ஏப்ரல் 25, 2011

நாடு கடந்த தமிழீழ அரசு -யாரின் இறையாண்மைக்கு பங்கம்!


4986908-lg.jpg

விடுதலையின் தேடுதலாக மனித வரலாறு நகர்கிறது. இப்படி எங்கேயோ படித்த ஞாபகம் எனக்கு. ஈழத்தமிழர்களாகிய எங்களின் விடுதலை நோக்கிய வரலாறும் வெவ்வேறு விதமான அடக்குமுறைகளை உடைத்து, வெவ்வேறு விதமான பாதைகள், வடிவங்களிலும் நடைபோடுகிறது. ஆங்காங்கே வேகம் மட்டும் கூடியும், குறைந்தும் தொடர்கிறது. 

ஈழத்தமிழர்களின் மீதான சிங்கள இனவாத அடக்குமுறையும் மொழி, கல்வி என்கிற வடிவங்களில் தொடங்கி இன்று இனவழிப்பு வரை ஈழத்தில் தொடர்கிறது.  இதிலிருந்து மீளமாட்டோமா என்கிற முனைப்பின் முன்னெடுப்புகள் என அகிம்சை முதல் ஆயுதப்போராட்டம் வரை முயன்றாயிற்று. தந்தை செல்வா காலத்திருந்து இன்றுவரை உள்நாட்டு பிரச்சனை என்றார்கள்; பயங்கரவாதம் என்றார்கள்; பூகோள அரசியல் பிரச்சனை என்றார்கள். எங்களை எப்போது சிங்களனிடமிருந்து நிரந்தரமாய் காப்பாற்றுவீர்கள் என்று உயிர்ப்பிச்சை கேட்டால் பதில் சொல்ல யாரும் இல்லை. 

இனி சிங்கள இனவாதத்திலிருந்து எங்களை நாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டியது தான் எங்களுக்கிருக்கும் ஒரே வழி என்கிறபோது, அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையின் வடிவம் தான் வட்டுக்கோட்டை தீர்மானம். ஈழத்தமிழர்களின் உயிர், உரிமை, மொழி, நிலம், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றை காப்பாற்ற 'தேசம், தேசியம், தன்னாட்சி' என்கிற கோட்பாட்டில் உருவானது தான் வட்டுக்கோட்டை தீர்மானம். இந்த தீர்மானத்தை  1977 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இலங்கை பொதுத்தேர்தலில் கட்சி கோட்பாடாய் (Election Platform) வைத்து  வெற்றிபெற்று அந்த தீர்மானத்தை மக்கள் ஆனையாகவும் மாற்றமும் பெற்றது. 

இதன் பின்னர் வந்த காலங்களில் வந்தவர்கள் குறிப்பாக ஈழ விடுதலை இயக்கங்கள் முதல் தமிழ் அரசியல்வாதிகள் வரை பெரும்பாலும் அந்த மக்கள் ஆணையை கிடப்பில் போட்டார்கள். அரசியல்வாதிகள் இலங்கை அரசுக்கும், விடுதலை இயக்கங்கள் இந்தியா கொடுத்த சில வசதிவாய்ப்புகளுக்கு, அற்ப பதவிகளுக்கு தங்களை பழக்கப்படுத்தி, வளப்படுதிக்கொண்டார்கள். இந்த மக்கள் ஆணைக்கு அன்றுமுதல் கொஞ்சம், கொஞ்சமாய் வடிவம் கொடுத்து, அதற்கு உயிரும் கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தேசம், தேசியம், தன்னாட்சி என்கிற கோட்பாடு தான் 'தமிழ்த்தேசியமாய்' மலர்ந்தது. அதுக்கும் ஏதேதோ காரணங்கள் சொல்லி இன்று அதை ஈழத்தில் முற்றுமுழுதாய் அழித்தாயிற்று. 

இதையெல்லாம் இன்று மீட்ட வேண்டிய அவசியம் என்னவென்று கொஞ்சமேனும் சிந்திப்பவர்களுக்கு அதற்கான காரணம் தெரியும். அது புரியாதவர்களுக்கு, 'தமிழ்த்தேசியம்' புலிகளின் கண்டுபிடிப்பு என்கிற ஓர் அறியாமையை நீக்கவே இந்தப் பதிவு. தமிழ்த்தேசியம் புலிகளோடு பிறக்கவுமில்லை. அது புலிகளோடு இறக்கவுமில்லை. அது மீண்டும் நாடு கடந்த தமிழீழ அரசாய் இன்னோர் வடிவம் கொண்டுள்ளது என்பதை புரியாதவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்தால் நல்லது. தமிழ்தேசியம் எந்த நாட்டின் இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்கப்போவதில்லை. அதன் நோக்கமும் அதுவல்ல. 

