மார்ச் 24, 2011

நிலைமாற்றங்கள் - Transitions

வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரி, ஒரே நிகழ்ச்சிநிரலுடன் நகர்வதும் உண்டு. நாம் விரும்பும் அல்லது விரும்பாத மாற்றங்கள் வாழ்வில் நிகழ்வதும் உண்டு. எத்தனையோ பேர் வாழ்க்கையில் மாற்றங்களை அவர்களாகவே விரும்பி உருவாக்கிக்கொள்வார்கள். என்னைப்போன்றோர் மாற்றங்களை நினைத்தமாதிரமே தங்களை சுருக்கிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். நான் விரும்பிய அல்லது எதிர்பார்த்த ஓர் மாற்றம் நிகழ்ந்தால் சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன். மாறாக, எதிர்பாராத அல்லது விரும்பாத மாற்றம் என்றால் நிறைய யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். பிறகு, கொஞ்சம், கொஞ்சமாக மாற்றத்தை ஏற்றுக்கொள்வதன் படிநிலைகளை யோசிக்கத்தொடங்கி விடுவேன். புறநிலை காரணிகளுக்கு ஏற்ப மனதையும், வாழ்க்கையும் சமப்படுத்த வேண்டும் என்று அறிவு சொல்லும்.  

மாற்றம் அல்லது Transition என்பது வேலைமாற்றம் அல்லது அது சம்பந்தமானது, இடப்பெயர்வு, ஓர் உறவின் வரவு அல்லது இழப்பு, பணம் சம்பந்தமான வரவு, செலவு, அதனோடு இணைந்த வாழ்வு என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், மனமும் உடலும் தான் அதன் மாற்றங்களை உணரும், உணர்த்தும் கருவிகள். முதலில் உணர்வுகளே அணிவகுத்து மாற்றத்திற்கான காரணங்களை மறைத்து நிற்கும். மாற்றம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள், கோபம், பயம், எரிச்சல், சோர்வு, கவலை என்று மனிதர்களை ஆட்கொள்ளும். இப்படியான நேரங்களில் தான் எங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிலநேரம் எங்கள் அசட்டுத்தனமான உணர்வுகளுக்கு பலியாவதுண்டு, Scapegoat! இந்த சமயங்களில் யாரையாவது திட்டியோ அல்லது அவர்கள் மீது எரிச்சல் படவோ செய்வோம். ஆனாலும், பாவம் பல சமயங்களில் அவர்களுக்கு நாங்கள் எதற்காக கோபப்படுகிறோம் என்பது கூடத் தெரியாமல் இருக்கலாம். எங்களை நன்கு அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்றால் ஒரு கணம் யோசித்து எங்களை பழைய நிலைக்கு கொண்டுவருவார்கள். வழக்கமாக நீ இப்படி நடந்துகொள்வது கிடையாது. இன்று என்னாச்சு உனக்கு என்று எங்களையே எங்களுக்கு உணர்த்துவர். இதுவே, யாராவது எங்களை பொறுத்துக்கொள்ளவேண்டும் என்கிற தேவையோ, கடப்பாடோ இல்லாதவர்கள்; இன்னும் வெளிப்படையாக சொன்னால் எங்கள் மீது அக்கறையற்றவர்கள் என்று நாங்கள் கருதுபவர்கள் எங்கள் Behaviour ஐ பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். திட்டிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

ஆனால், நிச்சயமாக ஏதோவொரு தருணத்தில் எங்களை நாங்களே உணர்ந்துகொள்வோம். நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறேன் அல்லது சிந்திக்கிறேன் என்று. இங்கே தான் எண்ணங்கள் எங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும். ஆங்கிலத்தில் அதை, "feeling bad", என்று அழகாக சொல்வார்கள். அல்லது அசெளகர்யமாக உணர்வோம். நான் இப்படி சொல்லியிருக்க கூடாது; இப்படி செய்திருக்க கூடாது என்று எங்கள் தவறை உணர்வோம். முடிந்தால் மன்னிப்பு கேட்போம். 

ஒருவழியாய் அதிலிருந்து மீண்டபின் பழையபடி எங்கள் "மாற்றம்" பற்றிய பிரச்சனையை யோசிப்போம். எப்படியென்றாலும் எங்கள் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாமே எங்கள் கடந்தகால அனுபவம், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள் இவற்றின் அடிப்படையிலேயே மாற்றத்தின் விளைவுகளை ஓர் ஊகமாக கற்பனை செய்துகொள்வோம். பல சமயங்களில் நான் அப்படித்தான் செய்திருக்கிறேன். யதார்த்தம் அல்லது உண்மை என்ன, Facts! நான் அதை எப்படி உணர்ந்துகொள்கிறேன் (Personal Interpretations) அல்லது எடுத்தாள்கிறேன் என்பதிலிருந்து தான் அதற்குரிய தீர்வையோ அல்லது எங்களுக்கு இருக்கும் தெரிவையோ தேர்ந்தெடுக்க முடியும். சரி, இனி இதனால் ஏற்படப்போகும் ஏதாவது நன்மைகள் இருக்கிறதா என்று எங்கோ மனதில் ஓர் எண்ணம் தோன்றும். அந்தக்கணம் தான் யதார்த்தை ஏற்றுக்கொள்ளும் தருணம். இப்போ இங்கிருந்து மாற்றத்திற்கான எங்களுக்குள் உருவாகும் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, எங்களை தயார்ப்படுத்த அதற்கு தீர்வு நோக்கிய செயல்வடிவம் கொடுக்கத்தொடகுவோம்.

