மார்ச் 27, 2011

தமிழர்களும் ஜனநாயக மக்கள் எழுச்சியும்!

ஒரு சமூக, விடுதலை அமைப்பை பொதுசனம் ஏற்றுக்கொள்ளவும், தூக்கியெறியவும் வழக்கமாக ஊடகங்கள் தங்கள் பாணியில் இரண்டு விதமான விமர்சனங்களை கையாள்வார்கள். ஒன்று ஒரு அமைப்பின் போராட்ட நியாயங்களை பக்கம், பக்கமாக விவரணமாக விவரிப்பது. மற்றது, எதிர்மறையான விமர்சனங்களை வைக்க வேண்டுமாயின் அவர்களின் போராட்ட நியாயங்களை கண்டும் காணாமல் விட்டுவிட்டு, அவர்களின் போராட்ட வழிமுறைகளை, தந்திரோபாயங்களை மட்டுமே விமர்சித்து அவர்களின் போராடத்தின் பக்கமுள்ள நியாயங்களை மழுங்கடிப்பது. ஆனால், இரண்டிலுமே எங்கேயோ ஓர் இடத்தில் சர்வதேசத்தின் அரசியல், பொருளாதார நோக்கம் மறைந்திருக்கும். அந்த "Official Line" களை தேடிப்பிடித்துப் படித்துப் புரிந்துகொள்பவர்கள் திறமைசாலிகள். 

புலிகளை விமர்சிக்கும் அநேகமான எல்லா ஊடகங்களும் (இணையம், Blogs  உட்பட) இதே உத்தியைத்தான் கையாள்கின்றன. புலிகளின் போர் தந்திரோபாயங்கள், அவர்கள் செய்ததாக சொல்லப்படும் கொலைக்குற்றங்கள் இவற்றை காட்டியே புலிகளை விமர்சிப்பது வழக்கம். அங்கே புலிகளின் போராட்ட நியாயம் மறைமுகமாக மழுங்கடிக்கப்படும். புலிகள் ஈழத்தமிழர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும், பறிக்கப்பட்ட மண்ணுக்காகவும் தான் போராடினார்கள் என்கிற நியாயம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை, இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு கிட்டப்போவதில்லை. புலிகளை மறுக்கும் வரை ஈழப்பிரச்சனையின் அடிப்படையும் தந்திரமாக மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். 

கடந்தவருடம் (August 27, 2010) நியுசிலாந்தின் உச்சநீதிமன்றம் புலிகள் சம்பந்தமாக ஓர் தீர்ப்பை சொல்லியிருந்தது. புலிகள் தங்கள் இலக்கை அடையும் நோக்கில் உலகில் தடைசெய்யப்பட்ட வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதே அவர்களின் நோக்கம் என்று. புலிகளின் நோக்கம் நியுசிலாந்துக்குப் புரிந்தபோது கூட, அது சில ஈழத்தமிழர்களுக்கு, பல தமிழக தமிழர்களுக்கு, மற்றும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் புரிந்தும், புரியாமல் போனது ஈழத்தமிழனின் துரதிஸ்டம் தான். இதற்கெல்லாம் அதிரடியாய் எங்களுக்கு சொல்லப்படும் பதில், பூகோள அரசியல் தந்திரோபாயங்கள், காய்நகர்த்தல்கள்!

நாங்கள் சொல்லிச்சொல்லி அலுத்துப்போன ஓர் விடயம், புலிகள் எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாய் உருவானவர்கள். புலிகள் அல்ல பிரச்சனையின் ஆணிவேர். இப்போ ஏன் புலிகள் பற்றி தமிழக தேர்தல் சமயத்தில் பேசுகிறேன் என்று யாராவது யோசிக்கலாம். தலைப்புக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். என்னை இந்தப்பதிவை எழுத தூண்டியது இரண்டு, ஒன்று ஜோதியின் பதிவு. மற்றது தமிழ் நெட்டின் இந்த ஆய்வுக்கட்டுரை

