ஏப்ரல் 20, 2011

புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் - என் பார்வையில்

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க எடுக்கப்பட்ட இலங்கை அரசின் மிகப் பாரிய ராணுவ நடவடிக்கையில் இருசாராருமே சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியதாகவும், மனிதத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகவும் ஐ. நாவின் அறிக்கை சொல்கிறது என்பது தான் கடந்த ஒரு வார காலமாக என் போன்றவர்களின் கவனத்தை, கருத்தை ஈர்த்து வைத்திருக்கிறது. ஒரு விதத்தில் சர்வதேச ஊடகங்கள் கூட இது பற்றி பேசுவது அந்த அறிக்கையை முழுமையாக 196 பக்கங்களையும் வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஐ. நாவின் செயலர் பாங்கி மூனுக்கு உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் பிரித்தானியாவின் Channel 4 இன் ஈழம் குறித்த செய்திகள் பாராட்டப்பட வேண்டியவையே. 

எப்போதுமே மாற்றுக்கருத்தை தேடிப்படிப்பதில் ஓர் ஆர்வமும், சுவாரசியமும் இருப்பவர்களுக்கு இலங்கை பற்றி Brian Seniwerane, இந்தியா பற்றி அருந்ததி ராய், அமெரிக்க பற்றி Noam Chomsky போன்றோரது, பெரும்பாலும் கார்பரேட் ஊடகங்களால் வெளியே கொண்டுவரப்படாத அவர்களது காலத்தின் தேவையானதும், காலத்தால் அழியாததுமான எழுத்துகள் இந்த உலகம் பற்றிய அதன் எழுதப்படாத இயங்குவிதிகள் பற்றிய புதியதோர் பார்வையை, புரிதலை கொடுக்கும். கார்பரேட் நலன்களுக்காக பறிக்கப்படும் மனித உரிமைகள், மனித உயிர்கள் என்பவற்றுக்காய் குரல் கொடுப்பவர்கள். எந்தவொரு தத்துவத்தையோ, விதியையோ பின்பற்றாமல் அனுபவ அடிப்படையில் வாதப்பிரதிவாதமாக எழுதப்படும்  அவர்களின் எழுத்துகளிலேயே நானும் உலகத்தை படிக்க ஏதோவொரு கத்துக்குட்டித்தனமான முயற்சியில் எப்போதும் இருக்கிறேன். 

அப்படியானால், புலிகள் பற்றிய சில ஈழத்து சிட்டிசன்களின் மாற்றுக்கருத்தை ஏன் நான் ஏற்றுக்கொள்வதில்லை என்கிற கேள்வி எழலாம். தனிப்பட்ட காரணங்களுக்காக புலிகள் மீது சேறு அடிப்பவர்கள் ஐ. நா. சொன்னதைத்தானே நானும் சொன்னேன், சொல்லுவேன் என்கிற வெற்றுவீரத்தை, மேதாவித்தனத்தை நான் புறக்கணிக்கவே விரும்புகிறேன். நிச்சயமாய் சர்வதேசத்தின் புலிகள் குறித்த பார்வையே இதுபோன்ற சில மாற்றுக்கருத்து - மாற்றுத் திறனாளிகளிடமிருந்தான் உருவப்பட்டது என்பது இங்கே பலருக்கு தெரியும். 