சீனாவின் இறையாண்மை பற்றி கவலைப்படாமல் இந்தியா தலாய்லாமாவின் புலம்பெயர் அரசை (Government in Exile) ஆதரிக்கிறதாம். ஈழத்தமிழர்களின் நாடுகடந்த தமிழீழ அரசை (Transnational Government) ஏன் ஆதரிக்கவில்லை என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனாலும், தமிழ்நாட்டில் ஒருவர் கேட்டார். சுப. வீரபாண்டியன் தான் அவர். அவருடைய அரசியல் நிலைப்பாடு எந்த விதத்திலும் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டிற்கு குறைந்ததல்ல! இருந்தாலும், எப்போதோ ஏதொ ஒரு பொழுதில் இந்தப் பதிவை அவர் தளத்தில் எழுதி தொலைத்துவிட்டார். 

"தலாய்லாமாவுக்கு ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதியா?" என்று கொஞ்சம் உலக நியாயத்தை பேசியிருக்கிறார். அவருடைய ஆக்கத்தின் கடைசி வரிகள், "தமிழீழ மக்களின் கோட்பாடும் நியாயமானது, அவர்களின் திறமை போதுமானது, உறுதி குலைக்கப்பட முடியாதது. எனவே, அவர்களின் வெற்றியும் நிச்சயம் என்பதை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உணர வேண்டும்." 

ஈழவிடுதலை நோக்கிய வரலாற்றின் ஓர் மைல் கல்லே நாடு கடந்த தமிழீழ அரசு.

ஒரு வேண்டுகோள் இந்த கட்டுரையில் இருக்கும் இணைப்பில் சுப. வியின் பதிவை படிக்காமல் போகாதீர்கள். 



13 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

தாங்கள் கடந்து வந்த, தாங்கள் வாழ்ந்த அடிமை நாட்களை மறந்து விடுகிறார்கள். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தேசத்துக்கும் பொருந்தும். விடுதலை கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது என்றால் - விடுதலையை குலைப்பதற்கும் ஒரு நியாயம் தேடுகிறார்கள். என்ன செய்வது.

தவறு சொன்னது…

விடுதலை நெருப்பு நெஞ்சில் கனன்று கொண்டே இருக்கவேண்டும் ரதி தகுந்தகாலங்கள் வரும்வரை பொறுமை காக்கவேண்டும்.

இதை சாதாரண தமிழனின் நெஞ்சினில் எதிர்பார்க்கமுடியாது. ஏனென்றால் அவனுடைய தேவை உயிர் ஆதாரமே...உள்ளுக்குள் புழுங்கி என்றைக்காவது ஒரு நாள் விடியாதா என்ற ஆவல் மட்டுமே எஞ்சியிருக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசு தங்களுடைய நடவடிக்கைகள் மூலம் தீவிரமாய் செயல்பட்டு சர்வதேசத்தையும் தங்கள்பக்கம் திருப்பி உலகநாடுகளுக்கிடையே நிகழும் ஈழம் பற்றிய வேறுப்பட்ட பார்வைகளை ஒன்றாக்க முயலவேண்டும்.

இப்போதைக்கு உள்ள அதிகாரஅமைப்பாக தென்படுவது நாடுகடந்த தமிழீழ அரசு மட்டுமே ரதி.

ஜோதிஜி சொன்னது…

தாங்கள் கடந்து வந்த, தாங்கள் வாழ்ந்த அடிமை நாட்களை மறந்து விடுகிறார்கள். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல.

ரதி இந்த இடத்தில் நிறைய எழுத என்னிடம் விசயங்கள் உண்டு. ஆனால் நண்பர் ஒருவர் (ஈழம்) கொடுத்துள்ள இந்த சுட்டி உங்களின் பார்வைக்கு வந்துள்ளதா என்று தெரியவில்லை. இந்த சுட்டியும் இதில் அவரே கொடுத்துள்ள விமர்சன பதிலும் என மனதில் பல நாட்கள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

http://sivasinnapodi1955.blogspot.com/2011/04/blog-post_16.html

ஜோதிஜி சொன்னது…

எதிரியிடம் அடிமையாக அவன் போடும் பிச்சையை எதிர்பர்த்து வாழ்வதை விட உலகத்தில் கொடுமையானது வேறொன்றும் இல்லை.நாங்கள் உலகில் இன்று 9 கோடி தமிழர்கள் வாழ்கின்றோம்.ஆனால் ஒன்றரை கோடி சிங்களவர்கள் எங்களை ஆட்டிப்படைக்கிறார்கள். இதற்கு காரணம் எங்களிடைய இருக்கும் அடிமைச் சிந்தனையும் பிழைப்புவாதமுமே. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்தமான ஓருநாள் வருமானம் சிறீலங்கா அரசின் ஓராண்டு வருமானத்தை விட அதிகம்.
உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களின் பொருளாதார பலத்தை ஊடகபலத்தை அறிவுத்திறணை ஒருங்கிணைத்து ஒன்று சேர்ப்போமாக இருந்தால் நாங்கள் இந்த உலகத்தை தீர்மானிக்கிற சக்திகளில் ஒன்றாக இருப்போம்.