ஜோதியின் கட்டுரையில் சொல்லப்பட்ட மாற்றமும், தமிழ் நெட்டில் சொல்லப்பட்ட மாற்றமும் அடிப்படையில் ஒன்று என்பது தான் என் புரிதல். ஜோதிஜி சொல்வது தனிமனித தத்துவம், "தனிமனித சிந்தனை, செயல் மாற்றம்". தமிழ் நெட் சொல்வது "Collective Action and Change". உலகில் இன்று அடக்குமுறைக்கு எதிரான தன்னிச்சையான போராட்டங்கள் வடக்கு ஆபிரிக்கா (எகிப்து, லிபியா, சூடான், துனிசியா போன்ற நாடுகள்), மேற்கு ஆசியாவில் ( பஹ்ரைன், யெமன்) உள்ள நாடுகளில் முனைப்பு பெற்று ஓரளவுக்கு வெற்றியும் காணுகிறது. இங்கு நடைபெறும் மக்கள் எழுச்சிக்கு மேற்குலக ஊடகங்களின் சந்தோசமான ஆதரவும் நிறையவே இருக்கிறது. 
ஈழத்தமிழர்களின் விடயத்தில் சர்வதேச ஊடகங்கள் மேற்சொன்னதைப் போன்று அரபு நாட்டு மக்கள் எழுச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொடுத்ததில்லை. அத்தோடு, சர்வதேச அமைப்புகள் கூட, சர்வதேச நெருக்கடிகள் குழுவின் (Int. Crisis Group) Louis Arbor முதல் இந்தியாவின் இத்தாலிய சோனியா காந்திவரை ஏறுக்கு மாறாய் கருத்துகளை உதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்னவர் சொல்வது புலிகளின் வழியில் தமிழர்கள் தனி நாடு கேட்டு பிரிந்து போவதை புலத்தில் வாழும் தமிழர்கள் தவிர்க்க வேண்டுமாம். இப்படித்தான் சில அறிவுசீவிகள் சொல்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு மாகாணசபை முதல் சமஷ்டி அரசு தீர்வுரை எல்லாமே சிங்கள ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்டு, உயிர்வாழவே உரிமையில்லை என்றான பின் நாங்கள் வேறு எதைத்தான் கேட்பது என்பதையும்  இவர்களே சொன்னால் நன்று. இன்னும் எதைத்தான் நாங்கள் இழக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர் போன்றோர் பேசுவது சர்வதேச அரசியலின் வெளிப்பாடு. ஆனால், சோனியா காந்தி பேசுவது எகத்தாளம். உலகத்தமிழ் பேரவையின் உறுப்பினர்களிடம் சோனியா காந்தி சொன்னது, "We are with Tamils and I am very concerned about Sri Lanka". இவர் புலிகள் மீதுள்ள சொந்தப்பகையை முடித்து, வன்மத்தை தீர்த்தபின் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய தேவை இன்னமும் தமிழக சட்டசபை தேர்தல் வெற்றிக்கு அவசியம் போலும். தமிழர்களை, அவர்களின் மூன்று தசாப்த போராட்டத்தை நசுக்கி விட்டு, சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத பேச்சு. 

