ஏப்ரல் 23, 2011

சாத்வீக தமிழகம்!ஈழத்துக்கு அருகிலிருந்தும் விலகியிருக்கும் தமிழகத்துக்கு, தமிழக தமிழர்களுக்கு ஒரு சிறிய நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அண்மையில் Times இணைய கணிப்பீடான பிரபலமானவர்கள் என்கிற பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவை சேர்த்ததிற்கு உங்கள் எதிர்ப்பை தெரிவித்தமைக்கும், இன்று அவர் பெயர் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமைக்கும் நன்றிகள்.

வழமையாக புலம்பெயர் செயற்பாட்டாளர்கள்  ஊடகப் போர் சம்பந்தமான முன்னெடுப்புகளுக்கான அழுத்தங்கள் எங்களிடமிருந்துதான் வரவேண்டும் என்று சொல்வார்கள். இன்று அதில் தமிழக தமிழர்களின் விழிப்புணர்வும், செயற்பாடும் எங்கள் பாரத்தை கொஞ்சம் உங்கள் தோள்களில் இறக்கி வைத்திருக்கிறோம் என்கிற ஓர் நிம்மதியைக் கொடுக்கிறது. வரலாறு முக்கியம் மக்களே. ஊடகப்போரிலும் தமிழன் வென்றான் என்று வரலாறு படைக்க வேண்டாமோ :)

ஆனாலும், இது ஒரு தொடக்கமே. நாம் இன்னும் கடந்துசெல்லவேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கிடைக்க அங்கு நடந்தது போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் என்பதெல்லாம் சர்வதேச  குற்றவியல் சட்டதிட்டங்களுக்கு அமைய நிரூபிக்கப் பட வேண்டும். அப்போது தான் நாங்கள் இழந்ததெல்லாம் மீளக் கிடைக்காவிட்டாலும் எங்களுக்கு நீதி என்பது தடையின்றி கிடைக்கும். அதுக்கு இன்னும் எத்தனை 'பத்து' வருடங்கள் வேண்டுமானாலும் செல்லலாம். முயற்சிகள் மட்டும் தடைகளை உடைத்து தொடரவேண்டும். 

இப்போ இலங்கை ஐ. நாவின் மூன்று பேர் கொண்ட குழு அறிக்கையை பொய்யாக்க, சட்டபூர்வமற்றது என்று நிரூபிக்க தம் இனத்தையும் தூண்டிவிட்டு, திரைக்குப் பின்னாலும் காய்நகர்த்திக்கொண்டு இருக்கிறது. வழக்கம் போல் இந்தியாவின் மெளனம். இன்று நாளை என்று அறிக்கையை வெளியிட இழுத்தடிக்கும் சர்வதேச மனமகிழ் மன்றம், (நன்றி- பதிவர் தெகா) ஐ. நா. இருந்தாலும் சர்வதேச ஊடகங்களும், Inner City பிரஸ்  ஊடகமும் கேள்விமேல்  கேள்வி கேட்டு ஏன் அறிக்கையை வெளியிடவில்லை என்றால், ஏதோவொரு காரணம் சொல்கிறார் ஐ. நா. வின் பேச்சாளர். விடாக் கண்டனுக்கு கொடாக் கண்டன் என்பது போல் தொடர்கிறது இந்த இழுபறி.

அறிக்கை எப்படியும் வெளியிடப்படும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்தியாவின் மெளனம், ஐ. நாவில் ஈழப்பிரச்சனை பேசப்படும் போதெல்லாம் ரஷ்யா, சீனாவின் நேரடியான இலங்கைக்கான ஆதரவு இதுக்கெல்லாம் எப்படியாவது தமிழ்நாட்டில் ஏதாவது எதிர்ப்பு கிளம்பாதா, குறைந்த பட்சம் இந்திய அரசுக்கேனும் தங்கள் எதிர்ப்பை தமிழக தமிழர்கள் காட்டுவார்களா என்கிற ஓர் சிறிய எதிர்பார்ப்பு வழக்கம் போல் எனக்கும் உண்டு.

இப்போ உலகில் ஆங்காங்கே நடக்கும் மக்கள் கிளர்ச்சிகளை பற்றி நோம் சாம்ஸ்கி கருத்துச்சொன்னபோது ஏன் அமெரிக்காவில் இப்படி மக்கள் கிளர்ச்சி  நடக்கவில்லை என்பதற்கு மக்கள் quiet and passive ஆக இருக்கும்வரை எதுவும் மாறாது என்று குறிப்பிட்டார். அமைதியாய், சாத்வீகமாய் இருப்பதில் தப்பேயில்லை. ஆனால், உங்கள் உறவுகள் பரிதவிக்கும் போதுகூடவா அப்படி இருக்கவேண்டும்! தமிழகத்தில் தமிழர்களும் எதையும் அமைதியாய், எதிர்க்காமல், சாத்வீகமாக, சகிப்புத்தன்மையோடு இருப்பதால் தான் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக Al Jazeera ஆக செயற்படவேண்டிய கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகள் கூட ஈழத்தமிழர்களின் அவலங்களை புறக்கணிக்கின்றன. அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் சாத்வீகமாக இருந்தாலும் அவர்களின் நீர், நில, வான் எல்லைகளை தாண்டி கூட யாரும் அவர்களை நெருங்க முடியாது. தமிழக தமிழர்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் 'QUIET & PASSIVE' ஆக இருந்தால் சீனா தமிழ்நாட்டின் எல்லையில் வந்து நிற்கப் போகிறார்கள்.   

42 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

எப்போதோ, எங்கேயோ வாசித்தது. இந்த பதிவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். "ஈழத்தமிழர் மற்றும் இந்தியத் தமிழர் இருவருமே சுரண்டத்தான் படுகிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு சுரண்டப்படுவது தெரிகிறது. அதனால் அவர்கள் விழித்து கொள்கிறார்கள். இந்திய தமிழர்களுக்கோ - தான் சுரண்டப்படுவது தெரிவதே இல்லை. அதனால் அவர்கள் விழிப்பதற்கு வாய்ப்பே இல்லை"

ஹேமா சொன்னது…

ரதி...ஈஸ்டர் லீவு முடிஞ்ச பிறகுதானாம் அறிக்கையை அப்பிடியே எதுவும் திருத்தாம வெளியிடுவினமாம்.ஆனா எப்ப எண்டு சொல்லேல்ல.எப்பவாவது வெளியிடுவினமோ !

இக்பால் செல்வன் சொன்னது…

முதலில் இராஜபக்ஷேவுக்கு எதிராக டைம்ஸ் சஞ்சிகையில் ஓட்டுப் போடுவதைப் பற்றி ஏன் புலம் பெயர் ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை - ஒரு வேளை நான் கேட்கும், பார்க்கும் புலம் பெயர் ஊடகம் மட்டும் தான் அப்படி செய்தனவா எனத் தெரியவில்லி.

நல்ல விஷயம் இராஜபக்ஷேவுக்கு டைம்ஸ் சஞ்சிகை கொடுத்த மூக்குடைப்பு.

இரண்டாவது - ஈழத்தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது தமிழ்நாட்டு தமிழர்கள் பொங்கி எழுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டதும், அது நடைபெறாத போது எங்கள் மீது சில ஈழத்தமிழர்கள் பிணக்காய் இருப்பதை நான் அறிவேன். ஆனால் இன்றைய சூழலில் அதுவும் இந்தியாவின் அரசியல் - கட்டமைப்பு மற்றும் பொருளாதார நிலையில் அப்படியான பெரும் போராட்டம் சாத்தியமில்லை. அத்தோடு மட்டுமின்றி தமிழக புலி ஆதரவு கட்சிகளும், புல் ஆதரவில்லாத கட்சிகளும் நன்கு குட்டையை குழப்பினர். பல அப்பாவிகள் விலைக்கு வாங்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டனர்.

