ஏப்ரல் 28, 2011

மனிதம் சாகுமோ!


காத்திருந்து, காத்திருந்து கடைசியில் இலங்கையின் போர்குற்ற ஐ. நா. மூவர் குழு அறிக்கை முழுதாய் வெளியாகிவிட்டது. ஏதோ புதுப்பட Trailer  போல் Isaland பத்திரிக்கை அறிக்கையின் ஓர் பகுதியை கொஞ்சமாய்  வெளியிட்டது. இப்போ முழுதாய் பக்கம், பக்கமாய் உயிரை பதறவைக்கிறது. எங்குமே, Bloggers தொடக்கம் சர்வதேச ஊடகங்கள் வரை அலசப்படுகிறது. இந்த அலசல் எல்லாம் துண்டு, துண்டாய் அறிக்கை வெளியானபோதே முடிந்துவிட்டது.

ஆனாலும், பயங்கரவாதத்தை வன்மையாக, மிதமாக கண்டிப்பவர்கள் எல்லோருமே ('Counterinsurgency Writers') அல்லது எனது மொழியில் நடுநிலமையாளர்கள் என்று  கொள்ளலாமா தெரியவில்லை, அவர்கள் அரசும் புலிகளும் போர்க்குற்றங்கள் செய்ததாக அறிக்கையின் துணை கொண்டு பக்கம், பக்கமாய் விளக்கியுள்ளார்கள். இந்த உலகத்திலேயே பிரபாகரனும் புலிகளும் தான் மிக கொடிய பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா கண்டுபிடித்த உண்மையை பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களும் எழுத்தில் ஆமொதித்தாகிவிட்டது. இனி அடுத்தது என்ன? 

அடுத்து தமிழர் தரப்பு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கும் போது தான் ஏன் எங்களுக்கென்று ஓர் ஆதரவும் இல்லாமல் போனது என்கிற கேள்வியும் எழுகிறது.

வழக்கம் போல் புலத்தில் வாழும் தமிழர் அமைப்புகள் ஒன்றாய், ஒரே அணியில் எங்கள் அடுத்த நகர்வு அறிக்கை விடயத்தில்  என்னவாயிருக்கும் என்று தெளிவுபடுத்துவது நல்லது. யாருக்குமே உடனடியாய் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனாலும், அதிகம் காலம் கடத்தாமல் எதையாவது முயன்றால் என்ன என்பது தான் எனது சிந்தனை மட்டுமல்ல தவிப்பும்  கூட.  இல்லையென்றால் இலங்கை விடயத்தில் வாழாதிருக்கும் ஐ.நா. கூட  இலங்கையின் திரைமறைவு அரசியல் சாணக்கியத்தில்  ஊத்தி மூடிவிட்டுப் போகத்தான் பார்ப்பார்கள்.

இருந்தாலும் மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச ஊடகங்களுமே இது பற்றி தொடர்ந்து ஓரளவுக்கேனும் பேசுவார்கள்  போலுள்ளது. இதற்கிடையே, சனல் 4 பிரித்தானிய காட்சி ஊடகம் மீண்டும் ஓர் காணொளியை மே மாதம் வெளியிடப்போவதாக ஓரிரு நாட்களுக்குமுன் சொல்லியிருக்கிறது.

 ஈழப்படுகொலைகளில்  எப்போதும் குறைவில்லாத காணொளிகள். ஆனாலும், போர்க்குற்ற விசாரணை தான் இழுத்துக்கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் பான் கி மூன் சொல்வது இலங்கை "consent" தந்தால் அல்லது ஐ. நா. பாதுகாப்பு சபை அல்லது மனித உரிமைகள் சபை எதுவென்று குறிப்பிடாமல், இதில் ஏதோவொரு அமைப்பு அதிகாரம் இவருக்கு கொடுக்க வேண்டுமாம். அப்படியானால் தான் சர்வதேச விசாரணைக்குழு அமைக்க முடியுமாம். தனக்கு இதுக்குமேல் அதிகாரம் இல்லையாம். இனி, எங்கள் வேலை அதிகாரத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து காய்நகர்த்துவது தானோ!!!

ஈழத்தமிழர்கள் மேல் உண்மையான அக்கறையோடு கூட வேண்டாம், மனிதம் சாகவில்லை என்று நிரூபிக்கும் ஓர் நாடேனும் உண்டா சொல்லுங்கள்!!!

 

10 கருத்துகள்:

தவறு சொன்னது…

"வழக்கம் போல் புலத்தில் வாழும் தமிழர் அமைப்புகள் ஒன்றாய், ஒரே அணியில் எங்கள் அடுத்த நகர்வு அறிக்கை விடயத்தில் என்னவாயிருக்கும் என்று தெளிவுபடுத்துவது நல்லது."