அதனால் தான் நான் ஈழத்தில் பிறந்து இனப்பாகுபாட்டு கொள்கைகளால் பாதிக்கப்படிருக்கிறேன் என்பதை தவிர; ஈழம், புலிகள் பற்றிய என் பார்வை, கருத்து என்பது நான் மேற் குறிப்பிட்டவர்களின் எழுத்துகளை படித்து நான் என்வரையில் புரிந்துகொண்டதன் அடிப்படையிலும் எனக்குள் உருவாகிறது. மேற்சொன்ன மூவருமே புலிகள்  பற்றி அதிகம் பேசுபவர்களே கிடையாது. ஆனாலும், அவர்களின் எழுத்தில் பிறந்த தெளிவில் தான் புலிகள் பக்கமுள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. Brian Senewiratne, Noam Chomsky, அருந்ததி ராய் மூன்றுபேருமே தங்கள் நாட்டு ராணுவம் செய்த, இன்னும் செய்துகொண்டிருக்கும்  அட்டூழியங்களை விமர்சிப்பவர்கள். ஈழத்தமிழர்களின் புலிகள் பற்றிய கருத்து என்பது புலிகள் பக்கமுள்ள போராட்ட நியாயங்கள் குறித்து மட்டுமே உருவானது. இலங்கை ராணுவத்தின் கொடுமையை அனுபவித்தவர்களுக்குத் தான் புலிகள் அருமை தெரியும். தவிர, புலிகள் என்பவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்லவே. இனவாதத்தை எதிர்த்து உருவான போராட்டம் இன்று யார், யாரோ நலன்களுக்காக தாரைவார்க்கப்பட்டுவிட்டது. இன்று புலிகள், தமிழீழம் என்று பேசுவதால் அதிகம் விமர்சிக்கப்படுபவர்களாக புலம் புலம்பெயர் தமிழர்களே இருக்கிறார்கள்.

சில ஆங்கில ஊடங்கங்கள் ஐ. நா. அறிக்கையில் மேற்கோள் காட்டி புலம் பெயர் தமிழர்கள் ஐ. நாவின் அறிக்கையில் புலிகள் செய்ததாக சொல்லப்படும் போர்க்குற்றங்களை உள்வாங்கவோ ஏற்றுக்கொள்ளவோ மறுக்கிறார்கள் என்றும் தங்கள் பங்கிற்கு குறைப்பட்டுக்கொள்கிறார்கள். அது சமாதான முயற்சிகளுக்கு தடையாய், தடங்கலாய் அமையுமாம்!! வாணி ஞானகுமார் என்கிற ஈழப்பெண் ஈழத்திலிருந்து இறுதிக்கட்டப் போரின் பின் திரும்பியபின் சர்வதேச ஊடகங்களும் ஏறக்குறைய இதே கேள்வியத் தான் கேட்டு அவரை துளைத்தெடுத்தார்கள். புலிகளின் குற்றங்களை நீ பார்த்தாயா, பார்த்தாயா என்று. அதற்கு அவர் சொன்ன பதில் தனக்கு அப்படி ஏதும் அனுபவம் ஏறபடவில்லை என்பது தான். 

2009 May மாதத்திற்குப் பிறகு இலங்கையின் பாதுகாப்பு செயலர் சொன்னது, புலிகளை "வேரோடு" அழித்துவிட்டோம் என்பது தான். ஆனால் அவர்களே இன்றும் கொஞ்சம் கூட சளைக்காமல் அதற்கு மாறாகவும் சொல்லுகிறார்கள். புலிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பதெல்லாம் இப்போ இரண்டாம் பட்சம் தான். அந்த இழப்பையும் தாங்கி சுதாகரித்து ஈழத்தமிழர்கள் விடுதலையை நோக்கி எதையெதையோ முயற்சிக்கிறார்கள். கருத்துக்களால் சேர்ந்தும், பிரிந்தும், சிதறியும் கிடக்கிறார்கள்.

புலிகள் என்பவர்கள் ஈழவிடுதலை நோக்கிய ஓர் பயணத்தில் நீண்டதோர் சகாப்தம். முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்ட அந்த சகாப்தத்தோடு ஈழம் என்கிற எங்கள் அரசியல் அபிலாசையும் தீய்ந்து, தேய்ந்து போகவேண்டும் என்றால் எப்படி! புலிகளை போர்க்குற்றவாளிகள் ஆக்கினால் எங்கள் உரிமைகள் சர்வதேசத்தால் மறுக்கப்படுமா! புலிகள் குற்றம் இழைத்தவர்கள் என்று நம்பினால் தாராளமாய் விசாரித்துக்கொள்ளுங்கள் என்று தான் நான் நினைப்பதுண்டு. யாருடைய புதிய கண்டுபிடிப்பும் ஈழத்தமிழர்களுக்கு புலிகள் மேலுள்ள மதிப்பையோ இல்லையென்றால் வெறுப்பையோ கூட்டமுடியாது. வெறுப்பவர்கள் எப்போதுமே வெறுத்துக்கொண்டே தான் இருக்கப்போகிறார்கள். 