மூன்றாவது - இதனை பல ஈழத்தவர் என்னிடமே நேரிடையாக கேட்டு எனது மனதைப் புண்படுத்தி உள்ளார்கள். எனது பெற்றோர் இலங்கையில் பிறந்து பின்னர் தாயம் திரும்பியவர்கள். அவர்கள் ஊடாக இலங்கையின் நிலைமையை என்னால் கவனிக்க முடிகின்றது. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் அமைதி மற்றும் பாசிவ் நிலையை வைத்துக் கொண்டு எம்மை புண்படுத்துதல் நியாயமில்லாத ஒன்று.

நான்காவது - புலம் பெயர் தமிழர்கள் போரின் இறுதியில் நடத்திய போராட்டத்தை அதன்பின் நடத்த முற்படவில்லை. நடத்தப்பட்டவை எதுவும் பெரிதாக வெற்றியளிக்கவில்லை. அதனால் புலம்பெயர் தமிழர்கள் எதோ புலிகளைக் காப்பாற்றத்தான் போராட்டம் நடத்தியதாக ஏனைய மக்களும், மேற்குலகமும் நம்பி விட்டன. பார்ப்போம் இனியாவது மக்களுக்காக புலத்தில் போராட்டம் வருகின்றதா என.

ஐந்தாவது - இந்தியா ஒருபோதும் அமெரிக்காவின் பின்புலத்தில் வரப்போகும் ஐநா விசாரணையைத் தடுக்காது என்றே நினைக்கின்றேன். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நேரிடையாக ஒரு தீவிரவாத அமைப்புக்கு உதவும் என தப்புக் கணக்குப் போடப்பட்டது முட்டாள் தனம். அதே வேளை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் தான் இலங்கைக்கு இந்தியா உதவியது. ஆனால் அது தொடரும் என நம்புவதும் முட்டாள் தனம். அதே போல சீனா தமிழகத்தின் கரைக்களுக்கு வந்து கரைச்சல் பண்ணும் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. அந்தளவுக்கு தாழ்ந்துவிடவில்லை இந்தியா. பூனை தூங்குதுனு எலிக்கு கொண்டாட்டம் என்பதைப் போல இந்தியாவின். இந்திய மக்களின் அமைதியில் இலங்கை ஆட்டம் போடுகின்றது.

இன்னும் நிறைய மாற்றங்கள் வரும். இந்திய இறையாண்மையைப் பகைத்துக் கொண்டு தமிழக மக்கள் ஈழத்துக்கு போராட மாட்டார்கள் என்பது எனது கணிப்பு. ஈழத் தமிழர் இந்தியாவுடன் இணையும் சூழலில் இலங்கைக்கு எதிராக இந்திய அரசைத் திருப்பிவிடும் சூழலை உருவாக்கினால் ஈழத்தமிழர்கள் பலவற்றை சாதிக்கலாம். பொறுத்து இருந்து தான் பார்க்கணும்.

ஜோதிஜி சொன்னது…

இந்திய இறையாண்மையைப் பகைத்துக் கொண்டு தமிழக மக்கள் ஈழத்துக்கு போராட மாட்டார்கள் என்பது எனது கணிப்பு.

இக்பால் செல்வன் இப்ப நீங்க இருப்பது வெளிநாட்டிலா தமிழ்நாட்டிலா? 80 சதவிகித தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இறையாண்மை அப்படிங்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாதுங்கோ. ஒரு வகையில் சொல்லப்போனால் இன்னமும் தமிழ்நாட்டில் நான் பார்த்தை வரைக்கும் ஈழப் பிரச்சனை இப்படித்தான் இருக்கிறது. இப்படித்தான் பேசுகிறார்கள்.

பொழைக்கப் போன இடத்தில ஏனப்பா சண்டை போடுறாங்க. அவனுங்க விடுவாங்களா?

காரணம் நம்ம ஊடகங்கள் அந்த அளவிற்கு இந்த ஈழப் பிரச்சனை குதறி வைத்து விட்டது.

ஜோதிஜி சொன்னது…

அமெரிக்காவின் பின்புலத்தில் வரப்போகும் ஐநா விசாரணையைத் தடுக்காது என்றே நினைக்கின்றேன். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நேரிடையாக ஒரு தீவிரவாத அமைப்புக்கு உதவும் என தப்புக் கணக்குப் போடப்பட்டது முட்டாள் தனம்.

இக்பால் என்ன இந்த அளவுக்கு ஆச்சரியமா யோசிக்கிறீங்க. இந்தியா நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆதரித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் ராஜபக்ஷே கோபப்பார்வை என்னவாகும் என்று புரிந்தவர்களுக்குத் தெரியும். இந்தியாவை வல்லரசு என்ற வார்த்தையால் அழைக்காதீர்கள். ஈழப் பிரச்சனையை பொறுத்தவரையிலும் வல்லூறு என்று வேண்டுமென்று அழையுங்கள். இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளை தீர்மானிப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒவ்வொன்றுக்குள்ளும் ஓராயிரம் சுயநலங்கள். ஜெனிவா ஓப்பந்தம் குறித்து ரணில் விக்ரமசிங்கே இருந்த போது அமெரிக்காவில் நடத்த வேண்டிய மாநாட்டில் விடுதலைப்புலிகளை கலந்து கொள்ள விடாமல் தடுத்தது இந்தியா. இது தான் முதல் அடி. முக்கியமான அடியும் கூட. ஒரு வேளை அன்றே இந்த மாநாட்டில் ஆன்டன் பாலசிங்கம் கலந்து கொண்டு ஒப்பந்த ஷரத்துக்ளை நகர்த்தியிருந்தால் அடுத்து அடுத்து பல நல்ல விசயங்கள் சமாதான உடன்படிக்கை நிறைவேறி இருக்கக்கூடும்.

ஜோதிஜி சொன்னது…

இன்றைய சூழலில் இந்தியாவின் அரசியல் - கட்டமைப்பு மற்றும் பொருளாதார நிலையில் அப்படியான பெரும் போராட்டம் சாத்தியமில்லை

இதுக்கு என்ன காரணம்? திங்க உடுக்க தூங்க பிரச்சனையில்லை. பணம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற வித்யாசத்தை மறைக்க மறக்க ஊடகங்கள் இருக்கு. இலவசமாக வேறு கொடுத்து இருக்காங்க. எப்போதும் ஒரு மயக்கத்திலேயே இருக்கலாம். அடுத்த பிரச்சனை குறித்து அடுத்த நாடு நிலவரம் குறித்து கவலைப்படவேண்டிய அவஸ்யமில்லை. எத்தனை நாளைக்கு?

அவரவர்களும் தன்னுடைய இருப்புக்கு, உடுப்புக்கு, சாப்பாட்டுக்கு, வேலைக்கு என்று கஷ்டப்படும் சூழ்நிலை வரும் போது, குறிப்பாக விலைவாசிகள் உயர்ந்து இனி நம்மால் வாழ முடியாது என்ற நிலையின் போது அடுத்தவர்களின் பணத்தின் மீது பொருட்களின் மீது எண்ணம் வரும். இயல்பாகவே கலவரங்கள் உருவாகும். ஆனால் இப்போது போய்க் கொண்டிருக்கும் பாதை இன்னும் ஒரு தலைமுறைக்குள் லஞ்சம் ஊழல் துடைக்கப்படாவிட்டால் இந்தியா இது போன்ற பிரச்சனைக்குள் மாட்டி விடும். உருவாகும் கலவரங்களும் சிரிதாக இருக்காது. பாகிஸ்தான் இந்தியா பிரிந்த போது உருவானதே அதைப் போலவே இருக்கும். இப்போது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை வேடிக்கைப் பார்ப்பார்கள்.

ஜோதிஜி சொன்னது…

ஏன் இந்த ஊடகங்கள் ஈழ விசயங்களை இரட்டடிப்பு செய்கின்றது?