இதாங்க தேவை ரதி.

மனிதம் சாகவில்லை என்று நிரூபிக்கும் ஓர் நாடேனும் உண்டா சொல்லுங்கள்!!!

மனிதம் செத்ததை நீருபிக்க நாடுகள் உண்டு ரதி ஆனால் அநியாயங்கள் நியாயங்கள் ஆக்கப்படும் அவலம் இங்குதானே ...!!

Rathi சொன்னது…

தவறு,

அது, இந்த ஐ. நா. அறிக்கை அதன் கையாலாகாதத்தனம், சில நாடுகளின் கள்ள மெளனம் இதெல்லாம் தான் எங்களை இன்னும், இன்னும் உத்வேகத்தோடு இது குறித்து செயற்பட வைக்க வேண்டும்.

மனிதத்தை சாகடித்த நாடுகளுக்கு பஞ்சம் இல்லை தான்.

பெயரில்லா சொன்னது…

ரதி உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் ஈழத்தமிழர்கள் அவசரப்படுவது சரி இல்லைங்க.. யூதப் படுகொலையில் தொடர்புடையவர்களை கண்டுப் பிடித்து தண்டிக்க எத்தனை காலமாச்சுனு தெரியுமாங்க.

அதே போலத் தான் - முதலில் ஈழத்தமிழர்கள் ஒற்றுமை முக்கியமுங்க, என்ன தான் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், ஒரு சில விடயங்களில் ஒன்றாக செயல்படவேணுமுங்க.

மற்றொன்று குறை சொல்வதை விடவும், அனைவரின் ஆதரவை பெறுவது எப்படி என முயற்சிக்க வேண்டுமுங்க, இந்தியாவின் ஆதரவை இழந்தது ஈழத்தவருக்கு பெரும் இழப்பே ஆகும்.

//ஈழத்தமிழர்கள் மேல் உண்மையான அக்கறையோடு கூட வேண்டாம், மனிதம் சாகவில்லை என்று நிரூபிக்கும் ஓர் நாடேனும் உண்டா சொல்லுங்கள்//

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்னும் முதுமொழி - ஈழத்தமிழர்களுக்கும் பொருந்துமுங்க... தமிழ்ப் புலிகளின் தவறான அணுகுமுறையும், அரச தந்திர தோல்வியும் காரணமுங்க..

சிலர் சொல்றாங்க - ஈழத்தில் பெற்ரோல் இல்லை, வளம் இல்லை அதனால் தான் எவனும் உதவ வரலைனு. ஆனால் கிழக்கு தைமூர் எப்படி விடுதலையானதுங்க ... ஈழத்தமிழருக்கு இந்தியாவில் ஆதரவு இல்லாமல் இல்லைங்க.. இருந்துச்சு நிறைய இருந்துச்சு.. ஆனால் அதனைக் கெடுத்துக் கொண்டதும் ஒரு காரணம் தானுங்க..

இந்தியா செய்ததும் எல்லாம் சூப்பருனு சொல்லவரலை.. ஆனால் சேலை முள்ளிலப் பட்டாலும், முள் சேலைல பட்டாலும் பாதிப்பு யாருக்குங்க....

இதைத் தான் வள்ளுவர் சொல்லி இருக்காரு

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

இதனை தமிழ்ப் புலிகளும் , இந்தியாவும் பின்பற்றவில்லை. செல்லா இடத்து சினத்தால் தமிழ்ப் புலிகள் பாதிக்கப்பட்டவர்கள். செல்லிடத்து இல் அதனின் தீய பிறவாக இந்தியா நடந்துக் கொண்டதால் கெட்டப் பெயருடன் இன்று உலா வருகின்றது.

Rathi சொன்னது…

இக்பால் செல்வன்,

புலிகளின், உங்கள் பாஷையில் "புலிகளின் தவறான அணுகுமுறையும், அரச தந்திர தோல்வியும்....." இதெல்லாம் காரணம் என்றால் இந்திரா காந்தியின் இந்தியாவோடு ஈழப்போராட்டம் முற்றுப்பெற்றிருக்கும்.

//இந்தியாவின் ஆதரவை இழந்தது ஈழத்தவருக்கு பெரும் இழப்பே ஆகும். //

இந்தியா எந்தக்காலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் இருந்தது இப்போ நாங்க புதுசாய் கவலைப்பட. இதையே மாத்தி யோசித்து இந்தியா கவலைப்படும் காலம் வராமல் சீனா விடவா போகிறது. :))

நீங்கள் இந்தியாவை நேசிப்பதால் உங்கள் புலி எதிர்ப்பு விமர்சனத்திற்கு மதிப்பளித்து பதிலளித்துள்ளேன்.