அரசியல் யாப்பு, சர்வதேச சட்டதிட்டங்கள், தார்மீக விழுமியங்கள், கூடவே எப்போதுமே கவர்ச்சியான இறையாண்மை என்கிற கருத்தியல் இதெல்லாம் பார்த்துப் பார்த்து செதுக்கித்தானே ஓர் நாடு அல்லது தேசம் என்கிற வரையறை வகுக்கப்படுகிறது. ஒரு தேசமே ஒட்டுமொத்த சிறுபான்மை தேசிய இனத்தை தொடர்ச்சியாக பழிவாங்கி, கொன்று குவிக்கிறது என்று உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிந்த பின்னும், அதை தண்டிக்கவோ, கண்டிக்கவோகூட ஐ. நா. என்கிற ஓர் வலுவான அமைப்பு திண்டாடுகிறது. 'வீட்டோ அதிகாரம்' என்கிற குரங்கின் கை பூமாலையாய் ஓர் ஆயுததத்தை வைத்து மிரட்டுபவர்களின் பின்னாலேயே ஐ. நா. செயலர் ஓடுகிறார். 

இயற்கை அழிவை உலங்கு வானூர்தியிலிருந்து அரசியல்வாதி பார்ப்பதுபோல், இலங்கை ராணுவத்தால் தமிழனுக்கு உருவாக்கப்பட்ட அழிவுகளை ஐ. நாவின் செயலரும் உலங்குவானூர்தியில் போய் பார்வையிட்டார். இழப்பு அதிகம் இல்லை என்று தனக்கு கீழே பணிபுரியும் விஜய் நம்பியாரை கொண்டே சொல்லவைத்தார். ஆனால், அது மட்டுமே  ஐ. நா. செயலர் பதவியை இன்னோர் முறை அலங்கரிக்க முடியும் என்கிற கணக்கில் இப்போ ஈழப்பிரச்சனை, அறிக்கை என்பன குறுக்கே வருகின்றன. போர்க்குற்றங்களில் விசாரிக்கப்பட வேண்டியவர் என்கிற தற்போதைய இலங்கைக்கான ஐ. நாவின் நிரந்தர பிரதி வதிவிடப் பிரதிநிதியும் முன்னாள் இலங்கை ராணுவத்தின் ஓர் கட்டளைத்தளபதியிடம் (சவேன்திரா செல்வா) அறிக்கையை கையளிக்கிறார்கள். வெள்ளைக்கொடி கொலைகள் புகழ் விஜய் நம்பியார் இன்னமும் அதே பதவியில் நிலைத்திருக்கிறார். இவர்களை யார் விசாரிப்பார்கள்?? இலங்கை அரசு சொல்லும் "Fundamentally Flawed" இவர்களுக்கு பொருந்தாதா! உங்கள் நடுநிலைமை இங்கே பல்லிளிக்கவே    இல்லையா!! 

புலிகள் அமைப்பு சர்வதேச சூழ்ச்சியால் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தப்பட்ட ஓர் விடுதலை அமைப்பு. அவர்களால் அமைக்கப்பட்ட ஓர் De Facto State, இங்கே எத்தனையோ நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை விடவும் சிறப்பாய் கட்டியமைக்கப்ட்ட ஒன்று.  அமெரிக்காவுக்குப் பிடித்துப்போனதால் தென் சூடான் விடுதலை அமைப்பு சுதந்திர தேசத்தை உருவாக்கலாம். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பிடிக்காமல் போனதால் புலிகள் மட்டுமல்ல தமிழர்கள், தமிழர்களின் தேசியம், அதற்கு கொடுக்கப்பட்ட வடிவம் கூட அழிக்கப்படலாம், சிதைக்கப்படலாம். 