பெரும்பாலான முதலாளிகளுக்கு இன மொழி உணர்வை விட பண உணர்வு ரொம்பவே முக்கியம். பசை இல்லாவிட்டால் சந்தையில் நிற்க முடியாது. அரசாங்கத்தை பயமுறுத்திக் கொண்டிருக்கலாமே தவிர நிரந்தரமாக பகைத்துக் கொள்ள எவரும் விரும்ப மாட்டார்கள்.

நான் பார்த்தைவரையிலும் உள்ளூர் பிரச்சனைகளை கூட அவரவர்களுக்கு தகுந்தாறு தான் போட்டு தாக்குகிறார்களே தவிர அதன் உண்மையான விசயத்தை எவரும் புரியவைப்பதில்லை. இதே தான் முக்கிய காரணம் ஈழ பிரச்சனையிலும்.

60 சதவிகித சாதாரண தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நிமிடம் வரைக்கும் ஈழம் குறித்து ஒரு சதவிகிதம் கூட தெரியாது. அப்படியே பேசிப்பார்த்தாலும் ஆமாம்ப்பா என்னவோ சண்டை நடக்குதாம். இப்ப சரியாயிடுச்சாம்.

பல முறைநொந்து போயி இருக்கேன். அப்புறம் இங்குள்ள அறிவு ஜீவிகள். இவர்களின் அதகளம் அதற்கு மேலே?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>ஆனாலும், இது ஒரு தொடக்கமே. நாம் இன்னும் கடந்துசெல்லவேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது.

இறுதி இலக்கை அடையும் வரை போராடுவோம்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நாங்கள் எப்போதும் எங்களால் இயன்றவற்றை செய்துகொண்டுதான் இருக்கிறோம்...

Rathi சொன்னது…

தமிழ் உதயம், நீண்ட நாட்களின் பின்னர் எழுதியிருக்கிறீர்கள். எந்த தமிழர்கள் ஆனாலும் இனிமேல் விழித்துக்கொள்ளத்தானே வேண்டும்

Rathi சொன்னது…

ஹேமா, ஈஸ்டர் விடுமுறை என்றார்கள், இப்ப அதுவும் இல்லையாமோ! நான் இன்னர் சிட்டி பிரஸ் பார்க்கவில்லை

Rathi சொன்னது…

இக்பால் செல்வன் உங்கள் முதல் வருகைக்கு, கருத்துக்கு நன்றி.

புலம் பெயர் ஊடகங்கள் அலட்டிக்கொள்ளவில்லை என்பது அதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று பொருளாகுமா! அதனால் தான் சொல்கிறேன், இந்த தடவை தமிழ்நாட்டு தமிழர்கள் விழித்துக்கொண்டார்கள் என்று. தவிர, கனடாவில் தேர்தல் கட்சி விளம்பரங்களில் எங்களுக்கு எதிரான "பயங்கரவாதிகள்' என சித்தரிக்கப்படும் அக்கப்போரே பெரிசாக இருக்கு.

நான் நிறைய சொல்லவேண்டுமென்று தான் நினைத்தேன். இருந்தாலும் ஜோதிஜியின் பதிலில் நான் சொல்லநினைத்து எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

உண்மையிலேயே உங்கள் ஈழம், தமிழகம், இந்தியா குறித்த சிந்தனை என்னை ஆச்சர்யப்படுத்தியது.

//இன்னும் நிறைய மாற்றங்கள் வரும். இந்திய இறையாண்மையைப் பகைத்துக் கொண்டு தமிழக மக்கள் ஈழத்துக்கு போராட மாட்டார்கள் என்பது எனது கணிப்பு//

யதார்த்தமான உண்மையை பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள். ஆனாலும், இந்தியா மும்பாய்க்கு ஒரு விதமான இறையாண்மையையும், தமிழக மீனவர்களுக்கு இன்னோர் விதமான இறையாண்மையும் Practice பண்ணுதே! அதை மறக்காதீர்கள்.

//ஈழத் தமிழர் இந்தியாவுடன் இணையும் சூழலில் இலங்கைக்கு எதிராக இந்திய அரசைத் திருப்பிவிடும் சூழலை உருவாக்கினால் ஈழத்தமிழர்கள் பலவற்றை சாதிக்கலாம். பொறுத்து இருந்து தான் பார்க்கணும். //

எப்போதும் அரசியலில் மற்றும் வரலாற்றில் எதிர்வுகூறல் என்பது கடந்தகாலத்தை அடிப்படையாக கொண்டே கணிக்கப்படுகிறது. இந்தியா ஈழத்தமிழர்கள் முதுகில் குத்தியதை எத்தனை தடவைதான் நாங்களும் வரலாற்றில் இருந்து மீட்டுவது. அலுத்துப்போகிறது இக்பால் செல்வன்.

நீங்க சொல்லும், "இலங்கைக்கு எதிராக இந்திய அரசைத் திருப்பிவிடும் சூழலை.....", :) முதலில் இந்தியா இந்துமா சமுத்திரத்தில் நீங்கள் சொல்லும் இறையாண்மையை காப்பாற்றிக்கொள்ளட்டும், பார்க்கலாம்.

Rathi சொன்னது…

சி.பி. செந்தில்குமார், வழக்கம் போல் உங்கள் உற்சாக கருத்துக்கு நன்றி

Rathi சொன்னது…

செந்தில், நல்லது. தொடருங்கள்

Rathi சொன்னது…

ஜோதிஜி, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்

தவறு சொன்னது…

ஈழதமிழர்களுக்கான இந்தியாவோட ஆதரவு என்பது இனி ??? இப்படிதான்.

தமிழ் தமிழ்நாடு தமிழர் ஈழதமிழர் என்ற பொதுகருத்தை உருவாக்க இங்குள்ள அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்பு வேண்டும் அதுஇல்லாதபட்சத்தில் பெருவாரியான தமிழ்மக்களின் ஆதரவு என்பதும் சந்தேகம் தான்.

படித்தவர்களிடமும் ஈழத்தி்ல் ஏன் பிரச்சனை என்ற
சிந்தனை அல்லது கேள்வி எழாதவரையில் அதற்கு ஆதரவு என்பதும் சந்தேகம் தான். கிரிகெட் சினிமா
தான் அவனுடைய முக்கியவிசயங்கள் தற்பொழுது.

தலைவர்கள் அமையாத வரையில் இந்தியா என்பதைவிடவும் தமிழகத்தின் ஆதரவே ஈழவிசயத்தில் கவலைபட கூடிய ஒன்றுதான் ரதி.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!தமிழக மக்களிடம் ஈழப்பிரச்சினை சரியாகப் போய் சேர்ந்திருக்க வேண்டிய நேரம் மே 2009 இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதற்கு முந்தைய ஜனவரி தொட்டு.

