம் தங்கள் செயற்பாடுகள் பற்றி பெரும்பாலும் விளக்கம் அளிக்கிறார்கள். அவ்வாறான அமைப்புகளை சாராமல் அநாமதேயமாய் வருபவர்களிடம் கவனமாய் இருப்பது நலம். 

சில சமயங்களில் சில அமைப்புகளே என்னைப் போன்றவர்களை குழப்பத்துக்குள் தள்ளி விடுவார்கள். கடந்தவருடம் நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியில் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களும் உழைத்துக்கொண்டிருக்க, கனடாவில் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆரம்பத்தில் அது பற்றி அதிகம் கவனம் செலுத்தாதவர்களாக காணப்பட்டார்கள். உண்மையில் இவர்கள் ஒன்றும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அக்கறை இல்லாதவர்கள் அல்ல. கனேடிய மண்ணில் ஈழத்தமிழர்களை தேசிய நீரோட்ட அரசியலில்  பிரதிபலிக்கும் நம்பகரமான ஓர் முக்கிய அமைப்பு. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அடுத்து என்னை யார் பிரதிநிதித்துவப் படுத்தவேண்டும் என்று யாராவது கேட்டால் கனேடிய தமிழ் காங்கிரஸ் என்று தான் சொல்வேன். கனடாவுக்கு அகதிகள் கப்பலில் வந்தபோதெல்லாம் கனேடிய சட்டதிட்டங்களின் படி அவர்களின் உரிமைகளுக்காக தங்கள் நேரம், பசி, தூக்கம் மறந்து உழைத்தவர்கள். ஆனால், நாடுகடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியில் இவர்கள் ஏன் விலகியே நின்றார்கள் என்பது எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று. OK! Past is past!

ஆனாலும், இன்று நாடு கடந்த தமிழீழ அரசு முயற்சியில் May 18, 2011 அன்று ஐ. நா. சபை அலுவலகம் முன்பு நியுயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வுக்கு தங்கள் ஆதரவை ஓர் ஊடகம் மூலம் இருவரும் ஒன்றாய் சேர்ந்து தெரிவித்ததும், கனடா நாம் தமிழர் இயக்கம் இவர்கள் உட்பட எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நிற்பதும் உண்மையிலே தமிழர்களின் ஒற்றுமையை மீண்டும் தமிழர் சமூகத்திற்கு உறுதிப்படுத்தும். இருந்தாலும் கனேடிய தமிழர் தேசிய அவையை சேர்ந்த பிரதிநிதியை காணவில்லையே என்று யோசித்தேன். 

ஏன் ஒவ்வொரு நாட்டிலுள்ள தமிழர் அமைப்புகளும் சேர்ந்து ஓர் கூட்டமைப்பை உருவாக்க கூடாது என்று கூட நான் யோசிப்பதுண்டு. எல்லோரும் அவரவர் கோட்பாடுகளுக்கு ஏற்ப செயற்படுங்கள். ஆனால், பாரிய ஈழம் குறித்த முன்னெடுப்புகளில் ஒன்றாய் நின்று தமிழர்களின் தரப்பை வலுப்படுத்தலாமே. அங்கே பொதுசனம் குழம்பிப் போவதை தவிர்க்கலாம். தமிழ் அமைப்புகள், அவற்றின் தெளிவான, உறுதியான செயற்பாடுகளின் வழியிலேயே பெரும்பாலும் தமிழர்களின் ஒற்றுமையும் தங்கியுள்ளது தவிர்க்கமுடியாததாகிறது.