புலிகள் போர்க்குற்றம் இழைத்திருந்தால் தாராளமாய் விசாரியுங்கள் என்பது தான் எனது நிலைப்பாடு. புலிகள் தான் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை சரியாய் புரிந்துகொண்டவர்கள் என புலம் பெயர் தமிழர்கள் சர்வதேசத்திடம் புலிகளை தடைசெய்யாதே என்றபோதே கேட்காதவர்கள், இப்போ மட்டும் நாங்கள் சொல்வதை கேட்கவா போகிறார்கள். நாங்கள் என்ன இலங்கை அரசு போல ஐ. நாவிடம் முழு அறிக்கையை வெளியிடாதே, எங்கள் தலையை மண்ணுக்குள் புதைக்க எங்களுக்கு கால அவகாசம் கொடு, ஐ. நாவுக்கு எதிராக மே மாதம் ஓராம் திகதியில் போராடுவோம் என்றா சொல்கிறோம். ஐ. நா. அறிக்கையை முழுதாய் வெளியிடு. போர்க்குற்றம் விசாரிக்கப்பட ஓர் சர்வதேச சுயாதீன குழுவை உருவாக்கு என்று தானே சொல்கிறோம். பிறகேன் எங்கள் மீது இன்னும் பகை. 

ஆனாலும், புலிகளை அழித்து தமிழர்களாகிய எங்களுக்கு தீர்வு சொல்லும் சர்வதேச அரசியல் சாணக்கியம் தான் விந்தையாயிருக்கிறது. இதில் International Crisis Group இன் புலம்பெயர் தமிழர்களுக்கான புலிகளின் கனவை மறவுங்கள்; ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை தேடுங்கள் என்கிற சர்வதேச அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் அறிவுரைகள். ஐ. நாவின் தீர்வுக்கான பரிந்துரைகளை கூட நடைமுறைப்படுத்துங்கள் என்று இலங்கை அரசுக்கு இவர்களால் சொல்லமுடியுமோ தெரியாது. உடனேயே இலங்கையின் இறையாண்மையில் தலையிடுகிறார்கள், அவமதிக்கிறார்கள் என்கிற வெற்றுக்கூச்சலுக்கே அமைதியாகிவிடுவார்கள். எப்படியோ, சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு உருவாக்கப்பட்டால் நன்றாக விசாரித்து, இல்லாத கற்பனைப் புலியை தூக்கில் போடுவார்களோ? புலிகள் இழைத்ததாக சொல்லப்படும் போர்க்குற்றங்களை  ஏன் புலத்தில் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதற்கு ஓர் தமிழ்நாட்டு தமிழர் சொன்ன விளக்கம் தமிழ் நெட்டில். 

"......Diaspora's refusal to accept the crimes of the LTTE is another point cited in the panel report as hindrance to peace. When was the diaspora provided with an opportunity to assess the politics of its nation in an environment free from unjustifiable support to state terrorism?.." 


19 கருத்துகள்:

தவறு சொன்னது…

ரதி நீங்கள் சொல்வது போல் அவர் அவர்களுக்கென்று சுயசிந்தனையை ஓடச் செய்தாலே யார் கருத்தையும் ஓப்பு கொள்ளாது புலிகள் பற்றிய விசயத்தில் ஓர் தெளிவை எட்டலாம்.

புலிகளின் ஆளுகையின் போது சிலசங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இலங்கையின் இனவாதத்திற்கே முன்னே அவைகள் எம்மாத்திரம்.

நியாயங்கள் தேடுகையில் அவசரம் கருதி எட்டிபோய் செய்த சின்னசெயல்கள்கூட விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும்.(இயற்கை உபதை கூட உள்ளடங்கும்).