அப்போதைய இணைய தளத்தின் பதிவுகளைப் பார்த்தால் பெரும் தீ தமிழகத்தில் பற்றிக்கொள்ளுமென்றே நானும் ஏனைய பதிவர்களும் நினைத்தோம்.அதற்கான கள போராட்டங்களாக முத்துக்குமார் தீக்குளிப்பு,மாணவர்கள் போராட்டம்,வழக்கறிஞர்கள் போராட்டம்,பெ.தி.கவினரின் குரல்,ராணுவ வாகனங்கள் மறிப்பு என அத்தனையும் நடந்தது.
இதில் நெடுமாறன்,வை.கோ,திருமா,ராமதாஸ் இணைந்து செயல்பட்டிருந்தால் கூட ஓரளவுக்கு எதிர்ப்பை ஆளும் கட்சிக்கும் முக்கியமாக போராட்டத்தை நமுங்கடிக்க வைத்த கருணாநிதிக்கும் காட்டியிருக்க முடியும்.இவர்கள் பிரிந்து நின்றதன் காரணம் கருணாநிதியும் அதை விட தனித்தனியே ஒவ்வொருவரின் கட்சி அரசியல் சுயநலமும் என்பேன்.இதோ இரண்டு வருட அனுபவங்களுக்குப் பின்பு கூட இவர்களின் அரசியல் சூதாட்ட்ங்களைப் பாருங்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

எனவே இவர்கள் பிரிந்து நிற்பது கருணாநிதியின் ஆட்சிக்கு வலுவும்,ராஜபக்சேவுக்கு குளிர்விட்டுப் போனதற்கும் காரணம்.தமிழ் உணர்வுள்ளவர்கள் மட்டுமே வெளுத்ததெல்லாம் பால் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்.தி.மு.க வின தலைமைக்கு தமது ஆட்சியை தக்க வைப்பதிலும் 2008ம் வாக்கில் நிகழ்ந்த ஸ்பெக்ட்ரம் லஞ்ச ஊழல்களை சமாளிப்பது எப்படியென்ற பிரச்சினைகளில் உழல பிரணாப் முகர்ஜி,மேனன்,நாரயணன்,நம்பியார் போன்றவர்கள் வேறு ஒரு சதுரங்கத்தை விளையாண்டுள்ளார்கள் என்பது இப்போதைய காலகட்டத்தில் நன்கு புரிகிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

இனி வரும் மே 13 தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மட்டுமே தமிழகத்தின் ஈழ நிலைப்பாடு என்னவென்று தீர்மானிக்க இயலும்.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றால் காங்கிரசின் கூட ஆட்சி பங்கீடு என்பதில் அடுத்த 5 வருடம் ஓடி விடும்.அ.தி.மு.க வந்தால் ஜெயலலிதா இன்னும் மதில் மேல் பூனை நிலைதான்.முந்தைய காலத்து அவரின் அறிக்கைகள் ஈழத்துக்கு எதிரானது என்பது நமக்குத் தெரிந்ததே.சென்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திய அரசியல் சட்டத்துக்குட்பட்டு இலங்கை மீது போர் தொடுப்பேன் என்றதும் தேர்தல் தோல்விக்குப் பின் அதுபற்றிய குரல் அமுங்கிப் போனதும் தேர்தல் விளையாட்டு என்பது புரிகிறது.இப்பொழுது கருணாநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஐ.நா மூவர் குழு அறிக்கை பற்றியெல்லாம் ஜெ.அறிக்கை விடுவது கருணாநிதிக்கு செக் வைப்பதற்கே என்பதும் கூட எனது எண்ணம்.இதையெல்லாம் தாண்டி இனி மேலாவது போற இடத்துக்குப் புண்ணியம் சேர்த்துகிட்டுப் போவோம்ன்னு இந்துத்வா நம்பிக்கையில் ஒரு வேளை அவர் நினைக்கிறாரா எனபது அ.தி.மு.க கூட்டணி ஆட்சி அமைப்பதிலும்,காங்கிரசுடன் கூட்டணிக்கு அலைகிறாரா எனபதையும் பொறுத்து இனி தீர்மானிக்க வேண்டிய விசயங்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

இவ்வளவும் சொல்லி விட்டு தமிழகத்தில் மாற்றம் வருவதற்கு தற்போதைய சூழலில் ஒரு வழி இருக்கிறது.அது சீமானின் பின் நிற்கும் இளைஞர் கூட்டம்.சீமானின் அதிக உணர்ச்சி வசப்படும் முகபாவங்கள்,குரல் அவரை இன்னுமொரு வை.கோ வாக மாற்றி விடும் எச்சரிக்கையோடு pulikal.net தளத்தில் அவர் காங்கேயத்தில் பேசியதாக காணப்படும் காணொளியின் குரல் வாகும்,கருத்தையும் அடிப்படையாகக் கொண்டு அவர் தனது அரசியல் களத்தைக் கண்டால் வருங்காலங்களில் இதற்கான தீர்வாக தமிழகத்திலிருந்து சாத்தியங்கள் உண்டு.

இதற்கும் மாற்று முன்பே வைத்த விமர்சனங்களும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்களும் புலம் பெயர்ந்தவர்களின் முன்னெடுப்புக்களும் மட்டுமே.

ராஜ நடராஜன் சொன்னது…

//தமிழ் தமிழ்நாடு தமிழர் ஈழதமிழர் என்ற பொதுகருத்தை உருவாக்க இங்குள்ள அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்பு வேண்டும் //

வெளியே போகும் போது தவறின் பின்னூட்டம் கண்ணில் பட்டது.சீமான் சொல்லும் இன்னொரு கருத்து தமிழனின் அடையாளம் எங்கேயிருந்தாலும் தமிழனே.அதன் காரணம் கொண்டே நாம் தமிழர் அமைப்பும்.லண்டன் தமிழர்,கனடா தமிழர்,அமெரிக்க தமிழர்,சிங்கப்பூர்,மலேசிய தமிழர்,இந்திய தமிழர்,ஈழ தமிழர் என்ற சொற்றாடல்கள் இன்னும் பிரிவினைகளையே உருவாக்கும்.எனவே சீமான் சொல்வது நாம் தமிழர்.

ஒருமுகப் படுத்தும் தலைமையில்லாததும் தற்போதைய தமிழர்களின் நிலைக்கு காரணம்.

Rathi சொன்னது…

தவறு,

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தமிழகம், அதன் அரசியல் தான் ஈழத்தமிழர்கள் விடயத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். ஆனால், அவர்களே அதற்கு தடையும் என்பதையும் மறுக்கமுடியவில்லை

Rathi சொன்னது…

ராஜ நட,

இந்தியா, தமிழகம் பற்றி ஈழத்தமிழர்கள் விடயத்தில் கேள்வி எழும்போதெல்லாம் பொறுமையாகவும், பொறுப்போடும் உங்களைப் போல் யாரும் பதில் சொல்வார்களா தெரியவில்லை.

தமிழகத்தில் ஓர் மக்கள் கிளர்ச்சி என்பது நாங்கள் நினைக்கும் விதமாய் அண்மைக்காலங்களில் ஏற்படாது என்பது தான் எனது புரிதலும்.

இருந்தாலும், ஐ. நாவின் இந்த அறிக்கை விடயத்தில் தமிழகம் தன் நிலையை காத்திரமாக சொல்லியே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். அரசியல் நிலைப்பாடு என்றாலும், கருணாநிதி சொல்லவே வேண்டாம். ஜெயலலிதா மீதும் எனக்கும் நம்பிக்கை இல்லை. அதனை நீங்களே விளக்கியுள்ளீர்கள்.

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் உலகின் எந்த மூலையில் எத்தனை பேர் இருந்தாலும் பத்தோடு பதினொன்றுதான். தமிழகமே என்று நாங்கள் கைகளை நீட்டிய போதெல்லாம் அவை அரசியல் அதிகாரத்தால் முறிக்கப்பட்டனவே!

தமிழகத்தில் ஆறரை கோடி பேர் என்கிற பெரும்பான்மை சீமான் வழியில் அணிதிரண்டால் நல்லது தான். அதுவே எங்களுக்குரிய ஓர் வலுவாக அமையும். சீமான் சொல்வது போல் "நாம் தமிழர்" என்று சொல்வதில் தான் எங்கள் ஒற்றுமையின் பலம் கூடும்.

உலகில் யார் யாரோ நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரிக்க நாங்கள் "தாய்த்தமிழகம்" என்று போற்றுபவர்கள் அதற்குரிய ஓர் அசைவைக் கூட காட்டுவதில்லை. இதில் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் குற்றம் காணவோ, குறை சொல்லவோ முடியாது தான். இருந்தாலும் அந்த மாற்றத்திற்குரிய அடிப்படை தமிழகத்தில் நிகழவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்க கூடாதா!!!

இக்பால் செல்வன் சொன்னது…

@ ஜோதிஜி - என்னப் பாஸ் இப்படி சொல்லிட்டீங்க நானும் சென்னைக் காரன் தானுங்க.... இப்போ ரெண்டு வருஷமா கனடா வாசம் . அது மட்டுமில்லை எனது பெற்றோர் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோர் அதனால இலங்கை பற்றி எனக்கு அதீத ஆர்வம் உண்டு.

இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழகத்தில் யாரு போராடுவாங்க. சரி 80 சதவீதம் மக்களுக்கு இறையாண்மை என்பதே தெரியாது தான். ஆனால் மிச்சம் இருக்கும் 20 சதவீததத்தில் எத்தனைப் பேர் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் போராடுவாங்க. அல்லது இந்திய இறையாண்மை வேண்டாம்னு சொல்லுவாங்க.

அல்லது 80 சதவீத மக்களில் எத்தனைப் பேரு நமது காவல்துறை, இராணுவத்துக்கு எதிராகப் போராடுவாங்க. அல்லது போராட விரும்புவாங்க. யதார்த்த நிலையில் ஈழ மக்களுக்கு ஆதரவாக கட்சி சாராமல் எவனும் போராட மாட்டான்.

கட்சிக் காரங்க போராட்டத்தில் இறங்கினால் தான் உண்டு. !!!

நீங்க சொன்ன மாதிரி சில மக்கள் ஈழத்தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான வேறுபாட்டை தமிழகத்தில் பிரித்தறிய முடியாதவங்க நிறைய இருக்காங்க . நானும் பலரிடம் பேசி புரிய வைக்க முயன்றும் நோ யூஸ் !!!

இக்பால் செல்வன் சொன்னது…

@ ஜோதிஜி - இந்தியா - தமிழகம் - இலங்கை - ஈழத்தமிழகம் இந்த நான்கும் ஒரு சிக்கலான உறவைக் கொண்டுள்ளது. வரலாறு ரீதியாகப் பார்த்தால் ஈழத்தமிழர்கள் ஆயுதம் தூக்குவதற்கு வழி செய்ததே இந்தியாத் தான். அதுவும் இந்தியாவின் சுயநலத்துக்காகத் தான் என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள். இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைக்கவும், இலங்கையின் பாகிஸ்தான் - சீனா ஆதரவைத் தடுக்கவும் இந்தியா ஈழத்தமிழர்களைப் பயன்படுத்தியது.

இரண்டாவது இந்தியா ஈழத்தமிழர்கள் ஆயுதத்தினை கைவிடும் படி கோரிய போதும், ஒன்றினைந்த இலங்கைக்குள் தீர்வை எட்டுவதற்கு தமிழ்ப் புலிகள் விரும்பவில்லை, அத்தோடு நிற்காமல் இலங்கை அரசுடன் இணைந்து இந்திய இராணுவத்தையும், இதர தமிழ்ப் போராளிகளையும் அவர்கள் ஒழித்தார்கள்.

மூன்றாவது இந்தியப் பிரதமரை இந்திய மண்ணில் வைத்து படுகொலை செய்தது.

இப்படியான நிலையில் தமிழ்ப் புலிகள் ஈழத்தமிழர்களினைப் பிரதிநிதித்துவப் படுத்த எடுத்துக் கொண்ட காலக்கட்டத்தில் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக திரும்பி செயல்பட்டார்கள் . அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் நியாயப்படுத்தப்பட்டவைகளாக இருப்பினும். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பதைப் போல இந்திய அரசைப் பகைத்ததன் விளைவே அவர்களின் இறுதி முடிவுக்கு காரணமானது.

அது மட்டுமில்லாமல் தமிழ்ப் புலிகளின் பயங்கரவாத செயல்கள் உலகம் முழுதும் அவர்களுக்கு ஆதரவைப் பெற்றுத் தராமல் செய்தது. இலங்கை இந்த சந்தர்பங்களையும், தமிழ்ப் புலிகளின் அரசியல் தவறுகளையும் நன்கு பயன்படுத்திக் கொண்டது.

இக்பால் செல்வன் சொன்னது…

@ ஜோதிஜி - இன்றைய சூழலில் ஈழத்தமிழர்கள் எதிர்ப்பார்ப்பது ! தமிழ்நாட்டு மக்கள் போராட்டம் ஒன்றினை நடத்தி இந்திய அரசை பயமுறுத்தி ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு பெற்றுத்தர வேண்டும் என்பதே.

ஆனால் அது எந்தளவு சாத்தியம் சொல்லுங்க. ஈழத்தமிழர்கள் எப்போதும் யதார்த்த நிலையினை உணராதவர்கள். முதலில் தமிழ்நாட்டு மக்கள் பெரும் போரட்டம் நடத்த வேண்டும். அது சாத்தியமே இல்லை. தமிழ்நாட்டில் தமது சொந்தப் பிரச்சனைக்களுக்கு நாம் போராடத் துணிவதில்லை.

அது மட்டுமில்லாமல் உலகமே பொருளாதார நிலை நோக்கி நகர்கின்றது. பொருளாதார பிரச்சனைக்களுக்கு மட்டுமே போராட்டங்கள் நடக்கின்றன. தமிழகமும் அதற்கு விதிவிலக்கில்லை. இங்கு ஒவ்வொருவரும் பொருளாதார முன்னேற்றத்துக்காகவே முயல்வார்கள். அதற்கு அப்புறம் தான் நாடு, இனம், மொழி, அக்கம் பக்கம் நாடு எல்லாமே.

ஈழத்தமிழர்கள் விரும்புவது இந்தியா தமிழீழத்துக்கு ஆதரவு தரவேண்டும் குறைந்தது இலங்கைக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதே. விடுதலைப் புலிகளால் தான் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது என்பதை மறக்க இயலாது. அது மட்டுமில்லாமல் இந்தியா இலங்கையை நேரிடையாக பகைத்து கொள்ள வாய்ப்பே இல்லை.

மற்றொன்று ஈழத்தமிழர்கள் இந்தியாவின் துரோகங்களை மறக்க தயாரில்லை என்கின்றார்கள். அதே போல் இந்தியாவும் தமிழ்ப் புலிகளை ஏற்கவே மாட்டார்கள். இந்த பிணக்கால் பலியானது ஈழத்தமிழர்கள் தான்.

இக்பால் செல்வன் சொன்னது…

//புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை வேடிக்கைப் பார்ப்பார்கள். //

@ ஜோதிஜி - புலம் பெயர் தமிழர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லைங்க. புலம் பெயர் தமிழர்களில் நாடு கடந்த தமிழீழ அரசு உட்பட பல அமைப்புகளும் அமெரிக்காவின் பின்புலத்தில் செயல்படுவைப் போன்றே தெரிகின்றது. மற்றொன்று இங்கு புலம் பெயர் தமிழ் பொது மக்களின் செயல்பாடுகள் போதிய அளவு இல்லை. எதோ கொஞ்ச நாள் தெருப் போராட்டம் நடத்தினார்கள். அதில் நானும் தினமும் கலந்துக் கொண்டேன். ஆனால் அதன்பின் அதன் சுவடே இல்லை. கனடா தமிழ் காங்கிரஸ் தொடர்ந்து சில போரட்டங்களுக்கு அழைப்பு விடுத்தும் நூறு பேருக்கு மேலே வரவில்லை. ஒரு வேளை இப்போது இலங்கை அரசுக்கு எதிராக தமிழர்கள் போராட வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் அதன் அறிகுறிகள் ஒன்னியும் காணவில்லை.

சரி தமிழ்நாட்டு தமிழர்களுக்கு நாளை ஒரு பெரும் பிரச்சனை ஏற்படும் போது ஈழத்தமிழர்களோ, அல்லது புலம் பெயர் தமிழர்களோ போராடுவார்கள் என்று தோன்னவில்லை.

இதே நிலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மலையகத் தமிழர்களுக்கு சிங்கள அரசால் ஏற்பட்ட பிரச்சனைகளை எதிர்த்து ஒரே நாட்டில் இருந்தும் ஈழத்தமிழர்கள் போராடவில்லை. காந்தியம் போன்ற சில அமைப்புகள் உதவியதைத் தவிர.