ஈழத்தமிழர்கள் மேல் மிகவும் அக்கறையுள்ள அமைப்புகளே சில பாரிய முன்னெடுப்புகளில் தங்களை தாங்களே விலக்கி வைத்து பார்வையாளர்களாய் இருக்கும் போது என் போன்றவர்கள் குழம்பித்தான் போகிறோம். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பல்வேறு அமைப்புகள், செயற்பாடுகள் என்பன தவிர்க்கமுடியாதவை. ஆனால், ஒரு அமைப்பு முன்னெடுக்கும் ஈழம் சார்ந்த முயற்சிக்கு இன்னோர் அமைப்பு தங்கள் தார்மீக ஆதரவை ஏன் தெரிவிக்க கூடாது இவர்கள். அது ஏற்கனவே குழம்பியிருக்கும் தமிழர்கள் மத்தியில் ஓர் தெளிவை உருவாக்கும் என்பது என் புரிதல். எந்தவொரு அமைப்பின் ஈழம் தொடர்பான முயற்சிக்கும் ஏதாவது கருத்து முரண்பாடு இருந்தால் அதை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ளலாம். இல்லையேல், அது பற்றி பொதுசனத்திற்கு விளக்கம் கொடுக்கலாம்.

இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, விலகியிருப்பதால் என் போன்ற பொதுசனம் தான் குழம்பி போகிறோம். அது ஒட்டுமொத்த முயற்சிகளையும் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆக்கிவிடும்.

சில புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தவிர்த்தல் நலம் என்று நான் கருதுவது, ஒவ்வொரு நாட்டிலும் பத்து தமிழர் அமைப்புகள் இருந்து, பத்து அமைப்புகளும் அவரவர் நிகழ்ச்சி நிரலுடன் அரசியல் உள்மட்டத்தில் உள்ளவர்களை சந்திக்காமல் எல்லோரும் ஓர் கூட்டமைப்பாக ஒரே நேரத்தில் சந்திக்கலாமே.

இறுதியாக, ஓரிரு வார்த்தைகள் தமிழ் ஊடகங்கள் பற்றி. பொதுவாகவே புலம் பெயர் தேசங்களில் தமிழ் ஊடகங்களுக்கு குறைவில்லை. அது ஆரோக்கியமாகவும், தமிழர்களை குழப்பும் வகையிலும் இரண்டு விதமாக செயற்படுகின்றன என்பது தான் நான் கவனித்தது. காட்சி ஊடகம், பத்திரிகைகள், வானொலி என்று எதை எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் ஈழம் பற்றிய தெளிவான கருத்துகளையே முன்வைக்கிறார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் தவிர. மிக மோசமான ஒன்றாக நான் கருதியது நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தலில் வாக்களித்தால் இலங்கை செல்லும் போது அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்கிற வகையில் ஓர் பரப்புரையை ஓர் தமிழ் வானொலி செய்தததாக படித்தேன்.

ஆக, இலங்கை அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல் புலத்தில் இவர்கள் செய்திகளை உருவாக்கம் செய்வது, கருத்து திணிப்புகளை செய்வது, இது தான் இவர்களின் வேலையோ என்று சில தமிழ் ஊடகங்களை சேர்ந்தவர்கள் யோசிக்க வைக்கிறார்கள்.

இலங்கை சிங்கள பெளத்த ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை "தமிழனாக' பிறந்ததே பாரதூரமான குற்றம் தான். இதில் நாடு கடந்த அரசின் ஜனநாயக தேர்தலில் ஜனநாயக தேர்வு என்பது தமிழனுக்கு புதிதாய் எந்தவொரு தண்டனையையும் உருவாக்கப்போவதில்லை. எப்படிப்பார்த்தாலும், இலங்கையின் அரசியல் யாப்பில் ஆறாவது திருத்தச்சட்டப்படி தமிழீழம் கேட்பது, நாடு கடந்த அரசுக்கு வாக்களித்தது எல்லாமே குற்றம் தான். நாங்கள் வாழும் நாட்டின் சட்டதிட்டப்படி, சர்வதேச சட்டங்களின்படி அது தவறே இல்லை. அனால், இலங்கை எப்போது சர்வதேசம் பற்றி கவலைப்பட்டது.

ஈழம் தொடர்பாக எந்தவொரு ஜனநாயக எதிர்ப்பை காட்டும் ஆர்ப்பாட்டம், ஒன்று கூடலிலும் இப்போது சில தமிழர்கள் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு தான் நிற்கிறார்கள். ஏனென்று கேட்டால் யார், யாரோவெல்லாம் படம் பிடிக்கிறார்கள். அதை இலங்கை அரசுக்கு அனுப்பினால், நாங்கள் இலங்கை போகும் போது பிரச்சனைகளை உருவாக்கும், உயிர்ப்பயம் என்கிறார்கள். 