Rathi சொன்னது…

தவறு, உங்களைப் போலவே பலரும் புரிதலோடு இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

Thekkikattan|தெகா சொன்னது…

ஐ. நா அறிக்கையில் புலிகளின் மீதான விமர்சனம் ரொம்ப அழுத்தமாக இருப்பதாக என்னால் பார்க்க முடியவில்லை. அது தராசுத் தட்டில் ஒரு counter balanceக்காக வைக்கப்பட்டதைப் போன்றே ஒரு தோற்றத்தை தருகிறது.

இருப்பினும் அது முதல் முறையாக ஐ. நா_வின் அறிக்கையின் மூலமாக ஈழப் பிரச்சினையை அறிந்து கொள்பவர்களிடத்தில் ஒரு தவறான அபிப்பிராயத்தை உருவாக்கும் என்பதில் மாற்று கிடையாது.

இருந்தாலும் இந்த அறிக்கையை பொது மக்கள் பார்வைக்கும் கொண்டு வந்தாலே இது சரியான திசையில் பயணிக்கிறது என்றே பொருள் கொள்ள முடியும்.

மேலும் பூகோள அரசியல் அமைவில் கண்டிப்பாக இது பெரிய பிரச்சினையாக அமைய வாய்ப்புண்டு... சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தீவின் அருகே நெருக்காமவதனைத் தொடர்ந்து. ஏதோ ஒரு வழியில் விடியல் அமைந்தால் சரித்தானே!

நல்ல தீர்க்கமான பதிவு, ரதி! என்னுடைய தளத்தில் the third world traveler என்ற தளத்திற்கு இணைப்பு கொடுத்திருப்பேன். அங்கே இதே போன்று ஒத்த சிந்தனைகளைக் கொண்ட மக்கள் எழுதிய வாசிப்பு நிறைய கிடைக்கும்... அருந்ததி ராய் உள்பட :)

ஜோதிஜி சொன்னது…

பெரிதா எழுதி அத்தனையும்புடுங்கி போய்விட்டது. அட போங்கப்பா?

ராஜ நடராஜன் சொன்னது…

அருந்ததி ராயும்,நோம் சாம்ஸ்கியும் அறிமுகமான பெயர்களே!புதிய பெயரான Brian Seniwerane அறிமுகத்திற்கு நன்றி.

ராஜ நடராஜன் சொன்னது…

//புலிகள் என்பவர்கள் ஈழவிடுதலை நோக்கிய ஓர் பயணத்தில் நீண்டதோர் சகாப்தம். //

அழகாய் சொன்னீர்கள்.மேலும் வெறுப்பவர்கள் வெறுத்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்பதும்.புலிகள் தாண்டி சிந்திக்கவும்,ஒரு இனத்தின் உரிமைப் பிரச்சினையையும்,மனித உரிமைகளையுமாவது சிந்திக்க கற்றுக்கொள்வது மட்டுமே பெரும் இழப்புக்களை சந்தித்த இரு இனத்து மக்களுக்கும் விடிவாக அமையும்.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!முன்பே சொன்னதாக நினைவு.இண்ட்லியிலும் பதிவை இணையுங்கள்.

Rathi சொன்னது…

//அது தராசுத் தட்டில் ஒரு counter balanceக்காக வைக்கப்பட்டதைப் போன்றே ஒரு தோற்றத்தை தருகிறது.//

தெகா, ஐ. நா. மூவர் குழு அறிக்கை ஓரளவுக்கு இப்படித்தான் இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். குறிப்பாக 'நடுநிலைமை' என்கிற வட்டத்திற்குள் நின்றுகொண்டே இவர்கள் அறிக்கை செய்வார்கள் என்பதும் தெரிந்தது தான். எங்களுக்கு மேற்குலக ஊடகங்களுடன் போராடிப் போராடி அது பழகிப்போய்விட்டது.