அதே போலத் தான் இன்று ஈழத்தமிழர்கள் செத்து மடியும் போது நம் தமிழகத்திலும் ஒருப் போராட்டமும் வரவில்லை.

it seems there is a big divide among eelam tamils and indian tamils. இன உணர்வு தமிழர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.

இக்பால் செல்வன் சொன்னது…

@ ஜோதிஜி - //பெரும்பாலான முதலாளிகளுக்கு இன மொழி உணர்வை விட பண உணர்வு ரொம்பவே முக்கியம். // சத்தியமான வார்த்தைகள் சகோ. ஊடகங்களும் அதனை வழிநடத்துவோர்களும் biased ஆகத் தான் இருக்கு. சுயநலம் கலந்தவை. அதில் தமிழ்நாட்டு ஊடகங்களும், புலம் பெயர் ஊடகங்க இரண்டுமே ஒன்றுப் போலத் தான் செயல்படுகின்றது.

//ஆமாம்ப்பா என்னவோ சண்டை நடக்குதாம். இப்ப சரியாயிடுச்சாம்// இதுவும் சத்தியமான வார்த்தைகள் தான் சகோ.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு விழிப்புணர்வை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவதற்குப் பதிலாக கலைஞர் போன்றோரின் சுயநல அரசியலும். வைகோ, சீமான் போன்றோரின் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் பணம் பறிக்க நடத்தும் ஏமாற்று அரசியலும் கடுப்பை கிளப்புது.

என்னவோ ஜெயா அம்மா மட்டும் இம்முறை தேர்தல் முடிஞ்சும் ஈழத்தமிழர்கள் ஆதரவாக பேசி இருக்காங்க. ஆனா அதையும் நம்ப மனம் மறுக்குது.

இக்பால் செல்வன் சொன்னது…

@ ரதி - //இந்த தடவை தமிழ்நாட்டு தமிழர்கள் விழித்துக்கொண்டார்கள் // ஆமாம் கொஞ்சம் முன்னேற்றமே அதுவும் போதாதவை தான். but its better than nothing.

//இந்தியா மும்பாய்க்கு ஒரு விதமான இறையாண்மையையும், தமிழக மீனவர்களுக்கு இன்னோர் விதமான இறையாண்மையும் Practice பண்ணுதே! அதை மறக்காதீர்கள்.//

இல்லை ரதி - ஈழத்தமிழர்கள் தமிழகத் தமிழர்களிடம் எதனை செய்ய விரும்புகிறார்கள் என தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மற்றொன்று தமிழகத் தமிழர்களை இந்திய அரசுக்கு எதிராக திருப்பி பயமுறுத்த செய்யனும் என்று ஈழத்தமிழர்கள் விரும்பினால் அது வீணான விடயம்.

இந்திய அரசின் செயல்பாடுகள் very complicated and confusing என்றுக் கூறலாம். மும்பைத் தாக்குதல்களும், மீனவர் பிரச்சனையும் ஒரே அலகில் வைத்துப் பார்க்கக் கூடியவை இல்லை. இந்திய அரசு தமிழகத் தமிழர்களை discriminate செய்வதாக தமிழ் ஆதரவாளர்களும், புலம் பெயர் தமிழர்களும் கூறுகின்றார்கள். ஆனால் 95 சதவீத தமிழகத் தமிழர்கள் அப்படி நினைக்கவில்லை.

மீனவர் பிரச்சனையில் நாம் பெரிதும் அதிர்ப்தியாக உள்ளோம். மத்திய அரசு ஏன் குட்டி இலங்கைக்கு பயப்படுகின்றது என்றும் தோன்ன வைக்கின்றது. இதற்கு முழுக் காரணமும் தமிழக அரசின் அழுத்தங்கள் மத்திய அரசுக்கு போதிய அளவில் இல்லை என்பதே. பார்ப்போம் ஆட்சி மாற்றம் வரும் சூழலில் அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பிருக்கு.

இக்பால் செல்வன் சொன்னது…

@ ரதி - //இந்தியா ஈழத்தமிழர்கள் முதுகில் குத்தியதை எத்தனை தடவைதான் நாங்களும் வரலாற்றில் இருந்து மீட்டுவது. //

இந்தியா ஈழத்தமிழர்கள் முதுகில் குத்தியது உண்மை ஈழத்தமிழர்கள் ரணமாகியது உண்மை. ஆனால் அதற்கு முழுக்காரணமும் இந்தியா மட்டும் தானா. சொல்லுங்கள் ரதி ! இந்தியாவும் ஈழத்தமிழர்களும் ஓரணியில் நின்ற காலமும் உண்டு. இல்லாமல் இல்லை. ஆனால் தமிழ்ப் புலிகளின் இந்திய எதிர்ப்புப் போக்கும், ராஜிவ் காந்தியின் இலங்கை அபிமானப் போக்கும் ஒரு காரணமே.

//முதலில் இந்தியா இந்துமா சமுத்திரத்தில் நீங்கள் சொல்லும் இறையாண்மையை காப்பாற்றிக்கொள்ளட்டும், பார்க்கலாம். //

பார்ப்போமேன் என்ன நடக்கின்றது என ! இந்தியா அந்தளவுக்கு தரம் தாழ்ந்துவிடாது. அல்லது மேற்குலக நாடுகள் சீனாவின் ஆதிக்கம் இந்துமா சமுத்திரத்தில் ஏற்பட்டு விட விரும்பாது, அதற்காகவேனும் இந்தியாவுக்கு அவை துணை நிற்கும். வக்கில்லாத இந்திய அரசை சீனாவுக்கு அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல துணைப் புரிந்ததே மேற்குலக நாடுகள் என்பதையும் நான் மறுக்க மாட்டேன்.

இக்பால் செல்வன் சொன்னது…

தவறு ! சொன்னதை அப்படியே நான் ஏற்கின்றேன். அதான் யதார்த்த நிலையில் இருந்த பார்வை.

@ ராஜ நடராஜன் தமிழ்க் கட்சிகளைப் பற்றி சொன்னதே சரியானது. ஈழத்தமிழர்கள் வைகோவையும் ராமதாசையும் பெரிதாக நம்பி இருந்துள்ளார்கள். அவர்கள் எல்லோரும் வெத்து வேட்டுக்கள் என்பதை இப்போது தான் உணர்ந்துள்ளார்கள். ஆனால் சீமான் என்ற மற்றொரு வெத்து வேட்டை நம்ப ஆரம்பித்துள்ளார்கள். முடியல !!!

தமிழ்நாட்டுக்கு நல்ல இன உணர்வுள்ள தலைமை மத்திய அரசினை அழுத்தம் கொடுக்கக் கூடிய தலைமை வந்தால் அந்த தலைமை ஈழத்தமிழ் ஆதரவுக் கொண்டிருந்தால் - அப்போது ஈழத்தமிழர்களின் எண்ணம் பலிக்கும் பா ! அதுவரை அனைத்தும் பகற்கனவே !

இக்பால் செல்வன் சொன்னது…

எல்லாவற்றுக்கும் மேலாக கடுப்பை கிளப்புவது ராஜபக்ஷேவின் தெனாவெட்டும், அதற்கு ஒத்தூதும் இந்திய காங்கிரஸ் அரசுமே. ஆனால் இம்மி அளவு மாற்றம் தென்படத் தொடங்கி உள்ளது போலத் தெரிகின்றது. அமெரிக்காவுக்கு, போர்குற்ற விசாரணைக்கு எதிராக இந்தியா இலங்கைக்கு ஆதரவாகப் போகும் என தோன்னவில்லை. கமுக்கமாய் இருக்கும் போல தோன்னுகின்றது.