இந்த இருப்பு பற்றிய பயம், ஜனநாயக உரிமைகள் இவற்றுக்கிடையே தான் ஈழம் என்கிற யதார்த்தம் ஊஞ்சலாடுகிறது புலத்தில். 

அத்தோடு பதிவர் ராஜ நடராஜன் ஈழத்தமிழர்களிடம் வலியுறுத்த விரும்பும் கருத்தையும் இணைத்துள்ளேன்.

"Also I would like to emphasize on the diaspora to shorten the luxury of spending so much on temple,gold and other substances and build a strong fund to flow for people who survived the war atrocities and others too, plus to donate for democratic Eelam activities through a legalized proper channel.Why not an Internaional Tamil bank too?"

ராஜ நடராஜனின் கருத்தை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஆனால், புறக்கணிக்க கூடிய ஒன்று அல்ல என்பதே என் கருத்து. இலங்கை அரசை தவிர்த்து எங்கள் உறவுகளுக்கு நிறையப்பேர் உதவியிருக்கிறார்கள், இன்னும் உதவிக்கொண்டிருக்கிறார்கள் சில சர்வதேச அமைப்புகளின் ஊடாக. தமிழர்களுக்கென்று ஓர் சர்வதேச வங்கி ஆரம்பிப்பது தொடர்பில் எனக்கு எந்தவொரு அறிவும் கிடையாது. யாரும் விளக்கினால் தெரிந்துகொள்ள ஆவல்.

புலம்பெயர் தமிழர்களின் நிறைகுறைகளை சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்தாலும், அங்கே நிறைகளே அதிகம். இருக்கும் ஒன்றிரண்டு குறைகளை களைந்து இன்னும் முன்னேறவேண்டும். இன்று, ஈழப்பிரச்சனை சர்வதேச அரங்கில் பேசப்பட புலிகள் ஒரு காரணம் என்றால், புலம் பெயர் தமிழர்கள் இன்னோர் காரணம். எங்கள் ஒன்றுபட்ட முயற்சியே நல்ல பலனைத் தரும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
எங்களுக்குள் ஒற்றுமை நீங்கின் அது அனைவர்க்கும் தாழ்வே என்பதை எல்லோரும் மனதில் நிறுத்திக்கொண்டால் நன்று. இது அறிவுரை அல்ல, வேண்டுகோள். 

புலம்பெயர் தமிழ் சமூகத்தால் நிறையவே சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும்!!!! அதுதான் ஈழத்தில் குரல்வளைகள் நெறிக்கப்படும் எங்கள் உறவுக்களுக்கான குரல்.


நன்றி: படம் 'அறியது' தளம்.

அவசர வேண்டுகோள்!

புலம் பெயர் தமிழர்களிடம் என் பணிவான ஓர் வேண்டுகோள்! தயவு செய்து நீங்கள் வாழும் நாடுகளில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் உங்கள் பங்களிப்பை செய்யுங்கள். இது முற்றுமுழுதாக ஜனநாயக வழிமுறைப் போராட்டமே. இதில் தயங்கவோ, நம்பிக்கை இழக்கவோ எதுவுமே இல்லை.

எங்கள் எந்தவொரு சிறு முயற்சியும் ஈற்றில் ஏதோவொரு விதத்தில் நன்மையே தரும். போர்க்குற்றங்கள் இழைத்தவர்களே நெஞ்சை நிமிர்த்தி ஐ. நா. அறிஞர் குழு அறிக்கைக்கு எதிராக செயற்பட்டு, அதற்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்தி மனிதத்திற்கு எதிராய் தங்கள் சுயமுகம் காட்டுகிறார்கள். நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். நாங்கள் எங்கள் பங்களிப்பை செய்யவில்லை என்றால், நாங்கள் மறைமுகமாக சிங்கள பேரினவாத அடக்குமுறையை ஆதரித்தவர்களாவோம். 