நேற்று இங்கு தமிழ் ஊடகத்தில் ஓர் அரசியல் செயற்பாட்டாளர் இந்த பகுதி அறிக்கை பற்றிய விவாதத்தில் குறிப்பிட்டார், புலிகள் இறுதியாக கொழும்பில் விமானம் மூலம் போட்ட குண்டுகளை ஓர் சிங்கள கிராமத்தில் போட்டிருந்தால் (போட முடியாது என்பதல்ல) இன்று எல்லாமே தலைகீழாய் போயிருக்கும். தமிழர்கள் தலை நிமிர்ந்திருக்க முடியாது என்று.

அது ஏதோவொரு விதத்தில் என்னையும் யோசிக்க வைத்தது. இவ்வளவு அழிவு தமிழர்களுக்கு வந்தும் கடைசி வரை புலிகள் எந்தவொரு சிங்கள குடிமகனையும் தாக்கவோ, அழிக்கவோ இல்லை.

எங்கள் பக்கம் நியாம் நிறையவே இருக்கிறது. நிச்சயம் வெல்வோம். என்றாவது ஒரு நாள் எங்களுக்காய் போராடியவர்களை எங்கள் மண்ணிலேயே சுதந்திரமாய் நினைவு கூர்வோம்.

ராஜ நடராஜன் சொன்னது…

பதிவை உங்கள் சார்பாக இண்ட்லியில் இணைத்துள்ளேன்.

Thekkikattan|தெகா சொன்னது…

புலிகள் இறுதியாக கொழும்பில் விமானம் மூலம் போட்ட குண்டுகளை ஓர் சிங்கள கிராமத்தில் போட்டிருந்தால் (போட முடியாது என்பதல்ல) இன்று எல்லாமே தலைகீழாய் போயிருக்கும். தமிழர்கள் தலை நிமிர்ந்திருக்க முடியாது என்று. //

ஆமாம்தானே! இது போன்ற critical, bilateral thinking அடிப்படையில் பல திசைகளிலிருந்தும் நியாயமான கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அது வாதம் பிரதி வாதங்களாக நேர்மறையான நோக்குடன் நடத்தப்படும் பொழுது வெளியே வரக்காணலாம்.

//எங்கள் பக்கம் நியாம் நிறையவே இருக்கிறது. நிச்சயம் வெல்வோம். என்றாவது ஒரு நாள் எங்களுக்காய் போராடியவர்களை எங்கள் மண்ணிலேயே சுதந்திரமாய் நினைவு கூர்வோம்.//

அந்த மண்ணில் நானும் ஒரு நாள் backpack செய்வேன்...

ஜோதிஜி சொன்னது…

என்னாச்சு என்னோட விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அடம் பிடிக்கிறதே?

ஜோதிஜி சொன்னது…

உருப்படியா எழுதினா துப்புது? ரெண்டு வரி எழுதினா சிரிச்சு வாங்குது? கொடும ரதி?

ஜோதிஜி சொன்னது…

புலிகள் இறுதியாக கொழும்பில் விமானம் மூலம் போட்ட குண்டுகளை ஓர் சிங்கள கிராமத்தில் போட்டிருந்தால் (போட முடியாது என்பதல்ல) இன்று எல்லாமே தலைகீழாய் போயிருக்கும்

இல்லை தெகா, அப்பவே பாதிக்கு மேல போட்டு இருந்தா கணக்கு நேர் செய்யப்பட்டு இருக்கும். பயங்கரவாதி பயங்கரவாதின்னு சொல்றீங்க? இது தான் உண்மையான பயங்கரவாதம் என்று சொல்லிக் கொள்ள வசதியாய் இருந்து இருக்கும்.
சுயவாழ்க்கையில் கள வாழ்க்கையில் கொண்ட நல்ல எண்ணங்கள் பிரபாகரனுக்கு இறுதி வரைக்கும் பல பிரச்சனைகளை உருவாக்கியது.