ஜோதிஜி சொன்னது…

இங்கு எதார்த்த நடைமுறைச் சிக்கலை உங்களுக்கு நடைமுறையில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். தமிழ்நாட்டில் பல இடங்களில் ஈழத்தில் இருந்து வந்து அகதி என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அநேகம் பேர்கள். ஒரு வகையில் முக்கால் வாசிபேர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது நரக வாழ்க்கையே. ஆனால்தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அவர்களுடன் ஓர் அளவுக்கு மேல் நெருங்கி பழகுதல், அவர்களுக்கு உதவுவதல், உரையாடுதல் போன்ற சாதாரண நிகழ்வுகள் கூட வாய்ப்பில்லை. புலி முத்திரை குத்தப்படும். உளவுத் துறையினரால் கவனிக்கபடும் வட்டத்திற்குள் நாம் வந்து இருப்போம். ஆனால் திபெத் அகதிகள் என்ற பெயரில் வட நாட்டில் இருப்பவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் ராஜ உபச்சாரங்கள் எழுதி மாள முடியாது. ஏன்? ஏன்? ஏன்?

இங்கு ஈழ ஆதரவு என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருப்பவரகளில் எத்தனை பேர்கள் இங்குள்ள முகாம்களில் எட்டிப் பார்த்திருப்பார்கள் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியே?

எல்லாமே அரசியல்
எப்போதும் அரசியல்
ஏனிந்த அரசியல்

இதுவும் ஈழம் சார்ந்த விசயங்களுக்கு மட்டும்?

ஹேமா சொன்னது…

ரதி ஊரில் இருப்பவர்கள்கூட தாங்கள் பட்ட அவதிகளை மறந்திருப்பார்களோ என்னவோ நாங்கள் அடிமைப்பட்ட்டதை படுவதை நான் மறக்கவில்லை.

பார்ப்போம்...ஐநா இழுத்தடிக்கும் என்று நினைத்த குற்றப்பத்திகை விஷயத்தை முழுதாக வெளியிட்டுவிட்டது.இனி அதை உலக மனிதநேய மக்களிடம் கொண்டு போறது உலகத் தமிழர் நம் கைகளில்தான்.

எத்தனை கட்சிப் பிரிவுகள் இருந்தாலும் சிங்களவர்கள் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.மே தினத்தைத் தாண்டி இந்த மே தினம் வேறுமாதிரி இலங்கையில்.எனவே ஒன்றுபடுவோம்.காலம் தாழ்ந்தாலும்
நிச்சயம் ஒரு பலன் இருக்கு !

Rathi சொன்னது…

தமிழ் உதயம்,

நீங்கள் சொல்வது சரிதான் விடுதலையை குலைப்பதற்கும் அநியாயத்திற்கு நியாயம் தேடுகிறார்கள். எதுவுமே அகப்படாத போது அகப்படுபவர்கள் தான் புலிகள்

Rathi சொன்னது…

தவறு,

ஈழத்தமிழர்களின் பிரச்னையை புரிந்துகொண்ட பேசுபவர்களில் நீங்களும் ஒருவர். இதற்கு மேல் நான் என்ன சொல்லிவிட முடியும்

Rathi சொன்னது…

ஜோதிஜி,

சிவாசின்னப்பொடி என்பவரின் தளத்தை நானும் கடந்த சில நாட்களாக படித்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் சுட்டியை படித்தேனா தெரியவில்லை. பார்க்கவேண்டும்.

இந்தியா கடந்துவந்த அடிமை நாட்களை மட்டுமல்ல, தனக்குரிய கேந்திர புவிமைய அரசியலையும் சேர்த்தே மறந்துவிட்டது.

இந்தியாவும் எங்களுக்கு போதிப்பது 'புலிகளை மறவுங்கள்'. சுபாஸ் சந்திர போஸ், காந்தி இவர்களையெல்லாம் மறந்துவிட்டு உங்களால் சுதந்திரம் பற்றி சிந்திக்க முடிவதுண்டா! அதேபோலவே, ராஜபக்க்ஷே மின்சாரகதிரையில் தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்வேன் என்று சொல்வது கூட தன் ராணுவத்தை யாரும் குறைகூறவோ, குற்றவாளிக்கூண்டில் ஏற்றவோ கூடாதாம்.