நாடு கடந்த தமிழீழ அரசு போர்க்குற்ற விசாரணைகள் சுயாதீனமாக சர்வதேசத்தால் முன்னெடுக்கப்பட வேண்டுமெண்டு எனக்கோரி கையெழுத்து சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்கிற அழுத்தத்தை ஐ. நாவுக்கு நாங்கள் கொடுக்கவில்லை என்றால் வேறு யாரும் அதை எங்களுக்காய் செய்யப்போவதில்லை. பாதிக்கப்பட்ட நாங்களே அதற்கான நீதியை இறைந்து கேட்கும் சூழ்நிலையில் இருப்பது துர்ப்பாக்கியம் தான், மறுப்பதற்கில்லை. ஆனாலும், நாங்கள் எங்கள் முயற்சிகளில் இருந்து பின்வாங்கவோ, அல்லது அவற்றை கைவிடுவதோ அறிவீனம். 

யாராவது உங்களிடம் கையெழுத்து கேட்டால் அதில் எழுதியிருப்பதை படித்துப் பார்த்துவிட்டு கையொப்பம் இடுங்கள். தமிழர்களுக்கு எதிராக செயற்படுபவர்களும் கூட எதையாவது எழுதி உங்களிடம் கையெழுத்து கோரலாம். கவனமாக இருக்கவும். 

இது எங்களுக்குரிய இன்னோர் சந்தர்ப்பம். அதை தவறவிட்டால் வரலாற்றில் தோற்றவர்கள் ஆவோம். 

நான் உங்கள் எல்லோரையும் போல் ஓர் சராசரி ஈழத்தமிழ். நான் யார் சார்பிலும் அல்லது எந்தவொரு   அமைப்பு சார்ந்தும் பேசவில்லை. ஈழம் தொடர்பில் எது என் அறிவுக்கு சரியென்று தோன்றியதோ அதை எழுதுகிறேன்.

எல்லோரும் நாங்கள் இழந்த உறவுக்களுக்காய் செய்யவேண்டிய கடமையை செய்வோம். 

மே 17, 2011

முள்ளிவாய்க்கால் நினைவாக...!


முள்ளிவாய்க்கால்! சொல்லமுடியாத வலிகளை, பேசமுடியாத மெளனத்தை, விவரிக்க முடியாத கொடூரங்களை தாங்கிநிற்கும் ஈழத்தமிழர் ரத்த பூமி. விடுதலை வேண்டிப் போராடிய ஈழத்தமிழினம் இழந்த கெளரவம், சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்ட எங்களுக்கேயுரிய பெருமிதங்கள், சிறுகச் சிறுக, பார்த்துப்பார்த்து கட்டியெழுப்பிய விடுதலைக் கனவு அத்தனைக்கும் ஊமை சாட்சியாய் இன்று முள்ளிவாய்க்கால்.  

ஈழவரலாற்றின் பக்கங்களில் வடுவாய், வலியாய் பதிந்துபோன முள்ளிவாய்க்காலும் அதன் நினைவுகளும் இனி எப்போதுமே மறக்கமுடியாததாய். முள்ளிவாய்க்கால் என்கிற பெயர் இன்று சர்வதேசத்தின் வாய்க்குள் அகப்பட்டு சிக்கித்தவிக்கிறது. தனக்குள்ளே மனிதர்களையும், அவர்தம் கனவுகள், ஆசைகள், அத்தோடு வாழ்வின் கடைசி நாட்கள் நிமிடங்களாகி உயிர் பதைத்த கணங்கள், தமிழர்களும் இந்த உலகமும் அறிய வேண்டிய உண்மைகள் எல்லாத்தையும் தனக்குள்ளே புதைத்துக்கொண்டிருக்கிறது அந்த மண்.

உயிருள்ளவரை என் நினைவுகளை விட்டகலாது எங்கள் உறவுகள் உயிர்பதைத்த கணங்கள், நாதியற்றுப் போய், கையேந்தி இரக்கமில்லாத உலகத்திடம் உயிர்பிச்சை கேட்ட அவலக் கோலங்கள். 