தமிழக சட்டசபை தேர்தல் மூலம் தமிழக தமிழர்களுக்கு தேர்தலுக்கு முன் கொடுக்கப்படும் "இலவச" வாக்குறுதிகள் மட்டுமே எப்போதும் செய்திகளின் மூலம் காதுகளில் விழுகிறது. எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் மத்தியில் தற்போது ஆட்சியிலுள்ள கட்சி சார்ந்தே ஆட்சி நடக்கும். அது ஓர் தேசத்தின், தேசியத்தின் தேவையும் கூட. இந்தியர்கள் என்பது ஓர் தேசிய இனமா என்கிற விவாதத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், இந்திய தேசியத்தில் தமிழக தமிழர்களின் நிலை, பங்களிப்பு என்பதை நான் பெ. மணியரசனின் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறேன். இதற்கு ஒருவிதத்தில் அரசியல் வாதிகளும் காரணம். தாங்கள் மட்டும் வளர்ந்தால் போதும் என்று தேர்தலுக்கு, தேர்தல் "தேர்தல் கூட்டணி" அமைப்பதையே கொள்கையாய் கொண்டவர்கள் எப்போது  காத்திரமாக வாக்களித்தவர்களுக்காக பேசியிருக்கிறார்கள், செயற்பட்டிருக்கிறார்கள். இதில் இவர்கள் ஈழத்தமிழர்களுக்காய் பேசி எதுவுமே விடியப்போவதில்லை என்பது தெளிவாக நிரூபணமாகிவிட்டது.

ஈழத்தமிழர்கள் விடயத்தில் உலகத்தமிழர்கள் ஓர் அணியில் இன்னும் முனைப்புடன் செயற்பட்டால்  நன்று. தன்னிச்சையான ஜனநாயக மக்கள் எழுச்சி என்பது தமிழகத்தில் நிகழ்ந்தால் ஈழத்தமிழர்களுக்குரிய குரலும் சர்வதேசத்தில் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என்பது பல ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதுக்கு இன்னும் நிறைய வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பது கசப்பான யதார்த்தம். எங்களால் சர்வதேசத்தையும் ஒதுக்கிவிட்டோ அல்லது பகைத்துக்கொண்டோ முன்னேறவும் முடியாது. சர்வதேச அரசியலும் சரி, ஊடகங்களும் சரி ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சரியான முறையில் இதுவரை அணுகியதும்  இல்லை. அதேநேரம், அரபு உலகில் கட்டவிழும் மக்கள் எழுச்சிகள் சொல்லும் செய்தியை நாங்கள் கவனித்து பதிவெழுதிவிட்டு நகர்ந்து போய்க்கொண்டே இருக்கிறோம்.

அண்மையில் பதிவர் தவறு அவர்கள் சொன்ன வாசகங்கள் தான் மனதில் நிழலாடுகிறது,


"நினைப்பவர்கள் செயல்படமுடியாதவர்களாய் இருக்க செயல்பட முடிபவர்கள் அனுபவிக்க கூடியவர்களாய் உள்ளனர். அதனால் மாற்றுசிந்தனை உடையவர்களின் ஆசையும் ஆவலும் நிராசையாக போய்விடுகிறது ".17 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தனக்கு ஒரு பிரச்சினை வராதவரைக்கும் இங்கு எல்லோருக்கும் ஆயிரம் கருத்துகள் இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் சொரனைகெட்டுப்போய் ஆண்டுகள் பலவாச்சு.. இப்போ புலம் பெயர்ந்தவர்களும் .....

Rathi சொன்னது…

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, செந்தில்.

Rathi சொன்னது…

http://dissidentvoice.org/2011/03/tamil-eelam-in-the-diaspora/

இதைப் படித்துப் பாருங்கள் செந்தில்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>"நினைப்பவர்கள் செயல்படமுடியாதவர்களாய் இருக்க செயல்பட முடிபவர்கள் அனுபவிக்க கூடியவர்களாய் உள்ளனர். அதனால் மாற்றுசிந்தனை உடையவர்களின் ஆசையும் ஆவலும் நிராசையாக போய்விடுகிறது ".

ஆஹா அருமையான வாசகம்

தவறு சொன்னது…

இருப்பவர்கள் அள்ளி முடியலாம் இல்லாதவர்கள் என்ன செய்யமுடியும்.

”சர்வதேசத்தின் அரசியல், பொருளாதார நோக்கம் மறைந்திருக்கும். அந்த "Official Line" களை தேடிப்பிடித்துப் படித்துப் புரிந்துகொள்பவர்கள் திறமைசாலிகள். ”

நீண்டகால திட்டங்களின் சுயநலமே காரணமாய் இருக்குமோ ரதி.

