ஏப்ரல் 29, 2011

இலங்கையின் மே தின ஐ. நா. எதிர்ப்பும் பலியாடாய் தமிழனும்!

மே தினம் என்பது உழைப்பாளர் தினம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான ஓர் அடையாள நாள். எந்த நாளாய் இருந்தால் என்ன இலங்கைக்கு தமிழனை வதைக்கும் எல்லா நாளுமே நல்லநாள் தான்.

ஏற்கனவே ஐ. நா. வின் செயலருக்கு இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்க அமைத்த மூவர் குழுவுக்கு "Lemon Puff" பிஸ்கட் புகழ் விமல் வீரவன்சே காந்தீய வழியில் உண்ணாவிரதமோ அல்லது உண்ணும் விரதமோ இருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், இலங்கைக்காக.  இலங்கையின் இறையாண்மையை மீண்டுமொருமுறை காப்பாற்றிவிட்டு வைத்தியசாலையில் படுத்துகொண்டார். ஊடகங்களுக்கு தீனி போட்டார். தமிழர்கள் மீதான இனத்துவேசத்தை நிறைத்துவைத்து மார்க்சீயம் பேசும் ஜே. வி. பி. இலிருந்து பிரிந்து ஓர் கட்சிவைத்து ராஜபக்க்ஷேவுக்கு அடிப்பொடியாய் செயற்படுபவர் என்பது அவரது சிறப்புத் தகுதி.

இவரின் ஐ. நா. எதிர்ப்பு உலகப் பிரசித்தி பெற்றதென்றாலும், இப்போ மிக அண்மையில் ஐ. நா. மூவர் குழு  இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அதன் செயலருக்கு ஆலோசனைகள், பரிந்துரைகள் வழங்கிய அறிக்கை மறுபடியும் இலங்கையின் இறையாண்மையை சீண்டிப்பார்த்துவிட்டதாம். அதற்காக வரும் மே மாதம் ஒன்றாம் திகதி ஒட்டுமொத்த இலங்கையும் இவரின் தலைமையில் பொங்கி எழப்போவது யாவரும் அறிந்ததே.

இவர்களின் ஐ. நா. எதிர்ப்புக்கு இப்போ வடக்கில் இருந்து தமிழர்களை பேருந்துகளில் நிரப்பி ஏற்றிச் செல்வதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தமிழர்களில் மிகப் பெரும்பான்மையோர் விருப்பமின்றியே சிங்கள ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதுவும் அவர்களின் வழமையான பயமுறுத்தி, உயிர்ப்பயம் காட்டி, இந்த ஐ. நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் கலந்து கொள்ளாவிட்டால் கொல்லப்படுவார்கள்   என்று தமிழர்களை மிரட்டியதாகவும் தமிழ் நெட் செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் ஏற்கனவே இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு, இப்போ விடுதலை செய்யப்பட்டவர்களே இப்படி மிரட்டி அழைத்துச் செல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. கூடவே, இலங்கையின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப் படக்கூடாது என்பதை கையெழுத்து வேட்டையில் ஐ. நா. செயலருக்கு கடிதமும் அனுப்பப்போகிறர்ர்கள்.

அது தவிர, யாழ்ப்பாணத்திலும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்டாய ஆள்சேர்ப்பு, வன்முறைகளை தூண்டும் திட்டம் என்பனவும் சிறப்பாய் முன்னெடுக்கப் படுகிறதாம். இந்த கட்டாய ஆட்சேர்ப்பில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிலரின் சிறப்பான செயற்கரிய செயலும், திறனும் அடக்கம்.

ஏற்கனவே போர்க்குற்ற விசாரணை குறித்த காணொளிகள் இலங்கையை உலகெமெங்கும் பிரபலமடைய வைத்திருக்கும் வேளையில், இது போன்ற விடயங்கள் மட்டும் தப்புமா தொழில்நுட்பத்தின் கண்களிலிருந்து என யாரும் யதார்த்தமாக சிந்திக்கலாம். இலங்கை எந்தப் பொய்யைச் சொன்னாலும் அதைப் பலப்படுத்த இந்தியாவின் உதவி, சீனாவின் ஆதரவு, அமெரிக்காவின் அனுசரணை எல்லாமே உண்டு. கூடவே, ஐ. நாவுக்குத் தேவை காகிதங்களில் இருக்கும் கையெழுத்துகள் மட்டுமே. அது எப்படி சேகரிக்கப்பட்டது என்பதெல்லாம் தேவையில்லாத விடயம் என்று இலங்கை ஆணித்தரமாக நம்புகிறது போலும்.

இது எல்லாத்தையும் விட ஓர் யாழ்ப்பாணத்தமிழர் சொன்னது தமிழ்நெட்டில், 

"This is tacitly supported by some international elements too that abetted the crimes.   Familiarising Eezham Tamils to the life of subjugation is what meant by ‘reconciliation’ by those who conceived the paradigm, said a social worker in Jaffna." 

அவர் சொன்னது எனது தமிழில், போர்க்குற்றங்களுக்கு துணைபோன சர்வதேசமே இப்போதும் இதற்கு மெளனமாக ஆதரவு வழங்குகிறது. பயமுறுத்தி, அடிமைப்படுத்தி தமிழர்களை அந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்துவது தான் 'மீளிணக்கம்' என்பது அவர்களது எண்ணக்கரு என்று சொல்கிறார்.


நன்றி: படம் Google

ஏப்ரல் 28, 2011

மனிதம் சாகுமோ!


காத்திருந்து, காத்திருந்து கடைசியில் இலங்கையின் போர்குற்ற ஐ. நா. மூவர் குழு அறிக்கை முழுதாய் வெளியாகிவிட்டது. ஏதோ புதுப்பட Trailer  போல் Isaland பத்திரிக்கை அறிக்கையின் ஓர் பகுதியை கொஞ்சமாய்  வெளியிட்டது. இப்போ முழுதாய் பக்கம், பக்கமாய் உயிரை பதறவைக்கிறது. எங்குமே, Bloggers தொடக்கம் சர்வதேச ஊடகங்கள் வரை அலசப்படுகிறது. இந்த அலசல் எல்லாம் துண்டு, துண்டாய் அறிக்கை வெளியானபோதே முடிந்துவிட்டது.

ஆனாலும், பயங்கரவாதத்தை வன்மையாக, மிதமாக கண்டிப்பவர்கள் எல்லோருமே ('Counterinsurgency Writers') அல்லது எனது மொழியில் நடுநிலமையாளர்கள் என்று  கொள்ளலாமா தெரியவில்லை, அவர்கள் அரசும் புலிகளும் போர்க்குற்றங்கள் செய்ததாக அறிக்கையின் துணை கொண்டு பக்கம், பக்கமாய் விளக்கியுள்ளார்கள். இந்த உலகத்திலேயே பிரபாகரனும் புலிகளும் தான் மிக கொடிய பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா கண்டுபிடித்த உண்மையை பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களும் எழுத்தில் ஆமொதித்தாகிவிட்டது. இனி அடுத்தது என்ன? 

அடுத்து தமிழர் தரப்பு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கும் போது தான் ஏன் எங்களுக்கென்று ஓர் ஆதரவும் இல்லாமல் போனது என்கிற கேள்வியும் எழுகிறது.

வழக்கம் போல் புலத்தில் வாழும் தமிழர் அமைப்புகள் ஒன்றாய், ஒரே அணியில் எங்கள் அடுத்த நகர்வு அறிக்கை விடயத்தில்  என்னவாயிருக்கும் என்று தெளிவுபடுத்துவது நல்லது. யாருக்குமே உடனடியாய் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனாலும், அதிகம் காலம் கடத்தாமல் எதையாவது முயன்றால் என்ன என்பது தான் எனது சிந்தனை மட்டுமல்ல தவிப்பும்  கூட.  இல்லையென்றால் இலங்கை விடயத்தில் வாழாதிருக்கும் ஐ.நா. கூட  இலங்கையின் திரைமறைவு அரசியல் சாணக்கியத்தில்  ஊத்தி மூடிவிட்டுப் போகத்தான் பார்ப்பார்கள்.

இருந்தாலும் மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச ஊடகங்களுமே இது பற்றி தொடர்ந்து ஓரளவுக்கேனும் பேசுவார்கள்  போலுள்ளது. இதற்கிடையே, சனல் 4 பிரித்தானிய காட்சி ஊடகம் மீண்டும் ஓர் காணொளியை மே மாதம் வெளியிடப்போவதாக ஓரிரு நாட்களுக்குமுன் சொல்லியிருக்கிறது.