என்னய்யா இது இலங்கை ராணுவம், இந்திய ராணுவத்தை விடவா மோசம் எங்கள் தமிழ்ப்புலிகள். நாங்கள் ஏன் புலிகளை விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனாலும், இங்கே செத்துப்போன புலிகளை சும்மா ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வருமானம் சம்பந்தமான கணக்கு முன் எப்போதோ நானும் கேட்டிருக்கிறேன். புலம்பெயர் தமிழர்களின் ஒருநாள் ஒட்டுமொத்த வருமானம் கிட்டத்தட்ட இலங்கையின் ஒருமாத வருமானம் என்கிற மாதிரி ஒரு கணக்கு.

Rathi சொன்னது…

ஜோதிஜி,

//உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களின் பொருளாதார பலத்தை ஊடகபலத்தை அறிவுத்திறணை ஒருங்கிணைத்து ஒன்று சேர்ப்போமாக இருந்தால் நாங்கள் இந்த உலகத்தை தீர்மானிக்கிற சக்திகளில் ஒன்றாக இருப்போம்.//

நீங்கள் சொல்வதையெல்லாம் புலம்பெயர் தமிழர்கள் எப்போதோ ஈழத்தின் பெயரால் ஒருங்கிணைத்துவிட்டார்கள். எங்களுக்குரிய 'அரசியல் பலம்' அதைத்தான் தமிழகத்திடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்றால், என்னைய ரவுண்டு கட்டி அடிக்கிறாங்கப்பா! :))

ஜோதிஜி, நீங்கள் சொல்லும் நடைமுறைச் சிக்கலுக்கு முக்கியமாக சொல்லப்படும் காரணம், புலிகள் ராஜீவை கொன்றார்களாம், புலிகள் பயங்கரவாதிகளாம், இந்தியாவின் இறையாண்மைக்கு அகதிகள் ஊறு விளைவிப்பார்களாம், இன்னும் நிறைய 'களாம்..' சொல்லலாம்.

நான் வினவு தளத்தில் எழுதிய போது இதுகுறித்து எழுதியதாக ஞாபகம். அங்கே சுட்டியும் இணைத்திருந்தேன். திபெத் அகதிக்கும் நாதியற்ற ஈழத்தமிழனுக்கும் இந்தியா செய்யும் மரியாதையை.

Rathi சொன்னது…

ஹேமா,

ஒன்றை கவனித்தீர்களா ஐ. நா. மூவர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசின் ஒவ்வொரு நகர்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசும் பதிலடியாய் ஓர் நகர்வை முன்னெடுக்கிறார்கள். பாண்- கி. மூனுக்கு அனுப்ப இப்போ 'Signature Campaign' நடக்கிறது. மறக்காமல் கையெழுத்து போடுங்கள்.

முழு அறிக்கை வந்தாலும், இனி அது குறித்து இலங்கை விசாரணை செய்யுமா அல்லது சர்வதேச குழுவா, Accountability Processs என்றெல்லாம் இன்னும் பல பத்து வருடங்கள் இழுத்தடிப்பார்கள். நாங்கள் செய்யவேண்டியதை நாங்கள் செய்வோம். என்றாவது ஒரு நாள் நல்ல பலன் கிடைக்கும்.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!சுப.வீரபாண்டியன் become obsolete.இந்த கால கட்டத்தில் அவரைப் படிக்கச் சொல்றீங்களே?எழுத்தும் உணர்வோடு,சதையோடு ஒன்றியதாக இருக்கும் போது மட்டுமே அதற்கும் உயிர்.

தற்போதைய நிலையிலும்,இனி வரும் காலத்திலும் நாடு கடந்த தமிழீழ அரசு மட்டுமே தமிழீழ கனவுக்கான சாத்தியம்.ஆனால் அதன் வீச்சும்,இணைப்பு சக்தியும் இன்னும் வலுவாக வேண்டும்.எப்பொழுதும் சொல்வது போல் இப்பொழுதும் உட்பூசல்களின் வீச்சுக்கள் குறைய வேண்டும்.

Rathi சொன்னது…

ராஜ நட,

சுப. வியின் பதிவு நான் எப்போதோ சேமித்து வைத்துக்கொண்டது. இப்போ அதை ஓர் ஞாபகப்படுத்தலாய் வெளியிட்டேன். கீற்று இணையத்தின் முகப்பில் ஓர் வாசகம் உண்டு, மறப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்தவேண்டியது எங்கள் கடமை என்கிற மாதிரி. அது போல் தான் இதுவும் என்று நினைத்தேன்.