இன்று, இலங்கையின் வடக்கே மன்னார், முல்லைத்தீவு, மற்றும் வவுனியா மாவட்டங்கள்; மற்றும் கிளிநொச்சியின்  பல பகுதிகளை உள்ளடக்கியது  வன்னி. வன்னி பெருநிலப்பரப்பில் உள்ளது முள்ளிவாய்க்கால்.

வரலாற்றுரீதியாக மன்னார், வவுனியா, திருகோணமலை, பொலநறுவ, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், (Hinterlands) ஆகிய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் வன்னி பெருநிலம் இருந்ததாக தயா சோமசுந்தரம் தன், Collective Trauma in the Vanni - a qualitative inquiry into the mental health of internally displaced due to the civil war in Sri Lanks - Intl. Journal of Mental Health Systems இல் குறிப்பிடுகிறார். அப்படியே, ஒரு வரி விலகிப்போய் தயா சோமசுந்தரத்தின் வரலாற்றுக்குறிப்புகளை விடவும் ஈழத்தமிழர்களின் உளவியல் குறித்த அவரது துறைசார்ந்த கண்டுபிடிப்புகள் ஆச்சரியப் படுத்துவதை இங்கே காணலாம். 

வன்னியின் மேற்சொன்ன இந்த புவியியல் அமைப்புத்தான் இன்றுவரை சிங்களம் கூட அதை கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க துடிப்பதன் ரகசியம்.

வன்னி சில வரலாற்று ஆசிரியர்களால் "அடங்கா மண்" எனவும் குறிப்பிடப்படுகிறது. வன்னி மண்ணை ஆண்ட பண்டாரவன்னியன் என்கிற தமிழ் மன்னனால் டச் மற்றும் பிரித்தானிய காலனியாதிக்கத்தில் களம் பல கண்டு வென்றெடுக்கப்பட்ட மண். பண்டாரவன்னியன் தேசியவீரனாக இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு 1982 இல் வவுனியாவில் சிலை வைக்கப்பட்டதாம். வன்னியை ஆண்ட பண்டாரவன்னியனுக்கு இணையாக கலைஞர் கருணாநிதி, பழ. நெடுமாறன் போன்றோரால் விமர்சிக்கப்பட்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். (தயா சோமசுந்தரம், Collective Trauma in the Vanni). ஆனால், ராஜபக்க்ஷேவின் ஆட்சியில் பண்டாரவன்னியனின் சிலைகள் உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. ஏனென்றால் பண்டார வன்னியன் தமிழர்களின் அடையாளமாயிற்றே.

நிலமும், களமும், வீரர்களும், அவர் தம் நோக்கமும் ஒன்றே. ஆனால், முடிவு மட்டும் இன்று வேறாய்! 

முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட உயிர்கள், உண்மைகள் அத்தனையையும் இன்று ஐ. நாவின் அறிக்கை என்கிற காகிதங்களில் தேடிக்கொண்டிருக்கிறது உலகம். உண்மைகளை எங்கிருந்து தோண்டி எடுக்க வேண்டுமோ அங்கிருந்து தேடாமல் எங்கெங்கோ காகிதங்கள், காண் ஒளிகளில் தேடுகிறார்கள். இவர்களின் அகராதியில் வரைவிலக்கணம் சொல்லக்கூடத் தெரியாத பயங்கரவாதத்தை ஒழித்த, ஒழிக்க துணைபோன சூத்திரதாரிகளுக்குமா தெரியாது உண்மைகளை தேடவேண்டிய இடம். வன்னியில் ஏறக்குறைய 40,000 - 70, 000 வரை மனித உயிர்கள் பலிவாங்கப் பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பப்படுகிறது. ஏறக்குறைய மூன்று லட்சம் பேர் அடைக்கப்பட்ட அந்த சிறு நிலப்பரப்பை இன்றுவரை எந்தவொரு ஊடகமும் பார்வையிட அனுமதியில்லை. முள்ளிவாய்க்காலின் எல்லைக்குள்ளே உண்மைகளும், அதன் எல்லைக்கு வெளியே உண்மையை கண்டறியும் அதிகாரம் கொண்டவர்கள் வெறும் பார்வையாளர்களாய் மட்டும். 