விந்தைமனிதன் சொன்னது…

புலிப்பூச்சாண்டி காட்டியவர்கள் இன்று ராஜபக்க்ஷே வீட்டுத் தாழ்வாரத்தில்தானே மண்டியிட்டிருக்கிறார்கள்! புலிகளுக்குப் பிறகு, புலிகளைக் குறை சொல்லிப்பேசியவர்கள் போராட வேண்டியதுதானே? துப்புகெட்ட ஜென்மங்கள்

Rathi சொன்னது…

ஜோதிஜி,

நிறையவே பதட்டத்துடன் எழுதுகிறீர்கள் போல. நிறைய எழுதினாலும் இரண்டு, மூன்றாய் பிரித்து போடுங்களேன். ஈழம், புலிகள் விடயத்தில் உங்கள் கருத்தை மிக முக்கியமாக கருதுகிறேன். அதனால், எப்படியாவது யோசித்து மீண்டும் உங்கள் கருத்தை எழுழுதுங்கள். காத்திருக்கிறேன்.

Rathi சொன்னது…

ராஜ நடராஜன்,

முதலில் Brian Senewiratne பற்றி தமிழர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். சர்வதேச ஊடகங்களில் இலங்கை ஆட்சியாளர்களின் முகமூடியை கிழிப்பவர்.

ஈழத்தின் அடிப்படை பிரச்சனை புலிகள் அல்ல. முடிவும் அவர்களல்ல. ஆனாலும், சர்வதேசம் இலங்கைக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கில் அதில் அதை புலிகள் கண்ணோட்டத்திலியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஈழப்பிரச்சனை புலத்து தமிழர்கள் கையில். இதை நாங்கள் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள கவனத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என்பதை தமிழர்கள் உணரவேண்டும் என்பதே என் அவா. சர்வதேசத்திடம் சரியான முறையில் அதை எடுத்துச் செல்லவேண்டும்.

இன்ட்லியில் என் பதிவை இணைத்ததற்கு நன்றிகள். நான் ஒரு computer illiterate. எனக்கு தமிழ்மணம் பட்டையை இணைத்துக்கொடுத்ததும் விந்தைமனிதன் என்கிற ராஜாராமன் தான். முடிந்தவரை இன்ட்லியை இணைக்க முயல்கிறேன் :)

Rathi சொன்னது…

தெகா,

//அந்த மண்ணில் நானும் ஒரு நாள் backpack செய்வேன்..//

நாம எல்லோரும் ஒன்றாகவே போகலாம். என்ன அப்போ Senior Citizens ஆகியிருப்போம். ஜோதிஜியை பலபேராய்ப் போனால் தான் சமாளிக்கலாம். பாத்தீங்களா ஒரு விமர்சனம் எழுத முடியாததுக்கு எவ்வளவு பதட்டம் என்று.

Rathi சொன்னது…

ஜோதிஜி,

//சுயவாழ்க்கையில் கள வாழ்க்கையில் கொண்ட நல்ல எண்ணங்கள் பிரபாகரனுக்கு இறுதி வரைக்கும் பல பிரச்சனைகளை உருவாக்கியது.//

அந்த நல்ல எண்ணங்கள் தான் இன்றுவரை ஓர் நல்ல தலைவராய் உலகமே (வெளிப்படையாக அல்ல) வியக்கிறது.

நல்லா யோசிங்க. ஒரு களத்தில் இறுதி நாட்களில், இறுதி நிமிடங்களில் அவர் எதையெல்லாம் நினைத்திருக்கலாம். நீங்கள் சொன்ன மாதிரி கூட செய்திருக்கலாம். அது உணர்வுபூர்வமாக சரியானது தான். அனாலும், நாங்கள் இழந்ததுக்கு நிச்சயமாய் அது ஈடாகாது. அது மட்டுமல்ல எங்கள் நியாயம் சர்வதேசத்தில் அடிபட்டுப் போயிருக்கும். இன்று இலங்கை அரச பயங்கரவாதம் நியாயப்படுத்தப்பட்டிருக்கும்.

நாங்களும் சர்வதேசத்தில் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்திருக்க வேண்டியது தான்.

Rathi சொன்னது…

ராஜாராமன்,

சுருக்கமாகச் சொன்னாலும் உறைக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.