பெயரில்லா சொன்னது…

ஈழத்தமிழ் போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்துப் போராட செய்ததே இந்தியா தான், ஆனால் அதில் இந்தியாவின் சுயநலம் இருந்தது. அதே வேளை இந்தியா - ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் இருந்தது. ஆனால் என்று ஈழத்தமிழர்கள் இந்தியாவின் திட்டத்துக்கு மாறாக போராடத் தொடங்கினார்களோ அன்றே பிணக்கின் ஆரம்பம் - அந்த பிணக்கை நங்கு சிங்கள அரசு இந்தியாவுடனான நட்பாக மாற்றியது. ஆனால் உச்சக் கட்டமாக தேவையே இல்லாமல் தமிழ் புலிகள் இந்திய பிரதமரைத் தீர்த்துக் கட்டியதால் பாதிக்கப்பட்டது யார்? இன்று வரை பாதிக்கப்படுவது யார் என்பதை உணர வேண்டும், இன்னமும் ஈழத்தவர் இந்தியாவை என்னவோ துரோக நாடாகவும், எதிரியாகவும் பார்ப்பதால் யாருக்கு லாபம் சொல்லுங்க.. இந்தியாவை மீறி தமிழ்நாடு மட்டும் ஈழத்துக்கு உதவ வேண்டும் என நினைப்பதும் சாத்தியப்படாத ஒன்று.

இதில் சீனாவின் அணுகுமுறை தெற்காசிய அரசியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது, அப்படியே வந்தாலும் அது ஈழத்தமிழருக்கு சாதகமாக மாறும் என்பதும் இலவு காத்த கிளியின் கதையாகத் தான் முடியும் சகோ.

ஈழத்தமிழர்கள் தமக்கான பல சந்தர்பங்களைக் கோட்டை விட்டவர்களாகவே எனக்குத் தெரிகின்றார்கள். இந்த முறை ஐநா சபையால் கொடுக்கப்பட்டு இருக்கும் கடைசி சந்தர்பத்தை பயன்படுத்தினால் உண்டு

பெயரில்லா சொன்னது…

//நீங்கள் இந்தியாவை நேசிப்பதால் உங்கள் புலி எதிர்ப்பு விமர்சனத்திற்கு//

நீங்களும் புலிகளை நேசிப்பதால் தான் இந்தியாவை எதிர்க்கின்றீர்கள் என்பது தான் நிதர்சனம் ......... !!! நான் இந்தியாவை நேசிக்கின்றேன் ஏனெனில் இது என் நாடு, அதற்காக இந்திய அரசு செய்வதை எல்லாம் நியாயப்படுத்தப் போவதில்லை ........

Rathi சொன்னது…

இக்பால் செல்வன்,

நீங்கள் மறுபடியும் என் எழுத்தை தவறாகவே புரிந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஈழத்தமிழர்கள் சீனாவை, இந்தியாவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் உச்சபட்ச அபத்தம்.

நான் புலிகளை நேசிப்பதால் மட்டுமல்ல இந்தியா ஈழத்தமிழர்களுக்கு செய்த, செய்துகொண்டிருக்கிற துரோகத்துக்காகவும் இந்தியாவை வெறுக்க என் போன்ற ஈழத்தமிழர்களுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.

//ஈழத்தமிழர்கள் தமக்கான பல சந்தர்பங்களைக் கோட்டை விட்டவர்களாகவே எனக்குத் தெரிகின்றார்கள்.//

உங்கள் பார்வையில் நாங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகிறோம். எங்களுக்கு வருத்தமில்லை சகோ. :)))

ஜோதிஜி சொன்னது…

இப்போது தான் பாரத்தை இறக்கி வைத்தேன். அடுத்த அதகளமா?

Rathi சொன்னது…

ஜோதிஜி, இதை விட்டுவிட்டு நீங்கள் முக்கியமாக படிக்கவேண்டிய, பார்க்கவேண்டிய பதிவொன்றை ராஜ நட போட்டிருக்கிறார். முதல்ல அதைக் கவனிங்க.

பெயரில்லா சொன்னது…

யதார்த்தைப் புரிந்துக் கொள்ளாமல் ஆகாயத்தில் கோட்டைக் கட்டுவதால் - ஏழைத் தமிழனின் வாழ்வு முன்னேறி விடாது ...... !!!

எதோ எனக்குத் தெரிந்தவை பகிர்ந்துக் கொண்டே சகோதரி அவ்வளவு தான்.

ஈழத்திலும், தமிழ்நாட்டின் முகாமில் இருக்கும் ஏழைத் தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்கள் எதாவது உதவி செய்து அவர்களின் வாழ்வில் வளமேற்ற முனைய வேண்டும் என்பது எனது ஆசை.