ஏப்ரல் 05, 2011

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இங்கே கனடாவிலும் எங்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களை கேட்டு காதால் ரத்தம் வடியாத குறை தான். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் என்றால் எங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல். ஆனால், நாங்கள் எல்லோருமே ஜனநாயக தேர்தல் victims என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. 

அது ஒருபுறமிருக்க ஒரு சில நாட்களுக்கு முன் சீமானின் தேர்தல் பிரச்சாரப் பேச்சு ஒன்றை பார்க்கவும், கேட்கவும் நேர்ந்தது. அட! சீமானா இது என்று ஆச்சர்யப்பட்டேன். எப்போதுமே பேச்சில் சீறி வெடிக்கும் சீமானைத் தான் பார்த்திருக்கிறேன். நிறையவே அமைதியாயும், நகைச்சுவையாகவும் பேசினார். தமிழக சட்டசபைத்தேர்தலில் ஏன் காங்கிரஸ் என்கிற இந்திய தேசிய கட்சியை தமிழ்நாட்டில் "ஆதரிக்கக் கூடாது, விரட்டவேண்டும், ஒழித்துக்கட்டவேண்டும்" என்று அவர் வார்த்தைகளில், அவரது பாணியில் விளக்கினார். பதிவுலகைப் பார்த்தாலும் தமிழக தமிழர்கள் இந்த தேர்தலைப் பொறுத்தவரை தெளிவாய் இருப்பதாய் தோன்றுகிறது, காங்கிரஸ் விடயத்தில். 

அப்படியே கனடாவுக்கு வந்தால், இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தல் ஈழத்தமிழர்களுக்கும் தேசிய நீரோட்டத்தில் கொஞ்சம் அரசியல் சாரலில் நனையவும், அதே நேரம் கொஞ்சம் உதறவும் வைக்கிறது. நான் கவனித்த வரையில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள் கூட இப்போ பெரும்பான்மை அரசு அமைக்க திணறிக்கொண்டிருக்கின்றன, உ-ம்: கனடா, பிரித்தானியாவின் கடந்த தேர்தல், இந்தியாவின் இப்போதைக்கு முந்திய ஆட்சி. 

இந்த நெருக்கடியான அரசியல் மாற்றங்களில் கனடாவின் தேசிய அரசியல் கட்சிகள் (இங்கே எல்லாமே தேசிய கட்சிகள் தான்) எங்களைப்போன்ற சிறுபான்மையினரின் (Visible Minority) ஆதரவு என்பது தவிர்க்க முடியாதது என்பதை யதார்த்த பூர்வமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே என்னவோ கனடாவின் பிரதான கட்சிகளில் எம்மவர்களும் சிலர் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 

தேர்தல் அரசியலில் என்னைப் போன்றவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது இல்லை என்கிற வரையறை தாண்டித்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இப்போது அது இரண்டாம் பட்சமாகவே தோன்றுகிறது. பொதுவாக இங்கே வேற்று சமூகத்தினர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் அது அவரின் தனிப்பட்ட முன்னேற்றம் சார்ந்த அல்லது இங்கே வாழும் அவர்கள் சமூகம் சார்ந்த நலன்களை மட்டுமே கவனத்திற் கொள்வார்கள். ஈழத்தமிழர்களுக்கு எழுதப்பட்ட விதியோ என்னவோ எப்போதுமே நாங்கள் வாழும் நாடுகளில் எங்கள் அரசியல் முன்னெடுப்புகள் தாய்மண்ணில் இருப்பவர்களுக்கு ஏதாவதொரு சிறிய விடுதலையையேனும் கொண்டுவராதா என்பதை தான் முதற்கண் யோசிக்க வேண்டியுள்ளது. 