அமெரிக்காவும், இந்தியாவும் அதன் சோனியா காங்கிரசும் தான் ஈழத்தின் இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகள் என்பது யாவரும் அறிந்ததே. ஓர் இனப்படுகொலை நடத்தி தான் ஈழத்தமிழர்களுக்கு அறுபத்துமூன்று வருடங்களாக மறுக்கப்படும் உரிமைகளை மீட்டுத் தரப்போகிறார்களா என்றால், இல்லை என்பது தான் உண்மையான பதில். அது அவர்களுக்கும் நன்கு தெரியும். அவரவர் நலன்கள் சார்ந்த பூகோள, பிராந்திய புவியியல், அரசியல், பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள தமிழீழ விடுதலைப்புலிகளும், அப்பாவி ஈழத்தமிழனும் உயிர்துறக்க வேண்டிய அவலம். அமெரிக்காவின், இந்தியாவின் பிரச்சனை புலிகள் இல்லை. புலிகள் ஈழத்தமிழர்களுக்காக கேட்ட தனி தமிழீழம் தான். புலிகள் அழிக்கப்பட்டால் தமிழர்கள் தனி ஈழம் என்பதையும் மறந்துவிடுவார்கள், மறக்கடிப்போம் என்று தீர்மானித்துவிட்டார்கள் போலும்.

வன்னிப் போரும் ஒருவகையில் ஈழத்தமிழர்கள் மீது, ஈழத்தின் மீதான சர்வதேசத்தின் பிரகடனப் படுத்தப்படாத போர் தான். அதன் முடிவில், முள்ளிவாய்க்காலின் அவலத்தில் தான் "ஈழம்" என்பதன் தேவையை, அதன் தார்ப்பரியத்த்தை அதிகம் எங்களுக்கு சர்வதேசம் உணர்த்தியிருக்கிறது.

அமெரிக்கா கண்டுபிடித்த பயங்கரவாத தத்துவத்தில் புலிகளின் வழிகளை இனி உலகில் எந்தவொரு இயக்கமோ, அமைப்போ கடைப் பிடிக்க கூடாது. சுதந்திரத்துக்காய் போராடவே கூடாது, அமெரிக்காவிடம் அனுமதி பெற்றாலன்றி. புலிகளோடு போகாதே, எங்கள் பின்னால் வா முட்கம்பிகளுகுப் பின்னே மோட்சம் தருகிறோம் என்று சிங்களம் சொன்னது கூட வியட்நாம் - அமெரிக்கா பாணிதான் போலும். இந்தியா என்கிற மிகப்பெரிய ஜனநாயக நாடு இனப்படுகொலைக்கு திட்டம் தீட்டி, அறிவுரையும் உதவியும் வழங்கி, இப்போ இலங்கை சிங்கள பெளத்த ஆட்சியாளர்களே நிராகரித்த அரசியல் தீர்வு 13+ என்கிறது. விக்கி லீக்ஸ் இந்தியாவின் போர்க்குற்றங்களுக்கு துணை போன ஆதாரங்களை கூட வெளியிட்டது. ஆனாலும் கண்டுகொள்ள ஆளில்லை.

இந்தியாவின் போரை இலங்கை நடத்திக்கொடுத்ததால், இந்தியா எப்போதுமே இலங்கையை ஐ.நா. சபை என்றாலும் காப்பாற்றுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது. இலங்கை தான் இழைத்த போர்க்குற்றங்களை மறைக்க தன்னைத் தானே பாராட்டி ஐ. நாவின் மனித உரிமைகள் சபையில் May 2009 இல் கொண்டுவந்த தீர்மானத்தை (A/HRC/8-11/L.1Rev.2) வெற்றியடைய வைத்தது. இலங்கை ஜனாதிபதி கூட இந்தியா எங்களை காப்பாற்றும், எங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று இறுமாப்புடன் சொல்வது, இதெல்லாம் இந்தியா எவ்வளவு தூரம் முள்ளிவாய்க்கால் அவல முடிவில் பங்கேற்றிருக்கிறது என்பதை தெளிவாய் காட்டுகிறது. ஒரு வேளை தாங்கள் மாட்டினால் கூட இலங்கை ஆட்சியாளர்கள் மிகத் தெளிவாக இந்தியாவையும் போர்க்குற்றங்களில் பங்குபற்றியிருக்கிறது என்பதை மறைமுகமாக சொல்கிறார்கள் போலும்.