 ஈழப்படுகொலைகளில்  எப்போதும் குறைவில்லாத காணொளிகள். ஆனாலும், போர்க்குற்ற விசாரணை தான் இழுத்துக்கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் பான் கி மூன் சொல்வது இலங்கை "consent" தந்தால் அல்லது ஐ. நா. பாதுகாப்பு சபை அல்லது மனித உரிமைகள் சபை எதுவென்று குறிப்பிடாமல், இதில் ஏதோவொரு அமைப்பு அதிகாரம் இவருக்கு கொடுக்க வேண்டுமாம். அப்படியானால் தான் சர்வதேச விசாரணைக்குழு அமைக்க முடியுமாம். தனக்கு இதுக்குமேல் அதிகாரம் இல்லையாம். இனி, எங்கள் வேலை அதிகாரத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து காய்நகர்த்துவது தானோ!!!

ஈழத்தமிழர்கள் மேல் உண்மையான அக்கறையோடு கூட வேண்டாம், மனிதம் சாகவில்லை என்று நிரூபிக்கும் ஓர் நாடேனும் உண்டா சொல்லுங்கள்!!!

 

ஏப்ரல் 25, 2011

நாடு கடந்த தமிழீழ அரசு -யாரின் இறையாண்மைக்கு பங்கம்!


4986908-lg.jpg

விடுதலையின் தேடுதலாக மனித வரலாறு நகர்கிறது. இப்படி எங்கேயோ படித்த ஞாபகம் எனக்கு. ஈழத்தமிழர்களாகிய எங்களின் விடுதலை நோக்கிய வரலாறும் வெவ்வேறு விதமான அடக்குமுறைகளை உடைத்து, வெவ்வேறு விதமான பாதைகள், வடிவங்களிலும் நடைபோடுகிறது. ஆங்காங்கே வேகம் மட்டும் கூடியும், குறைந்தும் தொடர்கிறது. 

ஈழத்தமிழர்களின் மீதான சிங்கள இனவாத அடக்குமுறையும் மொழி, கல்வி என்கிற வடிவங்களில் தொடங்கி இன்று இனவழிப்பு வரை ஈழத்தில் தொடர்கிறது.  இதிலிருந்து மீளமாட்டோமா என்கிற முனைப்பின் முன்னெடுப்புகள் என அகிம்சை முதல் ஆயுதப்போராட்டம் வரை முயன்றாயிற்று. தந்தை செல்வா காலத்திருந்து இன்றுவரை உள்நாட்டு பிரச்சனை என்றார்கள்; பயங்கரவாதம் என்றார்கள்; பூகோள அரசியல் பிரச்சனை என்றார்கள். எங்களை எப்போது சிங்களனிடமிருந்து நிரந்தரமாய் காப்பாற்றுவீர்கள் என்று உயிர்ப்பிச்சை கேட்டால் பதில் சொல்ல யாரும் இல்லை. 

இனி சிங்கள இனவாதத்திலிருந்து எங்களை நாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டியது தான் எங்களுக்கிருக்கும் ஒரே வழி என்கிறபோது, அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையின் வடிவம் தான் வட்டுக்கோட்டை தீர்மானம். ஈழத்தமிழர்களின் உயிர், உரிமை, மொழி, நிலம், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றை காப்பாற்ற 'தேசம், தேசியம், தன்னாட்சி' என்கிற கோட்பாட்டில் உருவானது தான் வட்டுக்கோட்டை தீர்மானம். இந்த தீர்மானத்தை  1977 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இலங்கை பொதுத்தேர்தலில் கட்சி கோட்பாடாய் (Election Platform) வைத்து  வெற்றிபெற்று அந்த தீர்மானத்தை மக்கள் ஆனையாகவும் மாற்றமும் பெற்றது. 

இதன் பின்னர் வந்த காலங்களில் வந்தவர்கள் குறிப்பாக ஈழ விடுதலை இயக்கங்கள் முதல் தமிழ் அரசியல்வாதிகள் வரை பெரும்பாலும் அந்த மக்கள் ஆணையை கிடப்பில் போட்டார்கள். அரசியல்வாதிகள் இலங்கை அரசுக்கும், விடுதலை இயக்கங்கள் இந்தியா கொடுத்த சில வசதிவாய்ப்புகளுக்கு, அற்ப பதவிகளுக்கு தங்களை பழக்கப்படுத்தி, வளப்படுதிக்கொண்டார்கள். இந்த மக்கள் ஆணைக்கு அன்றுமுதல் கொஞ்சம், கொஞ்சமாய் வடிவம் கொடுத்து, அதற்கு உயிரும் கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தேசம், தேசியம், தன்னாட்சி என்கிற கோட்பாடு தான் 'தமிழ்த்தேசியமாய்' மலர்ந்தது. அதுக்கும் ஏதேதோ காரணங்கள் சொல்லி இன்று அதை ஈழத்தில் முற்றுமுழுதாய் அழித்தாயிற்று. 

இதையெல்லாம் இன்று மீட்ட வேண்டிய அவசியம் என்னவென்று கொஞ்சமேனும் சிந்திப்பவர்களுக்கு அதற்கான காரணம் தெரியும். அது புரியாதவர்களுக்கு, 'தமிழ்த்தேசியம்' புலிகளின் கண்டுபிடிப்பு என்கிற ஓர் அறியாமையை நீக்கவே இந்தப் பதிவு. தமிழ்த்தேசியம் புலிகளோடு பிறக்கவுமில்லை. அது புலிகளோடு இறக்கவுமில்லை. அது மீண்டும் நாடு கடந்த தமிழீழ அரசாய் இன்னோர் வடிவம் கொண்டுள்ளது என்பதை புரியாதவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்தால் நல்லது. தமிழ்தேசியம் எந்த நாட்டின் இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்கப்போவதில்லை. அதன் நோக்கமும் அதுவல்ல. 

சீனாவின் இறையாண்மை பற்றி கவலைப்படாமல் இந்தியா தலாய்லாமாவின் புலம்பெயர் அரசை (Government in Exile) ஆதரிக்கிறதாம். ஈழத்தமிழர்களின் நாடுகடந்த தமிழீழ அரசை (Transnational Government) ஏன் ஆதரிக்கவில்லை என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனாலும், தமிழ்நாட்டில் ஒருவர் கேட்டார். சுப. வீரபாண்டியன் தான் அவர். அவருடைய அரசியல் நிலைப்பாடு எந்த விதத்திலும் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டிற்கு குறைந்ததல்ல! இருந்தாலும், எப்போதோ ஏதொ ஒரு பொழுதில் இந்தப் பதிவை அவர் தளத்தில் எழுதி தொலைத்துவிட்டார். 

"தலாய்லாமாவுக்கு ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதியா?" என்று கொஞ்சம் உலக நியாயத்தை பேசியிருக்கிறார். அவருடைய ஆக்கத்தின் கடைசி வரிகள், "தமிழீழ மக்களின் கோட்பாடும் நியாயமானது, அவர்களின் திறமை போதுமானது, உறுதி குலைக்கப்பட முடியாதது. எனவே, அவர்களின் வெற்றியும் நிச்சயம் என்பதை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உணர வேண்டும்." 

ஈழவிடுதலை நோக்கிய வரலாற்றின் ஓர் மைல் கல்லே நாடு கடந்த தமிழீழ அரசு.

ஒரு வேண்டுகோள் இந்த கட்டுரையில் இருக்கும் இணைப்பில் சுப. வியின் பதிவை படிக்காமல் போகாதீர்கள். ஏப்ரல் 23, 2011

சாத்வீக தமிழகம்!ஈழத்துக்கு அருகிலிருந்தும் விலகியிருக்கும் தமிழகத்துக்கு, தமிழக தமிழர்களுக்கு ஒரு சிறிய நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அண்மையில் Times இணைய கணிப்பீடான பிரபலமானவர்கள் என்கிற பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவை சேர்த்ததிற்கு உங்கள் எதிர்ப்பை தெரிவித்தமைக்கும், இன்று அவர் பெயர் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமைக்கும் நன்றிகள்.

வழமையாக புலம்பெயர் செயற்பாட்டாளர்கள்  ஊடகப் போர் சம்பந்தமான முன்னெடுப்புகளுக்கான அழுத்தங்கள் எங்களிடமிருந்துதான் வரவேண்டும் என்று சொல்வார்கள். இன்று அதில் தமிழக தமிழர்களின் விழிப்புணர்வும், செயற்பாடும் எங்கள் பாரத்தை கொஞ்சம் உங்கள் தோள்களில் இறக்கி வைத்திருக்கிறோம் என்கிற ஓர் நிம்மதியைக் கொடுக்கிறது. வரலாறு முக்கியம் மக்களே. ஊடகப்போரிலும் தமிழன் வென்றான் என்று வரலாறு படைக்க வேண்டாமோ :)

ஆனாலும், இது ஒரு தொடக்கமே. நாம் இன்னும் கடந்துசெல்லவேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கிடைக்க அங்கு நடந்தது போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் என்பதெல்லாம் சர்வதேச  குற்றவியல் சட்டதிட்டங்களுக்கு அமைய நிரூபிக்கப் பட வேண்டும். அப்போது தான் நாங்கள் இழந்ததெல்லாம் மீளக் கிடைக்காவிட்டாலும் எங்களுக்கு நீதி என்பது தடையின்றி கிடைக்கும். அதுக்கு இன்னும் எத்தனை 'பத்து' வருடங்கள் வேண்டுமானாலும் செல்லலாம். முயற்சிகள் மட்டும் தடைகளை உடைத்து தொடரவேண்டும். 