அதிலேயும் ஓர் சிக்கல் என்னவென்றால், தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் மரபுக்கட்சி (Conservative Party) எம்மவர்கள் அண்மையில் கனடாவுக்கு வந்த அகதிக்கப்பலையே (MV Sun Sea) தேர்தல் பிரச்சாரத்தில் ஓர் விளம்பரத்தில் பயன்படுத்தி எதிர்க்கட்சியை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்த விளம்பரத்தில் கப்பலில் வந்தவர்கள் "Criminals" என்கிற வார்த்தைப் பிரயோகத்தாலும், எதிர்க்கட்சி ஆட்சி (Liberal) அமைத்தால் அது அவர்களின் "Soft on Crimes"/"Dangerously Soft on Crime" என்கிற கொள்கையையாகவும் அமையும் என்று விமர்சிக்கிறார்கள். காரணம், இந்த கப்பலில் வந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டதை Liberal கட்சி எதிர்த்து விமர்சனம் செய்தது தான். இந்த விடயத்தில் மரபுக்கட்சி சார்ந்து போட்டியிடும் ஈழத்தமிழரை தவறாக புரிந்துகொள்ளப்படும் சந்தர்ப்பமும் உண்டு. ஆனாலும், எனக்கு என்ன தோன்றியதென்றால் இந்த அரசியல் சதுரங்கத்தில் நாங்களே கருவியாயும், பாதிக்கப்பட்டவர்களாயும் ஆனோம் என்பது தான். புலம் பெயர் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சிரித்துக்கொண்டே மழுப்ப நினைத்தாலும், எங்கேயோ அடிமனதில் சுருக்கென்று அது வலிக்காமல் இல்லை.

அந்த அகதிக்கப்பல் கனடாவுக்குள் வந்த நாள் முதலே அதை பெரும்பான்மையான கனேடியர்கள் வெறுப்போடும், தங்களுக்கு கிடைக்கவேண்டியத்தை இவர்கள் அபகரிக்க வந்தவர்கள் என்பதைப் போல் தான் நோக்குகிறார்கள் என்பதை கனேடிய தேசிய மைய ஊடகங்களில் வந்த பொதுமக்களின் கருத்துகளே crystal clear ஆக விளக்கின. அப்படி வந்தவர்களையும் அவ்வளவு சுலபமாக நாட்டுக்குள் நுழைய கனேடிய சட்ட திட்டங்கள் அனுமதிப்பதில்லை. இன்றுவரை சிலர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கனடாவின் ஜனநாயக விழுமியங்களில் நான் நம்பிக்கை இழந்துபோகும் விடயங்களில் இதுவும் ஒன்று. 

இது தவிர பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே Health Care, Fighters Jet கொள்வனவு, குடும்பம் மற்றும் முதியோர் நலன்சார்ந்த கொள்கைகள் அதற்கான நிதி ஒதுக்கீடு, மாணவர்களின் கடன்கள் இவற்றை சொல்லியே ஒருவரை தேர்தல் பிரச்சாரத்தில் முழக்கிக்கொன்டிருக்கிறார்கள். நாங்கள் மட்டும் ஆட்சி அமைத்தால் நாடும் மக்களும் சுபீட்சம் பெறுவார்கள் என்கிற அதே பழைய அரசியல் பல்லவி தான். 

இங்கே நான் சொல்ல வருவது என்னவென்றால், கனடா போன்ற ஓர் நாட்டில் எம்மவர்களின் அரசியல் பிரவேசம் தவிர்க்கமுடியாதது. அது காலத்தின் தேவையும் கூட. எம்மவர்கள் எந்தக் கட்சியை சார்ந்து போட்டியிட்டாலும் அவர்களை வெல்ல வைக்கவேண்டியது எங்களின் தேவையும் கூட. ஈழம் தொடர்பான அரசியல் முன்னெடுப்புகளுக்கு இவ்வாறான அரசியல் பிரவேசம் இன்றியமையாதது என்பது என் கருத்து. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரும்பான்மை கனேடியர்களின் விருப்பு, வெறுப்பு, தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது யதார்த்த அரசியல். ஆனாலும், எங்களுக்கும் எங்கள் ஈழம் சார்ந்த விடயங்களில் சர்வதேச அரசியலில் கவனத்தை ஈர்க்க, கனேடியர்களுக்கு எங்களின் உண்மை நிலையை புரிய வைக்க எம்மவர்கள் அரசியல் தேர்தல் களத்தில் வெற்றி பெறவேண்டும். தேசிய நீரோட்டத்தில் பங்கெடுப்பது என்பது தேர்தலில் தமிழர்களின் வாக்களிப்பு வீதத்தையும் வைத்தே கணிப்பிடப்படுகிறது. 

