ஏப்ரல் 11, 2011

'பயணம்' - ஒரு விமர்சனப்பார்வை

அருந்தி ராய், தீபா மேத்தா, அபர்ணா சென் இவர்கள் போன்ற இந்தியப் பெண்களைப் பற்றி, அவர்களின் இந்திய அரசியல், பொருளாதார, சமூக, களங்கள் குறித்த எழுத்தும் விமர்சனப்பார்வையும் என்னை நிறையவே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. கூடவே, இந்திய ஆண்களைவிட இந்தப் பெண்களுக்கு துணிச்சல் அதிகம் என்றும் நினைக்கவைத்தவர்கள். அருந்ததி ராயை அறியாத இந்தியர்கள் இருந்தால் ஆச்சர்யப்படுவேன். தீபா மேத்தா இந்திய சமூக கட்டமைப்பு அதுசார்ந்த தனிமனித பாதிப்புகள் குறித்த அதிரடியான படைப்புகளால் (Fire, Water, Earth etc.) உலக சினிமாவில் அறியப்பட்டவர். அபர்ணா சென், இவர் குஜராத் படுகொலைகள் குறித்து உருவாக்கிய Mr. & Mrs. Iyer திரைப்படம் கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்று. ஆனாலும், இந்து பத்திரிக்கை விமர்சனப்படி இந்தக்கதை அபர்ணா சென் குஜராத் படுகொலைகளுக்கு முன்னமே எழுதியது!!! அண்மையில் நான் 'பயணம்' திரைப்படம் பார்த்தபோது இந்த மூன்று இந்தியப் பெண்களும் என் நினைவில் வந்து போனார்கள். 

பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றாலே பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் என்கிற அளவுக்கு எங்களை நினைக்கவைத்த பெருமை அவர்களையே சாரும். அந்த வகையில் இந்த திரைப்படத்திலும் அந்த வரையறைகளை தாண்டி சிந்திக்காத வகையில் மசாலா நிறைந்ததாக எனக்கு தெரிகிறது. இருந்தாலும், அதையும் தாண்டி என்னை நிறையவே சிந்திக்கவும் வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஒரு விமானத்தினுள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட நூற்றிச் சொச்சப்பேரின் உயிர் பற்றிய கதை அல்ல, அவர்களை காப்பற்ற உருவாக்கப்பட்ட அந்த mission ஐ வெற்றிகரமாக நிகழ்த்திய ஒருசில கதாபாத்திரங்களின் சாகச கதை. சும்மா, ஒரு சுவாரஸ்யத்திற்கு கொஞ்சம் சமூகம், அரசியலை தூவியிருக்கிறார்கள். 

விமானப் பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருப்பவர்களின் கோரிக்கை இந்திய அரசால் தீவிரவாதியாக கருதப்பட்டு, அடைத்துவைக்கப்படவரின் விடுதலை. கதையின் பிரகாரம் அவர் காஸ்மீர் தீவிரவாதி என்பது என் புரிதல். விமானத்தை கடத்தியவர்களும் காஸ்மீர் தீவிரவாதிகளாம்! என் புரிதல் தவறென்றால் யாராவது விளக்குங்கள். 

முதலில் என்னை குழப்பிய விடயம், ஒரு மத்திய அமைச்சர், பிரபல சினிமா நடிகர் போன்ற வசதியானவர்கள் கூட சாதாரண பொதுசனங்கள் பயணிக்கும் வகுப்பில் விமானத்தில் பயணிப்பது தான். அதிலும் யாருக்குப் பக்கத்தில் யாரை உட்கார வைப்பது என்பதில் இயக்குனர் மிகவும் கவனமாய் இருந்திருக்கிறார். இளம் பெண்ணுக்குப் பக்கத்தில் ஓர் இளம் மருத்துவர். இவர்களுக்கு பக்கத்தில் ஓர் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி. பிரபல நடிகர் பக்கம் ஓர் தீவிர விசிறி. இதிலெல்லாம் கவனம் செலுத்தியவர் அவரின் புத்திசாலித்தனத்தை நிரூபிப்பது, காந்தியையும் கார்ல் மார்க்சையும் படித்தவரை மத்திய மந்திரிக்கு பக்கம் அமர்த்தாமல் வாஸு சாஸ்திரம் பார்ப்பவரின் பக்கம் உட்கார வைத்தது தான். ஒருவேளை மத்திய மந்திரிக்குப் பக்கம் காந்தியையும் கார்ல்மார்க்சையும்  படித்தவரை அமர்த்தி இவர்களின் ஆட்சி அமைப்பு, அதிகாரம் பற்றி மார்க்கசியப் பார்வையில் விவாதித்தால் பொதுசனம் திரைப்படம் பார்க்காது என்று நினைத்திருப்பார்களோ! அதானே, பிறகு பொதுசனத்துக்கு அறிவு கூர்மையாகிவிட்டால் அரசியலும், சினிமாவும் எப்படி கடை விரிப்பது. 