இப்போ இலங்கை ஐ. நாவின் மூன்று பேர் கொண்ட குழு அறிக்கையை பொய்யாக்க, சட்டபூர்வமற்றது என்று நிரூபிக்க தம் இனத்தையும் தூண்டிவிட்டு, திரைக்குப் பின்னாலும் காய்நகர்த்திக்கொண்டு இருக்கிறது. வழக்கம் போல் இந்தியாவின் மெளனம். இன்று நாளை என்று அறிக்கையை வெளியிட இழுத்தடிக்கும் சர்வதேச மனமகிழ் மன்றம், (நன்றி- பதிவர் தெகா) ஐ. நா. இருந்தாலும் சர்வதேச ஊடகங்களும், Inner City பிரஸ்  ஊடகமும் கேள்விமேல்  கேள்வி கேட்டு ஏன் அறிக்கையை வெளியிடவில்லை என்றால், ஏதோவொரு காரணம் சொல்கிறார் ஐ. நா. வின் பேச்சாளர். விடாக் கண்டனுக்கு கொடாக் கண்டன் என்பது போல் தொடர்கிறது இந்த இழுபறி.

அறிக்கை எப்படியும் வெளியிடப்படும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்தியாவின் மெளனம், ஐ. நாவில் ஈழப்பிரச்சனை பேசப்படும் போதெல்லாம் ரஷ்யா, சீனாவின் நேரடியான இலங்கைக்கான ஆதரவு இதுக்கெல்லாம் எப்படியாவது தமிழ்நாட்டில் ஏதாவது எதிர்ப்பு கிளம்பாதா, குறைந்த பட்சம் இந்திய அரசுக்கேனும் தங்கள் எதிர்ப்பை தமிழக தமிழர்கள் காட்டுவார்களா என்கிற ஓர் சிறிய எதிர்பார்ப்பு வழக்கம் போல் எனக்கும் உண்டு.

இப்போ உலகில் ஆங்காங்கே நடக்கும் மக்கள் கிளர்ச்சிகளை பற்றி நோம் சாம்ஸ்கி கருத்துச்சொன்னபோது ஏன் அமெரிக்காவில் இப்படி மக்கள் கிளர்ச்சி  நடக்கவில்லை என்பதற்கு மக்கள் quiet and passive ஆக இருக்கும்வரை எதுவும் மாறாது என்று குறிப்பிட்டார். அமைதியாய், சாத்வீகமாய் இருப்பதில் தப்பேயில்லை. ஆனால், உங்கள் உறவுகள் பரிதவிக்கும் போதுகூடவா அப்படி இருக்கவேண்டும்! தமிழகத்தில் தமிழர்களும் எதையும் அமைதியாய், எதிர்க்காமல், சாத்வீகமாக, சகிப்புத்தன்மையோடு இருப்பதால் தான் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக Al Jazeera ஆக செயற்படவேண்டிய கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகள் கூட ஈழத்தமிழர்களின் அவலங்களை புறக்கணிக்கின்றன. அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் சாத்வீகமாக இருந்தாலும் அவர்களின் நீர், நில, வான் எல்லைகளை தாண்டி கூட யாரும் அவர்களை நெருங்க முடியாது. தமிழக தமிழர்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் 'QUIET & PASSIVE' ஆக இருந்தால் சீனா தமிழ்நாட்டின் எல்லையில் வந்து நிற்கப் போகிறார்கள்.   

ஏப்ரல் 20, 2011

புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் - என் பார்வையில்

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க எடுக்கப்பட்ட இலங்கை அரசின் மிகப் பாரிய ராணுவ நடவடிக்கையில் இருசாராருமே சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியதாகவும், மனிதத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகவும் ஐ. நாவின் அறிக்கை சொல்கிறது என்பது தான் கடந்த ஒரு வார காலமாக என் போன்றவர்களின் கவனத்தை, கருத்தை ஈர்த்து வைத்திருக்கிறது. ஒரு விதத்தில் சர்வதேச ஊடகங்கள் கூட இது பற்றி பேசுவது அந்த அறிக்கையை முழுமையாக 196 பக்கங்களையும் வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஐ. நாவின் செயலர் பாங்கி மூனுக்கு உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் பிரித்தானியாவின் Channel 4 இன் ஈழம் குறித்த செய்திகள் பாராட்டப்பட வேண்டியவையே. 

எப்போதுமே மாற்றுக்கருத்தை தேடிப்படிப்பதில் ஓர் ஆர்வமும், சுவாரசியமும் இருப்பவர்களுக்கு இலங்கை பற்றி Brian Seniwerane, இந்தியா பற்றி அருந்ததி ராய், அமெரிக்க பற்றி Noam Chomsky போன்றோரது, பெரும்பாலும் கார்பரேட் ஊடகங்களால் வெளியே கொண்டுவரப்படாத அவர்களது காலத்தின் தேவையானதும், காலத்தால் அழியாததுமான எழுத்துகள் இந்த உலகம் பற்றிய அதன் எழுதப்படாத இயங்குவிதிகள் பற்றிய புதியதோர் பார்வையை, புரிதலை கொடுக்கும். கார்பரேட் நலன்களுக்காக பறிக்கப்படும் மனித உரிமைகள், மனித உயிர்கள் என்பவற்றுக்காய் குரல் கொடுப்பவர்கள். எந்தவொரு தத்துவத்தையோ, விதியையோ பின்பற்றாமல் அனுபவ அடிப்படையில் வாதப்பிரதிவாதமாக எழுதப்படும்  அவர்களின் எழுத்துகளிலேயே நானும் உலகத்தை படிக்க ஏதோவொரு கத்துக்குட்டித்தனமான முயற்சியில் எப்போதும் இருக்கிறேன். 

அப்படியானால், புலிகள் பற்றிய சில ஈழத்து சிட்டிசன்களின் மாற்றுக்கருத்தை ஏன் நான் ஏற்றுக்கொள்வதில்லை என்கிற கேள்வி எழலாம். தனிப்பட்ட காரணங்களுக்காக புலிகள் மீது சேறு அடிப்பவர்கள் ஐ. நா. சொன்னதைத்தானே நானும் சொன்னேன், சொல்லுவேன் என்கிற வெற்றுவீரத்தை, மேதாவித்தனத்தை நான் புறக்கணிக்கவே விரும்புகிறேன். நிச்சயமாய் சர்வதேசத்தின் புலிகள் குறித்த பார்வையே இதுபோன்ற சில மாற்றுக்கருத்து - மாற்றுத் திறனாளிகளிடமிருந்தான் உருவப்பட்டது என்பது இங்கே பலருக்கு தெரியும். 

அதனால் தான் நான் ஈழத்தில் பிறந்து இனப்பாகுபாட்டு கொள்கைகளால் பாதிக்கப்படிருக்கிறேன் என்பதை தவிர; ஈழம், புலிகள் பற்றிய என் பார்வை, கருத்து என்பது நான் மேற் குறிப்பிட்டவர்களின் எழுத்துகளை படித்து நான் என்வரையில் புரிந்துகொண்டதன் அடிப்படையிலும் எனக்குள் உருவாகிறது. மேற்சொன்ன மூவருமே புலிகள்  பற்றி அதிகம் பேசுபவர்களே கிடையாது. ஆனாலும், அவர்களின் எழுத்தில் பிறந்த தெளிவில் தான் புலிகள் பக்கமுள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. Brian Senewiratne, Noam Chomsky, அருந்ததி ராய் மூன்றுபேருமே தங்கள் நாட்டு ராணுவம் செய்த, இன்னும் செய்துகொண்டிருக்கும்  அட்டூழியங்களை விமர்சிப்பவர்கள். ஈழத்தமிழர்களின் புலிகள் பற்றிய கருத்து என்பது புலிகள் பக்கமுள்ள போராட்ட நியாயங்கள் குறித்து மட்டுமே உருவானது. இலங்கை ராணுவத்தின் கொடுமையை அனுபவித்தவர்களுக்குத் தான் புலிகள் அருமை தெரியும். தவிர, புலிகள் என்பவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்லவே. இனவாதத்தை எதிர்த்து உருவான போராட்டம் இன்று யார், யாரோ நலன்களுக்காக தாரைவார்க்கப்பட்டுவிட்டது. இன்று புலிகள், தமிழீழம் என்று பேசுவதால் அதிகம் விமர்சிக்கப்படுபவர்களாக புலம் புலம்பெயர் தமிழர்களே இருக்கிறார்கள்.

