ஏப்ரல் 04, 2011

இவர்கள் மறக்கப்பட்டவர்களா!!

மனிதராய்ப் பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் எதையாவது இழந்திருப்போம், தொலைத்திருப்போம். காலப்போக்கில் அதைப் பற்றி பெரும்பாலும் மறந்தும் விடுவோம். நினைவுகளிலிருந்து அது மறைந்தும் விடுவதுண்டு. ஈழத்து மண்ணின் இழப்புகள் அப்படி மறக்ககூடியனவா!!
ஈழத்தமிழர்கள் இழப்புகள் எங்களுக்குத்தான் வரலாறு. உலகத்துக்கு பல சமயங்களில் அது ஓர் சம்பவமாக கூட தெரிவதில்லை. ஈழமும் அதன் மனிதர்களும் இழந்ததை எல்லாம் பட்டியலுக்குள் அடக்கமுடியாது. இருப்பு என்பது தற்காலிகமாகவும், இழப்பு என்பது ஒன்றே நிலையாகிப்போன வாழ்க்கைச்சூழல்.
வாழ்ந்து கழித்து காலன் அழைத்துக்கொண்ட ஒற்றை உயிருக்கே எத்தனையோ ஆர்ப்பாட்டம் அற்ப மானுட வாழ்வில். நாங்கள் லட்சக்கணக்கில் தொலைத்தாலும், இழந்தாலும் இன்னும் ஏதோவொரு நம்பிக்கையில் தேடிக்கொண்டிருக்கிறோம், தொலைத்தவர்களையும், இழந்தவர்களையும். நாங்கள் இழந்தவர்கள் என்றால் மரணித்தவர் மட்டுமல்ல, காணாமற் போனோரும் தான். ஈழத்தில் காணாமற் போனவர்கள் என்பவர்கள் யாருமே தன்னியல்பாய் காணாமற்போவது கிடையாது. இலங்கை ராணுவத்தால் ஆண்டாண்டு காலமாகவும், தற்போது ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் காணாமற் போகிறார்கள். இதில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லையாம் என்பது அந்த நாட்டு ஜனாதிபதியின் அண்மைய கூற்று. கடும் சிறையிலும், சித்திரவதைக்கூடத்திலும் இளமையையும், வாழ்க்கையின் அத்தனை சந்தோசங்களையும் தொலைத்தவர்கள் ஒருவேளை இலங்கை தமிழர்கள் அல்ல, ஈழத்தமிழர்களோ!!
அண்மையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் மீண்டும் ஒரு முறை காணாமற் போன தங்கள் கணவனை, குழந்தைகளை, சகோதர, சகோதரிகளை கண்டுபிடித்துக்கொடுக்க ஆவன செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார்கள் தமிழர்கள். இந்த நல்லிணக்க குழுவையே, சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய அமைக்கப்படவில்லை என்கிற குற்றமும் குறையும் ஒருபுறம் இருக்கிறது. 
2009, May மாதம் இலங்கை ராணுவம் ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் ஐ. நாவின் மனித உரிமைகள் சாசனத்தையும் சுமந்து கொண்டுதான் போர் செய்தார்கள்; அதில் எந்தவொரு அப்பாவி பொதுசனமும் கொல்லப்படவில்லை என்கிற இலங்கை அரசின் கூற்றுக்கு அமையத்தான் மீள் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையின் லட்சணம் இருக்கிறது. ஆனாலும், இவர்கள் இன்னும் சளைக்காமல் ஊரூராய் போய் விசாரணை என்கிற பெயரில் எதையாவது செய்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் போகிறார்களாம். சர்வதேசம் எவ்வளவு சொன்னாலும் தாங்கிக் கொள்கிறார்களா அல்லது பின் புறத்தில் தட்டிவிட்டு போய்க்கொண்டே இருப்போம் என்று நினைக்கிறார்களா! 
முள்ளிவாய்க்கால் முடிவின் போது ஏறக்குறைய பத்தாயிரத்துக்கு மேற்பட்ட புலிகள் உறுப்பினர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டும், சரணடைந்தும் எங்கே இருக்கிறார்கள் என்பது கூட தெரியாத வகையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பார்க்க அனுமதிக்குமாறு Human Rights Watch கேட்டும் கூட இலங்கை அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது தான் அவர்களின் குற்றச்சாட்டு. போரின் போது சரணடைந்தவர்களுக்கு ஐ. நாவின் விதிகளுக்கு அமைய வாழ்வாதாரத்துக்கான பயிற்சியும், மறுவாழ்வும் அளிப்பதே ஒரு நாட்டின் கடமை. மிக அண்மையில் 206 பேர் பயிற்சிப் பட்டறைகளில் வாழ்வாதரத்திற்குரிய பயிற்சிகளுடன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது செய்தி. மீதிப்பேர் என்ன ஆனார்கள்? அவர்களுக்குரிய நியாயமான வழக்கு விசாரணையோ அல்லது விடுதலையோ பற்றி யாரும் பேசுவதும் கிடையாது. இலங்கை அரசு தடுத்து வைத்திருப்பவர்களின் பெயர் விவரங்களையாவது வெளியிடவேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட பலரது எதிர்பார்ப்பு. இதையெல்லாம் நல்லிணக்க ஆணைக்குழு கவனத்திற் கொள்வதும் கிடையாது. இதெல்லாம் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இல்லையோ என்னவோ. 
இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனாலும், மனித உரிமைகள் பிரகடனத்திற்கு எதிரான, அதை பொருட்படுத்தக்கூடத் தேவையில்லாத வகையில் தான் இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அது இன்னமும் அமுலில் இருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் தோற்றுவாய், கொள்கை, கோட்பாடு, அதன் அதிகாரிகள் எல்லாமே இலங்கை அரசின் தமிழர்கள் தொடர்பான பக்கச்சார்பான, தமிழர் நலன்களுக்கு எதிரான கொள்கைகளை பிரதிபலிப்பதாகவே இருக்கும்போது இவர்கள் எங்கே காணாமற் போனவர்களை கண்டுபிடித்துக் கொடுக்கப்போகிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. உறவுகளை இழந்தவர்கள் மட்டும் இன்னும் ஏதோவொரு நம்பிக்கையில் இவர்கள் முன் சாட்சியம் அளித்தும், என்  கணவனை பிள்ளையைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று வேண்டுகோளும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையாவது பொய்க்காமல் இருக்குமா!! 
ஈழத்துக்காய் உயிர் கொடுத்தும், சித்திரவதைப்பட்டும், காணாமற் போயும், கற்பை இழந்தும் இன்னும் ஈழம் என்கிற உணர்வை எம்முள் வாழவைப்பவர்கள் மறக்கப்பட்டவர்களா! இவர்களின் நினைவுகள் வழி மீதமிருக்கும் ஈழத்தமிழர்களின் ஒற்றுமையை இன்னும் வாழவைத்துக்கொண்டிருப்பவர்கள். அந்த ஒற்றுமை நீங்கின் அது எங்களுக்கு தாழ்வு மட்டுமல்ல, இவர்களுக்கும் வருங்கால சந்ததிக்கும் நாம் இழைக்கும் துரோகம் கூட. 