இக்பால் செல்வன் சொன்னது…

@ ரதி //தமிழகத்தில் ஓர் மக்கள் கிளர்ச்சி என்பது நாங்கள் நினைக்கும் விதமாய் அண்மைக்காலங்களில் ஏற்படாது என்பது தான் எனது புரிதலும்//

இதுதானுங்க உண்மை. இந்த யதார்த்தை ஈழத்தமிழர்கள் புரிந்துக் கொண்டு செயல்படுவதால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும்.

//தமிழகத்தில் ஆறரை கோடி பேர் என்கிற பெரும்பான்மை சீமான் வழியில் அணிதிரண்டால் நல்லது தான்//

சீமான் சொல்வதைக் கேட்டால் நல்லாதான் இருக்குங்க. ஆனால் அவர் மீதும் எனக்கும் நம்பிக்கை இல்லை. சும்மா தமிழ் தமிழ்னு பசப்புவதாகவே தோன்னுகின்றது.

//நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரிக்க நாங்கள் "தாய்த்தமிழகம்" என்று போற்றுபவர்கள் அதற்குரிய ஓர் அசைவைக் கூட காட்டுவதில்லை//

இல்லை ரதி இப்போதைய நிலையில் அது சாத்தியமே இல்லை. நாடு கடந்த தமிழீழ அரசு என்றாலும் அது தமிழ்ப் புலிகளின் வாலாகத் தான் இந்திய அரசுப் பார்க்கின்றது. அப்படி இருக்க ஆதயம் இல்லாமல் அதனை ஒரு போதும் இந்திய அரசு அங்கீகரிக்காது, இந்திய அரசை மீறி தமிழ் நாட்டில் ஒன்னியும் வெட்டிக் கிழிக்க மாட்டாங்க... உங்கள் எதிர்ப்பார்ப்பை என்னால் உணர முடியுது. ஆனால் எப்போதுமே எதார்த்த நிலையில் இருந்து யோசிப்பதே நல்லது. பகற்கனவுகள் பலிக்காது - அது ஏமாற்றத்தையே தரும். எனது கருத்துக்கள் வன்மையாக இருந்தால் மன்னிக்க.

ஜோதிஜி சொன்னது…

சோனியா அரசை மீறி தமிழ் நாட்டில் எவரும் வெட்டிக் கிழிக்க மாட்டாங்க... ஈழ மக்கள் எதிர்ப்பார்ப்பை என்னால் உணர முடியுது. ஆனால் எப்போதுமே எதார்த்த நிலையில் இருந்து யோசிப்பதே நல்லது. பகற்கனவுகள் பலிக்காது - சில சமயம் திடீர் திருப்பங்கள் நடந்தேறி விடும். அது வரைக்கும் தற்போதுள்ள அவல வாழ்க்கையை மனதில் கொண்டு நெஞ்சுக்குள் அணையாத தீபத்தை வைத்திருப்பது நலமே.

சம உரிமைகள், சக மனிதராக நடத்தப்படாத வரையிலும் ஈழம் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் எவரோ சிலரால் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தையே அசைத்து பார்க்க முடியும்.

இதுவும் நடைமுறையில் நாம் பார்த்துக் கொண்டிருப்பது தானே செல்வன்.

Rathi சொன்னது…

இக்பால் செல்வன்,

உங்கள் கருத்துகள் வன்மையாக இல்லை. இந்தியாவின் ஈழத்தமிழர்கள், அவர்களின் விடுதலை பற்றிய கருத்துகளை வெளிப்படையாக காட்டி நிற்கிறது.

இரண்டு விடயங்களை தெளிவு படுத்துங்கள். புலத்தில் தமிழன் வீதியில் இறங்கி எதைக்குறித்து போராடவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? எல்லா நேரமும் இப்படியான போராட்டங்கள் தான் செய்யவேண்டுமா? அது மட்டும் தான் போராட்டத்தின் வடிவமா?

ஈழத்தமிழர்கள் தாங்களும் 63 வருடங்களுக்கு மேலாக மனிதர்களாக இலங்கையில் மதிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது எந்தவிதத்திலாவது தவறு என்று நினைக்கிறீர்களா? சரித்திர காலத்துக்கு முன்பு தொடங்கியே தன் சொந்தமண்ணை ஆண்ட ஓர் இனத்தின் சுதந்திரத்துக்காக புலிகள் போராடியது தவறா? அல்லது புலிகள் என்பவர்கள் போராடியதால் தனி ஈழம் என்பது தவறாகிப் போகிறதா?

ஜோதிஜி சொன்னது…

சரித்திர காலத்துக்கு முன்பு தொடங்கியே தன் சொந்தமண்ணை ஆண்ட ஓர் இனத்தின் சுதந்திரத்துக்காக புலிகள் போராடியது தவறா? அல்லது புலிகள் என்பவர்கள் போராடியதால் தனி ஈழம் என்பது தவறாகிப் போகிறதா?

இக்பால் செல்வன் சொன்னது…

@ ரதி - புலம் பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் தற்போது சரியான திசையில் தான் செல்கின்றார்கள். இல்லை என்றால் ஐநா சபையையே உலுக்கி இருக்க முடியுமா? ஆனால் ஐநா சபையின் இந்த விசாரணையால் தமிழீழம் கிடைத்துவிடும் என சாதரண மக்களை நம்ப வைத்து தமிழகத்திலும் புலத்திலும் சிலர் அரசியல் செய்வதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஏமாற்று அரசியல் அனைத்து இடங்களிலும் அனைத்து நாடுகளிலும் இருக்கின்றது என்பதற்கு எதுவும் விதிவிலக்கில்லை.

புலம் பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக இலங்கை அரசுக்கு எதிராக போராட துணிய வேண்டும், ஆனால் தமிழ் புலிகள் மீதான போர் குற்றங்களையும் அவர்கள் ஏற்றுத் தான் ஆக வேண்டும். இப்போதைய நிலையில் தமிழ் புலிகள் குறித்து கவலைப்படாமல் போராடத் துணிய வேண்டும்.

மற்றொன்று - ஐநா சபையின் இந்த விசாரணைக் குழு அறிக்கையால் மேற்கொண்டு என்ன நடக்கும்? இது முதலில் ஐநா சபையின் விசாரணைக் குழுவே இல்லை. பான் கி மூன் அமர்த்திய மூவரின் ஆலோசனை அறிக்கைக் குழு. இந்த அறிக்கையை வைத்துக் கொண்டு இலங்கை அரசை விசாரிக்க முடியாது. அது மட்டுமின்றி சர்வதேச நீதிமன்றத்துக்கு கட்டுப்படும் ரோம் உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடவே இல்லை என்பதால் அங்கும் அவர்களை கொண்டு செல்ல முடியாது. ஐநா சபையின் பாதுகாப்பு சபை நினைத்தால் மட்டுமே இலங்கை மீது விசாரணை நடத்த முடியும். அங்கேயும் ரசியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால் அது நடக்காது போனால் இலங்கை தப்பித்துக் கொள்ளும்.

ஐநாவின் மனித உரிமை சபையில் இப்படியான மேற்குலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் என்னவானது என்பதை நாம் உணரவேண்டும். அதில் இந்தியா இலங்கைக்கு சார்பாக முடிவெடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிங்கள மக்களிடம் இலங்கை அரசு இதனை எதோ பெரிய ஆபத்தாக காட்ட முனைவது போல தமிழர்களிடம் புலம்பெய்ர தமிழ் அரசு இப்படி காட்டுவது ஏமாற்றுவதாக தோன்றுகின்றது.

சின்னதைப் பெரிதாக காட்டி தப்பித்துக் கொள்வது இலங்கையின் தந்திரம். ஆனால் சின்னதையே பெரிதாக காட்டப்பட்டு தமிழர்கள் ஏமாற்றப்படக் கூடாது. தமிழர்கள் செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருக்கு !!!