சில ஆங்கில ஊடங்கங்கள் ஐ. நா. அறிக்கையில் மேற்கோள் காட்டி புலம் பெயர் தமிழர்கள் ஐ. நாவின் அறிக்கையில் புலிகள் செய்ததாக சொல்லப்படும் போர்க்குற்றங்களை உள்வாங்கவோ ஏற்றுக்கொள்ளவோ மறுக்கிறார்கள் என்றும் தங்கள் பங்கிற்கு குறைப்பட்டுக்கொள்கிறார்கள். அது சமாதான முயற்சிகளுக்கு தடையாய், தடங்கலாய் அமையுமாம்!! வாணி ஞானகுமார் என்கிற ஈழப்பெண் ஈழத்திலிருந்து இறுதிக்கட்டப் போரின் பின் திரும்பியபின் சர்வதேச ஊடகங்களும் ஏறக்குறைய இதே கேள்வியத் தான் கேட்டு அவரை துளைத்தெடுத்தார்கள். புலிகளின் குற்றங்களை நீ பார்த்தாயா, பார்த்தாயா என்று. அதற்கு அவர் சொன்ன பதில் தனக்கு அப்படி ஏதும் அனுபவம் ஏறபடவில்லை என்பது தான். 

2009 May மாதத்திற்குப் பிறகு இலங்கையின் பாதுகாப்பு செயலர் சொன்னது, புலிகளை "வேரோடு" அழித்துவிட்டோம் என்பது தான். ஆனால் அவர்களே இன்றும் கொஞ்சம் கூட சளைக்காமல் அதற்கு மாறாகவும் சொல்லுகிறார்கள். புலிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பதெல்லாம் இப்போ இரண்டாம் பட்சம் தான். அந்த இழப்பையும் தாங்கி சுதாகரித்து ஈழத்தமிழர்கள் விடுதலையை நோக்கி எதையெதையோ முயற்சிக்கிறார்கள். கருத்துக்களால் சேர்ந்தும், பிரிந்தும், சிதறியும் கிடக்கிறார்கள்.

புலிகள் என்பவர்கள் ஈழவிடுதலை நோக்கிய ஓர் பயணத்தில் நீண்டதோர் சகாப்தம். முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்ட அந்த சகாப்தத்தோடு ஈழம் என்கிற எங்கள் அரசியல் அபிலாசையும் தீய்ந்து, தேய்ந்து போகவேண்டும் என்றால் எப்படி! புலிகளை போர்க்குற்றவாளிகள் ஆக்கினால் எங்கள் உரிமைகள் சர்வதேசத்தால் மறுக்கப்படுமா! புலிகள் குற்றம் இழைத்தவர்கள் என்று நம்பினால் தாராளமாய் விசாரித்துக்கொள்ளுங்கள் என்று தான் நான் நினைப்பதுண்டு. யாருடைய புதிய கண்டுபிடிப்பும் ஈழத்தமிழர்களுக்கு புலிகள் மேலுள்ள மதிப்பையோ இல்லையென்றால் வெறுப்பையோ கூட்டமுடியாது. வெறுப்பவர்கள் எப்போதுமே வெறுத்துக்கொண்டே தான் இருக்கப்போகிறார்கள். 

அரசியல் யாப்பு, சர்வதேச சட்டதிட்டங்கள், தார்மீக விழுமியங்கள், கூடவே எப்போதுமே கவர்ச்சியான இறையாண்மை என்கிற கருத்தியல் இதெல்லாம் பார்த்துப் பார்த்து செதுக்கித்தானே ஓர் நாடு அல்லது தேசம் என்கிற வரையறை வகுக்கப்படுகிறது. ஒரு தேசமே ஒட்டுமொத்த சிறுபான்மை தேசிய இனத்தை தொடர்ச்சியாக பழிவாங்கி, கொன்று குவிக்கிறது என்று உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிந்த பின்னும், அதை தண்டிக்கவோ, கண்டிக்கவோகூட ஐ. நா. என்கிற ஓர் வலுவான அமைப்பு திண்டாடுகிறது. 'வீட்டோ அதிகாரம்' என்கிற குரங்கின் கை பூமாலையாய் ஓர் ஆயுததத்தை வைத்து மிரட்டுபவர்களின் பின்னாலேயே ஐ. நா. செயலர் ஓடுகிறார். 

இயற்கை அழிவை உலங்கு வானூர்தியிலிருந்து அரசியல்வாதி பார்ப்பதுபோல், இலங்கை ராணுவத்தால் தமிழனுக்கு உருவாக்கப்பட்ட அழிவுகளை ஐ. நாவின் செயலரும் உலங்குவானூர்தியில் போய் பார்வையிட்டார். இழப்பு அதிகம் இல்லை என்று தனக்கு கீழே பணிபுரியும் விஜய் நம்பியாரை கொண்டே சொல்லவைத்தார். ஆனால், அது மட்டுமே  ஐ. நா. செயலர் பதவியை இன்னோர் முறை அலங்கரிக்க முடியும் என்கிற கணக்கில் இப்போ ஈழப்பிரச்சனை, அறிக்கை என்பன குறுக்கே வருகின்றன. போர்க்குற்றங்களில் விசாரிக்கப்பட வேண்டியவர் என்கிற தற்போதைய இலங்கைக்கான ஐ. நாவின் நிரந்தர பிரதி வதிவிடப் பிரதிநிதியும் முன்னாள் இலங்கை ராணுவத்தின் ஓர் கட்டளைத்தளபதியிடம் (சவேன்திரா செல்வா) அறிக்கையை கையளிக்கிறார்கள். வெள்ளைக்கொடி கொலைகள் புகழ் விஜய் நம்பியார் இன்னமும் அதே பதவியில் நிலைத்திருக்கிறார். இவர்களை யார் விசாரிப்பார்கள்?? இலங்கை அரசு சொல்லும் "Fundamentally Flawed" இவர்களுக்கு பொருந்தாதா! உங்கள் நடுநிலைமை இங்கே பல்லிளிக்கவே    இல்லையா!! 

புலிகள் அமைப்பு சர்வதேச சூழ்ச்சியால் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தப்பட்ட ஓர் விடுதலை அமைப்பு. அவர்களால் அமைக்கப்பட்ட ஓர் De Facto State, இங்கே எத்தனையோ நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை விடவும் சிறப்பாய் கட்டியமைக்கப்ட்ட ஒன்று.  அமெரிக்காவுக்குப் பிடித்துப்போனதால் தென் சூடான் விடுதலை அமைப்பு சுதந்திர தேசத்தை உருவாக்கலாம். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பிடிக்காமல் போனதால் புலிகள் மட்டுமல்ல தமிழர்கள், தமிழர்களின் தேசியம், அதற்கு கொடுக்கப்பட்ட வடிவம் கூட அழிக்கப்படலாம், சிதைக்கப்படலாம். 

புலிகள் போர்க்குற்றம் இழைத்திருந்தால் தாராளமாய் விசாரியுங்கள் என்பது தான் எனது நிலைப்பாடு. புலிகள் தான் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை சரியாய் புரிந்துகொண்டவர்கள் என புலம் பெயர் தமிழர்கள் சர்வதேசத்திடம் புலிகளை தடைசெய்யாதே என்றபோதே கேட்காதவர்கள், இப்போ மட்டும் நாங்கள் சொல்வதை கேட்கவா போகிறார்கள். நாங்கள் என்ன இலங்கை அரசு போல ஐ. நாவிடம் முழு அறிக்கையை வெளியிடாதே, எங்கள் தலையை மண்ணுக்குள் புதைக்க எங்களுக்கு கால அவகாசம் கொடு, ஐ. நாவுக்கு எதிராக மே மாதம் ஓராம் திகதியில் போராடுவோம் என்றா சொல்கிறோம். ஐ. நா. அறிக்கையை முழுதாய் வெளியிடு. போர்க்குற்றம் விசாரிக்கப்பட ஓர் சர்வதேச சுயாதீன குழுவை உருவாக்கு என்று தானே சொல்கிறோம். பிறகேன் எங்கள் மீது இன்னும் பகை. 