மாற்றம் ஒன்றே எப்போதும் மாற்றமில்லாதது என்று சொல்வார்கள்.  மனிதமனம் அதிகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அதைத்தான். எந்தவொரு மாற்றத்திற்கும், பிரச்சனைக்கும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தீர்வு என்பது எங்களிடமிருந்தே தான் வரும், வரவேண்டும். மாற்றம் என்பது விரும்பாததாக அல்லது தவிர்க்க முடியாததாக இருந்தாலும் அதிலிருந்து ஏதாவது நன்மை விளையுமா என்று நேர்மறையான விடயங்களை யோசித்து செயற்படுத்துவோம். ஓர் ஈடுபாட்டுடன் கூடிய கடப்பாடு (Commitment) இருந்தால் துன்பமோ அல்லது கஷ்டமோ அதிகம் மனதைப் பாதிப்பதில்லை. அவை தடைகளாகவும் தெரிவதில்லை. சில சமயங்களில் மாற்றத்தின் மூலம் ஏதாவது நன்மை இருக்கிறதா என்று அறிவுக்கு எட்டாவிட்டாலும், அதை கடந்து போகவேண்டும் என்று நினைத்து செயற்பட்டால் நல்லது. 

Put your mind and body to work to achieve your new objectives/goal. இதுதான் அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்கொள்வது. 

8 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கொஞ்சம் புரிஞ்சுது.. ஹி ஹி

ஹேமா சொன்னது…

ரதி...என்னாச்சு.நான்தான் இப்பிடி என்னமோ புலம்புறேன் எண்டா நீங்களுமா.என்னைவிட எப்பவும் தெளிவா இருப்பீங்க.நிறையக் குழப்பமா இருக்கீங்கன்னு சொல்லுது பதிவு.எதுக்கும் ஒரு தீர்வு கடடாயம் வரும் ரதி.வருதோ வரேல்லையோ காலம் நிக்காம ஓடிக்கொண்டேயிருக்குது.
நாங்களும் ஓடி முடிப்பம்.வேற வழி !

உலகத் தமிழர் பேரவை,பிரித்தானியத் தமிழர் பேரவை..எங்கட சனங்களின்ர கூத்துச் செய்திகள் பாத்திருப்பீங்கள் எண்டு நினைக்கிறன் !

Rathi சொன்னது…

சி.பி. செந்தில்குமார், உங்கள் வருகைக்கு நன்றி. கொஞ்சமாவது புரிஞ்சுதே.:))

Rathi சொன்னது…

ஹேமா, உங்கள் கருத்தைப் படித்ததும் உண்மையிலேயே ஆடிப்போயிட்டன். நான் நல்லாவே இருக்கிறன் ஹேமா. மனித இயல்புகளை பற்றி ஏதோ எழுதுவதாய் நினைத்து சொதப்பிவிட்டேன் போலுள்ளது. இதுக்கு ஜோதிஜியிடம் வாங்கி கட்ட வேண்டுமோ! :))

சிவ ரஜிதா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பேசியதை ஓரளவுக்கு கேட்டதோடு சரி. எங்கள் "பேரவைகள்" செய்யும் கூத்துகள் பற்றி உண்மையிலேயே தெரியவில்லை. தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்ததோடு சரி. செய்திகளை சரியாய் படித்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. நீங்கள் சொன்னதும் அதை தேடிப்பிடித்து படிக்க வேண்டும் போல் உள்ளது. படிக்கிறேன்.

ஐ. நாவின் மூன்று பேர் அடங்கிய குழுவின் இலங்கை தொடர்பா அறிக்கை வருமுன் புலத்தில் இருப்பவர்களை வாங்கி விடவேண்டும் என்று இலங்கை துடிப்பதன் விளைவோ இது??

தவறு சொன்னது…

உண்மைய தான் சொல்லியுள்ளீர்கள் ரதி. சந்தர்ப்பங்கள் அமையும் வரையில் எல்லோரும் நடுநிலைமையாய் இருப்பது போன்ற பாவனை.

Rathi சொன்னது…

தவறு அவர்களே உங்களுக்கு நான் சொன்னது புரிந்தது என்று சந்தோசப்படுகிறேன். வாழ்வில் மாற்றங்களும், பிரச்சனைகளும் வரும்போது தான் மனிதனின் சுயம் வெளிப்படும்.

உங்கள் தளத்திலுள்ள நடனக்காட்சிகளில் இரண்டாவது படத்தை இந்த பதிவுக்கு போட நினைத்தேன், முடியவில்லை.

ஜோதிஜி சொன்னது…

இல்லை நீங்க தவறாக எழுத வில்லை. ஆனால் அவசரமாக எழுதியிருக்கீங்க.

முதலில் பாரா பிரிப்பதை கவனமாக கையாளுங்க.

இதில் எழுதியுள்ள இந்த பல விசயங்கள் திருப்பூரில் இப்போது இந்த நிமிடத்தை என் வாழ்க்கையை பிரதிபலிப்பாக உள்ளது. சற்று வியப்பும் கூட.

பிறகு பேசுவோம்.

ஹேமா நீங்க சொன்னதைப் பற்றி எழுதியிருக்கீங்களா?