இக்பால் செல்வன் சொன்னது…

@ ஜோதிஜி - விடுதலைக்காக தமிழரசுக் கட்சியும், பின்னர் தமிழ்ப் புலிகளும் போராடியது தவறே இல்லை. ஆனால் தமிழரசுக் கட்சி பெற்ற நன்மதிப்பை தமிழ்ப் புலிகள் உலக மேடையில் பெறத் தவறி விட்டார்கள். தமிழ்ப் புலிகள் செய்த தவறுகள் அனைத்தையும் கோலாக மாற்றினார்கள் சிங்களவர்கள். தமிழ்ப் புலிகள் செய்த மாபெரும் தவறுகள்

1. சகோதர யுத்தங்கள்
2. படுகொலைகள்
3. முஸ்லிம் விரோதப் போக்கு
4. இந்தியப் பிரதமர் படுகொலை
5. தமிழ் மக்களினை துரோகிகள் என படுகொலை செய்யப்பட்டது

6. குழந்தைப் போராளிகள்
7. இறுதியாக முள்ளிவாய்க்காலில் தமிழர்களையே மனிதக் கேடையமாக்கியது.

இவற்றை எவ்வகையில் நியாயப்படுத்தினாலும் குற்றம் குற்றமே ! அதனால் வெளிநாடுகளில் ஈழப் போராட்டத்தின் நியாயத்தை எடுத்து பேச முடியவில்லை. இங்கு சிடிவியின் நிருபர் ஒருவர் - வெள்ளைக்கார பெண்மணியிடம் பேசியதையும் சேர்த்து ஒரு பதிவாக எழுதுகிறேன் அப்போது உங்களுக்கு விளக்கம் பெறுவீர்கள் என நினைக்கிறேன்.

how we going to present ourself to the world என்பதில் தான் நம் வெற்றியும் தோல்வியும் இருக்கு.

Rathi சொன்னது…

இக்பால் செல்வன்,

Once again, thanks for your concern and suggestions re: Eezham Tamils pursuing our ultimate goal, Eezham. I appreciate it.

Please, read my previous post 'புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் - என் பார்வையில்', and the last post 'நாடுகடந்த தமிழீழ அரசு - யாரின் இறையாண்மைக்கு களங்கம்'.

I believe I have the answers for you there in both posts.

விந்தைமனிதன் சொன்னது…

இன்னுமொருமுறை தமிழகத்தில் பெருமெடுப்பிலான மக்கள் போராட்டம் ஈழத்துக்காக நடைபெறும் வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றன. வழிநடத்தும் நல்ல, வலிமையான தலைமை இங்கு இல்லை.அப்படி ஒரு போராட்டம் இங்கு எழ வேண்டுமானால் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தும் இயக்கங்கள் வலிவு பெற வேண்டியதும், மிகத்தெளிவான செயல்திட்டங்கள் இருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

சீமானது படகில் சிற்சில ஓட்டைகள் தென்படுகின்றன. அவரது கருத்தியல் ஆலோசகர்களைத் தெரிவு செய்வதிலும், கொள்கைத்திட்டங்களை வகுப்பதிலும் தெளிவு வேண்டும். முத்துக்குமார் என்ற தமிழ்த்தேசியவாதி படுகொலை செய்யப்பட்டது சீமானுக்கு மிகப்பெரிய இழப்பு.

வைகோவின் பாதை இனியாவது தனித்தன்மையுடன் இருக்குமா என்று என் போன்றவர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்

Rathi சொன்னது…

விந்தைமனிதன்,

ராசா......! அசத்திட்டீங்க. அந்த முதல் பந்தியில் 'என் மொழி' பேசுகிறீர்கள்!!! நல்லா கவனிங்க, நீங்கள் சொல்லும் தமிழ்த்தேசியத்துக்கும் இந்தியா எப்போதுமே கவலைப்படும் அதன் இறையாண்மைக்கும் நடுவே காங்கிரஸ் என்கிற ஓர் கட்சி உண்டு. தமிழ்த்தேசியத்தின் முதல் கடமை தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற கட்சியை சீமானின் பாஷையில் "வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்பதுதான்".

முத்துக்குமார் என்கிற தமிழ்த்தேசியவாதி....... நிறைய யோசித்தேன். அந்த தமிழ்த்தேசியவாதி ஏந்திய உயிராயுதம் என்றைக்குமே உங்கள் தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவாக இருக்கும், இருக்கவேண்டும்.

வை. கோவை எதிர்பார்க்கிற நீங்கள், ஏன் சீமானை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பது தான் எனக்கு ஆச்சரியம். ஒருவேளை அவர் தமிழ்நாட்டை விடவும் அதிகம் ஈழம் பற்றி பேசுகிறார் என்பதாலா!

உங்கள் வாழ்க்கைச்சூழல் அனுமதித்தால் இப்படி வந்து பேசுங்கள். பலருக்கு அது சென்றடையும்.

இக்பால் செல்வன் சொன்னது…

// வை. கோவை எதிர்பார்க்கிற நீங்கள், ஏன் சீமானை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பது தான் எனக்கு ஆச்சரியம். ஒருவேளை அவர் தமிழ்நாட்டை விடவும் அதிகம் ஈழம் பற்றி பேசுகிறார் என்பதாலா! //

சீமான் அண்ணாவின் பேச்சை பலமுறை நேரில் கேட்டவன் நான். வைகோ வை ஆதரிக்கும் போக்கில் கூட சீமானை ஏற்க மறுப்பதேன் என நீங்கள் வினவியுள்ளீர்கள்.

வைகோ அனுபவம் மிக்க அரசியல் வாதி, தமிழின பாசம் மிக்கவர், தேர்ந்த பேச்சாளர் - ஆனால் வைகோவின் வீராவேசப் பேச்சால் யதார்த்ததில் ஒன்றும் நடக்காது என்பது மக்களுக்கே நன்கு தெரியும். தமிழக மக்கள் அறிவற்றவர்கள், சுயநலவாதிகள், தமிழுணர்வு அற்றவர்கள் என்றக் கோணத்தில் பார்த்தால் அனைத்தும் தவறாகவே தெரியும்.

தமிழக மக்களின் பொதுவான எண்ணம் பொருளாதார முன்னேற்றம் அடைவதும், தமிழின் தனித்தன்மையைத் தக்க வைத்துக் கொள்வதுமே ஆகும், அது மட்டுமில்லாமல் பொறுப்புடன் செயல் படக் கூடிய ஒரு நபரைத் தான் தேடி வருகின்றார்கள். அப்படியான நபராக வைகோ தென்படவில்லை என்பதே உண்மை.

வெறும் உணர்ச்சிப் பேச்சும், வசைமொழியும், வீராவேசமும் தமிழக மக்களுக்கு உதவாது என்பதை மக்கள் அறிவார்கள் - அதனால் தான் சீமானை ஒரு தலைவராக ஏற்க மறுத்துவிட்டார்கள். அது தான் உண்மையும் கூட.

தமிழகத்தின் அடுத்த தலைமை நேர்மையானதாகவும், பொறுப்புடனும், பொறுமையுடனும். தமிழக - தமிழ் நலன்களை கட்டிக் காக்கும் நபர் ஒருவரே தேவைப் படுகின்றார். இருப்பவர்களுக்கு அனுபவம் இருக்கு, நேர்மையும். தமிழக நலன் காக்கும் திறனும் இல்லை. புதிதாக முளைக்கும் தலைவர்களுக்கு தமிழக நலன் மேல் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்கின்றார்கள், ஆனால் பொறுமையும், பொறுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதனால் தெரியாத தேவதையை விடவும் , தெரிந்த பேயே மேல் என மக்கள் இருப்பவருக்கு வாய்ப்புத் தருகின்றார்கள்.

இது தான் யதார்த்தம் -

சீமானின் அதிகப் பட்ச உண்ரச்சியும், பதற்றமும் நீண்டகாலத் தலைமை பண்பாகத் தெரியவில்லை. .. .. இது தான் பிரச்சனையே...