ஆனாலும், புலிகளை அழித்து தமிழர்களாகிய எங்களுக்கு தீர்வு சொல்லும் சர்வதேச அரசியல் சாணக்கியம் தான் விந்தையாயிருக்கிறது. இதில் International Crisis Group இன் புலம்பெயர் தமிழர்களுக்கான புலிகளின் கனவை மறவுங்கள்; ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை தேடுங்கள் என்கிற சர்வதேச அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் அறிவுரைகள். ஐ. நாவின் தீர்வுக்கான பரிந்துரைகளை கூட நடைமுறைப்படுத்துங்கள் என்று இலங்கை அரசுக்கு இவர்களால் சொல்லமுடியுமோ தெரியாது. உடனேயே இலங்கையின் இறையாண்மையில் தலையிடுகிறார்கள், அவமதிக்கிறார்கள் என்கிற வெற்றுக்கூச்சலுக்கே அமைதியாகிவிடுவார்கள். எப்படியோ, சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு உருவாக்கப்பட்டால் நன்றாக விசாரித்து, இல்லாத கற்பனைப் புலியை தூக்கில் போடுவார்களோ? புலிகள் இழைத்ததாக சொல்லப்படும் போர்க்குற்றங்களை  ஏன் புலத்தில் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதற்கு ஓர் தமிழ்நாட்டு தமிழர் சொன்ன விளக்கம் தமிழ் நெட்டில். 

"......Diaspora's refusal to accept the crimes of the LTTE is another point cited in the panel report as hindrance to peace. When was the diaspora provided with an opportunity to assess the politics of its nation in an environment free from unjustifiable support to state terrorism?.." 


ஏப்ரல் 18, 2011

இலங்கை போர்க்குற்றங்களும் இந்தியாவும்...! ஜோதிஜி - Gorden Weiss

எந்த செய்தி தளத்தில் கண் பதித்தாலும் தென்படுவது இலங்கை குறித்த ஐ. நா. வின் மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையும் அது குறித்த ஆய்வுகளுமே. இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், ஈழத் தமிழர்கள் மீது என்ன அவ்வளவு அக்கறையா என்று தலையை உடைத்துக்கொண்டிருந்தேன். அதைத் தவிர்த்துவிட்டு தாண்டிப்போகவும் முடியவில்லை. முழுமையான அறிக்கை வெளியிடப்படாத வகையில் எல்லா ஊடகங்களும் இலங்கையின் Island பத்திரிகை வெளியிட்ட பகுதியின் விகுதியை வைத்தே கல்லாக் கட்டுகிறார்கள். புலிகள் மீதான போர்க்குற்றங்கள் என ஊடகங்கள் விமர்சிக்கும் போது, எனக்கு Noam Chomsky வியட்னாம் குறித்து எழுதிய அமெரிக்க ஊடகங்களின் "Manufacturing Content" தான் நினைவுக்கு வருகிறது. 

எப்படியோ, இந்த அறிக்கை உலகில் ஓர் முக்கியமான காலகட்டத்தில் வந்திருப்பதாக ஊடகங்கள் முதல் சர்வதேச சட்ட வல்லுனரான Francis Boyle வரை குறிப்பிடுகிறார்கள். லிபியாவின் தலைவர் கடாபி மீதான விசாரணைகளை மேற்கொள்ள தற்போது ஐ. நா. வின் மனித உரிமைகள் அமைப்பின் மூலம் ஓர் சர்வதேச குழு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்ட வரைவுகளுக்கு இணங்க அமைக்கப்பட்டிருக்கிறதாம். ( ஒரு விதத்தில் பார்த்தால் லிபியாவின் கடாபி மீதான விமர்சனங்கள் மற்றும் சர்வதேசத்தின் செயற்பாடுகள், இவைதான் இலங்கை பக்கமும் அதன் அதிபர் மீதும் சர்வதேசத்தின் பார்வை திரும்ப காரணமோ என்று யோசிக்க வைக்கும் அளவில் இருக்கிறது. இருந்தாலும் கூடவே, Brian Senewiratne சொன்ன, "Libiyan's oil is thicker than Tamils' Blood" என்பதும் கசப்பான ஓர் உண்மை. 

இலங்கை மீதான போர்குற்ற விசாரணைகள் நடைபெற ஏதுவான எல்லா காரணிகளும் வலுவாக இருப்பதாக தற்போது பொதுவாக கருதப்படுகிறது. லிபியா விடயத்தில் சர்வதேசமும் ஒரே அணியில் இருப்பதால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வரையறைகளுக்கு உட்பட்டு மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கூடவே இலங்கை விடயத்தில் அப்படி ஒரு விசாரணை மேற்கொள்ளப்படுவது நிறையவே சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகிறார்கள். 

காரணம், எல்லோராலும் ஊகிக்க முடிந்தது தான். இந்தியா, இந்தியா, இந்தியா.....! இந்தியாவோடு கூடவே சீனா, ரஷ்யாவும் உண்டு. அதாவது ஆசியாவின் மிகப்பெரிய வல்லரசுக் கனவோடு போட்டி போடுபவர்கள் கூட ஈழத்தமிழன் விடயத்தில் எப்படி ஒன்றாய் ஒரே அணியில் எதிர்க்கிறார்கள்!!! இது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்காவின் "Strategic Interest" ஆகிப்போன இலங்கையைச் சுற்றியுள்ள கடல் தான். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதை நிச்சயமாய் இந்தியா, சீனா, ரஷ்யா எதிர்க்கும் என்பது முடிவான உண்மை. மனித உரிமை சபையில் இவர்கள் எல்லோரும் ஒரே அணியில் அப்போதே வாக்களிந்திருந்தால், இன்று இந்த ஐ. நா. வின் அறிக்கை என்கிற ஒன்றே இல்லாமல் போயிருக்குமோ!  

இலங்கைப் போர்க்குற்றங்கள் என்கிற பேச்சு வரும்போது இந்தியாவின் பங்கு குறித்த கேள்விகளும் இயல்பாகவே அப்பாவி ஈழத்தமிழன் முதல் சர்வதேசம் வரை தோன்றாமல் இல்லை. இந்த அறிக்கை குறித்த அமளிதுமளியில் சிலரது கருத்துகளை இங்கே இணைக்கிறேன். 

முதலில் ஜோதிஜி சொன்னது,  என்னுடைய முள்ளிவாய்க்காலும் சர்வதேசமும் பதிவிலிருந்து 

//இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும்//


வாய்ப்பேயில்லை. காரணம் இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த நாடும் இந்தியாவை பகைத்துக் கொள்ள பைத்தியமா பிடித்திருக்கு. உள்ளே வந்தால் என்ன வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று உருவாக்கியுள்ள அமைப்பின் படி உள்ள இந்திய ஜனநாயகத்தை யாராவது கெடுத்துக் கொள்வார்களா? குறிப்பா அமெரிக்கா?//


அடுத்து என் முந்தைய முள்ளிவாய்க்காலும் சர்வதேசமும் என்கிற பதிவு 'யாழ் களத்தில்' இருப்பதை என் புள்ளிவிவரப் பட்டியிலில் இருந்து தெரிந்துகொண்டேன். அங்கே யாழ் கள உறவு சொன்ன ஓர் கருத்து, 

//கோமகன், இந்தியா கட்டாயம் விசாரிக்கப் பட வேண்டும். இல்லாதவிடத்து, இலங்கையைப் போர்க்குற்றவாளியாக்க இந்தியா ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன்,நம்பியார் ஆகியோர் தனிப்பட்ட முறையிலாவது விசாரிக்கப் படவேண்டும்.இரசாயனத் தாக்குதல் பற்றிய உண்மைகள் வெளியுலகத்துக் தெரியவேண்டும். அம்பதினாயிரம் + உயிர்கள் பறிக்கப் பட்ட உண்மையும்,அதில் இந்தியாவின் தார்மீகப் பொறுப்பின்மையும் உலகத்திற்குத் தெளிவாகத் தெரியப் படுத்தப் பட வேண்டும்.தண்டனைகளைப் பற்றி நாம் அவ்வளவு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.ஆனால் உண்மைகள் வெளிக்கொணரப் பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இருக்க முடியாது!!!//

இறுதியாக ஐ. நாவின் முன்னாள் பேச்சாளர் Gordon Weiss ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு வழங்கிய பெட்டியில் சொன்னது,

//This is going to make it very difficult for the UN not to take action. It's going to make it very difficult for any member of the United Nations, and in particular, I'm thinking of India, China, Russia to obscure or obstruct a serious and credible international investigation into what happened in the tail end of this long civil war//

http://www.radioaustralia.net.au/connectasia/stories/201104/s3194620.htm

ஆக மொத்தத்தில் இந்தியா ஏதோவொரு வகையில் வகை தொகையின்றி அழிக்கப்பட்ட ஈழத்தமிழனுக்கு சர்வதேசத்தின் மூலம் நீதி கிடைக்க குறுக்கே நிற்கும் என்பதில் யாருக்கும், சாதாரண பொதுமகன் முதல் Gordon Weiss வரை சந்தேகமே இல்லை. 

சோனியா காந்தி, நாராயணன், சிவ சங்கர் மேனன், பிரணாப் முகர்ஜி, விஜய் நம்பியார், சிதம்பரம், கருணாநிதி உட்ப்பட்ட  அனைத்து இந்தியர்களுக்கும் எங்கள் நன்றிகள் பல :(((
ஏப்ரல் 16, 2011

முள்ளிவாய்க்காலும் சர்வதேசமும்!