4 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

ஈழத்திற்கும், குமரிக்குமான தூரம் வேண்டுமானால் ஒரு 20 மைலுக்குள் வரலாம். ஆனால் இது போன்ற அனுபவம், வலி என்பது எங்களவில் பல கோடி கண்டங்களை தாண்டியது. மானாட மயிலாடவில் சிக்குண்டு கிடக்கிறோம். :(

தவறு சொன்னது…

வலிக்கிறது....நீண்ட தனிமையின் யோசிப்பில் உருவான வலியும் பதிவும் ரதி.

ஹேமா சொன்னது…

யாரும் மறக்கவில்லை ரதி.மறக்கவும் முடியுமா.
நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது.என்னால் ஒன்றும் முடியவில்லையே என்கிற ஆதங்கமும் கூட.நேற்றைய செய்தியில்கூட சந்தேகத்தின் பெயரில் 12 ஆண்டுகாலமாக சிறைக்குள் இருந்த ஒரு குடும்பத் தலைவனுக்கு இப்போ எந்தவித ஆதாரங்களும் இல்லாத நிலையில் முழுப்பைத்தியமாக்கி வெளியில் விட்டிருக்கிறார்கள்.யார் கேட்கப்போகிறார்கள் !

Rathi சொன்னது…

தெகா, தவறு, ஹேமா,

ஒவ்வொரு நாளும் செய்தியை கேட்டால் இது தான் காதில் விழுகிறது. கடத்தப்பட்டார், சுடப்பட்டார், கொல்லப்பட்டார் என்கிற வகையில். இனி மே மாதம் நடுப்பகுதிக்குள் இந்த ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்குமாம். மறுபடியும் எந்தவொரு ஈழத்தமிழனும் இறுதி யுத்தத்தில் கொல்லப்படவில்லை என்று சாதிப்பார்கள். நாங்கள் இழப்பின் வலியில். சிங்கள தேசம் மீண்டும் ஒரு முறை கூத்தும், கொண்டாட்டமுமாய் எங்களை எகத்தாளம் செய்யும்.

என்ன நடந்தாலும் ஊரோடு இருந்திருக்கலாம். எம்மவர் அனுபவிப்பதை நாங்களும் பங்கெடுத்திருக்கலாம் என்று ஒரு கணம் நினைப்பதுண்டு. மறுகணமே சிங்கள ராணுவத்தின் கொடூரம் உயிரை நடுங்கவும் வைக்கிறது. கடைசியில் அதுவே குற்ற உணர்வாக எம்மிடம் நிலைத்தும் விட்டது.