போதைக்கு அடிமையானவரையும் காந்தியம், மார்க்சியம் படித்தவரையும் விமானத்தை கடத்தியவர்கள் சுட்ட போது ஒரு விடயம் தெளிவாகிறது. இந்த இரண்டு சாராருக்கும் இடையே வாழ்பவர்கள் தான் இந்த சமூகத்தில் அதிகம் வாழ்கிறோம். அதிக போதையும் கூடாது, மார்க்சியமும் கூடாது. தேசத்துக்காகவும் தேசியத்திற்காகவும் உழை, செத்துபோ, அவ்வளவு தான். மாற்று சிந்தனையை, கேள்விகளை தூக்கி தூரப்போடு. 

சரி, உரையாடல்களை கவனித்தால் ஒரு இடத்தில் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி விமானத்தை கடத்தியவரிடம் கேட்பார், நீங்கள் பெட்ரோலுக்கு சண்டை போடுவதெல்லாம் 'புனிதப் போரா' என்று. நான் மறுபடியும் குழம்பிப்போனேன். இவர் ஏன் இதை காஸ்மீர் விடுதலையை விரும்பும் ஒருவரிடம் கேட்கிறார் என்று. திரையில் 'Operation Karuda' விற்கு கொடுத்த முக்கியத்தில் ஒரு சிறிய பங்கேனும் காஸ்மீர் பிரச்சனையின் உண்மையான பக்கத்தை மக்கள் அவலத்தை, காஸ்மீர் பற்றிய இந்தியக்கொள்கையை ஓரிரு காட்சிகளிலேனும் காட்டியிருக்கலாமோ!! 

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய ஊடக செய்திகளுக்கும், அருந்ததி ராய் போன்றோரின் அரசியல் கண்ணோட்டத்திற்கும் இடையே உள்ள இடைவெளிகளில் தான் உண்மை ஒளிந்திருக்கிறது என்பது என் புரிதல். இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம், PTA; இந்தியாவின் POTA இரண்டும் காவு வாங்கிய, இன்னும் வாங்கிக்கொண்டிருக்கும் உயிர்ப் பலிகள், காணாமற்போதல், எப்போது பயம் மட்டுமே சூழ்ந்திருக்கும் வாழ்க்கை இதையெல்லாம் எந்த சினிமாவும் சொல்லப்போவதில்லை. அது சரி, இந்தியா என்ன அமெரிக்காவா! ராதாமோகன் என்ன Michael Moore ஆவென நினைத்து என்னைநானே சமாதானப்படுத்திக்கொண்டேன். இருந்தாலும், பிரபல நடிகரின் பஞ்சு டயலாக்கை, வீரத்தை குத்திக்காட்டும் ரசிகனின் பொதுப்புத்தியை ரசித்தேன். 

இறுதியாக இந்திய மத்திய அரசில் இருக்கும் அதிகாரிகளுக்கும் துடிப்பான எப்போதுமே துணிகரமாக எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற இளையதலைமுறைக்கும் இடையேயான உரையாடல்கள் அதிக சுவாரஸ்யமில்லை. வழக்கமான தேர்தல், கட்சி அரசியலைப் பிரதிபலிக்கிறது. மத்தியில் இருக்கும் அரசின் கொள்கைகள் பற்றியே அதிகம் கவலைப்படும் மூத்த அதிகாரிகள், மாநில அளவில் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரம் அதிகமில்லாத அதிகாரிகள், இதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டாமல் எதையும் Adventure ஆக நினைக்கும் ஆயுதம் தாங்கி செயற்படும் படைகள், இவர்களின் இயல்புகள் ஆங்காங்கே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தவிர, கொஞ்சம் Journalism பற்றிய பொறுப்பான, பொறுப்பற்ற ஊடகப்பார்வையும் உண்டு. 

தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற போது தங்கள் தவறுகளை திடீரென உணர்ந்து மனம் வருந்தும் சாமானியர்களும் உண்டு. ஆனால், தங்கள் உயிரின் பதைப்பு தானே தன் சொந்தாநாட்டில் இன்னோர் மூலையில் வாழும் காஷ்மீரிகளுக்கும் இருக்கும் என்பதை அந்த சாமானியர்கள் மூலமாக உணர்த்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதே போலவே, விமானத்தை கடத்தியவர்களும் ஒரு பெண்ணிடம் அவரின் புகைப்பழக்கம் பற்றிய விவாதத்தில் 'அறம்' (Moral) பற்றி பாடம் எடுக்கும் போது நினைத்தேன், இந்த அறத்தை மத்தியகிழக்கு நாடுகளில் இருக்கும் சில எஜமானர்கள் கடைப்பிடித்திருந்தால் அங்கே வேலை தேடிப்போன பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்க வேண்டாமென!

கடைசி காட்சியில் தான் இறந்துகிடப்பவர்களின் பெயர்களை காட்டுகிறார்களாம், ஏன்? அவர்களுக்கு இன்னோர் மதத்தை சேர்ந்தவர் பிரார்த்திக்கிறார். முடிவை பார்ப்பவர்களின் தீர்மானத்திற்கே விடுகிறார்களோ!!!  


8 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இந்தப்படம் எனக்குப் பிடிக்கவில்லை...

Rathi சொன்னது…

செந்தில், எனக்கும் படம் பிடிக்காததால் தான் விமர்சனம் செய்தேன். :)

ஹேமா சொன்னது…

ரதி...என் கட்சிதான் நீங்க !

Rathi சொன்னது…

ஆஹா.... அப்போ எங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஹேமா. :)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>பிரபல நடிகரின் பஞ்சு டயலாக்கை, வீரத்தை குத்திக்காட்டும் ரசிகனின் பொதுப்புத்தியை ரசித்தேன்.

அப்பாடா.. இதையாவது ரசிச்சீங்களே..

Rathi சொன்னது…

ஆமாங்க, செந்தில்குமார் அந்த ஒருயொரு விடயம் மட்டும் தான் படத்தில் ரசிக்ககூடிய மாதிரி இருந்துது. என்னோட இவ்வளோ நீளப்பதிவில் அந்த ஒரு வரி உங்கள் கண்ணில் பட்ட மாதிரி. :))

Thekkikattan|தெகா சொன்னது…

ரதி,

இந்தப்படத்திற்கு இவ்வளவு பெரிய உள்ளர்த்தம் வைத்து தோண்டித் துருவி ஒரு கட்டுரையெல்லாம் அதிகம் உங்களிடமிருந்து :) ...

நானும் இணையத்தில் இலவசமாக இந்தப் படத்தை ப்ரகாஷ் ராஜ் இருக்கிறார் என்பதால் நம்பி பார்க்க ஆரம்பித்தேன். முடியல்ல! அதே பொது ஜன ஊடகம் அவிழ்த்து விடும் விசயங்களை, பெரிய திரையில் சொல்லி நல்ல பிள்ளை பெயர் எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். போற போக்கில அர்ஜுன் ரேஞ்சிற்கு ப்ரகாஷ் போயிடாம இருந்தா சரி!

படங்களில் தனிமனித வேதனைகள் எப்படி ஒரு சட்டம், சார்ந்து அல்லது ஒரு அரசாங்கத்தின் நிலைப்பாட்டினால் அவர்களின் வாழ்க்கையில் சங்கடம் விளைவிக்கிறது என்று உணர்வுப் பூர்வமாக சொல்லாததெல்லாம் சுத்த வேஸ்ட்.

காட்சிகளில் வரும் மத நல்லிணக்க விசயங்கள் sucks very childish!

Rathi சொன்னது…

தெகா,

நானும் ராதாமோகனின் மொழி, அழகிய தீயே போன்ற எதிர்பார்ப்பில் தான் படம் பார்த்தேன். விளைவு இப்படி ஆகிவிட்டது, பதிவு போடுமளவிற்கு :)