அண்மைக்காலங்களில் நிறையவே உள்ளூர் உலக அரசியல் மாற்றங்கள் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாததாய் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. மீண்டுமொரு உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சி, சர்வாதிகார ஆட்சி கவிழ்ப்பு, ஜனநாயகத்தேர்தல்கள் என்று அநேகமான நாடுகளில் என்னென்னவோ நெருக்கடிகள். எல்லாமே ஏதோவொரு மாற்றத்தை, தீர்வை, விடிவை நோக்கிய நகர்வுகளாய் நிறையவே எதிர்பார்ப்புகளோடு. எல்லோருக்கும் எங்கேயோ இருந்து ஓர் வலுவான ஆதரவும், அதன் முடிவு நோக்கிய பயணமும் தொடர்கிறது. ஈழத்தமிழர்களுக்கும் ஓர் முக்கிய நிகழ்வாக கடந்த 2009 May மாதம் இடம்பெற்றதாக கருத்தப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கி-மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த வருடம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும், ஈழத்தின் இறுதியுத்த இழப்புகளும் ஐ. நாவின் பான் - கி- மூன் அமைத்த மூன்று பேர் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட ஈழம் தொடர்பான அறிக்கை மூலம் நீதியைப் பெறுமா என்கிற எதிர்பார்ப்புகளோடு! இந்த குழு குறித்த புரிதல்களும், குழப்பங்களுமே ஆரம்பத்தில் விவாதத்திற்கு உள்ளாகியது. இந்தக் குழு போர்க்குற்றங்களை விசாரிக்க அமைக்கப்படவில்லை என்கிற அரிய, பெரிய உண்மையை வழக்கம் போல் இலங்கையின் இறையாண்மையை கட்டிக்காக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் கண்டுபிடித்து சொன்னார்கள். 
இது May 2009 ஐ. நாவின் செயலர் இலங்கைக்கு சென்றபோது ராஜபக்க்ஷேவுடன் பேசியதன் பிரகாரமே உருவாக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட குழு ஈழத்தின் இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டனவா, மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டனவா என்றும்; அப்படியானால், அது குறித்த இவர்களின் தீர்வுக்குரிய ஆலோசனைகளும் என்ன என்பது தான்.

முன்னாள், ஐ. நாவின் பேச்சாளர் Gordon Weiss ஓய்வுபெற்றபின் இலங்கையின் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இலங்கை அரசு குறித்து சொன்னதை நாங்கள் மறக்கவில்லை. அறிக்கை தயாரித்து ஐ. நா. செயலரிடம் சமர்ப்பித்தாகிவ்ட்டது.  இனி அவர் அதை பகிரங்கப்படுத்துவாரா என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கிறது. மூன்று பேர் கொண்ட குழுவை எந்த காரணம் கொண்டும் இலங்கைக்குள் எந்தவொரு விசாரணை செய்யவும் அனுமதிக்கமாட்டோம்; இந்த குழு சட்டாபூர்வமானதால என்றெல்லாம் சொல்லிவிட்டு; அமெரிக்காவில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்த குழுவை ஐ. நாவின் அரசியல் விவகாரங்களுக்கான Lyn Pascoe வின் ஏற்பாட்டில் பான்- கி- மூன் சம்மதத்துடன் இரகசியமாக சந்தித்ததாக Sunday Times பத்திரிகை சொல்கிறது. அந்த இரசிய சந்திப்பு வெளிப்பட்டு சிரிப்பாய் சிரித்தது தனிக்கதை. இப்போ, ஐ. நா. இலங்கையிடம் சமர்ப்பித்த இந்த அறிக்கையை இலங்கை அரசு பக்கச்சார்பானது, "Fundamentally Flawed" என்றும் விமர்சிக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவான Island பத்திரிகையில் அந்த அறிக்கை குறித்த சில விடயங்கள் கசிந்திருப்பதாக தெரிகிறது. ஆனால், Island பத்திரிகையில் பகுதியாக வெளிவந்த அறிக்கைப்படி இலங்கை அரச படைகளின் குற்றங்களோடு, புலிகள் பற்றிய குற்றங்களும், ஐ. நா. மக்களை காப்பாற்ற தவறி விட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இனி அது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு இட்டுச்செல்லுமா என்கிற எத்தனையோ கேள்விகள் இன்னும் மிச்சமிருக்கிறது. 

இதற்கிடையே அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிளேக், லிபியாவின் கடாபியை கண்டித்த கையோடு இலங்கையையும் போகிற போக்கில் கண்டித்து வைத்தார். இவர் அகம், புறமாக கண்டித்ததோடு நில்லாமல் அமெரிக்காவின் 'Strategic Interest' இலங்கை என்பதை வெளிப்படையாகவே சொல்லியும் விட்டார். இதை பல பத்திரிகைகள், ஆய்வாளர்கள் விமர்சித்து தீர்த்துவிட்டார்கள்.  கூடவே புலத்தில் உலக தமிழர் பேரவை தலைவரையும் சந்தித்திதார், பேசினார். இலங்கை இதற்காக கோபப்பட பிறகு Island பத்திரிகையில் கொஞ்சம் சமாதானப்படுத்தவும் முயன்றிருக்கிறார். ஒரே இலங்கைக்கும் அமைதியும், சமாதானமுமான தீர்வு என்கிறார். ஒரே இலங்கை  இருக்கும், தமிழர்களுக்கு அமைதியும், சமாதானமும் இருக்குமா! இன்றுவரை ஈழத்தமிழர்கள் தங்களுக்குரிய தீர்வாக தனி ஈழம் ஒன்றையே இறுதித் தீர்வாக கருதுகிறார்கள். அது எங்கேயோ காற்றில் இருந்து வருவிக்கப்பட்டதல்ல. மக்கள் ஆணையாக வழங்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமே  புலிகளால் Defacto State ஆக வடிவம் கொடுக்கப்பட்டது. இன்று அதுவே நாடு கடந்த தமிழீழம் ஆகவும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் வடிவம் மாற்றம் பெற்றிருக்கிறது. காலமும், வடிவமும் மாறினாலும் எங்கள் இலக்கு எப்போதுமே ஈழம் தான் என்பதை ஆணித்தரமாக சொல்லவேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு. எங்கள் காலத்தில் இல்லை என்றாலும் அடுத்த சந்ததி அந்த லட்சியத்தை தொடர வேண்டும், தமிழனுக்கு ஈழத்தில் சுதந்திரம் கிடைக்கும் வரை. 

வருகிற மே மாதம் பத்தொன்பதுக்கு முன் பான்-கி-மூன் முதல் பிளேக் வரை எல்லோருமே ஏதோவொரு நிகழ்ச்சிநிரலோடு பேசுவார்கள். பான்-கி-மூனுக்கு இந்த வருட முடிவோடு பதவிக்காலம் முடிய இருக்கிறதாம். மீண்டும் பதவியில் தொடர எதையாவது சாதிக்க நினைத்து ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கு நியாயம் கிடைக்க ஏதாவது செய்வாரா? ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிற போதிலும் இன்னும் அவர்களின் மரணத்திற்கு நீதியோ, நியாயமோ கிடைக்காத நிலையில் எல்லோருமே எதையோ செய்ய முனைவது போல் ஓர் தோற்றப்பாட்டை உருவாக்கிகொண்டிருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. 

என்னுடைய மனதில் தோன்றும் கேள்விகள் ஈழத்தில் போர் மூழ, புலிகள் அழிய அதிக ஆதரவை வழங்கிய இந்தியா, அமெரிக்காவின் நிலைப்பாடு இந்த அறிக்கை குறித்து என்னவாக இருக்கும். ராஜபக்க்ஷேவை அவரது இனவாதத்தை ஊட்டி, ஊட்டி வளர்த்தவர்கள் இந்த இருசாராரும் தானே. இனி ஈழம் குறித்த அவர்கள் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும். ஒருவேளை போர்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் இந்தியாவும் இனப்படுகொலைக்குத் துணை போனதுக்கு விசாரிக்கப்படுமா????  இந்தியா விசாரிக்கப்படுகிறதோ இல்லையோ ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்கை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. 