ஜோதிஜி சொன்னது…

சற்று நேரத்திற்கு முன் ஜெயலலிதா பேசிக் கொண்டிருக்கும் பிரச்சார கூட்டத்தை காட்டிக் கொண்டிருந்ததை மனைவியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்க கனடா ஆட்சி கவிழ்ந்து கொண்டிருப்பதை நினைத்துக் கொண்டே.


தவறு சொன்ன அந்த லைன். இதை தான் பல முறை யோசித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கின்றேன். ஒவ்வொரு கட்சியும், அதற்கு பின்னால் உள்ள திட்டமிடுதல், அதற்காக உழைப்பவர்கள், விலைக்கு வாங்கப்படுபவர்கள் என்று வரிசை ஓடிக் கொண்டேயிருக்கிறது.

கோவி கண்ணன் எழுதியது போல ஆட்சி மாறினாலும் அவரவர் சொத்துக்கு எந்த பங்கமும் வராது. ஆனால் இதையெல்லாம் புரியாதவர்கள் பேசி தீர்க்க நிறைய உண்டு.

கருணாநிதி ஈழத்திற்கு துரோகம் இழைத்துவிட்டார். ஜெவுக்கு அந்த எண்ணம் கூட இல்லை. விடுதலைப்புலிகள் தாங்களே கெடுத்துக் கொண்டார்கள். இப்படியே பேசிக் கொண்டே.....
எத்தனை பேர்களுக்கு ஒவ்வொரு பிரச்சனைக்குள்ளும் இருக்கும் ஆழம் அகலம் தெரியும். ஒவ்வொரு இயக்கம், கட்சி, நோக்கம், கொள்கை குறித்து தெரிவான புரிதல்கள் இருக்கும்.

எனக்கே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விசயத்தையும் படித்து முடிக்கும் போது நமக்கு ஒன்றும் தெரியலையோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. சற்று பயமாகவும் இருக்கிறது. ஆனால் நீங்க சொன்ன பொருந்திப் போகும் உண்மைகள் சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

உண்மைகள் எப்போதும் நிர்வாணம் தான். நாம் தான் வெட்கப்பட்டுகின்றோம்.

தவறு சொன்ன வாசகம் தான் மொத்தத்திலும் முத்தாய்ப்பாக உள்ளது.

ஹேமா சொன்னது…

புலிகளின் அல்லது ஈழத்தமிழரின் போராட்டம்,தேவை உலக நாடுகள் அனைத்திற்குமே புரியும்.புரியாததுமாதிரி நடித்துக்கொண்டிருக்கிறார்கள் ரதி.ஈழத்தமிழர்களின் வேதனையை வைத்தே ஒரு வியாபாரம்கூட நடந்துகொண்டிருக்கிறது.அரபு நாட்டுக்குள் புகுந்து உதவி செய்யும் உலகநாடுகள் எங்களை அழியட்டுமென்றுதானே கைவிட்டார்கள்.

சோனியாவுக்கு பீனிசமாம்.சுரேன் சுரேந்தரிடம் பேசும்போது இந்தச் சாட்டில் மூக்கைச் சிந்தியிருக்கிறா.பேசப்போனவரைப் பற்றி ஐரோப்பிய ஊடகங்கள் அலசியெடுக்கின்றன.அதிலும் ஏதோ ஊழலாம் !

விந்தைமனிதன் சொன்னது…

நோகாமல் நோம்பி திங்கும் அம்பிகளும், அவர்களின் அல்லக்கைகளும் இந்திய ஊடகங்களை தமது அசுரப்பிடிக்குள் வைத்திருக்கும் வரை தமிழனுக்கு சு உணர்வு வரவே வராது. சோற்றாலடித்த பிண்டமாக தமிழகத் தமிழன் மாறி பத்தாண்டுகளைத் தாண்டியாயிற்று.