பயங்கரவாத ஒழிப்பு என்று சொல்லிச்சொல்லி இறுதியில் சிங்கள ராணுவத்தின் கோணத்தில் பார்த்து அவர்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லாதவரை ஈழத்தமிழனுக்கு நியாயம் கிடைக்க வழியுண்டு. பிரகடனப் படுத்தப்படாத அமெரிக்க வியட்நாம் போரில் எப்படி அமெரிக்க படைவீரர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இன்றுவரை அமெரிக்காவால் சித்தரிக்கப்படுகிறார்களோ, அதே போல் May 19 என்பதும் இனி இலங்கையின் வரலாற்றில் 20 உலக நாடுகளின் உதவியுடன் சிங்கள ராணுவம் நடத்தி முடித்த ஈழத்தமிழின அழிப்பை, அதன் கொடூரங்களை எப்போதும் வீர, தீர செயல்கள் என்றே  முன்னிலைப்படுத்தப்படும், சிங்கள பெளத்த ஆட்சியாளர்களால். பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்தில் கூட வரலாறு திரிக்கப்படும்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது ஓர் இனவழிப்பு என்று சர்வதேச சட்ட, தர்ம, நியாயங்களுக்கு தெரிந்தாலும், அது இன்றுவரை "பயங்கரவாத ஒழிப்பு", மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டு, மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கிறது என்கிற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. தமிழர்கள் என்கிற ஓர் தேசிய இனத்தின் நிலம், பொருளாதாரம், அதனோடு இயைந்த வாழ்க்கை, பண்பாடு, மொழி இவற்றுக்கெல்லாம் மேல் ஆயிரமாயிரம் அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது என்கிற கோணத்தில் பிரச்சனை அணுகப்படுவதில்லை. இந்தக்கோணத்தில் ஈழப்பிரச்சனை அணுகப்பட்டால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு நீதியும், நியாயமும் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு எந்தவொரு எத்துவாளி நீதிபதியும் தள்ளப்படுவார் என்பது நிச்சயம். ஆக, மனித உரிமை மீறல்கள் என்கிற மந்திர உச்சாடனத்தால் 'இனவழிப்பு' என்பது மறைக்கப்படுகிறது.

இனவழிப்பு தான் வன்னி இறுதிப்போரின் நோக்கம், முடிவு என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர் கைகளிலேயே உண்டு. முள்ளிவாய்க்கால் முடிவுக்காய் ஒரு நாள் அழுவோம், அழத்தான் வேண்டும். அழுவதும், புலம்புவதும் மட்டும் நாம் இழந்தவர்களுக்கு செய்யும் மரியாதை அல்ல. அவர்களின் அத்தனை பேரின் உயிர்த்தியாகத்துக்கு நீதி கிடைக்கப் போராடவேண்டும், சர்வதேச அரங்கில்! Brian Senewiratne சொன்னது போல், "உண்மையான யுத்தம் இப்போது தான் தொடங்குகிறது" - "The real war is just begining", என்று உறுதிகொள்வோம். ஈழத்தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காய் போர்க்குற்றவாளிகளை, அதற்கு துணைபோனவர்களை கூண்டில் ஏற்றும்வரை ஓயமாட்டோம், ஒன்றாய் நிற்போம் என்று ஒவ்வொரு இன, மான உணர்வுள்ள தமிழனும் முடிவெடுத்துக்கொள்வோம். 

ஈழம் நிச்சயம் ஒருநாள் நீதி பெறும் என்கிற நம்பிக்கையுடன்...

முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்காய் புதைக்கப்பட்ட, தங்களை புதைத்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் என் அஞ்சலிகள்!!