ஏப்ரல் 11, 2011

'பயணம்' - ஒரு விமர்சனப்பார்வை

அருந்தி ராய், தீபா மேத்தா, அபர்ணா சென் இவர்கள் போன்ற இந்தியப் பெண்களைப் பற்றி, அவர்களின் இந்திய அரசியல், பொருளாதார, சமூக, களங்கள் குறித்த எழுத்தும் விமர்சனப்பார்வையும் என்னை நிறையவே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. கூடவே, இந்திய ஆண்களைவிட இந்தப் பெண்களுக்கு துணிச்சல் அதிகம் என்றும் நினைக்கவைத்தவர்கள். அருந்ததி ராயை அறியாத இந்தியர்கள் இருந்தால் ஆச்சர்யப்படுவேன். தீபா மேத்தா இந்திய சமூக கட்டமைப்பு அதுசார்ந்த தனிமனித பாதிப்புகள் குறித்த அதிரடியான படைப்புகளால் (Fire, Water, Earth etc.) உலக சினிமாவில் அறியப்பட்டவர். அபர்ணா சென், இவர் குஜராத் படுகொலைகள் குறித்து உருவாக்கிய Mr. & Mrs. Iyer திரைப்படம் கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்று. ஆனாலும், இந்து பத்திரிக்கை விமர்சனப்படி இந்தக்கதை அபர்ணா சென் குஜராத் படுகொலைகளுக்கு முன்னமே எழுதியது!!! அண்மையில் நான் 'பயணம்' திரைப்படம் பார்த்தபோது இந்த மூன்று இந்தியப் பெண்களும் என் நினைவில் வந்து போனார்கள். 

பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றாலே பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் என்கிற அளவுக்கு எங்களை நினைக்கவைத்த பெருமை அவர்களையே சாரும். அந்த வகையில் இந்த திரைப்படத்திலும் அந்த வரையறைகளை தாண்டி சிந்திக்காத வகையில் மசாலா நிறைந்ததாக எனக்கு தெரிகிறது. இருந்தாலும், அதையும் தாண்டி என்னை நிறையவே சிந்திக்கவும் வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஒரு விமானத்தினுள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட நூற்றிச் சொச்சப்பேரின் உயிர் பற்றிய கதை அல்ல, அவர்களை காப்பற்ற உருவாக்கப்பட்ட அந்த mission ஐ வெற்றிகரமாக நிகழ்த்திய ஒருசில கதாபாத்திரங்களின் சாகச கதை. சும்மா, ஒரு சுவாரஸ்யத்திற்கு கொஞ்சம் சமூகம், அரசியலை தூவியிருக்கிறார்கள். 

விமானப் பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருப்பவர்களின் கோரிக்கை இந்திய அரசால் தீவிரவாதியாக கருதப்பட்டு, அடைத்துவைக்கப்படவரின் விடுதலை. கதையின் பிரகாரம் அவர் காஸ்மீர் தீவிரவாதி என்பது என் புரிதல். விமானத்தை கடத்தியவர்களும் காஸ்மீர் தீவிரவாதிகளாம்! என் புரிதல் தவறென்றால் யாராவது விளக்குங்கள். 

முதலில் என்னை குழப்பிய விடயம், ஒரு மத்திய அமைச்சர், பிரபல சினிமா நடிகர் போன்ற வசதியானவர்கள் கூட சாதாரண பொதுசனங்கள் பயணிக்கும் வகுப்பில் விமானத்தில் பயணிப்பது தான். அதிலும் யாருக்குப் பக்கத்தில் யாரை உட்கார வைப்பது என்பதில் இயக்குனர் மிகவும் கவனமாய் இருந்திருக்கிறார். இளம் பெண்ணுக்குப் பக்கத்தில் ஓர் இளம் மருத்துவர். இவர்களுக்கு பக்கத்தில் ஓர் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி. பிரபல நடிகர் பக்கம் ஓர் தீவிர விசிறி. இதிலெல்லாம் கவனம் செலுத்தியவர் அவரின் புத்திசாலித்தனத்தை நிரூபிப்பது, காந்தியையும் கார்ல் மார்க்சையும் படித்தவரை மத்திய மந்திரிக்கு பக்கம் அமர்த்தாமல் வாஸு சாஸ்திரம் பார்ப்பவரின் பக்கம் உட்கார வைத்தது தான். ஒருவேளை மத்திய மந்திரிக்குப் பக்கம் காந்தியையும் கார்ல்மார்க்சையும்  படித்தவரை அமர்த்தி இவர்களின் ஆட்சி அமைப்பு, அதிகாரம் பற்றி மார்க்கசியப் பார்வையில் விவாதித்தால் பொதுசனம் திரைப்படம் பார்க்காது என்று நினைத்திருப்பார்களோ! அதானே, பிறகு பொதுசனத்துக்கு அறிவு கூர்மையாகிவிட்டால் அரசியலும், சினிமாவும் எப்படி கடை விரிப்பது. 

போதைக்கு அடிமையானவரையும் காந்தியம், மார்க்சியம் படித்தவரையும் விமானத்தை கடத்தியவர்கள் சுட்ட போது ஒரு விடயம் தெளிவாகிறது. இந்த இரண்டு சாராருக்கும் இடையே வாழ்பவர்கள் தான் இந்த சமூகத்தில் அதிகம் வாழ்கிறோம். அதிக போதையும் கூடாது, மார்க்சியமும் கூடாது. தேசத்துக்காகவும் தேசியத்திற்காகவும் உழை, செத்துபோ, அவ்வளவு தான். மாற்று சிந்தனையை, கேள்விகளை தூக்கி தூரப்போடு. 

சரி, உரையாடல்களை கவனித்தால் ஒரு இடத்தில் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி விமானத்தை கடத்தியவரிடம் கேட்பார், நீங்கள் பெட்ரோலுக்கு சண்டை போடுவதெல்லாம் 'புனிதப் போரா' என்று. நான் மறுபடியும் குழம்பிப்போனேன். இவர் ஏன் இதை காஸ்மீர் விடுதலையை விரும்பும் ஒருவரிடம் கேட்கிறார் என்று. திரையில் 'Operation Karuda' விற்கு கொடுத்த முக்கியத்தில் ஒரு சிறிய பங்கேனும் காஸ்மீர் பிரச்சனையின் உண்மையான பக்கத்தை மக்கள் அவலத்தை, காஸ்மீர் பற்றிய இந்தியக்கொள்கையை ஓரிரு காட்சிகளிலேனும் காட்டியிருக்கலாமோ!! 

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய ஊடக செய்திகளுக்கும், அருந்ததி ராய் போன்றோரின் அரசியல் கண்ணோட்டத்திற்கும் இடையே உள்ள இடைவெளிகளில் தான் உண்மை ஒளிந்திருக்கிறது என்பது என் புரிதல். இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம், PTA; இந்தியாவின் POTA இரண்டும் காவு வாங்கிய, இன்னும் வாங்கிக்கொண்டிருக்கும் உயிர்ப் பலிகள், காணாமற்போதல், எப்போது பயம் மட்டுமே சூழ்ந்திருக்கும் வாழ்க்கை இதையெல்லாம் எந்த சினிமாவும் சொல்லப்போவதில்லை. அது சரி, இந்தியா என்ன அமெரிக்காவா! ராதாமோகன் என்ன Michael Moore ஆவென நினைத்து என்னைநானே சமாதானப்படுத்திக்கொண்டேன். இருந்தாலும், பிரபல நடிகரின் பஞ்சு டயலாக்கை, வீரத்தை குத்திக்காட்டும் ரசிகனின் பொதுப்புத்தியை ரசித்தேன். 

இறுதியாக இந்திய மத்திய அரசில் இருக்கும் அதிகாரிகளுக்கும் துடிப்பான எப்போதுமே துணிகரமாக எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற இளையதலைமுறைக்கும் இடையேயான உரையாடல்கள் அதிக சுவாரஸ்யமில்லை. வழக்கமான தேர்தல், கட்சி அரசியலைப் பிரதிபலிக்கிறது. மத்தியில் இருக்கும் அரசின் கொள்கைகள் பற்றியே அதிகம் கவலைப்படும் மூத்த அதிகாரிகள், மாநில அளவில் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரம் அதிகமில்லாத அதிகாரிகள், இதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டாமல் எதையும் Adventure ஆக நினைக்கும் ஆயுதம் தாங்கி செயற்படும் படைகள், இவர்களின் இயல்புகள் ஆங்காங்கே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தவிர, கொஞ்சம் Journalism பற்றிய பொறுப்பான, பொறுப்பற்ற ஊடகப்பார்வையும் உண்டு. 

தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற போது தங்கள் தவறுகளை திடீரென உணர்ந்து மனம் வருந்தும் சாமானியர்களும் உண்டு. ஆனால், தங்கள் உயிரின் பதைப்பு தானே தன் சொந்தாநாட்டில் இன்னோர் மூலையில் வாழும் காஷ்மீரிகளுக்கும் இருக்கும் என்பதை அந்த சாமானியர்கள் மூலமாக உணர்த்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதே போலவே, விமானத்தை கடத்தியவர்களும் ஒரு பெண்ணிடம் அவரின் புகைப்பழக்கம் பற்றிய விவாதத்தில் 'அறம்' (Moral) பற்றி பாடம் எடுக்கும் போது நினைத்தேன், இந்த அறத்தை மத்தியகிழக்கு நாடுகளில் இருக்கும் சில எஜமானர்கள் கடைப்பிடித்திருந்தால் அங்கே வேலை தேடிப்போன பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்க வேண்டாமென!