ராஜ நடராஜன் சொன்னது…

//தன்னிச்சையான ஜனநாயக மக்கள் எழுச்சி என்பது தமிழகத்தில் நிகழ்ந்தால் ஈழத்தமிழர்களுக்குரிய குரலும் சர்வதேசத்தில் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என்பது பல ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதுக்கு இன்னும் நிறைய வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பது கசப்பான யதார்த்தம்.//

இப்போதைய சூழலில் இதற்கான சாத்தியங்கள் இன்னும் நீண்ட தூரமென்பதை முன்பு எங்கோ பதிவு செய்துள்ளேன்.

தற்போதைய சூழலில் புலம்பெயர்ந்த மக்களும் அதன் அடையாளமாக நாடு கடந்த தமிழீழ அரசு ஈழம் என்ற சொல்லை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கவாவது செய்யலாம்.
நாட்களின் வரிசையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி எடை போட முடியும்.கடந்த ஒரு வருட காலத்தில் நிமிர்ந்து நிற்க தடுமாறும் குழந்தையாகவே இதனை காண்கிறேன்.

Rathi சொன்னது…

சி.பி. செந்தில்குர்மார், அந்த வாசகத்தில் உள்ள உண்மை சுட்டதால் முத்தாப்பாய் இருக்கவேண்டும், படிப்பவர்கள் யோசிக்கவேண்டும் என்று சேர்த்துக்கொண்டேன்.

Rathi சொன்னது…

தவறு, பதிவுலகில் நிறைகுடம் தளும்பாது என்று நான் நினைப்பவர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் சொல்வது தான் எனது கருத்தும். அது சர்வதேசத்தின் நீண்டகால திட்டத்திற்கு ஊடகங்களின் "Agenda Making".

Rathi சொன்னது…

ஹேமா, கடைசி வரிகளை படித்து சிரித்து முடித்துவிட்டு யோசித்தேன். நீங்கள் சோனியாவை பேரவை உறுப்பினர்கள் சந்தித்ததைப்பற்றி ஊடகங்களின் விமர்சனங்களை உங்கள் எண்ணங்களோடு பகிர்ந்து "உப்புமடசந்தியில்" எழுதலாமே. என்னக்கும் விவரங்களை தெரிந்துகொள்ள ஆவல்.

Rathi சொன்னது…

விந்தைமனிதன், ஓர் தமிழ்நாட்டுத் தமிழராய் உங்கள் கோபம், ஆதங்கம் புரிகிறது.

Rathi சொன்னது…

ராஜ நடராஜன், நாடு கடந்த தமிழீழ அரசு என்பது இன்னும் வளரவேண்டியதும், கடந்துபோக போகவேண்டிய தடைகளும் நிறையவே உள்ளது. புலம்பெயர் தமிழர்கள் அதை மேலும் வலுவாக்க வேண்டும் என்பது தான் எனது ஆவலும். அதையுணர்ந்து அவர்களும் செயற்படவேண்டும், செயற்படுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் வருத்தம் தருவது இன்னும் புலம் பெயர் தமிழர்கள் குறிப்பிட்ட தொகையினர் நாடு கடந்த தமிழீழ அரசின் தற்கால தேவையை புரிந்துகொள்ளாததும், எதிர்ப்பதும் தான்.

Rathi சொன்னது…

ஜோதிஜி, எப்படியோ உண்மைகளை மக்கள் புரிந்து கொண்டால் போதாதா! வழி பிறக்குமே.

Thekkikattan|தெகா சொன்னது…

ரதி, வாசித்து விட்டேன்.

மண் புழுக்களுக்கே இன்றைய அரசியலில் சாதிக்க நிறைய இருக்கிறது!

Rathi சொன்னது…

தெகா, உங்கள் வரிகளைப் படிக்க எனக்கு சீமானின் "பேசாம, பேசாம இருந்து.... சூடு சொரணை மறந்து..." என்கிற பாடல் தான் ஞாபகம் வருகிறது.