நான் இந்த முறை என் தனிப்பட்ட கருத்து, விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்போகிறேன். 

11 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

கனடா தேர்தல் களம் குறித்த பகிர்வுக்கு நன்றி.

வேட்பாளர்கள் யாராவது எப்படி மூஞ்சியில் கரி பூசிக்கொள்வது என பயிற்சி தேவையென்றால் தமிழகத்துக்கு ஒரு பயணம் போயிட்டு வரச்சொல்லுங்க:)

பயிற்சியாளர்கள் விபரம்:வடிவேலு,சிங்கமுத்து,விஜயகாந்த்,அழகிரி,தங்கபாலு,ஜெயலலிதா....இன்னும் அதிக மேற்பயிற்சிக்கு கருணாநிதி:)

ஹேமா சொன்னது…

என்னமோ நிறையச் சொல்றீங்க ரதி.எதைச் சொன்னாலும் முற்றுப்புள்ளியும் தொடர்புள்ளியும் ஈழம்,தமிழர்தானே !

ஜோதிஜி சொன்னது…

அப்ப இதுக்கு முன்னாடி வாக்களித்தது இல்லையா?

தவறு சொன்னது…

உங்கள மாதிரியே தமிழக மக்கள் சிந்திச்சா நல்லாதான் இருக்கும் ரதி.

Rathi சொன்னது…

ராஜ நட,

சிரித்தாலும், சீரியஸாக சிந்திக்க வேண்டிய விடயம். கனடா அரசியல் களம் இந்தமுறை வழமையை விட அமளி துமளியாய் இருக்கிறது. பார்க்கலாம் முடிவுகள் எப்படி இருக்கிறதென்று.

Rathi சொன்னது…

ஹேமா,

நான் மிக, மிக சுருக்கமாக ஓர் துளியளவு தான் சொல்லியிருக்கிறேன். உண்மையில் ஈழத்தமிழர்கள் அதிகமாய் கனடாவில் வாழ்ந்தாலும் எங்கள் அரசியல் செயற்பாடுகள் என்பது நிறையவே சவால்கள் நிறைந்தது. இப்போ எங்கள் பக்கம் உள்ள குறையை நிவர்த்தி செய்ய தமிழர்கள் நிறையவே முயற்சி செய்கிறார்கள்.

Rathi சொன்னது…

ஜோதிஜி,

ஒரேயொருதடவை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்திருக்கிறேன். பிறகு நம்பிக்கையற்றுப் போய்விட்டது.

Rathi சொன்னது…

தவறு,

உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கும் காலம் வரும் வரை நான் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எல்லா ஊர்லயுமே மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள் என நினைக்கும்போது சந்தோசமே..

விந்தைமனிதன் சொன்னது…

"இந்திரர்கள் மாறலாம்!இந்திராணி மாறுவதில்லை" என்றிரு வாசகம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆள்வோரின் கட்சிக்கொடிகளும், சின்னங்களும் மாறலாம். ஆளப்படுவோர் நிலை...?

Rathi சொன்னது…

ராஜாராமன், ஆறரை கோடி தமிழர்கள் இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் களம் வேறு. புலத்தில் எங்களுக்குரிய அரசியல் அங்கீகாரம் என்பது வேறு. தமிழ்நாட்டு அரசியல் நிலைப்பாடு நாதியற்றுப்போன ஈழத்தமிழனுக்கு சாதகமாக இருந்திருந்தால், புலத்திலும் நாங்கள் அடித்துப் பேசலாம். அது இல்லையென்றான பின்
எங்களுக்குரிய தீர்வுக்கு எந்தெந்த வழிகள் இருக்கிறதோ எல்லாத்தையும் முயற்சி செய்வதில் ஏன் தயங்க வேண்டும். உங்கள் கருத்துக்குரிய பதிலை ராஜ நடராஜனின் பதிலை மீண்டுமொருமறை படியுங்கள் புரியும்.