கடைசி காட்சியில் தான் இறந்துகிடப்பவர்களின் பெயர்களை காட்டுகிறார்களாம், ஏன்? அவர்களுக்கு இன்னோர் மதத்தை சேர்ந்தவர் பிரார்த்திக்கிறார். முடிவை பார்ப்பவர்களின் தீர்மானத்திற்கே விடுகிறார்களோ!!!  


ஏப்ரல் 05, 2011

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இங்கே கனடாவிலும் எங்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களை கேட்டு காதால் ரத்தம் வடியாத குறை தான். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் என்றால் எங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல். ஆனால், நாங்கள் எல்லோருமே ஜனநாயக தேர்தல் victims என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. 

அது ஒருபுறமிருக்க ஒரு சில நாட்களுக்கு முன் சீமானின் தேர்தல் பிரச்சாரப் பேச்சு ஒன்றை பார்க்கவும், கேட்கவும் நேர்ந்தது. அட! சீமானா இது என்று ஆச்சர்யப்பட்டேன். எப்போதுமே பேச்சில் சீறி வெடிக்கும் சீமானைத் தான் பார்த்திருக்கிறேன். நிறையவே அமைதியாயும், நகைச்சுவையாகவும் பேசினார். தமிழக சட்டசபைத்தேர்தலில் ஏன் காங்கிரஸ் என்கிற இந்திய தேசிய கட்சியை தமிழ்நாட்டில் "ஆதரிக்கக் கூடாது, விரட்டவேண்டும், ஒழித்துக்கட்டவேண்டும்" என்று அவர் வார்த்தைகளில், அவரது பாணியில் விளக்கினார். பதிவுலகைப் பார்த்தாலும் தமிழக தமிழர்கள் இந்த தேர்தலைப் பொறுத்தவரை தெளிவாய் இருப்பதாய் தோன்றுகிறது, காங்கிரஸ் விடயத்தில். 

அப்படியே கனடாவுக்கு வந்தால், இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தல் ஈழத்தமிழர்களுக்கும் தேசிய நீரோட்டத்தில் கொஞ்சம் அரசியல் சாரலில் நனையவும், அதே நேரம் கொஞ்சம் உதறவும் வைக்கிறது. நான் கவனித்த வரையில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள் கூட இப்போ பெரும்பான்மை அரசு அமைக்க திணறிக்கொண்டிருக்கின்றன, உ-ம்: கனடா, பிரித்தானியாவின் கடந்த தேர்தல், இந்தியாவின் இப்போதைக்கு முந்திய ஆட்சி. 

இந்த நெருக்கடியான அரசியல் மாற்றங்களில் கனடாவின் தேசிய அரசியல் கட்சிகள் (இங்கே எல்லாமே தேசிய கட்சிகள் தான்) எங்களைப்போன்ற சிறுபான்மையினரின் (Visible Minority) ஆதரவு என்பது தவிர்க்க முடியாதது என்பதை யதார்த்த பூர்வமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே என்னவோ கனடாவின் பிரதான கட்சிகளில் எம்மவர்களும் சிலர் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 

தேர்தல் அரசியலில் என்னைப் போன்றவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது இல்லை என்கிற வரையறை தாண்டித்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இப்போது அது இரண்டாம் பட்சமாகவே தோன்றுகிறது. பொதுவாக இங்கே வேற்று சமூகத்தினர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் அது அவரின் தனிப்பட்ட முன்னேற்றம் சார்ந்த அல்லது இங்கே வாழும் அவர்கள் சமூகம் சார்ந்த நலன்களை மட்டுமே கவனத்திற் கொள்வார்கள். ஈழத்தமிழர்களுக்கு எழுதப்பட்ட விதியோ என்னவோ எப்போதுமே நாங்கள் வாழும் நாடுகளில் எங்கள் அரசியல் முன்னெடுப்புகள் தாய்மண்ணில் இருப்பவர்களுக்கு ஏதாவதொரு சிறிய விடுதலையையேனும் கொண்டுவராதா என்பதை தான் முதற்கண் யோசிக்க வேண்டியுள்ளது. 

அதிலேயும் ஓர் சிக்கல் என்னவென்றால், தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் மரபுக்கட்சி (Conservative Party) எம்மவர்கள் அண்மையில் கனடாவுக்கு வந்த அகதிக்கப்பலையே (MV Sun Sea) தேர்தல் பிரச்சாரத்தில் ஓர் விளம்பரத்தில் பயன்படுத்தி எதிர்க்கட்சியை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்த விளம்பரத்தில் கப்பலில் வந்தவர்கள் "Criminals" என்கிற வார்த்தைப் பிரயோகத்தாலும், எதிர்க்கட்சி ஆட்சி (Liberal) அமைத்தால் அது அவர்களின் "Soft on Crimes"/"Dangerously Soft on Crime" என்கிற கொள்கையையாகவும் அமையும் என்று விமர்சிக்கிறார்கள். காரணம், இந்த கப்பலில் வந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டதை Liberal கட்சி எதிர்த்து விமர்சனம் செய்தது தான். இந்த விடயத்தில் மரபுக்கட்சி சார்ந்து போட்டியிடும் ஈழத்தமிழரை தவறாக புரிந்துகொள்ளப்படும் சந்தர்ப்பமும் உண்டு. ஆனாலும், எனக்கு என்ன தோன்றியதென்றால் இந்த அரசியல் சதுரங்கத்தில் நாங்களே கருவியாயும், பாதிக்கப்பட்டவர்களாயும் ஆனோம் என்பது தான். புலம் பெயர் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சிரித்துக்கொண்டே மழுப்ப நினைத்தாலும், எங்கேயோ அடிமனதில் சுருக்கென்று அது வலிக்காமல் இல்லை.

அந்த அகதிக்கப்பல் கனடாவுக்குள் வந்த நாள் முதலே அதை பெரும்பான்மையான கனேடியர்கள் வெறுப்போடும், தங்களுக்கு கிடைக்கவேண்டியத்தை இவர்கள் அபகரிக்க வந்தவர்கள் என்பதைப் போல் தான் நோக்குகிறார்கள் என்பதை கனேடிய தேசிய மைய ஊடகங்களில் வந்த பொதுமக்களின் கருத்துகளே crystal clear ஆக விளக்கின. அப்படி வந்தவர்களையும் அவ்வளவு சுலபமாக நாட்டுக்குள் நுழைய கனேடிய சட்ட திட்டங்கள் அனுமதிப்பதில்லை. இன்றுவரை சிலர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கனடாவின் ஜனநாயக விழுமியங்களில் நான் நம்பிக்கை இழந்துபோகும் விடயங்களில் இதுவும் ஒன்று. 

இது தவிர பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே Health Care, Fighters Jet கொள்வனவு, குடும்பம் மற்றும் முதியோர் நலன்சார்ந்த கொள்கைகள் அதற்கான நிதி ஒதுக்கீடு, மாணவர்களின் கடன்கள் இவற்றை சொல்லியே ஒருவரை தேர்தல் பிரச்சாரத்தில் முழக்கிக்கொன்டிருக்கிறார்கள். நாங்கள் மட்டும் ஆட்சி அமைத்தால் நாடும் மக்களும் சுபீட்சம் பெறுவார்கள் என்கிற அதே பழைய அரசியல் பல்லவி தான். 

இங்கே நான் சொல்ல வருவது என்னவென்றால், கனடா போன்ற ஓர் நாட்டில் எம்மவர்களின் அரசியல் பிரவேசம் தவிர்க்கமுடியாதது. அது காலத்தின் தேவையும் கூட. எம்மவர்கள் எந்தக் கட்சியை சார்ந்து போட்டியிட்டாலும் அவர்களை வெல்ல வைக்கவேண்டியது எங்களின் தேவையும் கூட. ஈழம் தொடர்பான அரசியல் முன்னெடுப்புகளுக்கு இவ்வாறான அரசியல் பிரவேசம் இன்றியமையாதது என்பது என் கருத்து. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரும்பான்மை கனேடியர்களின் விருப்பு, வெறுப்பு, தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது யதார்த்த அரசியல். ஆனாலும், எங்களுக்கும் எங்கள் ஈழம் சார்ந்த விடயங்களில் சர்வதேச அரசியலில் கவனத்தை ஈர்க்க, கனேடியர்களுக்கு எங்களின் உண்மை நிலையை புரிய வைக்க எம்மவர்கள் அரசியல் தேர்தல் களத்தில் வெற்றி பெறவேண்டும். தேசிய நீரோட்டத்தில் பங்கெடுப்பது என்பது தேர்தலில் தமிழர்களின் வாக்களிப்பு வீதத்தையும் வைத்தே கணிப்பிடப்படுகிறது. 

நான் இந்த முறை என் தனிப்பட்ட கருத்து, விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்போகிறேன்.